Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்  3

 வாக்கியங்கள் எழுதும் முறைகளுள் மிகவும் கவனித்தற்பாலன இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும்.

 பொருள் உணர்வுக்கு ஏற்ப, வரிக்குவரி இடம்விட்டு எழுதுதல் வேண்டும். பத்திக்குப் பத்தி இடைவெளிவிட்டுத் தொடங்குதல் வேண்டும்.

சொற்களுக்கு இடையே இடம்விட்டு எழுதுதலையும் சேர்த்து எழுதுதலையும் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்க.

 பாரதியார் என்று சேர்த்து எழுத வேண்டியதைப் பாரதி யார் என இடம்விட்டு எழுதின் ஏற்படும் பொருள் மாற்றத்தை நீங்கள் அறிவீர்கள்!

“அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் “அவள், அக்காள்வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் (இடம் விட்டு எழுதுவதால் ஏற்பட்டுள்ள) பொருள் வேறுபாட்டை அறிந்து கொள்க.

“மூலநட்சத்திரத்தில் பிறந்தான்” என்பதை “மூல நட்சத்திரத்தில் பிறந்தான்” - என இடம்விட்டு எழுதுவதால் தோன்றும், நகைச்சுவைப் பொருளை யாவரும் அறிவோம்.

எனவே, இடம்விட்டு எழுத வேண்டியதை இடம்விட்டு எழுதவும், சேர்த்து எழுத வேண்டியதைச் சேர்த்தும் எழுதிடவும் வேண்டும் என்பதையும் அறிந்து நினைவில் கொள்க.

எழுதும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முறைகள்:-

1. பண்புத்தொகை, வினைத்தொகை முதலானவை ஒருசொல் நீர்மைத்து. எனவே, அவற்றைப் பிரித்து எழுதுதல் கூடாது.

எடுத்துக்காட்டு:
செந்தமிழ்     (சரி)     
செந் தமிழ்     (தவறு)
பண்புத்தொகை
        
சுடுசோறு     (சரி)     
சுடு சோறு     (தவறு)     
 வினைத்தொகை

2. வேற்றுமை உருபுகளைப் பிரித்து எழுதல் கூடாது.

எடுத்துக்காட்டு:
தாயோடு அறுசுவைபோம்     (சரி)     
தாய் ஓடு அறுசுவைபோம்     (தவறு)
ஓடு வேற்றுமையுருபு

3. இடைச்சொற்களைச் சேர்த்து எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
சான்றோரும் உண்டுகொல்?     (சரி)     
சான்றோரும் உண்டு கொல்     (தவறு)
கொல் இடைச்சொல்

4. “துணை வினையைச்” சேர்த்து எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
சென்றுவிடு     (சரி)     
சென்று விடு     (தவறு)
‘விடு’ - துணைவினை
          
மறந்துவிட்டாள்     (சரி)     
மறந்து விட்டாள்     (தவறு)
‘விட்டாள்’ - துணைவினை

5. உடம்படு மெய்களைச்’ சேர்த்து எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
காண + இல்லை     = காணவில்லை     (சரி)     
காண இல்லை     (தவறு)
‘வ்’ - உடம்படுமெய்
              
நிலா + ஒளி     = நிலாவொளி     (சரி)     
நிலா ஒளி     (தவறு)
‘வ்’ உடம்படுமெய்

6. ‘கள்’ விகுதியைப் பிரிக்காமல் எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
மரங்கள் நட்டார்     (சரி)     
மரங் கள் நட்டார்.     (தவறு)
‘கள்’ விகுதி
          
பூனைகள் குடித்தன.     (சரி)     
பூனை கள் குடித்தன.     (தவறு)
‘கள்’ விகுதி



 மேற்கூறியவை தவிர, எழுதும்பொழுது கவனத்திற் கொள்ள வேண்டிய சில பொது முறைகளையும் அறிந்து கொள்க. அவையாவன:

தாளின் தலைப்புறம், அடிப்புறம், இடப்புறம் ஆகியவற்றில் குறைந்தது ஓர் அங்குலம் இடம் விட்டு எழுதுக.

பத்தி தொடங்கும்பொழுது, மற்ற வரிகளைக் காட்டிலும் சிறிது தள்ளிப் பத்தியைத் தொடங்குக.



முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்புக் குறிகள் வரும்போது  சிறிது இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தைத் தொடங்குக.

செய்யுள்களை எழுதும்பொழுது, சீரும் அடியும் பிறழாமல் எழுதுதல் வேண்டும். ஒரு சீருக்கும் அடுத்த சீருக்கும் இடைவெளிவிட்டு எழுதுதல் வேண்டும்.

