Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுச்சப்பாத்து..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சப்பாத்து...

(இந்தவார ஒருபேப்பரிற்காக எழுதியது)

தீ,பெருந்தீ,விண்ணைமுட்டும் வேட்கையுடன் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது,மனிதர்களை எரித்துஎரித்து எஞ்சிய கரித்துண்டுகள் குவிந்து அந்த இடம் மேடாகி இருந்தது.அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் அந்த சிதையைத்தான் தீ விரைவாகத் தின்றுதீர்த்துவிடவேண்டும் என்ற பெருஞ்சங்கல்ப்பத்துடன் எரித்துக்கொண்டிருந்தது.மாலை நேரத்து மெல்லிருளில் அந்த மயானப் பிரதேசமெங்கினும் அத்தீயின் ஒளியில் கரைந்து செந்நிறமாக உருகிக்கொண்டிருந்தது.சனசந்தடியற்ற அந்தச்சுடலை ஏரியாவில் பினமெரியும் சிதையை சற்றுத்தொலைவில் இருந்து வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி.தீ எழுந்து வானத்தை தொட்டுவிட எத்தனித்துக்கொண்டிருந்தது.சுடலையை அடுத்திருந்த வயல்வெளியும் வானமும் சந்திக்கும் புள்ளியில் செந்நிற நெருப்புக்கோழமாக கதிரவன் கீழிறங்கிக்கொண்டிருந்தான்.அங்கும் நெருப்பு இங்கும் நெருப்பு.இந்த உலகமே இந்த நெருப்பில்தானே தொடங்கியது.இந்த நெருப்புத்தானே இப்பொழுதும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.கடைசியில் அந்த நெருப்பே தின்றுவிடுகிறது. ஆடிக்கொண்டிருக்கும் அந்த தீ நாக்குகளின் இடையே அவன் தன்னைப்பார்த்து நடனமாடுவதைப்போல ஒரு பிரமையாக இருந்தது கோபிக்கு.கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்க்கிறான்.இன்னமும் இன்னமும் வேகமாக அவன் தன்னைப்பார்த்து ஆடுவதுபோல இருந்தது கோபிக்கு.நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது அவனுக்கு.இருள் இன்னமும் வேகமாக இறங்கத்தொடங்கியிருந்தது.யாரும் அற்ற அந்த இடத்தில் அவனும் தானும் மட்டுமே இருப்பதுபோல் இருந்தது கோபிக்கு.மெல்லக்கால்களை பின்னோக்கி எடுத்து வைத்து அந்த இடத்தை விட்டு அகலத்தொடங்கினான்.நினைவுக்குமிழிகள் மெல்லமெல்ல மேலெழுந்து வந்து உடைந்துவழியத்தொடங்கின.

