Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண முதலைகள் .

Featured Replies


 

சனிக்கிழமை காலை பத்துமணிஇருக்கும் தொலைபேசி
அடிக்கின்றது. வேலை இடத்து தொலைபேசி இலக்கம் தொலைபேசியில் மின்னுகின்றது.வேலை
சற்று பிசி எனவே வாரவிடுமுறைக்கு  ஓவர்டைம்
செய்ய வருவதாக மனேஜரிடம் சொல்லிஇருந்தேன் .சனி காலை நித்திரையால் எழும்ப கொஞ்சம்
பஞ்சியாக இருந்தது, மனைவி தானும் சனிகாலை சொப்பிங் செல்ல வருவதாக நண்பிக்கு முன்கூட்டியே
சொல்லிவிட்டதாக சொன்னார் .இனியென்ன மெல்ல கட் அடிப்பம் என்று சின்ன மகனுடன்
கட்டிபிடித்துக்கொண்டு தூங்கிவிட்டேன். இப்ப மனேஜர் போன் அடிக்கின்றான் என்ன
பொய்யை சொல்வம் என்று நினைத்தபடியே ரிசீவரை எடுக்கின்றேன்



“Hi Perry,   Darrell  here . ஏன் இன்று வேலைக்கு வரவில்லை ,செய்தி கேள்விப்பட்டாயா” என்கின்றான் .



“நான் மனேஜர் பிரையன் என்று நினைத்து பயந்துவிட்டன் ,என்ன அப்படி
செய்தி?”



“சூப்பர் செவன் அல்லோ எங்களுக்கு விழுந்திருக்கு ,போனை திருப்புகின்றேன்
சத்தத்தை கேள்” என்றான் .பின்னணியில் பலத்த சத்தம் ,யாரோ எனது பெயரை சொல்லி கெட்ட
வார்த்தையில் “உடனே இங்கே வா” என கத்துகின்றான்.



சின்ன மகனை வெளிக்கிடித்திக்கொண்டு வேலையிடத்திற்கு காரில் பறந்தேன்
.கதவை திறந்தால் வேலையிடமே அமர்களப்படுகின்றது.ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் சிலர்
மட்டும்தான் இருக்கின்றார்கள்.டெரிக் ஓடிவந்து கட்டிப்பிடித்து “எல்லோரையும்
வீட்டிற்கு போக சொல்லிவிட்டார்கள் ,இந்தவாரம் ஓவர்டைம் இல்லை. திங்கள் காலை வா “என்கின்றான்.அங்கு
நின்ற எல்லோரும் வழக்கம் போல் கெட்ட கெட்ட வார்த்தைகாளால்  கத்திக்கொண்டு என்னை மாறி மாறி கட்டிப்பிடித்து
தூக்குகின்றார்கள்.



“வெள்ளிக்கிழமை இரவு சூப்பர் செவன் லொட்டோ குலுக்கலில் ஏழு நம்பரும்
எங்களுக்கு விழுந்திருக்கு” என்கின்றான் மைக்கல். “நீ லோரெயினிடனம் காசு கொடுத்தனி
தானே.கொப்பி வைத்திருக்கின்றாயா  “ என்று
கேட்டான்.



இதென்னடா கோதாரி என்று நினைத்தபடியே எனது மேசை நோக்கி
ஓடிப்போகின்றேன்.



வேலையிடத்தில் லொட்டோவில் ஜாக்பொட் (பெரும்தொகை) வரும்போது மட்டும்
லொரெயின் என்ற கறுப்பு இனப்பெண் வேலை செய்யும் ஒவ்வொருவரிடமும் சென்று காசையும்
சேர்த்து ஒரு கையொப்பமும் வாங்கி அடுத்த நாள் லோட்டோ விளையாடிய ரிசீட்டில்
கொப்பிகள் எடுத்து பங்குபற்றிய அனைவருக்கும் கொடுப்பது வழக்கம்.இது கடந்த
இரண்டுவருடங்களுக்கு மேல் நடந்துவருக்கின்றது..சிறு தொகை வெல்லும் நேரம் பங்கு
பற்றிய அனைவரிடமும் பணம் வாங்காமல் அடுத்த ஜாக்பொட் விளையாடப்படும்.வேலை செய்யும்
அனைவரும் பங்கு பற்றுவதில்லை அதே போல் சிலவேளைகளில் இந்த முறை வேண்டாம் என்று
தவிர்ப்பவர்களும் உண்டு .எனவே எவரும் நிரந்தரமாக் விளையாடுகின்றார்கள் என்று இல்லை
.இருந்தாலும் இரண்டு டொலர் தானே என்று நான் எப்போதும் அங்கு இருக்கும் சிலர் போல் பங்கு
பற்ற தவறுவதே இல்லை.