 தமிழ் மொழியில் ல-ள-ழ; ர-ற; ன-ண-ந; முதலான வரிவடிவங்களை ஒலிக்கும் பொழுது முறையாக ஒலிக்க வேண்டும். அவ்வாறு ஒலிக்காவிடில் பொருள் தடுமாற்றமும் ஏற்படும்.

இவை, இதுவோ அதுவோ என்ற மயக்கம் தரும் ஒலிகள். ஆதலால், இவற்றை மயங்கொலிகள் என வழங்குவர்.

 முதலில் ல-ள-ழ ஆகியவற்றின் ஒலிவேறுபாடு அறிந்து ஒலிக்க. அவ்வாறு ஒலிக்காவிடில் எழுதுவதிலும் தடுமாற்றம் வரும்; பொருளும் வேறுபடும் என்பதைக் கீழ்க்காணுமாறு அறிந்து பயன்படுத்துக.

அலகு     - பறவையின் மூக்கு
அளகு     - பெண் மயில்
அழகு     - எழில், வனப்பு, கவின்

அலை     - கடல் அலை
அளை    - புற்று
அழை     - கூப்பிடு

இலை     - மரம், செடி, கொடிகளின் இலை
இளை     - (உடல்) இளைத்தல்
இழை     - நூல்

கலை     - 64 கவின் கலைகள்
களை     - பயிர்களுக்கு இடையில் தோன்றும் களை
கழை     - மூங்கில்

தலை     - ஓர் உறுப்பு
தளை     - விலங்கு
தழை     - தழைத்தல்

வலி     - வலிமை
வளி     - காற்று
வழி     - பாதை

 அடுத்து, ர-ற ஒலிவேறுபாடு அறிந்து ஒலிக்கவும். பொருள் வேறுபாடு அறிந்து பயன்படுத்தவும். கீழ்க்காணும் முறையில் அறிந்து கொள்க:-

அரி   - திருமால், அரிமா (சிங்கம்)
அறி  - அறிந்து கொள், தெரிந்துகொள்

அலரி     - அலரிப்பூ
அலறி     - அழுது

இரத்தல்   - பிச்சையெடுத்தல்
இறத்தல்   - சாதல்

உரவு     - வலிமை
உறவு     - சுற்றம்

உரை     - சொல்
உறை     - தலையணை உறை

எரி   - தீ
எறி  - வீசு

கரி         - யானை
கறி     - மிளகு, காய்கறி

குரங்கு     - வானரம் (ஒரு விலங்கு)
குறங்கு     - தொடை (ஓர் உறுப்பு)

கூரை     - வீட்டுக் கூரை
கூறை     - துணி

சீரிய     - சிறந்த
சீறிய     - சினந்த

பரவை  - கடல்
பறவை     - பறப்பனவாகிய உயிரினம்

மரை     - தாமரை, மான்
மறை     - வேதம்

இவை போல்வனவற்றையும் கண்டறிந்து பயன்படுத்துக.

 ந-ண-ன ஒலி வேறுபாடு அறிந்து முறையாக ஒலிக்கவும், பொருள் வேறுபாடு உணர்ந்து பயன்படுத்தவும் கீழ்க்காணும் முறையில் அறிந்து கொள்க.

அணல்     - தாடி
அனல்     - நெருப்பு

ஆணி  - இரும்பால் ஆன ஆணி
ஆனி   - தமிழ் மாதங்களுள் ஒன்று


ஊண்     - உணவு
ஊன்     - இறைச்சி

கணம்     - கூட்டம்
கனம்     - பளு, பாரம்

பேண்     - காப்பாற்று
பேன்     - தலையில் வாழும் (ஓர் உயிரி) பேன்

மணம்  - நறுமணம்
மனம்   - உள்ளம்

மணை     - உட்காரும் பலகை
மனை     - வீடு

மாண்     - பெருமை
மான்     - புள்ளிமான் (ஒருவகை விலங்கு)

முந்நாள்     - மூன்று நாள்
முன்னாள்     - முந்தைய நாள்

தேநீர்     - தேயிலை நீர்
தேனீர்     - தேன்போலும் இனிய நீர்

திணை     - நிலம், ஒழுக்கம்
தினை     - தானிய வகையுள் ஒன்று, சிறிய

கணை   - அம்பு
கனை    - குதிரை கனைத்தல்

இவை போன்றனவற்றைக்  கண்டறிந்து பயன்படுத்துக.



நம் முன்னோர்கள், எப்பொருளை, எச்சொல்லால் இயம்பினரோ, அப்பொருளை அச்சொல்லால் இயம்புதல் அல்லது வழங்குதல்' மரபு எனப்படும்.

