Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவராத்திரி விரதமும் அதன் மகிமையும்

Featured Replies

ஓம் சக்தி

தனம்தரும், கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும் "அபிராம வல்லியை" வணங்கும் நவராத்திரி விரதம்

730x548x,PE0,PAE,PAE,PE0,PAF,P81,PE0,PAE

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்

பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்

காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்

சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

நவராத்திரி விரதம் இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 05.10.2013 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமியீறாகவரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும். 10 வது தினம் விஜயதசமி தினமாகும்.

அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியைவீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும்,

அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும்,

கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

 

புரட்டாசி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும்; தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரி தினங்களிலேயே நாம் எல்லோரும் விரதம் அனுஷ்டித்து பிரார்த்தனை செய்கின்றோம்.

கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி எம் முன்னோர் இவ் விரதத்தை அனுஷ்டித்து வந்துள்ளனர்.

பூவுலகை காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு 9 ராத்திரிகள். அதுவே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக எல்லாப் பூஜைகளும் பகல் நேரத்தில் மேற்கொள்வது வழக்கம்.

ஆனால் சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும், இரவிலும் பூஜைகள் செய்யப்பெறுகிறன. நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை 'தேவி பாகவதம்'விரிவாகப் பேசுகிறது.

பிரபஞ்சவுற்பத்திக்கு காரணமான இறைவன் அனேக மூர்த்தங்களின் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் விளங்கிய போதிலும் அவையனைத்தையும் ஒன்றாக்கித் தாயான ஸ்வரூபத்தில் வழிபடுதல்தான் பெரும்பயனைத் தருமென "பிரபஞ்சவுற்பத்தி" எனும் நூல் கூறுகின்றது. 

பரப்பிரம்மத்தையே பராசக்தி அன்பினால் கட்டுப்படுத்தியுள்ளாள் என்பதை உலகைப் படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ்ணுவையும் அழிக்கும் உருத்திரனையும் இவர்கட்கு மேலாகவிருக்கும் ஈஸ்வரனையும் தனக்குள் மறையும்படி செய்து மீண்டும் அவர்களை வெளிப்படுத்தி அவர்களது தத்துவார்த்தங்களை அவர்கள் மூலமாகவே இயற்றுவிக்கிறாள்.

அத்தனை தெய்வங்களுமே, அந்தத் தேவியின் ஒப்பற்ற மாயையினால்தான் திகழ்கிறார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள் அவளே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே.

பிரபஞ்சத்தில் பிறவி எடுத்த நாம் அனைவருமே அநித்யம். ஆனால் ஜெகதாம்பிகை ஒருவளே நித்திய யுவதி. அவளைத் தூய்மையான உள்ளத்தோடு தியானித்து, துதி செய்தால் அருட் கடாட்சத்தை அள்ளி வழங்குவாள். அம்பிகை அருளைப் பெற; அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும் அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும்.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு உடல் வலிமையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் அறிவு வளமும் மிகவும் அவசியம். அதனை வெளிப்படுத்த உடல் வலிமையின் சக்தியாக ஸ்ரீதுர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நல்கவல்ல சக்தியாக ஸ்ரீமஹா லக்ஷ்மியையும் அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக ஸ்ரீசரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி எனப்படும்.

இந்த அற்புத விரதம் தேவி விரதங்களுட் சிறந்த ஒன்றாகும். ஸ்கந்தபுராணத்தில் இம் மகிமை பேசப்படுகிறது. அமாவாசைத் திதி தொடர்பின்றி அதிகாலையில் பிரதமை திதி வியாபித்திருக்கும் நாளே நவராத்திரி ஆரம்பதினமாகும். மறுநாட்காலை பிரதமை அற்றுப் போய் விடுமாயின் முதல் நாளில் விரதம் கொள்ளல் வேண்டும்.

பிரதமை தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும். நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் (தைரியம்) இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரத்தின் நோக்மாகும்.

இந்த நாட்களில் கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதிப்பது சிறப்பும் மேன்மையையும் தரும். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கு உரிய சிறப்புகளாகும்.

ஒன்பது நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வெவ் தேவியருக்கு எத்தனை நாட்கள் என்ற பிரச்சினை எழுவதுண்டு. அதற்கு வேறொரு விதியும் சொல்லப்படுகிறது. சரஸ்வதியை மூல நட்சத்திரத்தில் ஆவாஹுனம் செய்து வழிபடத் தொடங்கி திருவோண நட்சத்திரத்தில் உத்வாசனம் செய்ய வேண்டும். அதனால் சரஸ்வதிக்குறிய நாட்களை தெரிவு செய்த பின்னர் ஏனைய நாட்களை உசித்தப்படி துர்க்கைக்கும் லஷ்மிக்கும் பிரித்துக்கொள்ளலாம்.

சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம் வழக்கம். மலை மகள், அலை மகள், கலை மகள்என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர். இதில் துர்க்கை வீரத்தை (தைரியத்தை) அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும்,சரஸ்வதி (அறிவு) கல்வியை அருள்பவளாகவும் விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.

துர்க்கை:

730x628xthurkai.jpg.pagespeed.ic.QLhJkT4

துர்கா காயத்ரீ மந்திரம்
ஓம் காத்யாய்னாய ச வித்மஹே

கன்யகுமாரி ச தீமஹி

தன்னோ துர்கா ப்ரசோதயாத்

இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ”கொற்றவை ” , ”காளி” என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷாசுரன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போராடி ஒன்பதாது இரவு அவனைச் துவசம் செய்தாள். இவையே ‘ நவராத்திரி ‘ எனப்படும்.

