Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புலம்பெயர்ந்த பலரும் சரியான ஏமாளிக்களாகத்தான் இருக்கிறோம்.

பாவம் நீங்கள். எல்லோரும் உங்களைப்போலத்தான் என நினைக்கும் வெகுளியாக இருக்கிறீர்கள். அதுபோக, வீட்டு ஐயா ஊர்ப்புதினம் பார்ப்பதில்லையோ? இவ்வளவு துணிவாக எழுதுகிறீர்கள் அதனால கேட்டேன். 

  • Replies 161
  • Views 10k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்து   அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    மூன்று   வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக  வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

பாவம் நீங்கள். எல்லோரும் உங்களைப்போலத்தான் என நினைக்கும் வெகுளியாக இருக்கிறீர்கள். அதுபோக, வீட்டு ஐயா ஊர்ப்புதினம் பார்ப்பதில்லையோ? இவ்வளவு துணிவாக எழுதுகிறீர்கள் அதனால கேட்டேன். 

அவர் இந்தப்பக்கம் வாறதில்லை. வந்தாலும் பொய்யா எழுதுகிறேன். என்ன இரண்டு திட்டு விழும். அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று

வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக  வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்தம் எல்லாம் எழுதி முடிந்து வெளியே வருகிறோம். 

“ஏனக்கா அந்தப் பலா மரத்தை வெட்டினீர்கள்? நல்ல பழம். காய்த்துக் கொட்டுற மரம். அதைவிட வீட்டுக்கு நல்ல குளிர்ச்சி”

“உங்கள் தங்கைதான் அது பலவருடங்களாகக் காய்க்கவில்லை என்று கூறினா” 

“அவ என் தங்கை இல்லை. என் அம்மாவைப் பாராமரிப்பதற்கு நான் வைத்திருப்பவர், என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. அவ வந்து இப்ப ஒரு வருடம்தான்”

“நாம் முதல்முதல் வந்தபோது புரோக்கர் உங்கள் தங்கை என்று சொன்னார். அதன் பின்னும் அவ அண்ணா என்றுதான் சொன்னா. நான் நம்பிவிட்டேன்”

சரியக்கா என்று அவர் கிளம்ப, அந்தப் பெண்ணுக்கு இரண்டு திட்டுத் திட்டவேணும் என்ற கோபம் எழுகிறது. தீர விசாரிக்காத என் அவசர புத்தியை எண்ணி என்னை நானே நொந்துகொள்கிறேன். அடுத்த நாளே வீட்டுக்குப் போகும்போது ஒரு மீற்றர் உயரமான பலாக்கன்று ஒன்றை வாங்கிச் சென்று வெட்டிய இடத்துக்குப் பக்கத்தில் நட்டு சுற்றிவர தடிகளை ஊன்றி ஆடு கடிக்காதவாறு பாதுகாப்புக் கொடுத்தபின் மனம் சிறிது ஆறுகிறது.

அடுத்து வந்த நாட்களில் மிகுதி இடங்களில் இருந்த புற்களை ஆட்களைக் கொண்டு பிடுங்கிவித்து தென்னை மரங்களுக்குத் தாட்டு பாத்திகளையும் கட்டுவிக்கிறேன். ஓர் ஆணுக்கு ஒருநாள் கூலி 3000. பெண்ணுக்கு 2500. இது தோட்ட வேலையோ கடின வேலையோ செய்பவர்களுக்கு. சாதாரணமாகப் புல் புடுங்குபவர்களுக்கு 1400. அத்துடன் காலை 9 மணிக்குப் பின்னர்தான் வேலைக்கு வருவார்கள். அவர்களுக்கு 10.30 - 11.00 க்குள் ஏதும் வடை அல்லது  மிக்சரோ முறுக்கோ ஏதோவொன்று கொடுத்து தேனீரும் கொடுக்கவேண்டும். மதியம் உணவையும் கேட்டார்கள். என்னால் சமைக்க முடியாது என்று 500 ரூபாய்கள் மேலதிகமாகக் கொடுத்து அவர்களே கொண்டுவரும்படி கூறிவிடுவேன்.

இப்படியே மூன்று மாதங்கள் முடிய அவர்கள் தாம் ஒரு வாரத்தில் எழுந்துவிடுவதாகக் கூற எனக்கோ அளவில்லா மகிழ்ச்சி. அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் தாம் நிற்கமாட்டோம் என்று கூறியதால் நான் வீட்டுப்பக்கம் செல்லவில்லை. நான்காம் நாள் போன் செய்தால் யாருமே போனை எடுக்கவில்லை. அடுத்தநாள் ஓட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டின் வெளிவாசலில் பூட்டுத் தொங்க, அதில் நின்றபடி அந்தப் பெடியனுக்குத் தொடர்ந்து  போன் செய்தபடி இருக்க, என் வற்சப்புக்கு மெசேச் ஒன்று வந்து விழுகிறது.

“வீட்டில் இருந்த பெண்ணின் தந்தை கிளிநொச்சியில் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் அங்கே போய்விட்டார். மூன்று  நாட்களின் பின்னர் திறப்புத் தருகிறேன்”

முதலே எனக்கு அந்த செய்தியைச் சொல்லியிருந்தால் நான் தேவையில்லாமல் வந்திருக்கத் தேவை இல்லை என்று செய்தி அனுப்புகிறேன்.

அதன்பின் மூன்றாம் நாள் காலை மீண்டும் ஓட்டோக்காரருடன் வந்தால் அப்போதும் பூட்டுத்தான் தொங்குது. திரும்ப போன் செய்ய, திறப்பை இன்ன இடத்தில் வைத்திருக்கு, எடுங்கோ என்று செய்தி வற்சப்பில் வருகிறது. ஓட்டோக்காரர் தேடித் திறப்பை எடுத்து வருகிறார். திறந்துகொண்டு உள்ளே செல்ல, அக்கா மோட்டார் இருக்காது போய் பாருங்கோ என்கிறார். போய்ப் பார்த்தால் மோட்டார் கிடங்கினுள் இல்லை.

“எப்பிடி உங்களுக்கு மோட்டர் இருக்காது எனத் தெரிந்தது தம்பி?

“அவர்கள் இரண்டு நாட்களும் போன் எடுக்காது உங்களை அலைக்களித்தவுடன் எனக்கு விளங்கிவிட்டுது.

பைப்பைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வருக்கிறதுதான். ஆனாலும் அது எப்ப முடியும் என்று தெரியாதுதானே. எம் மூரில் ஒரு தெரிந்த எலெக்ரீசியன் இருக்கிறார். அவருக்குத் தொலைபேசியில் விபரம் சொல்ல, இன்று வரமுடியாது அக்கா. நாளை வருகிறேன் என்கிறார். வீட்டை நன்றாகக் கழுவிவிட்டுத்தான் உள்ளே பயன்படுத்த வேண்டும். ஆனால் தண்ணீர் இல்லாது இன்று வீட்டில் நின்று பயனில்லை. ஆகவே ஓட்டோவில் உடனேயே திரும்ப வீடு செல்கிறேன்.

எப்ப வந்தாலும் இங்கு சாப்பிடலாம் என்று மச்சாள் கூறினாலும் சிலவேளைகளில் மட்டுமே நான் அங்கு உண்பது. உண்மையில் கொஞ்சம் சமையலில் இருந்து விடுதலை வரும் என்று நம்பித்தான் லண்டனில் இருந்து வரும்போது நினைத்தது. ஆனால் அன்ரியின் வயது காரணமாக அவர் சமைத்து நான் உண்பது ஏற்புடையதாக இல்லை.

காலையில் எழுந்து குளித்துவிட்டு காலை உணவு சமைத்து மதியத்துக்கும் ஏதாவது இரண்டு கறிகளை வைத்துவிட்டு எனக்கு மதிய உணவையும் கட்டிக்கொண்டு சென்று உண்பது தொடர்ந்தது. பஞ்சி வரும் நேரங்களில் மட்டும் காலை உணவை மட்டும் செய்துவிட்டு எனக்கு மதிய உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு கடைகளில் வாங்கி உண்பதும் சிலவேளைகளில் நடந்ததுதான்.

