Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவரசா: விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி, யோகி பாபு, நெடுமுடி வேணு, ரம்யா நம்பீசன், அரவிந்த் சாமி, பிரசன்னா, அதிதி பாலன், ரோஹினி, தில்லி கணேஷ், பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், ரித்விகா, ரமேஷ் திலக், சித்தார்த், பார்வதி திருவோட்டு, அம்மு அபிராமி, அதர்வா, அஞ்சலி, கிஷோர், சூர்யா, பிரயாகா மார்டின்; இயக்குநர்கள்: பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், வசந்த், கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த் சாமி, ரதீந்திரன் ஆர். பிரசாத், கே.எம். சர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன்.

காதல், கோபம், நகைச்சுவை, அருவருப்பு போன்ற மனிதனின் ஒன்பது உணர்வுகளை எடுத்துக்கொண்டு, அவற்றை வெளிப்படுத்தும் ஒன்பது குறும்படங்களின் தொகுப்பே 'நவரசா'.

இந்தத் தொடரின் முதல் படம் எதிரி. கருணையை அடிப்படையாகக் கொண்ட படம் என டைட்டில் சொல்கிறது. தன் அண்ணனின் மரணத்திற்கு காரணமானவனை, தம்பி கொலைசெய்துவிட்டு, கருணையை எதிர்நோக்குவதுதான் கதை. ஆனால், படம் முடிவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புவரை, படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதே புரியவில்லை. ஆங்காங்கே தத்துவ உரையாடல்கள் வேறு. முடிந்த பிறகும் எந்தவித நிறைவையும் ஏற்படுத்தாத படமாக அமைந்திருக்கிறது இந்த 'எதிரி'. இந்தத் தொடரிலேயே மிகச் சுமாரான படமாக இருக்கும்போலிருக்கிறது என்று தோன்றவைக்கிறது.

அடுத்த படம், Summer of 92. பள்ளிக்கூடத்தில் சரியாகப் படிக்காத மாணவன், பெரிய நடிகராகி தன் சொந்த ஊருக்கு வந்து தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதுதான் கதை. இதில் உள்ள சில ரசிக்கவைக்கும் காட்சிகளால் பரவாயில்லை என்று சொல்லலாம். யோகிபாபுவும் ரம்யா நம்பீசனும் படத்தை தொடர்ந்து பார்க்க வைக்கிறார்கள்.

மூன்றாவது படம், Project Agni. கடந்த காலத்திற்குச் செல்லும் முறையைக் கண்டுபிடிக்கும் ஒருவன், அங்கே செய்த தவறால் தன் நிகழ்காலத்தைத் தொலைத்துவிடுகிறான். இதனால், அந்த ரகசியத்தை தன் நண்பனிடம் கொடுத்துவிட்டு சாக நினைக்கையில் ஒரு எதிர்பாராத திருப்பம். இந்தப் படம், சற்று சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது. ஆனால், படத்தின் பெரும்பகுதி வசனங்கள் ஆங்கிலத்திலேயே அமைந்திருப்பது சறுக்கல். ஆனால், படம் நெடுக சுவாரஸ்யத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்.

நான்காவது படம், பாயாசம். அருவெருப்பை அடிப்படையாகக் கொண்ட படம். தி.ஜாவின் கதையைப் படமாக்கியிருக்கிறார் வசந்த். தன் குடும்பத்தில் நல்லது நடக்கவில்லையென்பதால், தன் அண்ணன் மகனின் குடும்பத்திலும் யாரும் சந்தோஷமாக இருக்கக்கூடாது என நினைக்கும் ஒரு மனிதனின் கதை. ஒட்டுமொத்தத் தொடரிலும் சிறந்த படமென்றால் இந்தப் படத்தைச் சொல்லலாம். திரைக்கதை, நடிப்பு எல்லாவற்றிலும் பிற படங்களைவிட மேம்பட்டு நிற்கும் குறும்படம் இது.

ஐந்தாவது படம், Peace. ஈழத்தில் ஒரு போர்ச் சூழலில் நாய் ஒன்றைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுக்கும் வீரனின் கதை. இதுவும் முழுமையில்லாத, அமெச்சூரான கதை. பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்கள் இருந்தாலும் எவ்விதத்திலும் வசீகரிக்காமல் கடந்துசெல்கிறது படம்.

Navarasa - Netflix India

பட மூலாதாரம்,NAVARASA - NETFLIX INDIA

ஆறாவது படம். ரௌத்திரம். அரவிந்த் சாமி இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையுடன் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் கதை மிகப் பழையதாக இருந்தாலும் திரைக்கதை மூலம் ஆச்சரியத்தை அளிக்கிறது. தங்கள் தாயை வேறொரு ஆணுடன் பார்த்துவிட்ட குழந்தைகளின் வெவ்வேறு விதமான கோபங்கள்தான் படம். பரவாயில்லை ரகம்.

ஏழாவது படம், இன்மை. சொத்துக்காக பணக்காரர் ஒருவரைக் கல்யாணம் செய்துகொண்டு, குட்டிச்சாத்தான் மூலம் சாகடிக்கும் பெண்ணுக்கு, தண்டனை கிடைக்கிறது. அது எப்படி நடக்கிறது என்பதை இஸ்லாமியப் பின்னணியில் சொல்லியிருக்கிறார் ரதீந்திரன். இதுவும் ஒரு சுவாரஸ்யமான படம்தான் என்றாலும், படம் மெதுவாக நகர்வது ஒரு பலவீனம்.

எட்டாவது படம், துணிந்த பின். கதாநாயகன் காட்டுக்குள் நக்சலைட்டுகளை வேட்டையாடச் செல்லும் சிறப்பு அதிரடிப் படையின் வீரன். ஒரு நக்சலைட்டை உயிரோடு பிடித்துவரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. கதை, திரைக்கதை, படமாக்கம் எல்லாமே இந்தப் படத்தில் சிக்கலாக இருக்கிறது. நக்சலைட்டைப் பிடித்துவந்து, கடைசியில் கோட்டைவிடுகிறார் கதாநாயகன். முன்பே தப்பிக்கவிட்டிருந்தால், நாமும் தப்பியிருக்கலாமே என்று தோன்றுகிறது.

ஒன்பதாவது படம், கிடார் கம்பி மேலே நின்று. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். சுமார் முக்கால் மணி நேரம் நீளும் இந்தப் படத்தின் பெரும் பகுதி பாடல்களிலேயே கழிகிறது. மீதமிருக்கும் படத்தில் கதாநாயகன் பைக்கில் கதாநாயகியை அழைத்துச் செல்கிறார் (அப்போதும் பின்னணியில் பாடல் ஒலிக்காமலா போய்விடும்?). ஒரு காதல் உருவாவதை மிக செயற்கையாகக் காட்டி முடித்திருக்கிறார் கௌதம். இந்தத் தொடரின் முதல் படமான 'எதிரி'யைப் பார்க்கும்போது, இந்தத் தொடரிலேயே சுமாரான படம் என்று தோன்றியதல்லவா? இந்தப் படத்தை பார்த்தவுடன் அந்த எண்ணம் மாறிவிடும்.

இந்த ஒன்பது குறும்படங்களும் சேர்ந்து சுமார் நான்கே முக்கால் மணி நேரத்திற்கு ஓடுகின்றன. இந்த ஒன்பது படங்களில் பாயாசம், இன்மை, Summer of 92, Project Agni, ரௌத்திரம் ஆகிய படங்கள் பரவாயில்லை என்று சொல்லலாம். மீதப் படங்கள் பெரும் ஏமாற்றமளிக்கின்றன.

எல்லாப் படங்களிலுமே மிகத் திறமையான நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகர்கள், டெக்னீஷியன்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், கதை, திரைக்கதையில் கோட்டைவிட்டிருப்பதால் படங்கள் சொதப்பியிருக்கின்றன. இவற்றில் பல படங்களை இயல்பான வேகத்தில், நகர்த்தினால், வெறும் 10 நிமிடங்களுக்கு உரிய கதையை மட்டுமே கொண்டிருக்கின்றன.

ஆகவே, அவை ஒரு குறும்படமாக முழுமைபெறாமல், ஒரு திரைப்படத்தின் சில காட்சிகளைப் போல கடந்துசெல்கின்றன

நவரசா: விமர்சனம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

 

நவரசா விமர்சனம் – தோழர் கார்த்திக்

 

சில படங்கள் மனிதகுல பிரம்மாண்டத்தில் நம்மை உற்சாகப்படுத்தும். இன்னும் சில படங்கள் அதற்கு நேர் எதிராக நம்மை மலக்கிடங்கிற்குள் தள்ளிவிட்டது போல ஒரு ஒவ்வாமையைக் கொடுக்கும். அது ஒரு படமாக மட்டுமே இல்லாமல், ஒன்பது படங்களாக இருந்தால்? ஒன்பது படங்களும் ஒன்பது விதமாக நம்மைக் கொடுமைப்படுத்துகிறது என்றால் மிகை அல்ல. அருவறுப்புக்கு ஒன்பது ரசங்கள் உண்டா அதுவே “நவரசா”. எவ்வளவு பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் வைத்து வேலை செய்தாலும், யாருக்கும் புரியாமல் திரைமொழி லேயர்கள் என்று பேசினாலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கம் இல்லாத, படைப்புகளை, மக்கள் புறக்கணிக்கவே செய்திருக்கிறார்கள்.

