Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது.

1988 சித்திரையாக இருக்கலாம்.

தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம்.

இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள்.

அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார்.

மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் இருந்து விடுமுறைக்காக அக்கா வந்து தங்கியது வெறும் 2 வாரங்கள்தான். அவ்விரு வாரங்களிலும் அக்காவும், எனது சித்தியும் (கன்னியாஸ்த்திரி) எனது தகப்பனாரிடம் மன்றாடாத நாளில்லை. "அவனை என்னுடன் விடுங்கள், நான் படிப்பிக்கிறேன், பாவம், அவனது படிப்பைக் குலைக்கவேண்டாம்" என்றெல்லாம் அவர் மன்றாடிப்பார்த்தார். தகப்பனாரோ சிறிதும் இளகவில்லை. "அவன் போனால் ஆர் வீட்டில வேலையெல்லாம் பாக்கிறது? தென்னை மரங்களுக்கும், பூக்கண்டுகளுக்கும் ஆர் கிணற்றிலை இருந்து தண்ணி அள்ளி இறைக்கிறது? ஆர் புல்லுப் பிடுங்கிறது? ஆர் கடைக்குப் போறது? அவன் இங்கேயே இருக்கட்டும், ஒரு இடமும் விடமாட்டன்" என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். ஆனால் அக்காவும், சித்தியும் தொடர்ச்சியாகக் கெஞ்சவே, "ஒரு சதமும் தரமாட்டன், கூட்டிக்கொண்டு போறதெண்டால், கூட்டிக்கொண்டு போங்கோ" என்று இறுதியாகச் சம்மதித்தார். சிஸ்ட்டர் அன்ரா எனக்காகச் செய்த முதலாவது நண்மை, தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து , தழைகளில் இருந்து என்னை விடுவித்தது.

தினமும் கொடுமைகளையே சந்தித்து, பழக்கப்பட்ட இருண்ட வாழ்வினுள் இருந்து எனக்குக் கிடைத்த முதலாவது விடுதலை. எதற்காக அடிவாங்குகிறேன், எதற்காகத் திட்டப்படுகிறேன் என்கிற தெளிவே இல்லாது தினமும் வாழ்வில் சித்திரவதைகளை அனுபவித்த எனக்குக் கிடைத்த விடுதலை. ஆகவே மகிழ்ந்துபோனேன். அக்காவுடனும், சிஸ்ட்டர் அன்ராவுடனும் மட்டக்களப்பிற்குச் சென்று வாழப்போகிறேன் என்கிற உணர்வே என்னை மகிழ்விக்க, புறப்படும் நாளிற்காகத் தவமிருக்கத் தொடங்கினேன். ஆனால் மனதினுள் இனம்புரியாத அச்சம் ஒன்று தொடர்ச்சியாக இருந்துவந்தது. அதாவது, தகப்பனார் என்னை விடுதலை செய்யச் சம்மதித்திருந்தத்போதும் , கடைசி நாளில்க் கூட அவர் அதனைத் தடுத்து நிறுத்திவிடலாம். தனக்கும் தனது புதிய மனைவிக்கும் சேவை செய்ய என்னை வீட்டிலேயே மறித்துவிடலாம். தெய்வாதீனமாக அது நடக்கவில்லை, இடையிடையே "நீ அங்கை போனால் வீட்டில ஆர் வேலை பார்க்கிறது? ரஞ்சன வேலை செய்யச் சொல்லி ஏவ ஏலாது, அவனுக்கு இன்னும் 10 வயசுதான்..." என்று இடையிடையே சுருதி மாற்றிப் பேசியபோதும் என்னை அவர் மறிக்கவில்லை. போக அனுமதித்துவிட்டார். முதலாவது வெற்றி. எனக்கு, சிஸ்ட்டர் அன்ராவிற்கு, அக்காவுக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ஒரு சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவின் மடத்தில் தங்கவைக்கப்பட்டேன். அதன்பிறகு புளியந்தீவில் இயங்கிவந்த சிறுவர்களுக்கான விடுதியில் சேர்க்கப்பட்டேன். நோர்வேயில் இருந்து யாரோ ஒருவர் அநாதைகளுக்கென்று அனுப்பிய பணம் எனக்குபடிக்கவும், உயிர்வாழவும் உதவியது. மாதத்திற்கு 450 ரூபாய்கள். சிஸ்ட்டர் அன்ராவே வந்து விடுதியில் கட்டிச் சென்றார். அப்படி ஒவ்வொருமுறையும் வரும்போதும் தன்னைப் பார்க்க வருவோர் கொண்டுவரும் பழங்கள், இனிப்புக்கள் என்று கொண்டுவந்து தருவார். அவரைக் காண்பதற்காகவே நாட்கணக்கில் காத்திருக்கத் தொடங்கினேன். எனக்கான பணத்தினை விடுதிப் பராமரிப்பாளரிடம் கட்டிவிட்டு, வெளியே விருந்தினர்க்காகப் போடப்பட்டிருக்கும் வாங்கில் என்னுடன் இருந்து சிறிது நேரம் பேசிவிட்டு, தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அவர் தாண்டவன்வெளி நோக்கிச் செல்வார். அவர் சென்றபின்னரும் அவர் போன வழியே கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருப்பேன். அங்கு எனக்கிருந்த உறவு அவர் மட்டும்தான். எனது அன்னையே என்னைப் பிரிந்துபோவது போன்று துக்கம் கழுத்தினுள் இறுககிக் கிழிக்க, வேறு வழியின்றி விடுதிக்குள் நுழைந்து, தொலைந்துபோவேன். இப்படியே மாதம் ஒருமுறை வருவார், சில நிமிடங்களாவது பேசுவார், அம்மாவின் குரல் அவரிடமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும், அம்மாவுடன் பேசுவதுபோன்ற பிரமை ஏற்படும். அன்றிலிருந்து எனக்கு அம்மா அவர்தான் என்று நினைக்கத் தொடங்கினேன். கொடுமையான தகப்பனாரிடமிருந்து என்னை விடுவித்து, தனது சொந்த முயற்சியில், கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதிலும் என்னை மட்டக்களப்பிற்குக் கூட்டிவந்து, விடுதியில் இடம் எடுத்து, எனக்கான செலவுகளைச் செய்து, பாடசாலையிலும் தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக படிக்க உதவிய அவர் அன்னையன்றி வேறு யாராக இருக்க முடியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று.

நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் சிலரை ம றக்க முடியாது ஆயுள் வரை அவர்களின் நினைவு இருக்கும் .அவர்கள் செய்த நன்மையை நெஞ்சார வாழ்த்தும். நல்லதோர் கையில் அடைக்கலமாகி இருக்கிறீர் . கதைப்பகிர்வுக்கு நன்றி.

( முன்பும் ஒரு தடவை இது பறறி சொன்னதாக ஞாபகம்) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1990, பேச்சுக்கள் முறிவடைந்து புலிகளுடன் பிரேமதாசா யுத்தத்தினை ஆரம்பித்திருந்த காலம். மட்டக்களப்பின் பலவிடங்களிலும் படுகொலைகள். என்னுடன் கூடப்படித்த பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். அடிக்கடி நடந்த சுற்றிவளைப்புக்கள், தலையாட்டிகளுக்கு முன்னால் நடந்த அணிவகுப்புக்கள் என்று நகரே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த கொடிய ஊழிக்காலம் அது. இரவுகளில் கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், மரண ஓலங்கள் என்று தூக்கமின்றி விடுதியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பொழுதுகள் கழித்த இரவுகள். எமது விடுதியை இராணுவம் சுற்றிவளைத்தபோது, பாதிரியர்களாக இருந்த விடுதி பராமரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டே மாணவர்களை நோட்டம் விட்ட சிங்கள இராணுவக் கப்டன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த விடுதி மாணவர்களை அழைத்துச் செல்லப்போகிறேன் என்று அவன் அடம்பிடிக்க, பாதிரியார்களோ அவனிடம் கெஞ்சி மன்றாடி அம்மாணவர்களை விடுவித்துக்கொண்ட பொழுதுகள் என்று உயிர் வாழ்தலுக்கான நிச்சயம் இன்றி கடந்துபோன நாட்கள்.

சில மாதங்களாக மட்டக்களப்பு நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் முற்றாக மூடப்பட்டு, அகோரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்தன. மரணங்களை நாள்தோறும் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய மூன்று, நீண்ட, கொடிய மாதங்கள். ஒருவாறு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான புகையிரதச் சேவை வாழைச்சேனையிலிருந்து நடைபெறத் தொடங்கியது. ஆனால், வாழைச்சேனைவரை பஸ்ஸில்த்தான் பயணிக்கவேண்டும். மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான வீதியின் பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லீம் பிரதேசங்களில் பஸ்ஸை மறித்து, ஆண்களை இறக்கி வெட்டத் தொடங்கியிருந்தார்கள் முஸ்லீம் ஊர்காவற்படையினர்.