அடுத்தநாள் வழமைபோல் எல்லாம் செய்துவிட்டு புதிய பூட்டுகள் மூன்றும் வாங்கிக்கொண்டு செல்கிறேன். எலெக்ரீசியன் தானே மோட்டரை வாங்கி வருவதாகக் கூறி வாங்கி வருகிறார். அவர் மோட்டரை மாற்றும்போது பார்த்தால் கிணற்றினுள் ஒரே பாசியும் தென்னோலைகளுமாக இருக்க, பக்கத்து வீட்டுக்குச் சென்று கிணறு கலக்கி இறைக்க யாரும் இருக்கிறார்களா என்று கேட்க ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகிறார்.

அந்த வீட்டுக்காரியின் பெயர் ரதி. கணவனும் மனைவியும் மட்டுமே அங்கு இருக்கின்றனர். ஆண் பிள்ளைகள் மூவர். திருமானமாகிவிட்டது. இருவர் வெளிநாட்டில். கதைத்துக்கொண்டு போக யேர்மனியில் வசிக்கும் அவரின் உறவினர்கள் எமக்குத் தெரியவருகின்றனர். எனக்கு நல்ல ஒரு துணை அயலில் என்ற மகிழ்ச்சி. அதன்பின் அப்பப்ப அவருடன் சென்று கதைப்பதும் விபரங்களை அறிவதுமாகி நெருக்கமாகிவிடுகிறார் ரதி அக்கா.

புதிய மோட்டார் போட்டபின் அடுத்த நாளே கிணற்றைக் கலக்கி இறைக்க இருவர் வருகின்றனர். முன்னர் பலா மரம் வெட்ட வந்தவர்களை தென்னைக்குப் பாத்தி கட்டவும் அழைத்திருந்தேன். அவர்களும் வந்தபடியால் புதியவர்களுடன் நிற்க பயம் ஏற்படவில்லை. முதலில் இரண்டு மணிநேரம் எமது மோட்டறினால் இறைத்துவிட்டு பின்னர் அவர்கள் கொண்டுவந்த மோட்டரைப் போட்டு கலக்கி இறக்கின்றனர்.

மூன்று பெரிய ஊற்றுகள் இருந்ததனால் மூண்டு வாழைக் குற்றிகளை வெட்டி ஊற்றை அடைத்தபின் பாசிகளை எல்லாம் அள்ளுகின்றனர். அக்கா கிணற்றுக்குள் இரண்டு பாம்பு இருக்கு என்றவுடன் நான் பாய்ந்து ஓடுகிறேன்.

“ஐய்யோ அக்கா பாம்பு செத்துப்போய் கிடக்கு”

“தண்ணீர் குடிக்கத்தான் பாம்பு கிணற்றுள் வந்ததோ தம்பி”

இல்லை அக்கா கிணற்றுள் ஒரு ஓட்டை இருக்கு. முட்டையும் இருக்கு. ஏதும் பறவைகள் வந்து இருந்திருக்கும். முட்டையைக் குடிக்கத்தான் பாம்பு வந்து தவறி விழுந்திருக்கும் என்கிறார்.

ஆக், உந்த செத்தபாம்பு கிடந்த தண்ணியில் தான் தேநீர் ஊற்றிக் குடிச்சதோ என்கிறேன். நல்லகாலம் நான் ஒரு போத்தலுக்குள் இணுவிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து குடித்ததில் மனம் நிம்மதியாகிறது. கிணறு கலக்கி இறைக்க மூன்று மணித்தியாலம். 3000 ரூபாய்கள் தான்.  

 அடுத்தடுத்த கிழமைகளில் ஸ்கூட்டியும் வாங்கி ஓடிப் பழகி விழுந்தெழும்பிய கதை முதலே எழுதியாச்சு.            

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர் இந்தப்பக்கம் வாறதில்லை. வந்தாலும் பொய்யா எழுதுகிறேன். என்ன இரண்டு திட்டு விழும். அவ்வளவுதான்.

ஏற்கனவே வீட்டிலை ஒரே திட்டு.....பிறகு இஞ்சை வந்து திட்டு எண்டால் மனது தாங்காது தானே.🤣

அதுசரி இப்ப உங்கட குக்கிங் பேய்க்காட்டுகள் ஒண்டையும் காணேல்ல. கை விட்டாச்சா? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஏற்கனவே வீட்டிலை ஒரே திட்டு.....பிறகு இஞ்சை வந்து திட்டு எண்டால் மனது தாங்காது தானே.🤣

அதுசரி இப்ப உங்கட குக்கிங் பேய்க்காட்டுகள் ஒண்டையும் காணேல்ல. கை விட்டாச்சா? 😎

அதைக் கைவிட்டுக் காண நாட்கள் ஆச்சு. ஊரில போய் இருக்கும்பொது திரும்பத் தொடங்குவன். 😃

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வீட்டில் இருந்த பெண்ணின் தந்தை கிளிநொச்சியில் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் அங்கே போய்விட்டார். மூன்று  நாட்களின் பின்னர் திறப்புத் தருகிறேன்”

இது மோட்டார் கழட்டி எடுப்பதாகற்கான. அவகாசம் இல்லையென்றால் திறப்பை அந்த இடத்தில் வைத்திருக்கலாம்.

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒப்பந்தம் எல்லாம் எழுதி முடிந்து வெளியே வருகிறோம். 

ஒப்பந்தத்தில் மோட்டார் இருப்பது பற்றி எழுதவில்லையா??? ஜேர்மனியில் லண்டனில் வாழ்ந்த நீங்கள் இப்படி ஏமாந்தது நம்ப முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர் இந்தப்பக்கம் வாறதில்லை. வந்தாலும் பொய்யா எழுதுகிறேன். என்ன இரண்டு திட்டு விழும். அவ்வளவுதான்.

பாவம் அப்பாவி ஆண்கள் இப்படித்தான் ஏமாற்றப்படுகிறார்கள். இதற்கு பின்னுமா உங்களை நம்புகிறார் அவர்?

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போய்ப் பார்த்தால் மோட்டார் கிடங்கினுள் இல்லை.

நான் பயந்தது சரியாய்ப்போச்சா? நீங்கள் நின்று கொண்டு அவர்கள் வெளியேறியபின் நீங்களே பூட்டை மாற்றி பூட்டி எடுத்திருக்கலாம். பின்னும் பாருங்கள், அவர்களிடம் காணாமல் போன பொருட்கள் பற்றி கேள்வி கேட்க்காமல், நஷ்ட ஈடு வாங்காமல் விட்டு விட்டீர்களே? பலாமரம் தறித்த உடனேயே, இவர் ஒரு ஏமாந்த சோணகிரி என்று தெரிந்து செயற்பட்டிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு சேர்த்த பணம், களவெடுத்தவர்களுக்கு நிலைத்து நிற்காது. எல்லாரும் சேர்ந்த கள்ளர், வெளிநாட்டுக்காரரை மொட்டியடித்து விடுவார்கள். தாங்கள் செயல்வீரர் என்று நினைப்பர், அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்படும்போது விளங்கும் வலி.  

20 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதைக் கைவிட்டுக் காண நாட்கள் ஆச்சு. ஊரில போய் இருக்கும்பொது திரும்பத் தொடங்குவன். 😃

அட இன்னும் ஊருக்கு போகவில்லையா? இனிப்போய் இருக்கும் போது இந்த நபர்களை தூரவே வையுங்கள். யார் என்ன சொன்னாலும் உடனேயே முடிவு எடுக்காதீர்கள், தீர யோசித்து, விசாரித்து செய்யுங்கள். பாவம் அப்பாவி மனிதனை ஏமாற்றாதீர்கள். பின் வேறு யாராவது உங்களை ஏமாற்றி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2025 at 22:03, குமாரசாமி said:

பென்சன் எடுக்கிற நேரம் வர கடிதம் போடுவாங்கள் தானே எண்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.எண்டாலும் எனக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறபடியால முதலே பென்சன் எடுக்க வாய்ப்பிருக்கு......😎

சுமேரியரும், குமாரசாமியும் பென்சன் எடுத்துவிட்டு, நாட்டுக்குப் போய் காணியைத் துப்பரவாக்கி ரஜினி மிளகாய்த் தோட்டம் வைக்க ஆலோசனைகள் செய்து கொண்டிருப்பதைக் ‘நானும் ஊர்க்காணியும்’இல் வாசித்ததன் பின்னர், எனக்கு இந்தச் செய்தி வாசிக்கக் கிடைத்தது.

 அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு இப்பொழுது 66 வயது. அவருக்கு மார்ச் 19ந் திகதி  பெர்லினின் சாரிடே மருத்துவமனையில் பத்தாவது குழந்தை பிறந்திருக்கின்றது.

பத்துப்   பிரசவங்களில் ஏழு பிரசவங்கள் சிசேரியன் மூலம் நிகழ்ந்திருக்கின்றன. அவரது முதல் (பெண்) குழந்தைக்கு தற்போது 45 வயது. மருத்துவராக இருக்கிறார். சரி எப்படி இதெல்லாம் உங்களுக்குச் சாத்தியமாயிற்று என்று அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டைக் கேட்டால், நான் மிகவும்ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுகிறேன், ஒவ்வொரு நாளும், தவறாமல் ஒரு மணி நேரம்  நீந்துவேன், இரண்டு மணி நேரம் ஓடுவேன். புகைபிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக  கருத்தடை  மாத்திரைகளைப் பயன்படுத்தியதில்லைஎன்கிறார்.

ஏற்கனவே அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள். அத்துடன் இப்பொழுது பிறந்த குழந்தையையும் சேர்த்துக் கொண்டால் அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 66வயது என்பது யேர்மனியில் பென்சனுக்குப் போகும் வயது. இந்த வயதில்  அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட் செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்தால் 6 ஏக்கர்களென்ன 60 ஏக்கர்களிலே கூட ரஜினி மிளகாய்த் தோட்டம் செய்ய குமாரசாமியால் முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.

ஆனாலும் ஒன்றைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவருக்கு குமாரசாமிக்கு இருப்பது போன்று முழங்கால்ப் பிரச்சனை. அடிக்கடி மருத்துவ விடுமுறைகள் எடுத்துக் கொள்வார். வேலையிடத்தில் முகம் சுழிக்க,எதற்குத் தொல்லை என வேலையை விட்டு விட்டார். பதினெட்டு மாதங்கள் அவருக்கு Kranken Geld (Sick Pay) கிடைத்தது. அதேநேரத்தில் wassergymnastik (water gymnastics)க்குப் போகும்படி மருத்துவரும் மருத்துவக் காப்புறுதி நிறுவனமும் அவருக்கு அறிவுறுத்தினார்கள். முதற் கட்டமாக ஐம்பது தடவைகள் அவர் wassergymnastikக்குப் போக வேண்டியிருந்தது. ஒரு தடவை தவறினாலும் அதற்குக் காரணம் சொல்ல வேண்டும். அத்துடன் தவற விட்ட wassergymnastik பயிற்சிகளையும் அவர் செய்ய வேண்டியிருந்தது

பதினெட்டு மாதங்கள் முடிய  Kranken Geld (Sick Pay)  நிறுத்தப்பட்டு, இரண்டு வருடங்களுக்கு  Arbeitslosengeld (Unemployment benefit) வழங்கினார்கள். அந்த இரண்டு வருடங்களும் முடிய Bürgergeld (Citizen's allowance) வழங்கத் தொடங்கினார்கள்.

ஆனால் இந்த   Arbeitslosengeld (Unemployment benefit)  வழங்கத் தொடங்கிய காலம் தொடக்கம் அவர்கள் அவரைச்  சும்மா இருக்க விடவில்லை. முழங்காலில் வலி இருப்பதால், இருந்து செய்யும் வேலைகளைப் பரிந்துரைத்தார்கள். வேலை கிடைக்கும் வரை வேறு தொழில்கள் பயில Berufliche Fortbildungszenten (Vocational training centers)க்கு அனுப்பினார்கள். கணிணியில் கொஞ்சம் தெரியும், கணக்கும் நன்றாக வரும் என்று அங்கே அவர் சொல்ல அது சம்பந்தமான சில தொழில் கல்விகளை அவருக்குப் பரிந்துரைத்து, உங்களுக்கு விருப்பமானதைத் தெரிவு செய்யுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

அவசரப்பட்டு விட்டேனா?” என அவர் என்னிடம் கேட்டார்.

யேர்மனியில்  பென்சன் எடுப்பது ஒன்றும் லேசான காரியமில்லை. குமாரசாமி தனது முழங்கால்  நோவைக் காட்டி சீக்கிரமாகப் பென்சன் எடுக்க நினைத்தால் சற்றுச் சிந்திக்க வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2025 at 20:49, Kandiah57 said:

இது மோட்டார் கழட்டி எடுப்பதாகற்கான. அவகாசம் இல்லையென்றால் திறப்பை அந்த இடத்தில் வைத்திருக்கலாம்.

ஒப்பந்தத்தில் மோட்டார் இருப்பது பற்றி எழுதவில்லையா??? ஜேர்மனியில் லண்டனில் வாழ்ந்த நீங்கள் இப்படி ஏமாந்தது நம்ப முடியவில்லை

அவர்கள் மோட்டாயரைக் களற்றுவார்கள் என்று எனக்கு எப்படி அண்ணா தெரியும்? அத்துடன் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்களைக் கண்டுபிடித்து பொருட்களை மீட்க போலீசுக்கும் பணம் கொடுக்கவேண்டி வரும். அல்லது கேஸ் இழுபடும். அதுதான் விட்டுவிட்டேன்.

On 26/3/2025 at 21:12, satan said:

நான் பயந்தது சரியாய்ப்போச்சா? நீங்கள் நின்று கொண்டு அவர்கள் வெளியேறியபின் நீங்களே பூட்டை மாற்றி பூட்டி எடுத்திருக்கலாம். பின்னும் பாருங்கள், அவர்களிடம் காணாமல் போன பொருட்கள் பற்றி கேள்வி கேட்க்காமல், நஷ்ட ஈடு வாங்காமல் விட்டு விட்டீர்களே? பலாமரம் தறித்த உடனேயே, இவர் ஒரு ஏமாந்த சோணகிரி என்று தெரிந்து செயற்பட்டிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு சேர்த்த பணம், களவெடுத்தவர்களுக்கு நிலைத்து நிற்காது. எல்லாரும் சேர்ந்த கள்ளர், வெளிநாட்டுக்காரரை மொட்டியடித்து விடுவார்கள். தாங்கள் செயல்வீரர் என்று நினைப்பர், அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்படும்போது விளங்கும் வலி.  

அட இன்னும் ஊருக்கு போகவில்லையா? இனிப்போய் இருக்கும் போது இந்த நபர்களை தூரவே வையுங்கள். யார் என்ன சொன்னாலும் உடனேயே முடிவு எடுக்காதீர்கள், தீர யோசித்து, விசாரித்து செய்யுங்கள். பாவம் அப்பாவி மனிதனை ஏமாற்றாதீர்கள். பின் வேறு யாராவது உங்களை ஏமாற்றி விடுவார்கள்.

ஊருக்குப் போய் இருப்பது 2026 கடைசியில் தான். இலங்கையில் சாதாரண ஒரு அலுவல் அரச அதிகாரிகளைக் கொண்டு செய்விப்பது அத்தனை இலகுவல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

யேர்மனியில்  பென்சன் எடுப்பது ஒன்றும் லேசான காரியமில்லை. குமாரசாமி தனது முழங்கால்  நோவைக் காட்டி சீக்கிரமாகப் பென்சன் எடுக்க நினைத்தால் சற்றுச் சிந்திக்க வேண்டுகிறேன்.

யேர்மனியில் மட்டுமல்ல லண்டனிலும் ஐரோப்பா முழுதும் கஷ்டம்தான். இலங்கையில் 50 இல் எடுக்கலாம். அல்லது 60 வயதுவரை வேலை செய்யலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு

அதன்பின்னர் கிணற்றுக்கு மேலே கம்பி வலை போட்டு குப்பைகள் விழாதவாறு மூட 10000 ரூபாய்கள். ஆனால் இரண்டு நாட்களில் தருவதாகக்கூறி ஒரு பத்துதடவை போன் செய்து, ஒருவாரத்தின் பின்னர் தான் கொண்டுவந்து பூட்டினார்கள்.