“குற்றமும் தண்டனையும்” தாஸ்தாவெஸ்கி நாவலை எவ்வளவு சிதைக்கமுடியுமோ அவ்வளவு சிதைத்தால் அதுவே “எதிரி”.

கொலை செய்தது, அதை உணர்வதெல்லாம் சரி தான். ஆனால் கொலை செய்யப்பட்டவர் ஒரு மோசமான மனிதர், அந்தப்பாத்திரம் குற்றஉணர்வுக்கு காரணாமாக வருவதை ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா? அந்த பாத்திரம் மனசாட்சி போல வருவதால், அந்தக்கதை சிதைந்துவிடுகிறது. ஒருவர் குற்றம் புரிந்தவரா, அந்த கொலைக்கு உண்மையிலேயே வருந்த வேண்டுமா என்பதெல்லாம் அந்தக்குற்றத்தின் அளவைப்பொறுத்தே சொல்லமுடியும். இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியாது என்னமோ உண்மை தான், அதற்காக ராஜ பக்க்ஷேயோ ஹிட்லரோ உள்ளே புகுந்து நமக்கு நீதி போதனை வகுப்பு எடுக்கமுடியுமா என்ன? அந்த இடத்தில் கதை சறுக்குகிறது.

கதை மணி சார், ஒரு இடத்தில் தஸ்தாவேஸ்கியை தாண்டவேண்டும் என்று நினைத்தவருக்கு, கால்ச்சட்டை கிழியும் சத்தமே கேட்கிறது. இவர் குற்றம் இழைத்தவர் என்று உணர்ந்து, கொலைசெய்யப்பட்டவர் மனைவியிடம் செல்கிறார். நான் தடுக்கவில்லை நானே முதல் குற்றவாளி என்று சொல்கிறாள் மனைவி. கணவன் சாகட்டும் என்று விட்ட மனைவி, அதற்கடுத்து குற்றவுணர்வு அடைகிறார். செத்தா சாகட்டும் என்று நினைக்கும் அளவுக்கு கணவன் கொடூரமாக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஒரு கொடூரமான மனிதர் இறப்புக்கு காரணமான இருவர் குற்றவுணர்வு அடைகிறார்கள் என்பதே கதை. ஒரு குற்றவுணர்வுக்கு முன்னால் இன்னொரு குற்றவுணர்வை எதிராக வைத்து, கதையை எவ்வளவுக்கு எவ்வளவு நீர்த்து போக செய்யமுடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீர்த்து போக செய்கிறார் மணி.

சமூகத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தனிநபர் குற்றவுணர்வை மட்டுமே வைத்து கதை செய்ய முடியாது. மனிதர்களை சேர்த்து புரிந்து கொண்டு, வெவ்வேறு கோணங்களில் கதை சொல்வதற்கு வரலாற்று புரிதலும், கொஞ்சம் மக்களை பார்த்து மக்களின் போக்கை உணர்ந்துகொள்வதும் வேண்டும். ஒரு தனிநபராக இருந்துகொண்டு, கண்ணைமூடிக்கொண்டு யோசித்தால், தனக்கு தெரிந்த ஒரு நாலு ஐந்து உணர்வைவைத்தே படமெடுக்க முடியும். தனிநபர் உணர்வுகள் முக்கியம் தான், ஆனால் கூட்டு உணர்வு கொண்ட படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு சமூகத்தை முன்வைத்து அதற்குள் தனிநபருக்கு உண்டான பாத்திரம் தானே நியாயமானதாக இருக்க முடியும். இங்கு படைப்பாளிக்கு சமூக உணர்வு தெரியவில்லை, இயல்பான சமூகத்துடன் வெளியே உள்ளார், மக்களின் பிரச்சனைகளை கற்பனை செய்து ஒரு திரைக்கதையை எழுதுகிறார், அது மக்களின் பிரச்சனைக்கு நெருக்கமில்லாத பொழுது அது மண்ணைக்கவ்வும். அதனால் தான் நிறைய படைப்பாளிகள் gangstair போன்ற கதைகளுக்குள்ளும், போலீஸ், திரில்லர் என்று நுழைகிறார்கள். மக்கள் கதைசொல்ல, மக்களுடன் நெருங்கி இருக்கவேண்டும். வெறும் தொழில்நுட்பம் கொண்டு அதை செய்ய முடியாது.

எந்த உணர்வையும் விட நகைச்சுவை உணர்வே மக்களுக்கு நெருக்கமானது. மக்களின் அவலங்களை, அரசியல் போதாமையை, அறியாமையை சுட்டிக்காட்ட ஒரு நுட்பமான மனம் வேண்டும். போகிற போக்கில் எல்லாம் சிரிக்கவைக்க முடியாது. நானெல்லாம் சிரிப்பு இல்லை என்றால் என்றோ சிதைந்துபோயிருப்பேன். ஒன்று வடிவேலோ, இல்லை கௌண்டமணியோ என்னை லேசாகிவிட்டு போவார்கள். வடிவேலு சுயபகடி செய்துகொள்பவர், கொடூரமாக அடிவாங்கும் பொழுதெல்லாம் வடிவேலுவை நினைத்துக்கொண்டால் மனதிற்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும். அந்த சுயபகடி, நம் ஈகோவை சுத்தியல் வைத்து அடித்துவிடும். கௌண்டமணி one line பற்றி கேட்கவே வேண்டாம், வாழ்வு நம்மை பரிகாசம் செய்யும்பொழுதெல்லாம், கௌண்டமணி சொல்லும் சத்திய சோதனை போன்ற பன்ச் நினைவுக்கு வரும். அவமானப்படும்பொழுதெல்லாம் “எதிர் கட்சிக்காரன் பார்த்தா என்னைய என்ன நினைப்பான்” என்னும் வசனம் காதுக்குள் ஒலிக்கும். மக்கள் கலைஞன் சார்லி சாப்ளினை யாருக்குத்தான் பிடிக்காது? இந்த நவரசங்களில் கொடுமையாக எடுத்திருப்பது “நகைச்சுவை” உணர்வைத்தான். y g மகேந்திரன் படத்தில் உள்ளார் என்னும் பொழுதே கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். ஒரு படத்தில் சந்தானம் சொல்வார் “கோபம் வர மாதிரி காமெடி பண்ணாத”, அதற்கு பொருந்தக்கூடிய கதை. இத்தனைக்கும் யோகி பாபு போன்ற திறமையான நடிகரைவைத்து காமெடி செய்ய முடியவில்லை. கடைசியாக “அந்த நாற்றம் இன்னும் போகவில்லை ” என்று யோகிபாபு பார்த்து அந்த டீச்சர் சொல்வதில் எவ்வளவு வன்மம் ஒளிந்துள்ளது. தலித் சினிமாக்கள் வந்துகொண்டிருக்கிற காலகட்டத்தில் அந்த நாற்றம் வசனத்தில், படைப்பாளியின் மூளைக்குள் இருக்கும் மலத்தின் நாற்றம், திரையில் நாற்றமாக நாறுகிறது. இவ்வளவு வன்மமாய், இவ்வளவு கொடூரமாய், இவ்வளவு நாற்றமெடுத்து ஒரு காமெடி படத்தை பார்த்ததில்லை. படம் மொக்கையாக இருப்பதென்பது வேறு, நாற்றமெடுப்பதை போல மலக்கிடங்கு போல் இருப்பதென்பது வேறு. இந்த இரண்டாவது படம் பார்க்கும்பொழுதே நமக்குள் பாதி சக்தி போய்விடுகிறது, ஓ இதுதான் உலக சினிமா அனுபவமா?

பொதுவாக அடிப்படைவாதிகள் ஜோசியத்தை அறிவியல் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். பஞ்சாங்கத்தில் அம்மாவாசை பௌர்ணமி என்று சொல்வதாலேயே எல்லாமே சரி என்று வாதிடுவார்கள். pseudo science எனப்படுவதை science என்று பேசுவார்கள். அப்படி ஒரு படமே கார்த்திக் நரேன் படம். ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள், maturity என்பது ஆங்கிலத்திலோ தமிழிலோ இல்லை, என்ன பேசுகிறோம் என்பதில் உள்ளது. தமிழில் குப்பை என்பது ஆங்கிலத்தில் garbage அவ்வளவே. எல்லாமே preprogram செய்யப்பட்டுள்ளது என்று ஜோஸ்யக்காரர் அறிவியல் போல் பேசுவார் அல்லவா அதுவே oneline. இந்தக் குப்பை படத்தை கார்த்திக் நரேன் இயக்கவில்லை, அதுவும் நீங்கள் படம்பார்த்ததும் ஏற்கனவே preprogam செய்யப்பட்டுள்ளது, இல்லையென்றால் மக்களுக்கான படத்தை அவர் எடுத்திருப்பார் அப்படித்தானே?

