இது மூட்டைப் பூச்சிகள் பற்றியது இல்லை. ஆகவே இறுதிவரை வாசியுங்கள்.
2019 ஒக்டோபர் மாதம் நானும் மகளும் கம்போடியா போயிருந்தோம். அங்கே விலை மலிவு என்பதால் பத்து நாட்களும் ஐந்து நட்சத்திர தங்குவிடுதியை முற்பதிவு செய்திருந்தாள் மகள். இரண்டு கட்டில்கள் கொண்ட பெரிய அறை அனைத்து வசதிகளுடனும் இருந்தது. முதல் நாள் மாலை வரை சுற்றிப் பார்த்துவிட்டுக் களைப்புடன் வந்து கட்டிலில் படுத்தால் ஒரு அரை மணிநேரம்தான் நின்மதியாகப் படுக்க முடிந்தது. முதுகு கால் கை எங்கும் ஒரே கடி. எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தால் கன்னத்திலும் கடிக்க மின்விளக்கைப் போட்டுவிட்டு எழும்ப, “என்ன அம்மா நித்திரை வரேல்லையா” என்று மகளும் தூக்கம் கலைந்து கேட்கிறாள்.
“சரியான மூட்டைக் கடி” என்கிறேன். மகள் நம்பாமல் “எனக்கு ஒன்றும் கடிக்கவில்லையே. உங்களுக்குச் சும்மா நினைப்பு” என்றுவிட்டு படுக்க, நானும் வேறு வழியின்றித் தூங்கிவிட்டேன். அடுத்தநாள் பார்த்தால் கால்களில் முதுகில் எல்லாம் தடித்தபடி இருக்க, மூட்டைப் பூச்சிகள்தான் கடித்திருக்கு என்று முடிவெடுத்து மகளுக்குக் காட்ட, “எனது கட்டிலில் ஒன்றும் கடிக்கவில்லை. இன்று நீங்கள் நான் படுத்த கட்டிலில் படுங்கள். நான் உங்கள் கட்டிலில் படுக்கிறேன்” என்று கூற, கடி வாங்கினால்தான் தெரியும் என்று மனதில் நினைத்தாலும் சிலநேரம் மகளுக்கு இளரத்தம். கடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் ஓடியது.
அந்தன்றும் சுற்றிப் பார்த்த களைப்புடன் வந்து கட்டில் மாறிப் படுக்கிறோம். காலையில் அலாம் அடிக்கும் மட்டும் நான் எழும்பவே இல்லை. “என்ன நல்ல நித்திரை போல” என்று மகள் கேட்க, நக்கலாகக் கேட்கிறாளோ என நினைத்து “ஓம் நல்ல நின்மதியான நித்திரை” என்றேன். இரவு முழுதும் “ஒரே மூட்டைக் கடி” என்று அவள் சொல்ல எனக்குள் மகிழ்ச்சியில் விளக்குகள் எரிகின்றன.
காலையில் வரவேற்புப் பெண்ணிடம் சென்று முறையிட்டு வேறு அறை வேண்டும் என்று கேட்க, அடுத்த பத்தாவது நிமிடமே அதேபோன்ற வேறு அறை ஒன்றும் தந்துவிட்டார்கள். அதன்பின் மூட்டை கடிக்காவிட்டாலும் எங்கள் உடைகள், பயணப் பொதிகளுடன் மூட்டையும் வந்துவிடுமோ என்னும் பயம் எனக்கு இருந்துகொண்டே வந்ததில் லண்டன் திரும்பிய பிறகு எல்லா ஆடைகளையும் துவைத்துக் காயவைத்து சூட்கேசை வெயிலில் காயவைத்துப் பின்னர் உள்ளே எடுத்து வைத்தபின் தான் நின்மதி வந்தது.
ஒரு மூன்று மாதம் போயிருக்கும். தூங்கிக்கொண்டு இருக்கும் போது முதுகில் மூட்டை கடிப்பது போல ஒரு உணர்வு. சிலநேரம் எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தபின் கடியே இல்லை. அடுத்த நாளும் அப்பிடித்தான். என்னடா கோதாரி காசு குடுத்து கம்போடியா போய் இதையும் கொண்டவந்து சேர்த்தாச்சோ என்னும் நினைப்பு எழ, சீச்சீ இருக்காது என்று மனம் சமாதானம் கொள்ள, உடன ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். பொறுத்திருந்து பார்ப்பம் என்று விட்டால்……. ஒரு வாரம் எந்தவித அசுமாத்தமும் இல்லை. அடுத்த வாரம் மீண்டும் இன்னொரு இடத்தில் கடி. கடித்த இடம் கடுப்பது போல் இருந்து மீண்டும் காலையில் மறந்துபோக, எனக்கு அந்த மூட்டைப் பூச்சி தினமும் கடித்துக் கரைச்சல் தரவில்லைத் தானே. இருந்திட்டுப் போகட்டும் என்ற எண்ணம் வந்ததும் எனக்குள் ஒருவித நின்மதி பரவ ஆரம்பிக்க, எப்ப அது கடிக்கும் என்று நான் எதிர்பார்க்கும் அளவுக்கு எனக்கு அதைப் பிடித்துப்போய் விட்டது என்றால் நீங்களே நம்ப மாட்டீர்கள். இந்தப் பெரிய உடலில் வாரம் ஒருதடவை அது இரத்தம் குடிப்பதால் என்ன கெட்டுவிட்டது என்னும் அளவுக்கு என மனம் வந்துவிட்டது.
ஒரு இரண்டு மூன்று மாதானக்கள் செல்ல “உங்களுக்கு ஏதும் கடிக்கிதோ” என்று மனிசனிட்டைக் கேட்க, “உன்னை மீறி என்னட்டை எது வரப்போகுது, அதோடை ஏன்ர ரத்தம் நல்ல சுத்தம்” என்ற நக்கல் வேறு.
ஒரே ஒரு மூட்டை தான் ஒட்டிக்கொண்டு வந்திட்டிது. நல்லகாலம் என்ற ஒரு ஆறுதல். இரண்டு வந்திருந்தாலே பெருகியிருக்கும். ஒண்டே ஒண்டு எண்டதாலதான் தப்பிச்சன் என மனதைத் தேற்றிய படி இருக்க, அடுத்த வாரம் கால் பகுதியில் கடி. முதுகில் கடிக்காததால் இவர்தான் இரே இடம் அலுத்துப்போய் இடம்பெயர்ந்திருக்கிறார் என்று நம்பியபடி நானும் என்பாட்டில் இருக்க, ஒரு ஆண்டு கோவிட் குழப்பங்களும் பயமும், பயமுறுத்தும் செய்திகளுமாய் இருக்க, அதுவும் மனிசனின் கட்டிலுக்கு இடம்மாறிச்சிதோ என்னவோ நானும் மூட்டை இருக்கிறதையே மறந்துபோனன்.
இன்னும் வரும்