Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனை கூட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும் – தமிழீழ புரட்சிகர மாணவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sumanthiran1-150x150.jpg

தமிழ்த் தேசிய நாடாளுமன்றத்திற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட திரு.சுமந்திரன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டினை செய்து வருகின்றார்.

ஏற்கனவே இலண்டனில் நடந்த கூட்டத்தில் புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளை மோசமாக விமர்சித்து புலம்பெயர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர், இப்போது பேரினவாதியோடு மட்டையாட்டம் ஆடி தமிழர்களின் இரத்தத்தை பேரினவாதி மகிந்தவுடன் பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் இளையோர்கள் சிங்கள அணியின் மட்டையாட்டத்தை புறக்கணிக்க இவர் அவர்களுடன் ஆடியது உலகத் தமிழர்களை பெரும் அவமானத்திற்குள் தள்ளியுள்ளது. திரு.சுமந்திரன் பொறுப்போடு தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லாவிட்டால் த.தே.கூட்டமைப்பு அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

த.தே.கூட்டமைப்பு பொறுப்பற்றவர்களையும், சிங்களத்திடம் கொஞ்சி விளையாடுபவர்களையும் ஒதிக்கி வைக்க வேண்டு என்பதோடு திரு.சுமந்திரனுக்கு எமது கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இது தொடர்பாக சுமந்திரனிடன் விளக்கம் கோர வேண்டும் எனவும் கூட்டடைப்பின் எனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக மௌனம் சாதிப்பது அவர்கள் மீதும் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.saritham.com/?p=43936

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. ஒரு ஒப்புக்குள்ள கட்சி. அதற்கு தெளிவான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. கட்சி இப்போ.. மூன்று நாலு பேரின் விருப்பிற்கு ஆட.. மற்றவர்கள் தாமும் தன்பாடும். இந்தப் பலவீனமான நிலை கூட சர்வதேச சமூகம் எம்மை விட்டு விலகி சிங்களத்தோடு ஒட்டிக்கொள்ள வகை செய்து கொண்டிருக்கிறது.

இந்த சுமந்திரனின் குணம் அறிந்து தான்.. தமிழீழ தேசிய தலைமை சம்பந்தனின் முன்னைய நகர்வு ஒன்றை தடுத்து நிறுத்தி.. சுமந்திரனை கட்சிக்குள் இழுப்பதை நிறுத்தி வைத்தது.

சம்பந்தன் முள்ளிவாய்க்கால் முடிவோடு செய்த ஒரே காரியம்.. தமிழீழ தேசிய தலைமைக்கு விசுவாசமாக இருந்தவர்களை தூக்கி எறிந்துவிட்டு.. மதில் மேல் பூனைகளை.. உள்ளே உலாவவிட்டது.

இதனை நம்மில் சில மேதாவிகள் சம்பந்தனின் சாணக்கியம் என்று வரையறுத்தனர்.

மாவை..சேனாதிராஜா.. தமிழரசுக் கட்சியை பலப்படுத்த.. தமிழீழ தேசிய தலைமை பயன்படுத்திய.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற சொல்லாடலை முலாமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை.. சுரேஸ்.. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்கள் தமிழர்களுக்கு பரிசளிக்கப் போவது.. முள்ளிவாய்க்காலை விட மோசமான ஒரு தோல்வியையும் சிங்களத்திற்கு தமிழர்களை கொலை செய்வதற்கான சர்வதேச அங்கீகாரத்தையும் ஆகும்.

Edited by nedukkalapoovan

மக்கள் விழிப்பாக இருந்தால் இவர்களால் (யாராலும்) இரண்டு தடவை ஏமாற்ற முடியாது.

வல்லமை தாராயோ...

[ செவ்வாய்க்கிழமை, 25 ஒக்ரோபர் 2011, 08:44 GMT ]

R.Sampanthan-tna.jpg

'புதினப்பலகை'க்காக, தி. வழுதி.

இலங்கைத் தமிழினத்தின் கேள்விக்கிடமற்ற தலைமை நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது வந்துவிட்டது – இது, ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வகித்ததைப் போன்ற வரலாற்றுப் பாத்திரம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கலாம்,

அன்று விடுதலைப் புலிகள் மீதும், இன்று தமிழர் கூட்டமைப்பின் மீதும் தமிழ் மக்களுக்கு ஆழமான அதிருப்திகள் இருந்திருக்கலாம், இருக்கலாம்,

ஆனால் - தவிர்க்க முடியாத உண்மை என்னவெனில் - அன்று விடுதலைப் புலிகள் இருந்த இடத்தில் இன்று கூட்டமைப்பு இருக்கின்றது.

தமிழர்கள் விரும்பி வாக்களித்திருந்தாலும், வேறு வழியின்றி வாக்களித்திருந்தாலும் - அன்று விடுதலைப் புலிகள் இயக்கத்திடம்; சேர்ந்திருந்த ஒரு வரலாற்றுப் பொறுப்பு, இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சேர்ந்திருக்கின்றது.

அது என்னவெனில் - தமிழ் தேசிய இனத்தை இன்னொரு தடவை நடுத்தெருவில் கைவிட்டுச்சென்றுவிடக் கூடாத வரலாற்றுப் பொறுப்பு.

வரலாற்றுப் பொறுப்பு எனும் போது - தமிழினத்திற்கு உரித்தான அரசியல் உரிமைகளைப் பெற்றெடுத்துவிடுவதை மட்டும் நான் குறிப்பிடவில்லை;

அவ்வாறு அவற்றைப் பெற்றெடுக்க முடியாது போய்விட்டால் கூட, அவற்றைப் பெற்றெடுப்பதற்கான போராட்டத்தைப் பொருத்தமான முறையில், பொருத்தமான அடுத்த தலைமுறைக் கைகளில் ஒப்படைத்துவிட்டுப் போக வேண்டிய பொறுப்பையும் சேர்த்தே நான் குறிப்பிடுகிறேன்.

குறிப்பாக, அந்தப் பொறுப்பு, இப்போது, இராஜவரோதயம் சம்பந்தர் அவர்களது தோள்களில் தான் உள்ளது.

ஏனென்றால் -

அச்சுறுத்தல்கள், அறிவுறுத்தல்கள் ஏதுமற்று வாக்களித்த தமிழ்த் 'தேசிய' இனம், தமது தலைமையாகத் தேர்ந்தெடுத்துள்ள தமிழ்த் 'தேசிய' கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையிலும்,

அனைத்துலக சமூகத்தை விட்டால் எமக்கு நீதியைப் பெற்றுத்தர வேறு யாருமே இப்போது இல்லை என்ற நிலையில், 'தமிழர்களின் தலைமை' என அந்த வல்லரசுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தமிழ்த் 'தேசிய' கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையிலும்,

எவர் ஏற்றுக்கொண்டாலும் ஏற்காது விட்டாலும், அவரே விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், என்னுடைய கருத்து என்னவெனில் - இன்று. நடைமுறையில். அவர் தான். தமிழினத்தின் 'தேசியத் தலைவர்'.

