Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசுரன்: சினிமா விமர்சனம்

Featured Replies

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன்.

1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்). வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது. இந்தக் கொலை வழக்கிலிருந்தும் வடக்கூரான் குடும்பத்தின் பகையிலிருந்தும் சிதம்பரத்தின் குடும்பம் எப்படி மீள்கிறது என்பது மீதிக் கதை.

வெற்றி மாறனின் படங்களில் பெரும்பாலானவை தீராப் பகையையும் துரோகத்தையும் பழிவாங்குவதையும் மனம் திடுக்கிடும் வகையில் சொல்லிச் செல்பவை. இந்தப் படமும் அதேபோலத்தான். ஒரு நாவல் திரைப்படமாகும்போது, அதன் மையப் புள்ளியிலிருந்து விலகி, வேறொரு கதையாக மாறிவிடும். ஆனால், பூமணியின் வெக்கையை கிட்டத்தட்ட அதே உக்கிரத்துடன் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

ஒரு கொலையைச் செய்துவிட்டு சிதம்பரமும் சிவசாமியும் காட்டுக்குள் நுழைய, மெல்ல மெல்ல ஒரு கரிசல்காட்டு வாழ்க்கையை திரையில் விரிக்கிறார் வெற்றிமாறன். வெக்கை நாவலின் ஆசிரியரான பூமணி ஒரு முறை அந்த நாவலைப் பற்றிப் பேசும்போது, "கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான்" என்றார். இப்போது அந்தக் காட்டுக்குள் ரசிகர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார் வெற்றிமாறன். அவரது மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஏன் மிகச் சிறந்த படமாகக்கூட ஒருவர் கருதலாம்.

சிவசாமி பாத்திரத்திற்கு தனுஷ் மிகச் சிறந்த தேர்வு. பல காட்சிகளில் தன் முந்தைய உயரங்களைத் அனாயாசமாகத் தாண்டிச் செல்கிறார் அவர். குறிப்பாக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மஞ்சு வாரியர் கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, அட்டகாசம்.

கொலை செய்துவிட்டு தந்தையுடன் தப்பிச் செல்லும் சிறுவனாக வரும் கென் கருணாஸ், ஒரு மிகச் சிறந்த அறிமுகம். 16 வயதுச் சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தொடர்ந்து முகத்தில் தக்கவைக்கிறார் கென்.

பசுபதி, நரேன், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான ஆளைப் பார்த்துத் தேர்வுசெய்திருக்கிறார் இயக்குநர்.

அசுரன்படத்தின் காப்புரிமைINDIAGLITZ/ASURAN

ஜி.வி. பிரகாஷின் இசை படத்தில் மிகப் பெரிய பலங்களில் ஒன்று. படத்தின் தீவிரத்தை இவரது இசை இன்னும் பல மடங்கு அதிகரிக்கிறது. 'கத்தரிப் பூவழகி' பாடல், கொடும் பாலைவனத்தில் பெய்யும் பெரு மழையைப் போல இருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம்.

பல கொலைகளுக்குப் பிறகும், பிரச்சனைகளுக்குப் பிறகும் இறுதியில் ஒரு நம்பிக்கைக் கீற்றை விதைக்கிறது படம். 'பிறகு', 'வெக்கை' என பூமணியின் எல்லா நாவல்களிலும் அடிப்படையான அம்சம் இதுதான். பிரச்சனைகள், அழிவுகளைத் தாண்டியும் மனித வாழ்க்கை முன்னோக்கிச் செல்லும் என்பதற்கான நம்பிக்கையை அவரது கதைகள் கொடுத்துக்கொண்டே இருக்கும். வெற்றி மாறனின் இந்தப் படமும் அதே நம்பிக்கைக் கீற்றுடன் முடிகிறது.

ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது ஒன்று திரைக்கதைக்காக நாவல் மாற்றப்பட்டு முற்றிலும் அடையாளம் தெரியாமல் போய்விடும். அல்லது அப்படியே படமாக்கப்பட்டு பார்க்கச் சகிக்காமல் இருக்கும். ஆனால், ஒரு நாவலை சிறந்த திரைக்கதையாக்கும் சூத்திரத்தை இந்தப் படத்தில் முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையிலும் இது முக்கியமான படம்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-49931644

  • கருத்துக்கள உறவுகள்
Dhanush-Asuran.jpg
 

அசுரன்- திரைப்பட விமர்சனம்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அசுரன்’ எப்படி என்று பார்ப்போம்.

தனுஷ் குடும்பத்திற்கும், ஆடுகளம் நரேன் குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையில் தனுஷின் மூத்த மகன் கொலை செய்யப்பட, அதற்கு பழிவாங்குவதற்காக தனுஷின் இளைய மகனான கென், நரேனை கொலை செய்துவிடுகிறார். இதனால் தனுஷின் குடும்பத்தை வேறோடு அறுக்க நரேனின் ஆட்கள் கிளம்ப, அவர்களுக்கு காவல் துறையும் துணை போகிறது. அவர்களிடம் தப்பிக்க மகனுடன் காட்டில் பதுங்கும் தனுஷின் மறு உருவம் தெரிய வருவதோடு, அதுவரை வன்முறையை தவிர்த்து சமாதானத்தை நாடிய தனுஷ், தனது குடும்பத்திற்காக மீண்டும் கத்தியை கையில் எடுக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் அதிரடி நிறைந்த சரவெடியாக திரையில் விரிகிறது.