எங்கே விழப்போகுது என்று வழக்கம் போல் கடாசிவிட்டத்தில் மேசைக்கு கீழே
குப்பை கூடைக்குள் அனாதரவாய் கிடக்கின்றது லொட்டோ கொப்பி. அம்பத்தி ஆறு லைன்கள்
இருக்கின்றன ,அப்படியாயின் அம்பத்தி ஆறு பெயர்கள் விளையாடி இருக்கின்றோம் .அதில்
எந்த லைன் வெற்றி பெற்ற லைன் என்றும் தெரியவில்லை .எதற்கும் வீடு போகும் வழியில்
ஒரு முறை செக் பண்ணுவம் என்று நினைத்த படி கொப்பியை பொக்கெட்டுக்குள்
செருகிவிட்டேன் .மகனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை ஒரு வித வியப்புடன் என்னை
பார்க்கின்றான்.எல்லோரிடமும் விடை பெற்று வீடு திரும்புகின்றேன் .



ஒரு கடைக்குள் புகுந்து வெள்ளிக்கிழமை இரவு சூப்பர் செவன் வெற்றி
பெற்ற நம்பர்களை கேட்கின்றேன் .பிரின்ட் பண்ணி ஒரு பிரதி தந்தார்
கடைக்காரர்.காருக்குள் வந்து எனது கொப்பியை ஒப்பிட்டு பார்க்கின்றேன்.



முதலாவது பரிசு பன்னிரெண்டு அரை மில்லியன் டொலர்கள்.



வென்றவர்கள் தொகை ஒன்று மட்டும்.



எனது கொப்பியில் உள்ள எட்டாவது வரியில் உள்ள ஏழு நம்பர்களும் முதலாவது
பரிசு நம்பர்களும் முழுவதும் அப்படியே இருக்கு ,மனது பன்னிரண்டு அரை மில்லியன்களை
ஐம்பத்தி ஆறால் பிரித்து கணக்கு பார்க்கின்றது ,எப்படியும் இருநூற்றி நாற்பதாயிரம்
ஆவது வரும் என கணக்கு வருகின்றது .அப்பாடி என்று ஒரு பெரு மூச்சு. மகனை
கட்டிப்பிடித்து முத்தம் இடுகின்றேன் .



வீடு போய் மூத்த மகனிடம் விசயத்தை சொல்லிகின்றேன் .அவனும் அப்போ சிறுவன்
தான். அவனுக்கும் அது பெரிய விடயமாக இல்லை நல்லது என்று விட்டு வீடியோ கேமில்
புகுந்துவிட்டான் .



மனைவி வர மெதுவாய் சொல்லுவம் என்று இருந்ததை மறந்து லோட்டோ வென்றதை
கொட்டிவிட்டேன் .எனது குடும்பத்திற்கும் மனைவி குடும்பத்திற்கும் நடந்தை சொன்னோம்
.மிக சந்தோசமாக நன்றாக தண்ணியடித்து வேலையிடத்து நண்பர்களுடன் அலட்டிவிட்டு
தூங்கிவிட்டேன் .



ஞாயிறு மதியம். எதற்கும் வேலையிடம் அருகில்தானே யாரும்
நிற்கின்றார்களா என பார்க்க  காரை
வேலையிடம் நோக்கி செலுத்தினேன்.வேலையிட கார் பாக்கிங்கில் நான் கண்ட காட்சி எனது
உடம்பை ஒருமுறை புல்லரித்து உறைய வைத்துவிட்டது .



இவன் இங்கு எப்படி? அதுவும் லோரேயினுடன்? யார் மற்றது?



(தொடரும்)

 

குறிப்பு -மனிதர்களை பற்றி அறியவும் ஒரு படிப்பினைக்காககவுமே இக்கதையை எழுதுகின்றேன் .
 

   



 



 

தொடருங்கள், வாசிக்க ஆவல்!

அர்ஜுனுக்கு லொட்றி அடித்ததாக ஒரு கிசுகிசு உண்டு ,உண்மையோ :lol: :lol: :lol: ??? கதையை தொய்வில்லாது நகர்த்துகின்றீர்கள் தொடருங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல, எக்கச்சக்கமான இடத்தில கொண்டுவந்து விட்டுப்போட்டுப் போட்டீங்கள், அர்ஜுன்! :o

 

தொடருங்கோ! :D

  • கருத்துக்கள உறவுகள்

எக்கசக்கமாய் லொட்டரியில் பணம் விழுந்தால் இஞ்சால கொஞ்சத்தை தாறது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எக்கசக்கமாய் லொட்டரியில் பணம் விழுந்தால் இஞ்சால கொஞ்சத்தை தாறது :lol:

அந்த மனுசனை இப்படி பயப்பிடுத்தி கதையை தொடராமல் செய்ய வைத்து விட்டீர்களே :D அர்யுன் நீங்கள் தொடருங்கோ ரதி சும்மா பகிடிக்கு கேட்டவ :D

  • தொடங்கியவர்


 

லோறோயினுடன் ரெறியை கண்டதும் எனக்கு அண்டகிண்டம்
எல்லாம் அடங்கிப்போச்சு ,மற்ற கறுப்பினத்தவன் யாரென்றே தெரியவில்லை.



