தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(10).
சுமதியும் கதீஜாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு, இவரை நான் புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறேன். மிருதுளாவைப் பார்த்து நீ இவளுக்கு இங்கு செய்ய வேண்டிய வேலைகள் பற்றி விளக்கமாய் சொல்லிக் குடு. அவளின் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். பின் கதீஜாவிடம் நீ இன்று மதியத்துடன் வீட்டுக்கு போய் விட்டு நாளை காலையில் இருந்து வேலைக்கு வரவும். காலை 08:30 க்கு கடைக்குள் இருக்க வேண்டும் என்பதை ரொம்ப அழுத்தி சொல்கிறாள். அவளும் சரி மேடம் என்று சொல்லி விட்டு மிருதுளாவுடன் போகிறாள். பின் சுமதியும் நீங்கள் வேலையைப் பாருங்கள் நான் போட்டு பிறகு வருகிறேன். வெளியே போகிறாள்.....!
மதியம் ஒன்டரைக்கு சுமதி கடைக்கு வர அங்கு மிருதுளா,ரோகிணி,கபிரியலோடு கதீஜாவும் நிக்கிறாள். பிரேமா இன்னும் வேலைக்கு வரவில்லை.
--- ஏன் கதீஜா நீங்கள் 12:00 மணிக்கே போயிருக்கலாமே.
--- பரவாயில்லை மேடம், மிருதுளாவோடு வேலை செய்து கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.சரி நான் போயிட்டு நாளை காலை எட்டரை மணிக்கு வந்து விடுகிறேன். நன்றி மேடம் என்று சொல்லி விட்டு போகிறாள். வாடிக்கையாளர்கள் வருவதும் போவதுமாக கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டரைக்கு பிரேமா அங்கு வருகிறாள். அப்போதும் அங்கு சுமதியைப் பார்த்ததும் அவளுக்கு ஒருமாதிரி இருக்கிறது.
நேரம் 15:00 மணி.சுமதி ரோகிணியை கூட்டிக் கொண்டு தனது ஆபீஸ் அறைக்குப் போகிறாள். அங்கு ஒரு நீளமான மேசையும் அதன் மேல் மறைவாக கடைக் கேமராக்களின் பதிவுகளைக் காட்டும் தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்கிறது. அது கடையின் ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்துக் காட்டிக்கொண்டிருக்கு. ரோகிணியை எதிரில் அமரச் சொல்லி விட்டு பைலில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுக்கிறாள். அதை வாங்கிப் படித்த ரோகிணி,என்ன மேடம் என்னை வேலையில் இருந்து நிப்பாட்டி இருக்கிறீர்கள். நான் ஒழுங்காத்தானே வந்து வேலை செய்து விட்டு போகிறேன்.
--- இல்லை ரோகிணி நீ இந்த மூன்று மாதத்தில் பலநாட்கள் விடுமுறையில் நின்றிருக்கிறாய். ஆனால் நீ திருப்தியாய் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலையும் செய்வதில்லை.
--- எப்படி சொல்லுறீங்கள் மேடம், நான் pole emploi வால் வேலைக்கு வந்தனான். தகுந்த காரணமின்றி நீங்கள் என்னை நிப்பாட்டினால் நான் அவர்களிடம் முறையிட வேண்டி வரும். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சினை.
--- சுமதிக்கு எழும்பி நின்று அறையணும்போல இருக்கு ஆயினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.அதற்குமுன் இதையும் கொஞ்சம் பாருங்கள். தனது போனை எடுத்து இயக்கி அவளின் பக்கம் திருப்புகிறாள். அதில் ரோகிணி வேலைநேரத்தில் கீழ் அறையில் போனில் பாட்டுக் கேட்டு தலையாட்டிக் கொண்டு இருப்பதும், ஆட்கள் வரும்போது விக்ஸ் பூசிக்கொண்டு படுத்திருப்பதும், அவர்கள் போனதும் மீண்டும் பாட்டுக்கு அபிநயம் பிடிப்பதும் துல்லியமாக பதிவாகி இருக்கு.
--- ஆ.....இதல்லாம் எப்படி.....என்னை மன்னித்து கொள்ளுங்கள் மேடம். அப்படியே சரணாகதியாகி விட்டாள்.