அம்மரபுகள் சிலவற்றைத் தெரிந்து கொள்க.

 பறவை - விலங்குகளின் ஒலி மரபுகள்
    
சேவல் கூவும்     
நாய் குரைக்கும்
          
கூகை குழறும்     
பன்றி உறுமும்
          
மயில் அகவும்     
குதிரை கனைக்கும்
          
கிளி பேசும்
எருது எக்காளமிடும்
          
வண்டு முரலும்     
சிங்கம் முழங்கும் (கர்ஜிக்கும்)
          
யானை பிளிறும்
எலி கீச்சிடும்

பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்

கோழிக் குஞ்சு     
நாய்க் குட்டி
          
கிளிக் குஞ்சு     
புலிப் பறழ்
          
அணிற்பிள்ளை     
சிங்கக் குருளை
          
கீரிப்பிள்ளை     
யானைக் கன்று
பசுவின் கன்று

 தாவர உறுப்புகள் பற்றிய மரபுகள் :

 

வேப்பந்தழை
தாழை மடல்
          
ஆவரங் குழை     
முருங்கைக் கீரை
          
நெல்தாள்     
தென்னங் கீற்று
          
வாழைத் தண்டு
கம்பந்தட்டு (தட்டை)
          
கீரைத் தண்டு
சோளத் தட்டு
கரும்புத் தோகை

பறவை - விலங்குகளின் உறைவிட மரபுகள் :

 

கோழிப் பண்ணை     
ஆட்டுப் பட்டி
          
குருவிக் கூடு     
நண்டு வளை
          
சிலந்திவலை     
கறையான் புற்று
          
எலிவளை
(எலிப் பொந்து)     
மாட்டுத் தொழுவம்
          
குதிரைக் கொட்டில்

 
பெயருக்கு ஏற்ற வினை

வீடு கட்டினார்
சுவர்எழுப்பினார்
கூரைவேய்ந்தார்

குடம்வனைந்தார்
கூடை முடைந்தார்

செய்யுள் இயற்றினார்
நூல் எழுதினார்
    
    

சிற்பம் செதுக்கினார்
ஓவியம் வரைந்தார்
வண்ணம் தீட்டினார்
    
பாட்டுப் பாடினார்
நாடகம் நடித்தார்
நாட்டியம் ஆடினார்
    
தண்ணீர் குடித்தார்
பால் பருகினார்
உணவு உண்டார்
முறுக்குத் தின்றார்

மீண்டும் சந்திப்போம்

  • Replies 128
  • Views 75.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
'தமிழ் படிப்போம்'
 
தமிழ் படிப்போ ம்..... நடக்கட்டும்!!.
 
 
வரவுக்கு நன்றி. வாத்தி யார்...??????
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார் தமிழ்படிக்க வந்திட்டன். பாடத்தை துவங்குங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கும்.... "இடம்விட்டு எழுதுதலும், சேர்த்து எழுதுதலும்" சரிவரத் தெரியாமல்.. பிரச்சினை உள்ளது.
 

அத்துடன்.... ஆச்சரியக்குறி, கொமா, (......) அடைப்புக் குறிக்குள் உள்ள நீண்ட புள்ளி எங்கு போடவேண்டும் என்ற பாடத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன் வாத்தியார். :)

தமிழ்ச் சாரல் பொழியட்டும்...

 

தலைப்புக்கு சம்பந்தமில்லையென்றாலும் வாத்தியாரை தவிர வேறு யாரிடமும் கேட்கத் தோனவில்லை. கேள்வி இதுதான்..
சாரலுக்கும் தூறலுக்கும் என்ன வித்தியாசம் ?
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய ஊக்கங்களுக்கும் வரவுகளுக்கும் நன்றிகள்
இன்று வாக்கியங்கள் பற்றித்  தொடர்ந்து படிக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சாரல் பொழியட்டும்...

 

தலைப்புக்கு சம்பந்தமில்லையென்றாலும் வாத்தியாரை தவிர வேறு யாரிடமும் கேட்கத் தோனவில்லை. கேள்வி இதுதான்..

சாரலுக்கும் தூறலுக்கும் என்ன வித்தியாசம் ?

 

 

மழைத்துளிகளின் சிதறல்களைச் சாரல் எனவும்

மழை ஓய்ந்து குறைந்து பெய்வதை தூறல் என்றும் கூறலாம் என நினைக்கின்றேன்.

தூறல் என்றால் சிறிய துளிகளாக ஆரம்பிக்கும் சிறுமழை எனவும் கூறலாம்.