ஒரு பெண்ணைக் கூப்பிட்டு வீடு முழுதும் நன்றாகக் கழுவித் துடைத்து சுத்தம் செய்தபின்தான் மனம் நிம்மதியடைகிறது.

அதன்பின்னர் மரங்கள் நடலாம் என எண்ணி கணவருக்கு போன் செய்ய சுற்றிவர கமுகை நடு. பார்க்க அழகாய் இருக்கும் என்கிறார். தேக்கு மரமும் நடுங்கோ அம்மா. காணி ஒருகாலத்தில விக்கிறது என்றாலும் பெறுமதி என்று வேலைக்கு வந்தவர்கள் கூற 100 கமுகுகள் மற்றும் ஐம்பது தேக்கமரம் என்று சுற்றிவர நட்டுவிட்டு கறுவா, ரமுட்டான்,மங்கோஸ்டீன், கசு, அவகாடோ மற்றும் மூலிகைக் கன்றுகள் பூங்கன்றுகள் என்று ஆசைப்பட்ட கன்றுகள் எல்லாம் வாங்கி நடுகிறேன். வெட்டிய தென்னைகளுக்குப் பதிலாக 15 தென்னங்கன்றுகளும் நாட்டபின்னும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை.    

அதன்பின்னர் வளவைச் சுற்றி நான்கு புறமும் மரங்களுக்குத் தண்ணீர் விடுவதற்காக பைப்புகளைத் தாட்டு ஆசைதீரத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். எல்லாவற்றுக்கும் நீர் விட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிகிறது. நான் வந்து நான்கு மாதங்கள் முடிந்து இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கு.

காணியை சும்மா விட்டுவிட்டு வர முடியாது. ஆரையன் வீட்டில் வாடகைக்கு இருத்தப் பார் என்கிறார் மனிசன்.

என் வீடு மெயின் ரோட்டில் இருந்து கொஞ்சம் உள்ளுக்குள் இருக்கு. இரு பக்கம் 30 பரப்பு கலட்டுக் காணிகள். உரிமையாளர்கள் மூவர் ஒஸ்ரேலியாவில். அவர்களின் தொடர்பை எடுக்க முடியவில்லை இதுவரை. ஒருபுறம் தோட்டக்காணி. இருவர் குத்தகைக்குத் தோட்டம் செய்கின்றனர். பின்னால் நான்கு குடும்பங்கள். எனது வளவு பெரிது என்பதால் பலரும் வந்து பார்த்துவிட்டு அதிக வீடுகள் இல்லை. தனிய மனிசியையோ அல்லது அம்மாவை விட்டுவிட்டு வேலைக்குப் போக முடியாது. உந்த வளவைப் பாராமரிப்பதும் கஸ்டம் என்று செல்லி சாட்டுகளைச் சொன்னபடி போக, வீட்டில என்ன பெரிய பொருட்களா கிடக்கு. ஆட்களை வாடகைக்குப் போடுறதை விட பூட்டிப்போட்டு வாறன் என்றுசொல்ல, கணவர் பாதைப்புடன் கட்டாயம் ஆரையும் இருத்தாமல் வராதை என்று கண்டிப்புடன் கூற மீண்டும் ஆட்களைத் தேடுகிறேன்.

இன்னும் ஒன்றரை மாதமிருக்கே. இரண்டு அறைகளுக்கு அட்டாச் டொயிலற் கட்டவோ என்று கேட்க, அதற்கும் மனிசன் தடைபோடுகிறார். அது நானும் வந்து நிக்கும்போது கட்டலாம். உனக்கு சரிபிழை தெரியாது என்கிறார்.

அடுத்து இரண்டு நாட்களின் பின்னர் வெளியே உள்ள டொயிலற்றுக்கு போய் கதவைத் திறக்கமுதல் பார்த்தால் வெளியே ஊசி போன்று வால் ஒன்று தெரிகிறது. நீளமாக இருப்பதால் பாம்பாகத்தான் இருக்கும் என நினைத்து முன்பக்கமாக ஓடுகிறேன். வீட்டின் உள்ளே சென்று கதவைச் சாற்றிவிட்டு கடைசி அறையைத் திறந்து யன்னல் வழியாகப் பார்த்தால் எதையும் காணவில்லை. வீட்டில் என்னைத் தவிர யாரும் அந்த நேரம் இல்லை. வேலை செய்பவர்கள் வர இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காது டொயிலற் வாசலையே பார்த்துக்கொண்டு நிற்க ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் ஒரு சிறிய பாம்பு வெளியே தலையை நீட்டுகிறது. ஒரு இரண்டு நிமிடமாக அங்குமிங்குமாக தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு வெளியே வந்து பின்பக்கமாகப் போகிறது.

அதன்பின் வேலை ஆட்கள் வரும்வரை நான் வெளியில் வரவேயில்லை. வண்டனில் அதிகாலை நேரம் என்பதால் கணவர் நித்திரையால் எழும்பியபின் கட்டாயம் அட்டாச் டொயிலற் கட்டியே தீரவேண்டும் என்கிறேன். கணவரும் வேறு வழியின்றிச் சம்மதிக்க இரண்டு மூன்று பேரைக் கூப்பிட்டு கதைத்தால் வெளிநாட்டுக்காரர் என்று தெரிந்து அதிகமாகச் சொல்கின்றனர். பின் வீட்டுக்கு வரும் வழியில் கல்லரியும் யாட் ஒன்று உண்டு. அந்தத் தம்பியுடன் கதைக்க நீங்கள் வெளிநாடு எண்டு எப்பிடியும் கண்டுபிடிச்சிடுவாங்கள். கூடத்தான் கேட்பார்கள். நான் உங்களுக்கு நல்ல மேசனைப் பிடித்துத் தருகிறேன். நாட்கூலி குடுத்துக் கட்டுங்கோ அக்கா என்று கூற நானும் சம்மதிக்கிறேன்.

அடுத்த நாளே மண், கல், சீமெந்து எல்லாம் அந்தத் தம்பியின் யாட்டில் இருந்தே வந்திறங்க, மற்ற இடங்களில் விசாரித்தால் அவர் கூட்டி வைக்காமல் தருவதை அறிய மனதில் நிம்மதி பிறக்கிறது.

இரண்டு அறைகளுக்குத் தனித்தனியாக அட்டாச் டொயிலற். ஆனால் கட்டடம் ஒன்றாகக் கட்டி இடையில் சுவர் வைத்து பிரிப்பதான அமைப்பு இரு அறைகளுக்கிடையில் இருந்தது எமது அதிட்டமாகிறது.

காலையில் நான்குபேர் வேலைக்கு வருவார்கள். சில நேரம் ஆறுபேர். மெயின் மேஷனுக்குக் கூலி 3500. மற்றவர்களுக்கு 3000. 10.30 க்கு மாப்பால் கரைத்து ஒரு தேநீர் மற்றும் ஏதாவது ஒரு சிற்றுண்டி. 11.30 வெறும் தேநீர். 12.30 இக்கு மதிய உணவு இடைவேளை. ஒருவர் சென்று எல்லோருக்கும் பக்கத்திலிருந்த கடையில் உணவுப் பொதிகள் வாங்கிவருவார். வீட்டுக்குச் சிறிது தள்ளி ஒரு கார் நிறுத்துவதற்குக் கட்டிய ஒரு ஓடு வேய்ந்த சீமெந்துக் கட்டிடம். அதற்குள் இருந்து உண்டு முடிய பாயைப் போட்டுச் சிலர் சாய சிலர் போனில் அல்லது நேரில் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு 1.30 அல்லது 2.00 மணிக்கு மீண்டும் வேலையை ஆரம்பிப்பார்கள்.

