Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ராஜீவ் காந்தி, இலங்கை, விடுதலைப் புலிகள், மணி சங்கர் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

[இன்று (மே 21) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்.]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் எழுதியிருக்கும் 'எனக்குத் தெரிந்த ராஜீவ்' (The Rajiv I Knew) என்ற நூல், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் குறித்து ராஜீவின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபரின் பார்வையில் சில நுணுக்கமான தகவல்களை முன்வைக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த மணி சங்கர் அய்யர் தற்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் குறித்து விரிவான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். 'The Rajiv I Knew' என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகம், ராஜீவ் காந்தி ஆட்சியின் காலகட்டத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள், சர்ச்சைகள், வெளியுறவுத் துறை கொள்கை முயற்சிகள், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பஞ்சாயத் ராஜ் ஆகியவை குறித்து விரிவாகப் பேசுகிறது.

இதில் சர்ச்சைகள் என்ற பகுதியில் ஷா பானோ வழக்கு, பாபர் மசூதி விவகாரம், ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பிராஸ்டாக் நடவடிக்கை, இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்ட விவகாரம், போஃபர்ஸ் ஆகியவை விவரிக்கப்பட்டிருக்கின்றன.

ராஜீவ் காந்தி, இலங்கை, விடுதலைப் புலிகள், மணி சங்கர் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இலங்கை பிரதமர் ஜெயவர்தனேவுடன் ராஜீவ் காந்தி

யாரையும் ஆலோசிக்காமல் ராஜீவ் எடுத்த முடிவு

இதில் இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியது மிக மோசமான முடிவு எனக் குறிப்பிட்டிருக்கிறார் மணிசங்கர் அய்யர். இந்திய அமைதி காக்கும் படையை அனுப்ப இந்தியா எப்படி ஒப்புக்கொண்டது என்பது குறித்தும் ஒரு புதிய தகவலைச் சொல்கிறார் மணி சங்கர் அய்யர்.

"ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்தானதும் அருகிலிருந்த அறைக்குள் ராஜீவை அழைத்துச் சென்றார் இலங்கை அதிபர் ஜெயவர்தனே. நாட்டின் இரு முனைகளிலும் நிகழும் இருவேறு உள்நாட்டுக் கலகங்களை இலங்கை ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்பதை ராஜீவிடம் தெரிவித்தார் ஜெயவர்தனே. தலைநகர் கொழும்பில் நடக்கும் வன்முறைகளைக்கூட ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்றார். ஆகவே, ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களிடம் இருந்து இலங்கை ராணுவத்தைப் பாதுகாக்க ஒரு அமைதி காக்கும் படையை அனுப்ப வேண்டும் என்றார் ஜெயவர்தனே. தன் மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த ஒப்புக்கொண்டதற்காக இதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜெயவர்தனே," என்கிறது இந்த நூல்.

அந்தத் தருணத்தில் அந்த அறைக்கு வெளியில் காத்திருக்கும் தன் நிபுணர்களைக்கூட கலந்தாலோசிக்காமல் அதற்கு ராஜீவ் காந்தி ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. "அதற்குப் பிறகு, இந்த வேண்டுகோள், ஒப்பந்தத்தின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது. இலங்கை அரசே கேட்டுக்கொண்டாலும் இலங்கையில் இந்தியா ராணுவ ரீதியாகத் தலையிடாது என்ற இந்திரா காந்தியின் நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்பட்டு, படைகளை அனுப்ப முடிவுசெய்யப்பட்டது," என்று கூறப்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தியின் முடிவைக் கேட்டு இந்தியாவில் இருந்த நிபுணர்கள் ஆச்சரியமடைந்ததாகவும் இந்நூல் கூறுகிறது. "ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இவ்வளவு அவசரத்துடன் இம்மாதிரி பிரிவுகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி முடிவெடுத்து, உடனடியாக செயல்படுத்திவிட்டார்," என்று மணி சங்கர் அய்யர் தனது புத்தகத்தில் கூறுகிறார்.

