Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாலிப வயதுக் குறும்பு. பாகம் 5

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாகம். 4 பதிவின் தொடர்...
 
எதிர்பாராத கெளசல்யாவின் சந்திப்பு கல்லூரி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அழகிய மாணவிகளில் ஒரு தாமரைப்பூ போன்று அதன் செந்நிற அழகும் கொண்டவள் கெளசல்யா. பளிங்குபோன்று பளபளப்பாக மின்னும் சருமம். வளைந்து நெளிந்த வாளிப்பான கட்டுடல். நாணம் கொண்ட அச்சத்துடன் நிலம் பார்க்கும் கண்கள், புன்னகையால் விருந்து தர முயல்வது போன்ற இதழ்கள். பூரணமான பெண்மைக்குரிய அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்று நண்பர்கள் கூறுவது பொய்யல்ல. அவளை யாராவது மாணவன் சீண்டினால், மற்றப் பெண்களைப்போல் சீறிச் சினந்து ஆசிரியரிடம் போட்டுக் கொடுப்பது, அல்லது சீண்டுபவர் காலத்துக்கும் நினைத்து நினைத்து அவமானப்படும்படி முறைத்து, ஒரு வெறுப்பான பார்வையை வீசுவது என்று இல்லாது, என்னை ஏன் இப்படி வருத்துகிறீர்கள்..? நான் மனம் வருந்துவதைக் காண்பதில் உங்களுக்கு அத்தனை இன்பமா..?? என்ற பரிதாபமான பார்வை, சீண்டுபவர்கள் மனதைக் கசக்கிக் பிழிந்துவிடும்.  ஆதலால் பரிகாசம் செய்து சீண்டுவதற்கும் பதிலாக, அவளிடம் ஒரு பாசம், பரிவு, இரக்கம்காட்டி அவள் அன்பான அறிமுகத்தைப் பெற்று, அந்த அழகியின் புன்முறுவலை ரசித்தாலே போதும் என்பதில் மாணவர்கள் முனைப்புடன் இருந்தார்கள். 
 
கெளசல்யாவின் தந்தை ஊர்ப் பெரிசுகளும் போற்றும் மேட்டுக்குடிப் பிரமுகர். நல்லூர்க் கந்தனின் ஒரு திருவிழாவும் அவருடையது. ஆனாலும் அவரது சில செயற்பாடுகள் பெரிசுகளை முகம்சுளிக்க வைப்பதற்கும் தவறவில்லை. லண்டனில் சில வருடங்கள் படித்து கொழும்பில் தொழில் பார்த்தவர். பிள்ளைகளுக்கு முன்னாலேயே அவர் மனைவியைக் கொஞ்சி, தொடக்கூடாத பாகங்களையும், வருடி மகிழ்ச்சியை வெளிக்காட்டும் உன்னதமான லண்டன் நாகரீகத்தை அவர் விட்டுவிடவில்லை. வேலைக்காரியையும் பாகுபாடு பாராமல், அணைத்து, அன்போடு கிள்ளி உத்தரவுபோடுபவர். ஓய்வு பெற்றதும் ஊருக்கு வந்துவிட்டார். பனைமரக் கள்ளும், வேப்பமர நிழலும் அவருக்குச் சொர்க்கபுரி. எங்களுடன் படிக்கும் சோமனின் அப்பா, பொன்னனுடைய கொட்டிலுக்கு, அப்பத்துக்குக் கள்ளுவாங்க நான் செல்லும் போதெல்லாம், கெளசல்யாவின் தந்தையும், கள்நிறைந்த பிளாவுடன் அங்குள்ள வேப்பமரத்தடிக் கல்லில் கலகலப்பாக உட்காந்திருப்பார். அவரிடம் கடனுடன் வாங்கும் பொன்னன், அந்த வேலையைப் பார்ப்பதற்கு தன் மகன் சோமனை அவர் வீட்டிற்கு அடிக்கடி அனுப்புவதும் வழக்கம்.
.
பொதுவாக என் நண்பர்கள், மாணவிகளை பரிகாசம் செய்து ரசிக்கும்போது, நானும் அவர்களுடன் இணைந்து மகிழவிடாது, மனதை ஏதோ ஒன்று தடுப்பதுண்டு. அது கூடாது என்று இடித்து உரைக்கும். இது எனக்கு மட்டுமா.? இல்லை..! என் நண்பர்கள் சிலரும் இதுபற்றி என்னுடன் பகிர்ந்து விவாதித்ததையும் எண்ணிப் பார்க்கிறேன்... அதுவும் இந்த நூற்றாண்டில். யார் நம்பப் போகிறார்கள்...!! மற்றவர்கள் நம்பாவிட்டால் என்ன? என்னை நான் நம்புகிறேன்! அது போதுமே..! எத்தனையோ நல்லவர்களில் நானும் ஒரு நல்லவன்!. அந்த நினைவே... மற்றவர்களை விடவும் என்னை ஒருபடி மேலே உயர்த்திப் பெருமிதம் கொள்ளவைக்கிறது. கைவிரல் சூப்பும் நாள்தொடங்கி பிள்ளைகளுக்கு நல்ல போதனைகளைப் போதித்து வந்த எங்கள் பெற்றோர்  தொடங்கிச் சொந்த பந்தப் பெரியவர்கள்வரை, அந்நாளில் விளையாட்டிற்குக் கூட பிள்ளைகள் தவறான வழியில் செல்லாதபடி, அவர்கள் மனதில் வியூகம் அமைத்து நின்றது மட்டுமன்றி, அதன்வழி தாங்களும் ஒழுகி நின்றார்கள் என்பதையும் அறிவதற்கு, ஒரு நிகழ்வை இங்கு சுட்டிக் காட்டவேண்டும். 
 