நீண்ட பழுத்த அரசியல் அனுபவமும் இராஜதந்திர ஞானமும் மிக்க சம்பந்தர் ஐயா அவர்கள் தமிழினத்தின் வரலாற்றில் வீற்றிருக்கப் போகும் இடம் எது என்பதை, இதுவரை அவர் எந்தப் பாதையில் எவ்வாறு நடந்து வந்தார் என்பது தீர்மானிக்கப்போதில்லை;

இனி அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு வழி நடத்திச் சென்று எவருடைய கையில் என்னவிதமாக ஒப்படைத்துவிட்டுச் செல்லப் போகின்றார் என்பதுவும்,

இனி அவர் தமிழினத்தை எந்தப் பாதையில் அழைத்துச் சென்று, எந்த இடத்தில் எந்த வடிவத்தில் விட்டுச் செல்லப் போகின்றார் என்பதுவுமே –

தமிழினத்தின் வரலாற்றில் அவருக்கான இடத்தைத் தீர்மானிக்கப்போகின்றன.

00000 00000 00000

இப்போதையைப் போலவே - 2002 ம் ஆண்டிலும், இதே அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் தான் தமிழினம் தனக்கான அரசியல் அதிகாரங்களைப் பெற்றெடுக்க முயற்சித்தது.

ஒரே வேறுபாடு என்னவெனில் - அப்போது, ஆயுத பலத்தோடு இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் தலைமைப் பொறுப்பிலும் இருந்தது; இன்னொரு வகையில் சொல்வதானால் - தலைமைப் பொறுப்பில் இருந்த அமைப்பு ஆயத பலத்தோடு இருந்தது.

அதனால் - உள்ளதில் சிறந்த சில அரசியல் அதிகாரங்களைப் பெறக் கூடிய ஆகக் கடைசி வாய்ப்பு 2002ம் ஆண்டில் தான் தமிழினத்திற்கு இருந்தது என்பது என் கருத்து. பின்னர், அந்த வாய்ப்பு மெல்ல மெல்ல அருகி, நான்கு ஆண்டுகளில் முற்றாகவே அற்றுப்போனது.

அதன் பின்னரான - 2006 முதல் 2009 வரையான கால கட்டம் ஒரு பொருட்டே அல்ல: ஏனெனில், அது - நிர்ணயிக்கப்பட்ட ஒரு முடிவின் நிகழ்விற்காகப் பொறுமையோடு காத்திருந்தவர்களுக்கும், அந்த முடிவை நிகழாமல் தடுப்பதற்காகப் பொறுமையிழந்து பாடுபட்டவர்களுக்கும் இடையிலான இழுபறியாகவே கழிந்து போனது.

2009 மே மாதத்தில் - நிர்ணயிக்கப்பட்ட அந்த முடிவு தீர்மானமாக நிகழ்ந்த போது – ஒரு மிகப் பெரிய படையெடுப்புக்குள் சிக்கிப் பல்லாயிரம் பேரைப் பலி கொடுத்த பின்பு, தமிழ்த் தேசிய இனம் நடுத்தெருவுக்கு வந்தது.

இந்த யதார்த்தத்தில் - எங்களால் செய்ய முடிந்த, முடிகின்ற ஆகக் கூடிய அரசியற் செயற்பாடாக – நடக்கின்ற தேர்தல்களில் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து அவர்களை எமது சட்டபூர்வமான பிரதிநிதிகள் ஆக்கிவிட்டு - அதன் மூலம் உலக சமூகத்தின் அங்கீகாரத்தையும் அவர்களுக்கு நாமே பெற்றுக்கொடுத்து விட்டு - அவர்கள் உருப்படியாக ஏதாவது செய்வார்கள் எனக் கண்கள் பனிக்கக் காத்திருக்கிறோம்.

இப்போது, எங்களது சார்பில், அவர்களை அனுப்பி, மீண்டும் – அனைத்துலக சமூகத்திடம் நாம் கையேந்தி நிற்கின்றோம்.

எந்த மேற்குலகும் இந்தியாவும் விடுதலைப் புலிகளை அழித்து, பல்லாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்வித்து, எமது இனத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தன என்று நாம் புலம்பித் தீர்த்தோமோ, அதே மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் வாசல்களில் மண்டியிட்டு நாம் இப்போது நியாயம் வேண்டிக் கிடக்கிறோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமே தாமும் பேசிக்கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமே பேசுமாறு சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இந்த வல்லரசுகள் அறிவுறுத்துவதை எமக்குக் கிடைத்த ஒர் உலக அங்கீகாரமாக எண்ணிப் பூரித்து நிற்கிறோம்.

எமக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கிய உலக வல்லரசுகள், எமக்கு அரசியல் அநீதி இழைத்தவர்களைத் தண்டிப்பதுடன், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மாற்றீடாக ஏதாவதொரு நற்பயனையும்; பெற்றுத் தருவார்கள் என ஏங்கி இருக்கிறோம்.

எமது இனத்தின் புலம்பெயர்ந்த சமூகத்தினராகிய நாங்கள் - எமது அறிவு, உணர்வு, உழைப்பு, வளம், சக்தி, நேரம் எல்லாவற்றையும் இந்த வல்லரசுகளின் காலடியிலேயே ஒட்டுமொத்தமாகக் காணிக்கையாக்கிவிட்டு வரம் வேண்டித் தவமிருக்கின்றோம்.

இன்னும் தாயகத்திலேயே நிலைத்து வாழும் மக்களாகிய நாங்கள் - எங்களது எல்லா நம்பிக்கைகளையும் ஒட்டுமொத்தமாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே ஒப்படைத்திருக்க - எங்களது ஆதங்கங்களையும் அபிலாசைகளையும் தமது ஆன்மாக்களில் சுமந்து செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தளகர்த்தர்கள், அதே வல்லரசுகளின் பிரதிநிதிகளுடன் எல்லா இடங்களிலும் பேசுகின்றார்கள்.

நாங்கள் காத்திருக்கிறோம்.

00000 00000 00000

“பொறுமையாகக் கேளுங்கள். நான் தெளிவாக விளக்குகின்றேன்.” - நிதானமாகத் தொடங்கினார் அந்த வெள்ளைக்கார அம்மையார்.

கொழும்புக்கான தனது நாட்டுத் தூதரகத்தில் அவர் முதன்மைப் புள்ளி.

சில நாட்கள் முன்னதாக, கொழும்பில், சிவப்பு மதுப்பழரசத்தை உறிஞ்சியபடி என்னோடு கதைத்துக் கொண்டிருந்தவர், சொல்ல வேண்டியவற்றை நான் சொல்லி முடித்த போது, கையிலிருந்த கண்ணாடிக் குவளையை மேசையில் வைத்தார்.

சிறீ லங்கா தொடர்பான தனது நாட்டின் கொள்கையைத் தீர்மானிப்பதில் அந்த அம்மையார் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியமானவர் என்பதால், எமது இனத்தின் வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பதில் அவர் என்னிடம் சொல்லிய கருத்துக்கள் பெறுமதியானவை என்பது எனது கருத்து.

