அமெரிக்கா இரானை தாக்கினால் ரஷ்யா, சீனா பதிலடி கொடுக்குமா? அரபு நாடுகளின் பதற்றம் என்ன?
பட மூலாதாரம்,Getty Images
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பேச்சு நிலவி வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை இது குறித்துப் பேசியுள்ளார். இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது அமெரிக்காவிற்குள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கருத்தாக உள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே 1953-ஆம் ஆண்டில் இரானில் அரசாங்கத்தை மாற்றியிருந்தது. ஆனால் 1979-இல் நடந்த இஸ்லாமியப் புரட்சி, அமெரிக்காவுக்கு ஆதரவான அந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றியது.
1953-இல் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து, இரானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக்கை பதவியிலிருந்து அகற்றி, அதிகாரத்தை பஹ்லவியிடம் ஒப்படைத்தன.
முகமது மொசாடெக் இரானின் எண்ணெய் துறையைத் தேசியமயமாக்கியவர். மேலும் மன்னரின் (ஷா) அதிகாரத்தைக் குறைக்க விரும்பினார்.
போர் நடக்காத காலத்தில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரைப் பதவியிலிருந்து இறக்க அமெரிக்கா மேற்கொண்ட முதல் முயற்சி இதுவாகும். ஆனால் இதுவே கடைசியாக இருக்கவில்லை.
அதன் பிறகு, இது அமெரிக்க வெளியுறவுத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே மாறியது.
1953-இல் அமெரிக்கா நடத்திய இந்த ஆட்சி கவிழ்ப்பு, 1979-ஆம் ஆண்டின் இரான் புரட்சிக்கு வழிவகுத்தது. இத்தனை ஆண்டுகாலம் கடந்த பின்னரும், இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான கசப்பான உணர்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ரஷ்யா நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,1979 இஸ்லாமியப் புரட்சியின் போது
தற்போது இரானில் ஆயதுல்லா அலி காமனெயியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி அமெரிக்கா பேசி வருகிறது.
இத்தகைய சூழலில், அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தினால், யார் அதனுடன் நிற்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இரானின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யாவும் சீனாவும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரு நாடுகளும் வாய்மொழியாக மட்டுமே தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் என கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது கூட, ரஷ்யாவும் சீனாவும் வாய்மொழி கண்டனங்களை மட்டுமே தெரிவித்திருந்தன.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
இரான் டிரோன்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியுள்ளது. பதிலுக்கு ரஷ்யா பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை விரிவுபடுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர சார்புநிலையை அதிகரித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ரஷ்யாவிற்கு இரான் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தாலும், அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபடும் அளவுக்கு ரஷ்யா அதற்கு நட்பு நாடு அல்ல.
கடந்த ஆண்டு தாக்குதலின் போது கூட ரஷ்யா அவ்வாறு செய்யவில்லை.
ஜனவரி 13 அன்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "மேற்கத்திய நாடுகள் இரான் மீது விதித்துள்ள சட்டவிரோதத் தடைகள், அங்கு பொருளாதார மற்றும் சமூக சவால்களை உருவாக்கியுள்ளன. இதனால் சாதாரண இரான் குடிமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.'' என்றார்
''மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, இரானிய அரசை நிலைகுலையச் செய்யவும் பலவீனப்படுத்தவும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. இரானின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்றார்.
மேலும், "2025 ஜூன் மாதத்தில் நடந்தது போன்ற மற்றொரு தாக்குதலை இரான் மீது நடத்த காரணங்களைத் தேடுபவர்கள், இத்தகைய நடவடிக்கைகள் மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பில் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்," என குறிப்பிட்டார்.
சீனா அமெரிக்காவை எதிர்த்துப் போரிடுமா?
பட மூலாதாரம்,Getty Images
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியான சீனா, இரான் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைக் கண்டித்து வருகிறது. ஆனால், அது அமெரிக்காவை நேரடியாக எதிர்த்துப் போரிடுமா?
சீனாவிற்கும் இரானுக்கும் இடையே "விரிவான உத்தி சார்ந்த கூட்டாண்மை" உள்ளது. இருப்பினும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதைப் போல, சீனா தனது கூட்டாளிகளுக்குப் போர்க்களத்தில் நேரடியாக ஆதரவு அளிப்பதில்லை.
பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க (எண்ணெய் விற்பனை) மற்றும் ராணுவத் தொழில்நுட்பத்திற்காக சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இரான் சிக்கியுள்ளது. அதே நேரத்தில், இரானுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வழங்கத் தான் தயாராக இல்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது.
"இரான் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். இரானிய அரசாங்கமும் மக்களும் தற்போதைய சிரமங்களை முறியடித்து, நாட்டில் நிலைத்தன்மையைப் பேணுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.'' என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
''சர்வதேச உறவுகளில் பலத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ நாங்கள் எதிர்க்கிறோம். மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உகந்த நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் எடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என கூறியுள்ளது.
இரான் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு எதிராக ஆக்ரோஷமாக இல்லை.
ஏனெனில், அமெரிக்காதான் சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி. இரு நாடுகளுக்கும் இடையே விரோதப் போக்கு இருந்தபோதிலும், சீனா அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து பராமரிக்கவே விரும்புகிறது.