ரெறி –இவன்தான் எனது பொஸ்.நான் வைத்த பெயர்
சதாம் .பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் என்னை வேலைக்கு எடுத்ததே இவன் தான்
.லண்டனால் கனடா வந்து அகதி அடித்து கையில் ஒரு சின்ன துண்டு பேப்பருடன்
உள்ளுக்குள் விட்டுவிட்டார்கள் .அந்த துண்டு பேப்பரின் மூலையில் எனது படமும் கீழே
தற்காலிக கனடாவாசி ஆனால் வேலை செய்யலாம் என அதில் எழுதப்பட்டிருந்தது .அந்த
பேப்பருடன் எனது வேலை தேடும் படலம் ஆரம்பித்தது.வேலைகள் பதியும் இடத்தில் UNIVERSAL
STUDIOS என்ற இடத்தில் ACCOUNTS CLERK தேவை என்ற அறிவிப்பை பார்த்து UNIVERASAL STUDIOS  விலாசத்தை
பிடித்து அங்கு போனேன் .



அப்போது தான் ரெறியை முதன் முதல் சந்தித்தேன். ரெறி எனது இமிகிரேசன்
பேப்பரை பார்த்து தனக்கு இதில் பரீட்சயம் இல்லை இருந்தாலும் உன்னால் வேலைக்கு
எடுக்கின்றேன் என்றான் .உனது முழு பெயரை உச்சரிக்க கஷ்டம் எதற்கும் சுருக்கி ஒரு சின்ன
பெயரை நாளைக்கு கொடு. அத்துடன் நல்ல உடுப்பு ஒன்றும் போடவேண்டாம் (கோட்
போட்டிருந்தேன்) கசுவலாக வா என்றான் .



அன்று தொடங்கிய வேலை பன்னிரெண்டு வருடங்கள் ஓடிவிட்டது .பகுதி நேர
படிப்பும் வேறு வேலை தேடுதலும் UNIVERSAL STUDIOS  தந்த வசதியும் சந்தோசமும் அவற்றை
நிறுத்திவிட்டது. ரெறி எனக்கு இன்றுமே புரியாத ஒரு கரெட்டராக தான் இருக்கின்றான்
.நாற்பது வயது இருக்கும் கலியாணம் ஆகவில்லை. அசல் இத்தாலியன் மாபியா பிளேபோய் போல
நடந்துக்கொள்வான் .நூற்றி இருபது பேர்வரை வரை இருபத்திநாலுமணி நேர சிப்ட் வேலை
செய்யும் WAREHOUSE  அது
.அதில் அலுவலகமும் உண்டு  .அந்த பெரிய கட்டிடத்தில்
ஒரு முனையில் இருந்து அடுத்த முனை செல்ல இரண்டு GOLF CARTS  இருக்கு. அதில்தான் அலுவலகத்தில் வேலை செய்யும் அழகிய பெண்களுடன் பவனி
வருவான் .அவனது அலுவலத்தில் வேலை செய்யும் பெண்கள் அனைவருக்கும்  மார்புகள் அளவுக்கு மீறிய சைஸாக  இருப்பதால் அதன் அளவை பார்த்துத்தான் அவன்
வேலைக்கு பெண்களை எடுப்பதாக பகிடியாக ஒரு கதையும் உண்டு..



ஆங்கில மியூசிக்,சினிமா கொம்பனி .வேலை செய்யும் முக்கால்வாசி பேர்கள் வெள்ளை
இனத்தவர்கள்.நீண்ட இறுக்கிய டெனிம் பாண்ட்ஸ் ,ரைட் சேட்டும் .நடக்கும் போது
கிறிச்சு கிறிச்சு என சத்தம் எழுப்பும் ஸ்ரட்ஸ் வைத்த முதலைத்தோல் சப்பாத்து.பெரிய
ஸ்பீக்கரில் எந்த நேரமும் HEAVY METAL (GUNS N’ROSES,LED ZEPPELIN,METALLICA,AC/DC
) பாடல்கள் குளறிக்கொண்டு இருக்கும் இடம் அது ..