அவர் சொல்லுவதை முதலில் கேளுங்கள். எனது கருத்தை நான் பின்னர் கூறுகின்றேன்.

“நீங்கள் எல்லோரும் உங்கள் நாட்டை விட்டு ஓடி விட்டீர்கள். நடந்துகொண்டிருந்த போரைக் காரணம் காட்டி ஓடியவர்களே உங்களில் 90 வீதமானோர். இப்போது, வெளிநாடுகளி;ன் சுதந்திரத்தையும் நல்ல வசதிகளையும் அனுபவித்தபடி, பிரச்சனையிலிருந்து எங்கோ தூரத்தில் இருந்தபடி, பகுதி நேர அரசியல் செய்து தமிழீழம் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், இந்த விதமாக அரசியல் செய்வது சில சமயங்களில் பொருந்திப் போயிருக்கலாம்; ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உங்களுக்கு இங்குள்ள யதார்த்த நிலைமையே விளங்கவில்லை.

நீங்கள் அறியத் தவறுகின்ற, அல்லது அறிய விரும்பாத ஒரு கசப்பான உண்மை இங்கு உள்ளது. அது - உங்களது இனத்தின் சனத்தொகை இந்த நாட்டில் இப்போது 10 வீதத்திற்கும் குறைவாக ஆகிவிட்டது என்பதும், இந்த நாட்டின் இரண்டாவது கூடிய சனத்தொகையினராக முஸ்லீம்கள் ஏற்கெனவே ஆகிவிட்டார்கள் என்பதும் ஆகும். பெளத்தர் அல்லாத உங்கள் எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்தாலும் கூட, நீங்கள் அவர்களில் காற் பங்கிற்குக் கூட வர மாட்டீர்கள். உங்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ எண்ணிக்கையே குறைந்துவிடப் போகின்றது என்றும், அது தொடர்ந்தும் குறைந்துகொண்டேயிருக்கும் என்றும் ஓராண்டிற்கு முன்னரேயே நான் உங்களிடம் குறிப்பிட்டேனா இல்லையா…? இப்போது பாருங்கள் அது நடக்க ஆரம்பித்துவிட்டது.

உரிமைகள் வேண்டுமென்றால் நீங்கள் வெளிநாடுகளில் இருந்தபடி பழைய பாணியில் அரசியல் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் இனத்தை இங்கே பலப்படுத்த வேண்டும் -- பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த வேண்டும். உங்கள் நிலத்தைப் பாதுகாகக்க வேண்டும். உங்கள் பண்பாட்டைச் செழுமைப்படுத்த வேண்டும். நேர்த்தியான தேர்தல்கள் மூலம் தலைமைப் பொறுப்பிற்கு மேலெழுந்து வந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சனநாயக ரீதியாகச் சீர்ப்படுத்தி, அதனை நீங்கள் அரசியல் ரீதியாகப் பலப்படுத்த வேண்டும். இனத்தின் மீது அவ்வளவு அக்கறை உங்களுக்கு இருக்கின்றது என்றால் வெளிநாட்டு வசதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு உங்கள் வளங்களோடு இங்கே வரவும் தயாராக இருக்க வேண்டும். அதை விடுத்துவிட்டு, நீங்கள் எங்கோ தூரத்தில் இருந்து கொண்டு remote control அரசியல் செய்தபடி, இங்குள்ள மக்களுக்கு உரிமை பெற்றுத்தருமாறும், ராஜபக்ச குடும்பத்திற்குத் தண்டனை பெற்றுக் கொடுக்குமாறும் எங்களிடம் கேட்பதில் எந்தப் பயனும் இல்லை...

… ஏனென்றால்…,” ஒரு கணம் நிறுத்தி, அவர் தொடர்ந்தார் -

“ஏனென்றால், உங்களுடைய உரிமைகள் அல்ல, எமக்கு எங்களுடைய நலன்கள் தான் முக்கியமானவை."

கண்ணாடிக் குவளையை எடுத்து, மதுரசத்தை இன்னொரு தடவை உறிஞ்சிய பின்பு தொடர்ந்தார்.

“இரண்டு விடையங்களை நீங்கள் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களோடு இருக்கும் நட்பின் காரணமாகத் தான் நான் வெளிப்படையாகப் பேசுகின்றேன். திறந்த மனதோடு விடயங்களை அணுகக்கூடிய உங்கள் நண்பர்களோடு இவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

முதலாவது, இங்கு நடந்த, இப்போதும் நடக்கின்ற நிகழ்வுகள் எவையுமே எமக்குத் தெரியாதவை இல்லை.

இரண்டாவது, தெரிய வேண்டியவற்றைத் தெரிந்து கொள்ளும் போது, அந்த நிகழ்வுகளின் விளைவுகள் எமது நாட்டின் நலன்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி மட்டும் தான் நாம் யோசிப்போம்.

ஒரு நாடு எமக்கு மூலோபாய முக்கியத்துவம் ['stretegically important'] உள்ளதாக இருக்கும் போது - அந்த நாட்டினை எமது செல்வாக்கிற்குள் வைத்திருப்பதற்கு ஏற்ற அக மற்றும் புறக் காரணிகளைக் கண்டறிந்து [அப்படி எவையும் அங்கு இல்லையெனில் புதியவற்றை நாமே உருவாக்கி, அல்லது போதிய அளவிற்கு இல்லையெனில், இருப்பவற்றைப் பெரிதாக்கி] அவற்றை எமது நலன்களுக்காக எவ்வாறு எங்கு பயன்படுத்துவது என்ற வழிகளை வகுத்த பின்பு எமது கால்களைப் பதிப்போம்.

இலங்கையைப் பொறுத்தவரை, 2002-களில், அவ்வாறு நாம் கருத்தில் கொண்ட ஒரு தீர்க்கமான காரணியாக விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்தது. ஆனால், அவர்களையும் பங்காளிகளாகச் சேர்த்துச் செல்ல நாம் எடுத்த முயற்சிகள் பிரபாகரனின் விட்டுக்கொடாத் தன்மைகளால் தோல்வியடைந்ததுடன், அவர் செய்துவிட்ட தவறுகளாலும் புலிகள் இயக்கம் இறுதியில் அழிந்தே போன அந்தப் பழைய கதைகளுக்குள் போக வேண்டிய தேவை இப்போது இல்லை.

இலங்கையில் இப்போது நாம் கருத்தில் எடுக்க வேண்டிய முக்கிய காரணிகளாக இரண்டு விடயங்கள் இருந்து வருகின்றன: ஒன்று, முடிவின்றித் தொடரும் இன ரீதியான அரசியல் பிணக்கு. அடுத்தது, தொடர்ந்து வளர்ந்து செல்லும் அந்த இனங்களுக்கு இடையிலான சனத்தொகை வேறுபாடு. இவற்றோடு இப்போது இன்னொரு விடயமும் சேர்ந்திருக்கிறது - சிறீலங்கா அரசாங்கம் போரை முடித்த விதம்.