எனக்கும் மத்தியான வெயிலும் ஓடித் திரிந்ததும் அலுப்பாக இருக்க, நானும் வீட்டுக் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு மதிய உணவு உண்டு முடிய நான் வாங்கிப் போட்ட கட்டிலில் ஒரு மணி நேரத்துக்கு போனில் அலாம் செட் பண்ணி வைத்துவிட்டுத் தூங்கி எழுவேன். என் எலாம் அடிக்கமுதலே மனிசன் வேலைக்குப் போகமுதல் எழுந்து எனக்குப் போன்செய்து ஏதும் ஆலோசனை சொல்வதோடு நடப்பவை பற்றிக் கேட்பார்.

பின்னர் 3.30 இக்கு அவர்களுக்கு மீண்டும் ஒரு பால் தேநீர். ஐந்து மணிக்கு வேலைமுடிந்து போக நானும் கதவுகள் யன்னல்கள் எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து இணுவிலுக்கு வந்துவிடுவேன். ஒரு மாதத்தில் இரு அட்டாச் டொயிலற்றும் கட்டி முடித்து மாபிள்கள் பதித்துமுடிய களைத்தே போய்விட்டேன். ஆனாலும் தனிய இந்தப்பெரிய வேலையைச் செய்து முடித்துவிட்டேன் என்னும் பெருமிதமும் கூடவே வர அடுத்தடுத்த நாட்களில் தேவையான பொருட்கள் பாத்திரங்கள் என்று வாங்கி காஸ் அடுப்பில் நானே தனியாகச் சமைத்து மிக நெருக்கமான உறவுகள் ஒரு இருபத்தைந்து பேர்களை அழைத்து என் கையால் அந்தாறு கறிகளுடன் உணவு சமைத்துக் கொடுத்தபின்தான் மனம் நிம்மதியானது.

அதன் பின்னும் யாராவது வீட்டுக்கு வாடகைக்கு வரமாட்டார்களா என்று தேடியதில் ஒரு குடும்பம் இரண்டு வயதுக் குழந்தையுடன் வருகின்றது. எமக்காக இரண்டு அறைகளை வைத்துக்கொண்டு மிகுதியாய் அவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்ல அவர்களும் சம்மதிக்கின்றனர். நீங்கள் வாடகை தரவேண்டாம். கரண்ட் காசு இந்த இரண்டு மாதங்களும் 1200 ரூபாய்தான் வந்தது. மூன்று நாட்களுக்கு ஒருக்கா நீங்கள் என் கன்றுகளுக்குத் தண்ணீர் திறந்து விட்டால் போதும். நானே உங்கள் கரண்ட் காசையும் கட்டுகிறேன் என்கிறேன். அவர்களும் சம்மதிக்கின்றனர்.

லோயரைக் கொண்டு ஒரு ஆண்டுக்கு வாடகை ஒப்பந்தம் எழுதி அவர்களுக்கு ஒருபிரதி எனக்கு ஒருபிரதி தர 2000 ரூபாய்கள் மட்டும் எடுக்கிறார் கோண்டாவிலில் உள்ள ஒரு லோயர். ஒருவித நிம்மதியுடன் இருக்க எனக்கோ திரும்ப போகவே மனமில்லை.

கட்டடம் கட்டும் வேலை இழுபட்டாலும் என்று எனது விமான டிக்கற்றை மூன்று வாரங்களுக்குத் தள்ளிப் போட்டிருந்தேன். அடுத்தநாள் மதியம் என் கடைசி மகள் போன் செய்து “அம்மா உங்கள் கஸ்பண்டுக்குச் சமைத்துக் கொடுத்து நான் களைத்துவிட்டேன். நீங்கள் உடனே வாருங்கள். இனிமேல் போவதென்றால் அவரையும் அழைத்துக்கொண்டே செல்லுங்கள் என்கிறாள். எனக்கோ கணவரையும் பிள்ளைகளையும் நினைக்கப் பாவமாக இருக்கிறது. இன்னும் மூன்று வாரத்தில் வந்துவிடுவேன் என்கிறேன்.          

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கூற 100 கமுகுகள் மற்றும் ஐம்பது தேக்கமரம் என்று சுற்றிவர நட்டுவிட்டு கறுவா, ரமுட்டான்,மங்கோஸ்டீன், கசு, அவகாடோ மற்றும் மூலிகைக் கன்றுகள் பூங்கன்றுகள் என்று ஆசைப்பட்ட கன்றுகள் எல்லாம் வாங்கி நடுகிறேன். வெட்டிய தென்னைகளுக்குப் பதிலாக 15 தென்னங்கன்றுகளும் நாட்டபின்னும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை.    

கேப்பாபிலவு ஊர் போல உங்கள் காணி இருக்கிறதே!

ஒரு ரிசோர்ட்டாக மாத்தலாம்! எனக்குத் தெரிஞ்சவர் இருக்கின்றார் இப்படியான ஐடியாவில்.. உங்கள் காணியை லீஸுக்குத் தருவீங்களா?🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உனக்கு சரிபிழை தெரியாது என்கிறார்.

உண்மை தான் 100%. 🤣. இதை நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் இப்படி ஒரு வசனம் வரும் என்று எதிர்பார்த்தேன் ......அது வீண்போகவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காலையில் நான்குபேர் வேலைக்கு வருவார்கள். சில நேரம் ஆறுபேர். மெயின் மேஷனுக்குக் கூலி 3500. மற்றவர்களுக்கு 3000. 10.30 க்கு மாப்பால் கரைத்து ஒரு தேநீர் மற்றும் ஏதாவது ஒரு சிற்றுண்டி. 11.30 வெறும் தேநீர். 12.30 இக்கு மதிய உணவு இடைவேளை. ஒருவர் சென்று எல்லோருக்கும் பக்கத்திலிருந்த கடையில் உணவுப் பொதிகள் வாங்கிவருவார். வீட்டுக்குச் சிறிது தள்ளி ஒரு கார் நிறுத்துவதற்குக் கட்டிய ஒரு ஓடு வேய்ந்த சீமெந்துக் கட்டிடம். அதற்குள் இருந்து உண்டு முடிய பாயைப் போட்டுச் சிலர் சாய சிலர் போனில் அல்லது நேரில் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு 1.30 அல்லது 2.00 மணிக்கு மீண்டும் வேலையை ஆரம்பிப்பார்கள்.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பின்னர் 3.30 இக்கு அவர்களுக்கு மீண்டும் ஒரு பால் தேநீர். ஐந்து மணிக்கு வேலைமுடிந்து போக

9 மணிக்கு வருவார்கள்’’ 5மணிக்கு போவார்கள் ....8 மணித்தியாலத்தில்.

10.30

11.30

12.30

15.30. =3.30. ஒவ்வொரு தடவையாகவும் 10. நிமிடங்கள் எடுத்தால் 40. நிமிடங்கள்

12.30 -----13.30. அல்லது 14.00. மணிவரை 1.30. ஆகும்.

0.40. +1.30=2.10. வரும் ஒரு. தொழிலாளர் 6 மணிநேரம் வேலை செய்வாரா. நாள் ஒன்றுக்கு 3000/6 =500. கிட்டத்தட்ட மணித்தியாலத்துக்கு 500 ரூபாய் வரும்

மற்றும் மரங்களுக்கை இடையிலான இடைவெளி சரியாக விட்டு நடப்பட்டுருக்க வேண்டும் இல்லையென்றால் மரங்கள் சொடை பத்தி விடும்

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லோயரைக் கொண்டு ஒரு ஆண்டுக்கு வாடகை ஒப்பந்தம் எழுதி அவர்களுக்கு ஒருபிரதி

திறப்பு கையில் நேரில் தரப்படவேண்டும். என்று எழுதினீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு...ஊரிலை நிற்பதுபோல் சுகானுபவம் ...தொடருங்கள் உங்கள் பயணத்தை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

கேப்பாபிலவு ஊர் போல உங்கள் காணி இருக்கிறதே!