 



கனடா முழுக்க ஆங்கில படங்கள் ,பாட்டு சீடிக்கள் அனுப்பவதுதான்
வேலை.ஒவ்வொரு கிழமையும் மூன்று அல்லது நாலு படங்களும் ஏழு எட்டு பாட்டு சீ,டி
க்களும் புதிதாக வெளிவரும் ,அதைவிட பழையதுகளுக்கும் எக்கசக்கமாக  .ஒர்டர்கள் வந்துக்கொண்டே இருக்கும் .படங்கள்
சீ,டி க்கள் வாறதும் போறதுமாக சரியான பிசியாக அந்த முழு இடமும் இரவுபகலாக
இயங்கிக்கொண்டு இருக்கும் .



இவற்றிற்கேல்லாம் ரெரிதான் பொறுப்பு . ஆறு மானேஜர்கள் பத்து
சூப்பர்வைசர்கள் என்று இருந்தாலும் ரெறி என்ற தனிமனிதனின்  சாம்ராச்சியமே அங்கு நடைமுறையில் இருந்தது . மூன்றாம்
வருடமே றெரியின் விருப்பத்திற்கு விநியோக பகுதிக்கு சூப்பர்வைசர் ஆகிவிட்டேன்
.வேலை முடிய வெள்ளி இரவு என்றால் BAR,RESTAURANT ,NIGHICLUB,STIRIP CLUB என்று
வேலையாட்களையும் கூட்டிக்கொண்டு போவான் .தானே அனைத்து செலவும் செய்வான்.அவனுக்கு
STRIP CLUB களில் இருக்கும் மரியாதை மிக அலாதியானது .சில இடங்களில் இரவு பவுன்சராக
இருப்பவர்கள்  பகலில் எமது இடத்தில் வேலை .



என்னை சூப்பர்வைசர் ஆக்கும் போது அவன் சொன்னது .புதுப்படங்கள்
கடைசிநேரத்தில் தான் அனுப்புவது,அதில் ஒரே படமே ENGLISH, FRENCH, FULL
SCREEN,WIDE SCREEN, DTS.COLLECTERS EDITION என்று பல VERSION களில்
இருக்கும் பிழைவிடாமல் அனுப்பவேண்டும்.படம் ரிலீஸ் ஆகும் நாள் கடைகளில் படங்கள்
இருக்க வேண்டும் பிழை ஏதும் பெரிதாக நடந்தால் திரும்ப அதே படங்களை பிளைட்டில் தான்
அனுப்பவேண்டும் ,அதற்கான செலவு பத்துமடங்கு ஆகிவிடும் எனவே தேவையான வேலையாட்களை
எடுத்து பிழைகள் இல்லாமல் படங்கள் சரியாக நேரத்திற்கு அனுப்பி விடவேண்டும். அதைவிட
ரெறி  சொன்ன அடுத்த விடயம் என்னை மிகவும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது .பல தரப்பட்டவர்கள் பல இனத்தவர்கள் பல் வேறு வித
மனநிலையில் உள்ளவர்கள்  வேலை செய்யும்  இடம் இது . எவரையும் நோகடிக்காமல் அழுத்தம்
கொடுக்காமல் அவர்களால் முடிந்ததை மட்டும் செய்ய விட்டுவிடு .எனக்கு எதுவித
பிரச்சனையும் வேலையிடத்தில் இருக்ககூடாது . உனக்கு தேவையான அளவில் வேலையாட்களை
எடுத்து நேரத்திற்கு பிழை விடாமல் வேலை செய்தால் மட்டும் காணும் .



அடுத்த ஒன்பது வருடங்களும் புது படங்கள் வரும் வேண்டியவர்களை எடுத்து
வேலையை முடித்துவிட்டு சந்தோசமாக வீடு போய்விடுவேன் .இருந்தும் மிக பெரிய படங்கள்
ரிலீஸ் பண்ணும் போது ரென்சன் இருக்கத்தான் செய்யும்.JURRAASIC PARK,LORD OF THE RINGS , SHREK ,TERMINATOR -2  போன்றனஇப்படி பல படங்கள் இருக்கு. படங்கள் வெளியிடும்
போது அவற்றுடன் புரோமமோசனக்கு என்று படத்தின் பெயருடன் கூடிய JACKET,
T-SHIRT,CAT,SUN GLASS ,TRACK PANTS போன்றவையும் சேர்த்து அனுப்புவோம். அவற்றை கூட வேலையாட்களுக்கு
வஞ்சகம் இல்லாமல் அள்ளி கொடுப்பான் .





