Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ? [/size]

சஞ்சயன்

111.jpg

முழு நிலாவின் ஒளி மட்டக்களப்பு வாவியில் மினுங்கிக் கொண்டிருந்தது. நண்பரின் மோட்டார்சைக்கிளில் உட்கார்ந்திருந்தேன், நான். மீண்டும் படுவான்கரைப்பக்கமாக ஒரு காணாமல் போன போராளியின் மனைவியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தோம். இரவு எமக்கு முன்பாகவே ஊருக்குள் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது.

தார் ஊற்றப்பட்ட வீதிகளைக் கடந்து கிறவற் பாதைகளினூடாக அவர்கள் வாழும் இடந்தை அடைந்த போது மணி ஏழிருக்கும். அவர்களின் ஒழுங்கையினுள் நாம் நடந்து போது நாய்கள் எம்மை வரவேற்றன. பயந்தபடியே நண்பரின் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். அவரோ மிக அலட்சியமாய் இருட்டில் வழி தெரிந்தவர் போல் நடந்துகொண்டிருந்தார்.

அவர்கள் வீட்டருகே நாம் சென்றதும், நண்பர் உள்ளே சென்று உரையாடிய பின் என்னை அழைத்தார். வீட்டினுள் நழைந்ததும் முதலில் என் கண்ணில் தெரிந்தது சுவாமி விளக்கும் அதன் பின்னே எப்போதும் சிரிக்க மட்டுமே தெரிந்த முருகனும், அவரின் குடும்பப்படமும்.

அயல் வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் கதிரைகள் கொண்டுவந்து போடப்பட்டன. குப்பி லாம்பின் வெளிச்சத்தில் எங்களைக் குசினுக்குள் இருந்த இரண்டு பெண்கள் கவனிப்பது தெரிந்தது. அவர்களுடன் மேலாடையற்ற ஒரு சிறுவனும் நின்றிருந்தான். எம்முடன் உட்கார்ந்திருந்த அவர்களின் தாய் பேசத்தொடங்கினார்.

திருமணமாகி சில வருடங்களின் பின் இவரின் வாழ்வு தடுமாறத் தொடங்கியிருக்கிறது. சிலம்பாட்டம் மற்றும் கராட்டி ஆகியவற்றில் விற்பன்னரான கணவர் மதுவிற்கு அடிமையாகி இருக்கிறார். மனைவியால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நண்பர்கள் அவரை இயக்கத்தில் இணைத்துள்ளனர். அந்த நாட்களில் இயக்கத்தில் திருமணமானவர்கள் இணைக்கப்படாததால் அவரை திருமணமாகாதவர் என்று கூறியே இணைத்திருக்கிறார்கள். அவரும் இயக்கத்தில் இணைந்து வன்னி சென்றிருக்கிறார். மதுப்பழக்கமும் அவரைவிட்டு அகன்றிருந்தது.

களமாடிய அவரைத் தேடிச்சென்ற மனைவி குழந்தைகளை சந்தித்த அவர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் தாய் தந்தையரை இழந்த ஒரு முன்னாள் போராளியின் குழந்தையை தத்தெடுத்திருக்கின்றனர். பின்னர் அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். அதன் பின்பு மீண்டும் மட்டக்களப்பிற்கு திரும்பி சாதாரணவாழ்வினை மேற்கொள்ள முயற்சித்த காலங்களில், கிழக்கின் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அப்போதும் வன்னித் தலைமைக்கு விசுவாசமாய் நடந்து கொண்டதனால் இவரது குடும்பத்தவர்கள் பலத்த சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டு, ஊரைவிட்டு வெளியேறுமளவுக்கு சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இருப்பினும் அவர் சிரமத்தின் மத்தியில் குடும்பத்தினரை இயக்கத்தின் கட்டப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து அங்கு வாழ முயற்சித்த முயற்சியும் இராணுவத் தாக்கதல்களினால் தோல்வியடைய மீ்ண்டும் குடும்பத்தினரை அவரின் பூர்வீக நிலப்பகுதிக்கு அனுப்பி அதன் பின் அவரும் இயக்கத்தைவிட்டு வெளியேறி சாதாரண வாழ்வினை வாழ முற்பட்ட வேளையில் ஒரு நாள் இரவு முகமூடி மனிதர்களால் கடத்தப்பட்டு இன்றுவரை காணாமல்போயிருக்கிறார்.