இந்த மூன்று காரணிகளையும் வைத்துக்கொண்டு தான் நாம் எமது காய்களை நகர்த்த வேண்டும்.

உங்களுக்கு (தமிழர்களுக்கு) இப்போது எங்களை விட்டால் வேறு வழிகள் எதுவும் இல்லை என்பதாலும், எங்களிடமே நீங்கள் உதவி கோரி வருகின்ற படியாலும் - இந்த விடயத்தை எமது இடத்திலிருந்து முதலில் நீங்கள் நோக்க வேண்டும்:

நீதி நியாயம் என்பவற்றில் அக்கறை இல்லாமல் நாம் அவற்றை உதாசீனம் செய்கின்றோம் என்று நீங்கள் கருதக்கூடாது. ஆனால், நாம் எப்போதும் எமது நாட்டின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுப்போம். அதன் பிறகு தான் மற்றவை எல்லாம். அப்படித் தான் நாம் செய்ய வேண்டியுமுள்ளது. அவ்வளவு தான். இதில் நீங்கள் கோவிப்பதற்கு எதுவுமில்லை.

நீங்களே சிந்தித்துப் பாருங்கள் - சீரிய முறையில் தேர்தல்கள் நடந்து, அரசுக்கு எதிரான கட்சிகளும் அபாரமாக வெல்லுகின்ற ஒரு சனநாயக நாட்டில் - 80% சனத்தொகை உள்ள ஒர் இனமும் 10% சனத்தொகை உள்ள இன்னொரு இனமும் வரலாற்று ரீதியாகப் பிணக்குப்படும் போது - 10% உள்ள இனத்தின் பக்கமே நியாயம் இருந்தாலும் கூட - 80% உள்ள இனத்தைப் பகைத்துக்கொண்டு 10% உள்ள இனத்தின் பக்கம் இருப்பதால், எமக்கு என்ன நன்மை வந்துவிடும்…?

இந்த இன விகிதாசாரம் - 55:45 ஆகவோ, அப்பிடி இப்பிடியாக 60:40 ஆகவோ, ஏன் 65:35 ஆகவோ இருந்தால் கூட - வேறு காரணிகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டு, சிறுபான்மை இனத்தின் பக்கம் இருந்து, அவர்களுக்கான நீதியும் எமது நலன்களும் சந்திக்கின்ற புள்ளி ஏதாவது தென்படுகின்றதா என்று தேடலாம்.

ஏன், இங்கே, சனத்தெகை விகிதாசாரம் 80:15 ஆக இருந்த போதும் கூட, தமிழர்களது பலமாக விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், அதனையும் ஒரு காரணியாக எடுத்து, புலிகளையும் உள்வாங்கிக் கொண்டு, தமிழர்களுக்கான நன்மைகளையும் கிடைக்கச் செய்து, அந்தச் சுழலுக்குள் எமது நலன்களையும் முன்னெடுக்க நாம் நிச்சயமாக முனைந்தோம்.

ஆனால், இப்போது கதை வேறு.

இலங்கையைப் பொறுத்தவரை, 80% உள்ள சிங்கள இனத்தைப் பகைத்துக்கொண்டு எம்மால் எதனையும் அடைய முடியாது. ஏனென்றால் - எமக்கு ஒத்துவரவில்லை என்பதற்காக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை அகற்றிவிட்டுத் தேர்தலை நடத்தினால் கூட, திரும்பவும் ஒரு சிங்களக் கட்சி தான் ஆட்சியில் அமரப்போகின்றது. அந்தச் சிங்கள ஆட்சியோடு தான் நாம் வேலை செய்ய வேண்டியும் இருக்கும்.

எப்படிப் பார்த்தாலும் இந்த நாட்டை ஒரு சிங்களக் கட்சி தான் எப்போதும் ஆளும் என்பதாலும், தாம் ஆட்சியில் ஏறுவதற்காகவும் நிலைப்பதற்காகவும் அந்தச் சிங்களக் கட்சி சிங்களவர்களின் விருப்பிற்கு ஏற்றவற்றை மட்டுமே எப்போதும் செய்யும் என்பதாலும், நாங்களும் எமது நலன்களுக்காக சிங்களவர்களால் ஆட்சியில் அமர்த்தப்படும் ஆட்களுடனேயே இயங்க வேண்டியும் இருப்பதாலும், தமது ஆட்சிக்காகச் சிங்களவர்களின் அதரவில் தங்கியிருக்கும் அந்த ஆட்கள் எம்மோடு சேர்ந்து இயங்குவதற்கு ஏற்ற ஏது நிலையை நாம் பேண வேண்டும் என்பதாலும், அந்த ஆட்களை அளவுக்கு அதிகமாகச் சங்கடத்திற்கு உள்ளாக்கும் விதமாக எதனையும் நாம் செய்ய முடியாது.

எனவே – அடிப்படையில் பார்த்தீர்களானால்…”

கண்ணாடிக் கிண்ணத்தை எடுத்து மதுரசத்தை உறிஞ்சிவிட்டுத் தொடர்ந்தார் -

“அடிப்படையில் பார்த்தீர்களானால், நாங்களும் கூட, சிங்களவர்களுக்குப் பிடித்தவற்றை மட்டும் தான் சொல்லவோ செய்யவோ முடியும். வேறு வழியில்லை.

இந்தப் போர்க் குற்ற விவகாரத்தைப் பேசாமல் கைவிட்டுவிடுங்கள். அதனால் ஆகப் போவது எதுவுமே இல்லை. முப்பது ஆண்டுகளாக நீங்கள் போராடியது ராஜபக்சவைத் தூக்கில் ஏற்றுவதற்கா…? இல்லையே. அரசியல் அதிகாரங்களைப் பெறுவதற்குத் தானே. அதில் உங்கள் கவனத்தைக் குவியுங்கள். போர்க்குற்ற விடயத்தைத் துரும்புச் சீட்டாகப் பாவித்து, காத்திரமான அரசியல் அதிகாரங்களைப் பெறுவதை நோக்கி வேலை செய்யுங்கள். எமது ஒத்துழைப்பும் அதற்கு முழுமையாக இருக்கும்.

ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள் -

இந்தப் போர்க்குற்ற விசாரணை முயற்சிகளை நீங்கள் எத்தனை தடவை எடுக்கின்றீர்களோ, அத்தனை தடவைகளும் சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச குடும்பத்தின் கைகளையே நீங்கள் திரும்பத் திரும்பப் பலப்படுத்துகின்றீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தப் போர்க்குற்ற விவகாரத்தால் உள்நாட்டில் நிகழக் கூடிய ஆகக் கடைசி அரசியல் நிகழ்வு என்னவெனில் - நாமல் ராஜபக்ச ஆட்சிக்கு வருவது. அதற்கான முன்னேற்பாடகத் தான், இரத்தக் கறை படியாத கைகளையுடைய தனது மகனைப் போர் முடிந்ததன் பின்னர் அரசியலில் இறக்கினார் தந்தை. போர்க் குற்றப் பூதத்திலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக, தமக்கிடையே எழக் கூடிய அதிருப்திகளை எல்லாம் ஓரத்தில் வைத்துவிட்டு, நாமலின் பின்னால் அவரது பெரியப்பா சித்தப்பாமாரும் திரண்டு விடுவர்.