இதைவிட வேறு பொருள் கூட இருக்கலாம் தெரிந்தவர்கள் கூறுங்கள்   

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்கிய வகை
 

தமிழ் மொழியில் வாக்கியங்கள் மிக முக்கியமானவை.
நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு அறியத்தர வாக்கியங்கள் உதவுகின்றன.

ஒரு சம்பவத்தை விவரிப்பதற்கோ அல்லது
பல சம்பவங்களை விவரித்து ஒரு கதை எழுதுவதற்கோ வாக்கியங்கள் இன்றியமையாதவை.

ஒரு கட்டுரையை எழுதும்போது பல வாக்கியங்கள் அமைக்கப்படுகின்றன.
வாக்கியங்கள் பிழைகள் இன்றித் தூய தமிழ்ச் சொற்களால் அமைக்கப்படல் வேண்டும்.நீங்கள் நினைக்கும் கருப்பொருளை இலகுவாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வாக்கியங்கள் அமைக்கப்படல் வேண்டும்.
நீங்கள் கூற வரும் பொருளுக்கேற்ப சொற்றொடர்களையும் மரபுச் சொற்களையும் பயன்படுத்தி வாக்கியங்கள் எழுதப்பட்டால், அவை சிறப்படையும். பேச்சு நடையில் வழங்கப்படும் சொற்களைச் செம்மைப்படுத்தித் தெளிவான நடையில் வாக்கியங்களை  எழுத வேண்டும். பலவகையான வாக்கியங்களைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் பயன்படுத்தல் வேண்டும்.

சொற்கள் பல சேர்ந்து நின்று ஒரு பொருளைத் தருமாயின் அது சொற்றொடர் அல்லது வாக்கியம் எனப்படும்.

வாக்கியம் என்பது இருவகைப்படும்

1.கருத்து வாக்கியம்
2. அமைப்பு வாக்கியம்

கருத்து வாக்கியங்கள் கருத்திற்கேற்ப நான்கு வகைப்படும்.

செய்தி வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாக எடுத்துரைப்பது செய்தி வாக்கியம் எனப்படும்.கண்ணன் பரிசு பெற்றான்.   "கண்ணன் பரிசு பெற்றான்"  என்ற  இந்த வாக்கியத்தில் ஒரு செய்தி உணர்த்தப்படுகின்றது.

அடுத்தது வினா வாக்கியம்

வாத்தியாரின்  பெயர் என்ன?
வாத்தியார் எங்கே ஆசிரியராகக் கடமையாற்றினார்?
இந்த இரு வாக்கியங்களும் ஒரு வினாப் பொருளை உணர்த்தி நிற்கின்றன. எனவே அவை வினா வாக்கியங்கள் எனப்படும்.

கருத்து வாக்கியங்களில் இன்னொரு வகை உணர்ச்சி வாக்கியம் எனப்படும். இது உணர்ர்ச்சிகளை உணர்த்தும் விதமாக அமையும்.
உவகை,அவலம், அச்சம்,இழிவு,வெகுளி,வியப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் வாக்கியங்கள் இவையாகும். இந்த வாக்கியங்கள் உணர்த்தும்  பொருளுக்கேற்ப ஆச்சரியக் குறிகளைப் பெறுகின்றன்.

தோட்டத்தில் அழகான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன!

 

ஜெனீலியாவின் அழகுதான் என்னே! :wub: 

 

இது வியப்பு

ஐயகோ! அன்னாரின் இழப்பு ஈடு செய்யவியலுமோ!

 

இது இரக்கம்

இன்னொரு கருத்து வாக்கியமுறை  ஏவல் வாக்கியம் அல்லது கட்டளை வாக்கியம்  எனப்படும். எதிரே இருப்பவரைப்பார்த்து ஏதாவது செய்யும்படி ஏவுதல் அல்லது கட்டளையிடல் என்ற பொருளை உணர்த்தி இந்த வாக்கியம் அமைக்கப்படும்.

தமிழைப் படி.
உணவை உண்.
நீரை அருந்து.
பாலைப் பருகு.   
என்பன ஏவல் அல்லது கட்டளை வாக்கியத்திற்கு உதாரணங்களாகும்.

அமைப்பு வாக்கியத்துடன் மீண்டும் சந்திப்போம்

 

மழைத்துளிகளின் சிதறல்களைச் சாரல் எனவும்

மழை ஓய்ந்து குறைந்து பெய்வதை தூறல் என்றும் கூறலாம் என நினைக்கின்றேன்.

தூறல் என்றால் சிறிய துளிகளாக ஆரம்பிக்கும் சிறுமழை எனவும் கூறலாம்.

இதைவிட வேறு பொருள் கூட இருக்கலாம் தெரிந்தவர்கள் கூறுங்கள்   

 

 

நன்றி வாத்தியார் 

 

இணையத்தில் தேடிய போது கிடைத்தது. சரியா எனத்  தெரியவில்லை ??