எந்தக்கதையும் மனதில் ஒட்டவில்லை என்னும்பொழுது, 1965 இல் தி ஜானகிராமன் எழுதிய கதையை படமாக மாற்றியுள்ளார்கள்.

2020 வரை வந்துவிட்டோம், பெண்களின் சூழல் எவ்வளவோ மாறிவிட்டது. திருமணம் தேவையா இல்லையா என்னும் விவாதங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருக்க திருமணம் ஆகி, கணவன் இழந்துவிட்ட பெண்ணின் கதை, பக்கத்தில் அண்ணன் மகனின் மகளுக்கு மட்டுமே நல்லது நடக்கிறது என்னும் 60 களின் கதை இங்கு எடுபடவில்லை. இப்பொழுது இருக்கும் பார்ப்பன மக்களின் வாழ்வே வெகுஜனத்துக்கு அந்நியம், அது 60 களின் இருக்கும் விழுமியங்கள், அந்த அந்நியப்பட்ட வாழ்வு மக்களுடன் ஒன்றவில்லை. குறிப்பாக ரோகினி பாத்திரம், மணி சார் படத்தில் வருவதைப்போலவே செயற்கையாக பேசுகிறார். அந்த செயற்கைதனம் ஒன்பது படங்களிலும் உள்ளது. உலகமயமாக்கல் காலகட்டத்தில் பொறாமை எல்லாம் ஒரு பிரச்சனையா? மக்கள் தினம் தினம் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்,

பொருளாதாரத்தில் வாழ்வே பறிபோகிறது. தினசரி ஒருவன் பல துரோகங்களை சந்திக்கிறான், பல உணர்வுகள் அவன் வாழ்வில் அலை போல வந்து மோதிக்கொண்டிருக்கிறது. ஒரு மகிழ்ச்சிக்கு பின்னாலேயே ஒரு துக்கம் தொற்றிக்கொள்கிறது. உலகமயத்தில் நிரந்தர உறவுகள் இல்லாமல் தனிமையில் தத்தளிப்பவர்கள் என்று பிரச்சனைகளின் வீரியம் அதிகம் , அதில் 60 களின் உணர்வான “பொறாமை” எல்லாம் ஒரு உணர்வா என்றே ரசிகனுக்கு தோன்றும். “பாயசம்” அந்தக்காலத்தில் சிறந்த கதையாக இருந்திருக்கலாம், ஆனாலும் ரசிகனால் ஓட்டமுடியாது,

 இதை அவனால் ஆழமான உணர்வாக பார்க்கமுடியாது. ரசிகன் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துவிட்ட பிறகு, படைப்பாளி பழைய வகுப்பிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன செய்ய? கடைசி காட்சியில் டெல்லி கணேஷ் மகள், அவரை கேவலமான பார்வையில் பார்ப்பாள். நமக்கு இந்தக்கதை பார்த்த பிறகு இதெல்லாம் ஒரு கதையா என்று டெல்லி கணேஷ் மகள் பார்க்கும் பார்வை ஒட்டிக்கொள்கிறது. அந்தப்படத்தை உணர்வதற்கான பார்வை அந்தப்படத்தினுள்ளே உள்ளது.

“ரௌத்திரம்” உழைக்கும் தலித் மக்களின் வாழ்வியலை இன்னும் மோசமான முறையில் சித்தரிக்கும் படம். வடசென்னையை பார்த்தபொழுது, அது ஒரு தொழில்நகரம் என்று தெரிந்தது. எங்கு பார்த்தாலும் கெமிக்கல் ஆலைகள், இதுவரை வடசென்னையை வெற்றிமாறன் உட்பட யாரும் சரியாக பதிவு செய்யவில்லை.ரஞ்சித் விதிவிலக்கு. ஒரு கருணையின் அடிப்படையில் அவர்களை பார்க்கவேண்டுமா? அவர்கள் வாழ்வில் வறுமை உண்டுதான் என்றாலும் அதை போக்க என்னவேண்டுமானாலும் அவர்கள் செய்வார்களா? வறுமைக்கு எதிராக அவர்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஆனால் வண்ணமயமான வாழ்வும் உழைப்பும் அவர்களிடம் உண்டு,.வெறும் சினிமா பார், உல்லாச வாழ்வு இதிலிருந்து உள்ள மூளையிலிருந்து படுக்கையறை காட்சியைத்தாண்டி வேறு யோசிக்க தெரியவில்லை இயக்குனருக்கு. இயக்குனர் லோக்கல் என்று நாம் தெரிந்துகொள்ள கெட்டவார்த்தையை மட்டுமே நம்பியிருக்கிறார். அந்த சிறுவன் ராமகிருஷ்ணனின் நடிப்பும், அந்த தங்கையின் நடிப்பும் ஆறுதல்.

இந்த ஒன்பது படங்களில் சித்தார்த் படம் கொஞ்சம் ஆறுதல், இருந்தாலும் மக்களுக்கு ஒன்றாத கதையம்சம் தான். இசுலாமிய அடிப்படைவாதிகளின் “ஜின்” செய்வினைகளை பொய் என்று போகிற போக்கில் கேள்விக்கு உட்படுத்துவதால் கொஞ்சம் முற்போக்கான கதை என்று சொல்லலாம். மற்றபடி ஒரு பழிவாங்கும் கதை,

மற்றக்கதைகளுக்கு இந்தக்கதை கொஞ்சம் பரவாயில்லை.

ஒரு மேட்டுக்குடியின் பார்வையிலிருந்து மகள் செண்டிமெண்ட், தனிநபர் உணர்ச்சிகள் என்று “கன்னத்தில் முத்தமிட்டாள் ” படத்தில் மணி சார் இயக்கி இருப்பார். அவரின் அரசியல் படங்கள் பெரும்பாலும் அரசியலை தனிநபர் உணர்விலிருந்து காயடிக்கும். இவர் வீட்டுக்குள் மோட்டு வளையத்தை பார்த்துக்கொண்டே, ஈழத்தை தன் மூளைக்குள் கொண்டுவருவார் மணி சார். அதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல “குட்டி மணி” கார்த்திக் சுப்புராஜ். மனித உயிருக்கும், நாயின் உயிருக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பவனை போல ஈழத்தின் போரில் ஒரு சிறுவன் இருக்கிறானாம்? என்னும் பாத்திரப்படைப்பிலிருந்து குட்டி மணி சார் வீழ்ச்சி தொடங்குகிறது. ஒரு நாயின் உயிரை காப்பாற்ற ஒரு போராளியின் உயிர் பணையம் வைக்கப்படுகிறது.

 இந்த நாய் நேயம் எல்லாம் பொதுவாக மேட்டுக்குடி சிந்தனை மரபு, அதுவும் ஒரு உயிர்தானே என்று வக்காலத்து வாங்கக்கூட சிலர் கிளம்பக்கூடும். ஒரு நாயின் மேல் பரிவு என்பது இங்கு விடயமல்ல, ஒரு போர்க்கால சூழலில் வீட்டில் இருக்கும் நாயை காப்பாற்றுவதைக்காக ஒரு போராளி உயிர் கொல்லப்படுகிறது என்பதே அவலம். அந்த ஈழத்தில் நாய்க்காக போராளியை சிக்கலில் அனுப்பும் சிறுவனின் மூளை ஈழத்தை சேர்ந்ததல்ல, குளிர் சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு ஈழத்தை பற்றி கதை எழுதும் இயக்குனரின் மூளை. அந்த சிறுவனும் அவர் தான். வரலாற்றை சமூக புரிதல் இல்லாமல் ஒரு தனிநபர் உணர்ச்சியாக மாற்றுவதில் “குட்டி மணி” கார்த்திக், பெரிய மணிக்கு சளைத்தவர் அல்ல.

அதர்வா படம் இன்னொரு மொக்கை கதை, ஈழத்துக்கு பதிலாக நக்சல் பிரச்சனை அவ்வளவே. இதற்கு மணி சார் தான் கதை.

அரசியல் பிரச்னையை, தனிநபர் தையிரியம், சுடும்பொழுது கைநடுங்குவது என்று சுருக்கி தனக்கு தெரிந்த அரசியல் காயடிப்பதை செய்கிறார் மணி. மணி சார் டச் என்பது, வீரியமாக இருக்கும் பிரச்சனைகளை தனிநபர் பிரச்னைகளாய் சுறுக்குவது. ரோஜா படம் போல இங்கும் அஞ்சலி அதாவாவுக்காக காத்துகொண்டு இருக்கிறாள்.

