Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   08 MAR, 2024 | 09:23 PM

image

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்று வெள்ளிக்கிழமை (08) மாலைவேளையில் நடைபெற்றுகொண்டிருந்த போது சற்று பதற்றநிலை அதிகரித்தது. இதனால் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

2.png

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுகொண்டிருந்த போது பொலிஸார் மாலை ஆறுமணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழநிலை ஏற்பட்டது.

அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளி்ட்ட பலர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/178290

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை ஐயா. தமிழ்வின்னில் காணொளி பார்த்தேன். இலங்கையின் போலிஸ் மட்டமான வேலைகள் செய்வதை பதிவு செய்து உள்ளார்கள். 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என குரல்கள் ஒலிக்கும்போது சமய வழிபாட்டில் ஈடுபடுவர்களை அடாவடியாக வெளியேற்றுகின்றார்கள். 

இப்படியான செயல்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா? பார்ப்பவர்களுக்கு போலிசாரின் செயல் ஆத்திரத்தையே ஏற்படுத்தும். 

புத்தபிக்குகள் சமய அனுட்டானங்களில் ஈடுபடும்போது இப்படி யாராவது செய்தால் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்து - இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

Vhg மார்ச் 09, 2024
Photo_1709957835617.jpg

வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

Photo_1709957836214.jpg

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிஸாருக்கும் , பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறு

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் சிவராத்திரி வழிபாடுகள் காலை முதல் இடம்பெற்றது.

இதன்போது காலை முதல் வீதி தடைகளைப் போட்டிருந்த பொலிஸார் ஆலய வளாகத்திற்குள் குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட குடி நீர் தாங்கி பொலிஸாரால் 3 கிலோமீற்றருக்கு முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து குடிநீர் இன்றி அவதிப்பட்ட சிறுவர்கள், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீர் பெற்ற போதும் அதனையும் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் குடி நீர் இன்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், மற்றும் ஆலய பக்தர்கள் குடிநீர் தாங்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்திற்குள் விடுமாறு பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரம் குடிநீரை விடுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை மூன்று மணியளவில் குடிநீரை வழங்க பொலிஸார் இணங்கியுள்ளனர்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரையும் பொலிஸார் மாலை ஆறு மணியளவில் குடிநீர் தாங்கியை திறந்து வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்
 

 

https://www.battinatham.com/2024/03/blog-post_44.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறேன் 

இணங்கி வாழ்தல் என்பதன் முதல் படி

சிறீலங்காவின் நீதிமன்றம் மற்றும் காவல் துறையினரின் உத்தரவுக்களுக்கு கட்டுப்படுதல். 😷

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மவர்கள் சட்டங்களை மீறுவது ஏன் என்று விளங்கவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்கு நாறியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் அடாவடித்தனமே - அமைச்சர் டக்ளஸ்

Published By: DIGITAL DESK 3   09 MAR, 2024 | 03:44 PM

image

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

பளைப் பகுதியில் எரிபொருள் நிலைய திறப்புவிழா நிகழ்வு இன்றுகாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சிவராத்திரிதினம் என்பது இந்துக்களின் முக்கிய சமயம் சார் நிகழ்வாகும். இதனை முன்னிடு குறித்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அடியவர்கள் சென்றபோது பொலிசார் தடுத்து நிறுத்து அடாவடியில் ஏடுபடுத்துயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அவர்களது அடாவடித்தனமாகவெ இருக்கின்றது.

ஆலய தரிசனம் செய்வது அவரவர் உரிமையாகும். இதை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறான நிலையில் குறித்த ஆலயப் பகுதியில் பொலிஸார் இவ்வாறான தடைகளையும் அடாவடித்தனங்களையும் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது? அதேநேரம் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. 