தூறல் -> சிறுமழை 
சாரல் -> மலைப் பகுதிகளில் மேகங் கட்டிய தூறல்

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைப்பு வாக்கியம்

 

இது மூன்று வகைப்படும்

1.தனி வாக்கியம்

மன்னன் புலவருக்குப் பரிசளித்தான்.
மன்னனும் இளவரசனும் போரில் இறந்தனர்  

மேலே குறிப்பிட்ட வாக்கியங்களில்  முதலாவது வாக்கியத்தில் மன்னன்
எழுவாய் ஆகவும் பரிசளித்தான் என்பது பயனிலையாகவும் இருக்கின்றது.
இரண்டாவது வாக்கியத்தில் மன்னனும் இளவரசனும் என்ற இரண்டு எழுவாய்களும் இறந்தனர் என்ற ஒரு பயனிலையும் இருக்கின்றது.
இரண்டாவது வாக்கியத்தை இரண்டு வாக்கியங்களாக எழுதலாம் மன்னன் போரில் இறந்தான்
இளவரன் போரில் இறந்தான் என இரண்டு  தடவை எழுதாமல்  ஒரே
வாக்கியமாக சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதுவதே சிறந்தது.
இப்படிச் சொற்களைக் கோர்வையாக்கி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களுக்கு ஒரு பயனிலை என்ற அடிப்படையில்  அமைக்கப்படும் இந்த அமைப்பு வாக்கியத்தை தனி வாக்கியம் என்பர்.

2.தொடர் வாக்கியம்  

திருநெல்வேலிச் சந்தை ஒருகாலத்தில் வியாபாரத்தில் முதன்னிலையில் இருந்தது; இன்று அழிந்து போயிருக்கின்றது.

சோழ மன்னன் வீரன் மட்டும் அல்லன்; நீதிமானாகவும் இருந்தான்;
ஏழைகளுக்கு உதவி நின்றான்.

மேலே குறிப்பிட்ட வாக்கியங்களில் உள்ள எழுவாய் பலமுறை வராமல் ஒரேமுறை வந்திருக்கின்றது. ஆனால் அந்த வாக்கியங்களில்  பல பயனிலைகள் உள்ளன. இவ்வாறு எழுவாயைப் பலமுறை எழுதாமல்
சுருக்கமாகவும் தெளிவாகவும் பொருளுக்கேற்றவாறு ஒருமுறை மட்டும் எழுதி வெவ்வேறு  பயனிலைகளைப் பொருள் தகுந்து    இணைத்து எழுதும் முறையைத் தொடர் வாக்கியம் என்பர்.


3.கலவை வாக்கியம்

1.மக்களிடையே தீண்டாமைத் தீ பரவியிருக்கின்றது.
2.மக்களிடையே பரவியிருக்கும் தீண்டாமைத் தீயை அகற்றுவது நம் கடமை


3.தீண்டாமைத்  தீயை மக்களிடமிருந்து அகற்றுவது நம் கடமை  

முதல் இரண்டு  வாக்கியங்களையும்  பொருள் குன்றாமல் கலந்து  மூன்றாவது வாக்கியம் எழுதப்பட்டுள்ளது.

"தீண்டாமைத் தீ" என்பது ஒரு துணை வாக்கியமாகவும்  "மக்களிடமிருந்து அகற்றுவது நம் கடமை"  என்பது முதன்மை வாக்கியமாகவும் கலந்திருக்கின்றன. இப்படியான வாக்கியங்களை கலவை வாக்கியம் என்பர்.
 
மீண்டும் சந்திப்போம்

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வகுப்பு தொடங்கிட்டுதா?

  • கருத்துக்கள உறவுகள்

போன வகுப்புக்கு, வந்த ஆக்கள் கன பேரை காணவில்லை.
எல்லாரும்... பெயில் விட்டிட்டனம் போலை....

  • கருத்துக்கள உறவுகள்

போன வகுப்புக்கு நான் வரேல்லை பாஞ்சும் சுமேயும் இப்பவும் வருகிறவர்களோ?...... :blink: :blink:

  • கருத்துக்கள உறவுகள்

போன வகுப்புக்கு நான் வரேல்லை பாஞ்சும் சுமேயும் இப்பவும் வருகிறவர்களோ?...... :blink: :blink:

 

பாஞ்ச்... பாஸ் பண்ணின படியால், இந்த வகுப்புக்கு வருகிறார்.

சுமே... பெயில் விட்ட படியால், வருவதில்லை.

அதோடை... படிச்சது காணும்  என்று, வீட்டில் மறித்து விட்டார்களாம்.