கடைசியாக “சட்டை மேலே எவ்வளவு பட்டன்” என்னும் வசனம் போல இருக்கும் சூர்யா படம். காதலை காபீ டே யில் இருந்து

இசைக்கு நகர்த்தியுள்ளார் கெளதம். நன்றாக உற்றுப்பார்த்தால் மணி சார், கெளதம் படங்களில் வரும் காதல் கொண்டாடப்படுகின்றன, இல்ல அப்படி ஒரு பார்வை மக்களிடம் பொதுப்புத்தியில் உண்டு.

யோசித்துப்பார்த்தால் காதலில் முதல் நிலை பார்த்துக்கொண்டே இருக்கும் பரவசம் தாண்டி, உறவு முறைகளில் இருக்கும் சிக்கல்களை அவர்கள் பெரிதாக பேசி இருக்க மாட்டார்கள். அப்படி பேசி இருந்தாலும், பெரும்பாலும் மேம்போக்கானதாகவும், பிற்போக்கானதாகவும் இருக்கும். பார்த்தவுடன் வரும் ஒரு வித attraction மட்டுமே இவர்கள் படங்களில் காதலாக வியந்தோதோதப்பட்டு இருக்கும். அந்த அந்த காலகட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் இவர்களைகொண்டாடி இருப்பார்கள் அவ்வளவே. காதலில் இயல்பாக இருக்கும் வர்க்க பிரச்சனைகள் , நம் ஊரில் இருக்கும் சாதி ரீதியான பிரச்சனைகள் எல்லாம் இவர்கள் படங்களில் இருக்காது. இல்லை மார்க்கெட் வேண்டும் என்பதற்காக, வெளியூரில் படமோட வேண்டுமென்பதற்காக வேறு வேறு மதம் இங்கு ஒரு பிரச்சனை என்று வைப்பார்கள்.

பொதுவாக காபி டே, பப் காதல் தான் மணி சார் மற்றும் கௌதம் உடையது. கொஞ்சம் வாசிப்பு, கொஞ்சம் வாழ்வு பற்றிய புரிதல் வந்துவிட்டாலே இதையெல்லாம் காதல் என்று சொல்லமுடியாது? இந்த மண், இந்த மண்ணில் இருக்கும் காதல் பிரச்சனைகள் எதையுமே இவர்கள் எடுத்ததில்லை. அதைத்தாண்டி இளையாராஜா, ரகுமான் என்று பாடல்களில் பாடல்களை படமாக்கும் விதங்களில் இவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். அதைத்தாண்டி மக்களின் ரசனை பெரிதாக இல்லாத பொழுதுகளில் இவர்களுக்கான வெளிச்சமும் இங்கு உண்டு. இன்று ரஞ்சித், மாரி செல்வராஜ் என்று ரசிகனின் ரசனை ஓரளவு வளர்ந்துள்ளது. அதைத்தாண்டி மலையாளம், தெலுங்கு என்று ott காலகட்டத்தில் எல்லாரும் படம்பார்க்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் தத்துவம் எடுபடுகிறது. இளைஞர்கள் படிக்கிறார்கள். அந்நியன், ரோஜா, உன்னைப்போல் ஒருவன், பம்பாய், gentle man என்று வலதுசாரி சினிமாவை ரசித்த ரசிகன் இன்று பெருவாரியாக குறைந்துள்ளார்கள். அன்று கொண்டாடிய இயக்குனர்களை இன்று கொண்டாட முடியாத மனநிலை நமக்கு வந்திருக்கிறது.

மக்கள் வாழ்வியலை பேசும் படங்களையே ரசிக்கிறார்கள். மக்கள் வாழ்வில் சந்நிதிக்கும் பொருளியல் உளவியல் பிரச்சனைகளுக்கும் முன் இங்கு முன்வைக்கப்படும் நவரசம் கோமாளித்தனமாக உள்ளது. ஒரு வேளை ரசனை முறை சிறுபிள்ளைத்தனமாக இருந்த காலகட்டத்தில் இப்படி ஒரு படைப்பு வரும்பட்சம் ரசித்து இருக்கலாம். இன்று மக்கள் கொரோனா காலகட்டத்தில் உள்ளார்கள், மன இறுக்கம் அதிகமாகிவிட்டது, அந்த கொடுமைகளில் இந்தக்கொடுமை வேறா என்று இரண்டாவது கதை பார்த்தவுடனேயே இந்தத்தொடர் பார்ப்பதை நிறுத்தி விடுகிறார்களாம், கேள்விப்பட்டேன். 

https://inioru.com/நவரசா-விமர்சனம்-தோழர்-க-2/

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  இந்த படத்தை  பார்த்தேன்

ஒரு  சிறு  செய்தியை  சொல்ல  வெளிக்கிட்டு???

சேறு  பூசிய  கதையாக....

ஆரம்பமே பனங்காயை  விழுத்த பல குண்டுகள்???

அதுவும்  எல்லையில்???

இதெல்லாம்  தமிழீழப்  பயணத்தில் இல்லாதவை

நடக்காதவை

நடக்கவும் முடியாதவை

போங்கடா  போய்  நீங்கள்  புரண்ட மண்ணில்

ஆயிரம்  அவலங்கள்  கதைகள்  இருக்கு

செதுக்குங்கள்

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

"...இந்த நாய் நேயம் எல்லாம் பொதுவாக மேட்டுக்குடி சிந்தனை மரபு, அதுவும் ஒரு உயிர்தானே என்று வக்காலத்து வாங்கக்கூட சிலர் கிளம்பக்கூடும். ஒரு நாயின் மேல் பரிவு என்பது இங்கு விடயமல்ல, ஒரு போர்க்கால சூழலில் வீட்டில் இருக்கும் நாயை காப்பாற்றுவதைக்காக ஒரு போராளி உயிர் கொல்லப்படுகிறது என்பதே அவலம். அந்த ஈழத்தில் நாய்க்காக போராளியை சிக்கலில் அனுப்பும் சிறுவனின் மூளை ஈழத்தை சேர்ந்ததல்ல, குளிர் சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு ஈழத்தை பற்றி கதை எழுதும் இயக்குனரின் மூளை. அந்த சிறுவனும் அவர் தான். வரலாற்றை சமூக புரிதல் இல்லாமல் ஒரு தனிநபர் உணர்ச்சியாக மாற்றுவதில் “குட்டி மணி” கார்த்திக், பெரிய மணிக்கு சளைத்தவர் அல்ல. "

 

 

👆இதை எழுதிய விமர்சகர் ஈழத்தில் யுத்த காலத்தில் வசித்தவரா அல்லது பிரச்சார வீடியோக்களில் ஈழப் போர்கள் பற்றி அறிந்தவரா? அறிய ஆவல்!

மிருகபாசம், காதல், கள்ளக்காதல், கல்வி, தொழில் முயற்சி என்பவை உட்பட்ட எல்லா மனித அசைவுகளும் உணர்ச்சிகளும் பின்னணியில் இருக்கத் தக்கதாகத் தான் ஈழத்தில் யுத்தம் நடந்தது என்பதை யுத்தத்தினுள் வாழ்ந்தோர் புரிந்திருப்பர் - கணனித் திரையிலும், வலைப்பூக்களிலும் பிரச்சாரப் பதிவுகள் பார்த்த விமர்சகர் எல்லா மக்களும் எந்த நேரமும் துவக்கை அருகில் வைத்துக் கொண்டு உம்மணாம் மூஞ்சியாக இருந்தனர் என்ற புரிதலைப் பெற்றிருக்கிறார் என்றே நம்பத் தோன்றுகிறது.

இந்தப் படத்தை நான் நேற்றுப் பார்த்திருந்தேன்! மேலே இருப்பது போன்ற  மொக்கைத் தனமான விமர்சனங்கள் எவற்றுக்கும் தொடர்பில்லாத நல்ல படைப்பாகத் தான் எனக்குத் தெரிந்தது.

மேலே விசுகர் பனங்காயை சுட்டு வீழ்த்தியதோடு பார்க்காமல் நிறுத்தி விட்டார் போல. ஏனெனில், யுத்த காலத்தின் கொடிய வலிகளை கதை வசனத்திலும் காட்சிகளிலும் காட்டியிருக்கிறார்கள். நாம் பனங்காயோடு முட்டிக் கொண்டு அதை மிஸ் பண்ணி விடக் கூடாது!