***

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்கள்.இறுதித்தவணை,இதைத்தாண்டிவிட்டால் பதினோராம் வகுப்பு.அது முடிந்தால் அவர்கள் பெரியவர்கள்.ஜீன்ஸ் போடத்தொடங்கிவிடுவார்கள்.அதை நினைத்து இப்பொழுதே மனதளவில் அரைவாசி பெரியவர்களாக தங்களைக்கற்பனை செய்துகொண்டு திரிந்தார்கள். அன்று வியாழக்கிழமை.காலைப் பிரார்த்தனை முடிந்ததும் வகுப்புக்கள் ஆரம்பமாகிவிட்டிருந்தன.இந்தத் தவணை கோபி தான் வகுப்புத் தலைவன்.ஒவ்வொரு நாளும் முதல்ப்பாடம் கரும்பலகையின் வலதுபக்க மேல்மூலையில் வகுப்புமாணவர்களின் மொத்த எண்ணிக்கையையும் வரவையும் வகுப்புத்தலைவர் எழுதவேண்டும்.கோபி மாணவர்களை எண்ணி வரவை எழுதிக்கொண்டிருந்தபோது சமூக்கக்கல்வி ஆசிரியர் வகுப்பிற்க்குள் நுழைந்து கொண்டிருந்தார். வியாழக்கிழமைகளில் சமூகக்கல்வி வாத்தியின் பாடம்தான் முதலாவது.இவருக்கு வகுப்பு பொடியள் வைத்த பெயர் "கோல்புறுக் சீர்திருத்தம்".பத்தாம் வகுப்புத்தொடங்கியபோது இவர் ஆரம்பித்த "கோல்புறுக் சீர்திருத்தம்"பற்றிய பாடம்.இப்பொழுது மூன்றாவது தவணை முடிவிலும் தொடர்ந்து கொண்டிருந்தது.இவரின் பாடத்திற்கென்று பிரத்தியேகமாக கோபி ஒரு மைமுடிந்த பேனையையும் நாற்பது ஒற்ரைக்கொப்பி ஒன்றையும் கொண்டுசெல்வான்.அவர் வாசிக்கத்தொடங்கியதும் அவன் மை முடிந்த பேனையால் எழுதிக்கொண்டிருப்பேன்.அன்றும் அப்படித்தான் எழுதுவதுபோல் எழுதாமல் இருந்தபோது வாத்தியார் மேசையில் இருந்த "டஸ்றரை"எடுத்து கோபியை நோக்கி குறிபார்த்துக்கொண்டிருந்தார்.கோபி இருந்தது கடைசிக்கு முதல்மேசை.எந்தவிதத்திலும் அவனின் திருகுதாளத்தை கரும்பலகைக்குப் பக்கத்தில் நிற்கும் வாத்தியார் காண்பதற்க்கு சாத்தியமில்லை.அவனுக்கு குழப்பமாக இருந்தது. வாத்தியார் வீசிய "டஸ்ற்றர்" அவனைத்தாக்கவில்லை.பக்கத்தில் சிவா புத்தகப்பையை மேசையில் வைத்து அதன்மேல் இரு கைகளையும் அணையாக வைத்து பாதி முகத்தை கைகளுக்குள் புதைத்தும் பாதி முகத்தை வெளிக்காட்டியும் சயனத்தில் இருந்தான்.அவன் பாதிமுகம் முழுவதும் சோக்குத்துகள்களால் வெண்ணிறமாக மாறி இருந்தது.அவன் மடியில் வாத்தியார் எறிந்த "டஸ்றர்"கிடந்தது.வகுப்பு ஒருமுறை கொல்லென்று சிரித்து பின்னர் வாத்தியாரின் முறைப்பில் அடங்கியது.சிவா எதுவும் நடக்காததுபோல் முகத்தில் இருந்த சோக்குத்துகள்களை தட்டிவிட்டவாறு எழுந்தான்.அவன் கண்கள் இரண்டும் நித்திரைத்தூக்கத்தில் செங்கட்டிபோல் சிவந்திருந்தன.அவன் சமூகக்கல்வி வாத்தியாரிடம் எறிவாங்குவது இத்துடன் நான்காவது அல்லது ஜந்தாவது தடவையாக இருக்கவேண்டும்.வழமையாக சமூகக்கல்வி வாத்தியாரின் பாடம் என்றால் அவனுக்குத்தூக்கம் வந்துவிடும்.அவரின் வாசிப்பு அவனுக்கு நல்ல தாலாட்டு.அதனால்தான் அன்று முதல்ப்பாடமே அவன் தன்னையறியாமல் தூக்கிப்போய்விட்டிருந்தான்.