இந்தப் போர்க் குற்ற விவகாரத்தை நாங்களும் அளவுக்கு அதிகமாகத் தூக்கிப் பிடிக்க முடியாது. அனைத்துலு விசாரணைகள் பற்றியெல்லாம் எழுந்தமானத்திற்குக் கதைக்க முடியாது. ஏனெனில் இந்தப் பிராந்தியத்தில் எமக்குப் பாதகமான நிலைமையையே அது தீவிரமடையச் செய்யும். நாங்கள் திரும்பத் திரும்ப அடிக்க அடிக்க, அளவுக்கு அதிகமாக அச்சுறுத்த அச்சுறுத்த, சிறீலங்கா அரசு சீனாவின் பக்கமே செல்லுகின்றது. இவற்றால் அனைத்துலக ரீதியில் நிகழக் கூடிய ஆகக் கடைசி அரசியல் நிகழ்வு என்னவெனில் - சீனாவும், ரஷ்யாவும் உலகத்தின் எந்தச் சபையிலும் சிறீலங்காவைப் பாதுகாப்பது ஆகும் - அவர்கள் அண்மையில் சிரியாவுக்குச் செய்ததைப் போல.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கும் ஒரு முக்கிய விடயத்தை மறந்துவிடாதீர்கள் – அது இந்தியா.

ஓர் அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை சிறீலங்கா மீது நிகழ்வதற்கு இந்தியா ஒருபோதுமே அனுமதிக்கப்போவதில்லை. அவ்வாறான ஒரு விசாரணை முயற்சி சீனாவின் கைகளையே தனது பிராந்தியத்தில் இன்னும் பலப்படுத்தும் என்று இந்தியாவிற்கு ஏற்கெனவே இருக்கும் கவலையோடு சேர்த்து, இதில் வேறு விவகாரங்களும் இருக்கின்றன. இந்தியாவுக்கு இருக்கும் அதன் சொந்தக் காரணங்களின் விபரங்களுக்குள் போக நான் விரும்பவில்லை. அவற்றை உங்களது அனுமானத்திற்கே நான் விட்டுவிடுகின்றேன். விவகாரம் என்னவென்றால், சீனா மற்றும் ரஷ்யா போன்று கடைசி வரை காத்திருக்காமல், இந்த விவகாரம் தொடங்குவதற்கு முன்னரேயே இந்தியா சிறீலங்காவைப் பாதுகாக்கும்.

முடிவு என்னவென்றால் - இந்தப் போர்க் குற்ற விவகாரத்தைத் தோண்டிக்கொண்டே இருப்பதால் இறுதியில் பயனடையப் போவது நீங்களோ, நாங்களோ, இந்தியாவோ அல்ல, சீனாவும் சிறீலங்கா அரசும் தான்.

தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்பதையும், அவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும் என்பதையும் கொள்கையளவில் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால், அவற்றை எடுத்துத் தரும்படி நீங்கள் எங்களிடம் கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. சிங்களவர்களுடன் தான் நீங்கள் பேச வேண்டும். குறிப்பாக, ராஜபக்ச அரசாங்கத்துடன் தான் நீங்கள் பேச வேண்டும். எங்களால் உண்மையில் பெரிதாக எதுவுமே செய்ய முடியாது.

பகிரங்கத்தில் நாம் கூறும் வார்த்தைகளும் விடுக்கும் அறிக்கைகளும்; இராஜதந்திரத்தின் பகுதிகள். இது போன்ற தனிப்பட்ட சந்திப்புக்களில் உங்களுக்கு நாங்கள் என்ன சொல்லுகின்றோம் என்பவற்றில் தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அது தான் எமது உண்மையான நிலைப்பாடு. இன்று, உங்களுக்கு நான் வழங்கக் கூடிய நல்லாலோசனை என்னவெனில் - …"

கவனியுங்கள் - "உங்களுக்கு" என்று அவர் இங்கே குறிப்பிடுவது தமிழர்களையே.

“…உங்களுக்கு நான் வழங்கக்கூடிய நல்லாலோசனை என்னவெனில் - சிங்களவர்களுடன் பேசுங்கள். சிறீலங்கா அரசாங்கத்துடன் பேசுங்கள். அது தான் வழி.

சிறீலங்கா அடிப்படையில் ஒரு சனநாயக நாடு. இது ஈராக்கோ, லிபியாவோ அல்ல. கிரமமான முறையில் தேர்தல்கள் நடைபெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் அரசாங்கத்தையும், ஏனைய உள்ளுராட்சிக் கட்டமைப்புகளையும் கொண்ட ஒரு நாடு. சிங்களப் படைகள் எங்கும் ஆக்கிரமித்து நிறைந்து நிற்கின்றன என்று நீங்கள் குற்றம் சாட்டுகின்ற வடக்கு கிழக்கிலே கூட, உங்கள் மக்கள் சுதந்திரமாக வாக்களித்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏகோபித்து வெல்ல வைக்கின்ற அளவுக்கும், தலைநகர் கொழும்பின் நகரசபையை எதிர்க்கட்சி கைப்பற்றும் அளவுக்கும் இங்கே சனநாயகம் இயங்குகின்றது. அப்பேர்ப்பட்ட ஓர் இறைமையுள்ள சனநாயக நாட்டில் நாங்கள் கண்டபடி கை வைக்க முடியாது. இந்த நாட்டிற்குள்ளே தான் நீங்கள் தீர்வு தேட வேண்டும்; அதற்கு, இந்த நாட்டின் அரசாங்கத்துடன் தான் நீங்கள் பேச வேண்டும்.”

சொல்லிவிட்டு மதுக் கிண்ணத்தை மறுபடியும் எடுத்து உறிஞ்சினார்;.

00000 00000 000000

என்னுடைய கருத்து இது தான்:

2002-இல் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது அனைத்துலக சமூகத்திற்கு எந்தக் கோபமும் இருக்கவில்லை.

ஒரு போரை நடத்துவதற்கும், அந்தப் போரைக் கர்ண கொடூரமாக நடத்துவதற்கும் அவருக்கு இருந்த தேவையை உலகம் அறிந்து தான் இருந்தது.

இந்தியாவின் அதிருப்திக்கு மத்தியிலும், விடுதலைப் புலிகளைத் தமிழரது பிரதிநிதிகளாக ஏற்று, மேற்குலகு அவர்களுக்குத் தமது வாசல்களைத் திறந்தது.

தமிழ்செல்வனின் சிரிப்புக்கும், பாலா அண்ணையின் அறிவுக்கும் உலகம் செங்கம்பளம் விரித்து மரியாதை செய்தது.