ஒரு இலங்கைக் குடிமகன், சிங்கப்பூரில் கோழி மேய்க்கும் தொழில் பார்த்திருந்தாலும், ஓய்வூதியம் பெற்று இலங்கை திரும்பி வந்தால்.! அவருக்குக் கிடைக்கும் ராச மரியாதை வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. 'சிங்கப்பூர் பென்சனியர்'... அப்படி வந்தவர்தான் தம்பு என்ற தம்பிராசா. எங்களுக்கும் சொந்தம். ஆனாலும் பணத்திமிர் எங்களைக் கூடிக்களிக்க விடாது, அந்தச் சொந்தத்திற்கு இடையே நந்திபோல் குந்தியிருந்தது. அத்துடன்  ஊரை அடித்து உலையில்போடும் கலையிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். ஊர் வந்தும் அந்தக் கலையைத் தொடர அவர்  தவறவும் இல்லை. எங்கள் பெரியப்பாவின் காணி ஒன்றில் அவர் கண்பதிந்தது "பெரியவர் உங்களுக்கும் பிள்ளைகள் இல்லை, வெறும் காணியை வைத்து என்ன செய்யப்போறியள்? எனக்கோ நாலு பெட்டையள், கரை சேர்க்க வேணும். அந்த வேப்பமரத்தடிக் காணியை எனக்குத் தாங்கோவன் பெறுமதியைத் தாறன்." "ஓம் தம்பர் நான் என்ன போகேக்கை கொண்டே போகப்போறன், எல்லாம் எனக்குப்பின் என்ரை சகோதரங்களுக்குத்தான். ஆனாலும் நீங்களும் என்ரை ரத்தச் சொந்தம், பொம்பிளைப் பிள்ளைகளையும் வைத்திருக்கிறியள் பார்த்துப் பெறுமதியைத் தாருங்கோவன்..."  "பதினைந்துபரப்பென்றாலும் வெறும் காணிதானே.! இப்ப போகிற விலைக்கு நான் ஒரு பதினைந்து தாறன்."  "நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் தம்பர்."  தம்பர் மகிழ்ச்சியோடு பெரியப்பாவின் கையைப்பிடித்து ஏதோ வைக்க பெரியப்பாவும் "பிள்ளையார் துணை, சந்தோசம்" என்று கைகூப்பி வணங்கி விடைபெற்றார். 
 
பெரியப்பா வீடே ஆட்டம் கண்டது பெரியப்பாவின் தம்பி, என் சித்தப்பா! தண்டோரா போட்டு ஊரையே கூட்டிவிட்டார். "இன்னும் கொஞ்சநாள் போனால் பரப்பே பதினையாயிரம் போகும், இந்தாள் பதினைஞ்சு பரப்பையும் பதினையாயிரத்துக்கு கொடுக்கச் சம்மதம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார், இவருக்கென்ன விசரா? வாங்கிற அந்தாளுக்கு என்றாலும் மனச்சாட்சி இல்லையா...? பெரிய  பென்சனியர்...! மோசக்காரன்...." "டேய்தம்பி பெரியாட்களை அப்படியெல்லாம் சொல்லக்கூடாதடா..." "என்ன பெரியாள்.! காணியை விற்கமுடியாதென்று சொல்லுங்கோ! அவ்வளவுதான். நான் விற்க விடமாட்டன்...!!" கூடிநின்ற கூட்டமும் அதற்கு ஒத்துப் பாடியது. பெரியப்பா அமைதியாகக் கூறினார்! "நான் வாக்குக் கொடுத்துவிட்டேன் அத்துடன் அச்சவாரமும் கைநீட்டி வாங்கிப்போட்டன் கொடுத்த வாக்கைமீற முடியாது..!!" "எவ்வளவு அச்சவாரம் தந்தவர்?" கூடிநின்ற யாரிடமிருந்தோ கேள்வி பிறந்தது. "ஐந்து ரூபா" பதில் பதட்டமின்றி வந்தது. வாக்குக் கொடுத்தபடி காணியும் பதினையாயிரத்தில் ஐந்து ரூபா அச்சவாரம் கழிய தம்பருக்குக் கைமாறியது. பெரியப்பா போன்ற வாக்குத்தவறாத உத்தமர்களிடம் வளர்ந்த பிள்ளைகள் எப்படித் தவறான வழிகளை நினைக்கவோ! அவற்றில் பயனிக்கவோ முடியும்!.... 
 