ஒரு ரிசோர்ட்டாக மாத்தலாம்! எனக்குத் தெரிஞ்சவர் இருக்கின்றார் இப்படியான ஐடியாவில்.. உங்கள் காணியை லீஸுக்குத் தருவீங்களா?🤪

நானே அந்த ஐடியாவிலதான் இருக்கிறன். சிலவேளை ஏர் பி&பி கூட ஐடிஎயா இருக்கு. எல்லாம் நான் போய் இருந்துதான். 😃

8 hours ago, Kandiah57 said:

உண்மை தான் 100%. 🤣. இதை நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் இப்படி ஒரு வசனம் வரும் என்று எதிர்பார்த்தேன் ......அது வீண்போகவில்லை

இப்ப சந்தோஷமாக்கும்?😀

8 hours ago, Kandiah57 said:

9 மணிக்கு வருவார்கள்’’ 5மணிக்கு போவார்கள் ....8 மணித்தியாலத்தில்.

10.30

11.30

12.30

15.30. =3.30. ஒவ்வொரு தடவையாகவும் 10. நிமிடங்கள் எடுத்தால் 40. நிமிடங்கள்

12.30 -----13.30. அல்லது 14.00. மணிவரை 1.30. ஆகும்.

0.40. +1.30=2.10. வரும் ஒரு. தொழிலாளர் 6 மணிநேரம் வேலை செய்வாரா. நாள் ஒன்றுக்கு 3000/6 =500. கிட்டத்தட்ட மணித்தியாலத்துக்கு 500 ரூபாய் வரும்

மற்றும் மரங்களுக்கை இடையிலான இடைவெளி சரியாக விட்டு நடப்பட்டுருக்க வேண்டும் இல்லையென்றால் மரங்கள் சொடை பத்தி விடும்

திறப்பு கையில் நேரில் தரப்படவேண்டும். என்று எழுதினீர்களா???

திறப்பு கையில் தரவேண்டும் என்று எழுதவில்லை. ஒன்று நடந்தபின்புதானே அனுபவம் கிடைக்கிறது.

நாங்கள் தான் வெளிநாட்டில மாஞ்சு மாஞ்சு பிரேக் இல்லாமல் வேலை செய்யிறது. அவர்களை உருக்கினால் வராமல் விட்டுவிடுவார்கள். அதனால் கண்டும் காணாமல் இருப்பதுதான்.

3 hours ago, alvayan said:

நல்லாயிருக்கு...ஊரிலை நிற்பதுபோல் சுகானுபவம் ...தொடருங்கள் உங்கள் பயணத்தை

நன்றி அல்வாயான் வரவுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2025 at 23:20, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடுகள் கட்டியிருந்த இடம் பார்க்க அருவருப்பைத் தருகின்றது.

இங்கு இருந்து அங்கு சென்றபடியால் இந்த அருவருப்பு என நினைக்கிரேன் 🤣...கொஞ்ச காலம் அங்கு வாழ்ந்தால் பிறகு உந்த அருவருப்பும் பழகி போகும்...ஒரு காலத்தில் கோழி எச்சம் காலில் பட்டால் வீட்டு படியில் காலை தேய்த்து விட்டு உள்ளே ஒடி போவோம் ஆனால் இப்ப பெரிய அரியண்டமா தெரியும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

இங்கு இருந்து அங்கு சென்றபடியால் இந்த அருவருப்பு என நினைக்கிரேன் 🤣...கொஞ்ச காலம் அங்கு வாழ்ந்தால் பிறகு உந்த அருவருப்பும் பழகி போகும்...ஒரு காலத்தில் கோழி எச்சம் காலில் பட்டால் வீட்டு படியில் காலை தேய்த்து விட்டு உள்ளே ஒடி போவோம் ஆனால் இப்ப பெரிய அரியண்டமா தெரியும்...

இருக்கலாம்😂ஆனால் போய் இருக்கும்போது பாலுக்காகவும் இயற்கை உரத்துக்காகவும் இரண்டு ஆடுகள் வளர்ப்பதாகத்தான் எண்ணம். மாட்டு எருதான் இன்னும் சிறப்பு. ஆனால் மாட்டுக்கு பெரிய மேய்சல் நிலம் தேவை. வேலையும் கூட 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து        

நான் மீண்டும் வந்து வேலைவெட்டி என்று ஆரம்பித்தாலும் காணியைப் பற்றிய சிந்தனையே எந்நாளும் இருந்துகொண்டிருந்தது. அவர்கள் அந்தக் கன்றுக்கு நீர் விட்டார்களா? இல்லையா என்னும் யோசனையே எப்போதும் குடைந்துகொண்டிருக்க, வாரம் ஒருதடவை அந்தப் பெண்ணுக்கு போன் செய்து கன்றுகள் பற்றி விசாரிப்பது தொடர்ந்தது. மூன்று மாதங்கள் செல்ல புற்கள் எல்லாம் மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன என்கிறார்.

நான் என் மச்சாளிடம் இதுபற்றிக் கேட்க இரண்டு மூன்று மாதங்கள் நல்ல வெயில். மழையும் பெய்யவில்லை. யூலை ஓகஸ்ட் தான் இனி மழை. அதன்பின் தான் வேகமாக வளரும். இப்ப புல்லுப் பிடுங்கத் தேவை இல்லை என்கிறார். அதனால் நான் இன்னும் கொஞ்ச நாட்கள் செல்லட்டும் பிடுங்கலாம் என்கிறேன்.

அடுத்து ஒருமாதம் செல்ல வளவில் புற்களைப் புடுங்கவேண்டும். பாம்பு வந்துவிடும். சின்னப் பிள்ளையை வைத்திருக்கிறேன் என்று அந்தப் பெண் சொன்னதும் சரி ஆட்களை ஒழுங்கு செய்யுங்கோ என்றுவிட்டுப் பணம் அனுப்புகிறேன். நான்கு நாட்கள் இருவர் வந்து முழுப் புல்லையும் பிடுங்குவதற்கு 16000 ரூபாய் முடிய மனிசன் புறுபுறுக்க ஆரம்பிக்கிறார். அவைக்குக் கரண்ட் காசும் கட்டி வாடகையும் வாங்காமல் இப்ப வளவும் நீற்றாக்கிக் குடு என்கிறார்.

கண்டறியாத கண்டுகாலி. நாங்கள் போய் இருந்துகொண்டு உதுகளைச் செய்யலாம். சொல்லச் சொல்லக் கேட்காமல் நட்டுப்போட்டு வந்திருக்கிறாய் என்கிறார். இப்ப நட்டால்த்தானே நாங்கள் போய் இருக்கேக்குள்ள வளர்ந்திருக்கும் என்றுவிட்டு என் அலுவலைப் பார்க்கிறேன்.

அக்கா நீங்கள் கன்றுகளுக்குக் கட்டிய பாத்திகள் தண்ணீர் விட நீண்ட நேரம் எடுக்குது. நான் வேறை மாதிரிக் கட்டி விடட்டோ என்கிறா. நீங்கள் பாத்தி கட்டுவீங்களோ என்றதற்கு, தன் மாமியின் மகன் கட்டிவிடுவார் இரண்டு நாள் கூலி குடுக்கிரியளோ என்றதற்கு சரி என்கிறேன். எனக்கோ கன்றுகளுக்கு நீர் போனால் சரி என்ற  நிலை. இன்னும் ஒரு மாதம் செல்ல,

“உங்கள் கன்றுகளுக்கு நீர் இறைக்க மூன்று மணிநேரம் செல்கிறது”

“நானும் ஒருமாதம் இறைத்தேன் தானே. ஒருமணித்தியாலம்தானே முடிந்தது. என்ன புதுக்கதை சொல்கிறீர்கள்? 

“எனக்கு பிள்ளையுடன் சரியான கரைச்சலாக கிடக்கு”

“அப்ப ஒரே நாளில இறைக்காமல் பகுதி பகுதியாப் பிரிச்சு தண்ணியை விடுங்கோ”

“நீங்கள் எப்ப வருவியள் அக்கா”

“ஒவ்வொரு ஆண்டும் வர சரியான செலவு தங்கச்சி, ஏன் கேட்கிறீர்கள்?

“இது பெரிய வளவாக் கிடக்கு அக்கா. எங்களுக்கு இதைப் பாராமரிக்கக் கஷ்டமா இருக்கு”

“வளவில என்னத்தைப் பாராமரிக்கக் கிடக்கு?