***

"நாளைக்குத்தான் கடைசிநாள்,எல்லாருக்கும் ஞாபகமிருக்குத்தான..?"நித்திரை கொண்டதிற்க்கு தண்டனையாக சிவாவை எழுந்து நிற்க்க வைத்துவிட்டு வாசிக்கத்தொடங்கிய வாத்தியார் இடையில் நிறுத்தி எல்லோரையும் பார்த்துக்கேட்டவாறு ஒரு வன்மப்புன்னகையை வீசிவிட்டு தன் "கோல்புறுக் சீர்திருத்தத்தை" தொடர்ந்துகொண்டிருந்தார்.ஒரு கிழமைக்கு முன்னர் கடைசித்திகதியும் கொடுத்து மாணவர்கள் எல்லோரும் சப்பாத்து அணிந்துதான் இனிமேல் வகுப்புக்கு வரவேண்டும் என்று வாத்தியார் அறிவித்திருந்தார்.கோபியும் வீட்டில் சண்டைபிடித்து கறுப்பு நிறத்தில் ஒரு சோடி சப்பாத்துக்களும் அதை பராமரிக்க "பொலிஸிங்கும்" வாங்கியிருந்தான்.மற்றையவர்களும் அப்படித்தான்.வீட்டில் நச்சரிப்புக்கொடுத்து வாங்கிவைத்திருந்தார்கள்.ஒரு சிலர் இப்பொழுதே போடத்தொடங்கியிருந்தார்கள்.சிலர் கடைசித்திகதி முடியட்டும் அதுவரை காத்தோட்டமாகத்திரிவம் என்று செருப்புடன் வந்திருந்தார்கள். பாவம் சிவாமட்டும்தான் இன்னமும் வாங்கியிருக்கவில்லை.அவன் வீட்டில் மிகவும் கஸ்ரம்.தந்தையின் தோட்டத்தை நம்பித்தான் அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது."இன்னும் ஒரு இரண்டு நாள் பொறு,பூசனிக்காய்கள் முற்றிவிடும் வித்துச்சப்பாத்துக்கள் வாங்கித்தருவதாக தந்தைகூறியதாகவும் அதற்கிடையில் வாத்தி சொன்ன காலக்கெடு முடிந்துவிடும் என்ன தண்டனை தரப்போகிறார்களோ தெரியவில்லை என்றும் அன்றுகாலையில்தான் கோபியிடம் சொல்லிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தான்.வாத்தியார் திரும்பவும் அதை நினைவூட்டியபோது கவலைக்கோடுகள் படர்ந்து சிவாவின் முகம் வாடிப்போய் விட்டிருந்ததை கோபி அவதானித்திருந்தான்.

***

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை என்பதால் பிரார்த்தனை மண்டபத்திற்க்குப் போவதற்க்காக அனைவரும் வகுப்பிற்க்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்கள்.வாத்தியார் ஒன்றன்பின் ஒன்றாக லைனில் நின்ற எல்லோரது கால்களையும் பார்த்தவாறு வந்துகொண்டிருந்தார்.கையில் கோபி நேற்றுமாலை வெட்டிக்காயவைத்து கொண்டுவந்திருந்த பூவரசந்தடிப் பிரம்பு பயமுறுத்திக்கொண்டிருந்தது.புதிய சப்பாத்துக்களைப்போட்டிருந்த மகிழ்ச்சியில் எல்லோரும் மிடுக்காக நின்றுகொண்டிருந்தார்கள்.பாவம் சிவாமட்டும் வரிசையில் கடைசியில் காலில் செருப்புடன் எல்லோருக்கும் பின்னால் மறைந்துமறைந்து பயத்திலும் வெட்க்கத்திலும் நெளிந்துகொண்டிருந்தான்.கோபியின் வகுப்பு மட்டுமன்றி பக்கத்து வகுப்புக்களும் பிரார்த்தனை மண்டபத்திற்க்குப் போவதற்க்காக வெளியில் வந்து வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.அத்தனைபேரின் கால்களிலும் புதிய சப்பாத்துக்கள் பளபளத்துக்கொண்டிருந்தன.எல்லோரின் சப்பாத்துக்களும் சிவாவின் செருப்பை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தன வாத்தியார் கடைசி வரிசையை நெருங்கநெருங்க எல்லோரின் கண்களும் கேள்விக்குறியுடன் சிவாமேல் நிலைகுத்தியிருந்தன."பள்ளிக்கூட மானத்தை வாங்கிறதுக்கெண்டே வாச்சிருக்குதுவள்,படிப்பறிவும் ஏறாது நித்திரை கொள்ளுறதுக்கெண்டே இஞ்ச வாறதுவள்,உன்னையெல்லாம் ஆர் இந்தப்பள்ளிக்கூடத்திலை சேத்தது..?"வாத்தி கத்திக்கொண்டே சிவாவின் கையைப்பிடித்து தரதரவென்று இழுத்துகொண்டுபோய் மைதானத்தில வைத்து அடிஅடியென்று அடித்துத்துவைத்துக்கொண்டிருந்தார்.பூவரசந்தடி பிய்ந்து தும்பாகிக்கொண்டிருந்தது.பாடசாலை முழுவதும் அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.கோபிக்கு தான் கொண்டுவந்திருந்த பூவரசந்தடியால் சிவாவுக்கு விழுந்த ஒவ்வொரு அடியும் தன்மேல் விழுந்து அவன் உடலெங்கும் வலிப்பதுபோலிருந்தது. நடு மைதானத்தில் அவனை நிற்க்கவைத்துவிட்டு மற்றவர்களையெல்லாம் பிராத்தனை மண்டபத்திற்க்கு அனுப்பிவிட்டனர்.அன்று மதிய இடைவேளை வரை அவனை மைதானத்தில் நிற்க்கவைத்துவிட்டு வீட்டுக்குப்போய் சப்பாத்து வாங்கிப்போட்டுக்கொண்டு பாடசாலைக்கு வரும்படி பாதியிலேயே வீட்டிற்க்கு அனுப்பிவிட்டார் வாத்தியார்.கோபிக்கு எந்தப்பாடமும் மனதில் ஏறவில்லை.சிவாவின் சிவந்து வீங்கியிருந்த கால்தழும்புகளும் வெட்கத்திலும் அவமானத்திலும் கூனிப்போயிருந்த அவன் முகமுமே அன்று முழுவதும் அவன் மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