கல்லூரி மதியச் சாப்பாட்டுக்கான இடைநேரம். எங்கள் வீடு அதிக தூரமில்லை. ஆதலால், வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு வருவது வழக்கம். அனேகமாக கொளுத்தும் வெயில் நேரத்தில், றோட்டுத் தார் உருகி கால்களில் ஒட்டும். ஆகவே என் நண்பனும் நானும் பள்ளிக்கூடப் பின்வாசல் வழியாக எதிரேயுள்ள தோட்டக் காணிகளில் நுழைந்து, இலந்தைமரப் பற்றைகளைக் கடந்து, பணிக்கர்வளவுப் பனம்கூடல் ஊடாகச் சென்று வருவதும் உண்டு. தோட்டத்தில் சோளம் விளைந்து ஆள்மறைக்கும் உயரத்திற்கு வளர்ந்திருந்தது. குளிர்மையான வாய்க்கால் வரம்பில் நடப்பது ஒரு தனிச்சுகம். அன்று மதியச் சாப்பாட்டுநேரம் கைப்பந்து விளையாட, நண்பர்கள் திட்டம் போட்டிருந்ததால், அதில் நானும் பங்குபற்றி விளையாடும் நோக்கத்துடன், விரைவாகவே அம்மாவின் பேச்சையும் பொருட்படுத்தாமல் சோற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு திரும்பிவிட்டேன். நண்பன் சிவாவும் வந்துவிட்டான். பனம்கூடல், பற்றைகள் தாண்டி தோட்டம் வந்ததும், வளைவில் இருந்த பெரு வாய்க்கால் வழியாக யாரோ ஓடி ஒழிந்தது தெரிந்தது. "மச்சான் எங்கடை பரமுபோல் தெரிகிறது! ஏன் ஓடி ஒழிக்கிறான்..!" நண்பன் கேட்டான்!. அங்கு தோட்டத்தில் புகையிலை உணர்த்தும் குடில் ஒன்று இருந்தது. அதற்கு முன்னால் சிறிய பாவட்டம் பற்றை. ஓடிய பரமு அந்தப் பற்றைக்குள் ஒழித்துப் பதுங்குவது தெரிந்தது. பரமு எங்களுடன் ஒன்றாகப் படிப்பவன். சோமுவின் ஆப்த நண்பன். ஆள் அரவம் கேட்டுத்தான் ஓடியிருக்கிறான். இவன் ஏன்? எதற்கு? இப்படி ஓடிப் பதுங்கவேண்டும்...??? 
 
நண்பன் சிவா எனக்குச் சைகைகாட்ட , பூனைபோல் பதுங்கிக் குடிலின் பின்புறமாகச் சென்று அந்த வளைந்து வட்டமான மண்சுவரின்மேல் கையூன்றி பற்றையை எட்டிப்பார்க்க முயன்ற நான், குடிலின் உள்ளிருந்து வந்த சத்தத்தை அறியச் சற்றுக் குனிந்து பார்தபோது போது, அப்படியே ஆடிப்போய்விட்டேன்...! "என்ன மச்சான்" என்றான் நண்பன் காதோடு. அவனையும் பார்க்கும்படி சைகை காட்டினேன். குடில் வாசலால் வந்த வெளிச்சம் உள்ளே எதையும் ஒளிக்காமல் காட்டியது. அங்கே.... ஆகா.! பரமுவின் இணைப்பியா நண்பன் சோமன்! அவனுக்குக் கீழே, அது...! அது...! இவளா...?? இப்படி..!! கண்களையே நம்பமுடியவில்லை..!! எங்கள்... குனிந்த தலை நிமிர்த்தாத அழகி கெளசல்யா...!  உடுப்புகள் ஓரமாகக் கிடந்தது. இப்படியும் நடக்குமா....?? நம்பிக்கையே வரவில்லை...! ஆங்கிலப் படங்களில் அரைகுறையாகக் கண்டுகளித்த ஆட்டங்கள் இங்கே பூரணமாகக் காணக் கிடைத்தது. பார்த்து ரசிக்க மனம் விருப்பினாலும், அங்கு தவறு நடக்கிறதென்று ஆவேசம் எழுந்தது. அத்துடன் புரியாத ஆத்திரமும் ஒருபக்கம் எழவே, குடிலுக்கு முன்னால் சென்றோம். சென்றதும், பற்றைக்குள் பதுங்கியிருந்த பரமு எப்படிப் பறந்தான் என்று தெரியவில்லை. அரவம் கேட்ட சோமன் அலறிப் புடைத்து முழிபிதுங்க, அவதியில் அணிந்த காற்சட்டை சேட் அரை குறையாக இழுபட, வெளியே வந்தான். என்ன வேகம் எனக்கு வந்ததோ தெரியவில்லை. பளார்.!  என்று காதைப் பொத்தி ஒன்று கொடுத்தேன். மண்சுவரோடு அடிபட்டு விழுந்தவன்.... "மச்சான், மச்சான் ஒருதருக்கும் சொல்லிப் போடாதேங்கோடா, இன்மேல் இப்படிச் செய்யமாட்டன், சத்தியமாய்ச் செய்யமாட்டன்" என்று காலில்விழாத குறையாகப் பட படத்துக் கெஞ்சியவன், பிடரியில் கால்பட கெளசல்யாவை அனாதையாக விட்டு விட்டு ஒரே ஒட்டமாக ஒடிமறைந்தான். கெளசல்யா வெளியே வரவில்லை ஐந்தும்கெட்டு அறிவும் கெடாத நிலை..! பயம் என்றால் என்ன..? அவமானம் என்றால் என்ன..? என்பதற்குச் சாட்சியாகக் கதிகலங்கி நின்றாள். 
 