வெக்கை நாவல் எந்த அளவுக்கு பரபரப்பாக இருக்குமோ அதைப்போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வெக்கை நாவலை முழுமையாக படமாக்காமல், அதன் அடிநாதத்தை, தனது கற்பனை கதையுடன் சரியான புள்ளியில் இணைத்து ஒரு முழுமையான மண் சார்ந்த படத்தையும், அதன் மூலம் வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

40 க்கு மேற்பட்ட வயதுடைய கதாபாத்திரத்தில் தனுஷ் கச்சிதமாக பொருந்தி போகிறார். தனது பாடி லேங்குவேச் மற்றும் கண் மூலம் சின்னசாமி என்ற கதாபாத்திரத்தை நம்முள் கடத்திவிடுபவர், இளம் வயது தோற்றத்தில் காட்டும் வீரியம் மூலம் நம்மை மெய்சிலிரிக்க வைத்துவிடுகிறார்.

தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர், திருநெல்வேலி தமிழ் பேச சில இடங்களில் கஷ்ட்டப்பட்டிருந்தாலும் கரிசல் மண்ணின் பெண்ணாக மனதில் ஒட்டிக்கொள்கிறார். தனுஷின் மூத்த மகனாக நடித்திருக்கும் டிஜே அருணாசலமும், இளைய மகனாக நடித்திருக்கும் கென் கருணாஸும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருக்கிறார்கள்.

வழக்கறிஞராக வரும் பிரகாஷ்ராஜ், பசுபதி, போலீஸ் இன்ஸ்பெக்டரான இயக்குநர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன் என அனைத்து நடிகர்களும் மண் சார்ந்த மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆக்‌ஷன் காட்சிகளில் வீசப்படும் வெடிகுண்டின் சத்தம், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசை, தனுஷ் காட்டில் பதுங்கி செல்வது என்று அனைத்து ஏரியாவிலும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மிரட்டல்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நம்மையும் கோவில்பட்டியில் பயணிக்க வைத்துவிடுகிறார். பறந்து விரிந்த காட்டுக்குள் தனுஷ் சுற்றி திரியும் போது நாமும் ஏதோ காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இவரது ஒளிப்பதிவு ஒரு முழுமையான பீரியட் படம் பார்த்த அனுபவத்தையும் கொடுக்கிறது.

பீட்டர் ஹெய்னின் ஆக்‌ஷன், ஆர்.ராமரின் படத்தொகுப்பு, ஜாக்கியின் கலை, பெருமாள் செல்வத்தின் உடை வடிவமைப்பு என அனைத்துமே படத்தை வேறு ஒரு உயர்த்திற்கு எடுத்துச் செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது.

வெற்றிமாறனின் பெஸ்ட் படம் என்று சொல்லும் அளவுக்கு படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை, படு பரபரப்பாக நகர்கிறது. அதிலும், நரேனை கென் வெட்டிய பிறகு வேகம் எடுக்கும் படம், தனுஷ் கத்தி எடுக்கும் போது பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறது.

தலித் மக்களின் பஞ்சமி நிலங்களை மேல்தட்டு மக்கள் பறித்துக்கொண்டனர் என்பதை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், ஜாதி பிரிவினை குறித்து அளவோடு பேசினாலும் அதை அழுத்தமாகவும், நியாயமாகவும் பேசியிருக்கிறார்.

நிலம் ஒவ்வொரு மனிதனின் உரிமை, அதை பறிக்க நினைத்தால் எதிர்த்து போராட வேண்டும், என்று சொல்லும் இயக்குநர் வெற்றிமாறன், வன்முறை காட்சிகளோடு கதையை நகர்த்தினாலும், படம் முழுவதும் வன்முறை வேண்டாம், என்பதையும் அழுத்தமாகவே வலியுறுத்தி வருகிறார்.

மொத்தத்தில், ‘அசுரன்’ அதிரடி நிறைந்த சரவெடியாக இருக்கிறது.

-ரேட்டிங் 4/5

https://chennaionline.com/tamil/அசுரன்-திரைப்பட-விமர்சன/

நேற்ற கொழும்பில் இப் படத்தை பார்த்தேன்.  வெற்றிமாறனின் இன்னொரு அருமையான அரசியல் படைப்பு.

தனுஷ்....இதுக்கு மேலாக இன்னொரு படத்தில் இவரால் நடிக்க முடியுமா என ஒவ்வொரு படத்திலும் கேள்வி கேட்க வைத்தாலும் இந்தப் படத்தில் அதை நூறு தடவை கேட்க வைக்கின்றார்.

இப் படம் பேசும் அரசியல் தேசங்களை தாண்டி, மொழிகளை தாண்டி, உலகம் முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், ஒடுக்குமுறையில் இருந்து வெளியே வர போராடும் வர்கத்தின் சவால்களையும் தெளிவான திரைக்கதையில் சொல்லியுள்ளார் வெற்றிமாறன்.