--- நான் இப்பவே இதை pole emploi வுக்கு அனுப்ப முடியும். அது மட்டுமல்ல இந்த மூன்றுமாத காலத்திற்குள் உனது வேலை எனக்குத் திருப்தி இல்லையென்றால் உன்னை வேளையில் இருந்து தூக்க அதிகாரமும் இருக்கு. அதேபோல் இந்த வேலை உனக்குப் பிடிக்கவில்லையென்றால் கூட நீயாகவே நிக்கவும் உனக்கும் அதிகாரம் உண்டு. சரி....சரி எனக்கு நேரமில்லை. பேசாமல் கையொப்பமிட்டு விட்டு பேப்பரை எடுத்துக் கொண்டு கிளம்பு. உனது சம்பளப் பாக்கிப் பணம் உனது வங்கிக் கணக்குக்கு வரும். உனக்கு வேலைகள் நன்கு தெரியும். இப்படி நடிப்பது, தேவையின்றி லீவு எடுப்பது போன்ற தவறுகள் செய்யாது விட்டால் நீ நல்லா முன்னேறலாம்.
---ரோகிணியும் கையொப்பமிட்டு கவலையுடன் கடிதத்தை வாங்கிக் கொண்டு போகிறாள்.
அடுத்து வெளியே வந்த சுமதி பிரேமாவை அழைத்துக் கொண்டு ஆபிஸ் அறைக்குப் போகிறாள். அவளிடமும் சுமதி அந்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள். அதை பார்த்த பிரேமா, என்ன சுமதி என்னையும் வேலையை விட்டு நிப்பாட்டி இருக்குதுபோல.
--- ஓம் பிரேமா, எனக்கு வேற வழியில்லை.
--- ஏன் நான் தாமதமாய் வந்து போகிறேன் என்றா.
--- அது மட்டுமல்ல பிரேமா, நீங்கள் எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதனால் புதிதாக கடை திறந்த எனக்கு மிகவும் உதவியாய் இருப்பீர்கள் என்றுதான், உங்களுக்கு இந்த நவீன தையல் முறைகள் தெரியாது என்ற போதிலும் உங்களை வேலைக்கு எடுத்தேன். ஆனால் இங்குள்ளவர்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்பவர் நீங்கள்தான். இது எனக்கு பெரிய ஏமாற்றம்தெரியுமா.
--- நான் மட்டுமா, ஏன் மிருதுளா கூட வெளியே போய்..... போய் வருகிறாதானே.
--- ப்ளீஸ் பிரேமா அவளை பற்றி இப்போது கதைக்க வேண்டாம். இதை நீங்கள் சொல்ல வேண்டிய நேரம் இப்போது அல்ல, முன்பே சொல்லியிருக்க வேண்டும். மிருதுளா வெளியே போய் வருகிறாள், ரேணுகா வேலை நேரத்தில் கீழ் அறையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறாள் என்று. ஆனால் இப்போது நான் பல கண்களால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.நீங்கள் செய்யும் வேலைகள் உட்பட.
--- பிரேமாவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. தலை குனிந்து கொண்டு இருக்கிறாள்.
--- சுமதி மேலும் தொடர்ந்து எட்டரைக்கு திறக்க வேண்டிய கடையை நீங்கள் ஒன்பதரைக்கு வந்து திறப்பதால் இரண்டு வேலையாட்கள் இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்யாமல் வெளியே நிக்கினம். இந்தக் கடைக்கு வரவேண்டிய ஓடர்கள் வேறு இடங்களுக்குப் போய் விடுகிறது. மேலும் நீங்கள் தினமும் 11:30 க்கு போய் பின் 14:30 க்கு வருகிறீர்கள். அதன்பின்பு 16:30 க்கு போய் விடுகிறீர்கள்.