***

ஞாயிற்றுக்கிழமை சனநடமாட்டம் குறைந்து அந்த பிரதான வீதி வெறித்துப்போயிருந்தது."டேய் ரெடியாகுடா" றோட்டைப் பார்த்துக்கொண்டிருந்த சுஜீவன் கத்தினான்.அந்த வெறுங்காணிக்குள் வளர்ந்திருந்த குட்டைப்பற்றைக்குப் பின்னால் கையில் றிமோல்ட்டுடன் வீதியை அவதானித்துக் கொண்டிருந்த கோபி சுஜிவனின் எச்சரிக்கையுடன் தயார் நிலைக்கு வந்தான்.ஆமியின் துருப்புக்காவி ஒன்று ஆனையிறவுப்பக்கமாக வேகமாக வந்து கொண்டிருந்தது."ஒன்று,இரண்டு,மூன்று" கோபி மனதிற்க்குள் என்னவும் துருப்புக்காவி அவனைக்கடக்கவும் சரியாக இருந்தது.தன் விரல்கள் றிமோல்ட்கொன்றோலின் பட்டன்களை அழுத்திவிட்டன என்பதை கோபியின் மூளை உணர்வதற்க்கிடையில் அவன் பொருத்தியிருந்த கிளைமோர் பெருஞ்சத்தத்துடன் வெடித்தது.மகே அம்மே சத்தங்களுடன் ஜயோ அம்மா என்ற ஒரு சத்தமும் கேட்டது.அப்பொழுதுதான் கிளைவீதியால் மெயின் றோட்டுக்கேறிய யாரோ ஒருத்தரை சைக்கிலுடன் தூக்கி வேலிக்குள் எறிந்துவிட்டிருந்தது கிளைமோர். துருப்புக்காவி எரிந்தபடி றெயில்றோட்டைக் கடந்து தாறுமாறாக ஓடி அந்தப்பக்கம் இருந்த வீட்டு மதில் ஒன்றில் மோதி ஓய்வுக்கு வந்தது.தயாராக நின்ற சுஜிவன் மிதிவண்டியை எடுக்க எதையும் பார்க்க நேரமின்றி திரும்பிப்பார்க்காமல் வேகமாக ஓடிவந்த கோபி மிதிவண்டியின் பின் இருக்கையில் ஏறிக்கொண்டான்.சுஜிவன் மிதிவண்டியை கண்ணண் இருந்த வீட்டுப்பக்கமாக வேகமாகச்செலுத்தினான்.கண்ணண் ஆமிக்கட்டுப்பாட்டுக்குள் செயற்பட்டுக்கொண்டிருந்த இயக்க உறுப்பினன்.அவனுக்கு தானே நேராகக் கொண்டுசென்று குண்டுகளை வைப்பதைவிட நம்பிக்கையான பள்ளிக்கூடப்பொடியளிடம் கொடுத்துவிட்டுச் செய்விப்பது இலகுவானதாக இருந்தது.ஆமியின் சோதனைச் சாவடிகளில் கண்ணண் அகப்படுவதற்க்கு சந்தர்ப்பம் அதிகமிருந்தது.அதனாலேயே கண்ணண் நம்பிக்கையான பள்ளிக்கூடப் பொடியளைக்கொண்டு ஆமிக்கட்டுப்பாட்டுக்குள் பலதாக்குதல்களைச் செய்வித்துக்கொண்டிருந்தான்.பொடியளும் பிஸ்ரல்,குண்டுகளை இடுப்பில கட்டிக்கொண்டுபோய் சகபொடியளையும் பிடிக்காத ஆட்க்களையும் வெருட்டலாம் எண்ட புழுகில கண்ணணின் காலைச்சுற்றிக்கொண்டு திரிந்தார்கள். அப்படிக் கண்ணனிடம் நட்பானவர்கள்தான் கோபியும்,சுஜிவனும்.கண்ணனுக்கு யார் எறிகிறார்கள்,யார் வெடிக்க வெடிக்க வைக்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.ராணுவத்திற்க்கு இழப்பேற்படவேண்டும் என்பதே அவனது குறிக்கோளாக இருந்தது.ஒவ்வொரு தாக்குதலுக்கும் கண்ணணுக்குத்தான் வன்னியில் றாங் கூடிக்கொண்டிருந்தது.கண்ணணிடம் தாக்குதலைப்பற்றிய தகவலைச் சொல்லிவிட்டு மூச்சிரைக்க வீடுவந்த கோபிக்கு கிளைமோர் அடி எப்படி என்று அறியவேணும் எண்ட ஆவலே மண்டையைக்குடைந்துகொண்டிருந்தது.யாரிடமும் விசாரிக்கப் பயமாக இருந்தது.றேடியோவை முறுக்கிமுறுக்கி எல்லா ஸ்ரேசனையும் பிடித்துப்பார்த்தான்.எதிலுமே சம்பவத்தைப்பற்றி எந்தவித தகவலும் வரவில்லை.சரி விடியட்டும் நியூஸ்பேப்பர் பாத்து அறிவம் என்று நினைத்தபடி தூங்கிப்போனான்.