தரமான சினிமா பார்க்க விரும்புகின்றவர்கள் தவற விடக்கூடாத சினிமா..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திரை விமர்சனம்: அசுரன்

518858.jpg

சிவசாமி (தனுஷ்) குடும்பத்தின ரிடம் இருக்கும் சிறு நிலத்தை தன் தம்பி வெங்கடேசன் தொடங்கப்போகும் சிமென்ட் தொழிற்சாலைக்காக வாங்கத் துடிக்கிறான் வடக்கூரான் நரசிம்மன் (ஆடுகளம் நரேன்). சாதுவான சிவசாமியோ, அது அவரது மனை விக்கு அவளது அண்ணன் தந்த நிலம் என்பதால் விற்க மறுக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறு காரண மாக சிவசாமியின் மூத்த மகன் முரு கனை ஆள்வைத்துக் கொன்றுவிடு கிறான் நரசிம்மன். இதை நேரில் பார்த்த சிவசாமியின் இரண்டாவது மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்), நரசிம்மனையே கொன்றுவிடுகி றான். இதனால் சிவசாமியின் குடும்பத்தையே அழிக்க நரசிம் மன் குடும்பம் அலைகிறது. அவர் களுக்கு பயந்து மனைவி பச்சை யம்மாளையும் (மஞ்சு வாரியர்), குழந்தையையும், மைத்துனரான முருகேசன் (பசுபதி) பொறுப் பில் விட்டுவிட்டு சிதம்பரத்துடன் காட்டுக்குள் நுழைகிறார் சிவசாமி. போலீஸாரும் கொலையாளியைத் தேடுகிறார்கள். சிவசாமி போலீஸி டம் மாட்டினாரா? தன் குடும் பத்தைக் காப்பாற்றினாரா என்ப தற்கு விடை சொல்கிறது ‘அசுரன்’.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ வரிசையில் 4-ம் முறையாக ‘அசுர’னில் இறங்கி அடித்திருக்கிறது வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி. 80-களில் தொடங் கும் கதை 60-களில் பின்னோக்கி பயணித்து மீண்டும் 80-க்குள் வந்து படத்தை நிறைவுசெய்திருக்கும் விதமும், ஒரு படத்துக்குள் இரு பீரியட் கதைகளைச் சொன்ன விதமும் ரசிக்கவைக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களை நுட்பமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆதிக்க வர்க்கத்தினரையும், அவர்களது சாதிய வன்மத்தையும் படம் உரக்கப் பேசியிருக்கிறது.

எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையா கக் கொண்டு, மணிமாறனும் வெற்றி மாறனும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். அடித்தட்டு மக்கள் பக்கம் நின்று அவர்களது நியா யத்தை துணிச்சலுடன் பேசியிருக் கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

சிவசாமி கதாபாத்திரத்தில் படத்தை முழுவதும் தாங்கிப் பிடிக் கிறார் தனுஷ். பிள்ளைகளுக்குப் பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலை வன், பிளாஷ்பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளை ஞன் என ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் மிளிர்கிறார். ஆரம்ப காட்சி களில் அவரது உடல்மொழியும் ஒப்பனையும், ஐம்பதைத் தொடும் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தாததுபோல் தோன்றினா லும், போகப் போக தனது நடிப்பால் ஈடுகட்டிவிடுகிறார் தனுஷ்.

மஞ்சு வாரியர் உடை, தோற்றம், நடிப்பு எல்லாம் பொருந்துகிறது. குரலில்தான் வட்டாரத்துக்குப் பொருந்தாத அந்நியத் தன்மை! தனுஷின் மூத்த மகனாக டிஜே அரு ணாச்சலமும், தனுஷை கையாலா காத அப்பாவாக நினைக்கும் இளைய மகன் கதாபாத்திரத்தில் கென் கருணாஸும் கச்சிதமா கப் பொருந்தியுள்ளனர். பசுபதி, ‘ஆடுகளம்’ நரேன், பாலாஜி சக்தி வேல், பிரகாஷ்ராஜ் என எல்லோ ரும் தெக்கத்தி மனிதர்களாகவே மாறியுள்ளனர்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு தேரிக் காட்டையும் கரிசல் பூமியையும் துல்லியமாகப் படம் பிடித்திருக் கிறது. காட்சிகளில் பயன்படுத்தப் பட்ட இருள், ஒளி ஆகியவற்றின் மூலம் கதாபாத்திரங்களின் மன நிலையை தத்ரூபமாகவே வெளிப் படுத்துகிறது ஒளிப்பதிவு.

‘‘அவனுக்கு நாய் போச்சுன்னு கஷ்டமாயிருக்கு.. எனக்கு நாயோட போச்சேன்னு ஆறுதலாயிருக்கு..’’, ‘‘காடு இருந்தா எடுத்துக்கிடுவா னுவ.. ரூபா இருந்தா புடுங்கிக்கிடு வானுவ.. ஆனா, படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது..’’ போன்ற வசனங்களி லும், பெண் குழந்தையைத் ‘தாய்’ என அழைக்கும் நுட்பத்திலும் கவனிக்க வைக்கிறார்கள் வசனம் எழுதிய சுகாவும், வெற்றிமாறனும்.

பாடல்களைவிட பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் கவனம் ஈர்க்கிறார். காலகட்டத்தை சித்தரிப் பதில் கலை இயக்குநர் குறிப்பிடத் தக்க வகையில் பங்களித்துள்ளார்.

தவிர்க்கமுடியாத சூழலிலேயே சிவசாமி வன்முறையை தேர்ந் தெடுப்பதாகக் காண்பித்தாலும், வன்முறைக் காட்சிகள் படம் பிடிக் கப்பட்ட விதமும், திரைக்கதையில் அவை இடம்பெறும் விதமும் வன் முறையைக் கொண்டாடுவதாக அமைந்துவிடுகின்றன. கெட்ட வார்த்தைகளும் தாராளம்! இது போக இளைஞன் தலையில்லாமல் கிடக்கும் காட்சி, துண்டிக்கப்பட்டுக் கிடக்கும் கை..! (பெற்றோர் துணை யுடன் சிறுவர்களும் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கும் யு/ஏ சான்றிதழைத் தணிக்கை வாரியம் வழங்கியிருக்கிறது).