நடிகர்களுக்கும், படைத்தவர்களுக்கும் பாராட்டுக்கள்!🙏

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

"...இந்த நாய் நேயம் எல்லாம் பொதுவாக மேட்டுக்குடி சிந்தனை மரபு, அதுவும் ஒரு உயிர்தானே என்று வக்காலத்து வாங்கக்கூட சிலர் கிளம்பக்கூடும். ஒரு நாயின் மேல் பரிவு என்பது இங்கு விடயமல்ல, ஒரு போர்க்கால சூழலில் வீட்டில் இருக்கும் நாயை காப்பாற்றுவதைக்காக ஒரு போராளி உயிர் கொல்லப்படுகிறது என்பதே அவலம். அந்த ஈழத்தில் நாய்க்காக போராளியை சிக்கலில் அனுப்பும் சிறுவனின் மூளை ஈழத்தை சேர்ந்ததல்ல, குளிர் சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு ஈழத்தை பற்றி கதை எழுதும் இயக்குனரின் மூளை. அந்த சிறுவனும் அவர் தான். வரலாற்றை சமூக புரிதல் இல்லாமல் ஒரு தனிநபர் உணர்ச்சியாக மாற்றுவதில் “குட்டி மணி” கார்த்திக், பெரிய மணிக்கு சளைத்தவர் அல்ல. "

 

 

👆இதை எழுதிய விமர்சகர் ஈழத்தில் யுத்த காலத்தில் வசித்தவரா அல்லது பிரச்சார வீடியோக்களில் ஈழப் போர்கள் பற்றி அறிந்தவரா? அறிய ஆவல்!

மிருகபாசம், காதல், கள்ளக்காதல், கல்வி, தொழில் முயற்சி என்பவை உட்பட்ட எல்லா மனித அசைவுகளும் உணர்ச்சிகளும் பின்னணியில் இருக்கத் தக்கதாகத் தான் ஈழத்தில் யுத்தம் நடந்தது என்பதை யுத்தத்தினுள் வாழ்ந்தோர் புரிந்திருப்பர் - கணனித் திரையிலும், வலைப்பூக்களிலும் பிரச்சாரப் பதிவுகள் பார்த்த விமர்சகர் எல்லா மக்களும் எந்த நேரமும் துவக்கை அருகில் வைத்துக் கொண்டு உம்மணாம் மூஞ்சியாக இருந்தனர் என்ற புரிதலைப் பெற்றிருக்கிறார் என்றே நம்பத் தோன்றுகிறது.

இந்தப் படத்தை நான் நேற்றுப் பார்த்திருந்தேன்! மேலே இருப்பது போன்ற  மொக்கைத் தனமான விமர்சனங்கள் எவற்றுக்கும் தொடர்பில்லாத நல்ல படைப்பாகத் தான் எனக்குத் தெரிந்தது.

மேலே விசுகர் பனங்காயை சுட்டு வீழ்த்தியதோடு பார்க்காமல் நிறுத்தி விட்டார் போல. ஏனெனில், யுத்த காலத்தின் கொடிய வலிகளை கதை வசனத்திலும் காட்சிகளிலும் காட்டியிருக்கிறார்கள். நாம் பனங்காயோடு முட்டிக் கொண்டு அதை மிஸ் பண்ணி விடக் கூடாது!

நடிகர்களுக்கும், படைத்தவர்களுக்கும் பாராட்டுக்கள்!🙏

 

 சில வசனநடைகள்  நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் லாஜிக் மிஸ்ஸிங். கடுமையான போர்நடக்கும்நேரம் அதுவும் எல்லைப்பகுதியில் ஒரு சிறுவன் சர்வசாதாரணமாக நாயைத்தேடி வருவதெல்லாம் கொஞ்சம் ஓவராகஇல்லையா? இவ்வளவுசிறிய நாய்க்குட்டியை வீட்டைவிட்டு செல்லும்போதே கொண்டுபோயிருக்கலாமே? கூப்பிட்டாலே அது தானே பின்னால் வந்திருக்குமே??

ஒவ்வொரு துப்பாக்கி ரவைகளுக்கும் கணக்குப்பார்க்கும் இயக்கத்திடம், பனங்காயை சுட்டுவிழுத்துவதெல்லாம் கடைந்தெடுத்த சினிமாத்தனம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

 சில வசனநடைகள்  நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் லாஜிக் மிஸ்ஸிங். கடுமையான போர்நடக்கும்நேரம் அதுவும் எல்லைப்பகுதியில் ஒரு சிறுவன் சர்வசாதாரணமாக நாயைத்தேடி வருவதெல்லாம் கொஞ்சம் ஓவராகஇல்லையா? இவ்வளவுசிறிய நாய்க்குட்டியை வீட்டைவிட்டு செல்லும்போதே கொண்டுபோயிருக்கலாமே? கூப்பிட்டாலே அது தானே பின்னால் வந்திருக்குமே??

ஒவ்வொரு துப்பாக்கி ரவைகளுக்கும் கணக்குப்பார்க்கும் இயக்கத்திடம், பனங்காயை சுட்டுவிழுத்துவதெல்லாம் கடைந்தெடுத்த சினிமாத்தனம். 
 

ஒரு சினிமாப் படைப்பில் சினிமாத்தனம் இல்லாமல் இருக்குமா? என் கேள்வி, அந்த ஒரு துளி சினிமாத்தனம் படத்தின் நல்ல அம்சங்களை மறைத்து விடும் அளவுக்கு பாரிய குற்றமா?

காட்சிகளில் வருவதெல்லாம் நடக்க கூடியதா என்பதல்ல என் பார்வை! விமர்சகர் கருத்துப் படி, ஒரு யுத்தகால தமிழ் சிறுவன் நாய் மீது சகோதரன் போல பாசம் கொள்வது "மேட்டுக் குடித் தனம்" என்றால் அந்த விமர்சகருக்கு எங்கள் யுத்த கால வாழ்க்கை பற்றித் தெரிந்தது குறைவு!

எங்களில் பலருக்கும் தெரிந்த சம்பவங்கள் எத்தனை? ஆமி வர ஓடி வந்த பின்னர் வீட்டில் கட்டி வைத்த மாடு தப்ப வேண்டும் என்று அவிழ்த்து விட திரும்பிப் போய் இறந்தோர், மிளகாய்க் கண்டுகள் காய்ந்து போகாமல் தண்ணி விடப் போய் இறந்தோர், இவையெல்லாம் நாம் அறிந்த யுத்த கால சம்பவங்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

"...இந்த நாய் நேயம் எல்லாம் பொதுவாக மேட்டுக்குடி சிந்தனை மரபு, அதுவும் ஒரு உயிர்தானே என்று வக்காலத்து வாங்கக்கூட சிலர் கிளம்பக்கூடும். ஒரு நாயின் மேல் பரிவு என்பது இங்கு விடயமல்ல, ஒரு போர்க்கால சூழலில் வீட்டில் இருக்கும் நாயை காப்பாற்றுவதைக்காக ஒரு போராளி உயிர் கொல்லப்படுகிறது என்பதே அவலம். அந்த ஈழத்தில் நாய்க்காக போராளியை சிக்கலில் அனுப்பும் சிறுவனின் மூளை ஈழத்தை சேர்ந்ததல்ல, குளிர் சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு ஈழத்தை பற்றி கதை எழுதும் இயக்குனரின் மூளை. அந்த சிறுவனும் அவர் தான். வரலாற்றை சமூக புரிதல் இல்லாமல் ஒரு தனிநபர் உணர்ச்சியாக மாற்றுவதில் “குட்டி மணி” கார்த்திக், பெரிய மணிக்கு சளைத்தவர் அல்ல. "

 

 

👆இதை எழுதிய விமர்சகர் ஈழத்தில் யுத்த காலத்தில் வசித்தவரா அல்லது பிரச்சார வீடியோக்களில் ஈழப் போர்கள் பற்றி அறிந்தவரா? அறிய ஆவல்!

மிருகபாசம், காதல், கள்ளக்காதல், கல்வி, தொழில் முயற்சி என்பவை உட்பட்ட எல்லா மனித அசைவுகளும் உணர்ச்சிகளும் பின்னணியில் இருக்கத் தக்கதாகத் தான் ஈழத்தில் யுத்தம் நடந்தது என்பதை யுத்தத்தினுள் வாழ்ந்தோர் புரிந்திருப்பர் - கணனித் திரையிலும், வலைப்பூக்களிலும் பிரச்சாரப் பதிவுகள் பார்த்த விமர்சகர் எல்லா மக்களும் எந்த நேரமும் துவக்கை அருகில் வைத்துக் கொண்டு உம்மணாம் மூஞ்சியாக இருந்தனர் என்ற புரிதலைப் பெற்றிருக்கிறார் என்றே நம்பத் தோன்றுகிறது.

இந்தப் படத்தை நான் நேற்றுப் பார்த்திருந்தேன்! மேலே இருப்பது போன்ற  மொக்கைத் தனமான விமர்சனங்கள் எவற்றுக்கும் தொடர்பில்லாத நல்ல படைப்பாகத் தான் எனக்குத் தெரிந்தது.