 
ராஜீவ் காந்தி, இலங்கை, விடுதலைப் புலிகள், மணி சங்கர் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரதமருக்கு கடற்படையினரின் பாரம்பரிய மரியாதை (guard of honour) அளிக்கப்பட்டபோது, ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார்

கடற்படை வீரரால் தாக்கப்பட்ட ராஜீவ்

இதுகுறித்து மேலும் பேசும் இந்த நூல், ஜெயவர்தனேவின் வேண்டுகோளை ஏற்றதற்கான விலையை ராஜீவ் அடுத்த சில நிமிடங்களிலேயே தரவேண்டியிருந்தது, என்கிறது.

"பிரதமருக்கு கடற்படையினரின் பாரம்பரிய மரியாதை (guard of honour) அளிக்கப்பட்டபோது, ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார். அந்தத் தாக்குதலில் ராஜீவ் காந்தியின் தலை நொறுங்கி, அந்த இடத்திலேயே அவர் கொல்லப்பட்டிருப்பார். ஆனால், தாக்குதல் வருவதை உணர்ந்துகொண்ட பிரதமர் விலகிக்கொள்ளவே, அடி தோள்பட்டையில் விழுந்தது," என்கிறது இப்புத்தகம்.

இந்தச் சம்பவத்திற்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமரின் விமானம் தில்லியில் தரையிறங்கியது. உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் டி.என். சேஷன் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, மணி சங்கர் அய்யரிடம் கொடுத்து தூர்தர்ஷனிடம் கொடுக்கச் சொன்நதாக மணி சங்கர் அய்யர் இந்த நூலில் தெரிவிக்கிறார். அந்த வீடியோ அதன்படியே கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.

"இந்திய அமைதி காக்கும் படை ஆரம்பத்திலிருந்தே ஒரு மோசமான நிகழ்வாக அமைந்தது. ஆரம்பக் கட்டச் சேதங்களுக்குப் பிறகு, ராணுவம் சுதாரித்துக்கொண்டாலும் இது பேரழிவாகவே அமைந்தது. ஆரம்பத்தில், இந்திய அமைதி காக்கும் படை விடுதலை தர வந்த படையாகக் கருதப்பட்டு, யாழ்ப்பாண மக்களால் வரவேற்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்போடு பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப முடியும் எனக் கருதிய புலிகள் இயக்க உறுப்பினர்களும் இந்த வரவேற்பில் இணைந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்தும் கிழக்குப் பகுதியில் இருந்தும் புலிகளால் துப்பாக்கி முனையில் துரத்தப்பட்ட பிற போராளிக் குழுக்கள் தாங்களும் யாழ்ப்பாணத்திற்கும் கிழக்கிற்கும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அமைதி காக்கும் படையை வரவேற்றனர்," என்கிறார் மணி சங்கர் அய்யர்.

"இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லாப் பகுதிகளிலும் இந்திய அமைதி காக்கும் படை இறங்கிய இடங்களில் எல்லாம் உற்சாக வவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது, அமைதி காப்பதில் தன் பலத்தைப் பயன்படுத்தியதன் மூலம், தெற்காசியாவில் ஒரு முக்கிய சக்தியாக இந்தியா ராஜதந்திர வெற்றியைப் பெற்றிருப்பதாக இந்திய வட்டாரங்களில் நம்பிக்கை ஏற்பட்டது," என்கிறார் மணி சங்கர் அய்யர்.

ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி 24 மணி நேரத்திற்குள் படைகள் அனுப்பப்பட்டதால், இலங்கையின் கள நிலவரம் குறித்து எவ்விதமான தகவல்களும் படைத் தளபதிகளோக்கோ, வீரர்களுக்கோ அளிக்கப்படவில்லை, என்கிறார்.

"அமைதிப் படை தரையிறங்கியதிலிருந்து புலிகளுக்கும் அமைதி காக்கும் படைக்கும் இடையில் மோதல் ஏற்படும் காலத்திற்கு இடையில் சுமார் இரண்டு மாதங்கள் இருந்தன. அந்த காலகட்டம் இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. இதனால் இலங்கைப் போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் அமைதி காக்கும் படையாக இருந்திருக்க வேண்டிய, இந்திய அமைதி காக்கும்படை, தமிழ்ப் போராளிகளோடு மோதவேண்டியதாயிற்று. இது இலங்கையின் வட - கிழக்குப் பகுதியை இந்தியாவின் வியட்னாமாக மாற்றியது," என்கிறார் மணி சங்கர் அய்யர்.

