சுமேரியரும், குமாரசாமியும் பென்சன் எடுத்துவிட்டு, நாட்டுக்குப் போய் காணியைத் துப்பரவாக்கி ரஜினி மிளகாய்த் தோட்டம் வைக்க ஆலோசனைகள் செய்து கொண்டிருப்பதைக் ‘நானும் ஊர்க்காணியும்’இல் வாசித்ததன் பின்னர், எனக்கு இந்தச் செய்தி வாசிக்கக் கிடைத்தது. அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு இப்பொழுது 66 வயது. அவருக்கு மார்ச் 19ந் திகதி பெர்லினின் சாரிடே மருத்துவமனையில் பத்தாவது குழந்தை பிறந்திருக்கின்றது. பத்துப் பிரசவங்களில் ஏழு பிரசவங்கள் சிசேரியன் மூலம் நிகழ்ந்திருக்கின்றன. அவரது முதல் (பெண்) குழந்தைக்கு தற்போது 45 வயது. மருத்துவராக இருக்கிறார். சரி எப்படி இதெல்லாம் உங்களுக்குச் சாத்தியமாயிற்று என்று அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டைக் கேட்டால், நான் மிகவும் “ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுகிறேன், ஒவ்வொரு நாளும், தவறாமல் ஒரு மணி நேரம் நீந்துவேன், இரண்டு மணி நேரம் ஓடுவேன். புகைபிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தியதில்லை” என்கிறார். ஏற்கனவே அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள். அத்துடன் இப்பொழுது பிறந்த குழந்தையையும் சேர்த்துக் கொண்டால் அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 66வயது என்பது யேர்மனியில் பென்சனுக்குப் போகும் வயது. இந்த வயதில் அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட் செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்தால் 6 ஏக்கர்களென்ன 60 ஏக்கர்களிலே கூட ரஜினி மிளகாய்த் தோட்டம் செய்ய குமாரசாமியால் முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனாலும் ஒன்றைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவருக்கு குமாரசாமிக்கு இருப்பது போன்று முழங்கால்ப் பிரச்சனை. அடிக்கடி மருத்துவ விடுமுறைகள் எடுத்துக் கொள்வார். வேலையிடத்தில் முகம் சுழிக்க,எதற்குத் தொல்லை என வேலையை விட்டு விட்டார். பதினெட்டு மாதங்கள் அவருக்கு Kranken Geld (Sick Pay) கிடைத்தது. அதேநேரத்தில் wassergymnastik (water gymnastics)க்குப் போகும்படி மருத்துவரும் மருத்துவக் காப்புறுதி நிறுவனமும் அவருக்கு அறிவுறுத்தினார்கள். முதற் கட்டமாக ஐம்பது தடவைகள் அவர் wassergymnastikக்குப் போக வேண்டியிருந்தது. ஒரு தடவை தவறினாலும் அதற்குக் காரணம் சொல்ல வேண்டும். அத்துடன் தவற விட்ட wassergymnastik பயிற்சிகளையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. பதினெட்டு மாதங்கள் முடிய Kranken Geld (Sick Pay) நிறுத்தப்பட்டு, இரண்டு வருடங்களுக்கு Arbeitslosengeld (Unemployment benefit) வழங்கினார்கள். அந்த இரண்டு வருடங்களும் முடிய Bürgergeld (Citizen's allowance) வழங்கத் தொடங்கினார்கள். ஆனால் இந்த Arbeitslosengeld (Unemployment benefit) வழங்கத் தொடங்கிய காலம் தொடக்கம் அவர்கள் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. முழங்காலில் வலி இருப்பதால், இருந்து செய்யும் வேலைகளைப் பரிந்துரைத்தார்கள். வேலை கிடைக்கும் வரை வேறு தொழில்கள் பயில Berufliche Fortbildungszenten (Vocational training centers)க்கு அனுப்பினார்கள். கணிணியில் கொஞ்சம் தெரியும், கணக்கும் நன்றாக வரும் என்று அங்கே அவர் சொல்ல அது சம்பந்தமான சில தொழில் கல்விகளை அவருக்குப் பரிந்துரைத்து, உங்களுக்கு விருப்பமானதைத் தெரிவு செய்யுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள். “அவசரப்பட்டு விட்டேனா?” என அவர் என்னிடம் கேட்டார். யேர்மனியில் பென்சன் எடுப்பது ஒன்றும் லேசான காரியமில்லை. குமாரசாமி தனது முழங்கால் நோவைக் காட்டி சீக்கிரமாகப் பென்சன் எடுக்க நினைத்தால் சற்றுச் சிந்திக்க வேண்டுகிறேன்.