பாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே
---------------------------------------------------------------------------
ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது. கொஞ்ச தூரத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. ஆனால் என்னை வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் பாடசாலையிலேயே சேர்த்தார்கள். என்னை மட்டும் இல்லை, எங்கள் வீட்டில் எல்லோரும் அந்தப் பாடசாலைக்கு தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். அது தான் எங்களின் பரம்பரைப் பாடசாலை என்று காரணம் கூறப்பட்டது. சார்பட்டா பரம்பரைக் கதைகள் போல பரம்பரைப் பெருமைகள் எதுவும் வெளி வந்திருக்காத அந்த நாளில், இது என்ன பெரிய பரம்பரை, இதற்காக நான் ஏன் நேர்த்திகடன் போல தினமும் நடக்க வேண்டும் என்று அலுப்பாக இருந்தது. அந்தப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது.
சில நாட்களில் நான் போகும் பொழுது பாடசாலையின் கதவுகள் திறந்திருக்காது. அவ்வளவு முன்னரே அங்கு போயிருக்கின்றேன். படிப்பில் எக்கச்சக்கமான ஆர்வம் என்றோ, பாடசாலையில் விருப்பமோ என்றில்லை. இது ஒரு பிறவிப் பழக்கம். இன்றும் இது தொடர்கின்றது. பாடசாலைக்கு அருகிலேயே ஒரு ஆசிரியரின் வீடு இருந்தது. அவர் வீட்டில் போய்க் கேட்டால், வந்து கதவைத் திறந்துவிடுவார்கள். ஆசிரியர் அலுத்திருக்கமாட்டார், ஆனால் அவர் வீட்டில் இருந்தவர்களுக்கு இது அலுப்பாக இருந்திருக்கக்கூடும்.
பாடசாலை முடிந்தால் வீட்டை எப்போதும் போய்க் கொள்ளலாம். தேடவே மாட்டார்கள். ஒரு நாள் பூரா போகாமல் இருந்தால் கூட, அப்படி ஒரு நாளும் நடக்கவில்லை, அடுத்த நாள் வந்து விடுவான் என்று இருந்திருப்பார்களோ தெரியாது. எப்போதும் பாடசாலைக்கு வருவது ஒரே வழியில் தான் என்றாலும், திரும்பிப் போவதற்கு மூன்று வழிகள் இருந்தன. வந்த வழியிலேயே, தெருக்களினூடாக, திரும்பிப் போவது முதலாவது வழி. இரண்டாவது வழி கடற்கரையின் வழியே நடந்து போய், பின்னர் ஒரு ஒழுங்கையினூடாக பிரதான வீதியைக் கடந்து வீட்டுக்கு போகும் வழி. மூன்றாவது வழி கடலினூடாக நடந்து போவது. முழங்கால் ஆழம் வரை இருக்கும் கடலுக்குள் போய், பின்னர் அப்படியே நடப்பது. இது ஒரு பெரிய உடற்பயிற்சியாக இன்று உலகெங்கும் செய்யப்படுகின்றது. நாங்கள் அன்று முழங்கால் அளவு ஆழக் கடலில் பறந்திருக்கின்றோம். பவளப்பாறைகள் காலைக் கிழித்து இரத்தம் சொட்டச் சொட்ட எதுவுமே நடக்காத மாதிரி இருந்திருக்கின்றோம்.
கடல் பொங்குவதும், கடல் வற்றி நீர் உட் போவதும் ஒரு சுழற்சியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. சில நாட்களிலேயே இந்த அறிவு அனுபவத்தில் வந்துவிட்டது. எந்த நேரம் கடல் பொங்கும், எப்போது நீர் வற்றும் என்று தெரிய ஆரம்பித்திருந்தது. பாடசாலை விடும் நேரத்தில் கடல் பொங்கும் என்று தெரிந்தால், அன்று அந்தப் பாதையை தவிர்த்து, வந்த வழியிலேயே தெருக்களினூடாக வீட்டுக்கு போக வேண்டும். அப்படியே உடனேயே நேரே போய் வீட்டை என்ன தான் செய்வது. போகும் வழியில் மூன்று வாசிகசாலைகள் இருந்தன. சந்தியில் இருந்த வாசிகசாலை பெரியது. ஆங்கில, தமிழ் செய்தித்தாள்கள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற இந்திய வார வெளியீடுகள், டொமினிக் ஜீவாவின் மல்லிகை என்று எல்லா வகையானவைகளும் அங்கே போடப்பட்டுக்கொண்டிருந்தன.
