(குறுங்கதை)
ஒரு கிலோ விளாம்பழம்
---------------------------------------
பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான்.
'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?'
'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......'
சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான்.
வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர்.
இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது.
இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ?
அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான்.
ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள்.
பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள்.
ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர்.
இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது.
மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை.
இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல.
முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது.
ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர்.
பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே.
கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான்.
வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.