என்னையும் அக்காவையும் எப்படியாவது பாதுகாப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்குக் கூட்டிவந்துவிட வேண்டும் என்று சிஸ்ட்டர் அன்ரா உறுதி பூண்டார். இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்கு அவர் வந்தார். அக்காவிற்கும் சிஸ்ட்டர் அன்ராவிற்கும் இருக்கக் கிடைத்த ஆசனத்தில், அவர்களின் கால்களுக்குக் கீழே நாள் ஒளிந்துகொள்ள , எங்களைப்போலவே இன்னும் பலரை ஏற்றிக்கொண்டு அந்தப் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது. முஸ்லீம்களால் நடத்தப்படும் படுகொலைகளில் இருந்து பயணிகளைக் காக்கவென செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதுபோன்றதொரு அமைப்போ பஸ்ஸின் முன்னால்ச் செல்ல, மெதுமெதுவாக பஸ் பின்னால் தொடர்ந்து சென்றது. சிலவிடங்கள் பஸ்ஸை மறித்து உள்ளே வர முயன்ற காடையர்களை முன்னால்ச் சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாழைச்சேனையில் புகையிரதத்தில் ஏறும்வரை பஸ்ஸில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கவில்லை என்றே கூறலாம்.

ரஞ்சித், உங்கள் மனதிலுள்ள சுமை ஒன்றை இறக்க முயல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களது இலங்கைப் பயணக் கட்டுரையில் சித்தி பற்றி எழுதியவை நினைவுக்கு வருகின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கம் குறைவு என நீங்கள் முன்னர் குறிப்பிட்டதற்கும் சிறுவயதில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கும் தொடர்பிருக்கலாமோ?

தொடருங்கள் சகோதரா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பை வந்தடைந்ததும் பம்பலப்பிட்டி, லொறிஸ் வீதியில் அமைந்திருக்கும் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவுடன் தங்கியிருந்தோம்.எங்களை எப்படியாவது நல்ல பாடசாலைகளில் சேர்த்துவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நான் 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே மட்டக்களப்பில் போர் ஆரம்பித்திருந்தது. அக்கா உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். கன்னியாஸ்த்திரிகள் மடம் அமைந்திருந்த பகுதியில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலையான புனித மரியாள் மகாவித்தியாலயத்தில் அக்காவைச் சேர்த்துவிட்டார். எனக்குப் பாடசாலை கிடைப்பது கடிணமாகவிருந்தது. 1979 ஆம் ஆண்டில் இருந்து 1982 ஆம் ஆண்டுவரை நான் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியில் எனது சிறுபராயத்தைக் கழித்திருந்தேன். ஆகவே அங்கு சென்று, பழைய மாணவனான எனக்கு அனுமதி தருகிறார்களா என்று பார்க்கலாம் என்று ஒரு காலைப்பொழுதில் என்னையும் அழைத்துக்கொண்டு அக்கல்லூரிக்குச் சென்றார் சிஸ்ட்டர் அன்ரா. நான் படித்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் கல்லூரி மிகவும் மாறிப்போயிருந்தது. விசாலமானதாகவும், நவீனமானதாகவும் காணப்பட்டதாக ஒரு பிரமை. கல்லூரி அதிபராகவிருந்த பாதிரியார் ஒருவருடன் என்னை கல்லூரியில் இணைக்க முடியுமா என்று இரைஞ்சுவது போலக் கேட்டுக்கொண்டு நின்றார் அன்ரா. ஆனால் அதிபருக்கோ அதில் சிறிது விருப்பமும் இருக்கவில்லை. கத்தோலிக்கப் பாடசாலையான அக்கல்லூரிக்கு இணையும் மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள். ஆகவே இணையும்போது பாடசாலை வளர்ச்சி நிதிக்கென்று பாடசாலை நிர்வாகம் கேட்கும் பணத்திற்கு அதிகமாகக் கொடுத்து இணைந்துகொள்பவர்கள். அப்படியிருக்கும்போது கன்னியாஸ்த்திரி ஒருவர் கூட்டிவந்திருக்கும் ஏழ்மையான மாணவனை கல்லூரியில் ஏற்றுக்கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. "மன்னிக்க வேண்டும் சிஸ்ட்டர், தமிழ் மொழி வகுப்புக்களில் இடமில்லை, எல்லா வகுப்புக்களும் நிரம்பி வழிகின்றன, நீங்கள் வேறு பாடசாலை பாருங்கள்" என்று கூறினார். "பாதர், அவனுக்குத் தேவையான மேசையையும், கதிரையினையும் நானே வாங்கித் தருகிறேன், ஏதோ ஒரு மூலையில் அவனையும் இருக்க விடுங்கள்" என்று வேண்டத் தொடங்கினார். எனக்கு முன்னாலேயே எனது அன்ரா அப்பாதிரியாரிடம் இரைஞ்சிக் கேட்பதைப் பார்த்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. ஆனால் அந்தப் பாதிரியாரோ விடாப்பிடியாகவே மறுத்துவிட்டார். "உங்களுக்கென்று தனியான தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றனவே, அங்கு சென்று கேட்டுப்பாருங்கள்" என்று கையை விரிக்க மிகுந்த ஏமாற்றத்துடன் அன்ராவின் மடம் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

