"நன்றியுள்ள நண்பன்" [நாய்]
பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும், தான் கக்கியதையே திரும்பவும் உணவாகக் கொள்ளும் நாயின் மேல் எனக்கு ஒரு அருவருப்பு எப்பவும். அது. மட்டும் அல்ல, ஒரு துண்டு பிஸ்கட் போட்டால் போதும். வாலை ஆட்டி, நம்முடன் வரும் அதே நாய், வெறி பிடித்து விட்டால், பிஸ்கட் போடுபவனையே கடித்து குதறியதும் கேள்விப்பட்டுள்ளேன். அதனாலோ என்னவோ நான், நாய் வளர்ப்பதை எங்கள் வீட்டில் தடுத்துவிட்டேன். என்றாலும் பக்கத்து வீட்டில் நல்ல அழகான நாய் வளர்ந்து வந்தது. நான் வேலைக்கு போகும் பொழுது அல்லது திரும்பி வரும் பொழுது, அந்த வீட்டு அம்மா, தன் செல்ல நாயுடன் படலையில் பிராக்கு பார்த்துக்கொண்டு நிற்பார். என்னை கண்டால் தம்பி, எப்படி சுகம் என்று விசாரிப்பது வழக்கம். அப்பொழுது அந்த அவர்களின் நாய் என்னைச் சுற்றி துள்ளி குதிக்கும். நான் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.
'நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா, நன்றி கெட்ட மகனை விட, நாய்கள் மேலடா'
நான் பக்கத்து வீட்டை கடந்து போகும் போதும் வரும் போதும் , அந்த அவர்களின் நாய், வால் ஆட்டிக்கொண்டு என் காலடிக்கு வரும். ஆனால் நான் கெதியாக நடந்து அதை கடந்து போய்விடுவேன், ஆனால், பக்கத்து வீட்டு அம்மா அதை பார்த்து சிரிப்பார். ஏ தம்பி, ‘யாவரினுங் கடையனாய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு’ என்று மக்களைக் காட்டிலும் விலங்கு இழிபிறப்புடையது; விலங்கில் மிக இழிந்தது நாய். நாய் போன்ற இழி பிறப்புடையவன் யான் என்று மாணிக்கவாசகர் ஆண்டவனிடம் கூறியது தெரியாதோ என்று கேட்டார். நான் அதற்கு “நாற்பது வயதில் நாய் குணம்“ தானே? ஒருவேளை அவருக்கு நாற்பது வயதோ ? என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன்
எம் வீடு மலை நாட்டில் இருந்ததால், எங்கள் வீட்டிற்குப் பின்னால் ஒரு சிற்றோடை ஒன்று இருந்தது. இது ஒரு சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இது ஆற்றை விடச் சிறியது என்றாலும், தாராளமாக அதில் நீந்தக் கூடிய அளவு நீர் ஓடிக் கொண்டு இருக்கும். எனவே நான் தினம் அதில் நீந்துவது வழமை. இந்த சிற்றோடை அருகில் இருக்கும் ஆற்றிலிருந்து பிரிந்து வருகிறது. நீர் பெரிய தாழம் இல்லை, ஆனால் விரைவாக ஓடுகிறது. அது எமது வீட்டை தாண்டி, கீழ்நோக்கி ஓடி, ஒரு முக்கால் மைல் தூரத்தின் பின் ஒரு நீர்வீழ்ச்சி மீது விழுகிறது. நான் அப்படி தினம் நீந்தும் பொழுது, எனோ, அந்த பக்கத்து வீட்டு நாயும் வந்துவிடும். நான் கல் எறிந்து துரத்தினாலும், அது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் என்னை பார்த்த படியே இருக்கும். நானும் அதை பின் கவனிக்காமல் விட்டு விட்டேன்
ஒரு கோடை காலத்தில், அன்று நான் அரை நேரத்தில் வேலையில் இருந்து திரும்பியதால், வழமைக்கு முதலே நான் நீந்த ஓடைக்கு போனேன். கையில் ஒரு கல்லுடன். நீருக்குள் போகுமுன் சுற்றிப்பார்த்தேன், அந்த பக்கத்து வீட்டு நாயை காணவில்லை. ஒருவேளை நான் இன்று முந்தி வந்ததால், கவனிக்கவில்லையோ என்று சிந்தித்தபடி, கல்லை எறிந்துவிட்டு , நீரில் குதித்தேன்.
அன்று தண்ணீர் மிகவும் நன்றாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் வழமையை விட அதி வேகத்துடன் ஓடிக்கொண்டு இருந்தது. ஆகவே என்னை கீழே போகும் நீர் இழுத்து போக கொஞ்ச நேரம் விட்டுவிட்டு, பின், மேல் நோக்கி, ஓடைக்கு எதிராக நீந்தி பொழுதைக் கழித்தேன். அது மிகவும் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருந்தது. ஆனால், நேரம் போகப் போக திரும்பி, ஓடைக்கு எதிராக நீந்துவது கடினம் கடினமாக களைப்பினால் வரத் தொடங்கியது.
