"நான் இறந்து விடுவேன் என நினைத்தேன்" - ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி?
படக்குறிப்பு,16 வயதான அலிசா டேப்லி எனும் இவர் தான் இந்த முறையில் சிகிச்சை பெற்ற முதல் நபர்.
கட்டுரை தகவல்
ஜேம்ஸ் கல்லாகர்
சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட ஒரு சிகிச்சை முறை ஒன்று, சில நோயாளிகளில் மிக மோசமாகப் பாதித்த மற்றும் குணப்படுத்த முடியாத ரத்தப் புற்றுநோய்களை மாற்றியமைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சிகிச்சை, வெள்ளை ரத்த அணுக்களில் உள்ள டிஎன்ஏவை துல்லியமாக மாற்றி, அவற்றை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் "உயிருள்ள மருந்தாக" மாற்றுகிறது.
இதற்கு முன்பு இந்த சிகிச்சை பெற்ற முதல் சிறுமியைக் குறித்து 2022-இல் பிபிசி ஒரு செய்தி வெளியிட்டது. நோயில் இருந்து விடுபட்டுள்ள அவர், இப்போது புற்றுநோய் குறித்த விஞ்ஞானியாக மாறும் கனவுடன் உள்ளார்.
தற்போது இதே சிகிச்சை மூலம், டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவால் பாதிக்கப்பட்ட எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 64% பேர் நிவாரணம் பெற்றுள்ளனர்.
டி-செல்கள் சாதாரணமாக உடலைப் பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட்டு, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைத் தேடி அழித்துவிடுகின்றன. ஆனால் லுகேமியாவின் வடிவில், அதே டி - செல்கள் கட்டுப்பாட்டை இழந்து அதிக அளவு பெருகுகின்றன.
கீமோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்திருந்தன. எனவே பாதிப்பில் இருந்தவர்களுக்கு, பரிசோதனை மருந்தை தவிர எஞ்சிய ஒரே வழி, அவர்களுடைய மரணத்தை சற்று வசதியானதாக மாற்றுவதாக மட்டுமே இருந்தது.
"நான் உண்மையிலேயே இறந்து விடுவேன் என்று நினைத்தேன். வளர்ந்து, ஒவ்வொரு குழந்தையும் செய்யத் தகுதியான அத்தனை விஷயங்களையும் என்னால் செய்ய முடியாமல் போய்விடும் என நினைத்தேன்" என்கிறார் லெய்செஸ்டரைச் சேர்ந்த 16 வயது அலிசா டாப்லி.
கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் உலகிலேயே இந்தச் சிகிச்சை பெற்ற முதல் நபர் இவர் தான். இப்போது அவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.
படக்குறிப்பு,அலிசா தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையில், அவரது பழைய நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் அகற்றி, புதிய ஒன்றை உருவாக்கும் முறை இடம்பெற்றது. அவர் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். தொற்று ஏற்படக்கூடும் என்பதால், அந்த சமயத்தில் அவரது சகோதரனைக் கூட அவரால் சந்திக்க முடியவில்லை.
ஆனால் இன்று, அவரது புற்றுநோய் முற்றிலும் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அவர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அலிசா தற்போது தனது ஏ -லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார். ஓட்டுநர் பயிற்சி பெறுவதையும், தனது எதிர்காலத்தை திட்டமிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார் அலிசா.
"நான் உயிரி மருத்துவ அறிவியலில் பயிற்சி செய்வது குறித்து யோசித்து வருகிறேன். ஒருநாள் ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடுவேன் என்று நம்புகிறேன்," என்கிறார் அலிசா.
படக்குறிப்பு,அலிசா தற்போது தனது ஏ-லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார்.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் குழு பேஸ் எடிட்டிங் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.
பேஸ்கள் (bases) தான் உயிரின் அடிப்படை. அடினைன் (A), சைட்டோசின் (C), குவானைன் (G), தைமின் (T) எனும் நான்கு பேஸ்களே நமது மரபணு குறியீட்டின் கட்டுமானத் தொகுதிகள். எப்படி எழுத்துக்கள் சேர்ந்து அர்த்தமுள்ள சொற்களை உருவாக்குகின்றனவோ, அதுபோல நமது டிஎன்ஏவில் உள்ள பில்லியன் கணக்கான பேஸ்கள், நமது உடல் இயங்க வேண்டிய வழிமுறைகளை எழுதுகின்றன.
பேஸ் எடிட்டிங் என்பது மரபணு குறியீட்டின் குறிப்பிட்ட இடத்துக்கு நேராகச் சென்று, ஒரு அடிப்படையின் மூலக்கூறு அமைப்பை மாற்றி, அதை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாற்ற உதவும் முறையாகும். இதனால் மரபணு கையேட்டையே புதிதாக எழுத முடியும்.
ஆரோக்கியமான டி-செல்களிடம் இயற்கையாக உள்ள சக்தியைப் பயன்படுத்தி, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அழிக்கவும், அந்த சக்தியை டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவுக்கு எதிராக பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர்.