அத்துடன் நடைபெறவுள்ள அமைச்சரவையிலும் இவ்விடயம் தொடர்பில் கொண்டு செல்லவுள்ளேன் என்பதுடன் இனிவருங்காலங்களில் பொலிசார் இவ்வாறான செயற்பாடுகளை மெற்கொள்ளாதிரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திரிந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/178316

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை சம்பவம் : வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதே வெளிப்படுகிறது ; தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? - அருட்தந்தை மா.சத்திவேல் 

09 MAR, 2024 | 05:17 PM
image

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று (09) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வண்ணம் பொலிஸார் வழிபாட்டுப் பொருட்களை சப்பாத்து காலால் உதைத்து தள்ளியதோடு, பெண்களை இழிவுபடுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அறுவரை கைது செய்துள்ளனர். 

இதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒட்டுமொத்த சிவ பக்தர்களுக்கும் வருத்தத்தை தெரிவிப்பதோடு, இது நாட்டின் அடிப்படை மனித உரிமையும் மற்றும் வழிபாட்டு உரிமையையும் மீறும் செயல் மட்டுமல்ல. தமிழர்கள் மீதும் இந்துக்கள் மீதும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத மதவாத வன்முறையின் தோற்றமுமாகும்.

இதில் பொலிஸார் அராஜகத்தோடு பேரினவாத அதிகார அரசியல் பக்கபலமும் அதற்கு உள்ளது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. இக்கொடிய மதவாத இனவாத வன்முறை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இதனை சமயம் கடந்து அனைத்து சமய தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை கூட்டாக வெளிக்காட்ட வேண்டும். 

களனியை மையமாகக் கொண்டு இயங்கும் பௌத்த தகவல் நிலையம் எனும் அமைப்பு வெடுக்குநாறி மலையில் இனவாதம், மதவாதம் என்பவற்றை தோன்றுவிக்கும் வழிபாடு நடைபெறவுள்ளதாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இக்கடிதம் எதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது? சிவராத்திரி வழிபாடு எவ்வாறு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் எனவும் கேட்கின்றோம். 

இனவாதம், மதவாதம் அடிப்படை கருத்தியலில் இயங்கும் பயங்கரவாத அரசின் கூலிகளாக இயங்கும் பொலிஸாரே இனவாத, மதவாத அதிகார வெறியினை சிவ பக்தர்களிடம் காட்டியுள்ளமை வெட்கக்கேடாகும். அங்கு கூடியிருந்த பக்தர்கள் பொலிஸ் அராஜகம் ஒழிக என்றோ அல்லது வேறு எந்த வகையிலோ தமது எதிர்ப்பை காட்டவில்லை. சமய பக்தி கோஷங்களையே அவர்கள் எழுப்பினர். இதுவா மதவாத மற்றும் இனவாத வழிபாடு.

ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே தமிழர்களின் வழிபாட்டு உரிமை மீறப்பட்டுள்ளது. 

இலங்கை தொடர்பாக கடந்த காலங்களில் மனித உரிமை பேரவை பல அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடந்த காலங்களில் வழங்கியபோது அவற்றை பின்பற்றால் சர்வதேசத்தை ஏமாற்றும் ஆட்சியாளர் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடக்கும் சந்தர்ப்பங்களில் அதனை அவமதிப்பது போல் நடப்பது இது முதல் தடவை அல்ல. 

அமைச்சர் ஒருவர் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து விரட்டி மிரட்டியதும் இவ்வாறான காலப்பகுதியிலாகும். அதேபோன்று நேற்று இந்துக்களின் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி அராஜகம் புரிந்துள்ளனர்.

இது இந்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவாத வன்முறையை தொடர்கிறது என்பதை சுட்டி நிற்கிறது.

உயிர்ப்பு தினத்தில் கூண்டுகளை வடிக்கச் செய்து உயிர்களைக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தொடர்ந்து வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. 

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா எனவும் கேட்கின்றோம்.

தேர்தல் காலத்தில் தமிழர்களின் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் செய்யும் தென்பகுதி கட்சிகள் வெடுக்குநாறி மலையில் நடந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அதனை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டும். 

சர்வதேச பெண்கள் தினத்தில் அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களை அவமானப்படுத்தியதற்கு பெண்கள் தினத்தை கொண்டாடிய அனைத்து சக்திகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும். 

