பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சித்தாநாத் கானு பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 155 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தில் மோதியது. இதையடுத்து, விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்புவது இனி சாத்தியமில்லை என்பதை விமானி உடனடியாக உணர்ந்தார். எனவே, அவர் விமானத்தை ஆற்றில் தரையிறக்கினார். அது, யுஎஸ் ஏர்வேஸ் 1549 எனும் விமானம். நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விமானம் தரையிறக்கப்பட்டதால், இச்சம்பவம், 'மிராக்கிள் ஆஃப் ஹட்சன்' என்றும் அறியப்படுகிறது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிர்தப்பினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் விமானத்தை 'நீரில் தரையிறக்கிய' விமானி செஸ்லீ சல்லன்பெர்கர் என்கிற சல்லி. விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தன பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பலத்த நீர் ஓட்டம் இருந்தபோதிலும், எந்த பயணிக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2016ம் ஆண்டில் 'சல்லி' ('Sully') எனும் படமும் வெளியானது, அதில் விமானி கதாபாத்திரத்தில் டாம் ஹேங்க்ஸ் நடித்திருந்தார். 2009ம் ஆண்டு ஜனவரி 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்திலுருந்து வட கரோலினாவுக்கு விமானம் செல்லவிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஹஸ்டன் நதியில் இறங்கியது. விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே, அதில் பறவைக் கூட்டம் மோதியதால், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதடைந்தன. அதன்பின், விமானத்தின் அனுபவம் வாய்ந்த விமானி சல்லன்பெர்கர், லாகார்டியா விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் தான் ஹட்சன் நதியில் விமானத்தை தரையிறக்குவதற்கு முயற்சி செய்வதாக கூறினார். இது மிகவும் அசாதாரணமான, மிகவும் ஆபத்தானதாகும். சுமார் மூன்றரை நிமிடங்கள் பறவைகள் விமானத்தில் மோதிய பின், அந்த விமானம் நதியில் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானத்தின் பின்பகுதி தான் முதலில் ஆற்றில் இறங்கியதால், தண்ணீர் விமானத்துக்குள் புகுந்தது. ஆனால், இது விமானத்தை துண்டுதுண்டாக நொறுக்கவில்லை. அவசரகால கதவுகள் மற்றும் அதன் இறக்கை பகுதிகள் வாயிலாக பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறினர். அப்போது, விமானம் நீரில் மிதப்பதையும் அதன் இருபுறமும் உள்ள இறக்கையின் மேலே பயணிகள் நிற்பதையும் காட்டும் தனித்துவமான படத்தை இந்த உலகம் கண்டது. மோசமான குளிரில் மீட்பு நடவடிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானம் ஹட்சன் ஆற்றில் தரையிறங்கியபோது உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். விமானம் ஆற்றில் தரையிறக்கப்பட்ட சமயத்தில், ஹட்சன் நதியில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நியூ யார்க்கில் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும். இச்சம்பவம் நடந்த நாளில் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால், ஆற்றில் விமானம் இறங்கிய சில நிமிடங்களிலேயே அருகே இருந்த படகுகள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இந்த துரிதமான நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இத்தகைய அசாதாரணமான, ஆபத்தான முறையில் விமானம் நீரில் இறங்கியதால், ஒரேயொரு பயணிக்கும், விமானக்குழுவினர் ஐந்து பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. 78 பேருக்கு சிறியளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அச்சமயத்தில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர், பயணிகளின் அதிர்ஷ்டத்தாலும் விமானியின் திறன் மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கைகளாலும் அனைவரும் உயிர் தப்பியதாக கூறியிருந்தார். அப்போதைய நியூ யார்க் மேயர் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம், "ஆற்றில் விமானத்தை தரையிறக்கி விமானி சிறப்பாக செயல்பட்டதாக" தெரிவித்தார். விமானம் ஆற்றில் இறங்கியவுடன், யாரேனும் விமானத்துக்குள் சிக்கியுள்ளனரா என முழு விமானமும் இருமுறை பரிசோதிக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரிதும் பாராட்டப்பட்டார், ஆனால் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. விமானி சல்லன்பெர்கர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய துரிதமான முடிவுக்காக விமானி சல்லன்பெர்கர் இன்றும் அறியப்படுகிறார் அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு இதுகுறித்து விசாரித்தது. ஆற்றில் விமானத்தை தரையிறக்கிய முடிவு சரியானதுதான் என, விசாரணையை அந்த அமைப்பு முடித்துவைத்தது. சில நாட்களில், குறிப்பிட்ட விமானம் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்காவின் கரோலினாஸ் ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் தன் 16வது வயதில் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினார். அமெரிக்காவின் விமானப் படை அகாடமியில் 1973ம் ஆண்டு அவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் விமானப் படையில் போர் விமானியாக இணைந்தார். 1980ம் ஆண்டில் தனியார் விமானப் போக்குவரத்து துறையில் விமானியாக இணைந்தார். அவசரகாலத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட உதாரணமாக இச்சம்பவம் உள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக விமானி சல்லன்பெர்கர் 20,000 மணிநேர பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். சுமார் 40 ஆண்டுகள் அவர் விமானியாக இருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9v97er3m0o