வருமானம் இன்மையினால் வெளிநாடு புறப்பட்ட அவரை குழந்தைகள் தடுத்தி நிறுத்தியுள்ளனர். கல்லுடைக்கும் தொழில்புரிகிறார். நாள் வருமானம் 500 ரூபாய். நிரந்தர வருமானம் இல்லை. தம்பியின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.

மூத்த மகள் மாவட்ட ரீதியில் மரதன் ஓட்டப்போட்டிகளில் முதலாமிடத்தையும், மாகாண ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தாலும் போசாக்கின்மையால் தற்போது போட்டிகளில் கலந்துகொள்ளும் வலுவை இழந்திருக்கிறர். கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் பாடசாலை வழங்கும் இலவசச்சீருடை ஒன்றுடனேயே இவர்களின் காலம் கடந்துகொண்டிருக்கிறது.

பின்தங்கிய பாடசாலைகளில் கல்விகற்பதனாலும் குழந்தைகளுக்குத் தேவையான டியூசன் வகுப்புக்களுக்கு அனுப்பும் வசதியில்லை என்பதனாலும் அவர்களின் மேற்கல்வியின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

தனது இளைய புத்திரனை தன்னால் வளர்க்க முடியாது என்பதனால் உறவினர்களிடம் தத்துக்கொடுத்திருக்கிறார். ஆனால் தான் தத்தெடுத்த முன்னாள் போராளியின் குழந்தையை இன்றும் தன்னுடனேயே வளர்த்துவருகிறார். அதை அவர் கூறிய போது ”இது உன்னால் முடியாது” என்றது எனது மனச்சாட்சி.

நாம் பேசிக்கொண்டிருந்த போது குப்பி லாம்பில் படித்துக்கொண்டிருந்தாள் அவரது மகள். அந்த வீட்டின் காற்றிலும் வறுமை படிந்து போயிருந்தது. இருப்பினும் எமக்கு வழங்கப்பட்ட தேனீரின் சுவை அபரிமிதமாயிருந்தது.

இடையிடையே ஏதும் பேச முடியாது மௌனமாய் கடந்து போயின பல நிமிடங்கள். கதைகளில் மட்டும் கேட்டறிந்திருந்த வறுமை பற்றிய கதைகளைவிட மிக மோசமாக கதைகளை நேரில் கண்டும், அம் மனிதர்களுடன் பேசிப் பழசி அறிந்துகொள்ளும் போதும் மனது பலமாய் களைத்தும், கனத்தும் போகிறது.

எனக்கு கிடைத்திருக்கும் வாழ்வினை இவர்களுடன் ஒப்பிடுவது தவறு எனினும் அத்தகைய வாழ்வினைப் பெற்றிருக்கும் நான் அதன் வளத்தினை அறியாது இருப்பது மட்டுமல்லாது அதன் மூலம் இவர்களின் வாழ்க்கையை வளமாக்க நான் என்ன செய்திருக்கிறேன் என்னும் கேள்வி என் முகத்தில் அறைந்து போனது.

அவர்களுடமிருந்து உரையாடிய பின்பு மீண்டும் மோட்டார்சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்தோம். முன்னாலிருந்த நண்பர் கடந்து போகும் பகுதிகளைக் காட்டியும் அங்கு ஒரு காலத்தில் நடந்த வீரக்கதைகளை சிலாகித்தபடிபடியும் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தார்.

மின்விளக்குகள் இல்லாத, மண் மற்றும் கிறவற் பாதைகளால் சென்றுகொண்டிருந்தோம். எங்கும் எதிலும் இருள். கிழக்கின் வசந்தம் என்பது ஒளியற்ற வெறும் வார்த்தை ஜாலமே தவிர வேறோன்றுமில்லை என்பதும் புரிந்தது.

