'மும்மொழிக் கொள்கை என்னும் முதிர்ச்சியின்மை முடிவுக்கு வருமா......' என்ற தலைப்பில் நல்லதொரு கட்டுரையை பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் மின்னம்பலத்தில் எழுதியிருக்கின்றார்: https://minnambalam.com/political-news/immaturity-of-the-trilingual-policy/ இந்தக் கட்டுரையில் மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கு எப்படி ஒரு சுமையாகின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அத்துடன் மூன்றாவது மொழியோ அல்லது ஹிந்தியோ தெரியாமல் இருக்கும் தமிழ்நாடு எந்தத் துறையிலும் பின்னே நில்லாமல், மாறாக முன்னேயே, மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக, போய்க் கொண்டிருக்கின்றது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. கட்டுரையில் பேசப்படாத, ஆனால் இந்த தலைப்புக்கு தொடர்பான ஒரு விடயம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்களின் தெரிவாக என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது. திராவிடம் பேசும், தமிழ்த் தேசியம் பேசும், இரண்டையும் கலந்து கொண்டிருக்கும் என்று பொதுவாழ்வில் மேடையேறும் மிகப் பெரும்பான்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்கள் பிள்ளைகளையும், சந்ததிகளையும் தமிழ் மொழி ஊடாகவோ அல்லது அரச பாடசாலைகளிலோ படிப்பிப்பதில்லை. தனியார் ஆங்கிலப் பாடசாலைகளிலேயே இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். தரமான தமிழ் பாடசாலைகளே இங்கு இல்லை என்று அவர்களின் வசதிக்கேற்ப ஒன்றையும் சொல்லிவிடுகின்றனர். ஆனாலும், ஒவ்வொரு பரீட்சையிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை தமிழ் மொழி மூலம் படிக்கும் பல மாணவர்கள் பெற்றுக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் இன்றைய தலைவரான நாராயணன், முந்தைய தலைவரான சிவன், இப்படி எண்ணற்றவர்கள் தமிழ்மொழி மூலமே கல்வி கற்றவர்கள். அதுவும் கூட, தமிழ்நாட்டில் பாடசாலைகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று சட்டத்தின் பின்பு தான், தமிழ் மொழியை தனியார் பாடசாலைகளில் இன்று படிப்பிக்கின்றார்கள். அதற்கு முன், அங்கு மாற்றீடாக வேறு மொழிகளையே, உதாரணம்: பிரெஞ்ச், சமஸ்கிருதம், படிப்பித்தார்கள். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் வராதிருந்தால், திராவிடத் தலைவர்களினதும், தமிழ் தேசியத் தலைவர்களினதும் பிள்ளைகள் தமிழை ஒரு பாடமாகக் கூட படித்திருக்கமாட்டார்கள். சமஸ்கிருதத்தையே படித்திருந்திருப்பார்கள். சமஸ்கிருதமே பலரின் தெரிவாக இருந்தது, காரணம் மிக இலகுவாக அங்கு அதிக புள்ளிகள் கிடைக்கும் என்பதால். நடிகர்களிடம் ஏமாறுவது போலவே, இந்த அரசியல்வாதிகளிடமும் மக்கள் ஏமாறுகின்றனர்.