அவனை வதைத்த வெற்றி கொண்ட பத்தாம் நாள் "விஜயதசமி" [ விஜயம் - மேலான வெற்றி]  மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவில் நாம்கண்டுள்ளோம்] வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள். நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

ஆன்மாவை இறைவன்பால் வழிப்படுத்த திருவருள்தான் துணை நிற்கின்றது. இந்தத் திருவருட் சக்திதான் சித் சக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி எனப்படுகின்றது. இதில் ஆதிபராசக்தி தான் துர்க்கையாகும்.

தாயே, துர்க்கையே! கடத்தற்கரிய துயரத்தில் உன்னை நினைத்தால், நீ எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்குகிறாய். இன்பத்தில் நினனத்தால், உலகனைத்திற்கும் நன்மை தரும் மதியை நல்குகிறாய். ஏழ்மையையும், துன்பத்தையும், பயத்தையும் போக்குபவளே, எல்லோர்க்கும் கருணை புரிய எப்போதும் உருகும் நெஞ்சுடையவர் உன்னைத் தவிர யார் உளர்?

- தேவி மகாத்மியம் 4.17

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி  சக்தியாகவும்,  வேட்கையாகவும்,  சாந்தி வடிவிலும்,  சிரத்தையாகவும்,  தாய்மையாகவும்,  கருணையாகவும் உறைகிறாளோ அவளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

- தேவி மகாத்மியம் 5.38-45

தேவி! மூவுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் எவையோ அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள் எவையோ அவற்றாலும்  இப்பூவுலகையும் எங்களையும் காத்தருள்வாய்.

- தேவி மகாத்மியம் 4.26

எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே (ஸர்வ மங்கல மாங்கல்யே),   எல்லா நன்மைகளையும் அளிக்கும் சிவே!  அனைத்து  நல்லாசைகளையும் நிறைவேற்றுபவளே,  சரணடைதற்குரியவளே,  முக்கண்ணியே, நாராயணி!  உனக்கு நமஸ்காரம்.

- தேவி மகாத்மியம் 11.10  

அனைத்தின் வடிவாகவும், அனைத்தையும் ஆள்பவளாகவும், அனைத்து சக்திகளாகவும் விளங்கும் தேவி,  அனைத்து விதமான பயங்கரங்களிலிருந்தும் எங்களைக் காப்பாய். துர்க்கா தேவி, உனக்கு நமஸ்காரம்.

- தேவி மகாத்மியம் 11.24

அபிராமி அந்தாதி - இங்கே அழுத்துங்கள்

அபிராமி அம்மை பதிகம் - 1 இங்கே அழுத்துங்கள்

 

இலட்சுமி:

Deuses-Indianos-LAKSHMI.gif.pagespeed.ce

காயத்திரி மகா மந்திரம் 

"ஓம் பூர் புவஹ ஸ்வஹ

ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமகி

த்யோ யோநஹ ப்ரசோதயாத்”

lakshmi41.jpg.pagespeed.ce.KA1UM3s1b3.jp

இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி திருபாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.

யானைகளின் பெயரால் அவள் கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். அவள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.

பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும். யானைகளின் பிளிறலை இலட்சுமி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.

பசுக்களின் ப்ருஷ்ட பகுதியிலும் (பின்பகுதி) இலட்சுமி இருக்கிறாள். எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு ஜிக்கின்றனர். கோலட்சுமி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், இலட்சுமி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது. பசுக்கூட்டங்களுக்கு நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள் என்று சிற்றிலக்கியத்தில் ஒன்றான சதக நூல் குறிப்பிடுகிறது. வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருக சாணத்தால் மெழுகும் வழக்கம் உருவானது.

அஷ்ட லட்சுமி தியானம்

1 தன லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா 

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா 

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 ஆதி லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

இலட்சுமி தோத்திரம் - இங்கே அழுத்துங்கள்

300x373x,PE0,PAE,P9A,PE0,PAE,PB0,PE0,PAE

சரஸ்வதி:

சரஸ்வதி காயத்திரி மந்திரம்

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: 

ப்ரம்ம பத்ன்யை தீமஹி

தந்நோ வாணி ப்ரயோதயாத்

நான்முகன் பிரம்மாவின் பத்தினி சரஸ்வதி. சரஸ்வதி கல்விக்கு அதிபதி. வெண்பட்டு உடுத்தி, கைகளில் வீணையும், ஏட்டுச்சுவடியும் ஏந்தி கல்விக்கும், ஏனையகலைகளுக்கும், அதிபதியாக வெண் தாமைரையில் வீற்றிருக்கும் அம்பாள் சரஸ்வதி.

சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு. சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர்.

அன்னம், அற்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. அதுபோல், ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவளது வெள்ளைப் புடவை, அவள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் இதையே உணர்த்துகின்றன.

தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் கொண்டவளாகப் போற்றுகின்றனர். ரவிவர்மாவின் ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக குறிக்கப் பட்டுள்ளது. மயில் தோகை விரிப்பதும், மடக்கிக் கொள்வதும் ஒருவன் கற்ற கல்வி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அடக்கம் வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை

தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.

மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது.

ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.

சொல் கிழவியைத் தெரியுமா?

ஒட்டக்கூத்தர் கலைமகளின் பக்தராக விளங்கினார். நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனூரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியின் திருவடிகளை சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கூத்தருக்கு கொடுத்தாள்.

அப்போதிருந்து பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே என்று பாடியிருப்பது இவரின் பக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழத்தி என்பதற்கு கிழவி என்றும், தலைவி என்றும் பொருளுண்டு. சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இவளை ஒட்டக்கூத்தர் இப்பெயரிட்டு அழைத்தார். கம்பருக்காக கொட்டிக் கிழங்கு விற்றவள்.இவளுக்கு வாக்குதேவி என்றும் பெயருண்டு.

இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி.

குறைந்த கல்வி கற்றவர்களில் சிலர் மேதையாக இருந்திருக்கின் றனர். பள்ளிக்கே செல்லாத சிலர் நாட்டைக்கூட ஆண்டிருக்கின்றனர். கையெழுத்துகூடப் போடத் தெரியாத சிலர் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்து பெரும் வர்த்தக நிர்வாகியாக இருந்திருக் கின்றனர். இதற்கெல்லாம் கலை மகளின் கருணையே காரணம் எனலாம்.

"சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி

ஸித்திர் பவது மேஸ்தா.'

"அன்னை சரஸ்வதியே! உன்னை வணங்குகிறேன். அருள்பாலிக்கும் நீ அழகியவளும்கூட. கல்வி கற்கத் தொடங்குகிறேன். அனைத்து கல்வியையும் எனக்குக் கிடைக்க அருள் செய்' என்பதே மேற்கண்ட சுலோகத்தின் பொருளாகும்.

கல்விக்கு அதிபதி சரஸ்வதி! எல்லா கலைகளுக்கும் தலைவி! "வித்யா' என்றாலே ஆத்மாவை மெய்ஞ்ஞானத்துக்கு இழுத்துச் செல்லும் வழி என்று பொருள். சரஸ்வதி என்ற சொல்லை ஸாரம்-ஸ்வ-இதி என்று பிரிக்க லாம். "ஸ்வ' என்பதற்கு "தான்' என்னும் சாரத்தைத் தருபவள் என்று பொருள். "தான்' என்ற அவள் முழு ஞானத்தைத் தருபவள். அவள் தருகின்ற ஞானம் பிரம்ம ஞானமாகும்.

சரஸ்வதியின் இரு கைகளிலும் வேதப் புத்தகமும் ஸ்படிக மணி மாலையும் இருக்கின்றன. கூடவே வீணையும் இருக்கிறது. வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வெண்ணிற உடையும் அணிந்துள்ளாள். கல்வி கற்பதற்குத் தூய்மையான மனம் வேண்டும் என்பதைத்தான் வெள்ளைத் தாமரையும் வெள்ளை உடையும் குறிக்கின்றன. சரஸ்வதி யின் நான்கு கைகளும் மனிதனு டைய மனம், புத்தி, சித்தம், அகங் காரம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

சரஸ்வதியைப் பூஜிக்கிற பக்தன் தேடுவது ஆத்ம ஞானம். தன்னடக்கம், ஆழ்ந்த கல்வி, சிந்திக்கும் ஆற்றல், தியானம் ஆகியவை இருந்தால் "நான்' என்ற அகங்காரம் அழிந்துவிடுகிறது. ஆத்ம ஞானம் பிறக்கிறது. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது.

அறிவுத் தெய்வமாகிய வாணி காளிதாசனுக்குக் காட்சி தந்ததால் "சாகுந்தலம்' என்ற காவியம் பிறந்தது. கலை மகளின் அருளால் கம்பன் இராமாயணம் எழுதினார். கலாதேவியின் அருளால் பேசவே முடியாத குமரகுருபரர் மதுரை "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்" பாடினார்.

அத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ- மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ- விரிந்த அறிவைத் தருமோ- தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

அதை அடைய வேண்டுமென்றால் நவராத்திரியில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணியை மனமாரத் துதிக்க வேண்டும். சரஸ்வதியின் பிரசாதத்தைப் பெற வேண்டும்.

வராத்திரியில் சரஸ்வதி தேவியும் மற்ற இரு தேவி களும் அவரவர் கணவன்மார்களைப் பூஜித்து முழு வலிமையையும் பெற்று அருள்பாலிக்கிறார்கள். அந்த வகையிலே சரஸ்வதிதேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டிப் பிரார்த்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறாள். ஆகவே சரஸ்வதி பூஜை செய்கிறவர்களுக்கு சரஸ்வதியின் அருட்கடாட்சம் நிறைவாகக் கிடைக்கும்!

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான். அதனால், மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும்;

அடுத்த மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான். அதனால், மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும்;

இறுதி மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இந்த மூன்று தினங்களிலும் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம்.

இந்த நாட்களில் நோன்பிருந்து, நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்டவரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.

தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது

சரஸ்வதி தோத்திரம் - இங்கே அழுத்துங்கள்

விஜய தசமி:

நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம்  நாள் மகாநவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள்  மிகத் தொன்மைக்  காலம்  தொட்டுக் கொண்டாடி  வருகின்றார்கள்.

இத் திருநாளில் (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடக்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தபனங்கள் ஆரம்பித்தல் போன்றன ஆரபிப்பதால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை  பராசக்தி  அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில்  வென்ற  திருநாள்.  பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும்  வழிபட்ட நன்னாள்.

விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.

நம் தேசத்தில் தர்மத்தின்  வெற்றிக்காகப் போரிட்டு,  நல்லாட்சி புரிந்த சேரசோழ பாண்டியர், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், வீரசிவாஜி, குருகோவிந்த சிம்மன் முதலிய அனைத்து வீரர்களும், மன்னர்களும்  தங்கள்  ராஜ்ஜிய  மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாள்.   நம் தேசத்தின் முப்படைகளும்,  அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களூம், கல்விக் கூடங்களும்,  கலைஞர்களும்; சக்தியும், ஊக்கமும், வெற்றியும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடும் திருநாள்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.

அர்த்தநாரீசுவரர்

நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி "சிவசக்தியாக" ஐக்கிய ரூபிணியாக - அர்த்தநாரீசுவரராகமாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே சிற்றின்ப வாழ்கையைத் தவிர்த்து, உணவை அளவோடு நிறுத்தி, விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டைத் துவங்க வேண்டும்.