அத்தோடு மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக தம் எதிர்ப்பை தெரிவிப்பதோடு ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தனது ஆதரவையும் நல்க வேண்டும்.

தமிழர் தாயகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் தமிழர் தாயகத்தை சூழ்ந்துள்ள இருளினை கருத்தில் கொண்டு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய விழிப்பினை கடந்த வாரம் சாந்தனின் உடல் எடுத்துச் சென்றபோது காட்டியது போன்று ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுத்துவதற்கான காலம் உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து தேசிய சிந்தனையோடு கூட்டாக செயற்படுவதையும் உறுதி செய்தல் வேண்டும் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/178312

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எம்மவர்கள் சட்டங்களை மீறுவது ஏன் என்று விளங்கவில்லை. 

தடை செய்திருந்த காலத்தில் புத்த பிக்குகளுடன் ராணுவமும் சேர்ந்தே போனது.

அப்போது எங்கே போனார்கள் இந்த பொலிசார்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

வெடுக்கு நாறியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் அடாவடித்தனமே - அமைச்சர் டக்ளஸ்

இவ்வளவு காலமும் சிங்கள பெளத்த பொலிஸ் இனவெறி அடாவடித்தனம் என்னென்று தெரியாமல் தான் அவைட... அமைச்சராக இருக்கிறாரோ. 🤣

1 hour ago, ஏராளன் said:

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா?

எனி வரும் காலங்களில் ஆயுதங்கள் கைகளில் இருக்கப் போவதில்லை. உலக போரொழுங்கு மாறிக்கொண்டே போகுது.

ஆனால்.. தமிழர்கள் எனியும் போரழிவுகளை தாங்கிக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.

பக்கத்தில்.. பெளத்தத்தை பலப்படுத்த காசு கொடுக்கிற ஹிந்து அரசு.. பதவியில் இருக்குது.. அவைட சொல்லலாமே..??!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் ஏற்கனவே விகாரை உள்ளதோ அல்லது விகாரை கட்டப்படுவதற்கான முஸ்தீபு நடக்கின்றதோ. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போலத்தான் இதுவும் செல்லுமோ?

இப்போது தாயகம் பற்றி கருத்துக்கள் கூறவே தயக்கமாக உள்ளது. ஒவ்வொரு செய்திகள், நடவடிக்கைகள் பின்னாலும் பின்னினாற் போல பல சூக்குமங்கள். வேடன் விரித்த வலையில் அகப்படுவது போன்றதுதான் சமூக ஊடகங்களில் எமது அபிப்பிராயங்களை தெரிவிப்பது என்பதுபோலாகிவிட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மட்டும் சிங்களவருடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் ..
சிங்களவர்கள் துட்ட இணக்கத்துடன் துட்டகெமுனுவின் கொள்கைபடி வாழ்வார்கள் தமிழர்கள் சகித்து கொள்ள வேணும் கண்டியளோ ....இதுதான் சிறிலங்கா தேசியத்தை கட்டியெழுப்பும்  விதம்....

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நியாயம் said:

இந்த இடத்தில் ஏற்கனவே விகாரை உள்ளதோ அல்லது விகாரை கட்டப்படுவதற்கான முஸ்தீபு நடக்கின்றதோ. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போலத்தான் இதுவும் செல்லுமோ?

இப்போது தாயகம் பற்றி கருத்துக்கள் கூறவே தயக்கமாக உள்ளது. ஒவ்வொரு செய்திகள், நடவடிக்கைகள் பின்னாலும் பின்னினாற் போல பல சூக்குமங்கள். வேடன் விரித்த வலையில் அகப்படுவது போன்றதுதான் சமூக ஊடகங்களில் எமது அபிப்பிராயங்களை தெரிவிப்பது என்பதுபோலாகிவிட்டது.  

எப்படி இருக்க வேணும்? ..பெரும்பான்மையினர் ஆட்சி செய்வதால் சிறுபான்மையினர் அமைதிகாக்க வேணுமா?நில அக்கிரமிப்பு செய்யும் திட்டங்களில் இதுவும் ஒன்று...இதை பெளத்தர்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள் அதாவது எப்படியோ அதிகாரங்களை பாவித்து விகாரையை கட்டி விடுவார்கள் ...பின்பு குடியேற்றம் ...