ஜி-7 நாடுகளின் நிலைப்பாடு என்ன?
பட மூலாதாரம்,Getty Images
இரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அங்குள்ள அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஜி-7 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
"கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர்களுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளாகிய நாங்கள், இரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
"மக்களுக்கு எதிராக இரான் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இரானிய அதிகாரிகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும், இரானிய குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்'' என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,Getty Images
துருக்கி கூறுவது என்ன?
துருக்கி இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசினாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை மாறுகிறது.
ஜனவரி 13 அன்று, துருக்கிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஓமர் செலிக், ''இரானின் உள்நாட்டு விவகாரங்களில் உலகம் தலையிடக்கூடாது. அந்தப் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது என்பதை இரான் மக்களே தீர்மானிக்க வேண்டும்.'' என்றார்.
குறிப்பாக இஸ்ரேலை விமர்சித்த அவர், போராட்டங்களை இஸ்ரேல் தனது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் எந்தவொரு வெளிநாட்டு தலையீடும் "இன்னும் மோசமான விளைவுகளுக்கு" வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.
"எங்கள் அண்டை நாடான இரானில் எந்த குழப்பத்தையும் நாங்கள் காண விரும்பவில்லை. இந்தப் பிரச்னைகள் இரானின் சொந்த உள்நாட்டுச் செயல்முறைகள் மற்றும் தேசிய விருப்பத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். இஸ்ரேலிய அதிகாரிகள் பொறுப்பற்ற நிலைப்பாட்டை எடுக்க முயற்சிக்கின்றனர். இது பிராந்தியம் முழுவதும் இன்னும் பெரிய பிரச்னைகளை உருவாக்கும்" என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம்,Getty Images
கடந்த ஆண்டு இரான் 12 நாட்கள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க குண்டுவீச்சை எதிர்கொண்டது. இந்த நிகழ்வுகள் பிராந்தியத்தில் இரானின் பலவீனத்தை தெளிவாக படமிட்டுக் காட்டின.
இரான் அதிகாரிகள் தங்களின் வளைகுடா அண்டை நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் தாங்கள் தாக்கப்பட்டால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என கூறியுள்ளனர்.
வளைகுடா பிராந்தியத்தில் இரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவிடமிருந்து மிகக் கடுமையான எதிர்வினையைத் தூண்டும்.
அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பைத் தொடர்ந்து இராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீண்ட உள்நாட்டுப் போரின் போது சிரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அண்டை நாடான ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் செங்கடலுக்கு அப்பால் சூடானில் நடக்கும் மோதல்கள் குறித்தும் செளதி அரேபியா கவலை கொண்டுள்ளது.
அரபு ஆட்சியாளர்களுக்கும் இரானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சுமுகமானவை அல்ல. இரானின் அணுத் திட்டத்தையும் அந்த நாடு அரபு ஆயுதக்குழுவுக்கும் வழங்கும் ஆதரவையும் கட்டுப்படுத்தும் புதிய இரானிய ஆட்சி அமைந்தால், அதனை அரபு நாடுகள் வரவேற்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இரண்டு ஆண்டாக பிராந்தியத்தில் நடந்த போருக்கு பிறகு மத்திய கிழக்கில் உள்ள பல அரசாங்கங்கள் இப்போது இரானில் ஏற்படும் அமைதியின்மை நிலைத்தன்மையை விட அதிக குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் தாக்கம் தங்கள் சொந்த நாடுகளை அடையக்கூடும் என்றும் அஞ்சுகின்றன.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
அரபு நாடுகளின் அச்சம்
இரான் மீதான எந்தவொரு தாக்குதலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் டாங்கர்களின் போக்குவரத்தைப் பாதிக்கும் என்று அரபு நாடுகள் அஞ்சுவதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்த குறுகிய கடல் பகுதி, இரானை அதன் அரபு அண்டை நாடுகளிடமிருந்து பிரிக்கிறது. உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது.
எந்தவொரு சாத்தியமான தாக்குதலிலும் தாங்கள் ஈடுபடமாட்டோம் என்றும், இரானை தாக்க அமெரிக்கா தங்களின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் இரானுக்கு செளதி உறுதி அளித்துள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.
கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி செவ்வாயன்று செய்தியாளர்களிடம், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க உதவுவதற்காக தனது நாடு அமெரிக்கா மற்றும் இரானுடன் தொடர்பில் உள்ளது என்றார்.
இரானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கை குறித்தும் டிரம்ப் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை, மேலும் அவரது ஆலோசகர்களுடன் இந்த உத்தி குறித்து விவாதித்து வருகிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
"செளதி அரேபியா இரானின் போட்டியாளராகக் கருதப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால், செளதி அரேபியா, ஓமன் மற்றும் கத்தார் ஆகியவை இரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் உலகளாவிய எண்ணெய் சந்தைகளுக்கு பெரிய இடையூறுகளை ஏற்படுத்தி இறுதியில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அமெரிக்காவை நம்ப வைக்க முயற்சிக்கின்றன" என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நாடுகள் தங்கள் சொந்த நாடுகளில் ஏற்படக்கூடிய எதிர்வினை மற்றும் உறுதியற்ற தன்மை குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/ckgyjxv23kjo
By
ஏராளன் ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.