விரதம் கைக்கொள்ளுவோர் (அனுஷ்டிப்போர்) அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று உபவாசம் (பட்டினியாய்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாரணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.

நவராத்திரியில் கொலு வைப்பது வழக்கம். அமாவாசை அன்றே படிக்கட்டுகள் வைத்து பொம்மை களை வைக்க வேண்டும் என்பதும், விஜய தசமியன்று ஒன்றிரண்டு பொம்மைகளைப் படுக்க வைத்துவிட்டுப் பின்னர் கலைக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம். தேவியரை வணங்குவதால் எதையும் பெறலாம். ராமர் கூட ராவணன் மீது போர் தொடுக்கும் முன் நவராத் திரி விரதமிருந்து சக்தியிடம் ஆசி பெற்றதாகக் கூறுவதுண்டு.

ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள். நறுமணமுள்ள சந்தனம் , பூ (புஸ்பம்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம்,வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.

நவராத்திரியின் போது கொலு வைப்பது ஏன்?

அண்ட சராசரத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவிருக்கிறாள். அவள் அருளால்தான், எல்லாம் உயிர் வாழ்கின்றன. இதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. பலவிதமான பொம்மைகளை இஷ்டப்படி வைக்காமல், கொலுவை முறையாக வைக்க வேண்டும்.

ஒன்பது, ஏழு, ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் கொலு வைக்க வேண்டும். ஒன்பது படிகள் என்ற முறையில் கீழிருந்து வரிசையாக, முதல் படியில் ஓரறிவுள்ள செடி, கொடி, மரங்கள் முதலானவற்றை வைக்க வேண்டும்.

இரண்டாவது படியில் ஈரறிவுள்ள சங்கு, நத்தை, அட்டை முதலான, மெதுவாக ஊரும் உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

மூன்றாவது படியில் கறையான், எறும்பு முதலான, சற்று வேகமாக ஊர்ந்து போகும் மூவறிவுள்ள ஜீவராசிகளின் பொம்மைகளை வைக்கவேண்டும்.

நான்காவது படியில் பறவை, வண்டு முதலான நான்கறிவுள்ள உயிரினங்கள்.

ஐந்தாவது படியில் பசு முதலான ஐந்தறிவுள்ள உயிரினங்கள்.

ஆறாவது படியில் குறவன்-குறத்தி, செட்டியார், பாம்புப் பிடாரன் முதலான ஆறறிவுள்ள மனிதர்களின் பொம்மைகள்.

ஏழாவது படியில் ஞானிகள் மகான்களின் வடிவங்கள்

எட்டாவது படியில் தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள்.

ஒன்பதாவது படியில் அதாவது மேல் படியில் பூர்ண கும்பத்துடன் அம்பிகையின் திருவடிவம் மட்டுமே இருக்க வேண்டும். அவள் அருளால்தான் பலப்பல ஜீவராசிகள் உருவாகி, படிப்படியாக உயர்ந்து மேல் நிலையை அடைகின்றன என்பதை உணர்த்தவே இந்தக் கொலு அமைப்பு.

இதே போல, நவராத்திரியின் போது, நவ கன்னிகை பூஜை செய்வது விசேஷம். இதன் முறைகளையும் பலன்களையும் தேவிபாகவதத்தில் வியாசர் விவரிக்கிறார்.

குமாரி பூஜை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூஜைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்படவேண்டும். பூஜிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.

குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.

நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை அம்பாளாக பாவிப்பது ஏன்?

நவராத்திரியின் ஆரம்பநாளில்தான், சகல தேவர்களின் அம்சங்களும் கொண்டவளாக அம்பிகை அவதரித்தாள். மஹாசக்தியான அவள், ஒன்பது நாட்கள் தவம் இருந்து அசுரர்களை அழித்து, முடிவில் மகிஷாசுரனை மாய்த்தாள். நவராத்திரி நாளில்தான் அம்பிகை பிறந்தாள் என்பதால், அவளை அந்த நாட்களில் சிறுமியாகவே பாவித்து பூஜிப்பது சிறப்பானதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, நவராத்திரி நாட்களில், முதல்நாள் தொடங்கி பத்தாம்நாள் வரை குறிப்பிட்ட வயதுள்ள பெண் குழந்தைகளை, குறிப்பிட்ட பெயர்களில் அழைத்து, அலங்கரித்து பூஜிக்க வேண்டும் என்ற பூஜாவிதியும் உண்டு.

இரண்டு வயதுக் குழந்தையை முதல் நாள் அழைத்து குமாரீ என்றும்; (அந்தப் பெண்ணின் பெயர் குமாரி என்று இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.) குமாரியைப் பூஜை செய்வதன் மூலம் தரித்திரம், பகை நீங்கும். ஆயுளும் செல்வமும் வளரும்.

மறுநாள் மூன்று வயதுக் குழந்தையை த்ரிமூர்த்திதேவியாக பாவித்தும்; இப்பூஜை அறம், பொருள், இன்பம், தானியம் ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என பரம்பரையும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

மூன்றாம் நாளில் கல்யாணீ என்ற திருநாமத்தால் நான்கு வயதுக் குழந்தையையும் பூஜிக்க வேண்டும். இதன் மூலம் ராஜ்ய சுகம், வித்தை ஆகியவை கிடைக்கும்.

இந்த வரிசையில் நான்காம் நாளில் ஐந்து வயதுக்குழந்தையை ரோகிணிதேவி எனவும்; ரோகங்கள் நாசமாகும்.

ஐந்தாம் நாள், ஆறுவயதுக் குழந்தையை காளிகா தேவியாக பாவித்தும்; பகைவர்கள் அழிந்து போவார்கள்.