பிரபாகரனைத் தேடி எல்லோரும் வன்னிக்கே வந்தார்கள்.

அவருக்கும் பின் லேடனுக்கும் எவருமே ஒரே சாயத்தைப் பூசிவிடவில்லை.

ஏனெனில் - அவரோடு இணைந்து வேலை செய்ய வேண்டிய, அல்லது அவரையும் இணைத்து வேலை செய்ய வேண்டிய சாத்தியப்பாடுகளை உலக சமூகம் கருத்தில் எடுத்திருந்தது.

அதனால், அதன் முதற் படியாக, முதலில், அவர் மீது படிந்திருந்த 'பயங்கரவாத'க் கறையைக் கழுவ வேண்டிய கட்டாயம் உலகிற்கு இருந்தது.

அவரைக் கழுவி எடுக்கும் விவகாரத்தில், இந்தியாவைச் சமாளிக்க வேண்டிய ஒரு மேலதிக பொறுப்பையும் உலகம் ஏற்றுச் சுமந்தது.

ஆனால், தன்னைத் 'தூய்மைப்படுத்தி', அரச இயல் இயங்கு முறைக்குள் இணைக்க முனைந்த உலக இராஜதந்திர முயற்சிகளை அவர் சந்தேகத்தோடே பார்த்தார். எல்லோரிலும் சந்தேகம் கொண்டார். முப்பது ஆண்டுகாளாகக் கூடவே வந்த பாலா அண்ணையையே நம்பவில்லை. தனது இலட்சியத்தை அடைவதற்கான மாற்று வழிகளை ஆராயத் தவறினார்.

விளைவு - நண்பர் யதீந்திரா எழுதியிருந்தததைப் போல – அவரது புலிவரிச் சீருடையைக் கழற்றிவிட்டு அவருக்கு வேட்டி சால்வையை உடுத்திவிட உலகம் எடுத்த முயற்சிகளை அவர் விடாப்பிடியாக மறுத்ததன் விளைவாக - கடைசியில், அவருக்கு சீருடையின் அவசியத்தையுமே உலகம் இல்லாமல் செய்துவிட்டது.

முடிவு - தமிழினம் கைவிடப்பட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.

இதுவெல்லாம் பழங் கதை.

நான் இங்கே சொல்ல வரும் கதை வேறு - இது இப்போது நடந்துகொண்டிருக்கும் புதுக் கதை.

மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக சமூகத்திற்கு எந்தக் கோபமும் இல்லை.

அவர் இறைமையுள்ள ஓர் சனநாயக நாட்டில் இரண்டாவது தடவையாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவர்.

ஒரு போரை நடத்துவதற்கும், அந்தப் போரைக் கர்ண கொடூரமாக நடத்துவதற்கும் அவருக்கு இருந்த தேவையை உலகம் புரிந்துள்ளது.

அவரைத் தேடிப் போய் எவரும் அலரி மாளிகையில் விருந்து உண்பதை இட்டு யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

அவருக்கும் முஅம்மர் கடாபிக்கும் எவருமே ஒரே சாயத்தைப் பூசவில்லை.

மகிந்த ராஜபக்சவோடு இணைந்து வேலை செய்ய வேண்டிய, அல்லது அவரையும் இணைத்து வேலை செய்ய வேண்டிய தேவை உலக சமூகத்திற்கு உள்ளது.

ஆனால், இந்தப் போர்க்குற்றப் பிரச்சனை பூதாகரமாகிவிட்டது. அப்படி எதுவுமே நடக்கவில்லை என இனிச் சொல்ல முடியாது.

அதனால், அவரோடு சேர்ந்து வேலை செய்வதற்கு இடையூறாக இருக்கும் இந்தப் 'போர்க் குற்ற' கறையைக் கழுவி அவரைத் தூய்மைப்படுத்த வேண்டிய தேவை உலகிற்கு இருக்கின்றது.

எனவே - அன்று பிரபாகரனுக்குச் செய்ய முனைந்ததை இன்று ராஜபக்சவுக்குச் செய்ய முனைகின்றது உலகம்.

இதில் இன்னொரு வசதி என்னவென்றால் - அவரைக் கழுவித் தூய்மையாக்கும் விவகாரத்தில், இந்தியாவைச் சமாளிக்க வேண்டிய மேலதிக வேலை எதுவும் இல்லை; ஏனெனில், சேர்ந்து கழுவுப்படப் போவது இந்தியாவும் தான்.

ஆனால், விவகாரத்தைச் அனைத்துலகச் சந்திக்கு இழுத்தால் தான் வில்லங்கம். பகிரங்கத்தில் வைத்துக் கழுவினால் - செய்தவர், சேர்ந்து செய்தவர், உடந்தையாய் இருந்தவர், கண்டும் தடுக்காது நின்றவர், வெளிப்படையாகவே விடுப்புப் பார்த்தவர் என எல்லோரது அழுக்குகளும் அம்பலத்தில் ஓடும்.

எனவே, ஒரே வழி - ஒர் உள்நாட்டு விசாரணை.

தனக்கான விசாரணையைத் தானே நடத்தி முடிக்க ஒர் அற்புதமான வாய்ப்பு.

அப்படி ஒர் உள்நாட்டு விசாரணை நடந்தால், அதன் முடிவு என்னவாகவும் இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக, அது ராஜபக்ச குடும்பத்தில் எவரையுமே தூக்குக் கயிற்றில் ஏற்றுவதாக அமையாது; சேர்ந்து செய்தவர் பட்டியலில் இந்தியாவை சேர்க்காது. கண்டும் தடுக்காது நின்றவர் என ஐ. நா. வைச் சாடாது; வெளிப்படையாகவே விடுப்புப் பார்த்தவர் என மேற்குலகத்தைக் குறை காணாது.

அப்படியெல்லாம் நடக்க, இந்த மேற்குலக சமூகமும் விடாது, கிழக்குலக சமூகமும் விடாது, ஐக்கிய நாடுகள் சபையும் விடாது.

நடக்கப்போவது என்னவென்றால் -

நாளைக்கே அப்படி ஒர் உள்நாட்டு விசாரணையை நடத்தி, உலக சமூகத்திற்கு ஏற்றதான ஒரு தீர்ப்பை வழங்கி, ராஜபக்ச குடும்பம் தனது போக்கை மேற்கிற்கும் இந்தியாவிற்கும் இசைவாக மாற்றிவிட்டதென்றால், இன்றைய போர்க்குற்றச் சலசலப்புக்கள் எல்லாமே அடங்கிப்போய்விடும்.

சீனாவிடம் பட்டிருக்கும் கடன்களை அடைக்க - மேற்குலகு, இந்தியா, உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், அனைத்துலக நாணய நிதியம் என - இன்னோரன்ன வள்ளல்கள் வரிசையில் நின்று சிறீ லங்காவிற்கு வாரி வழங்க - அவர்கள் எல்லோரும் மீண்டும் ஒன்றாகி விடுவார்கள்.