சரி, இனி என்ன செய்யலாம்? கல்கிஸ்ஸையில் இருக்கும் தோமஸ் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் அல்லது ஜோசப் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் என்று தனக்குத் தெரிந்த கன்னியாஸ்த்திரிகள், பாதிரிகள் ஊடாக அவர் முயன்று பார்த்தார். இவை எல்லாமே பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டே அனுமதியளிப்பார்கள், பணமின்றி எவருமே உள்ளே வர முடியாது, உங்களின் பெறாமகன் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே அனைவரினதும் பதிலாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கத்தோலிக்கப் பாடசாலைகள் கையை விரித்துவிட, மீதமாயிருந்த ஒரே ஆண்கள் தமிழ்ப் பாடசாலை பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மட்டும்தான். ஆனால் அங்கோ வடக்குக் கிழக்கில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த பல தமிழ் மாணவர்கள் அண்மையில் இணைந்திருந்தமையினால், அங்கும் அனுமதி கிடைப்பது கடிணம் என்றே எமக்குத் தோன்றியது. ஆனாலும் மனம் தளராத அன்ரா, இன்னொரு காலைப்பொழுதில் என்னை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அங்கு அதிபராக இருந்தவர் மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று நினைவு. அக்காலை வேளையில் மிகவும் சுருசுருப்பாக பாடசாலைப் பணிகள் நடந்துகொண்டிருக்க, அதிபர் தனது அறைக்கு வரும்வரை அமைதியாகக் காத்திருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் அறைக்கு வந்த அதிபரை நாம் சந்தித்தோம். முதலில் என்னைப்பற்றி வினவிய அதிபர், கல்லூரியில் இணைவதற்கு எனக்குத் தகமை இருக்கின்றதா என்று பரிசோதித்தார். சாதாரணதரப் பெறுபேறுகள் முதற்கொண்டு பல விடயங்கள் குறித்துக் கேட்டார். இறுதியில், "சிஸ்ட்டர், எனது வகுப்புக்களில் மாணவர்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம், அப்படியிருக்க உங்கள் பெறாமகனை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?" என்று உண்மையான வருத்தத்துடன் வினவினார். "அவனுக்கொரு மூலையில் இருக்கவிட்டாலும், இருப்பான், வாங்கு மேசை கூட வேண்டாம், அவன் சமாளிப்பான்" என்று கூறவும், "சரி, உங்கள் விருப்பம்" என்று ஒரு வகுப்பில் இணைத்துவிட்டார். ஆனாலும் நாமும் பணம் கட்டவேண்டி இருந்தது. ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் என்று நினைவு. பீட்டர்ஸ் கல்லூரியில் கேட்ட 15,000 ரூபாய்களுடன் ஒப்பிடும்பொழுது மிகக்குறைவான பணம். சிஸ்ட்டர் அன்ரா கட்டினார், எங்கிருந்து பணம் வந்திருக்குமோ? எனக்குத் தெரியாது.