 
ராஜீவ் காந்தி, இலங்கை, விடுதலைப் புலிகள், மணி சங்கர் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் டி.என். சேஷன் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, மணி சங்கர் அய்யரிடம் கொடுத்து தூர்தர்ஷனிடம் கொடுக்கச் சொன்நதாக மணி சங்கர் அய்யர் இந்த நூலில் தெரிவிக்கிறார்

இந்தியா வந்த பிரபாகரன்

ஒப்பந்தம் கையெழுத்தான வாரம் விடுதலைப் புலிகள் இயகத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புது தில்லிக்கு அழைத்துவரப்பட்டதாகச் சொல்கிறது இந்நூல். அவரிடம் ஒப்பந்தத்தின் பிரதி அளிக்கப்பட்டபோதே, பிரச்சனை ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன, எனவும் சொல்கிறது.

"அவர் தில்லி அசோகா ஹோட்டலில் பலத்த காவலுக்கு இடையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, தன் சகாக்களிடம் கருத்துக்களைக் கேட்க விரும்பினார் அவர். விரைவிலேயே அந்த ஒப்பந்தம் தனக்கு ஏற்புடையதல்ல என்பதை பிரபாகரன் தெளிவுபடுத்தினார்," என்கிறது இப்புத்தகம்.

"பிரபாகரன் தங்கியிருந்த அறைக்குள் ரகசியமாக நுழைந்த பத்திரிகையாளர் அனிதா பிரதாப்பிடம் இதனை அவர் வெளிப்படையாகவே சொன்னார். அனிதா பிரதாப் பிரச்சனை உருவாவதை புரிந்துகொண்டார். ஆனால், இந்திய அரசக் கட்டமைப்பிலிருந்த யாருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட வசீகரத்திற்கு பிரபாகரன் பணிந்துவிடுவார் என நம்பினார்கள். ஆனால், தில்லியிலிருந்து எப்படித் தப்புவது என்பதைத்தான் பிரபாகரன் யோசித்துக்கொண்டிருந்தார்," என்று அப்போதிருந்த நிலைமையை விளக்குகிறார் மணி சங்கர் அய்யர்.

"பிரதமர் ராஜீவ் காந்தியுடனான சந்திப்பிற்குப் பிறகு, அவரது குடும்பத்துடனான விருந்தில் கலந்துகொள்ள பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விருந்து முடிந்த பிறகு, தனது மகன் ராகுல் காந்தியை அழைத்த ராஜீவ், தனது குண்டு துளைக்காத கவச உடையை எடுத்துவரும்படி சொன்னார். அதனை பிரபாகரனுக்கு அணிவித்த ராஜீவ், 'உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று புன்னகையுடன் சொன்னார். இந்த விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தவர்களிடம் `பிரபாகரன் ஒப்புக்கொண்டார். நான் அவரை நம்புகிறேன்` என்று பதிலளித்தார் ராஜீவ்," என்று இந்நூல் கூறுகிறது.

இதுகுறித்து மேலும் விவரிக்கும் இந்தப் புத்தகம், பிரபாகரன் தனக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி தேவையெனத் தெரிவித்ததாகச் சொல்கிறது.

"அந்தப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், இறையாண்மையுள்ள தனி தேசமாக ஈழத்தை அடைவதிலும் பிரபாகரன் உறுதியாக இருந்தார். ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஆகஸ்ட் 4-ஆம் தேதி சுதுமலையில் நிகழ்த்திய தனது பேச்சிலேயே ஒப்பந்தம் குறித்த முரண்பாட்டை பிரபாகரன் தெரிவித்தார். 'நாங்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் நேசிக்கிறோம். ஆனால், தமிழ் ஈழத்தை அடையும் லட்சியத்திற்காக தொடர்ந்து போராடுவோம்' என்றார்.