உறவுகளின் அன்பைச் சொல் லும் ஒரு நாவலை சினிமாத்தனத் துக்கு மாற்றியதில் இயக்குநர் வெற்றிமாறன் ஜெயித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மனிதர்கள் செருப்பு அணியக்கூட முடியாமல் இருந்த சாதிய ஒடுக்குமுறையையும், அந்த மக்களின் கண்ணீர்க் கதையையும் சரியாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். கல்வி மட்டுமே அந்த மக்களுக்கு விடியல் தரும் என்பதையும் ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், வழக்கமான சினிமா உத்திகளையே பின்பற்றிய வகை யில், வெற்றிமாறனும் சில ‘கிளிஷே’க்களுக்கு தப்பவில்லை. ஈட்டியில் ஒரே குத்தில் வில்லன் சாகி றான். நாயகனுக்கு நெஞ்சில் ஈட்டி பாய்ந்தாலும் உயிரோடு எழுந்து சரணடையப் போகிறான். பீரியட் படம் என்பதைக் காட்டுவதற்காக பழைய போன், சுவர் விளம்பரங் கள் என வழக்கமான உத்திகளையே காட்டுவதும் அலுப்பூட்டுகிறது.

அனைத்தையும் மீறி, ‘அசுரன்’ - வன்முறைக் கறைபடிந்த ஒடுக் கப்பட்டவர்களின் நாயகன்தான்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/518858-asuran-review.html

  • கருத்துக்கள உறவுகள்

அசுரன்

வா. மணிகண்டன்


சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இளைஞனொருவன் அருகில் அமர்ந்திருந்தான். ‘எப்படிங்கண்ணா புக் ரிலீஸ் பண்ணுறது?’ என்று ஆரம்பித்தான். கவிதை எழுதுவானோ என்று நினைத்து சற்று தள்ளி அமர்ந்தேன். சாதியப் பெருமைகளை புத்தகமாக எழுதப் போகிறானாம். இப்படி நிறையப் பேர் சுற்றுகிறார்கள். கிடா வெட்டுவது கூட அவர்களுக்கு சாதியப் பெருமைதான். ‘என்ன மாதிரியான பெருமைகள்’ என்றால் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக எப்படி கெளரவமாக இருந்தோம் என்று எழுதுவதாகச் சொன்னான். அவனிடம் என்ன பேசுவது என்று கொஞ்ச நேரம் குழப்பமாக இருந்தது.  உண்மையில் அவன் பெருமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது அன்றைக்கு அப்பட்டமாக வெளிப்பட்ட சாதிய வெறி. அக்கம்பக்கத்தில் கேள்விப்படும் நான்கைந்து சாதிகளைத் தவிர அவனுக்கு பெயர் கூடத் தெரியவில்லை. அவன் பேசுவது அத்தனையும் செவிவழிச் செய்தி- செவிவழி என்பதைவிட வாட்சாப் வழிச் செய்தி.

 

தமிழகத்தின் சாதியச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாத இளந்தலைமுறையினர் மிகப்பெரிய கூட்டமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மேம்போக்காகத் தெரிந்ததெல்லாம் எங்கள் தாத்தா காலத்தில் அடங்கியிருந்தவர்கள் தங்களது அப்பன் காலத்தில் திமிர் பிடித்தவர்களாகிவிட்டார்கள் என்பதுதான். அவர்களை பழையபடி மீண்டும் அடக்கி வைப்பதுதான் தங்களின் வாழ்நாள் லட்சியமாகச் சொல்லிக் கொண்டு வாட்ஸாப்பில் வாசித்துக் கொண்டிருப்பவர்கள். சிலர் கைகளில் சாதியப் பெருமைகளைப் பச்சை குத்திக் கொள்கிறார்கள். மற்றவர்கள் நெஞ்சுக்குள் குத்திக் கொள்கிறார்கள். 

 

இங்கே நிலம்-அரசியல்-சமூகம்- பொருளாதாரம் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. நிலத்துக்கான அரசியல், அரசியலுக்கான பொருளாதாரம், பொருளாதாரத்துக்கான நிலம் என எந்தவொன்றையும் இன்னொன்றோடு தனித்தனியாகவும் பொருத்திப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் இணைத்துப் புரிந்து கொள்ளத் தொடங்கும் போதுதான் தமிழகத்தின் வரலாற்றின் ஒரு நுனியை எட்டிப்பிடிக்க முடியும். இத்தகைய விரிவான புரிதலானது பரவலாக, வெகுஜன மட்டத்தில் உண்டாகாமல் ‘சமத்துவ சமூகம்’ அவ்வளவு சுலபமாக அமைந்துவிடாது. ஆனால் அத்தகைய புரிதல்களுக்கான வாய்ப்புகளே உருவாக்கப்படுவதில்லை. இங்கே இது வரை நடந்த போராட்டங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள், சட்டங்கள் யாவும் பிற சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், ஆதிக்கம் செலுத்தினால் எதிர்த்து நில் என்பதையும் சாதித்திருக்கும் அளவுக்கு பரவலான மனநிலை மாற்றங்களை உருவாக்கியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். 

 

ஆனாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகாலமாக புரையோடிக் கிடக்கும் சாதியக் கட்டமைப்புகள் கொண்ட இந்தியா போன்ற தேசத்தில் தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருப்பதே பெரிய சாதனைதான் என்றாலும் நாம் முன்னே பயணிக்க வேண்டியது வெகுதூரம் பாக்கியிருக்கிறது. 