அவர்கள் எல்லோரும் ஒன்றாகிய பின்பு - மீண்டும் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்கப்போவது தமிழர்கள் தான்; இப்போது மேற்கோடு இணந்து பழைய போர்க்குற்றப் புதைகுழிகளைக் கிண்டியதற்காக, நாளை அமைதியாகப் பழிவாங்கப்படப்போவதும் தமிழர்கள் தான்: அப்படி நடக்கும் போது, மீண்டும், 'அது உள்நாட்டுப் பிரச்சனை' என்று சொல்லிவிட்டு இந்தியா ஓரத்தில் நிற்கும், மேற்கு ஒதுங்கிக்கொள்ளும்.

வடக்கு கிழக்கிற்கு வெளியே - சிங்கள தேசத்தைப் பொறுத்தவரையில் - இலங்கைத் தீவின் 80% குடிமக்களைப் பொறுத்தவரையிலே -- தமிழர்களுக்கு இலகுவாகப் புரிகின்ற விதமாகச் சொல்லவேண்டுமெனில் - மகிந்த ராஜபக்ச தான் அவர்களது 'தேசியத் தலைவர்'.

முப்பது ஆண்டுகளாக எவராலும் நெருங்கவே முடியாதிருந்த - அவர்களை ஆட்டிப்படைத்த - எத்தனையோ சிங்களத் தலைவர்களைக் கொன்று போட்ட - பிரபாகரனையே கொன்றுவிட்ட தன்னிகரற்ற தலைவர் மகிந்த ராஜபக்ச. வேறு எவருமே அங்கே இப்போதைக்குத் 'தலைவர்' ஆகவும் முடியாது, அப்படி ஆகுவதற்கு சிறீ லங்காவில் உருப்படியான ஆட்களும் இல்லை, அப்படி எவரும் உருவாகி வருவதற்கான தெளிவான சான்றுகளும் இல்லை.

அதன் அர்த்தம் என்னவெனில் - மேற்குலகும் இந்தியாவும் தமிழர்களுமாகச் சேர்ந்து, ஏதோ ஒரு வழியில் அவரைப் 'போர்க் குற்றவாளி' ஆக்கி, அவரது ஆட்சியைக் கவிழ்த்தாலும் - உலகமே திரண்டு தமது தானைத் தலைவனைப் பழிவாங்கிவிட்டதாகப் பொங்கி எழுந்து, அவருக்கே மீண்டும் வாக்களித்து அவரையே மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் சிங்கள தேசம். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு நிலைமை போனால் கூட - அவரது ஆசை அண்ணனையோ, அன்புத் தம்பியையோ, செல்வப் புதல்வனையோ ஆட்சியில் அமர்த்தும். அவரது அரசியற் செல்வாக்கிற்கான ஆகக் கடைசிச் சான்று - கடைசியாக நடந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள். இதில் நான் சொல்லுவதற்கு எதுவுமேயில்லை.

"அண்ணன் தம்பிக்குள் அடிபாடு வர வேண்டும்; உட்பூசல் வெடித்து ஆட்சி கவிழ வேண்டும்" என்ற எமது ஆசைகள் எல்லாம் வெறும் ஆசைகளே. போர்க்குற்ற அழுத்தங்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவை அவர்களை மேலும் நெருக்கி ஒற்றுமைப்படுதுமே அல்லாமல், பிளக்காது. மேற்கினதும் இந்தியாவினதும் கவலையும் அது தான்.

இந்த நிலைமை தெளிவாகத் தெரிந்து தான் - "போர்க் குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு உள்நாட்டிலேயே ஒரு விசாரணையை நடத்துங்கள்" என்று சிறீலங்கா அரசிற்கு அறிவுரை வழங்கி, அழுத்தமும் கொடுக்கின்றது மேற்குலகு,

"போர்க்குற்றப் பிரச்சனையை ஓரத்தில் வைத்துவிட்டு, சிறீலங்கா அரசாங்கத்துடன் பேசி நல்லதொரு அரசியல் தீர்வைப் பெறுங்கள்" என்று தமிழர்களுக்கும் அறிவுரை சொல்லுகின்றது.

ராஜதந்திரத்தின் அழகு என்பது, எந்த இடத்திலும் தேங்கிவிடாமல், தனது இலக்கு நோக்கி அது வளைந்து நெளிந்து நகர்ந்து செல்லும் நுட்பத்தில் தான் தங்கியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை - இந்தப் 'போர்க்குற்ற' விவகாரம் தமிழினத்தின் கைகளில் இருக்கும் 'நாகஸ்த்திரம்' மாதிரி. ஒரே ஒரு தடவை தான் பாவிக்கலாம். என்ன தேவைக்காக, எந்த இலக்கை நோக்கி நாம் அதனைப் பாவிக்கப் போகின்றோம் என்பதில் தான் எமது வல்லமை தங்கியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கெனவே அழகானவர்கள். அவர்கள் தமக்கு இன்னும் அழகும், இனத்திற்கு மேலும் மகிமையும் சேர்ப்பார்கள் என்றும், அந்த வல்லமை அவர்களுக்கு இருக்கின்றது என்றும் நம்புவோமாக.

கட்டுரையாளருக்கு உங்கள் கருத்துக்களை அனுப்ப – T.R.Vazhuthi@Gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் யாரிந்த வழுதி என்று யாராச்சும் அறியத் தருவீர்களா?? அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. இவருக்கும் புலிகளுக்குமிடையில் முன்னர் இருந்த உறவு எப்படிப்பட்டது ??

வாசிக்க நல்லாய் இருக்கு இது உண்மையோ கற்பனையோ யாம் அறியோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விழிப்பாக இருந்தால் இவர்களால் (யாராலும்) இரண்டு தடவை ஏமாற்ற முடியாது.

தேர்தல் ஆட்சி என்று வந்தால்???

தமிழக மக்களுக்கு வந்த நிலைதான். இதில் விழிப்பை இருந்தால் என்ன நித்திரை கொண்டால் என்ன? முடிவு பேய் அல்லது பூதம்.

4 வருடம் பேய்

நாலு வருடம் பூதம்

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் யாரிந்த வழுதி என்று யாராச்சும் அறியத் தருவீர்களா?? அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. இவருக்கும் புலிகளுக்குமிடையில் முன்னர் இருந்த உறவு எப்படிப்பட்டது ??

இவர் ஒரு யதார்த்தவாதி. ஆனால், உங்களைப் பொறுத்த வரை அவர் ஒரு வெகுஜன விரோதி.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தை மேசையில் சக பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொஞ்சிக் குலாவுவதும் வெளியே தமிழ் மக்களுக்கு ஒன்று சொல்வதுமாக இருக்கிறார்கள். சம்பந்தரைத் தட்டிக் கேட்க ஆளில்லாமல் இருக்கிறது.இதையே கெகலிய வெளிப்படையாகப் போட்டு உடைத்திருக்கிறார்.பேச்சு வார்த்தை மேசையில் சுமத்திரனை நீக்கி விட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட உணர்வாளர்களைப் போட வேண்டும்.கேட்டால் ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பார்கள்.தமிழ்ச்செல்வன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை நினைவுறுத்துகிறோம்.பாலா அண்ணை பேச்சு வார்ததை மேசைகளில் காட்டும் இறுக்கம் எங்கே இவர்கள் காட்டும் பவ்வியம் எங்கே.தாங்கள் ஒரு தேசிய இனத்தின் சார்பாகப் பேசுகிறோம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு யதார்த்தவாதி. ஆனால், உங்களைப் பொறுத்த வரை அவர் ஒரு வெகுஜன விரோதி.