 
ராஜீவ் காந்தி, இலங்கை, விடுதலைப் புலிகள், மணி சங்கர் அய்யர்

பட மூலாதாரம்,JUGGERNAUT BOOKS

விரைவிலேயே ஆயுதங்களை ஒப்படைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்பதை புலிகள் இயக்கத்தினர் அறிவித்துவிட்டனர். ஆரம்பத்தில் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான உறவு சுமுகமாகவே இருந்தது. இந்தியப் படைகளுடன் எந்த நேரத்திலும் பேசுவதற்காக, ரேடியோ அலைவரிசையும் புலிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது (ஆனால், இப்படி அலைவரிசையை பகிர்ந்துகொண்டது பிறகு பிரச்சனையாகவே முடிந்தது)," என்று இந்த பனூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"திலீபனின் மரணம் ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதற்கிடையில், ஏகப்பட்ட ஆயுதங்கள், வெடி பொருட்களுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் புலேந்திரன், 16 புலிகள் இயக்கத்தினருடன் பாக் நீரிணை பகுதியில் கைதுசெய்யப்பட்டார். அவர்களைப் பார்க்கவும் உணவு அளிக்கவும் புலிகள் அனுமதிக்கப்பட்டனர். உணவு அளிக்கும் சாக்கில் அவர்களுக்கு சயனைடு அளிக்கப்பட்டது. அதனை அருந்தி 17 பேரும் உயிரிழந்தனர்," என்று இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

"அவர்களது சடலங்கள் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித் துறைக்கு கொண்டுவரப்பட்டபோது பொது மக்களின் கோபம் உச்சகட்டத்தை எட்டியது. புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். மோதலைத் தவிர்ப்பதற்காக பிரபாகரனைச் சந்திக்க இந்திய தளபதிகள் முயன்றனர். ஆனால், அது நடக்கவில்லை. விரைவிலேயே இந்திய ரோந்து வாகனத்தைத் தாக்கிய புலிகள், ஐந்து கமாண்டோக்களை கொன்றனர். இரு தரப்புக்கும் இடையில் மோதல் துவங்கியது," என்கிறது இப்புத்தகம்.

 
ராஜீவ் காந்தி, இலங்கை, விடுதலைப் புலிகள், மணி சங்கர் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மணி சங்கர் அய்யர்

இந்தியப் படையின் திட்டத்தை அறிந்துகொண்ட புலிகள்

இந்தப் பிரச்னை எப்படி வலுத்தது என்பதையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது.

"அக்டோபர் 5-ஆம் தேதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜெனரல் சுந்தர்ஜி, புலிகளின் ஆயுதங்களைப் பறிக்க 'ஆபரேஷன் பவன்' நடவடிக்கையை துவங்க உத்தரவிட்டார். இந்திய ராணுவம் மூன்று, நான்கு வாரங்களில் இதனை முடித்துவிடும் என்றார் சுந்தர்ஜி. இது மோசமான கணிப்பாக முடிந்தது. காரணம், இந்திய ராணுவத்தின் திட்டங்கள் முன்பே பிரபாகரனுக்குத் தெரிந்திருந்தன. காரணம், நிலைமை சுமுகமாக இருந்தபோது தனது தகவல் தொடர்பு அலைவரிசையை புலிகளுடன் இந்திய ராணுவம் பகிர்ந்துகொண்டிருந்ததுதான்," என்கிறது.

"ஒரு முறை ஹெலிகாப்டரில் வந்திறங்கி, புலிகளின் தலைவர்கள் அனைவரையும் பிடிக்க இந்தியப் படை திட்டமிட்டது. ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அனைவரும் அங்கிருந்து தப்பியிருந்தனர். ஆரம்பத்தில் புலிகளை 72 மணி நேரத்திலிருந்து 15 நாட்களுக்குள் சுற்றி வளைத்துவிடலாம் என இந்திய ராணுவம் நினைத்தது. ஆனால், ஒருபோதும் அது நடக்கவில்லை," என்கிறது இந்நூல்.

அந்தத் தருணத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீக்ஷித், இந்தத் தோல்விக்கான காரணத்தை தனது பணி கொழும்பில் விரிவாகக் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் மணி சங்கர் அய்யர்.

அதாவது `தமிழ் ஈழம் மீதான பிரபாகரனின் பிடிப்பையும் திட்டமிடுவதில் அவருக்கு இருந்த புத்திசாலித்தனம், எதிர்த்து நிற்பதில் உறுதியான தன்மை, ஒற்றை நோக்குடைய தன்மை ஆகியவற்றை மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டோம், என்கிறார்.