ஆறாம்நாள் ஏழுவயதுக் குழந்தையை சண்டிகா தேவியாகப் போற்றியும்; சண்டிகா பூஜை ஸர்வ ஐஸ்வர்யங்களையும் அளிக்கும்.

ஏழாவது நாளில் எட்டு வயதுக் குழந்தையை சாம்பவி என அழைத்தும்; போரில் வெற்றி, ராஜ யோகம் ஆகியவை கிடைக்கும்.

எட்டாம் நாளில் ஒன்பது வயதுக் குழந்தையை துர்க்கையாக பாவித்தும் வணங்கிடல் வேண்டும். கொடூரமான பகைவர்களை அழிக்கும், அரிய செயல்களைச் செய்யும் ஆற்றலைக் கொடுக்கும். முக்தி இன்பத்தை அளிக்கும். அப்படிப்பட்ட வழிபாடு இது.

ஒன்பதாவது நாள்: பத்து வயதுள்ள பெண்ணை சுபத்ராதேவி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இந்தப் பூஜையால் அடங்காத மனமும் அடங்கும்.

வசதியும் மனமும் கொண்டவர்கள் முதல் நாளன்று ஒரு பெண், இரண்டாம் நாளன்று இரண்டு பெண்கள் என ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குண்டான எண்ணிக்கைப்படி பெண்களை உட்கார வைத்துப் பூஜை செய்யலாம். மிகவும் சக்திவாய்ந்த வழிபாடு இது.

ஆயலங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்க முடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.

வன்னி மரத்திற்கு தெய்வீக சக்தி அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுவது உண்மையா?

வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள். தற்காலத்தில் அபூர்வமாகிவிட்ட வன்னிமரத்தை சில ஆலயங்களில் காணலாம். இம் மரத்தை வணங்கி வழிபட்டால் வழக்குகளிலும், தேர்வுகளிலும் வெற்றிகளை எளிதாகக் குவிக்கலாம் என்பது உண்மையே! பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தமது ஆயுதங்களை வன்னிமரப் பொந்து ஒன்றில்தான் மறைத்து வைத்தார்களாம்.

உமா தேவி, வன்னி மரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களுள், வன்னிமரம், அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகிலுள்ள சாத்தனூர் பாசிக்குளம் விநாயகர், சாஸ்தாவுக்கு அக்னி சொரூபராக வன்னி மரவடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது. விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்துக்குரிய வன்னிமர இலையை, வடமொழியில் சமிபத்ரம் என்பார்கள்.

புராணங்களில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன

1.   உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.

2.   தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

3.   பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

4.   எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

5.   காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

6.   பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

7.   இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

8.   மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

9.   மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

10.  மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

11.  கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

12.  மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

13.  இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

14.  ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

15.  ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

16.  ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

17.  ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

18.  ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், .  சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

19.  ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

20.  தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம்  ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

21.  ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

22.  ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.

23.  ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

24.  இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

25.  முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

26.  மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

27.  வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.

உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.

விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப் பாடல்கள்:

1. அபிராமி அந்தாதி (இவ் இனையத்தளத்தி்ல் "தோத்திரங்கள் பகுதியில்" பதியப்பெற்றுள்ளன)

2. இலட்சுமி தோத்திரம் (கனகதார தோத்திரம்)

3. சகலகலாவல்லி மாலை

4. சரஸ்வதி அந்தாதி

சரஸ்வதி தோத்திரம் - இங்கே அழுத்துங்கள்

இலட்சுமி தோத்திரம் - இங்கே அழுத்துங்கள்

அபிராமி அந்தாதி - இங்கே அழுத்துங்கள்

அபிராமி அம்மை பதிகம் - 1 இங்கே அழுத்துங்கள்

 

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=10163:2013-09-21-13-23-28&catid=59:cricket&Itemid=387

  • கருத்துக்கள உறவுகள்

மலைமகள், கலைமகள், அலைமகளுக்கு நன்றி!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

சுவி, நாதமுனி, குசா எல்லோருக்கும் நன்றி  :)

சகலகலாவல்லி மாலை
 
வெண்தா மரைக்குஅன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளைஉள்ளத்
தண்தா மரைக்குத் தகாதுகொ லோசகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகஉண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1
 
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள் வாய்பங்க யாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும்ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 2
 
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3
 
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்துஅருள் வாய்வட நூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில்நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4
 
பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாதபங் கேருகம்என்
நெஞ்சத் தடத்துஅல ராததுஎன் னேநெடுந் தாள்கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந் நாவும் அகமும்வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே. 5
 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்தநல் காய்எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும்அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6
 
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண்நல் காய்உளம் கொண்டுதொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே. 7
 
சொல்விற் பனமும் அவதான மும்கவி சொல்லவல்ல
நல்வித்தை யும்தந்து அடிமைகொள் வாய்நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகால மும்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8
 
சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9
 
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே. 10
  • தொடங்கியவர்

மிக்க நன்றி தமிழச்சி, புங்கை!


 

 
 
 
சகலகலாவல்லி மாலை
 
வெண்தா மரைக்குஅன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளைஉள்ளத்
தண்தா மரைக்குத் தகாதுகொ லோசகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகஉண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1
 
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள் வாய்பங்க யாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும்ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 2
 
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3
 
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்துஅருள் வாய்வட நூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில்நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4
 
பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாதபங் கேருகம்என்
நெஞ்சத் தடத்துஅல ராததுஎன் னேநெடுந் தாள்கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந் நாவும் அகமும்வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே. 5
 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்தநல் காய்எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும்அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6
 
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண்நல் காய்உளம் கொண்டுதொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே. 7
 
சொல்விற் பனமும் அவதான மும்கவி சொல்லவல்ல
நல்வித்தை யும்தந்து அடிமைகொள் வாய்நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகால மும்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8
 
சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9
 
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே. 10

 

 


 

ராகம்-ஆனந்த பைரவி                                                                       தாளம்-சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.                                               (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.                                                      (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்                  (வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.                                            (வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,                                   (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.                                          (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!                                                (வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்                 (வெள்ளைத்)

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!     