“மாமரக் குப்பையே கூட்டி அள்ள ஏலாமல் கிடக்கு”

“அப்ப வளவு கூட்டவும் ஓராளைப் பிடிச்சுவிடட்டோ? பெரிய வளவு என்று தெரிந்துதானே வந்தீர்கள்? உங்களுக்கு ஒரு ஆண்டு வாடகை ஒப்பந்தம் செய்திருக்கிறன். அதுவரையும் நீங்கள் இருக்கத்தான் வேணும்”

“சரி அக்கா. எவ்வளவு கெதியா வர ஏலுமோ வாங்கோ”  

சரியாக அவர்களுக்கு வாடகை ஒப்பந்தம் முடிய ஒருவாரத்துக்கு முன்னர் நானும் கணவரும் ஊருக்குச் செல்கிறோம். செல்லும்போது இங்கிருந்து ஒரு ஆப்பிள், பியேஸ், ஒலிவ் மூன்றின் கன்றுகளை யும் லகேச்சுக்குள் வைத்துக் கொண்டுபோகிறேன்.  

இணுவிலில் போய் இறங்கி தங்கையின் வீட்டில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு எமது வீட்டுக்குச் சொல்கிறோம். கேற்றைத் திறந்து கமுகின் அழகைக் காண எண்ணினால் முன்பக்க வேலியோரம் நட்ட கமுகுகளில் அரைவாசித்தான் செழிப்பாக வளர்ந்திருக்க மிகுதி ஏனோதானோ என்று நிற்க ஐந்தாறு கமுகுகள் பட்டுப்போயும் இருக்க எனக்கு அழுகை வராத குறை. தண்ணீர்  விட்டோம். தண்ணீர் விட்டோம் என்றார்கள். ஒழுங்காகத் தண்ணீர் வீட்டிருந்தால் ஏன் வாடுது என்று கணவனுக்குக் கூற, இது ஒன்றும் அவர்கள் காணி இல்லை. அவர்களுக்கு வீடு தேவை வந்து இருந்தார்கள். உன் கண்டுகாலிகளையும் கவனிக்க அவர்களுக்கு என்ன விசரா என்கிறார் மனிசன்.

அந்தப் பெண்ணிடம் கேட்க, நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இறைத்தது. இதுக்கு மிஞ்சி நாங்கள் ஒன்றும் செய்ய ஏலாது என்று சொல்கிறார். இனிக் கதைத்துப் பயன் இல்லை என்று அறிந்தபின் நானும் கணவரும் வளவைச் சுற்றிப் பார்க்கிறோம். தேக்குகள் மட்டும் செழிப்பாக வளர்ந்திருக்க எனது பூங்கன்றுகளும் சில பட்டுப்போய் நிற்கின்றன.  

புற்கள் எல்லாம் வளர்ந்து, தென்னை மரங்களின் கீழே தேங்காய்கள் விழுந்து பார்க்கவே கோபம் வருகிறது. என்ன தங்கச்சி தேங்காய் விக்கிற விலையில பொறுக்காமல் விட்டிருக்கிறியள் என்கிறேன். பிள்ளையோட கஸ்டம் அக்கா எனக்கு. இவரும் விடியப் போனால் பின்னேரம்தான் வருவார் என்கிறார்.

“எப்ப தங்கச்சி எழும்புறியள்”

“வார கிழமை திறப்புத் தாறம்”

“வாறகிழமை சரி. என்ன நாள் என்று சொல்லுங்கோ” என்கிறேன்.

அவர் சொன்ன நாளுக்கு முன்னராக அங்கு சென்று முதல் நாள் தங்குகிறோம். பஞ்சி பிடித்தவர்களே தவிர சொன்னதுபோல் அடுத்தநாள் வீட்டை விட்டுக் கிளம்ப, வீட்டைக் கழுவிச்  சுத்தப்படுத்தி அங்கேயே தொடர்ந்து இருவாரம் தங்க, அளவிலா மகிழ்ச்சி ஏற்படுகிறது. காலையில் எழும்போதே அழகான குருவிகளின் ஓசை மனதை மயங்க வைக்கிறது. பக்கத்து  வீட்டுக்காரர்களின் கோழிகள் சிலது வந்து போகின்றன. காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தாமல் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டிப்போட்டு உடன் துருவிய தேங்காய்ப் பாலும் விட்டு பழஞ்சோற்றுக் கஞ்சி அமிர்தமாக இருக்கிறது. அதைக் குடித்தவுடன் அடிக்கடி பசிக்கும் எனக்கே நீண்டநேரம் பசியே எடுக்கவில்லை.

காலையிலேயே புலுனி கூட்டம் முற்றத்தில் வந்து இரை பொறுக்க நாமும் தானியங்கள் போடுகிறேன். மாமரத்தில் அணில்கள் ஓடி விளையாட, அட இத்தனை காலம் இவற்றையெல்லாம் இழந்து நான்கு சுவருக்குள் அடைபட்டு குளிரிலும் விறைத்துப் போனோமே என்று எண்ணம் எழுகிறது.

வீட்டின் வெளியே மாமர நிழலில் மூன்று கற்களை வைத்து எண்ணைச் சட்டியில் சந்தையில் வாங்கிவந்த மீன்களைப் பொரித்துத் தருகிறார் மனிசன். சுடச்சுட அதை உண்டு முட்களை வெளியே எறிந்துகொண்டிருக்க ............... சோறு கறி சமைக்கவேண்டிய தேவை குறைந்துபோக நெஞ்சு நிறைந்துபோகிறது. ஒருவரைக் கூப்பிட்டு செவ்விளநீர் இறக்கி வைத்து ஒரு நாளைக்கு இவ்விரண்டு குடிக்கிறோம்.

கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்வோம் என்று கூற, உனக்கு ஏதும் சிலவளிக்காட்டில் நித்திரை வராது என்கிறார் மனிசன். கன்றுகள் முக்கியம். ஒருக்காச் செய்துவிட்டால் பிறகு தண்ணி விடும் பிரச்சனை இல்லை என்று மனிசனைச் சம்மதிக்கச் செய்து சிலரிடம் விசாரித்தால் ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகின்றனர். வந்து வளவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்கனவே பெரிய பைப் தாட்டிருக்கிறபடியால் ஒன்றரை இலட்சத்துள் செய்து தரலாம் என்கிறார். ஏற்கனவே நாம் 2 குதிரை வலுக்கொண்ட மோட்டரையே போட்டிருந்தோம். அதன் வேகம் கூட என்று இன்னொரு மோட்டரைப் போட்டு அதில் இணைப்போம் என்கிறார். சரி என்று இரண்டாவது மோட்டரை 1.5 வழுவுள்ளதாக வாங்கி இணைத்து சொட்டுநீர்ப் பாசனம் ஒழுங்காக இயங்க வைக்கிறார். இரண்டு மோட்டார்கள் இருப்பதனால் சரியான பாதுகாப்பு வேண்டும் என்று பெலப்பான சுவருடன் ஒரு அறையைக் கட்டி அதனுள் இரு மோட்டார்களையும் வைத்து விசேட பூட்டு முறையையும் வடிவமைக்கிறார் கணவர்.  

பின்னர் காணிக்குள் கமரா பூட்டுவோம் என்று மனிசன் தொடங்கி அதற்கு 8 கமரா பூட்ட 136000. அதன்பின் சிறிது நிம்மதி ஏற்பட இருவாரம் இந்தியா சென்று வருகிறோம். வளவில் இருந்த கற்களை அடுக்கி மனிசன் பார்பிக்கியூ கிறில் செய்து இங்கிருந்து கொண்டுசென்ற துருப்பிடிக்காத கம்பிகளையும் வைத்து அப்பப்ப உண்டு மகிழ்கிறோம்.

அதன் பின் மீண்டும் ஆட்களைத் தேடும் படலம் ஆரம்பிக்க வீட்டுக்குள் டாய்லெட் உள்ள அறைகள் வேண்டும் என்கின்றனர் சிலர். எமக்காகக் கட்டியதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது என்கிறேன். வெளியேயும் நவீன களிப்பறையும் உண்டு என்பதால் அதற்கு ஏற்றவர்களைத் தேட, யாரும் கிடைக்காமல் நாம் கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னதாக ஒரு குடும்பம் வந்து பார்க்கின்றனர்.