சரி, பாடசாலை கிடைத்துவிட்டது. இனிமேல் என்னைத் தங்கவைக்க இடம் தேடவேண்டும். அதற்கும் பணம் வேண்டும். யார் தருவார்? இப்படி பல சிந்தனைகள் அன்ராவின் மனதில். அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்துவந்த எனது மாமாக்கள் (அன்ராவின் இளைய சகோதரர்கள்) இருவரிடமும் உதவி கேட்டார். ஒருவர் உதவ முன்வந்தார். மற்றையவர் உதவும் நிலையில் இல்லை என்று கூறப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகளில் இணைத்துவிடும் பணி முடிவடையவே, என்னையும் அக்காவையும் எங்காவது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்று அன்ரா தேடத் தொடங்கினார். இவ்வாறு சில நாட்கள் தேடியதன் பின்னர் "வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதியில் இருக்கும் விசாலமான காணியொன்றில் சிறிது சிறிதாகக் கட்டப்பட்ட வீடுகள் ஒன்றில் வயோதிப மாது ஒருவரின் வீட்டில் இடமிருக்கிறது, அங்குசென்று கேட்டுப்பாருங்கள்" என்று இன்னொரு கன்னியாஸ்த்திரி தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக ஒரு விலாசத்தை எடுத்துத் தந்தார். ஆனால் அவ்வயோதிப மாதினால் இயங்குவது கடிணம் ஆதலால், அவருக்குத் தேவையான பணிகளைச் செய்துகொண்டு, ஆயிரம் ரூபாய்கள் வாடகையாகத் தந்தால் தங்கலாம் என்று கூறப்பட்டது. ஒரு நாள் மாலை வேளையில் அவரைச் சந்திக்கச் சென்றோம். மிகவும் குறுகிய, ஒற்றை அறையைக் கொண்ட குடில் போன்றதொரு வீடு. வீட்டின் முன்கதவினால் உள்ளே நுழையும்போது தலையைக் குனிந்தே செல்லவேண்டும். ஐந்து மீட்டருக்கு இரண்டு மீட்டர் என்ற அளவில் விருந்தினர் மண்டபம். அதன்பின்னால் ஒரு கட்டில் மட்டுமே போடக்கூடிய அறை. அதற்கடுத்தாற்போல் ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக் கூடிய சமயலறை, அதன் பின்னால் கழிவறையும், குளியல் அறையும். மிகவும் இடவசதி குறைந்த வீடு. ஆனால் வேறு இடங்களும் எமது வசதிக்கு ஏற்றாற்போல்க் கிடைக்கவில்லை. வெகு விரைவில் கனடா போவதற்காகக் காத்திருந்த அந்த வயோதிப மாது கேட்ட ஆயிரம் ரூபாய்கள் மற்றைய இடங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது. ஆகவே சிஸ்ட்டர் அன்ரா அதனையே தெரிவு செய்ய, நாமும் ஏற்றுக்கொண்டோம்.

அந்த வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினோம். அக்கா அந்த வயோதிப மாது தங்கிய அறையில் நிலத்தில் பாய் ஒன்றினைப் போட்டுப் படுத்துக்கொள்ள, நானோ வெளியில், விருந்தினர் அறையில் பாயில்ப் படுத்துக்கொள்வேன். காலை எழுந்தவுடன், அம்மாது தனது காலைக்கடன்களைக் கழித்து வெளியே வரும்வரை காத்திருந்து, அவசர அவசரமாக எனது கடன்களை முடித்து, விருந்தினர் அறையிலேயே உடைமாற்றி பாடசாலைக்குச் சென்று வருவேன். எனக்கும் , அந்த வயோதிப மாதிற்கும் அக்காவே சமைக்கத் தொடங்கினாள். காலையில் பெரும்பாலும் பாணுடன் அஸ்ட்ரா மாஜரீன். மத்தியானத்தில் முருகன் கடையில் எடுக்கும் மரக்கறிச் சாப்பாட்டை நானும் அக்கவும் பகிர்ந்துகொள்வோம். சாப்பாட்டுப் பாசலில் பெரும்பகுதியை எனக்குத் தந்துவிட்டு அக்கா அரைவயிறு, கால்வயிறு என்று இருந்துவிடுவாள், பாவம். இரவில் ஏதாவது செய்வாள், முட்டையை அவித்து, உப்பும் மிளகும் சேர்த்துக் குழைத்து, பாணிற்குள் வைத்து வெட்டித் தருவாள், எனக்கு அதுவே அமிர்தமாக இருக்கும். அதேபோல அப்பெண்மணி கேட்கும் உணவுகளை அக்கா செய்துகொடுப்பாள்.

எங்களைக் கொழும்பிற்குப் பாதுகாப்பாகக் கூட்டிவந்து, பாடசாலைகள் தேடி, கெஞ்சி மன்றாடி, அனுமதியெடுத்து, எமது செலவுகளுக்கு ஒழுங்குகள் செய்து, நாம் தங்குவதற்கும் இடம்தேடிக்கொடுத்து, நாம் இனிமேல் பாதுகாப்பாக இருப்போம் என்கிற நம்பிக்கையுடன் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பினார் அன்ரா.