ரெறியின் என்னுடனான கோபத்தையும் ஒரு நாள் அனுபவித்தேன்.நீண்ட
வாரவிடுமுறை.வெள்ளி காலை வந்து இன்று பிசியோ என போன் பண்ணினான்.பெரிதாக இல்லை
என்றேன்.இரண்டு மணிக்கு வேலையால் எல்லோரையும் போக சொல்லபோகின்றேன்.நீயும் உனது
அலுவல்களை முடித்துவிடு என்றான்.எல்லோரும் இரண்டு மணிக்கு வீடு போய்விட்டார்கள் செக்கியுரிட்டி
ஆளையும் அனுப்பிவிட்டான்.எனது இடத்திற்கு வந்து படங்களை எடுக்கும் ட்ரக் இன்னமும்
வரவில்லை.அது வன்கூவருக்கு போக வேண்டிய படங்கள். இரண்டரை போல GOLF CART  இறங்கியவுடன் சரமாரியாக திட்டிவிட்டான் .தனக்கு
முக்கியமான அலுவல் இருப்பதாகவும் எல்லா அலுவல்களும் முடிந்துவிட்டது என நினைத்து
செக்குரிட்டியை வேறு அனுப்பிவிட்டதாக திட்டினான் .நாளை வேலை காலியோ என
பயந்துவிட்டேன் .ட்ரக் வர கூப்பிடு என்று போய்விட்டான் .மூன்று மணி தாண்டத்தான்
ட்ரக் வந்தது .பயத்துடன் ரெறிக்கு போன் பண்ணி ட்ரக் போய்விட்டது என்று சொன்னேன்
.நில் வருகின்றேன் என்றான் .GOLF CART வந்து நின்றது கையில் ஒரு விஸ்கி கிளாசுடன்
வந்து சொறி உன்னை பேசிவிட்டேன் என்று கிளாசை நீட்டி போய் கொஞ்ச உனக்கு பிடித்த படங்களை
எடு என்றான் .ஒரு இழு இழுத்துவிட்டு ஐந்து ஆறு DVD க்களை
எடுதுக்கொண்டுவந்தேன் .சிரித்துக்கொண்டு நான் சொல்லும் போது இப்படி நாலு ஐந்து
எடுக்ககூடாது இரண்டு பெட்டிகள் நிறைய எடு என்றான் .ஒரு பெட்டிக்குள் முப்பது
படங்கள் அடங்கும் .அறுபது DVD க்களுடன் அன்று வீடு திரும்பினேன்.இப்போது பெரிய கலக்க்சனே என்னிடம் இருக்கு.



பழைய படங்கள் ,சீ.டி களை PICK பண்ண கரிசொல் என்ற பெல்ட் சிஸ்டம்  இருக்கு
.இது கூண்டு கூண்டாக இருக்கும் இதற்குள் ஒவ்வொன்றாக டைட்டில் படி படங்கள் இருக்கும்.இது
இரவு வேலை செய்பவர்களால் நிரப்பபட்டு பகல் அனுப்பவேண்டிய இடத்து ஒர்டரை போட சுற்றி
சுற்றி ஓடிவந்து எடுக்க வேண்டிய படத்தை எடுத்துவிட்டு பட்டனை அமத்த வேண்டியதுதான்
அடுத்த சுற்று சுற்றும் .ஒரு மேரிக்க ரவுண்ட் மாதிரி அதன் தொழில்பாடு .



இவ்வளவு பெரிய கொம்பனியை மிக இலகுவாக கையாளும் ரெறி தனக்கு எவரையும்
பிடிக்காவிட்டால் அல்லது பிரச்சனை பட்டால் எதுவித நோட்டிசும் இல்லாமல்
வெள்ளிக்கிழைமை  பின்னேரம் வேலை முடியும்
போது செக்கிரட்டரியை கொண்டு  SCANNING
CARD ஐ வாங்கி வேலைக்கு முழுக்கு வைத்துவிடுவான் .இந்த அவனது செயற்பாட்டை
யாரும் எதிர்த்து நடவடிக்கை எடுத்ததாக நினைவில்லை..இதனால் தான் சதாம் என்ற பெயரை
நான் ரேரிக்கு வைத்தேன் .இந்த காலகட்டத்தில் நான் எம்மவர் ஏழு பெயர்களை வேலைக்கு
கொண்டு போய்சேர்த்தேன் .அதைவிட சம்மருக்கு பாடசாலை மாணவர்களையும் சேர்த்திருக்கின்றேன்
.



நல்ல புது படங்கள் ,சீ.டி க்கள் வெளிவரும் போது போலிஸ் ,டிவி சினிமா
சம்பந்தமானவர்கள் ,மோட்டர் சயிக்கிள் கும்பல் .என்றேல்லாம் அவனுடன் வந்து GOLF
CART இல் சுற்றியடித்து தமக்கு வேண்டிய DVD,C.D  எடுத்துக்கொண்டு போவார்கள்.இதனாலேயே என்னவோ றெரியின் பேச்சுக்கும்
செய்கைக்கும் மறு பேச்சு அங்கு இல்லை .