வட மாகாணத்தில விமானப்படை நல்லிணக்க செயலாம் 
வட மாகாணத்தில் பிக்குமாரும் பொலிசாறும்  துட்ட செயல் 
மூவரும் அரச இயந்திரம்...

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலை விவகாரம் : பொலிஸாரின் மிலேச்சத்தனமான ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் - அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர்கள் தெரிவிப்பு

10 MAR, 2024 | 10:42 AM
image

(நா.தனுஜா)

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டார்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக ஸ்தாபிக்கப்படும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று எவ்வாறு கூறமுடியும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (08) சிவராத்திரி தினத்தன்று நீதிமன்ற அனுமதியுடன் பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 

இச்சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, பாதுகாப்புத் தரப்பினரின் மிலேச்சத்தனமான இந்நடவடிக்கையைக் கடுமையாக கண்டிப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தொல்லியல் திணைக்களம், பௌத்த பிக்குகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட சகலரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் வழிபாட்டுரிமைக்குத் தடை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். 

அதுமாத்திரமன்றி, தமிழர்களுக்குச் சொந்தமான வழிபாட்டிடங்களை பௌத்த தலமாக மாற்றுவதற்கான இனவாத செயற்பாடாகவே தாம் இதனைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் மக்கள் மிக நீண்ட காலமாக வழிபாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், அவ்வாறிருக்கையில் தற்போது பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறு செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார். 

அத்தோடு, தமிழ் மக்களை இலக்குவைத்து நிகழ்த்தப்படும் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று கூறுவோர் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும், இவற்றைப் பார்க்கும்போது ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத வன்முறையைத் தூண்ட முயற்சிப்பது போல் தெரிவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

அதேவேளை இவ்விவகாரத்தில் பாதுகாப்புத் தரப்பினர் ஜனாதிபதியின் கட்டளைகளை மாத்திரமன்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கும் மதிப்பளிப்பதில்லை எனவும், மாறாக, வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை போன்ற விவகாரங்களில் பௌத்த பிக்குகளின் உத்தரவுகளே பாதுகாப்புத் தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கவலை வெளியிட்டார். அதுமாத்திரமன்றி, இத்தகைய போக்கு மிகப் பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்கள் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டித்துள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான தமிழ் அமெரிக்கர்கள் கூட்டிணைவு, இது மத உரிமைகளை மீறுவதாகும் சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்தோடு, தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு உடன் தலையீடு செய்யுமாறும் அவ்வமைப்பு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் பின்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார்:

'இங்கு வழிபாட்டில் ஈடுபடும் மக்கள் எதற்காக பொலிஸாரால் வெளியேற்றப்படுகின்றார்கள்? எதற்காக கைதுசெய்யப்படுகின்றார்கள்? அவர்களது மத உரிமை எதற்காக மீறப்படுகின்றது? இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக ஸ்தாபிக்கப்படும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று எவ்வாறு கூறமுடியும்?' என வினவியுள்ளார்.

https://www.virakesari.lk/article/178341

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்க மறியல்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று (09) உத்தரவிட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் இன்று மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்து தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது எனத் தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

http://www.samakalam.com/வெடுக்குநாறி-ஆதி-சிவன்-ஆ/

  • கருத்துக்கள உறவுகள்

Capture-8-750x375.jpg

வெடுக்கு நாறிமலையில் இடம்பெற்ற பொலிசாரின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் !

வெடுக்குநாறிமாலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகில் நடைபெற்றது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ததுடன் மேலும், கடும் அடக்குமுறையினை பிரயோகித்திருந்தனர்.