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தையில் வாழ்ந்த காலம் முதல், நான் பல்கலைக்கழகம் செல்லும் காலம்வரை சிஸ்ட்டர் அன்ராவின் முயற்சியினால் எனக்கும் அக்காவிற்குமான செலவுகளுக்கு அவுஸ்த்திரேலியாவில் இருந்து எனது மாமாவே பணம் அனுப்பி வந்தார். சிலவேளைகளில் எமக்கு உதவுவது குறித்து கடுமையான விமர்சனங்கள் அன்ரா மீது சில உறவினர்களால் முன்வைக்கப்பட்டன. "உவன் படிக்கப்போறதில்லை, ஏன் சும்மா மினக்கெடுகிறாய்?" என்றெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிஸ்ட்டர் அன்ராவோ எதையுமே சட்டை செய்யவில்லை. எங்கள் இருவரையும் எப்படியாவது படிப்பித்து, கரையேற்றிவிட வேண்டும் என்பதே அவருக்கு இருந்த நோக்கமெல்லாம். 1994 ஆம் ஆண்டு தம்பி ஒரு முறை எங்களைப் பார்க்க கொழும்பிற்கு வந்திருந்தான். அப்போது நாங்கள் கிருலப்பனையில் தங்கியிருந்தோம். எங்களைக் கண்டவுடன் எங்களுடனேயே தங்கிவிடலாமா என்று அவன் அன்ராவைக் கேட்டான். அவனையும் தகப்பனார் அடித்துத் துரத்திவிட்டிருக்க, பாதிரிமார்களாகப் படிக்கும் கல்லூரியொன்றில் அவனையும் அன்ரா சேர்த்துவிட்டிருந்தார். அதன் விடுமுறை ஒன்றின்போதே எங்களைப் பார்க்க வந்திருந்தான். சிஸ்ட்டர் அன்ராவே அவனை எம்மிடம் கூட்டி வந்திருந்தார். அவனையும் எங்களுடன் தங்கவைக்க முடியுமா என்று அன்ரா கேட்டபோது அக்காலப்பகுதியில் எம்முடன் தங்கியிருந்த இன்னுமொரு சித்தியும், அம்மம்மாவும், 'இப்பவே உவை ரெண்டுபேரையும் வைச்சுப் பாக்கேலாமக் கிடக்கு, அதுக்குள்ள உவனையும் கொண்டு வந்துட்டியோ?" என்று கூறி முற்றாக மறுத்துவிட்டார்கள். மனமுடைந்து யாழ்ப்பாணம் திரும்பிய தம்பி, சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையின்போது கரவெட்டிக்கு இடம்பெயர்ந்து, அங்கிருந்து இயக்கத்தில் சென்று இணைந்துகொண்டான். ஐந்து வருட சேவையின்பின்னர் 2000 இல் மாவீரராகியும் போனான்.

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையின் பின்னர் சிஸ்ட்டர் அன்ரா வன்னிக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்தபோதிலும் தவறாமல் எனக்குக் கடிதம் எழுதுவதோடு, பிறந்தநாள், கிறிஸ்மஸ் காலங்கள் என்று வர்ணக் காட்டுடன் வாழ்த்துக்கள் அவரிடமிருந்து வரும். ஆரம்பத்தில் தொடர்ச்சியாக அவருக்குப் பதில் எழுதிவந்த நான் சிறிது சிறிதாக பதில் எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன், காரணம் ஏதும் இன்றி. ஆனாலும் அவர் மாறவில்லை, "உனக்கு நேரம் கிடைக்காதென்று தெரியும், கிடைக்கும்போது நீ எழுது, ஒன்றும் அவசரமில்லை " என்று பதில் வரும். தனது அக்காவின் பிள்ளைகளைத் தனது சொந்தப்பிள்ளைகளாகவே நடத்திவந்ததினால் உருவாகிய பாசம் அவரை அலைக்கழித்திருக்கும்.

வன்னியில் பல தொண்டு நிறுவனங்களுடன் அவர் சேர்ந்து இயங்கிவந்தார். யுத்தத்தினால் உளநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது, அவ்வாறு பராமரிப்பவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவது, யுத்தத்தினால் உறவுகளை இழந்த பெண்கள், பிள்ளைகளை அழைத்துவந்து கற்பிப்பது, தொழிற்பயிற்சி வழங்குவது என்று சமூகத்துடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டார். தாயக விடுதலையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர் புலிகளையும், தலைவரையும் வெகுவாக நம்பினார். பொடியள் இருக்குமட்டும் எனக்குப் பயமில்லை என்று அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார். திருக்குடும்ப கன்னியர் மடத்தினால் அவருக்கென்று மோட்டார் உந்துருளி ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அதில் வன்னிமுழுதும் அவர் பயணித்து தேவைப்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்துவந்தார். 2002 ஆம் ஆண்டு வன்னிக்கான ஏ - 9 பாதை திறக்கும் நிகழ்வில் புலிகளின் தளபதிகளின் பின்னால் அன்ராவும் நிற்கும் காணொளியொன்று இன்னமும் இணையத் தளத்தில் இருக்கிறது. பிற்காலத்தில் புலிகளின் மருத்துவப் பிரிவில் இயங்கிய போராளிகளில் சிலருக்கு மனநல பயிற்சிகளை அவர் வழங்கியிருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2002 இல் சிட்னிக்கு குடிபெயர்ந்த காலத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டுவரை நான் அவரைச் சென்று பார்க்கவில்லை. அவரிடமிருந்து வரும் கடிதங்களுக்கோ அல்லது மின்னஞ்சல்களுக்கோ எப்போதாவது பதில் எழுதுவதுடன் அவருக்கான எனது நன்றிக்கடன் முடிந்துவிடும். எத்தனையோ முறை என்னுடன் தொலைபேசியில் பேச அவர் முயன்றிருக்கிறார்.எக்காரணமும் இன்றி அவருடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை தவறவிட்டிருக்கிறேன். சிலவேளை அவர் எனக்காகச் செய்த தியாகங்கள், பலரிடம் அவர் பட்ட அவமானங்கள் குறித்து நாம் பார்க்கத் தவறியிருக்கலாம். ஒரு கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதும், பெற்றோரைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசித்து, எனது வாழ்வை நெறிப்படுத்தி இன்றுவரை வாழும் பாக்கியத்தை அவர் ஏற்படுத்தித் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார், இது எனக்கு இன்றுவரை புரியவில்லை.