இப்போ அவன் லோறேயினுடன் WARE HOUSE இற்குள்
போகின்றான் .இவனுக்கும் லொட்டோவிற்கும் என்ன தொடர்பு ,இவனும் விளையாடினானா? இப்போ
என்ன திட்டம் போட்டு லோறேயினை அழைத்துக்கொண்டு அதுவும் ஞாயிறு
காலை.வந்திருக்கின்றான் .



வென்ற பணத்தை போய் லொட்டோ கொம்பனியில் எடுத்து எங்களுக்கு பிரித்து
தருவது தானே லோறேயின் செய்யவேண்டியது .ரெறி எப்படி இந்த சீனுக்குள் வந்தான்.



மண்டை வெடித்துவிடும் போலிருந்தது வீட்டிற்கு விரைந்து
வேலையிடத்து  தொடர்பில் இருக்கும்
அனைவருக்கும் தொலைபேசியில் அழைத்து எனது வீட்டிற்கு உடனே வரச்சொன்னேன் .பதினைந்து
பெயர்கள் ஒரு மணித்தியாலத்தில் எனது வீட்டிற்கு வந்துவிட்டார்கள் .எல்லோருமாக
வேலையிடத்திற்கு போனோம் அங்கு பார்கிங்கில் எவர் கார்களுமில்லை .லொரெயின்
பிக்கெறிங் இல் இருப்பதாக ஒருவன் சொன்னான் ஆனால் அவனுக்கு விலாசம் தெரியாது
.பிக்கேரிங்க்கில் இருக்கும் இன்னொரு லொட்டோ வென்ற வேலையாள் டியோவிற்கு
(கயானாகாரன்) தொலைபேசி அடிக்க அவனுக்கு நல்ல வெறி .நாங்கள் சொல்வதே அவனுக்கு
விளங்கவில்லை இருப்பினும் லோறேயினின் விலாசம் தனக்கு தெரியும் என்றான் .நாலு
கார்கள் பதினைத்து பேருடன் பிக்கெறிங் பறக்கின்றது .



(தொடரும்)  



 

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுவாரசியமாக போகிறது.தொடருங்கள்.

  • தொடங்கியவர்


 

பறந்து
அடித்துக்கொண்டு அனைவரும் டியோ வீட்டிற்கு சென்றால் நல்ல வெறியில் எங்களை பார்த்து
சிரித்தபடியே



“நீங்கள் எல்லாம்
எந்த நாட்டில் இருக்கின்றீர்கள் .இது கனடா .இங்கு சட்டமும் ஒழுங்கும் அந்த மாதிரி
“நையாண்டி சிரிப்பு சிரிக்கின்றான் .



“தம்பி
எங்களுக்கும் தெரியும் இது கனடா என்று ஆனால் ரெறியை பற்றி அதைவிட தெரியும் ,நீ
வேலைக்குசேர்ந்து மூன்று வருடங்கள் தான், நாங்கள் பத்து  பன்னிரெண்டு வருடங்கள் அவனுடன் வேலை
செய்கின்றோம்  ,அதைவிட அவனுடன் நாங்கள்
அடிக்கடி அலுவல கூட்டங்களிலும் சந்திப்பதால் அவனை பற்றி எமக்கு நன்கு தெரியும்.’



அதற்கு டியோ நான்
நேற்றே ஒரு லோயருடன் கதைத்துவிட்டேன்,ஏதும் பிரச்சனை என்றால் எனது லாயர்
பார்த்துக்கொள்ளுவார் என்றான் .



 



அவனை ஒருவாறு
இழுத்து ஏற்றிக்கொண்டு லோறேயின் வீடு சென்றால் வீடு பூட்டிக்கிடக்கின்றது.சிறிது
நேரம் வெளியில் இருந்து பார்த்துவிட்டு எல்லோரும் அவரவர் வீடுகளுக்கு நாளை
வேலையில் சந்திப்போம் என்று திரும்பிவிட்டோம் .



ஞாயிறு மாலை எனது
நண்பனின் தயாரின் மரணசடங்கிற்கு போய்விட்டேன் நான் அங்கு நிற்கும் போது மனைவி போன்
பண்ணினார் “ரெறி போன் பண்ணியதாககவும் நாளை காலை வேலையிடத்தில் தான் கதைப்பதாக
சொல்லி போனை வைத்துவிட்டாராம்” .