இதனை கண்டிக்கும் முகமாகவே மட்டக்களப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “எங்கள் மண்ணில் எங்கள் மலையில் உங்களுக்கு உரிமையில்லை, சிவராத்திரி நாளிலும் சிங்கள அடக்குமுறை ” தமிழர்களின் வழிபடும் உரிமையினை தடுக்கும் அரசை கண்டிக்கின்றோம், ஆதிசிவன் கோயில் நிலத்தினை அழிக்காதே வெளியேறு,

வெடுக்குநாறி ஆதிசிவன் சிவராத்திரி பூசையை தடுத்த படையினரின் அராஜகத்தை கண்டிக்கின்றோம் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை தாங்கிவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்

உறவுகளின் சங்கத்தினர், மதத்தலைவர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

WhatsApp-Image-2024-03-09-at-23.44.08-60

WhatsApp-Image-2024-03-09-at-23.44.09-1-

WhatsApp-Image-2024-03-09-at-23.44.09-60

WhatsApp-Image-2024-03-09-at-23.44.14-1-

WhatsApp-Image-2024-03-09-at-23.44.14-60

https://athavannews.com/2024/1372927

  • கருத்துக்கள உறவுகள்

Capture-9-750x375.jpg

சிங்கள பௌத்த மேலாண்மைவாதக் கருத்தியலின் ஆகப் பிந்திய வன்முறை வடிவமே வெடுக்குநாறிமலையில் அரங்கேறியது !

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயக் குருக்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களினையும், கைது நடவடிக்கைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் ,

“கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று இரவு வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் தலத்திலே வழிபாட்டிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயக் குருக்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களினையும், கைது நடவடிக்கைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மகா சிவராத்திரி சைவ, இந்து மக்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களிலே ஒன்று.

அந்தத் தினத்திலே உலகெங்கும் வாழும் சைவ, இந்து மக்கள் ஆலயங்களிலே இரவு முழுவதும் விழித்திருந்து சமய அனுட்டானங்களிலே ஈடுபடுவர்.

அவ்வாறான ஒரு வேளையிலே பொலிஸார் ஆதிலிங்கேஸ்வரர் தலத்தினுள் நுழைந்து அது தொல்பொருள் ஆய்வுக்குரிய பாதுகாக்கப்பட்ட‌ இடம் என்ற போர்வையிலே அங்கு அனுட்டானங்களிலே ஈடுபட்டிருந்த மக்களிற்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

அவர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதனைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். பின்னர் பூஜைகளை குழப்பி உள்ளனர்.

வழிபாட்டில் ஈடுபட்டோரினை பலவந்தமாக வெளியேற்றியது மாத்திரமின்றி கைதும் செய்துள்ளனர்.

இவை யாவும் அந்த மக்களின் சமய ரீதியிலான உரிமைகளை மோசமாக மீறும் செயல்களாகும் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

வெடுக்குநாறி மலையில் இடம்பெற்றிருக்கும் இந்தச் சம்பவம் வெறும் வன்முறையும், அத்துமீறலும் மாத்திரம் அல்ல இது இலங்கையில் தொடரும் சிங்கள பௌத்த மேலாண்மைவாதக் கருத்தியலின் ஆகப் பிந்திய வன்முறை வடிவங்களிலே ஒன்று.

சிறுபான்மையாக இருக்கும் மக்களின் மத உரிமைகளை பாதிக்கும் செயன்முறைகளினை இலங்கையினை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் காலங்காலமாக மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த செயன்முறைகளினால் இந்து சமயத்தவர் மாத்திரமல்லாது, கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பினைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், சிறுபான்மை மக்களின் மத உரிமைகளை மீறும் போக்குக்கள் யாப்பின் கருத்தியலுக்குள்ளேயே பொதிந்து போய் இருக்கிறது என்பதனை நாம் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்.