 

http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-II61.asp

 

http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=3505&mode=Language&Language=0

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்பவே முடியல

 

இந்த திரியை இணைத்தவர் அலை மகள்

அதனூடு சேர்ந்து எழுதுபவர் தமிழிச்சி.

நான் கனவில் இல்லையே...... :icon_idea:

  • தொடங்கியவர்

நம்பவே முடியல

 

இந்த திரியை இணைத்தவர் அலை மகள்

அதனூடு சேர்ந்து எழுதுபவர் தமிழிச்சி.

நான் கனவில் இல்லையே...... :icon_idea:

 

ஏன் விசுகு??

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விசுகு??

 

 

உங்கள்    இருவரிமுமிருந்து ஆன்மீக  சொற்பொழிவை எதிர்பார்க்வில்லை.

நல்லது தொடருங்கள். :icon_idea:

உங்கள்    இருவரிமுமிருந்து ஆன்மீக  சொற்பொழிவை எதிர்பார்க்வில்லை.

நல்லது தொடருங்கள். :icon_idea:

 

இதில் என்ன இருக்கிறது விசுகு. சின்ன வயதில் படித்ததை, செய்ததை மறக்க முடியாதுதானே?  எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இருப்பவர்களுக்கு உதவுவதில் தவறில்லைத்தானே?

சரஸ்வதி பூசையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்

 

http://www.youtube.com/watch?v=BamHj90DSkE

 

 

 

 

 

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

navarathri1.jpg

 

இன்று ஆயுத பூசை நடை பெறும் தினமாதலால்....
உங்கள் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை கல்வி தரும் சரஸ்வதி படம் முன் வைத்து வழிபடவும்.
ஏடு தொடங்குவதற்கும் இன்றையை தினம் உகந்த நாளாகும்.
அனைவருக்கும் நவராத்திரி பூசை வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

இதில் என்ன இருக்கிறது விசுகு. சின்ன வயதில் படித்ததை, செய்ததை மறக்க முடியாதுதானே?  எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இருப்பவர்களுக்கு உதவுவதில் தவறில்லைத்தானே?

 

 

தமிழச்சி சமய நம்பிக்கை இல்லாதவரா?? ஏன்???

தமிழச்சி சமய நம்பிக்கை இல்லாதவரா?? ஏன்???

 

இயற்கைதான் எமக்குக் கடவுள் அலை.  மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களில் எனக்கு நம்பிக்கையில்லை.  எம்மைச் சுற்றி நடப்பவை அனைத்தும் இயற்கையாலும் மனிதனாலும் நடத்தப்படுபவையே.  எம்மை நாமே நம்பினாலே அனைத்தும் சிறப்பாக அமையும்.  அனைத்தும் எமது மனத்திலேயே தங்கியுள்ளது.  இது நான் எனது வாழ்வில் பார்த்த உண்மை.

 

எனது குடும்பமும் பக்திப் பரவசம் நிறைந்த குடும்பம் தான்.   நான்கூட, கௌரி விரதத்தைத் தவிர அனைத்து விரதங்களும் (கந்த சஸ்டி உட்பட) பிடித்திருக்கிறேன்.  அதனால் சமயம், சடங்குகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் நிறையப் பரிச்சயம் உண்டு.  இப்போது கோவில்களுக்குச் செல்வதில்லை.  இருந்தாலும் கோவில்களுக்குச் செல்ல இப்போதும் ஒரு விருப்பம் உண்டு.  அந்தச் சூழ்நிலை மனதில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.  அதற்குக் காரணம், முந்தைய கால அனுபவம் என்று நினைக்கிறேன்.   :wub:

எங்கள் வீட்டில் இன்று ஓரா மீன் கறியும், சூவாப்பாரை மீன் பொரியலும். சரஸ்வதி பூசையில் இருந்து எதுவும் செய்வது இல்லை. ஆனாலும் பிள்ளைகள் தாம் கண்டிப்பாக படிப்பார்கள் என்று நம்புகின்றனர். எந்தவித ஆதாரமில்லாத இப்படியான விரதங்கள், பூசைகளை விட அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுப்பதுதான் சிறந்த விடயம் என்று நம்புகின்றேன்.

 

இருக்க, ஒவ்வொரு வீடுகளிலும் சரஸ்வதி பூசை செய்த ஈழத் தமிழரின் தாயகத்தில் தான் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் அழிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும், கல்வி வசதிகள் மிக மோசமாக சிதைக்கப்பட்டும் கல்வி அறிவு வீதத்தில் மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். சரஸ்வதியும் உதவவில்லை, அழிவுகளில் இருந்து காப்பாற்ற துர்க்கையும் துணியவில்லை. வெறுமனே புலம்பெயர்ந்தவர்களுடன் மட்டும் லக்ஷ்மி உறவு வைத்து இருக்கின்றார்.

 

 

எங்கள் வீட்டில் இன்று ஓரா மீன் கறியும், சூவாப்பாரை மீன் பொரியலும். சரஸ்வதி பூசையில் இருந்து எதுவும் செய்வது இல்லை. ஆனாலும் பிள்ளைகள் தாம் கண்டிப்பாக படிப்பார்கள் என்று நம்புகின்றனர். எந்தவித ஆதாரமில்லாத இப்படியான விரதங்கள், பூசைகளை விட அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுப்பதுதான் சிறந்த விடயம் என்று நம்புகின்றேன்.