இரவு வீடு வந்து
நண்பர்களுக்கு போன் பண்ணினால் அவனவன் அழுகிறான் ,நடுங்குகின்றான் கதைப்பதற்கு
பயப்பிடுகின்றான் .என்னடா என்று கேட்டால் ரெறி போன் பண்ணியதாகவும் பிக்கெறிங் டியோவிடம்
சென்றதை அறிந்ததாகவும் காசு வேணுமோ அல்லது வேண்டாமோ என கேட்டதாகவும் சொன்னார்கள் .



 



திங்கள்கிழமை காலை
வேலைக்கு போனால் ஆளை ஆள் தெரியாத மாதிரியும் லொட்டோ என்ற ஒன்று விழுந்தது தெரியாத
மாதிரியும் அவனவன் திரிகின்றான் .லோறேயினையும் வேலையிடத்தில் காணவில்லை .எட்டரை
போல றெரி எனக்கு பேஜ் பண்ணினான் போனை எடுத்தேன் .”காசு வேண்டுமென்றால் ஒன்பது
மணிக்கு வந்து பஸ்சில ஏறு இல்லாவிட்டால் உனக்கு தெரிந்ததை செய் .பின்னர் எதுவும்
கிடைக்காமல் போனால் தான் ஒன்றும் செய்ய முடியாது” என்றுவிட்டான் .



ஒன்பது மணிக்கு
ஒரு பெரிய கோச் வந்து வேலையிட வாசலில் நின்றது .லொட்டோ விளையாடிய அனைவரையும் போய்
பஸ்ஸில் ஏறும்படி பேஜ் பண்ணினான் .பஸ்ஸில் எல்லோரும் ஏறிமுடிய எத்தனை பேர்கள்
என்று எண்ணிப்பார்த்தால் மொத்தம் அறுபது பெயர்கள் இருக்கின்றோம் .லோறோயினுடன் அதே
கறுப்பின இளைஞன் இருக்கின்றான் .



எப்படியோ நாலு
எண்ணிக்கையை கூட்டிவிட்டான் போலிருக்கு ,ரெறி கூட லொட்டோ விளையாடினானோ
தெரியாது.டியோவை திரும்பிப்பார்த்தேன் .மழையில் நனைந்த கோழி போல பஸ்ஸின் மூலை
சீட்டில் ஒதுங்கிஇருக்கின்றான் ,எனக்கு அவனை பார்க்க சிரிப்பு வேறுவந்துவிட்டது.



பஸ் புறப்பட்டு
சிட்டியை நோக்கி ஹைவேயில் இறங்க ரெறி எழும்பி நின்று சொல்லுகின்றான் .



“எனக்கு தெரியும்
உங்கள் மனங்களில் என்ன இருக்கின்றது என்று .அடுத்தநாள் (வெள்ளிகிழமை) காலை பணம் கொடுத்த
 நாலு பெயர்கள் விடுபட்டு போய்விட்டது
அதனால் தான் ஐம்பத்திஆறு பெயர்கள் அறுபது ஆகிவிட்டது ,அதைவிட லோறேயினின்
போய்பிரண்டும் லொட்டோ விளையாடிஇருந்தான் அதையும் லோறேயின் சொல்லாமல்
இருந்துவிட்டாள்.மொத்தம் அறுபது பெயர்கள் இந்த காசை பிரிக்க போகின்றோம் .இந்த
லொட்டோ விடயம் இன்றுடன் சரி, அதைப்பற்றி இனி யாரும் வேலையிடத்தில் கதைத்தாலோ
அல்லது லோறையினிடம் தனிப்பட்ட முறையில்  எதுவும் கேட்டாலோ அவர் வேலையை இழப்பதுமாத்திரமல்ல
அவர் மேல் நடவடிக்கை வேறு எடுப்பேன்” என்றான் .எல்லோரும் கப்சிப் .



பொக்கெட்டுக்குள்
இருந்து ஒரு கட்டு இருபது ரூபாய் நோட்டுகளை எடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு தாளை
நீட்டியபடி “லொட்டோ அலுவலகத்தில் வந்து கையொப்பம் இட்டவுடன் இருவராக அல்லது மூன்று
பேராக டாக்சியை எடுத்து வேலைக்கு திரும்பி விடவேண்டும். நாளை கனடா ட்ரஸ்ட்
வங்கியில் போய் செக்கை வாங்கி கொள்ளுங்கள். நாளையுடன்  லொட்டோ கதை முடிந்துவிட்டது” என்றான்.