 

சாதிய அடுக்குகள், அவற்றோடு பிணைந்திருக்கும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நிலம் சார்ந்த கண்ணிகளை மேம்போக்காகவாவது புரிந்து கொள்ளாமல் சாதி வெறியேற்றுகிறவர்களுக்கு ஒரு கூட்டம் இரையாகிக் கொண்டிருக்கும் போதுதான் அசுரன் மாதிரியான படங்களின் தேவை உருவாகிறது. இன்றைக்கும் கூட சாதி வெறி அடங்கிவிட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன? நீறு பூத்த நெருப்புதான் அது. உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. ஆனால் துணிந்து எரிந்துவிடாது. எதிர்தரப்பினர் விழித்துக் கொண்டார்கள். படித்து விவரம் தெரிந்தவர்கள் ஆகிவிட்டார்கள். மிரட்ட எத்தனித்தால் எதிர்ப்பார்கள். அவர்களின் இந்த எதிர்ப்புதான் சாதிய உணர்வு கொண்டவர்களை நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கிறது.

 

காலங்காலமாக அடங்கியே கிடந்தவர்களுக்கு அப்படி என்ன திமிரு என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கும்,  ‘அவர்கள் ஆடுகிற ஆட்டத்தையெல்லாம் நாங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா?’ என்று கண்மூடித் தனமாக கேள்வி கேட்கிறவர்களுக்கும் என்ன சொல்வது?  

 

கட்டப்பஞ்சாயத்து, நாடகக் காதல், ரவுடியிசம் என்றுதானே இருக்கிறார்கள் என்பதை பெரிய குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். சாதிக்காரர்கள் நான்கு பேர் சந்தித்தால் இதைத்தான் பிரதானமாகப் பேசுகிறார்கள். பிற சாதிகளில் இதெல்லாம் நடப்பதில்லையா என்று கேட்டால் நடக்கும். ஆனால் அது அடுத்தவர்களை உறுத்தாது. அதுவே தாத்தா காலத்தில் செருப்பு கூட போட அனுமதியற்றவர்கள் இன்றைக்கு மிரட்டுகிறார்கள், எதிர்க்கிறார்கள் என்றால் அது உறுத்தும். அதுதான் ஒரு தரப்பின் இரத்தத்தைக் கொதிக்கச் செய்துவிடுகிறது. பி.சி.ஆர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒவ்வொரு சாதிக் கூட்டத்திலும் பேசுகிறார்கள். ஆனால் பி.சி.ஆரின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. 

 

இங்கே என்னதான் சட்டம் இருந்தாலும் கூட ரயில் தண்டவாளத்தில் கிடத்தப்படுகிறார்கள். டி.எஸ்.பிக்கள் கூட மர்மமாகச் சாகிறார்கள். இத்தகைய செய்திகளை எவ்வளவு நாட்களுக்கு நினைத்துக் கொண்டிருக்கிறோம்? அதிகபட்சம் ஒரு வாரம். அந்த வாரத்து ஜுவி, ரிப்போர்ட்டர், நக்கீரனில் கட்டுரை வெளியானவுடன்  ‘இப்படியெல்லாம் செஞ்சாத்தான் பயமிருக்கும்’ என்பதோடு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

 

asuran-65.jpg

 

அசுரன் படம் பார்க்கும் போது படத்தோடு சேர்ந்து இப்படித்தான் ஏதோ மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 

 

பூமணியின் வெக்கை, வெற்றிமாறன், தனுஷ், சுகா, ஜி.வி.பிரகாஷ் என எல்லோரும் கச்சிதமாகக் கலந்திருக்கிறார்கள். பொதுவாக, திரையரங்குக்குள் சென்று பார்க்க வேண்டுமெனில் வண்ணமயமான படமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். ஆடல், பாடல், கொண்டாட்டமாக இரண்டரை மணி நேரங்களைக் கழித்துவிட்டு வர வேண்டும் என்று நினைப்பேன். தமிழ் சினிமா நாயகர்கள் எதிரியை அடிக்க இடைவேளை வரை காத்திருக்க மாட்டார்கள். நான்காம் காட்சியில் விசிலடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் தனுஷ் காத்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை ஏற்றியும் இறக்கியும் கூட்டியும் குறைத்தும் உருமாறும் தனுஷ் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். 

 

முதல் பத்தியில் குறிப்பிட்ட, புத்தகம் எழுத விரும்பும் பையனைப் போலவே பாரம்பரியத்தைக் காட்டுகிறேன், சமூகக் கட்டமைப்பை யதார்த்தமாகக் காட்டுகிறேன் என்று குறிப்பிட்ட சாதியப் பெருமைகளை வண்ண வண்ணக் காட்சிகளுடன் முன் வைத்து ஹீரோயிசத்தை அளவுக்கதிமாகத் தூக்கிப் பிடித்து சாதிய உணர்வுகளைத் தூண்டுகிற படங்களின் காலத்தில் அசுரன் தேவையானதாக இருக்கிறது. அசுரன் படத்திலும் கூட சில நம்ப முடியாத காட்சிகள் உண்டு. ஒற்றை ரூபாய் பெரிய பணமாக இருந்த காலத்தில், செருப்பு அணியவே அனுமதிக்கப்படாத காலத்தில் - முதலாளிக்காக சாராயம் காய்ச்சுகிறவன்- அவனது திறமை என்னதான் மதிக்கப்பட்டாலும் ஊருக்குள் அவ்வளவு கெத்தாக அனுமதித்த ஊரா நம் ஊர் என்று கேள்வி எழாமல் இல்லை. இருந்துவிட்டுப் போகட்டும்.