ஒரு பையில் இருந்து வெட்டிய துண்டு துண்டு துணிகளை எடுத்து மேசைமேல் போடுகிறாள். அவற்றைப் பார்த்ததும் பிரேமா திகைத்து விட்டாள், முழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்திடும் போல் இருக்கின்றன. சுமதி தொடர்ந்து இவையாவும் எங்கட கடைத் துணிகள் இல்லை. நீங்கள் பாட்டுக்கு தனி ஓடர்கள் எடுத்து இங்கு கொண்டுவந்து இங்குள்ள பொருட்களை பயன்படுத்தி தைத்துக் கொண்டு போகிறீர்கள். அதிகம் ஏன் இப்போது கூட நீங்கள் கொண்டுவந்த பையில் உங்களது தனிப்பட்ட ஓடர் துணிகள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை உங்களால் மறுக்க முடியுமா. இது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா. உங்களுக்கு பின் வந்த பொடியன் துணிகளை வெட்டிட பழகியதுடன் விதம் விதமாக தைக்கவும் செய்கிறான். உங்களாலும் கூட முயற்சியுடன் வேலை செய்திருந்தால் அது முடிந்திருக்கும். ஆனால்.......சரி ....சரி நீங்கள் கடிதத்தில் கையொப்பமிட்டு விட்டு செல்லுங்கள்.
--- இல்லை சுமதி இது முழுக்க முழுக்க எனது தவறுதான்.இனிமேல் இப்படி செய்ய மாட்டேன். இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கோ. கண்களில் கண்ணீர் முட்டி நிக்கிறது, குரல் தளும்புகிறது.
--- இல்லை பிரேமா ......நீங்கள் விரும்பினாலும் உங்களால் அது முடியாது. உங்களின் பேரப்பிள்ளைகளை காலையில் பாடசாலைக்கு கொண்டுபோய் விடவேண்டும்.மதியம் அவர்களை கூட்டிப்போய் சாப்பிடவைத்து மீண்டும் பாடசாலையில் விட்டுட்டு வரவேண்டும். அதனால் இந்த வேலை உங்களுக்கு சாத்தியமில்லை. புரிந்து கொள்ளுங்கள்.
--- பிரேமாவும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கையொப்பமிட்டு விட்டு கடிதத்தை எடுத்துக் கொள்கிறாள்.
--- உங்களுடைய சம்பளப் பணம் வழமைபோல் வங்கிக் கணக்குக்கு வரும்.என்று சுமதி சொல்கிறாள். இருவருமாக வெளியே வருகிறார்கள். சுமதியும் மறக்காமல் கடையின் சாவிக்கொத்தை அவளிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்கிறாள். பின் பிரேமாவும் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே போகிறாள்.
அடுத்து மிருதுளாவைக் கூட்டிக்கொண்டு ஆபிஸ் அறைக்கு அழைத்து வந்து கவருடன் கடிதத்தைக் கொடுக்கிறாள்.
--- என்ன மேடம் அவர்களைப் போல் எனக்கும் வேலை நிறுத்தக் கடிதம்தானே.......நான் உங்களுடன் விவாதிக்கப் போவதில்லை, நான் செய்த தவறு எனக்குத் தெரியும். என் பொல்லாத நேரம் தப்பு செய்தபோது வேலை இருந்தது, அந்தத் தப்பு விலகியதோடு வேலையும் விட்டுப் போகிறது. என்று சொல்லி கடிதத்தைப் பார்க்காமல் கையொப்பமிடப்போகிறாள்.
--- அவளை இடைமறித்த சுமதி கடிதத்தை வாசித்துப் பார்த்து ஒப்பமிடு மிருதுளா. அப்படித்தான் கடிதத்தில் எழுதியிருக்கிறது. பின் அதைப் படித்துப் பார்த்த மிருதுளா, என்ன மேடம் எனக்கு மேலும் ஆறு மாதங்கள் வேலையை நீட்டித்து இருக்கிறீங்களா.
--- ஓம் மிருதுளா.....நியாயமாய் பார்த்தால் நான் உனக்கு நிரந்தர வேலைக் கடிதம்தான் தந்திருக்க வேண்டும். ஆனால் நீ வேலை நேரத்தில் வெளியே போய் விடுகிறாய் அதன் காரணம் எனக்குத் தெரியாது,அதுதான் இந்த ஆறு மாதகால ஒப்பந்தக் கடிதம். வெளியே உனக்கிருக்கும் பிரச்சினைகள் பற்றி நான் கேட்கப்போவதில்லை. ஆனால் அது தெரிந்தால் உனது வேலை நேரத்தை மாற்றித் தருகிறேன். அதற்கு ஒரே காரணம் உனது வேலைத் திறமையும் வேலை நேரத்தில் உன் உண்மையான உழைப்பும்தான். கடைக்குள் ஒரு நிமிடமும் வீணாக்காமல் ரொம்பத் திறமையாக வேலை செய்கிறாய். அதைபோல் தொடர்ந்தும் நீ வேலை செய்ய வேண்டும். நீ என்னை விட இளையவளானாலும் நான் உன்னிடம் இருந்து நிறைய வேலை கற்றுக்கொள்ள வேண்டும். இதை சொல்ல நான் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. அவ்வளவு கெட்டிகாரி நீ.