கறுப்பாய் ஊரெங்கும் படிந்துபோயிருந்த இருளினைக் கிழித்தபடியே, இருட்டினை ஓளியாக்கி மோட்டார்சைக்கிளை செலுத்திக்கொண்டிருந்தார் நண்பர். பிரமிப்பாய் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ?

http://visaran.blogs.../blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

எத்தகைய சிறந்த பெண் இவர்...இணைப்பிற்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்

ஒரு சோகக் கதையினை, வாழ்வதற்கான உழல்தலை வாசித்து விட்டு, அந்தச் சோகத் கதை எழுதப்பட்ட விதத்தைப் புகழ்வது, 'பாண் இல்லாட்டிக் கேக் சாப்பிடட்டும்' என்று சொன்ன இராணியின் கருத்துப்போல் இதயமற்ற தனமாய் வெளிப்படக்கூடும் என்றபோதும், சஞ்சயனின் இந்த எழுத்தைப் பாராட்டாது இருக்க முடியவில்லை.

'படுவாங்கரையின் ஒளியே இருள்தானே' - அற்புதம். மூன்று வார்த்தைக்குள் ஒரு புகைப்படம் போல் முழுக் கதையினையும் உள்ளடக்கிய கவிதை. அதுபோல, இருளில் வாவிக்குள் முழு நிலா ஒளிர்வதை வார்த்தையில் எழுதிவிட்டு, அது எப்படி இருக்கும் என்பதற்கேற்ற ஒரு புகைப்படம்--கரிய பின்னணியில், நடுவாக இன்றிச் சற்றுப் பக்கச்சாப்பாக இருந்து, எந்தக் கேள்வியும் கேட்காத முகத்தின் மூலம் ஆயிரம் கேள்விகளை எமக்குள் எழுப்பும் ஒரு பெண்ணின் முகம். இந்தப் பதிவினைச் சஞ்சயன் பூந்துவிளையாடி இருக்கிறார். அருமை.

இனிப்பிரச்சினை பற்றிப் பார்த்தால், பிரச்சினை நாங்கள் கிள்ளிப்போடுகின்ற கூளாங்கற்களால் நிரவப்படமுடியாத பூதாகர ஓட்டையாகத் தொடர்ந்தும் பயப்பிடுத்திக்கொண்டே இருக்கிறது. இத்தகைய பதிவுகளை வாசிக்கையில், இந்தப் பிரச்சினை சார்ந்து புதியகோணங்களில் தேடியே தீரவேண்டும் என்ற எண்ணம் மீண்டும் ஒருமுறை மனதில் பதிகிறது.

தனது குடும்பத்தை மறைத்து இயக்கத்தில் சேரும் ஒருவர். அவர் சேர்வதற்கான காரணமாக எது இருந்தது என்பதற்கு அப்பால், அவரின் சேர்தல் அவரது குடும்பத்தைக் காட்டிலும் மற்றையவர்களிற்கே (அதாவது நாங்கள்) பலனுடையதாக இருக்கிறது. எப்படிச்சேர்ந்தார் என்பதற்கப்பால் சேர்ந்ததன் பின்னர் முற்றுமுளுதான போராளியாகவே வாழ்ந்திருக்கிறார். பின் ஒரு பிள்ளையைத் தத்தெடுக்கிறார்கள். விசுவாசமாக இருக்கிறார்கள். சோம்பல் இன்றி உழைக்கிறார்கள். விசுவாசத்தின் விலையாகப் போராளி காணாமல் போகிறார். போராளியின் மனைவி, கஸ்டம் வந்தபோது தாம் பெற்ற பிள்ளையினைத் தத்துக்கொடுத்துவிட்டு தாம் தத்தெடுத்த பிள்ளையினை வளர்க்கிறார். இத்தகைய அசாதாரணமானவர்களிற்கு கல்லுடைக்கும் தொழில், அதுவும் ஒழுங்கின்றியே கிடைக்கிறது. உலகில் பிறர்சார்ந்து இதயசுத்தியோடு இயங்கும் பலரது வாழ்வு இவ்வாறு தான் விரிகிறது.