"அதேபோல, இந்திய அமைதி காக்கும் படைக்குச் சரியான தகவல்கள் அளிக்கப்படவில்லை. தமிழர்களுக்காக இறங்கிவருவதில் ஜெயவர்தனேவுக்கு இருந்த அரசியல் உறுதியையும் நேர்மைத்தன்மையையும் அதிகமாக மதிப்பிட்டுவிட்டோம். இலங்கைத் தமிழர்களிடமிருந்து புலிகளைத் தனியாக பிரித்துவிட முடியும் என்ற எனது நம்பிக்கையும் பொய்த்துப் போனது.

இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் ஈடுபாட்டை வரலாறு துல்லியமாக முடிவுசெய்யும். இந்திய, இலங்கை மக்களின் நலனுக்காக எவ்வித பிரதிபலனையும் தராத பணியை அவர் மேற்கொண்டார். அதற்கு அவர் தன் உயிரை விலையாகக் கொடுத்தார்," என்று இந்த நூலில் சொல்கிறாற் மணி சங்கர் அய்யர்.

`The Rajiv I Knew` புத்தகத்தை ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/czqqwvygdw2o

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவ்காந்தியின் அரசியல் முதிர்ச்சியின்மையால்

காங்கிரஸ் கட்சியும் அழிந்து

தமிழர்களும் அழிந்தனர்.

1 minute ago, ஈழப்பிரியன் said:

ரஜீவ்காந்தியின் அரசியல் முதிர்ச்சியின்மையால்

 

தமிழர்களும் அழிந்தனர்.

ராஜீவ் படுகொலை நிகழ்ந்து இருக்காவிடினும், ராஜீவ் கொலைப் படையினரை அனுப்பி இருக்காவிடினும் கூட, இந்தியா ஈழப் போராட்டத்தை நசுக்கித் தான் இருக்கும்.

ராஜீவ் கொலை ஒரு சாட்டாக, வாப்பாக போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

ராஜீவ் படுகொலை நிகழ்ந்து இருக்காவிடினும், ராஜீவ் கொலைப் படையினரை அனுப்பி இருக்காவிடினும் கூட, இந்தியா ஈழப் போராட்டத்தை நசுக்கித் தான் இருக்கும்.

ராஜீவ் கொலை ஒரு சாட்டாக, வாப்பாக போய்விட்டது.

உண்மை தான் நிழலி.

ஆனாலும் பெரும் தளமாக இருந்த தமிழ்நாட்டு ஆதரவை இழந்துவிட்டோம்.

இந்தளவுக்கு நிலமை மோசமாகி இருக்காது என்று எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனும் இல்லை ராசீவ் காந்தியும் இல்லை JR உம் இல்லை.

எனவே,...... மணிசங்கர் ஐயர் என்ன   நமது ஊர் கோயில் ஐயர் புத்தகம் எழுதினாலும் மறுத்துரைக்க எவரும் இல்லை. 

😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து ஒரு சில சம்பவங்களை நினைவு கூரும் பிபிசி ஊடகம்  இந்திய இராணுவத்தால் ஈழத்தில் நடந்த அஜாரகங்களை கூற மறுப்பதேன்.
ஒரு பக்க கதைகள் என்றுமே நியாயங்கள் ஆகாது.

Bild

⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨

GOD3n-Fx-W4-AASdoc.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ராஜீவ் படுகொலை நிகழ்ந்து இருக்காவிடினும், ராஜீவ் கொலைப் படையினரை அனுப்பி இருக்காவிடினும் கூட, இந்தியா ஈழப் போராட்டத்தை நசுக்கித் தான் இருக்கும்.

ராஜீவ் கொலை ஒரு சாட்டாக, வாப்பாக போய்விட்டது.

தமிழர்களுக்குத் தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இன்னும் சொல்வதானால், சமஷ்ட்டி முறையிலான தீர்வையோ அல்லது இந்திய மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரத்தினை ஒத்த தீர்வையோ ரஜீவ் காந்தி தமிழர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. இதனை நேரடியாகவே போராளிகள் தலைவர்களான பிரபாகரன், சிறீ, பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரிடம் 1985 ஆம் ஆண்டு ரஜீவ் தெரிவித்திருந்தார். மேலும், ஜெயாரினால் 1984 ஆம் ஆண்டு மார்கழியில் நடத்தி முடிக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபையினையே, சற்றுத் திருத்தங்களுடன் அதிகாரப் பரவலாக்க அலகாக ஏற்றுக்கொள்ள ரஜீவ் சம்மதித்தார். . 