கெளசல்யாவா.! அந்த அழகியா இப்படி...?? அதிர்ச்சியும், ஆச்சர்யமும், மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. "என்னடி இது" என்றேன்? "நான் அவரைத்தான் கலியாணம் செய்யப்போகிறேன். அதுதான்......" என்ன சொல்வதென்று தெரியாது உளறினாள்.  எதோ பெரிய இவன்மாதிரி எனக்கு ஆத்திரமும் வந்து கையும் ஒங்கியது. நண்பன் தடுத்தான். "மச்சான் விடடா, ஏய்  கெளசல்யா!" என்று அவளுக்கு அறிவுரையும் புகட்ட முற்பட்டான். தவறித் தண்ணீரில் விழுந்து மூச்சடங்கித் தவிக்கும்போது, தூக்கிக் காப்பாற்றுவதை விட்டு, நீந்துவதற்குப் பயிற்சி கொடுப்பதுபோல் இருந்தது அவன் அறிவுரை. "நாங்கள் ஒருதருக்கும் சொல்லமாட்டம். இனிமேல் இப்படிச் செய்யாதை. கெதியாய் வகுப்புக்குப் போ."  பரிதாபத்தைத் தேடிய அவள் பார்வை அவளையே வதைத்திருக்க வேண்டும். அவமானம் பிடுங்கித் தின்னத் தாங்க முடியாத பதட்டத்துடன், கண்களில் கண்ணீர்பெருகி ஆறாக வழிய அவள் எங்கள் முன்பாகவே கூனிக் குறுகி நின்று உடையணிந்து தலைகுனிந்து நெஞ்சோடு புத்தகங்களை அணைத்தபடி வெளியேறினாள். அவள் போவதையே பார்த்தபடி நின்ற நண்பன், "மச்சான் தானாகக் கிடைத்த சந்தர்ப்பம் தவறவிட்டு விட்டோமோ...!!. எனக்குள்ளும் எழுந்த அந்த உணர்வை அடக்க!! அந்த வயதிலும் மனம் பக்குவப்பட்டு இருந்ததை, இன்றும் எண்ணி வியக்கிறேன்!!!. அந்தப் பக்குவத்தை எண்ணும்போது! அது தரும் பெருமையும், சுகமும் அலாதியானது. அதனை அனுபவித்தால் மட்டுமே தெரியும்..! "டேய்  மச்சான் சிவா!.. இந்த விசயத்தை கண்டிப்பாக யாரிடமும்  சொல்லக்கூடாது. அவள் முகத்தைப் பார்த்தாயா? வெளியில் தெரிந்தால், அவள் கிணற்றில் விழுந்தோ!, விசத்தைக் குடித்தோ! வேண்டாமடா"..!! சிவா தன் தாய்மேல் சத்தியம் செய்தான். ஒருவர் அறிந்தால் இரகசியம்! இருவர் அறிந்தால் பரகசியம்! என்ற பழமொழி எங்களிடம் தோற்றுப் போனது! நாங்கள் ஐவர் அறிந்த இரகசியம்,...! இன்றுவரைக்கும் இரகசியமாகவே இருக்கிறது!!. அதிலும் இன்றைய நிலையில்!!... பரமு, சோமன், சிவா என்று மூவரும் அந்த இரகசியத்தை பரலோகத்திற்கு தங்களுடன் கொண்டு சென்றுவிட்டனர். அவர்கள் பரலோகம் செல்ல, ஊரடங்குச் சட்டம், இனக்கலவரங்கள் காரணமாக இருந்ததாகப் பின்னர் தெரியவந்தது. எஞ்சியிருப்பது கெளசல்யாவும் நானும்தான். 
 