இனி இப்படி நான் நீந்துவதை நிறுத்தவேண்டும் என்று யோசிக்கும் பொழுது தான் , நான் உணர்ந்தேன் , நான் ஏற்கனவே கீழ் நோக்கி பலதூரம் போய்விட்டேன் என்று. என்னால் நீர் அருவியின் மீது, நீர் பாயும் சத்தமும் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. நான் உடனடியாக மேல்நோக்கி நீந்த முற்சித்தேன். ஆனால் என் உடல் அதற்கு இடம் அளிக்கவில்லை. அப்பத்தான் என் தனிமை, வரப்போகும் பயங்கரம் எல்லாம் என் கண்முன் நிழலாக வந்தன. அந்த நேரம் என் கண்ணின் ஒரு கோணத்தில், அந்த பக்கத்து வீட்டு நாய் ஓடையின் கரையில் மிகவும் வேகமாக கீழ் நோக்கி ஓடுவதைக் கண்டேன். அது என்னை கடந்து போனபின், நீரில் குதித்து, நடுப்பகுதியில் தன்னை மிதக்க வைத்துக்கொண்டு என்னையே விடாமல் பார்த்துக் கொண்டு காத்து நின்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை . ஒரு வேளை நான் கல்லால் எறிவானோ என்று அப்படி நிற்கிறதோ என்று எண்ணினேன். என் உடலில் பலம் இப்ப இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை, ஓடை நீர் என்னை வாரி அள்ளிக் கொண்டு போக தொடங்கி விட்டது. நான் அந்த பக்கத்து வீட்டு நாயை கடந்ததும் , அந்த ஆழமான நீர் வீழ்ச்சியில் விழப் போகிறேன். அது என் முடிவு என்று எண்ணி கண்ணை இருக்க மூடிவிடடேன்,
என்றாலும் சற்று நேரத்தின் பின் கண் திறந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம் ! நான் நீர் ஓட்டத்துடன் நாய்க்கு கிட்ட கிட்ட வர, அந்த நாயும் தன்னை என்னைத் தடுக்கக் கூடியதாக சரிப்படுத்திக் கொண்டு இருந்தது . அப்ப தான் அந்த நாயின் திட் டம் எனக்குப் புரிந்தது. நான் அதற்கு கிட்ட போனதும் அதன் நீண்ட உரோமத்தை இருக்க பிடித்துக் கொண்டேன் அது உடனடியாக குறுக்கே நீந்தி கரையை அடைந்தது.
நானும் பக்கத்து வீட்டு நாயும் கரையை அடைந்ததும், ஓடையில் இருந்து வெளியே வந்து, அந்த கரையிலேயே களைப்பினால் படுத்துவிட்டேன். ஆனால் அந்த நாயோ , அப்படியே என்னை விட்டுவிட்டு ஒரே பாச்சலில் பாய்ந்து எங்கள் வீட்டு பக்கத்தை நோக்கி, மலையில் ஏறி ஓடத்தொடங்கி விட்டது. நான் தனிய அந்த களைப்புடன், படுத்து இருப்பது கொஞ்சம் பயமாக இருந்தது. அதை கூப்பிடுவோம் என்றால், அதன் பெயர் கூட எனக்குத் தெரியாது. பக்கத்து வீட்டு அம்மா தன் மகளின் செல்லப் பிராணி என்றும் , அதை அவள் எதோ ஒன்று சொல்லி கூப்பிடுவதாக சொன்ன ஞாபகம். அந்த பெயர் என் மனதில் வரவே இல்லை. ஆகவே நான் மீண்டும் மணலில் படுத்தேவிட்டேன்.
பிறகு என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றும் தெரியாது. நான் கண் விழிக்கும் பொழுது முதல் உதவியாளர்கள், அந்த பக்கத்து வீட்டு நாய், அந்த அம்மாவின் மகள் எல்லோரும் என்னை சுற்றி தேவையான உதவிகள் செய்து கொண்டு நிற்பதைக் கண்டேன். எனக்கும் ஓரளவு தெம்பு வந்துவிட்டது. அந்த நாய் நான் முழித்ததை கண்டதும் வாலை ஆடிக்கொண்டு பக்கத்தில் வந்து காலை நக்கியது. நான் இப்ப அருவருப்பு அடையவில்லை, கல்லால் எறியவும் இல்லை, அதை அணைத்தபடி, பக்கத்து வீட்டு அம்மாவின் மகளை பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை கொள்ளை அழகு. அவள் மெல்லிய புன்னகை சிந்தியபடி, நான் எழும்ப கை நீட்டினாள்! அன்று அவளின் கை பிடித்தவன் தான், இன்று அதை நிரந்தரமாகி விட்டேன் . இப்ப என் தனிக் குடும்பத்தில், நானும், அவளும் அந்த நாயும் தான்! ஒன்று சொல்ல மறந்து விட்டேன், அந்த நாயின் பெயர் பப்பு , அவளின் பெயர் ஜெயா
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]