***

அடுத்தநாள் கோபி பாடசாலை வந்தபோது அந்தச்செய்தி பாடசாலை எங்கும் தீ போல் பரவி இருந்தது.நேற்றைய சம்பவத்தில் அகப்பட்டு இறந்த பொதுமகன் நம்ம சிவாதானாம்.யார் சொன்னதென்று கூடப்பார்க்கவில்லை காதில்க் கேட்டதும் கோபிக்கு தலை விறைத்து கால்கள் தள்ளாடுவதுபோல் இருந்தது.புத்தகப்பையை வகுப்பில் எறிந்துவிட்டு சிவா வீடு நோக்கி விரைந்தான்.ஏற்கனவே வகுப்புப் பொடியளால் சிவா வீடு நிறைந்திருந்தது.அவன் அண்ணண்தான் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.சிவா நேற்று மதியம் முற்றிப்பழுத்த பூசனிக்காய்களை ஒரு சாக்கில்போட்டுக் கட்டி எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போயிருந்தானாம்.அந்தச் சீசன் சந்தையில் பூசணிக்காய் நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருந்தது."இண்டைக்கு நல்ல விலைக்கு பூசணிக்காய்களை வித்துப்போட்டு சப்பாத்தும் வாங்கிக்கொண்டு மிச்சக்காசுக்கு வீட்டுக்குத்தேவையான சாமான்களும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு வாறன் எண்டு அம்மாவிடம் சொல்லிப்போட்டுப்போனவன் அந்தா கிடக்கிறான் போய்ப்பாராடா என்று அவனைக்கிடத்தியிருந்த பக்கமாக கைகளைக்காட்டி அழுதுகொண்டிருந்தான் அண்ணன்.குளிப்பாட்டி சிவாவைக் கிடத்தியிருந்தார்கள்.சமூகக்கல்வி வாத்தியார் கால்மாட்டில் நின்று குலுங்கிக்குலுங்கி அழுதுகொண்டிருந்தார்.சிவாவின் கால்களில் அவன் வாங்கிவந்திருந்த புதிய சப்பாத்துக்கள் பளபளத்துக்கொண்டிருந்தன.