வந்தனாவின் மாமனின் அறுபதாவது ஆண்டுக் கல்யாணத்திற்கு  வசந்தனின் அப்பா அம்மா குடும்பம் என்று, அனைவரும் வந்தபோது! கெளசல்யாவும் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இங்கு வந்தாள். நான் பேச முயன்றபோது அதனைத் தவிர்க்கத் தத்தளித்தாள். பூனையைக்கண்ட கிளிபோல் பயந்து நடுங்கினாள். ஆகவே நான் அவளுடன் பேச விரும்பியதைக் கடிதமாக கொடுக்க முடிவுசெய்து, அதனை வடித்தும் வைத்திருந்தேன். "கெளசல்யா நீ செய்த தவறு மிகப்பெரியதாக இருக்கலாம்....அந்த வயதில்  சரி, பிழை தெரியாது எழும் உணர்ச்சிகளுக்கு நீ அடிமையாகி இருக்கலாம். நாலு சுவருக்குள் நடக்கவேண்டியவை வெளியே தெரிவது விபரீதங்களை வளர்த்துவிடும் என்பதை, உன் தந்தை புரிந்துகொள்ளவில்லை! அவரது மேல்நாட்டு நாகரீகம், உன் உணர்ச்சிகளைத் தூண்டி, உன்னை அறியாமலே தவறான வழிசெல்ல வைத்திருக்கலாம்..! நீ தவறானவள் என்றால்...! இன்றும் நீ தவறானவளாகவே வாழ்ந்திருப்பாய்.! அப்படி இல்லாது, அழிந்துபோக இருந்த ஒரு குடும்பத்தையே காப்பாற்றி, அவர்களை எத்தனை பண்போடு வாழவும் வழிகாட்டி வருகிறாய்.!! உன்னைச் சுற்றியுள்ள சுற்றமும், உன்னைப் போற்றுகிறதே!. நீ கவலையின்றிச் சந்தோசமாக வாழவேண்டும்! அதுதான் என் விருப்பம்! என்னால் உனக்குத் துரும்பு அளவேனும் துன்பம் நேராது. என்னைக்கண்டு உனக்குப் பயம் தேவையில்லை! என்னை நீ நம்பலாம்!!" 
 
நாளை வசந்தன் எல்லோரும் திரும்புகிறார்கள். அக்கா விரும்பிக்கேட்ட பொருட்களின் சிறு பொதியுடன் வந்தனா வீடு சென்றேன். அழைப்புமணி ஒருமுறைக்குப் பலமமுறை அழுத்திய பின்னரே கதவு லேசாகத் திறந்தது. திறந்ததும் கெளசல்யாவின் முகம் தெரிந்தது. திறந்த கதவு தீடீரென மூடிக்கொள்ள, ஒரு சிறு நீக்கல் மட்டும் தெரிந்தது. "அவர்கள் ஒருவரும் இல்லை பிறகு வாருங்கோ." சொல் ஒலிமட்டும் நீக்கலினூடாக வெளிவந்தது. அதேநேரம் உள்ளே தொலைபேசி அழைப்புமணியும் கேட்டது. தொடர்ந்த தொலைபேசி உரையாடலில், "சரி அவரை நான் இருக்கச் சொல்கிறேன்." என்று கூறிய பதிலும் எனக்குக் கேட்டது, அதில் வெறுப்புணர்சியும், பயமுமே கலந்திருந்தது. கதவு முழுதாகத் திறந்தது. "இருக்கட்டாம் அவர்கள் இப்போ வந்துவிடுவார்களாம்." கதவைச் சாத்தி உள்ளேசென்று இருக்கையில் அமர்ந்தேன். அவள் உள்ளறைக்குள் போய்விட்டாள். எனக்கு மனம் தாங்கவில்லை. எழுந்து உள்ளே சென்றேன். கண்டதும், உடல் வேர்த்து விறுவிறுத்து நடுங்க மூலைக்குள் ஒடுங்கினாள். "நான்... நான்... அப்படிப் பட்டவள்...இல்.." பார்க்கப் பரிதாபமாக இருந்தது. "கெளசல்யா என்னை உனக்குத் தெரியும். உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவேனோ? என்று நீ பயப்படுவதும் தெரியும்!. நீ நினைப்பதைப் போன்றவன் நானில்லை!. இந்தக் கடிதத்தையாவது படி." கொடுத்த கடிதத்தை மறுக்க முடியாது, தயங்கித் தயங்கி வாங்கியபோதும், நடுக்கம் நிற்கவில்லை. கண்கள் பயத்தினால் மிரள அதனைப் பார்த்தாள். நான் வெளியே வந்துவிட்டேன். 
 