மேலே விசுகர் பனங்காயை சுட்டு வீழ்த்தியதோடு பார்க்காமல் நிறுத்தி விட்டார் போல. ஏனெனில், யுத்த காலத்தின் கொடிய வலிகளை கதை வசனத்திலும் காட்சிகளிலும் காட்டியிருக்கிறார்கள். நாம் பனங்காயோடு முட்டிக் கொண்டு அதை மிஸ் பண்ணி விடக் கூடாது!

நடிகர்களுக்கும், படைத்தவர்களுக்கும் பாராட்டுக்கள்!🙏

 

நான் இங்கே மிருகபாசம் மற்றும் வேறு எது சார்ந்தும் கருத்து  வைக்கவில்லை

ஏனெனில் போராளிகளிடத்தில் அது மிக மிக  அதியமாக  இருந்ததை அறிவேன்

ஆனால்  படத்தின்  ஆரம்பக்காட்சிகள்

சிறுபிள்ளைத்தனமாகவும்

ஊதாரிகளாகவும் 

பொறுப்பற்றவர்களாகவும்

போராளிகளை  வடிவமைக்கும்போது????

இப்போராட்டத்தை முதல்முதலாக  திரையில் பார்க்கும்

மிகப்பெரும்பான்மையான  தமிழர்களை

இளைஞர்களை   எமது போராட்டம்  சார்ந்து

இது  பிழையான பாதையை ஆரம்பித்து வைத்துவிடும் ஆபத்தையே சுட்டிக்காட்டினேன்

மற்றும்படி மேலேயே நான் எழுதியுள்ளேன்

ஒரு  சிறு  செய்தியை  சொல்ல  வெளிக்கிட்டு???

சேறு  பூசிய  கதையாக....

என்று???

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

நான் இங்கே மிருகபாசம் மற்றும் வேறு எது சார்ந்தும் கருத்து  வைக்கவில்லை

ஏனெனில் போராளிகளிடத்தில் அது மிக மிக  அதியமாக  இருந்ததை அறிவேன்

ஆனால்  படத்தின்  ஆரம்பக்காட்சிகள்

சிறுபிள்ளைத்தனமாகவும்

ஊதாரிகளாகவும் 

பொறுப்பற்றவர்களாகவும்

போராளிகளை  வடிவமைக்கும்போது????

இப்போராட்டத்தை முதல்முதலாக  திரையில் பார்க்கும்

மிகப்பெரும்பான்மையான  தமிழர்களை

இளைஞர்களை   எமது போராட்டம்  சார்ந்து

இது  பிழையான பாதையை ஆரம்பித்து வைத்துவிடும் ஆபத்தையே சுட்டிக்காட்டினேன்

மற்றும்படி மேலேயே நான் எழுதியுள்ளேன்

ஒரு  சிறு  செய்தியை  சொல்ல  வெளிக்கிட்டு???

சேறு  பூசிய  கதையாக....

என்று???

போராளிகள் சாதாரணமான குணவியல்புடைய மனிதர்களாகச் சித்தரிக்கப் படுவதால் போராளிகள் பற்றிய வரலாறு மாசடையாது விசுகர்! மாறாக அது இளைய தலைமுறைக்கு கடத்தப் படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

போராளிகளை அப்பழுக்கற்ற புனிதர்களாகக் காட்டிக் காவியங்கள் எழுதினால் அவை இராமாயணம், மகாபாரதம் போல அடுத்த தலைமுறையினரால் கொஞ்சம் சந்தேகத்துடனேயே பார்க்கப் படும்!

நான் பார்த்த குறும்பட தொகுப்புகளில் நவரசா போன்ற படு அபத்தமான, சமூக குரோத, பெண்ணடிமைத்தனமான, கடும் சலிப்பை தருகின்ற ஒரு தொகுப்பை இது வரைக்கும் பார்க்கவில்லை. 

நவரசா: ஒரு பெரும் மலக்குழி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

போராளிகள் சாதாரணமான குணவியல்புடைய மனிதர்களாகச் சித்தரிக்கப் படுவதால் போராளிகள் பற்றிய வரலாறு மாசடையாது விசுகர்! மாறாக அது இளைய தலைமுறைக்கு கடத்தப் படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

போராளிகளை அப்பழுக்கற்ற புனிதர்களாகக் காட்டிக் காவியங்கள் எழுதினால் அவை இராமாயணம், மகாபாரதம் போல அடுத்த தலைமுறையினரால் கொஞ்சம் சந்தேகத்துடனேயே பார்க்கப் படும்!

போராளிகளை புனிதர்களாக காட்டுங்கள் என்று நான் சொல்லவில்லை. உலகில் யாருமே புனிதர்களில்லை. படத்தின் லாஜிக் கொஞ்சம் இடிக்குதே என்றுதான் சொன்னேன். எல்லையில் சண்டை நடந்துகொண்டிருக்கும்போது ஒரு சிறுவன் தனியாகவந்து தம்பியை தேடிவந்தேன் என்றுசொல்லும்போது அதன் நம்பகத்தன்மைக்குறித்து சிறுவனைசார்ந்தவர்களை விசாரிக்காமல் காப்பாற்றச்செல்வதுதான் நெருடலாகவுள்ளது. இதைவிட எத்தனையோ தியாகங்களை படமாக்கக்கூடியதாக இருந்தும் இப்படி சிறுபிள்ளைத்தனமான கதையை தேர்ந்தெடுத்திருப்பதுதான் சோபிக்கவில்லை.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Eppothum Thamizhan said:

போராளிகளை புனிதர்களாக காட்டுங்கள் என்று நான் சொல்லவில்லை. உலகில் யாருமே புனிதர்களில்லை. படத்தின் லாஜிக் கொஞ்சம் இடிக்குதே என்றுதான் சொன்னேன். எல்லையில் சண்டை நடந்துகொண்டிருக்கும்போது ஒரு சிறுவன் தனியாகவந்து தம்பியை தேடிவந்தேன் என்றுசொல்லும்போது அதன் நம்பகத்தன்மைக்குறித்து சிறுவனைசார்ந்தவர்களை விசாரிக்காமல் காப்பாற்றச்செல்வதுதான் நெருடலாகவுள்ளது. இதைவிட எத்தனையோ தியாகங்களை படமாக்கக்கூடியதாக இருந்தும் இப்படி சிறுபிள்ளைத்தனமான கதையை தேர்ந்தெடுத்திருப்பதுதான் சோபிக்கவில்லை.

புனிதர் விடயம் விசுகருக்கு எழுதப் பட்டது!

மேலும், ஒருவன் தன் முயற்சியில் ஒரு படைப்பை உருவாக்கும் போது "இதைத் தான் எடுக்க வேண்டும், இதை எடுக்கக் கூடாது" என்று சுதந்திரத்தைச் சுருக்கும் உரிமை மற்றவர்களுக்கு இல்லையெனக் கருதுகிறேன்.

 லொஜிக்கலாக நடக்கக் கூடிய சம்பவங்களை மட்டும் வைத்து சினிமா எடுத்தால் சுவாரசியமும் இருக்காது, புதுமையும் இருக்காது! எனவே, மென்மையான சர்ரியலிசம் பாதகமில்லை!

`நவரசா'வில் ஒரு `ரசம்' கூடவா பெண்களுக்காக இல்லை மணிரத்னம்?

ஒன்பது ரசங்களை விளக்கும் இந்தப் படங்கள் முழுக்க முழுக்க ஆண்கள் நிறைந்த ஆண்களுக்கான சினிமாக்களாகவே இருப்பதும் பெண்களுக்கான வெளி குறுக்கப்பட்டதாகவும் முற்றிலும் மறுக்கப்பட்டிருப்பதும் கலைக்கும் அறவுணர்வுக்கும் இழைக்கப்பட்ட அநீதி.

 

தமிழ் சினிமா முழுவதுமாக மாறவில்லை என்றாலும் அதன் முகம் கொஞ்சம் மாறியிருக்கிறது. கதைசொல்லும் முறையிலும் உள்ளடகத்திலும் நிறைய மாற்றங்கள். க்ளைமாக்ஸில் போலீஸ் கைதுசெய்வது, மரத்தைச் சுற்றும் டூயட் காட்சிகள் போன்ற க்ளிஷேக்கள் முற்றிலுமாகவே தமிழ் சினிமாவைவிட்டு அகன்றுவிட்டன. ஹீரோ - வில்லன் என்ற இரு எல்லைகளுக்குள் சுற்றிய கதைகள் எல்லைகளைத் தாண்டி பன்முகப் பரிமாணங்களைப் பேசுகின்றன.