புதுசா வகுப்பிற்கு ஆட்களை எடுக்க தொடங்குயாச்சா மாஸ்டர்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன்  ஐயா ...! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பிற்கு வருகை தந்துள்ள மாணவர்கள் அனைவருக்கும்  வந்தனங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தற் குறிகள்

வாக்கியங்களில் அங்கு அங்கு புள்ளிகள் குறிகள் இடப்பட்டிருக்கும். அப்படியான அடையாளங்களை நிறுத்தற் குறிகள் என அழைப்பர்.
நிறுத்தற் குறிகள் பல வகைப்படும்.

1. காற் புள்ளி  (,)
2. அரை புள்ளி (;)
3. முக்காற் புள்ளி (: )
4.முற்றுப்  புள்ளி (.)
5. உணர்ச்சிக்  குறி (!)
6. வினாக் குறி (?)
7. இரட்டை மேற்கோள் குறி  (" ")
8. ஒற்றை மேற்கோள் குறி (``)   

 

காற்புள்ளி

பொருள்களை எண்ணுமிடங்களிலும் விளி முன்னும், வினையெச்சங்களுக்குப் பின்னும், மேற்கோள் குறிக்கு முன்னும், ஆதலால், ஆகவே, ஆயினும் முதலிய சொற்களுக்குப் பின்னும், முகவரியில் இறுதி வரிக்கு முன்னைய வரிகளின் இறுதியிலும் இடப்படுகின்றது.

காற்புள்ளி இடுதல் தொடர்பான சில முதன்மையான விடயங்கள்  

 சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கடுக்காகவோ

பிரிக்கும் போது காற்புள்ளி இடவேண்டும்

உதாரணம்

 தனித்தனியாகப் பிரித்தல்

அறம், பொருள், இன்பம், வீடு என்பன உறுதிப் பொருள்களாகும்.

 அடுக்கு அடுக்காகப் பிரித்தல்:

நட்புக்குக் குகனும் பரதனும், பிசிராந்தையாரும் கோப்பொருஞ் சோழனும்,

உதயணனும் யூகியும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

 சொற்றொடரில், எழுவாய், ஒன்றாக நின்று. பல பயனிலைகளைப் பெற்று வரும் போது, இறுதிப் பயனிலை தவிர பிறவற்றிற்குப் பின் காற்புள்ளி இட வேண்டும்.

உதாரணம்
கணவன் கொலை செய்யப்பட்டான் என்று கேட்ட கண்ணகி பொங்கி எழுந்தாள் , விம்மினாள், அரற்றினாள், ஏங்கினாள், கலங்கினாள், மயங்கினாள், விழுந்தாள்.


பொருள் மயக்கம் நீக்கித் தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் காற்புள்ளி இட வேண்டும்.

உதாரணம்
 அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றதால் நான் பார்க்கவில்லை.


கல்வி, அறமும் பொருளும் இன்பமும் வீடும் நல்கும் - என்னும் சொற்றொடரில் எண்ணும் மைகளுக்குப் பின் காற்புள்ளி இடுதல் தவறு.

பெரிய சொற்றொடர்கள் இணைக்கப்படும் பொழுது எண்ணும்மை இருப்பினும் தெளிவுக்காகக் காற்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்
 குறிஞ்சிக் காட்சிகளைக் கூறுவதில் வல்லவராகிய கபிலரும், வரலாற் றுக் குறிப்புக்களை வழங்குவதில் சிறந்தவராகிய பரணரும், பத்துப் பாட்டில் இரண்டு பாடல்களை இயற்றியவராகிய நக்கீரரும் கடைக் கழகப் புலவர்கள்.



 

அரைப்புள்ளி

 ஒரே எழுவாயில் பல பயனிலைகள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்

 பலர் வயிற்றளவை மீறி உண்பர்; பசியாலும் உண்பர்; கிடைத்த போதெல்லாம் உண்பர்; நாவிற்காக உண்பர்; வயிறு கெட்டும் உண்பர்.

 கண்ணன் தேர்வு எழுதினான்; ஆனால் அதில் தேறவில்லை.

 காரணம் காட்டும் ஏனென்றால் என்பதற்கு முன் அரை புள்ளி இட வேண்டும்.


உதாரணம்
 நான் இன்று பேச மாட்டேன்; ஏனென்றால், என் தொண்டை நோயுற்றிருக்கிறது.
 

 

 

முற்காற்புள்ளி

 உள் தலைப்பு அமைக்கும் போதும், ஒருவர் கூற்றை விளக்குமிடத்தும், சொற்றொடரில் கூறியதொன்றை விரித்துக் கூறும் போதும் முக்காற்புள்ளி இடப்படுகின்றது.