வெடுக்குநாறி மலைச் சம்பவம் இலங்கை அரசின் மதவாதக் குணாம்சத்தினால் ஏற்பட்ட ஒரு கட்டமைப்பு சார் விடயமாகவே பார்க்கப்படல் வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்குக் கிழக்கினைப் பௌத்த மயமாக்கம் செய்வதன் மூலமும், சிங்கள மயமாக்குவதன் மூலமும் இந்தப் பிராந்தியத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் வலுவிழக்கச் செய்யும் செயன்முறைகளிலே இலங்கை அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வந்திருக்கின்றன. இந்தச் செயன்முறைகளின் ஒரு வடிவமாகத் தொல்பொருளியல் ஆய்வு என்ற போர்வையில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் தலத்தினையும் ஏனைய பல சைவ, இந்து மக்கள் வழிபடும் தலங்களையும் சிங்கள பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் அண்மைய சில வருடங்களாகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பில் இருந்து, மையப்படுத்தப்பட்ட முறையிலே, இராணுவக் கட்டமைப்புக்களின் துணையுடன், சிங்கள பௌத்தக் கருத்தியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தத் தொல்பொருளியல் செயன்முறைகளின் போது வடக்குக் கிழக்கிலே பல சந்ததிகளாக இந்தத் தலங்களிலே தமது சமய அனுட்டானங்களில் ஈடுபடும் மக்களின் உரிமைகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த விதமான இடமும் வழங்கப்படுவதில்லை.

மாறாக தொல்பொருளியல் ஆய்வு என்பது இந்த மக்களின் மீதும், அவர்களின் சமய நம்பிக்கைகள் மற்றும் செயன்முறைகளின் மீதும் ஒரு வன்முறையாகவே ஏவப்படுகிறது.

இந்த வன்முறையின் ஒரு விளைவே கடந்த சிவராத்திரி தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களும் கைதுகளும்.

கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக வழக்குகள் எதுவுமின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், வடக்குக் கிழக்கிலே தொல்பொருளியல் ஆய்வு என்ற பெயரிலும், வனப் பாதுகாப்பு என்ற பெயரிலும், மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் என்ற பெயரிலும் ஏனைய வடிவங்களிலும் இடம்பெறும் சிங்கள பௌத்த மயமாக்கற் செயன்முறைகள் யாவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோருகிறது.

இனவாதத்தினையும், மதவாத்தினையும் முன்னெடுக்கும் அரசியலமைப்பும், அரசுக் கட்டமைப்பும் மாற்றப்பட்டால் மாத்திரமே இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இன, சமய ரீதியிலே சமத்துவம் மிக்கவர்களாக வாழ முடியும். வெடுக்குநாறி மலைப் பிரச்சினைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரும் இவ்வாறான அரசியல் மாற்றங்களினை வலியுறுத்துவதன் மூலமாக‌ இனவாதத்தினையும், மதவாதத்தினையும் முறியடிக்க முன்வர வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோருகின்றது” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1372939

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலையில் வெறிச்செயல்

1505288887.png

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களைக் கைது செய்திருப்பதுடன், கோவிலுக்குள் சப்பாத்துக் கால்களுடன் சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சிவ பக்தர்களின் உணர்வுகளை அவமதித்திருக்கும் பொலிஸாரின் செயற்பாடுகளைக் கண்டிப்பதாக  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் இலங்கை குடிமக்கள் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும் வழிபடவும் அவர்களுக்கு முழுமையான உரித்துண்டு. ஆனால் அதேசமயம் இலங்கையில் பௌத்தத்திற்கு முதலிடம் என்றும் கூறப்படுகின்றது.

 அதன் காரணமாக பௌத்த பிக்குகளும் இராணுவத்தினரும் பொலிசாரும் ஒன்றிணைந்து ஏனைய மதத்தலங்களை அழித்தொழிப்பதும் அந்த இடங்களில் புத்த விகாரையைக் கட்டுவதுமான செயற்பாடுகளில் கடந்த பல தசாப்தங்களாக ஈடுபட்டு வருகின்றனர். 

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் அதனைப் போன்றே திருகோணமலையிலும் கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் சிங்கள மக்களோ பௌத்த மக்களோ வாழாத பிரதேசங்களில் ஏனைய மதத்தலங்கள் இருந்த புராதான இடங்களில் புத்த விகாரைகளை நிறுவுகின்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடுக்குநாறி மலையில் மக்கள் வழிபடுவதற்கு வவுனியா நீதிமன்றமும் ஆணைவழங்கியிருக்கக்கூடிய நிலையில், இரவு வழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்று சொல்வதற்கும் அங்கு சென்ற அடியார்களை அடித்துத் துன்புறுத்துவதற்கும் பொலிஸாருக்கு எந்தவித அதிகாரமோ உரிமையோ கிடையாது.