எது யதார்த்தவாதி ?? கே.பீ இன் அழுக்குகளை இங்கே கொண்டுவந்து பரப்பும் உங்களைப்போன்றவர்களையா சொல்லுகிறீர்கள் ? உங்களுக்கு ஒரு யதார்த்தவாதி என்று ஒரு எண்ணம்??!! உங்களுக்கெல்லாம் இன்னுமொரு பெயரிருக்கிறது.............

  • கருத்துக்கள உறவுகள்

எது யதார்த்தவாதி ?? கே.பீ இன் அழுக்குகளை இங்கே கொண்டுவந்து பரப்பும் உங்களைப்போன்றவர்களையா சொல்லுகிறீர்கள் ? உங்களுக்கு ஒரு யதார்த்தவாதி என்று ஒரு எண்ணம்??!! உங்களுக்கெல்லாம் இன்னுமொரு பெயரிருக்கிறது.............

அப்பு, ரகுநாதா! நீங்கள் என்ன கேட்டீர்கள். நான் என்ன கூறினேன். ஏன் இதற்குள் கே.பி.யை இழுக்கின்றீர்கள். ஓ நீங்கள் அவரை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகின்றீர்கள் என்பது இதில் இருந்து தெளிவாகின்றது.

சரி, நான் விடயத்துக்கு வருகின்றேன்.

வழுதி தற்காலத்துக்கு ஏற்ப நிலமையைப் புரிந்து கட்டுரை எழுதியிருக்கின்றார். உங்களைப் போன்ற சிலர் போல இப்போது புலி வரும். பிரபாகரன் ஐந்தாம் கட்ட ஈழப் போரைத் தொடங்குவார் என்று அவர் மக்களை ஏமாற்றவில்லை.

போராட்டத்தினை உண்மையாகவே நேசித்தவர்கள், உழைத்தவர்கள் எனப் பலரும் யதார்த்தத்தினை உணர்ந்து செயற்படுகின்றனர். உங்களைப் போன்று பெருமளவிலானோர்தான் ஆகாயத்தில் கப்பல் கட்டி ஓட்டலாம் என நினைக்கின்றீர்கள்.

முதலில் ஆகாயத்தில் கப்பலைக் கட்ட முடியுமா என ஆராயுங்கள். அதாவது, யதார்த்தத்தினை உணர்ந்து செயற்படுங்கள். இல்லையெனில் சிங்களம் முழுமையாக யாவரையும் விழுங்கிய பின்னர் ஏதாவது செய்ய வேண்டும் என நினையாதீர்கள். ஏனெனில் அப்போது தாயகத்தில் தமிழன் ஒருத்தனும் எஞ்சியிருக்கப் போவதில்லை.

ஓ, இதில் கூட உங்களுக்கு எங்கே கவலை இருக்கப் போகின்றது? தொடர்ந்தும் புலத்தில் இருந்தவாறு ஊளையிட்டுக்கொண்டுதான் நீங்கள் எல்லோரும் இருப்பீர்களே.

Edited by nirmalan

வழுதி தற்காலத்துக்கு ஏற்ப நிலமையைப் புரிந்து கட்டுரை எழுதியிருக்கின்றார். உங்களைப் போன்ற சிலர் போல இப்போது புலி வரும். பிரபாகரன் ஐந்தாம் கட்ட ஈழப் போரைத் தொடங்குவார் என்று அவர் மக்களை ஏமாற்றவில்லை.

வழுதியை பற்றித்தான் ரகுநாதன் கேட்டிருந்தார். தெரிந்திருந்தால் பதிலைக்கூறியிருக்கலாம்.

இவர் ஒரு யதார்த்தவாதி. ஆனால், உங்களைப் பொறுத்த வரை அவர் ஒரு வெகுஜன விரோதி.

இதில் அந்த கேள்விக்கு பதில் இல்லை. இது இணைப்பை இங்கே கொண்டுவரும்போதே ஒரு விதண்ட வாதம் ஆரம்பிக்க என்று தாயாரித்து வைத்திருந்த பதில். பொருத்தமில்லாமல் ரகுநாதனின் கேள்விக்கு அளிக்கப் பட்டு அவருடன் விதண்ட வாதம் ஆரம்பிக்கபட்டது.

கேள்வி ஆனது வழுதி புலியில் உண்மையில் இருந்தவர் என்றால் அவரின் தொடர்பு என்ன?

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது.

இந்த வழுதியை பற்றி ஒருதொகை வதந்திகள் உலவுகின்றன. அதை களைய, தெரிந்தோர் இன்னமும் நல்ல தமிழில் ரகுநாதனுக்கு பதிலளிக்க முடியும்.

சிவப்புவைன் கதை எழுதும் வழுதி எதையோ கடத்த வெளிக்கிட்டு மாட்டித்தான் இப்ப .........ஒற்றராக மாற்ற பட்டு K.P, கருணா வரிசையில் என்று கேள்வி.

K.P. என்ற பேர் கேள்வி பட்ட உடனே பத்திக்கொண்டு வருகுது.

உள்ளுக்கை இருந்து அறுக்கிற தாலைதான் K.P யை இழுத்து ஒப்பிடுகிறார்கள். உண்மை முகத்தை காட்டி வெளியில் வருகிறது தானே.

நிச்சயமாக வழுதி ஒருவரையும் ஏமாற்றவில்லை. நினைக்காதது நடந்தால் தான் ஏமாற்றம். எனவே ஒருவரும் ஏமாறவில்லை. இந்த அவ்வளவு பெரிய மனிதனிட்டை பற்றீசியா புட்னிக் மற்றவர்களிடம் கூற சொல்லி சொல்லியிருக்கிறா. அமெரிக்கன் தூதரகமூலம் இந்த உரையாடலை ஒரு confirmation போடித்துவிட்டால் எல்லோரும் உடனே நம்பி விடுவார்களே. யாழில் திரும்ப திரும்ப இணக்கவேண்டி வராதே. அதையேன் இன்னமும் செய்விக்கவில்லை.

இன்னுமொன்று கேள்வி. வழுதிக்கு உண்மையில் சரியாக எழுத தெரியாதாம். அந்தவேலையையும் யாரோதானாம் செய்து கொடுகிறார்களாம்.

எனகென்றால் இப்படி மாட்டிகிட்ட வழுதி அவ்வளவு யதார்த்தமான ஆளாக படல

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.