தொலைபேசி மீண்டும் ஒலித்தது. நானே எடுத்தேன். "மச்சான் பத்துநிமிடத்தில் வந்துவிடுவோம்" என்றான் வசந்தன். உள்ளே விம்மல் சத்தம் லேசாகக் கேட்டது. என்ன என்று பார்ப்போமா.? மனம் தவித்தாலும், அசையாது அமர்ந்து இருந்தேன். விம்மல் தணிந்தது வெளியே வந்தவள்... "குடிக்க ஏதா...வது!" "தேனீர் போதும்.! கடிதத்தைப் படித்தாயா?" சிவந்த கண்கள் பனித்திருக்க, தலை சிறிது மேலும் கீழும் ஆடியது. "அதனைக் கிழித்துவிடு" என்றேன். அவள் அதனைக் கிழித்தபடியே என்னைப் பார்தாள். அந்தப் பார்வையில் தெரிந்தது என்ன...? நன்றியா! பக்தியா! பாசமா! என்னை மன்னித்துவிடு என்பதுபோல், மிகுந்த வாஞ்சையோடு பார்த்தாள். அவளிடம் தோன்றிய நிம்மதி அவள் முகத்தைப் பூரண நிலவாக்கியது, இருந்தாலும் அதில் சோகத்தின் அடாயாளங்களும் வெளிப்படத்தான் செய்தது. மனப்பாரம் நீங்கிய நீண்டதொரு பெருமூச்சும் அவளிடமிருந்து வெளிவந்தது.
 
"தம்பி வரும்போது வாங்க நேரம் போதவில்லை." வசந்தனின் அப்பா தந்த சிறு பெட்டியைப் பிரித்துப் பார்த்தேன். ஒரு சேலை. பரிசாக என்மனைவிக்கு!. "ஏன் அங்கிள் நானும் கோட் சேட் போடுவன்." என்பகிடியை எல்லோரும் ரசித்தனர். "மனிசிக்கு யாராவது பரிசளித்தால் வீடே கலகலப்பாகிவிடும். புருசனுக்கு யாராவது பரிசளித்தால்தான் வீடு கலகலத்துவிடும்!!." கெளசல்யாவின் கணவன் கனேசனின் பகிடி சிறிது கனத்தது. "பிறர் வாங்கிக்கொடுப்பதை விடவும், தான் தேர்ந்தெடுக் கொடுப்பதுதான் கணவனுக்குப் பொருத்தமாகவும் அழகாகவும் அமையும். பெண்களின் குணமே அதுதான்..!" தொடர்ந்த கணேசனின் கடைகண் பார்வை கெளசல்யாவை நோக்கியது. நாணத்தால் அவள் முகம் சிவந்தது. வீடு மீண்டும் கலகலப்பானது. மனைவியின் பூரண அன்பை அனுபவித்த ஒருவனிடம்தான் இப்படியான எண்ணம் எழுந்து வெளிவரவும் முடியும். நானும் அவளை நோக்கினேன். கெளசல்யா கெட்டவளா? இல்லை!. யாரோ எழுதிய கதையில் படித்த ஒரு வரி ஞாபகம் வந்தது. 'மசுக்குட்டியைப் பார்க்க அருவருத்து, வெறுத்து அதனைக் கொன்றுவிட்டால்... அழகான வண்ணத்துப் பூச்சியின் வரவை அழித்துவிடுகிறோம்.'  
 
வாரம் ஒன்று கழிந்தது. தமிழ்ப் பள்ளிக்கூடம். "வணக்கம் அங்கிள்" அது.... அது.... வந்தனா!. வந்தனாவேதான்!!. அவள் பிள்ளையும் ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டதும், அவள் முகம் முன்னரைப்போலவே மலர்ந்தது. என் மனதையும் அழுத்திவந்த பாரம் ஒன்று நீங்க நான் மேலெழுந்து வானத்தில் பறப்பதுபோல் உணர்ந்தேன்.  
 
  • கருத்துக்கள உறவுகள்

அழகிய மாணவிகளில் ஒரு தாமரைப்பூ போன்று அதன் செந்நிற அழகும் கொண்டவள் கெளசல்யா. பளிங்குபோன்று பளபளப்பாக மின்னும் சருமம். வளைந்து நெளிந்த வாளிப்பான கட்டுடல். நாணம் கொண்ட அச்சத்துடன் நிலம் பார்க்கும் கண்கள், புன்னகையால் விருந்து தர முயல்வது போன்ற இதழ்கள். பூரணமான பெண்மைக்குரிய அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் 

 

வர்ணனை அந்த மதிரி! கதை எல‌கிரி!! 

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போலவே 'பாஞ்சின்' எழுத்துநடை!

 

உங்கள் செயலால், ஆகக் குறைந்தது இரண்டு தற்கொலைகளையாவது தடுத்ததுடன், கௌசல்யாவின் வாழ்விலும் விளக்கேற்றி வைத்துள்ளீர்கள்!

 

உங்கள் பெருந்தன்மை மெச்சத்தக்கது! தொடர்ந்து எழுதுங்கள்!