உதாரணம்
வாழ்வு இரு திறத்தது: ஒன்று உயிர் வாழ்வு; மற்றொன்று உடல் வாழ்வு

 
முற்றுப்புள்ளி

 சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படுகின்றது.

உதாரணம்
 நீ உள்ளே வா.

சுருக்கச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி இட வேண்டும்.

 

உதாரணம்
 திரு. மணி. திருநாவுக்கரசு.

 திரு. திரு. வி. க.

 பட்டப் பெயர்களுக்குப் பின் முற்றுப்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்
 திரு. இ. செழியன், க. மு.

வினாக்குறி

வினாச் சொற்றொடர்களின் இறுதியில் இடப்படுகின்றது.

உதாரணம்
 பாடுபட்டால் பயன் இல்லாமல் போகுமா?

சொற்றொடருக்கு நடுவில் கேள்விக்குறி வரக்கூடாது. நீங்கள் யார் என்று அவர் கேட்டார். என்னும் சொற்றொடரில் யார் என்ற சொல்லுக்குப் பின்னால் வினாக்குறி கண்டிப்பாக இருக்கக் கூடாது.

உணர்ச்சிக் குறி

வியத்தல், வரவேற்றல், வாழ்த்தல், வைத்தலின் போது பயன்படுத்தப்படு கின்றது. நம்ப முடியாது என்பதையும் இகழ்ச்சியுடையது என்பதையும் காட்டுமிடங்களிலும் உணர்ச்சிக் குறியிடுதல் உண்டு.

உதாரணம்

அந்தோ! பல பழந்தமிழ் நூல்கள் அழிந்தனவே.

வாழி! வாழி! தமிழ் நாடு வாழியவே!

கண்டவாறு உணர்ச்சிக் குறியை!, !!, !!! இவ்வாறெல்லாம் இடுதல் விரும்பத் தக்கதன்று.

 

ஒற்றை மேற்கோள் குறி

சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் ஒற்றை மேற்கொள் இடப்படுகின்றது.

உதாரணம்

 பரதன், “நான் என் செய்வேன்! அண்ணன், ‘நீ போ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்து விட்டேன்” பிரித்துக் காட்டுவதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்ததற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்

 ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா.

 ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.

இரட்டை மேற்கோள் குறி

 

தன்கூற்றை வலியுறுத்தத் தன்னினும் சிறந்தோர் கூறியவற்றைக் எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.

உதாரணம்

 “அறம் தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர்.

 மன்னன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங் கோலனாவேனாக!” என்று சூளுரைத்தான்.

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்குக் குகனும் பரதனும், பிசிராந்தையாரும் கோப்பொருஞ் சோழனும், உதயணனும் யூகியும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும்  ஊக்கத்திற்கும்  பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேற்றுமை

 

வேற்றுமை என்ற  சொல்லை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வேற்றுமை என்றால் வேறுபடுத்துதல் என்று அர்த்தம்.
இலக்கணத்தில் வேற்றுமை என்றால் என்ன என்பதை இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

ஒரு பெயர்ச் சொல்லுடன் ஒரு எழுத்தோ அல்லது ஒரு சொல்லோ சேர்ந்து அந்தப் பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதை வேற்றுமை என்பர்.

குமார் அடித்தான்  (குமார்  பெயர்ச்சொல்)
குமாரை அடித்தான் (அடித்தான் வினைச்சொல்)

என்ற இரண்டு வாக்கியங்களையும் எடுத்துக்கொண்டால் முதல் வாக்கியத்தில் குமார் எழுவாய் ஆகவும் அடித்தான் என்பது பயநிலையாகவும் அமைந்திருக்கின்றது. குமார் யாரையோ அடித்தான் என்ற பொருளில் அந்த வாக்கியம் அமைந்துள்ளது.

இரண்டாவது வாக்கியத்தில் குமார் என்ற சொல்லுடன் ஐ என்ற ஒரு எழுத்துச் சேர்ந்து முதலாவது வாக்கியத்தின் கருத்தை வேற்படுத்துகின்றது. அதாவது குமாரை யாரோ ஒருவன் அடித்தான் என்ற பொருளை உணர்த்துகின்றது.
முதல் வாக்கியத்தில் அடித்தவன் இரண்டாவது வாக்கியத்தில் அடி வாங்கியவன் ஆகின்றான்.
இப்படிப் பெயர்ச் சொல்லின்  பொருள் வேறுபடுதலே  வேற்றுமை எனப்படும். பொருள் வேற்றுமையை உருவாக்கும்`ஐ` போன்றவை வேற்றுமை உருபுகள் எனப்படும்.