 

யதார்த்தத்தைப் பேசுவதாகக் கருதி வன்மத்தை ஊட்டாமல், வெறுப்பை ஏற்றாமல் ‘நமக்கு முன்னால் இருக்கும் பெரிய சிக்கலின் ஒரு பிடி இது’ என்று காட்டுகிற அசுரன் போன்ற படங்கள் வணிகரீதியிலும் வெற்றி பெறுவது மிக அவசியம். அப்படி வெற்றியடைந்திருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
 

http://www.nisaptham.com/2019/10/blog-post_18.html

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2019 at 6:09 AM, நிழலி said:

நேற்ற கொழும்பில் இப் படத்தை பார்த்தேன்.  வெற்றிமாறனின் இன்னொரு அருமையான அரசியல் படைப்பு.

தனுஷ்....இதுக்கு மேலாக இன்னொரு படத்தில் இவரால் நடிக்க முடியுமா என ஒவ்வொரு படத்திலும் கேள்வி கேட்க வைத்தாலும் இந்தப் படத்தில் அதை நூறு தடவை கேட்க வைக்கின்றார்.

இப் படம் பேசும் அரசியல் தேசங்களை தாண்டி, மொழிகளை தாண்டி, உலகம் முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், ஒடுக்குமுறையில் இருந்து வெளியே வர போராடும் வர்கத்தின் சவால்களையும் தெளிவான திரைக்கதையில் சொல்லியுள்ளார் வெற்றிமாறன்.

தரமான சினிமா பார்க்க விரும்புகின்றவர்கள் தவற விடக்கூடாத சினிமா..

ஒரு சாதி இன்னொரு சாதிக்கு குனிந்து கொண்டுதான் இருக்கணுமா என கேள்விகள் கேட்டாலும் இந்தியாவால் ( தமிழ்நாட்டால் ) இதிலிருந்து மீண்டுவர முடியாது 

நேற்று ஒரு முகநூல் நண்பரின் பதிவைப்பார்த்தேன்  சவக்காலை சடலம் அடக்கப்படும் இடத்தில் கூட இந்த இந்த சாதியினர்தான் அடக்கம் செய்யலாம் என மதில் சுவரில் கொட்டை எழுத்தாக எழுதப்பட்டிருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தனுசின் மூத்த மகனாக நடித்திருப்பவர் இலங்கை தமிழனா?

18 hours ago, ரதி said:

இதில் தனுசின் மூத்த மகனாக நடித்திருப்பவர் இலங்கை தமிழனா?

கருணாசின் மகன் என்று படித்த நினைவு மூத்தவரா இளையவரா தெரியல 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, அபராஜிதன் said:

கருணாசின் மகன் என்று படித்த நினைவு மூத்தவரா இளையவரா தெரியல 

அது இரண்டாவது மகன் ...சூப்பர் நடிப்பல்லவா! அந்த பெடியன் ...முதலாவது மகனாக நடித்தவர் இலங்கையை சேர்ந்தவராம் என்று கேள்விப்பட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 6:29 AM, ரதி said:

இதில் தனுசின் மூத்த மகனாக நடித்திருப்பவர் இலங்கை தமிழனா?

அவரது பெயர் டீஜேய் அருணாசலம். லண்டனில் பிறந்த இந்தியத் தமிழர்.

https://www.famousbirthdays.com/people/teejay.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

அவரது பெயர் டீஜேய் அருணாசலம். லண்டனில் பிறந்த இந்தியத் தமிழர்.

https://www.famousbirthdays.com/people/teejay.html

நன்றி 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎3‎/‎2019 at 10:54 AM, ரஞ்சித் said:

அவரது பெயர் டீஜேய் அருணாசலம். லண்டனில் பிறந்த இந்தியத் தமிழர்.

https://www.famousbirthdays.com/people/teejay.html

இவர் புலத்தில் பிறந்த ஈழத்தவர் என்று சொல்கிறார்கள் .. Teejay என்ற பெயரில் நிறைய யூ ரியூப் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

இவர் புலத்தில் பிறந்த ஈழத்தவர் என்று சொல்கிறார்கள் .. Teejay என்ற பெயரில் நிறைய யூ ரியூப் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்

 

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, லண்டனில் பிறந்த தமிழராம்.ஈழத்தமிழர்களுடனும் தொடர்பிருக்கலாம்.

எங்கு பிறந்தாலென்ன, தமிழர் தமிழர்தான். அதற்காகப் பெருமைப்படலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, லண்டனில் பிறந்த தமிழராம்.ஈழத்தமிழர்களுடனும் தொடர்பிருக்கலாம்.

எங்கு பிறந்தாலென்ன, தமிழர் தமிழர்தான். அதற்காகப் பெருமைப்படலாம். 

அதில்லை ரஞ்ஜித் சில பேர் தாங்கள் ஈழத்தவர் என்று தெரிந்தால் முன்னேற சான்ஸ் கிடைப்பதில்லை என்பதற்காக தமிழகம் என்று சொல்வார்கள். இவர் பெற்றோர் தமிழகமாயிருந்தால் தமிழகத்தில் தனது பெற்றோர் எந்த இடம் என்று சொல்லி இருப்பார் ..மற்றும் படி தமிழன் எங்கேயிருந்தும் முன்னேறினால் சந்தோசம் ...தமிழை வளர்ப்பதற்காக இவரை பாராட்டலாம் 
 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அகன்ற திரையில் பார்க்கவில்லை. அமேசன் பிரைமில் சிறந்த தரத்தில் (4K) நேற்றுத்தான் அசுரன் படம் பார்த்தேன். நடிப்பு, இயக்கம் எல்லாம் மிகவும் சிறப்பாகவும், முழுமையாகவும் அமைந்துள்ள தமிழ்ப்படம் இப்படி வருவது குறைவு. வருடத்திற்கு 250 சராசரிப் படங்களை எடுப்பதை விட அசுரன் போல படங்களை வாரம் ஒன்றிற்கு வெளியிட்டாலே போதும்👍🏾

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அசுரன், ஆனால் அதைமட்டும் பற்றியதல்ல..