 

இருக்க, ஒவ்வொரு வீடுகளிலும் சரஸ்வதி பூசை செய்த ஈழத் தமிழரின் தாயகத்தில் தான் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் அழிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும், கல்வி வசதிகள் மிக மோசமாக சிதைக்கப்பட்டும் கல்வி அறிவு வீதத்தில் மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். சரஸ்வதியும் உதவவில்லை, அழிவுகளில் இருந்து காப்பாற்ற துர்க்கையும் துணியவில்லை. வெறுமனே புலம்பெயர்ந்தவர்களுடன் மட்டும் லக்ஷ்மி உறவு வைத்து இருக்கின்றார்.

 

அந்த ஓராவும் சுனா பானா பாரையும்  என்ன பாவம் செய்ததோ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் வீட்டில் இன்று ஓரா மீன் கறியும், சூவாப்பாரை மீன் பொரியலும். சரஸ்வதி பூசையில் இருந்து எதுவும் செய்வது இல்லை. ஆனாலும் பிள்ளைகள் தாம் கண்டிப்பாக படிப்பார்கள் என்று நம்புகின்றனர். எந்தவித ஆதாரமில்லாத இப்படியான விரதங்கள், பூசைகளை விட அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுப்பதுதான் சிறந்த விடயம் என்று நம்புகின்றேன்.

 

இருக்க, ஒவ்வொரு வீடுகளிலும் சரஸ்வதி பூசை செய்த ஈழத் தமிழரின் தாயகத்தில் தான் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் அழிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும், கல்வி வசதிகள் மிக மோசமாக சிதைக்கப்பட்டும் கல்வி அறிவு வீதத்தில் மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். சரஸ்வதியும் உதவவில்லை, அழிவுகளில் இருந்து காப்பாற்ற துர்க்கையும் துணியவில்லை. வெறுமனே புலம்பெயர்ந்தவர்களுடன் மட்டும் லக்ஷ்மி உறவு வைத்து இருக்கின்றார்.

சைவமதனோ இல்லையேல் இந்துமதமோ இப்படித்தான் வாழ வேண்டுமென்று வற்புறுத்தியதேயில்லை. மனித ஒழுக்கத்திற்கு வாழ்க்கைக்கு தேவையானதை புராணங்கள்,தேவாரங்கள்,இதிகாச கதைகள் மூலம் நல்லதுகெட்டதை சொல்ல விளைந்தார்களே தவிர மனிதர்களை கட்டுப்படுத்தவேயில்லை. ஞாயிறு,வெள்ளிகளில் சமூகமளிக்கா விட்டால் ஆளனுப்பி விசாரிக்குமளவிற்கு இந்தமதம் என்றுமேயிருந்ததில்லை.
 
ஜெர்மனியில் ஒரு பிரபலமான கட்சி அதுவும் ஆட்சியில் அமர்ந்தகட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய பிரச்சாரத்தில் ஒன்று:-  வாரத்தில் ஒருநாள் மச்சம்மாமிசங்களை பகிஸ்கரிப்போம்.
 
 கோபுரத்தின் அழகை கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாது.....அதின்ரை அழகு தூரத்தை நிண்டு பார்த்தால்த்தான் தெரியும்....அது போலை......எங்கடை சமயத்தின்ரை நல்ல விசயங்கள் வெளிநாட்டவருக்கு தெரிஞ்ச அளவுக்கு எங்கடை சனத்துக்கு பெரிசாய் தெரியாது. ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம்.
 
டாக்குத்தர்மாரே  மாமிசங்களை  சாப்பிடாதேங்கோ எண்டு சொல்லீனம்.....மரக்கறிதான் பக்கவிளைவுகள் விக்கனமில்லையயெண்டு சொல்லீனம். இரவிலை சாப்பிடாமல் நித்திரை கொண்டால் ஒரு வருத்தமும் அண்டாது எண்டும் சொல்லீனம்.....இதெல்லாம் படிப்பறிவில்லாதகாலத்திலை மதம் மூலமாய் சொல்லியே விட்டினம்.
 
மாட்டுக்கு மாடு சொன்னா கேக்காது....மணிகட்டின மாடு சொன்னால்த்தான் கேக்குமாம்.

பலதடவை பலரின் கவலை நான் கும்பிட்டனான் கடவுள் தரவில்லை என்பது. எதனை தரம் கும்பிட்டிருந்தாலும் இறக்காத மனிதன் இதுவரையில் பிறக்கவில்லை. 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்து சமயத்தவர் கும்பிடுவதால் தாங்கள் மட்டும் தப்பி பிளைக்கலாம் என்று கனவு கண்டுகொண்டு இன்றுவரை கும்பிட்டு பார்க்கிறார்களாகும் என்று நினைப்பதும் அபத்தம். சிங்களவன் அடிச்சான் நாங்கள் செத்தோம் என்று நினைக்கும் இந்துகளில் எத்தனை பேர் தங்களை காக்கும் படி கடவுளுக்கு கட்டளை இட்டார்கள் என்பதும் சிங்களவரில் எத்தனை பேர் தாங்கள் எங்களை வெல்ல வேண்டும் என்று மனசுத்தியுடன் இறைவன் காலடியில் விழுந்திருந்தார்கள் என்பதும் நாம் அறியாத புள்ளிவிபரம்.  இவற்றை வைத்து கடவுளை நிறுவுவதும் நிராகரிப்பதும் பாதி வழியில் சிந்தனைகள் நின்றுவிடுவதாலேயே. 