வேற்றுமை எட்டு வகைப்படும். அவை முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தா, ஆறாம், ஏழாம், எட்டாம் வேற்றுமை என அழைக்கப்படும்.

சரி இப்போது முதலாம் வேற்றுமையைப் பற்றிப் பார்ப்போம்

முதலாம் வேற்றுமை

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
ஒரு பெயர்ச் சொல் எழுவாயாக வந்து  ஒரு வினைச் சொல்லைப் பயனிலையாகப் பெற்று இயல்பான பொருளை உணர்த்தி வேறுபாடுகள் எதையும் காட்டாது  நிற்பதை முதலாம் வேற்றுமை என்பர்.

முதல் வேற்றுமை எப்போதும் வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகியவற்றுள் ஒன்றைக் கொண்டே முடியும்.

குமார் அடித்தான். ( வினைமுற்று)
குமார் என் நண்பன்.(பெயர்ச்சொல்)
குமார் என்பவன் யார்? (வினாச்சொல்)

இவ்வாறு பெயர்ச்சொல் எழுவாயாக வந்து இயல்பான பொருளைத் தருவதால் அவை முதலாம் வேற்றுமையாகின்றன.
முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை எனவும் அழைப்பர்.

 

போன வகுப்புக்கு நான் வரேல்லை பாஞ்சும் சுமேயும் இப்பவும் வருகிறவர்களோ?...... :blink: :blink:

 

 

சுமே மதிலுக்கு மேலாலை சென்றல் boys யை எட்டிப் பார்த்தது எண்டு சொல்லி வகுப்பாலை கலைத்து விட்டினம்.  :blink:  :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டம் வேற்றுமை

 

ஒரு வாக்கியத்தில் இருக்கும் ஒரு பெயர்ச்சொல்லுடன் ´ஐ´ என்ற உருபு சேர்ந்து  அந்தப் பெயர்ச் சொல்லை செயப்படு பொருளாக மாற்றுவதை இரண்டாம் வேற்றுமை என்பர். இரண்டாம் வேற்றுமைக்குச் செயற்படு பொருள் வேற்றுமை எனவும் பெயர் உண்டு.

"குமார் பந்தை அடித்தான்"  என்ற வாக்கியத்தில் இயல்பான எழுவாயாக வரும் குமார்  ஒரு பெயர்ச்சொல். அதே போல பந்து என்பதும் பெயர்ச்சொல்லே. ஆனால் இந்த வாக்கியத்தில் பந்து என்னும் பெயர்ச்சொல் என்ற உருபை ஏற்றுப் பந்தை என வருகின்றது. பந்தை என்ற சொல்  இந்த வாக்கியத்தில் செயற்படு பொருளாக இருக்கின்றது.
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயற்படுபொருளாக வேறுபடுத்துவதை இரண்டாம் வேற்றுமை என்பர்.

இந்த  ஐ உருபு பெயர்ச்சொல்லுடன் சேரும்போது  ஆறு வகைப்பட்ட செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
ஆக்கல், அழித்தல், அடைதல், அகற்றல், ஒப்பிடுதல் மற்றும் உடமை
என்பவையே அவையாகும்-
உதாரணங்கள் முறையே
செய்தான், உடைத்தான், அடைந்தான், நீக்கினான், போன்றவன், உடையவன் என்பனவாகும் .

மீண்டும் சந்திப்போம் :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க ஐயா இது, தமிழ் படிக்கலாமே என்று வந்தால் வகுப்பில் ஒருவரையும் காணோம்..?

தமிழ் வகுப்பு, அறையிலா இல்லை மரத்தடியிலா?

தேறிய பழைய மாணாக்கர்கள்(பாஞ்ச் பாஞ்ச், மேரியம்மே போன்றோர்) எங்கே? :o

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தற் குறிகள்

வாக்கியங்களில் அங்கு அங்கு புள்ளிகள் குறிகள் இடப்பட்டிருக்கும். அப்படியான அடையாளங்களை நிறுத்தற் குறிகள் என அழைப்பர்.

நிறுத்தற் குறிகள் பல வகைப்படும்.

1. காற் புள்ளி  (,)

2. அரை புள்ளி (;)

3. முக்காற் புள்ளி (: )

4.முற்றுப்  புள்ளி (.)

5. உணர்ச்சிக்  குறி (!)

6. வினாக் குறி (?)

7. இரட்டை மேற்கோள் குறி  (" ")

8. ஒற்றை மேற்கோள் குறி (``)   

------

 

நன்றி வாத்தியார், இதனை நிச்சயம் நேரம் ஒதுக்கி.... ஆறுதலாக படிக்கப் போறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.