தாய், மகள், மகளின் கணவர், பெண்ணின் தம்பி மற்றும் மகளின் பிள்ளை ஐந்துபேர். தந்தை இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர்.  என்று கமராவில் நாங்கள் கதைப்பது எல்லாம் கேட்குமோ என்கிறார் அவர்களுடன் வந்த ஒரு 12 வயதுப் பெடி. சத்தம் எமக்குக் கேட்காது என்கிறேன் நான். இவர்களைக்கூட்டி வந்தவர் எமக்கு எலெக்றிக் வேலை செய்து தந்தவர் தான். அதனால் அவர்களுக்கு மாதம் 3000  வாடகையில் வீட்டைக் கொடுத்து மின் கட்டணத்தையும் கட்டும்படி சொல்கிறோம். அவர்களின் அடையாள அட்டையையும் படம் எடுத்து லோயரிடமும் கொடுத்து ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/3/2025 at 21:21, Kavi arunasalam said:

ஏற்கனவே அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள். அத்துடன் இப்பொழுது பிறந்த குழந்தையையும் சேர்த்துக் கொண்டால் அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 66வயது என்பது யேர்மனியில் பென்சனுக்குப் போகும் வயது. இந்த வயதில்  அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட் செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்தால் 6 ஏக்கர்களென்ன 60 ஏக்கர்களிலே கூட ரஜினி மிளகாய்த் தோட்டம் செய்ய குமாரசாமியால் முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.

உதெண்டால் நூறுவீதம் உண்மைதான்... இஞ்சை இந்த பனிக்குளிருக்கை போர்த்து மூடிக்கொண்டு திரியிறதை விட அங்கை ஊரிலை அரைக்கோவணத்தோட நிண்டு அறுவது ஏக்கர் மிளகாய் தோட்டம் செய்யிற சந்தோசம் வேற ஒண்டிலையும் வராது கண்டியளோ 🤣

எண்டாலும்....😎

பேர்லின் அலெக்ஸாண்ட்ரா சம்பவங்கள் ரஜினி மிளகாய் தோட்டத்திலும் நடக்க சாத்தியங்கள் வந்தாலும் வரலாம்.யார் கண்டார்? எல்லாம் மேல இருக்கிறவன் செயல் 😅

On 27/3/2025 at 21:21, Kavi arunasalam said:

ஆனாலும் ஒன்றைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவருக்கு குமாரசாமிக்கு இருப்பது போன்று முழங்கால்ப் பிரச்சனை. அடிக்கடி மருத்துவ விடுமுறைகள் எடுத்துக் கொள்வார். வேலையிடத்தில் முகம் சுழிக்க,எதற்குத் தொல்லை என வேலையை விட்டு விட்டார். பதினெட்டு மாதங்கள் அவருக்கு Kranken Geld (Sick Pay) கிடைத்தது. அதேநேரத்தில் wassergymnastik (water gymnastics)க்குப் போகும்படி மருத்துவரும் மருத்துவக் காப்புறுதி நிறுவனமும் அவருக்கு அறிவுறுத்தினார்கள். முதற் கட்டமாக ஐம்பது தடவைகள் அவர் wassergymnastikக்குப் போக வேண்டியிருந்தது. ஒரு தடவை தவறினாலும் அதற்குக் காரணம் சொல்ல வேண்டும். அத்துடன் தவற விட்ட wassergymnastik பயிற்சிகளையும் அவர் செய்ய வேண்டியிருந்தது

பதினெட்டு மாதங்கள் முடிய  Kranken Geld (Sick Pay)  நிறுத்தப்பட்டு, இரண்டு வருடங்களுக்கு  Arbeitslosengeld (Unemployment benefit) வழங்கினார்கள். அந்த இரண்டு வருடங்களும் முடிய Bürgergeld (Citizen's allowance) வழங்கத் தொடங்கினார்கள்.

ஆனால் இந்த   Arbeitslosengeld (Unemployment benefit)  வழங்கத் தொடங்கிய காலம் தொடக்கம் அவர்கள் அவரைச்  சும்மா இருக்க விடவில்லை. முழங்காலில் வலி இருப்பதால், இருந்து செய்யும் வேலைகளைப் பரிந்துரைத்தார்கள். வேலை கிடைக்கும் வரை வேறு தொழில்கள் பயில Berufliche Fortbildungszenten (Vocational training centers)க்கு அனுப்பினார்கள். கணிணியில் கொஞ்சம் தெரியும், கணக்கும் நன்றாக வரும் என்று அங்கே அவர் சொல்ல அது சம்பந்தமான சில தொழில் கல்விகளை அவருக்குப் பரிந்துரைத்து, உங்களுக்கு விருப்பமானதைத் தெரிவு செய்யுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு வயதுக்கு பிறகு.....50,60. உந்த கவுண்மேந்து ஆக்களோட கனக்க கதைக்க கூடாது. 50 வீத கைப் பாஷை கன இடங்களில கை குடுக்கும். பஞ்சப்பரதேசியாய் காட்சியளிக்கோணும். பாங்கில எப்பவும் மைனஸ் ல இருக்கோணும்.உவங்கடை கந்தோர்களுக்கை போறதெண்டால் சாடையாய் நொண்டி நொண்டிக்கொண்டு போக வேணும்.ஒரு கிழமைக்கு குளிக்கக்கூடாது.உள்ளி அந்தமாதிரி தொடர்ந்து சாப்பிட வேணும் 🤣

இரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி கிழிஞ்ச சட்டை தாடி மீசையோட காட்சியளிக்கணும். லூசு மாதிரி அப்பப்ப கதைக்கணும்.ஓட்டை உடைசல் மாதிரி நடிக்கணும்..😂

பென்சன் ரெடி 🙃

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிலவளிக்காட்டில்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இத்தனை காலம் இவற்றையெல்லாம் இழந்து நான்கு சுவருக்குள் அடைபட்டு குளிரிலும் விறைத்துப் போனோமே என்று எண்ணம் எழுகிறது.

உங்களின் இந்த எண்ணம் யாழ்ப்பாணத்தில். தொடர்ந்து வாழும் மக்களுக்கு இருக்க ?? இல்லை அவர்கள் லண்டனில் வாழ விரும்புவர்கள் சரிய?? இல்லை பிழையா ??

நீங்கள் அல்லது யாராவது வெளிநாடு வரமால். இலங்கையில் தொடர்ந்து இருந்து இருந்தால்

இப்படி சிந்திக்க போவதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் அல்லது யாராவது வெளிநாடு வரமால். இலங்கையில் தொடர்ந்து இருந்து இருந்தால்

இப்படி சிந்திக்க போவதில்லை

நீங்கள் நினைப்பது போலில்லாமல்......புலம்பெயர் தமிழர்களை விட அங்குள்ளவர்கள் வசதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் நினைப்பது போலில்லாமல்......புலம்பெயர் தமிழர்களை விட அங்குள்ளவர்கள் வசதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றார்கள்.

உண்மை தான் அவர்களின் வேலை நேரம் மிகக்குறைவு அடிக்கடி தேனீர் குடித்தபடி அதுவும் வேலை கொடுபபோர். போட்டுக் கொடுக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

உங்களின் இந்த எண்ணம் யாழ்ப்பாணத்தில். தொடர்ந்து வாழும் மக்களுக்கு இருக்க ?? இல்லை அவர்கள் லண்டனில் வாழ விரும்புவர்கள் சரிய?? இல்லை பிழையா ??

நீங்கள் அல்லது யாராவது வெளிநாடு வரமால். இலங்கையில் தொடர்ந்து இருந்து இருந்தால்

இப்படி சிந்திக்க போவதில்லை

அதென்னவோ உண்மைதான் அண்ணா. எம் நாட்டில் அடக்குமுறையும் போரும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஏன் இங்கு வரபோகிறோம் . சரி அங்கு போய் இருக்கவேண்டிய தேவை இன்றியும் நான் ஏன் அங்கு போக வேண்டும்?

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.