தனது புகழ்ச்சிக்காகவும், இந்தியாவை பிராந்திய வல்லரசு எனும் தரத்திற்கு உயர்த்துவதற்காகவும் ரஜீவினால் நடத்தப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ, ஆனால் இந்தியா தலைமையில் பேச்சுக்கள் நடந்தன என்று சரித்திரம் எழுதப்படுவது ரஜீவிற்கு முக்கியமானதாக இருந்தது. 

தமிழருக்கு ஏதாவது கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவிற்குக் கரிசணை இருந்தது உண்மை. ஆனால், அது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யவேண்டுமா என்பதில் இந்தியாவிற்கு உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை. 

1987 இல் இந்திய அமைதிப்படை வந்ததே ஜெயாரின் வேண்டுகோளினால் எனும்போது, அது தமிழர்களுக்குச் சார்பாக இயங்கும் என்று எதிர்பார்த்தது எமது மடமை. 

2015 அல்லது 2016 ஆக இருக்கலாம், அவுஸ்த்திரேலியாவின் பேர்த்த் நகரில் இந்தியாவின் முன்னாள் புலநாய்வுத்துறையின் இயக்குநரும் இன்னும் சில முக்கியஸ்த்தர்களும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்தார்கள். இறுதி யுத்தத்தில் புலிகளை இந்தியா அழிக்க முடிவெடுத்ததன் நோக்கம் அனைவரும் எண்ணியிருந்த ரஜீவின் கொலையினைக் காட்டிலும், 1987 இல் இந்தியப்படையினை புலிகள் எதிர்க்க எடுத்த முடிவுதான் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. பிராந்திய வல்லரசும், உலகின் ஐந்தாவது பெரிய இராணுவத்தைக் கொண்டதுமான இந்தியாவை சிறிய ஆயுத அமைப்பான புலிகள் இயக்கம் எதிர்த்துப் போரிட  முடிவெடுத்தமை இந்தியாவைப் பொறுத்தவரை பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. 1991 இல் ரஜீவ் கொல்லப்பட்டாலென்ன, உயிர் தப்பியிருந்தாலென்ன, இந்தியா புலிகளைப் பழிவாங்க 1987 இலேயே முடிவெடுத்து விட்டது என்று நினைக்கிறேன். 

2005 இல் இந்திய காங்கிரஸின் தலைவியாக சோனியா வந்தமையும், இலங்கையில் மகிந்த ஆட்சிக்கு வந்தமையும் இரு நாடுகளுக்கும் சாதகமான சூழ்நிலையினை உருவாக்கிக் கொடுக்க, இந்தியா தனது சபதத்தை நிறைவேற்றிக்கொண்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

 

2015 அல்லது 2016 ஆக இருக்கலாம், அவுஸ்த்திரேலியாவின் பேர்த்த் நகரில் இந்தியாவின் முன்னாள் புலநாய்வுத்துறையின் இயக்குநரும் இன்னும் சில முக்கியஸ்த்தர்களும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்தார்கள். இறுதி யுத்தத்தில் புலிகளை இந்தியா அழிக்க முடிவெடுத்ததன் நோக்கம் அனைவரும் எண்ணியிருந்த ரஜீவின் கொலையினைக் காட்டிலும், 1987 இல் இந்தியப்படையினை புலிகள் எதிர்க்க எடுத்த முடிவுதான் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. பிராந்திய வல்லரசும், உலகின் ஐந்தாவது பெரிய இராணுவத்தைக் கொண்டதுமான இந்தியாவை சிறிய ஆயுத அமைப்பான புலிகள் இயக்கம் எதிர்த்துப் போரிட  முடிவெடுத்தமை இந்தியாவைப் பொறுத்தவரை பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. 1991 இல் ரஜீவ் கொல்லப்பட்டாலென்ன, உயிர் தப்பியிருந்தாலென்ன, இந்தியா புலிகளைப் பழிவாங்க 1987 இலேயே முடிவெடுத்து விட்டது என்று நினைக்கிறேன். 