ஆளுக்கு ஆள் இது
கிடைத்ததே காணும் என்ற நிலைக்கு அவன் தனது அதிகாரத்தால் எல்லோரையும்  தள்ளிவிட்டிருந்தான் .வேலையிடம் முன்னர் மாதிரி
இல்லாமல் களையிழந்து போய்விட்டது ,ஆளுக்கு ஆள் எதுவும் கதைக்கவே சந்தேகம் ரேரிக்கு
போட்டு கொடுத்துவிடுவார்களோ என்று. சிலர் மாத்திரம் இடைக்கிடை மெதுவாக ரெறியை
திட்டியபடி சுத்திவிட்டான் புசத்திக்கொண்டு திரிவார்கள்.



ரேரியிடம் ஏற்கனவே
மூன்று மில்லியன் டொலர் வீடும் நாலு ஐந்து மிக விலை கூடிய வாகனங்களும் உண்டு ,அவன்
போடும் உடுப்புகள் கூட அந்த மாதிரி இருக்கும் இதற்குள் எங்கட பணத்திலும் கை
வைத்துவிட்டான் என்றுதான் பலருக்கும் கோவம் .



இன்று வரை என்ன
உண்மையில் நடந்தது என யாருக்கும் தெரியாது ,பலர் ரெறி லொட்டோ விளையாடவே இல்லை
என்கின்றார்கள் .சிலர் அவன் விளையாடினவன் ஆனால் லோறேயினுக்கு ஆசை காட்டி லோறேயினுக்கு
இரு பங்குகள் ( ஒரு பங்கு போய்பிரென்ட் என்ற பெயரில்)  கொடுத்துவிட்டு மற்ற மூன்று பங்குளை தான் வேறு
சில பெயர்களை கொண்டு எடுத்திருக்கின்றான் .அவர்களுக்கு கொஞ்ச பணம்
கொடுத்திருப்பான் என்கின்றார்கள் .



இதன் பின் ஒரு
ஐந்துவருடங்கள் UNIVERSAL STUDIOS இல் வேலை செய்தேன்.லொட்டோ விடயம் அப்படியே மறந்துபோய் விட்டது. மொத்தம்
பதினேழு வருடங்கள் சதாமுடன் வேலை செய்ததே ஒரு சாதனைதான். பணம் என்றால் பிணமும் முதலை
கணக்கு அகல வாய் திறக்கும் என்பது அனுபவத்தில் கண்டதாகிவிட்டது .



வணக்கம்



 


 


 

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

ம்..! ம்..!

 

கதை சப்பெண்டு போய் விட்டது! :o

 

ஆனாலும் கதை சொன்ன விதம்,நல்லாயிருக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மாமா  கப்பல் மாலுமியாக  இருந்தவர். அவர்  79  ம் ஆண்டு ஜெர்மன்  கம்பேக்கில்  கப்பல் நின்றபொழுது  அவரது நண்பனோடு  சேர்ந்து  லொட்டோ போட்டாராம்.  அவரிற்கு அன்றை காலத்தில்  ஒண்டரை  இலச்சம்  யெர்மான் மார்க்  விழுந்திருந்ததாம்.  றிக்கற்றை கொண்டு போய் கடையில் குடுத்ததும் றிகக்ற்றை வாங்கிய கடைக்காரர்  பெயர் விபரம் பாஸ்போட் நம்பர் எல்லாத்தையும்  எழுதிவிட்டு  நாளைக்கு வாருங்கள் லொட்டோ நிறுவனத்திடம் இருந்து  செக் வாங்கி தருகிறொம் என்றார்களாம். இவர்களிற்கும்.  மொழி பிரச்சனை  தலையை ஆட்டிவிட்டு  லொட்டோ றிக்கற்றை  கடைக்காரனிடம் கொடுத்திட்டு போய் விட்டார்களாம்.  அடுத்தநாள் போனபொழுது  கடைக்காரனை காணவில்லையாம்  இன்னொருத்தன்  நீங்கள் யரெண்டு தெரியாது என   துரத்தி விட்டானாம்  எண்டு பல வருசமாய் சொல்லி புலம்பி திரிந்தார்.

அர்ஜுன் அண்ணா கதை நல்லாய் தான் இருக்கு. அடுத்த கதையையும் கெதியாய் எழுதுங்கோ வாசிக்க ஆவல்!



ம்..! ம்..!

 

கதை சப்பெண்டு போய் விட்டது! :o

 

 

 

:lol:  நீங்கள் கனக்க எதிர்பார்த்திருக்கிறீர்கள் போலை புங்கை  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு இந்த லொட்டோ குதிரை இப்பிடி நம்பிக்கை இருக்கோ ??  நேர்மை இல்லாமல் வந்த காசுகள் இப்பிடித் தான் அழிஞ்சு போகும் . நல்ல கதையை தந்திருக்கிறியள் உங்களை பாராட்டிறன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.