இளங்கோ-டிசே

1.jpg

மேஸன் பிரைமில் 'அசுரன்' வந்துவிட்டது என்பதறிந்து நேற்று நள்ளிரவிலேயே பார்க்கத் தொடங்கினேன்.. இதுவரை இதுகுறித்து நிறைய விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை வாசிக்காமலே தவிர்த்திருந்தேன். எனக்கான பார்வையை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காய் திரைப்பட விடயங்களில் நான் இவ்வாறு அடிக்கடி செய்வதுதான்.
அசுரனில் தனுஷின் நடிப்புப் பற்றியும், வெற்றிமாறனின் நேர்த்தியான நெறியாள்கை குறித்தும் ஏற்கன‌வே எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்களில் விதந்தேந்தப்பட்டிருக்குமென‌ நினைக்கின்றேன். ஆகவே அவற்றைச் சிலாகிப்பதை  இங்கே நான் தவிர்க்கின்றேன். நாவலிலிருந்து திரைக்கதைக்கு மாற்றுவது குறித்த்தும், சிறந்த படைப்பாளிகளை/படைப்புக்களை திரைக்குக் கொண்டு வருவதோ குறித்தும், அவற்றின் சிக்கல்கள்/தடுமாற்றங்கள் குறித்தும் பிறகொருபொழுது பேசலாம்.
 

3.jpg

மலையாளத்தில் அண்மையில் வந்த 'ஜல்லிக்கட்டி'ல் ஹரீஸ் போன்ற எழுத்தாள‌ர்களை எப்படி அற்புதமாகப் பாவிக்கின்றார்கள்  என்பதை மட்டும் ஒரு சிறுகுறிப்பாய விடுகின்றேன். கடந்தவருடம் நான் கேரளாவில் நின்றசமயந்தான் இதே ஹரீஸின் 'மீச' நாவல் வெளிவராது இந்த்துத்துவசக்திகள் தடுத்து நிறுத்த பெரும் சர்ச்சைகள் நடந்ததது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

இவ்வாறு சிக்கலுக்குள்ளானவரை தம் திரைக்குப் பாவித்தது என்பதே ஓர் 'அரசியல் அறிக்கை'தான். மலையாளச் சூழலில் எழுத்தாளர்களும், திரைப்பட நெறியாளர்களும் எவ்வாறு அரசியல்மயப்பட்டிருக்கின்றார்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கின்றார்கள்/ஊடாடிக்கொள்கின்றார்கள் என்பதற்காய் இதைச் சொல்கின்றேன்.

நமது சூழலில் அரிதாக திரைக்குள் நுழையும் எழுத்தாளர்களும் வெகுசன சினிமாவுக்கு திரைக்கதை எழுதி, அதை நியாயப்படுத்துவதையும், இந்த இலக்கிய திரைப்பட‌ இடைவெளியைக் குறைப்பதற்குப் பதிலாக இலக்கியத்தைப் போல சினிமா இல்லை என்று அடிக்கடி எழுதி, தங்களுக்கான இருப்பை நிரூபிப்பதற்காய் இன்னும் இந்த‌ விரிசலை அதிகரித்தபடியும் இருக்கின்றார்கள் (இதை ஏற்கனவே ஒரு பதிவில் விரிவாக‌ எழுதியிருக்கின்றேன்).

ஆகவேதான் அசுரன் ஒரு கொடூரவாழ்வின் நிஜமுகத்தைத் திரைக்குக் கொண்டுவரும்போதும், அங்கே 'வெகுசன' சினிமாவுக்கான சமரசங்கள் இருக்கவேண்டும் எனச் சொல்கின்றார்கள். இந்தளவாவது திரையில் வருகின்றதே என திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டுமென எங்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
 

2.jpg

அசுரனின் கதையே ஒருவகையில் நிலத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமே. ஒருவகையில் நமது ஈழப்போராட்டம் கூட நிலமீட்புப் போராட்டந்தான். எனக்கு முன்பு இருந்த தலைமுறைக்கு அது மொழிக்கான போராட்டமாகவோ, தரப்படுத்தலுக்கான போராட்டமாகவோ இருந்தாலும், என்னைப் போன்றவர்களுக்கு அது நிலமீட்புப் போராட்டமாக இருந்தது. ஆகவேதான் நாம் 'இந்த மண் எங்களின் சொந்த மண்/ இதன் எல்லையை மீறி வந்தவன் யார்' என்ற பாடலிலும், 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்/ நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்' என்று வார்த்தைகளிலும் நாம் எமது போராட்டத்தை நிலமீட்பாகப் பார்த்தோம்.

என்னுடைய குழந்தை/பதின்மப் பருவத்தில் இலங்கை இராணுவம்/பொலிஸ் என்பவற்றையே பார்க்காதால் போராளிகள் என்பது எமது நிலங்களைப் பாதுகாப்பவர்களாக, இராணுவ முகாங்களை அழித்து வெற்றிகொண்டபோது அவர்கள் எங்களுக்கு மீட்பர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். வன்முறை நமக்குள் திணிக்கப்பட்டது என்றாலும், வேறு வழியின்றி வன்முறையே எமக்குரிய முதற் தெரிவாக இருந்தபோதும் (அல்லது அதற்கு முன் தலைமுறையால எந்தத் தெரிவுகளுமின்றி எமக்கு கையளிக்கப்பட்டபோதும்), வன்முறை நமக்கு இறுதியில் எதைத் தந்தது என்பதற்கு வரலாற்றின் சாட்சிகளாக நாங்களே இருக்கின்றோம்.