ஆனால் இது மிகவும் சிக்கலான செயல்முறை. இந்த சிகிச்சை முறை தன்னைத் தானே அழித்துக்கொள்ளாமல் இருப்பதற்காக, கெட்ட செல்களை மட்டும் குறிவைத்து அழிக்க நல்ல டி -செல்களை மாற்றி வடிவமைக்க வேண்டியிருந்தது.
அதற்காக முதலில் ஒரு நன்கொடையாளரிடமிருந்து ஆரோக்கியமான டி -செல்களைப் பெற்று, அவற்றை மாற்றியமைக்கத் தொடங்கினர்.
முதல் பேஸ் எடிட்டிங் மூலம், டி -செல்களின் 'இலக்கு பொறிமுறை' (targeting) செயல்பாடு முடக்கப்பட்டது. இதனால் அந்த செல்கள் நோயாளியின் உடலைத் தாக்காது.
இரண்டாவது திருத்தம், அனைத்து டி -செல்களிலும் காணப்படும் சிடி7 என்றழைக்கப்படும் ஒரு வேதியியல் குறியை நீக்கியது. ஏனென்றால், அந்த சிகிச்சை தன்னை தானே சிதைத்துக் கொள்ளும் அபாயத்தைத் தடுப்பதற்கு இந்தக் குறியை நீக்குவது அவசியம்.
மூன்றாவது திருத்தம், செல்களைச் சூழ்ந்த "கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு மேலங்கியைப்" போன்றது. இது கீமோதெரபி மருந்துகள் அந்த செல்களை அழிப்பதைத் தடுக்கிறது.
மரபணு மாற்றத்தின் இறுதி கட்டத்தில், சிடி7 (CD7) குறியுடன் இருக்கும் செல்களை தேடி அழிக்க டி-செல்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் மாற்றியமைக்கப்பட்ட டி -செல்கள், புற்றுநோய் செல்லாக இருந்தாலும், ஆரோக்கியமானதாக இருந்தாலும், தங்கள் முன் வரும் மற்ற எல்லா டி-செல்களை அழித்து விடும். ஆனால் அவை ஒன்றையொன்று தாக்காது.
அதன் பிறகு இந்த சிகிச்சை நோயாளியின் உடலில் மேற்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, நான்கு வாரங்கள் கழித்து புற்றுநோய் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்திருந்தால், நோயாளிக்கு புதிய நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
"சில ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு அறிவியல் புனைகதையாக இருந்திருக்கும்" என்கிறார் யூசிஎல் மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த பேராசிரியர் வசீம் காசிம்.
தொடர்ந்து பேசிய அவர், "நாம் முற்றிலும் நோயெதிர்ப்பு மண்டலத்தையே அகற்ற வேண்டும். இது ஆழமான, தீவிரமான, நோயாளிகளுக்கு மிகவும் கடினமான சிகிச்சை. ஆனால் இது வேலை செய்தால், மிகச் சிறப்பாகச் செய்கிறது," என்றார்.
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வு, கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மற்றும் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற முதல் 11 நோயாளிகளின் முடிவுகளைப் பற்றி கூறுகிறது. அவர்களில் ஒன்பது பேர் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யும் அளவுக்கு ஆழ்ந்த நிவாரணத்தைப் பெற்றுள்ளனர்.
சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை ஏழு பேர் முழுமையாக நோயின்றி உள்ளனர்.
நோயெதிர்ப்பு மண்டலம் அகற்றப்படும் காலத்தில் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் தான், இந்த சிகிச்சையின் பெரிய ஆபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இரண்டு நோயாளிகளில், புற்றுநோய் தனது சிடி7 அடையாளத்தை இழந்தது. இதனால் அது இந்த சிகிச்சையிலிருந்து தப்பித்து உடலில் மீண்டும் வளரத் தொடங்கியது.
"இந்த வகை லுகேமியா எவ்வளவு தீவிரமானது என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த சிகிச்சை முடிவுகள் மிகச் சிறப்பானவையாக உள்ளன. நம்பிக்கையிழந்த நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்க முடிந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் எலும்பு மஜ்ஜை மாற்றுத் துறையின் மருத்துவர் ராபர்ட் சீசா கூறினார்.
"குணப்படுத்த முடியாததாகத் தோன்றிய லுகேமியாவை அகற்றுவதில் கூட நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். இது மிகவும் சக்திவாய்ந்த சிகிச்சை முறை" என்று கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் ரத்தவியல் நிபுணரும் மருத்துவருமான டெபோரா யல்லோப் தெரிவித்தார்.
இந்த ஆராய்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் ஸ்டெம் செல் தொண்டு நிறுவனமான அந்தோணி நோலனின் மூத்த மருத்துவ அதிகாரி, மருத்துவர் டானியா டெக்ஸ்டர், "சோதனைக்கு முன்னர் இந்த நோயாளிகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தற்போது கிடைத்துள்ள இந்த முடிவுகள், இது போன்ற சிகிச்சைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, நோயாளிகளின் வாழ்வை மீட்டெடுக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c20gzdgqgrpo
By
ஏராளன் ·