 

ஆனாலும், சோமனுக்குக் கை நீட்டினதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஒரு வேளை, கௌசல்யாவின் 'சொந்தம்' என்ற உரிமையில் நீங்கள் அதைச் செய்திருக்கலாம்!

 

இருந்தாலும், மற்றவர்களது குற்றத்தைக், குறைகளைக் கண்டு பிடித்து, அவர்களுக்குத் தண்டனையளிப்பதை, நியாயப்படுத்தும் எமது சமூக அமைப்பானது, தனது வீட்டுக்குள் நடந்தால் மட்டும், தண்டனையளிக்காமை மட்டுமன்றி, குற்றம் செய்தவர்களின் செயல்களை நியாயப்படுத்தவும் மறைக்கவும் செய்கின்றது!

 

அண்மையில் 'நெற்கொழு' எழுதிய 'சருகுகள்' என்னும் கதையை ஒரு முறை வாசியுங்கள், பாஞ்ச்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்....

வாலிபவயதுக்குறும்புகளின் மூலமாக நல்ல சமூக சிந்தனையை வெளிப்படுத்துகிறது உங்களுடைய படைப்பு.. பருவ வயதின்போது விடப்படும் தவறுகள் பலர் வாழ்க்கையை சூரையாடி துர்க்கதி அடைந்த சம்பவங்கள் பற்பல உண்டு. எங்கள் சமூகக் கட்டமைப்பு தவறுகளை மன்னிக்கும் பக்குவத்தை கொண்டிருக்கவில்லை. ஏடாகூடமாக தப்புச் செய்பவர்கள் பெரிய மனிதர்களாக வலம் வர தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவதை அவர்கள் வாழ முடியாதவர்களாக நிர்க்கதி அடைவதையும் மட்டுமே போற்றுபவர்களாக இன்றும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் கதையில் இந்தத் திருப்புமுனையை சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை. சமூகத்தின் குரூரங்களில் இருந்து இந்த எழுத்தாளன் தப்பித்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாகியிருக்கிறான் என்பதில் பெருமை கொள்வோம். வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் படைப்புக்கு நன்றிகள் ....அன்று நடந்தவற்றை பருவகோளாறு என மன்னித்துவிடுகின்றோம் இன்று நடப்பவற்றை இணையத்தள செய்திகள் மூலம் அறிந்து கொதிப்படைகிறோம்.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான், புங்கையூரன், வல்வை சகாரா, புத்தன் ஆகியோரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும், மற்றும் பகலவன், யாயினி நவீனன் அவர்களுக்கும் நன்றிகள்பல!! :):D

  • கருத்துக்கள உறவுகள்

ம் அருமை பாஞ்ச உங்களை நான் மறந்தே விட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம் ருமை பாஞ்ச உங்களை நான் மறந்தே விட்டேன்.

 

மறதி இல்லாதுவிட்டால் மனிதவாழ்க்கை இல்லை. வரவிற்கு நன்றி!.

 

'அ' விற்குப் பதிலாக 'எ' போட மறந்ததற்கு மேலுமொரு நன்றி.!

  • கருத்துக்கள உறவுகள்

அட  இதுக்குள்ள எவ்வளவு லொள்ளு விடுகிற நீங்கள் சில சமயங்களில் புத்திசாலியாகவும் , சாதுர்யமாகவும் நடந்து கொள்கிறீர்கள்  அதுதான்  ஆச்சரியமாய்க் கிடக்கு...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், சோமனுக்குக் கை நீட்டினதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஒரு வேளை, கௌசல்யாவின் 'சொந்தம்' என்ற உரிமையில் நீங்கள் அதைச் செய்திருக்கலாம்!

 

இருந்தாலும், மற்றவர்களது குற்றத்தைக், குறைகளைக் கண்டு பிடித்து, அவர்களுக்குத் தண்டனையளிப்பதை, நியாயப்படுத்தும் எமது சமூக அமைப்பானது, தனது வீட்டுக்குள் நடந்தால் மட்டும், தண்டனையளிக்காமை மட்டுமன்றி, குற்றம் செய்தவர்களின் செயல்களை நியாயப்படுத்தவும் மறைக்கவும் செய்கின்றது!