 

விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்கிறது திருக்குறள். தன்னை துதிப்பார் மீது அன்பும், இகழ்வார் மீது கோபமும் கொள்ளாதவன் இறைவன் என்கிறது சைவ சித்தாந்தம் - திருவருட் பயன். (இல்லையேல் அவனும் ராஜபக்ஷ் குடுபம்பத்தினன்) எனவே பிராத்தித்தவன் தான் கேட்டதை உடனே பெறவில்லை என்பதோ, பிராத்திக்காதவன் தான் பலன் அடைந்துவிட்டதாகவோ சொல்ல முடியாது. 

 

நிர்வாணி தான் கடவுளை கண்டதாக எழுதி வைத்துவிட்டுப்போயிருக்கிறான். உலக வாழ்க்கையை தேடுபவன் கடவுளை வணங்க வேண்டுமா என்பது சரியாகத்தெரியாது. 

 

சம்பிரதாயங்கள் இறைவன் வழியில் மனத்தை திருப்பவே. சிறுவயதில் சிலவற்றை மனத்தில் படியவைக்க முடியும் என்பதால் கொண்டாட்டங்கள் ஏற்படுததப்பட்டிருக்கு. 

 

 

  • தொடங்கியவர்

தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்த விசுகு, தமிழ்சிறி, தமிழச்சி, தப்பிலி, நிழலி, குசா, மல்லை ஆகியோருக்கு நன்றிகள்!

எனக்கு எதிலும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மற்றவர்கள் விருப்பிற்கு குறுக்கே நிற்பதில்லை .

மனைவி தினமும் காலை சாமிக்கு விளக்கேற்றி ஒரு செம்பரத்தம்பூ வைத்துதான் அன்றைய நாளைத்தொடங்குவார் .சரஸ்வதி பூஜையும் பிள்ளைகளின் புத்தகத்தை வைத்து அவல்,சுண்டலுடன் போனது .

பதிவுக்கு நன்றி அலை .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எதிலும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மற்றவர்கள் விருப்பிற்கு குறுக்கே நிற்பதில்லை .

மனைவி தினமும் காலை சாமிக்கு விளக்கேற்றி ஒரு செம்பரத்தம்பூ வைத்துதான் அன்றைய நாளைத்தொடங்குவார் .சரஸ்வதி பூஜையும் பிள்ளைகளின் புத்தகத்தை வைத்து அவல்,சுண்டலுடன் போனது .

பதிவுக்கு நன்றி அலை .

 

சிறுவர்களாக இருக்கையில் , அவள், சுண்டல், பொங்கல் எல்லாம் ஒரு இனிமையான அனுபவம்.

 

அது அது அந்த அந்த வயதில் செய்ய வேண்டும். வளர்ந்த பின் வேறு பிரச்சனைகள், பகுத்தறிவுகள்: நம்பிக்கை இருக்கும், போகும்.

 

எனது கவலை எல்லாம், நமது மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை காசாக்கும், கோவில்கள், இந்த குழந்தைகளின், சமய அறிவூட்டல், ஆன்மிக தேவைகளுக்காக என்ன செய்கின்றன என்பதே ஆகும்..

 

இறுதியில், எதிர்காலத்தில், பராமரிப்பார் இன்றி இந்த கோவில்கள் இழுத்து மூடப்படுமோ?

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

எனக்கு எதிலும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மற்றவர்கள் விருப்பிற்கு குறுக்கே நிற்பதில்லை .

மனைவி தினமும் காலை சாமிக்கு விளக்கேற்றி ஒரு செம்பரத்தம்பூ வைத்துதான் அன்றைய நாளைத்தொடங்குவார் .சரஸ்வதி பூஜையும் பிள்ளைகளின் புத்தகத்தை வைத்து அவல்,சுண்டலுடன் போனது .

பதிவுக்கு நன்றி அலை .

 

 

சமய நம்பிக்கை இல்லாவிட்டால் ஒதுங்கி இருப்பது வரவேற்கத்தக்க விடயம் அர்ஜுன் அண்ணா!

 

நானும் எனது கணவரும் சமய நம்பிக்கை உள்ளவர்கள். அதே போல எனது மகளுக்கும் உண்டு. சமர் விடுமுறை நாட்களில் இணையத்தில் தானே தேடி வாசிப்பாள்.

சிறுவர்களாக இருக்கையில் , அவள், சுண்டல், பொங்கல் எல்லாம் ஒரு இனிமையான அனுபவம்.

 

அது அது அந்த அந்த வயதில் செய்ய வேண்டும். வளர்ந்த பின் வேறு பிரச்சனைகள், பகுத்தறிவுகள்: நம்பிக்கை இருக்கும், போகும்.

 

எனது கவலை எல்லாம், நமது மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை காசாக்கும், கோவில்கள், இந்த குழந்தைகளின், சமய அறிவூட்டல், ஆன்மிக தேவைகளுக்காக என்ன செய்கின்றன என்பதே ஆகும்..

 

இறுதியில், எதிர்காலத்தில், பராமரிப்பார் இன்றி இந்த கோவில்கள் இழுத்து மூடப்படுமோ?

 

 

கருத்துக்கு நன்றி நாதமுனி!

  • கருத்துக்கள உறவுகள்

சமய நம்பிக்கை இல்லாவிட்டால் ஒதுங்கி இருப்பது வரவேற்கத்தக்க விடயம் அர்ஜுன் அண்ணா!

 

நானும் எனது கணவரும் சமய நம்பிக்கை உள்ளவர்கள். அதே போல எனது மகளுக்கும் உண்டு. சமர் விடுமுறை நாட்களில் இணையத்தில் தானே தேடி வாசிப்பாள்.

 

 

கருத்துக்கு நன்றி நாதமுனி!

 

அலைமகள்,

உங்கள் மகளை இந்த தளத்திற்க்கு செல்ல வையுங்கள்:

 

www.hindukidsworld.org

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.