இலங்கையின் மிகப்பெருமளவிலான வருமானம் சுற்றுலாத்துறையையும் நம்பியிருக்கின்றது. ஆனால், அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகின்ற சுற்றுலாத்துறையையும் நிர்மூலமாக்கும் நடவடிக்கைகளிலேயே இன்றைய அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

இது நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்வதுடன் இலங்கையின் மதிப்பை சர்வதேச மட்டத்தில் குறைப்பதற்குமே உதவுமே தவிர, நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச்செல்லாது என்பதை அரசாங்கத்துக்கும் அரச தலைவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். (க)

https://newuthayan.com/article/வெடுக்குநாறிமலையில்_வெறிச்செயல்

  • கருத்துக்கள உறவுகள்

கொந்தளித்த வெடுக்குநாறிமலை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, putthan said:

எப்படி இருக்க வேணும்? ..பெரும்பான்மையினர் ஆட்சி செய்வதால் சிறுபான்மையினர் அமைதிகாக்க வேணுமா?நில அக்கிரமிப்பு செய்யும் திட்டங்களில் இதுவும் ஒன்று...இதை பெளத்தர்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள் அதாவது எப்படியோ அதிகாரங்களை பாவித்து விகாரையை கட்டி விடுவார்கள் ...பின்பு குடியேற்றம் ...

வட மாகாணத்தில விமானப்படை நல்லிணக்க செயலாம் 
வட மாகாணத்தில் பிக்குமாரும் பொலிசாறும்  துட்ட செயல் 
மூவரும் அரச இயந்திரம்...

தொல்பொருள் திணைக்களம் மண்ணை தோண்டுகின்றோம் என்று பிரச்சனைகளை தோண்டுகின்றது. இலங்கை தொல்பொருள் திணைக்களத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இனங்களுக்கு இடையில் உள்ள நல்லிணக்கத்தை ஓரளவுக்காவது பேணலாமோ?

போலிசார் வெளிவிட்ட அறிக்கையின் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரே கிடுங்குப்பிடியாக நின்று சிவராத்திரி நிகழ்வு குழப்பம் அடைவதற்கு காரணகர்த்தா என தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

போலிசார் வெளிவிட்ட அறிக்கையின் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரே கிடுங்குப்பிடியாக நின்று சிவராத்திரி நிகழ்வு குழப்பம் அடைவதற்கு காரணகர்த்தா என தோன்றுகின்றது.

அது தான் பொலிஸ் அதிகாரம் ,காணி அதிகாரம் இரண்டையும் நல்லிணக்கம் பேசும் உத்தமர்கள்  வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கொடுக்க மறுக்கின்றனர் 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவும் நடந்திருக்கு இரண்டு.. குறூப் மூச்.

1. சம் சும் மாவை கும்பல்.

2. சிவசேன.. சச்சி கும்பல். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

இவ்வளவும் நடந்திருக்கு இரண்டு.. குறூப் மூச்.

1. சம் சும் மாவை கும்பல்.

2. சிவசேன.. சச்சி கும்பல். 

மூன்றென்று சொல்லுங்க...யாழிலும் ஒரு குறூப் ..மூச்....நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, nedukkalapoovan said:

இவ்வளவும் நடந்திருக்கு இரண்டு.. குறூப் மூச்.

1. சம் சும் மாவை கும்பல்.

2. சிவசேன.. சச்சி கும்பல். 

பதவிக்கு வரும் மட்டும் எதுக்கெடுத்தாலும் வாயை திறப்பினம். பதவிக்கு அல்லது செல்வாக்கு வந்தாப்பிறகு  சாப்பிட மட்டும் வாயை திறப்பினம் 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.