விடுதலை புலிகள் , இந்தியாவை எதிர்க்க முன்பு , அதாவது திலீபன் உண்ணாவிரதம் இருக்க முன்பே தலைவர் பிரபாகரனையும் , மாத்தையாவையும் சுட , றோ அமைப்பு முடிவு எடுத்திருந்தது. 

https://m.rediff.com/news/2000/mar/31lanka.htm

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

2005 இல் இந்திய காங்கிரஸின் தலைவியாக சோனியா வந்தமையும், இலங்கையில் மகிந்த ஆட்சிக்கு வந்தமையும் இரு நாடுகளுக்கும் சாதகமான சூழ்நிலையினை உருவாக்கிக் கொடுக்க, இந்தியா தனது சபதத்தை நிறைவேற்றிக்கொண்டது. 

சீனாக்காரன் நிலத்தைப்பிடுங்கிப் பேரையெல்லாம் மாத்திறான்.அங்காலை பாக்கிஸ்தான் நொட்டுறான். அவங்களோடை மோதத்துப்பில்லை. ஆனால், தமது நிலத்தில் 190ஆண்டுகளுக்கு முன்புவரை தன்னாட்சியோடு வாழ்ந்த மிகச்சிறிய இனமான ஈழத் தமிழினத்தின் உரிமையை மறுதலித்து அழிப்பதில் தனது பலத்தைக்காட்ட முனையும் பெட்டைத்தனமான நாடே இந்தியா என்ற கிந்தியாவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

பிரபாகரனும் இல்லை ராசீவ் காந்தியும் இல்லை JR உம் இல்லை.

எனவே,...... மணிசங்கர் ஐயர் என்ன   நமது ஊர் கோயில் ஐயர் புத்தகம் எழுதினாலும் மறுத்துரைக்க எவரும் இல்லை. 

😁

திரு கபிதான் அவர்களைத் திருப்திப்படுத்தவேண்டுமெனில் யாராவது எதையாவது எடுத்துவிடுங்கோப்பா.

இந்திய அமைதிப்படையின் தோல்வியும் ராஜீவ் காந்தியின் சாவுமே முள்ளிவாய்க்காலின் முகவுரையாகும். ஆனால் இந்தியா முள்ளிவாய்க்கால்மூலம் புலிகளை வெற்றிகொண்டிருக்கலாம் ஆனால் தமிழர்களையோ இல்லையேல் சிங்களவர்களையோ வெற்றிகொள்ளவில்லை என்பதே நடப்பு நிலமை.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Elugnajiru said:

திரு கபிதான் அவர்களைத் திருப்திப்படுத்தவேண்டுமெனில் யாராவது எதையாவது எடுத்துவிடுங்கோப்பா.

இந்திய அமைதிப்படையின் தோல்வியும் ராஜீவ் காந்தியின் சாவுமே முள்ளிவாய்க்காலின் முகவுரையாகும். ஆனால் இந்தியா முள்ளிவாய்க்கால்மூலம் புலிகளை வெற்றிகொண்டிருக்கலாம் ஆனால் தமிழர்களையோ இல்லையேல் சிங்களவர்களையோ வெற்றிகொள்ளவில்லை என்பதே நடப்பு நிலமை.

IPKF காலத்தில் நாம் அங்கு இருந்ததால் நாம் அவற்றுக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். ஆனால் மூடிய கதவுகளுக்குள் நடந்ததாகக் கூறுபவைகளுக்கு சாட்சி என்று தற்போது எவரும் இல்லை.  எனவே  யாரும் எப்படியும் எழுதலாம். 

1) எங்கள் விடுதலைப்  போராட்டம் தென்னிந்தியக் கண்டத்துக்குள் மட்டும் நடப்பதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும்.   

2) தமிழீழம் என்பது உருவமில்லாத உன்னதமான உணர்வு. மனிதரைக் கொல்வதனூடாக அதனை வெற்றி கொள்ள முடியாது.  எத்தனை முள்ளிவாய்க்கால்கள் வந்தாலும் அந்த உணர்வு  வெற்றிகொள்ளப்பட முடியாது. 

 

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.