நீண்ட 16 வருடங்களுக்குப் பின்னர் அவரை 2018 ஆம் ஆண்டு சித்திரையில் யாழ்ப்பாணத்தில் சென்று சந்தித்தேன். நான் மனதில் பதிந்து வைத்திருந்த சிஸ்ட்டர் அன்ராவின் உருவத்திற்கும் அன்று நான் பார்த்த அன்ராவிற்கும் இடையே எத்தனை வேறுபாடு? பம்பரம் போலச் சுழன்று, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்து, தன்னிடம் உதவிவேண்டி வருவோருக்கு இல்லையென்று சொல்லாது, முயன்றவரை உதவிடும் சிஸ்ட்டர் அன்ரா பல நினைவுகளைத் தொலைத்து, மனதளவிலும், உடலளவிலும் நலிந்து போயிருந்தார். ஆனாலும், முகத்தில் மாறாத அதே புன்னகையும், அன்பும், விகடமும் சேர்த்த பேச்சும் அவரை விட்டு அகலவில்லை.

மீண்டும் அவரை 2023 கார்த்திகையில் சென்று சந்தித்தேன். எப்படி இருக்கிறீர்கள் அன்ரா என்று கேட்டபோது, "83 வயதில் ஒருவர் எப்படி இருக்கமுடியுமோ, அப்படி இருக்கிறேன்" என்று கூறினார். வெகுவாக இளைத்திருந்தார். சக்கர நாற்காலியில் வைத்து அவரைப் பராமரித்துக்கொண்டிருந்தார்கள். சுமார் 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் தொடர்ந்து அமர்ந்திருந்து பேசமுடியாது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஆனாலும் அவரைக் கண்டதில் சந்தோசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு.

அவரது மரண‌ச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன்.

அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது.

எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திற‌மைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

Edited by ரஞ்சித்
தொலைபேசியில்

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே மனம் நெகிழ்ந்து விட்டது ......... நாங்கள் மனிதரைப் பற்றி யோசிக்கும்போது சிலர் தெய்வமாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள் . ........ உங்களது அன்ரா எப்போதும் உங்களுக்குத் துணையாய் இருப்பார் . ......... !

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் அவர்களே, எவளவு கடுமைகளைக் கடந்து வந்திருக்கிறீர்கள். மனம் கரைந்துபோகிறது. உறவுகளைக் கடந்த தூய உள்ளங்களால் இந்த உலகு நகர்வதாக நான் சிந்திப்பதுண்டு. அப்படியான ஒருவராக உங்கள் அன்ரா இருக்கிறார். உங்களோடும், அவர் உதவிய பலரோடும் என்றும் நிலையாக வாழ்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மாவின் நல்ல ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.🙏கேள்விகள் கேட்டு இன்னும் உங்களை மனக்கஸ்ரப்படுத்துவதை விரும்பவில்லை.மனதை திடமாக வைத்திருங்கள்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் நல்ல ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் பகிர்ந்த சொந்த கதை முன்பு வாசித்துள்ளேன். சில விடயங்கள் கிரகிப்பதற்கு கடினமானவை. இப்படியும் நடக்குமா என எண்ண தோன்றும் அதேசமயம் தந்தையார் என்ன மன/உள பாதிப்பு அடைந்தாரோ எனவும் சிந்தித்தேன். உலகில் எமது பெற்றோரின் அன்புதான் முதன்மையானது. அவர்கள் அரவணைப்பிற்கு பின்னர்தான் மிகுதி எல்லாம் வருகின்றது. ஆனால் முதன்மை நிலை அன்பு/அரவணைப்பு மறுக்கப்படும்போது ஒருவரின் வாழ்க்கையே சூனியமாகிவிடும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது. மிகவும் கடினமான, கரடு முரடான பாதையை கடந்து வந்துள்ளீர்கள். உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பரிசுத்த ஆத்துமன் அமைதியில் இளைப்பாறட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2025 at 19:39, ரஞ்சித் said:

காலையில் பெரும்பாலும் பாணுடன் அஸ்ட்ரா மாஜரீன். மத்தியானத்தில் முருகன் கடையில் எடுக்கும் மரக்கறிச் சாப்பாட்டை நானும் அக்கவும் பகிர்ந்துகொள்வோம். சாப்பாட்டுப் பாசலில் பெரும்பகுதியை எனக்குத் தந்துவிட்டு அக்கா அரைவயிறு, கால்வயிறு என்று இருந்துவிடுவாள்

உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை உங்கள் அன்ராவை நான் அறிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2025 at 15:01, satan said:

ஒருவேளை உங்கள் அன்ராவை நான் அறிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.

அப்படியா? கூறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2025 at 04:27, ரஞ்சித் said:

கடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு.

அவரது மரண‌ச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன்.

அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது.

எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திற‌மைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

வாசிக்க கடினமான பதிவு. சில தகப்பன்மாரின் கடுமையான போக்குகளால் பிள்ளைகளின், குறிப்பாக மகன் மாரின் வாழ்க்கைகள் அழிந்து போகின்றன.

எனது நெருங்கிய நண்பன்/ வகுப்புத் தோழன். அவனது அப்பா நீதிமன்றத்தில் வேலை செய்பவர், கொஞ்சம் கடுமையான போக்குடையவர். அவனது அண்ணா உயர்தரம் படிக்கும் போது ஒரு பிள்ளையை காதலிக்க தொடங்கினார். அந்த அண்ணா படிப்பிலே மிகவும் திறமைசாலி. மருத்துவம் போகக்கூடியளவு கெட்டிக்காரன். ஒருநாள் தந்தை இந்தக் காதல் விவகாரத்தால் அவருக்கு அடித்து விட்டார். அந்த அண்ணாவும் கோவத்தில் இயக்கத்திற்கு போய்விட்டார். இறுதியாக அவர் வீரச்சாவு. எனது நண்பனும் கெட்டிக்காரன், ஆனால் உயர்தரத்தில் பல்கலை போக முடியவில்லை. இறுதியாக வெளிநாடு போய்விட்டான். அந்த தகப்பனின் நடவடிக்கையால் இறுதியில் கிடைத்த பலன் ஒன்றுமில்லை. காதல், குழப்படி, குடி, புகை தாண்டிதான் அனைவரும் வளரவேண்டும்.

எனக்கு கிடைத்த அப்பா ஒரு வரம். நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள். எங்களை அவர் டேய் என்று கூட ஒருநாளும் கூப்பிட்டது கிடையாது. அடித்திருக்கிறார், ஆனால் அது காரணத்தோடான அடி. இண்டைக்கும் எனக்கு ஏதாவது ஆலோசனை தேவை என்றால் முதலில் கேட்பது அப்பாவைத்தான். இன்னும் இருபது வருடங்களின் பின்னர் அவர் போய்விடுவார். அந்த வெற்றிடத்தை நினைக்கக் கூட முடியவில்லை.

உங்கள் அன்ராவின் இறுதி நிகழ்வுக்கு நீங்கள் கண்டிப்பாக போயிருக்க வேண்டும். உங்கள் வாழ்விற்கு ஒளியேற்றி வைத்த அந்த தெய்வத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கக் கூடிய இறுதி மரியாதை அது. அது உங்களுக்கும் ஒரு முடிவினை, ஆத்ம திருப்தியினை கொடுத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

அப்படியா? கூறுங்கள்.

ஒரு கன்னியாஸ்திரி கரவெட்டியை சேர்ந்தவர். அவரும் அந்நேரம் மக்களோடு மக்களாக மக்களுக்காக சேவை செய்தவர். இன்னொருவர் சிவந்தமேனி அழகான முகத்தோற்றமுடையவர் பெயரை மறந்துவிட்டேன் இவர்கள் இருவரும் எனக்கு அநேகமாக தெரிந்தவர்கள் இதிலொருவர் அல்லது அவர்கள் ஒருவருமே இல்லாமல் வேறொருவராக இருக்கலாம் உங்கள் அன்ரா. அவர் யாராக இருந்தாலும், இறைவனில் ஆறுதலடைவாராக!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.