***

சிவா எரிந்துகொண்டிருந்தான்.நேற்றுவரைக்கும் அவனுடன் பயணம்செய்த பள்ளித்தோழனை சிதை எரித்துக்கொண்டிருந்தது.எரிந்துகொண்டிருக்கும் தீ நாக்குகளிடையே அவன் எழுந்துவந்து தன்சாவிற்க்கு நீதிகேட்பதுபோலிருந்தது கோபிக்கு.தொடர்ந்து அங்கு நிற்க்க முடியாமல் வீடுநோக்கி நடந்தான்."ஆமிக்குச் செம அடியாம்,நல்ல இழப்பாம்,வாகனத்தில் வந்த ஒருத்தரும் மிஞ்சவில்லையாம்"ஊருக்குள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் நேற்றைய கிளைமோர் அடியைப்பற்றியே பேசிக்கொண்டனர்.சிவாவை எல்லோரும் மறந்துபோய் விட்டிருந்தனர். "சண்டையெண்டால் சனம் சாகிறது சகஜம்தான" தன்னைத்தானே சமாதானம் செய்தபடி வீட்டிற்க்குள் நுழைந்த கோபியை வாசலில் அவன் வாங்கிவைத்திருந்த புதுச்சப்பாத்துக்கள் வரவேற்றன....

வார்த்தைகள் இல்லை சுபேஸ். மிகவும் நளினமாக இழைத்திருக்கின்றீர்கள் . ஆனால் , சிவா இயக்கத்தில் சேர்ந்ததிற்கான பின்புலத்தை இன்னும் ஆழ இறுக்கியிருக்கலாம் . மிகவும் நேர்த்தியாக இருக்கின்றது . வாழ்த்துக்கள் சுபேஸ் :) :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

சுபாஸ் நல்தோர் ஆக்கம்.

ஏழ்மை, இயலாமை, அவமானம், போர்ச்சூழலுக்குள்ளான நித்திய வாழ்வு..... இந்தக்கதையைப்போன்று எத்தனையே குடும்பங்களை சின்னாபின்னப்படுத்தியிருக்கும். உள்ளங்கள் மரத்துப்போய் மீள பார்க்கும் வலுவற்று இன்றைய வாழ்வுக்குள்ளாக ஏங்கவேண்டிய யதார்த்தம் கண்முன்னே விரிந்து கிடக்கும்பொழுதுகளில்.... உங்கள் எழுத்துக்கள் மெல்ல கண்களில் கசிவை வரவழைக்கிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சுபேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கற்பனைக் கதையல்ல, சுபேஸ் !

ஈழத்தமிழனின் போர்க்கால நாள் காட்டியின் , ஒரு நாளிதழ்!

வாழ்த்துக்கள் உங்களுக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் அருமையான கதை, ஒரு இடத்தில் கூட நிற்பாட்ட முடியவில்லை, அடுத்தது என்ன என்று தொடர்ந்து வாசிக்க வைத்துவிட்டீர்கள், சிலருக்கு சப்பாத்தைவிட கொப்பி பென்சில் வாங்கவே மிகவும் கஷ்டம்,

நன்றி பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா,சகாரா அக்கா,கிருபன் அண்ணா,புங்கையூரன்,உடையார் நன்றிகள் தங்கள் கருத்துப்பகிர்விற்க்கும் பாராட்டிற்க்கும்..இது ஒரு உண்மைச்சம்பவம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேஸ், நெஞ்சை அழுத்துகிறது கதை.

ஆர்மிக்காரன் செத்த சந்தோசத்தை சப்பாத்துக்காக உயிர்விட்டவன் எடுத்துவிட்டான்.

மிகவும் அருமையான கதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சுபேஸ்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளவி மற்றும் குமார சாமி அண்ணை...

  • கருத்துக்கள உறவுகள்

பின்னீட்டீங்கள் :)

Edited by sagevan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்னீட்டீங்கள் :)

நன்றி சகீவன் கருத்துப்பகிர்விற்க்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.