சமீபத்திய தமிழ் சினிமாக்களின் முக்கிய மாற்றங்கள் நேரடி அரசியல் படங்கள் மற்றும் பெண்களை மையப்படுத்தும் படங்கள். நேரடி அரசியல் சினிமாக்களும் இறுதியில் நாயக சினிமாக்களாகவே இருந்தாலும் அதில் பெண் பாத்திரங்கள் இயல்பாகவும் கண்ணியமாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். ஜோதிகா, நயன்தாரா, அமலாபால், ஐஸ்வர்யா ராஜேஷ், டாப்ஸி என்று ஏராளமான நடிகைகள் பெண்களை மையப்படுத்திய சினிமாக்களில் நடிக்கின்றனர். இப்படியான தனித்துவங்கள் இல்லாத சாதாரணமான சினிமாக்களில்கூட தாலி சென்டிமென்ட், `பொம்பளை பொம்பளையாத்தான் இருக்கணும்' போன்ற ஆணாதிக்க பிற்போக்கு வசனங்கள் போன்றவை கிட்டத்தட்ட ஒழிந்துவிட்டன. மாறிவரும் தமிழ் சினிமாவின் மாற்றங்களை `நவரசா' கணக்கிலெடுத்திருக்கிறதா?

ஜெயேந்திரா - மணிரத்னம்
 
ஜெயேந்திரா - மணிரத்னம்

தமிழ் சினிமாவின் நவீன முகமாக மணிரத்னம் கருதப்படுகிறார். கதைசொல்லலில் புதிய பாணி, அழகியல், உயர்தர தொழில்நுட்பம், நடுத்தரவர்க்க - உயர்நடுத்தரவர்க்க மதிப்பீடுகள் ஆகியவை அவர் படங்களின் தனித்துவங்களாக மதிப்பிடப்படுகின்றன. மணிரத்னத்தின் தயாரிப்பு, மணிரத்னத்தின் தாக்கமுள்ள கௌதம் மேனன் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரையிலான இயக்குநர்களின் இயக்கம் என `நவரசா'வுக்கு என்று மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் `நவரசா' வெளியான பிறகு அந்தப் படங்கள் பார்வையாளர்களைப் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கின. எதிர்மறை விமர்சனங்களே பெரும்பாலும். இவற்றைத்தாண்டி ஒன்பது விதமான மனித உணர்வுகளைப் பிரதிபலித்த `நவரசா'வில் பெண்களுக்கான இடம் என்னவென்று பார்ப்போம்.

முதலில் 9 இயக்குநர்களில் ஒருவர்கூட பெண் இல்லை. மணிரத்னத்தின் உதவியாளர் சுதா கொங்கரா, ஹலிதா ஷாமிம் என்று பெண் இயக்குநர்கள் வருகை சற்றே அதிகரித்திருக்கும் காலத்திலும் `நவரசா' முற்றிலும் ஆண் இயக்குநர்களால் இயக்கப்பட்ட படங்களே.

முதல் படமான `எதிரி', மணிரத்னத்தின் கதையில் பிஜாய் நம்பியார் இயக்கிய படம். தீனா (விஜய்சேதுபதி) என்னும் இளைஞன் ஒருவரைக் (பிரகாஷ்ராஜ்) கொலைசெய்து தலைமறைவாக இருக்கிறான். அவனது மனச்சாட்சி அல்லது அறவுணர்வே கொலையுண்டவரின் உருவத்தில் வந்து ``நீ இதுவரை யாரையெல்லாம் தாக்க முடியவில்லையோ அந்தக் கோபத்தை ஒருவரிடம் காட்டிக் கொலை செய்திருக்கிறாய். அந்த உடலையும் உன்னோடு எடுத்துவந்துவிட்டாய்" என்கிறது. கொலையுண்டவரின் மனைவி சாவித்திரி (ரேவதி)யிடம் மன்னிப்பு கோர முயலும் தீனாவிடம், ``அந்தக் கொலையைத் தடுக்க முயலாததன் மூலம் எனக்கும் அந்தக் கொலையில் பங்கு இருக்கிறது. உன்னை மன்னிக்கும் தகுதி எனக்கு இல்லை" என்கிறார் சாவித்திரி.

குற்றம், கோபம், கருணை ஆகியவற்றுக்கு இடையிலான உறவு குறித்த தத்துவார்த்த உரையாடலை முன்வைக்கிறது `எதிரி'. கொலை செய்தவர் - கொலையானவர் என்கிற இரு ஆண்களுக்கு இடையிலான உறவு-முரண் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அந்தக் கொலை நிகழ்ந்தது என்பதும் விளக்கப்படுகிறது.

எதிரி
 
எதிரி

ஆனால் சாவித்திரி ஏன் தன் கணவனுடன் பேச மறுக்கிறார், கணவர் எந்தளவுக்கு ஆதிக்கவாதியாக இருந்தார் என்பது படத்தில் சொல்லப்படுவதில்லை. பெண் உணர்வு குறித்த அலட்சிய மனோபாவத்தின் விளைவு இது. இன்னொருபுறம் மன்னிப்பு கோருவதன் மூலம் தீனா குற்றவுணர்வில் இருந்து விடுதலையடைகிறார். ஆனால் சாவித்திரியோ குற்றவுணர்வில் இருந்து விடுபடாத சாபத்துக்கு ஆளாகிறாள். தீனா இறக்கிவைத்த தன் கணவரின் பிணத்தை, தான் சுமக்க ஆரம்பிக்கிறாள். இறுதியில் இந்தக் கதையில் சபிக்கப்பட்டவளாக இருப்பது `சாவித்திரி' என்ற பெண்தான்.

சாதியாதிக்க மனநிலை, நிறவெறி, உடல்கேலி போன்ற பிற்போக்கு எண்ணங்களின் மலக்கிடங்குதான் பிரியதர்சன் இயக்கியுள்ள `சம்மர் ஆஃப் 92' படம். பருத்த உடலும் கறுத்த நிறமும் கொண்ட ஒரு சிறுவனை வைத்து நகைச்சுவை என்றபெயரில் நடக்கும் மாபெரும் வன்முறையே இந்தப் படம். ஆண்களே பெரிதும் நிறைந்த இந்தப் படத்தில் ஒரே ஒரு முதன்மை பெண் பாத்திரம் லெட்சுமி டீச்சர் (ரம்யா நம்பீசன்). செவ்வாய்தோஷத்தினால் தடைபடும் அவரது திருமணமும் இங்கே நகைச்சுவைப் பொருளாகிவிடுவது துயரம்.

 
 

கடவுள், விதி, கர்மா போன்றவற்றுக்கு அறிவியல் பாவனை கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள படம், கார்த்திக் நரேன் இயக்கியுள்ள `புராஜெக்ட் அக்னி'. விஷ்ணு, கிருஷ்ணா என்னும் இரண்டு ஆண்களின் (அர்விந்த் சுவாமி - பிரசன்னா) உரையாடலாக நீளும் படத்தில் மின்னலைப் போல் வந்துமறையும் பெண், விஷ்ணுவின் மனைவி லெட்சுமி (பூர்ணா). நனவுலகமாக இருந்தாலும் கதைப்படி அதைக் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் கனவுலகமாக இருந்தாலும் அது ஆண்களின் உலகமே, அங்கே பெண்களின் இருப்புக்கு இடமில்லை என்கிறது `புராஜெக்ட் அக்னி'. உண்மையில் நம் ஆழ்மனம் வரை உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் இது.

தி.ஜானகிராமனின் சிறுகதையை மையமாக வைத்து வசந்த் சாய் இயக்கியிருக்கும் படம் `பாயசம்'. இதுவும் ஓர் ஆண், தனது உறவினரான இன்னொரு ஆணிடம் கொள்ளும் பொறாமை, அசூயை ஆகியவற்றையே முழுக்கப் பேசுகிறது. மற்றபடி படத்தில் வரும் இளம்விதவை பாத்திரம் பற்றி பேச்சே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, கதை முழுக்க ஒரு குழந்தையின் திருமணத்தைச் சுற்றிதான் நகர்கிறது. அப்பாவி பெண் குழந்தையை அலங்கரித்து ஆசைகாட்டி கல்யாணம் நடத்துகிறார்கள். இதை யாருமே குற்றவுணர்வாகக்கூட யோசிக்காமல் படம் நகர்கிறது.