இவற்றைப் பார்க்கையில், தியாகம் என்ற கருத்துநிலை முற்றாக அழிக்கப்பட்டு 'விழிப்புணர்வோடான சுயநலம்' ஊக்குவிக்கப்படவேண்டும் என்று தோன்றுகின்றது. குடியுயரக்கோனுயரும் என்ற யதார்த்தபூர்வமான சிந்தனை மீள உறுதிப்படுத்தப்படவேண்டிதாய்த் தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, தியாகம் என்பதன் வீச்சும் அதில் எம்மையறியாது நாம் தங்கியிருக்கும் நிலையும் எமது சமூகத்தில் நாம் உணர்வதைக் காட்டிலும் ஆழமாகச் செயற்படுகிறது. தியாகம் என்ற பெறுமதியால் சமூகம் கபடத்தனமாகப் பலிக்கடாக்களைத் தமக்காகப் பலியாக்கிக்கொண்டிருக்க வழி சமைக்கிறது. நாங்கள் இந்தத் தியாகம் என்ற பெறுமதியை மீள் விசாரணை செய்யவேண்டியது அவசியம் என்றே படுகிறது.

இணைப்பிற்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

மின்விளக்குகள் இல்லாத, மண் மற்றும் கிறவற் பாதைகளால் சென்றுகொண்டிருந்தோம். எங்கும் எதிலும் இருள். கிழக்கின் வசந்தம் என்பது ஒளியற்ற வெறும் வார்த்தை ஜாலமே தவிர வேறோன்றுமில்லை என்பதும் புரிந்தது.

வடக்கின் வசந்தமும், வார்த்தை ஜாலம் தான்!

கிழக்கின் வசந்தமும் அதே தான்!

இடையில் விளையாடும், அரசியல்வாதிகளுக்குத் தான் உண்மையாக வசந்தம் மலர்கிறது!

நன்றிகள், கிருபன்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், கிருபன்!

எனக்கு கிடைத்திருக்கும் வாழ்வினை இவர்களுடன் ஒப்பிடுவது தவறு எனினும் அத்தகைய வாழ்வினைப் பெற்றிருக்கும் நான் அதன் வளத்தினை அறியாது இருப்பது மட்டுமல்லாது அதன் மூலம் இவர்களின் வாழ்க்கையை வளமாக்க நான் என்ன செய்திருக்கிறேன் என்னும் கேள்வி என் முகத்தில் அறைந்து போனது.

வலிமையான வரிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இணைப்பிற்கு நன்றி[/size]

பதிவுக்கு நன்றிகள் கிருபன். ஆக்கத்தை தந்த சஞ்சயனுக்கும் நன்றிகள்.

பிழை திருத்தபட்டுள்ளது - நன்றி கிருபன்

Edited by பகலவன்

இணைப்பிற்கு நன்றிகள் கிருபன் அண்ணா.

நான் மட்டக்களப்புக்கே போனதில்லை. ஆனாலும் இதை வாசிக்கும் போது சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் கற்பனை விரிகிறது... அதற்காக சஞ்சயன் அண்ணாவுக்கும் நன்றி.

எனக்கு கிடைத்திருக்கும் வாழ்வினை இவர்களுடன் ஒப்பிடுவது தவறு எனினும் அத்தகைய வாழ்வினைப் பெற்றிருக்கும் நான் அதன் வளத்தினை அறியாது இருப்பது மட்டுமல்லாது அதன் மூலம் இவர்களின் வாழ்க்கையை வளமாக்க நான் என்ன செய்திருக்கிறேன் என்னும் கேள்வி என் முகத்தில் அறைந்து போனது.

இது தான் எனக்கு பிடித்திருக்கிறது. தான் நன்றாக வாழ்ந்து கொண்டு உதவி செய்ய பணமில்லை என்று கூறுவோருக்கு இது சமர்ப்பணம்.

கறுப்பாய் ஊரெங்கும் படிந்துபோயிருந்த இருளினைக் கிழித்தபடியே, இருட்டினை ஓளியாக்கி மோட்டார்சைக்கிளை செலுத்திக்கொண்டிருந்தார் நண்பர். பிரமிப்பாய் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ?

மோட்டார் சைக்கிளுக்கு லைட் இல்லையா? :unsure: (உண்மையா தான் கேட்கிறன்...)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.