--- மேடம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.நீங்கள் என்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்துக்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி மேடம். இப்போது எனது வேலை நேரம் மாற்ற வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வேன். என் வாழ்க்கையில் ஒரு பெரிய தப்பு செய்ய இருந்தேன், இரு நாட்களுக்கு முன் அது எல்லாம் விலகி விட்டது.
--- உனக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் என்னிடம் சொல்லு நான் அதைத் தீர்த்து வைப்பேன்.
--- அதொன்றுமில்லை மேடம், கடந்த ஒரு வருட காலமாக நான் ஒருவரை விரும்பி வந்தேன். அவன் ஒரு வேலையும் செய்யிறதில்லை, எந்த வேலையிலும் நிலைத்து நிப்பதில்லை. (எப்படித்தான் இவங்கள் ஒரு வேலை விட்ட உடனே அடுத்த வேலை எடுக்கிறாங்களோ தெரியாது.) உங்களுக்குத் தெரியுமா நான் இந்த வேலைக்கு வருவதற்கு முன் ஆறு மாதங்கள் chômage சில் வேலை தேடிக் கொண்டிருந்தேன். ( ஒருவர் வேலை இன்றி இருக்கும்போது pole emploi அவர்கள் முன்பு செய்த வேலைகளை கணக்குப் பார்த்து அவர்கள் வேலை எடுக்கும் வரை பணம் குடுக்கும். அது மட்டுமன்றி அவர்கள் வேலை எடுப்பதற்கு உதவிகளும் செய்யும்). இவன் அடிக்கடி என்னிடம் பணம் கேட்பான் நானும் குடுப்பேன்.ஒருநாள் யோசித்து, இவன் என்ன செய்கிறான் என்று சில நாட்களாக அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்து கண்காணித்தேன். பார்த்தால் அந்த அயோக்கியன் என்னைப்போல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான். நான் பின்பு மற்ற இரு பெண்களையும் சந்தித்து அவரின் ஏமாற்று வேலைகள் எல்லாவற்றையும் சொல்லி இரண்டு நாட்களுக்கு முன் நாங்கள் மூவருமாக சேர்ந்து அவருக்கு நல்லா அடி, குத்து, உதை எல்லாம் குடுத்து விட்டு வந்தோம். இனி நான் யாரையும் நம்பி ஏமாறமாட்டேன் மேடம்.
--- ஏன் நீ அவனுடன் செக்ஸ் ஏதாவது ......
--- அந்த கன்றாவியை ஏன் கேட்கிறீங்கள் மேடம், அந்த கயவனை காதலன் என்று நம்பி நாலைந்து முறை டேட்டிங் எல்லாம் போனோம், எல்லாம் என் செலவில்தான்.
--- சுமதியும் அடிப்பாவி என்று சொல்ல அவளும் நானாவது பரவாயில்லை மேடம்.அதுல ஒருத்தியுடன் அவன் "லிவிங் டு கெதராய்" வாழ்ந்து வந்திருக்கிறான். (இருவரும் கவலையை மறந்து சிரிக்கிறார்கள்).
பின் சுமதியும் அவளிடம் கடைச் சாவிக்கொத்தை குடுத்து இனிமேல் நீதான் காலையில் வந்து கடை திறக்க வேண்டும். கடை திறந்ததும் நேரே உள்ளே போகக் கூடாது. முதலில் அலாரமை நிறுத்த வேண்டும்.தவறினால் அது சத்தமிட்டு ஊரைக் கூட்டிவிடும். போலீசும் வந்து விடுவார்கள் ஆதலால் கவனமாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறாள்.
--- மிருதுளாவும் அது எனக்கு தெரியும் மேடம்.பிரேமாவுடன் சில சமயங்களில் நானும் திறந்திருக்கிறேன் என்கிறாள்.......!
இன்னும் தைப்பார்கள்.......! 👗