பிராஜக்ட் அக்னி
 
பிராஜக்ட் அக்னி

அர்விந்த்சுவாமி இயக்கியிருக்கும் `ரௌத்ரம்' படத்தில் இரு பெண்கள் முதன்மைப்பாத்திரங்களாக இருந்தாலும் அவை ஆறுதல் அளிக்கக்கூடிய விதத்தில் இல்லை. தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சோரம் போகும் பெண், அதனால் ஆத்திரமடையும் மகன் அதற்குக் காரணமான ஆணைக் கொலை செய்துவிடுகிறான். மகளோ மரணத்தின் விளிம்பில் இருக்கும் தன் தாயிடம் பேச மறுக்கிறாள். 40 ஆண்டுகளுக்கு முந்தைய அரதப்பழசான கதையைக் கொண்ட இந்தப் படம், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனநிலையைச் சுமக்கிறது. தன் குடும்பத்துக்காகத்தான் தன் அம்மா இப்படியொரு முடிவை எடுக்க நேர்ந்தது என்பதை உணர்ந்தபோதும், ``என்னைத் தேவடியா பையன் ஆக்கிட்டான்" என்று கொலைக்குப் பிறகு அழுகிறான் மகன். அவன் கோபம் என்னவோ தான் கொலைசெய்த ஆணின்மீதுதான். ஆனால் அதை வெளிப்படுத்தும் வசைச்சொல்லோ தன் தாயாகிய பெண்ணை இழிவுபடுத்துகிறது. ஒரு பெண் சோரம் போவதன் மூலம் குடும்பத்தின் மானம் போகிறது என்று சொல்லும் ரௌத்ரம், `பெண்களின் கற்புதான் குடும்ப மானம்' என்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டையே பேசுகிறது. மகன், மகள் இருவருமே தன் தாயின் முடிவால் வருந்தி கோபமுற்றாலும் ஆண் மட்டுமே கொலைசெய்து இழந்த மானத்தை சமன் செய்கிறான். மகளோ காவல்துறை அதிகாரியாகித் தன் கோபத்தை யார் யாரையோ அடித்து தீர்த்துக்கொள்கிறாள்.

 

மொத்தப்படங்களில் ஒரு பெண் பாத்திரத்துக்கான வெளி கொஞ்சம் அதிகமுள்ள ஒரே படம், ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ள `இன்மை'. கலைநேர்த்தியிலும் மற்ற படங்களைவிட ஓரளவுக்குத் தேறும் படமும் இதுவே. `வகீதா' என்ற இஸ்லாமியப் பெண் பாத்திரத்தை (பார்வதி திருவோத்து) மையமாகக் கொண்டே மொத்தக்கதை. ஆனால் கெடுவாய்ப்பு என்னவென்றால் முற்றிலும் எதிர்மறையான பாத்திரம். `நவரசா'வில் சித்திரிக்கப்பட்ட ஆளுமையான ஒரு பெண்பாத்திரமும் தன் வயதான கணவரைக் கொல்வதற்காகக் குட்டிச்சாத்தானை ஏவும் பாத்திரம். இத்தனைக்கும் இந்தச் சதியில் வகீதாவின் காதலன் அன்வருக்கும் (பாவெல் நவகீதன்) பங்கு இருந்தாலும் மொத்தப்பழியும் வகீதாவின் மீதே விழ, இறுதியில் கழுத்தறுபட்டுச் சாகிறாள் வகீதா. `எதிரி' சாவித்திரியைப் போல் தீமையின் கசப்பு நஞ்சை விழுங்கும் தொண்டை, வகீதா என்ற இன்னொரு பெண்ணுடையதே.

இன்மை
 
இன்மை

காஷ்மீர் பிரச்னை, அயோத்தி பிரச்னை, வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னை, ஈழப்பிரச்னை ஆகியவை குறித்து எந்த ஆழமான புரிதல்களும் இல்லாமல் அதுகுறித்து படங்கள் இயக்கியவர் மணிரத்னம். அழகியல், தொழில்நுட்பம், சென்டிமென்ட் மூலம் அவற்றைச் சரிக்கட்டிவிடலாம் என்ற அசட்டுத்துணிச்சல் அவருக்கு உண்டு. அதேபோன்ற அசட்டுத்துணிச்சலுடன் நக்சல்பாரி ஒருவரையும் காவல்துறையையும் மையப்படுத்தி `துணிந்தபின்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சர்ஜுன். நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றியோ காவல்துறை பற்றியோ எந்தப் புரிதலும் இல்லாத அரைவேக்காட்டுப்படத்தில் ஒரே ஒரு பெண்பாத்திரம். அதிரடிப்படை வீரர் வெற்றி (அதர்வா)யின் மனைவி (அஞ்சலி). தன் கணவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல், திரும்பி வருவான் என்று காத்திருப்பதைத் தவிர வேறு எதுவுமில்லாத மனைவி. நளாயினி, சீதை, சத்யவான் சாவித்திரி போன்ற `காவிய' நாயகிகளின் வரிசையில்... துயரம்!

 

ஒட்டுமொத்தப்படங்களில் படம் என்றே சொல்லமுடியாத ஒரு காட்சிக்கோலம் என்றால் அது கௌதம்மேனனின் `கிடார் கம்பி மேலே நின்று'. போலியான வசனங்கள், செயற்கையான உடல்மொழி, கௌதமின் முந்தைய படங்களில் இருந்த அதே காட்சிகள் என்று பார்வையாளர்களுக்கு கொடுங்கனவாக இருந்த படம். மற்ற படங்கள் அரசியல்ரீதியில் தவறிழைத்திருக்கலாம்; அரைவேக்காட்டு முயற்சிகளாக இருந்திருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் `கதை' என்று தாங்கள் நம்பும் வஸ்தைப் படமாக்க முயன்று தோற்றிருக்கிறார்கள். கௌதமோ தன் படங்களையே ரீமேக் செய்து அதையும் ஒரு படம் என்று நம்பவைக்க முயல்வது மாபெரும் மோசடி. கௌதம் மேனன் படங்களில் வருவதைப்போலவே காபிஷாப்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் மட்டும் அடியெடுத்துவைக்கும் தூசிபடாத கால்கள், கசங்காத நவநாகரிக உடைகள், கவித்துவ பாவனையில் அசட்டு உளறல்மொழி பேசும் நாயகி. ஒருவரியில்கூட எழுதமுடியாத கதைதான் என்றாலும் நாயகன் கமல் (சூர்யா) மட்டும்தான் தன் காதல் கதையை விவரிக்கிறான். ஏன் காதல் வந்தது, ஏன் பிரிந்தோம் என்று பார்வையாளர்களிடம் சொல்வதற்கான வாய்ப்புகூட நேத்ரா (பிரக்யா)வுக்கு இல்லை. நாயகனின் வார்த்தைகளைத் தாண்டி எந்த முகமும் அற்ற பெண், கிடார் கம்பியின்மீது ஏறி தலைகீழாக விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். நாமோ 40 நிமிடங்களுக்குமேல் நரகத்தின்மீது நிற்கிறோம்.

கார்த்திக் சுப்புராஜின் `அமைதி'தான் உச்சம். நவரசத்தில் `அமைதி' என்பது, உணர்ச்சி தத்தளிப்புகள் அற்ற நிலை. ஆனால் புரிதலே இல்லாமல் அதை சமாதானம் - அமைதி என்னும் பொருளில் குழப்பிப் படமெடுத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் பெண்களின் இருப்பையே அழித்துவிடுகிறார்.

'கிட்டார் கம்பி மேலே நின்று' - கெளதம் மேனன்
 

'கிட்டார் கம்பி மேலே நின்று' - கெளதம் மேனன்மற்ற படங்களிலாவது பெண்கள் இருந்தும் இல்லாமலிருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பெண்களே இல்லை. படத்தில் வரும் நாய் கூட ஆண் நாய், வெள்ளையன். படத்தின் கதைக்களம் ஈழப்போர்க்களம். புலிகள் இயக்கம் பெண்களையும் போராளியாக்கியது. ஆனால் கார்த்திக் சுப்புராஜோ அவர்களை அப்புறப்படுத்தி முழுக்க ஆண்கள் படத்தை எடுத்திருக்கிறார்.
ஒன்பது ரசங்களை விளக்கும் இந்தப் படங்கள் முழுக்க முழுக்க ஆண்கள் நிறைந்த ஆண்களுக்கான சினிமாக்களாகவே இருப்பதும் பெண்களுக்கான வெளி குறுக்கப்பட்டதாகவும் முற்றிலும் மறுக்கப்பட்டிருப்பதும் கலைக்கும் அறவுணர்வுக்கும் இழைக்கப்பட்ட அநீதி. நவரசங்களை ஆண்களைவிடவும் சிறப்பாக நடன மேடைகளில் வெளிப்படுத்துபவர்கள் பெண்கள்தான். ஆனால் இதுவோ ஆண்களின் நவரசாவாகவே இருக்கிறது.

`நவரசா'வில் ஒரு `ரசம்' கூடவா பெண்களுக்காக இல்லை மணிரத்னம்? | An analysis on netflix navarasa anthology series and its women characters - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நான் பார்த்த குறும்பட தொகுப்புகளில் நவரசா போன்ற படு அபத்தமான, சமூக குரோத, பெண்ணடிமைத்தனமான, கடும் சலிப்பை தருகின்ற ஒரு தொகுப்பை இது வரைக்கும் பார்க்கவில்லை. 

நவரசா: ஒரு பெரும் மலக்குழி.

என்னுடைய கருத்தும் இது தான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளை தவறாக சித்தரிக்கும் Peace - Navarasa Anthology

 

  • கருத்துக்கள உறவுகள்

சரி..துவங்கீட்டீனம்! 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.