 

அண்மையில் 'நெற்கொழு' எழுதிய 'சருகுகள்' என்னும் கதையை ஒரு முறை வாசியுங்கள், பாஞ்ச்! :D

 

சோமன் உங்களைச் சோமபானம் அருந்தவைத்து மகிழ்விப்பவர் என்பது எனக்குத் தெரியாது மன்னிக்கவும் புங்கையூரன் அவர்களே!!  :blink:

 

நெற்கொழு தாசனின் 'சருகுகள்' கதையைப் படித்தேன் நெஞ்சம் கனக்கிறது. இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் பாடல் மனதில் ஒலிக்கிறது. இயக்கம் வளர்த்தெடுத்த ஒரு வீரன் குமார்!. அவரிடம் மனிதப்பண்பு பரிமளிப்பதில் ஆச்சரியமில்லை.!! ஆனால் நெற்கொழுவின் ஒரு பாத்திரம் சஞ்சலப்படுத்துகிறது. என் மகனை ஊரார் திருத்தவேண்டியதில்லை..! அந்த ஓர்மம் ஏற்றுக்கொள்ளக் கூடியது.! தமையனின் உதவியில் தம்பி எப்படித் தறிகெட்டுப் போனாலும் என்ன? என்ற தந்தையின் உருவகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!. ஒரு தமிழ் தந்தை..?? அவர் பினாமியாகவோ! ஒட்டுக்குழுவாகத்தான் இருந்தாலும்! தன் பிள்ளைகள் தகாதவழியில் செல்வதை ஏற்றுக் கொள்வர் என்பதாகக் காட்ட முயல்வது! சற்றுக் கனதியாகத் தோன்றுகிறது. 
 

.

  • கருத்துக்கள உறவுகள்

வாலிப வயது குறும்பில என்னை மிகவும் கவர்ந்த பகுதி...'மசுக்குட்டியைப் பார்க்க அருவருத்து, வெறுத்து அதனைக் கொன்றுவிட்டால்... அழகான வண்ணத்துப் பூச்சியின் வரவை அழித்துவிடுகிறோம்.'......

 

பலரும் பூச்சி மருந்தோடு அலைவதனால் கண்ணில்படுவது எல்லாமே, அழகாக சிறகு விரித்து பறக்க துடிக்கும் வண்ணாத்துப்பூச்சியால் இல்லாமல் மசுக்குட்டியாய் தெரிகிறது.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாலிப வயது குறும்பில என்னை மிகவும் கவர்ந்த பகுதி...'மசுக்குட்டியைப் பார்க்க அருவருத்து, வெறுத்து அதனைக் கொன்றுவிட்டால்... அழகான வண்ணத்துப் பூச்சியின் வரவை அழித்துவிடுகிறோம்.'......

 

பலரும் பூச்சி மருந்தோடு அலைவதனால் கண்ணில்படுவது எல்லாமே, அழகாக சிறகு விரித்து பறக்க துடிக்கும் வண்ணாத்துப்பூச்சியால் இல்லாமல் மசுக்குட்டியாய் தெரிகிறது.

வரவுக்கு நன்றி யாயினி. :)

பிரபாகரன் படையைக் கொல்வதற்கு உதவியபின், தமிழின விடுதலை பற்றி ஏங்கி எழுதும் ஓரிரு யாழ் உறவுகளும் இதற்குச் சாட்சி. :(:o

  • கருத்துக்கள உறவுகள்

வாலிப வயது குறும்பில என்னை மிகவும் கவர்ந்த பகுதி...'மசுக்குட்டியைப் பார்க்க அருவருத்து, வெறுத்து அதனைக் கொன்றுவிட்டால்... அழகான வண்ணத்துப் பூச்சியின் வரவை அழித்துவிடுகிறோம்.'......

 

பலரும் பூச்சி மருந்தோடு அலைவதனால் கண்ணில்படுவது எல்லாமே, அழகாக சிறகு விரித்து பறக்க துடிக்கும் வண்ணாத்துப்பூச்சியால் இல்லாமல் மசுக்குட்டியாய் தெரிகிறது.

 

 

இங்கு தான் நம்ம 'பஞ்சருக்குள்' மறைந்திருக்கும் 'தத்துவவாதி' மெதுவாகத் தலையை வெளியே காட்டுகின்றான்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி யாயினி. :)

பிரபாகரன் படையைக் கொல்வதற்கு உதவியபின், தமிழின விடுதலை பற்றி ஏங்கி எழுதும் ஓரிரு யாழ் உறவுகளும் இதற்குச் சாட்சி. :(:o

 

ம்ம்...நான் பொதுவாக தான் சொன்னேன்..தவறாக கருதிக் கொள்ள வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்...நான் பொதுவாக தான் சொன்னேன்..தவறாக கருதிக் கொள்ள வேண்டாம்.

உங்கள் பின்னூட்டம் என் பதிவைப் பெருமைப்படுத்தியுள்ளது. சிலவேளை உங்கள் பின்னூட்டத்திற்கான என் பதிலில் தவறுள்ளதோ தெரியவில்லை!!.

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்ச் போல பலர் இருந்திருந்தால் உலகத்தில் பல பிரச்சனைகள் இருக்காது.

  • 3 weeks later...

பாஞ்சு பாஞ்சுதான்  :D  . அன்றைய காலங்களில் இப்படியான விடயங்களுக்கு பாவட்டம் பற்றையும் ஒன்று  :lol:  . கதைக்கு வாழ்த்துக்கள் பாஞ்சு :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.