ஆகவேதான் அசுரன் காட்சிப்படுத்திய ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை, நிலத்தை மீட்பதற்கான அவர்களின் தத்தளிப்புக்கள் என்பவற்றை நெருக்கமாக உணர்ந்து பார்த்தபோதும், முக்கிய பாத்திரத்தை சாகச நாயகனாக்கியபோது, அதுவும் வன்முறையினூடாக அதை நிகழ்த்தியபோது படத்திலிருந்து வெளியேற்றப்பட்டவனாக உணர்ந்தேன். இந்த 'வன்முறை' சாகச நாயகனாக்கும் முயற்சியிலிருந்து சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' கொஞ்சம் தப்பியிருக்கின்றது  என்றே சொல்வேன்.

இவ்வாறான கதைகளினூடாக தமிழ்த்திரை யதார்த்ததிற்குள் நகரும்போது, ஏற்கனவே இருக்கும் திரைக்கதை சொல்நெறிகளினூடாக அணுகமுடியாது என்பதை, வெற்றிமாறன் உணராமல் இருந்ததாலேயே அருமையான ஓர் படத்தை இழந்துவிட்டிருக்கின்றார் என்றே தோன்றியது. அதுவும் முக்கியமாக வன்முறையை கையாளும் விதத்தால்/காட்சிப்படுத்தலாலும், ஒருவர் சாகசத்தால் எதிரிகளைப் பழி வாங்கும்போதும்கூட‌ -,பரியேறும்பெருமாள் நமது மனதில் ஏற்படுத்திய உறுத்தல்களினதோ/ குற்ற உணர்வின் எந்தத் துளியையும்- அசுரன் எனக்குள் விட்டுச் செல்லவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இதே இடத்தில் இன்னொரு விடயத்தைக் குறித்தாக வேண்டும். அசுரன் படம் வந்த கையோடு ஜெயமோகன் ஏற்கனவே எழுதிய கதையான 'குருதி'யை திரும்பப் பகிர்ந்துகொண்டார். அவரின் வழமையான வாசகர்கள் எப்படிப் புகழ்ந்துரைந்திருப்பார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தக் கதையை அசுரன் படம் வந்ததன் பின் அல்ல, அது வெளிவந்த காலத்திலேயே வாசித்து, ஜெமோவின் பாணியில் சொல்வதால் எனக்கான கருத்தைத் 'தொகுத்து' வைத்திருந்தேன். இப்படி ஒரு துண்டு நிலத்துக்காய் பழிவாங்கு என்று உசுப்பிக் கதையெழுதுகின்ற ஜெமோவால் எப்படி எங்களின் ஈழப்போராட்டத்திற்கான காரணத்தையோ  அல்லது வன்முறையைக்  கையிலெடுத்ததையோ எந்தக் காலத்திலும் விளங்கிக் கொள்ளமுடியாதுபோனது என்று யோசித்திருக்கின்றேன்.

போரிலிருந்து அல்லது இப்படி சாதியால் ஒடுக்கப்பட்டு மேலெழுந்து வருபவர்க்குத் தெரியும், மண்மீட்பை விட உயிர்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கின்றதென்று, ஆனால் இறுதியில் எதையும் செய்யமுடியாக் கையாலாக நிலையிலேயே எதிர் வன்முறையைப் பாவிக்கின்றார்கள் என்பது பற்றியும் அவர்களே நன்கும் அறிவார்கள்.

அப்படி வந்தவர்கள் திருப்பி அடிப்பதைவிட, ஏன் எங்களை அடிக்கின்றீர்கள் என ஆதிக்க/இனவெறிச் சக்திகளிடம் மன்றாடவும், அவர்களின் மனச்சாட்சியையும் உலுக்குவதையுமே தம் கலை இலக்கியங்களினூடாக செய்வதற்கு அதிகம் விரும்புகின்றவர்களாக இருப்பார்கள் என்பதே யதார்த்தமானது.

அசுரனை இரவு பார்த்துவிட்டு முதலில் வாசித்த கட்டுரை டி.தர்மராஜினதுடையது.  அதில்  அசுரன் தொட மறந்த/மறுத்த புள்ளிகளை அவர் அற்புதமாகத் தொட்டிருக்கின்றார். இறுதியில் அவரின் இந்த வார்த்தைகளையே இங்கு விட்டுச் செல்கின்றேன்.

"...ஏனென்றால், ஒடுக்கப்பட்டோரின் வன்முறை என்பது சாகசம் அல்ல என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அது உயிர் வாழ்வதற்காகச் செய்யப்படும் கடைசி யத்தனம்.  அவர்கள் அவதார புருசர்களைப் போல அந்த வன்முறைக்குப் பழகியவர்கள் இல்லை.  அதனால், தப்பும் தவறுமாகவே வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்."
......................................

(1) டி.தர்மராஜ்ஜினது கட்டுரை: https://tdharumaraj.blogspot.com/2019/10/uncut.html?spref=fb&fbclid=IwAR1Be9uOdepIrbF2NsMhzKzDWn1QKLDuMkZ5AH0B1PfyCjvYW6qABNWilMI

(2) ஜெயமோகனின் 'குருதி' கதை: https://www.jeyamohan.in/34372

(Nov 08, 2019)

 

http://djthamilan.blogspot.com/2020/04/blog-post_23.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.