அந்த வயதில் எப்போதும் என்னை ஈர்த்தது சினிமாச் சஞ்சிகைகளான பொம்மையும், ஜெமினி சினிமாவும் தான். ஒரு பத்து வயது அளவில் இருக்கும் பையனுக்கு இவை தான் அன்றைய டிக்டாக். ஜெமினி சினிமாவில் நடுப்பக்கத்தில், இரண்டு பக்கத்தையும் சேர்த்து, ஒரு நடிகையின் படம் இருக்கும். ஆனால் அதை யாரோ புதிதாக ஜெமினி சினிமாவை போட்ட அன்றே கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். இதை ஒரு பிரச்சனையாக பெரியவர்கள் கதைத்தார்கள். எல்லோரும் அந்தப் படத்தை பார்த்த பின், அந்தப் படத்தை கிழித்துக் கொண்டு போனால் பரவாயில்லை என்று நினைத்தார்களோ என்னவோ. அதனால் ஜெமினி சினிமாவிற்கு கிட்டே போய் வருபவர்களை எல்லோரும் கொஞ்சம் கவனமாகவே பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொம்மைக்கு அவ்வளவு காவலும், கண்காணிப்பும் இருக்கவில்லை.
அன்று பொம்மையில் வரும் கேள்வி - பதில் பகுதி மிகவும் பிடிக்கும். அன்று ஆகப்பெரிய அறிவாளிகள் என்று நான் நினைத்திருந்தது எம்ஜிஆரையும், சிவாஜியையும் தான். ஒரு பொம்மையில் கேள்விகளுக்கு சிவாஜி பதிலளித்து இருந்தார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் எது என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 'செந்தூர பூவே செந்தூர பூவே...........' என்று அவர் பதில் சொல்லியிருந்தார். நான் இந்த பாடலை அதுவரை கேட்டிருக்கவில்லை. இந்தப் பாட்டை எப்படியாவது கேட்டு விடவேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக்கொண்டேன்.
அடுத்த நாள், வழமை போலவே, நான் பாடசாலை போன பொழுது, பாடசாலைக் கதவு பூட்டியிருந்தது. மெதுவாக ஆசிரியரின் வீட்டுக்குள் போனேன். 'சரி வா.................' என்று ஆசிரியர் திறப்புக் கொத்துடன் வந்தார். அந்த நேரம் அவர்களின் வானொலியில் 'செந்தூர பூவே செந்தூர பூவே..........' என்று ஆரம்பித்தது. நான் அசையவேயில்லை.
ஆயிரம் தடவைகள் அல்லது அதற்கு மேலும் இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டேன். இந்தப் பாடல் அசைய விடுவதேயில்லை. காணொளியாகப் பார்த்தாலும் அப்படியே. ஶ்ரீதேவியை அவரின் வீட்டில் இருந்து கூட்டி வந்து, இந்தப் பாடலில் அப்படியே நடிக்க வைத்திருப்பார்கள். அவர் இந்தப் பாடலில் கொஞ்சம் கறுப்பாக இருப்பது போல இருக்கும். ஒரு ஊரில் இருக்கும் மிக அழகான பெண் போன்று தான் இருப்பார். ஒரு நடிகை போன்று இந்தப் பாடலில் அவர் இருக்கவில்லை.
இப்போது எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் அப்படியே அவரின் கடைசி நாட்களும் ஞாபகத்திற்கு வரும். அது வேற ஶ்ரீதேவி, செந்தூரப் பூ ஶ்ரீதேவி வேற என்றும் மனதில் தோன்றிக் கொண்டிருக்கின்றது.