Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதா -சோபா சக்தி

Featured Replies

மாதா
 

2nauyo0.jpg

இந்த நாட்டில் அப்போது கடுமையானபனிக்காலமாகயிருந்தது. வெண்பனி விழுந்துதரையில் ஓரடி உயரத்திற்குப் பூப்போல குவிந்துகிடந்தது. அம்மா தூய பனிக்குள் தனதுகால்களை மிக மெதுவாகவும்எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்து வீதியின்ஓரமாக ஒரு முதிய வெண்ணிற வாத்துப் போலஅசைந்து நடந்துவருவதை தனது காருக்குள்இருந்தவாறே குற்றவாளிகவனித்துக்கொண்டிருந்தான். அப்போது மழைதூறத் தொடங்கிற்று.

அம்மா தனது இரு கைகளையும் பக்கவாட்டில்ஆட்டியும் அசைத்தும் தனது உடலைச் சமன்செய்தவாறே வந்தார். முகத்தை வானத்தைநோக்கி அண்ணாந்து முகத்தில் மழைத்துளிகளை வாங்கிக்கொண்டார். அப்போதுபனியில் சறுக்கிக் கீழே முழந்தாள் மடியவிழுந்தார். அம்மா சட்டெனத் தனது வலதுகையைத் தரையிலே ஊன்றிக்கொண்டதால்முகம் அடிபடக் கீழே விழுவதிலிருந்துதப்பித்துக்கொண்டார். ஒருவாறுசமாளித்துக்கொண்டு அம்மா எழுந்திருந்துதன்னை யாராவது கவனிக்கிறார்களா எனவெட்கச் சிரிப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தார்.வீதியில் யாருமில்லை. சேலையைக் கணுக்கால்வரை தூக்கி ஏதாவது அடிபட்டிருக்கிறதா எனஅம்மா குனிந்து பார்த்தார். குற்றவாளிகாருக்குள் இருந்து அம்மாவையேபார்த்துக்கொண்டிருந்தான்.

அம்மா தூய பனியை கைநிறைய அள்ளி,பந்துபோல் உருட்டிவிட்டு அதை நுனி நாக்கால்ஒருமுறை நக்கிப் பார்த்துவிட்டு அதை வீதியில்எறிந்து அந்த உருண்டை சிதறுவதைப் பார்த்துப்புன்னகைத்தார். அம்மா பனியோடுவிளையாடியபடியே வீட்டை நோக்கி நடந்தார்.வீதியோரத்தில் எதிர்வரிசையில் வரிசையாகநிறுத்தப்பட்டிருந்த கார்களில் ஒன்றிற்குள்குற்றவாளி மறைந்திருந்து அம்மாவையேகவனித்துக்கொண்டிருந்தான்.

அம்மாவின் பெயர் மனோன்மணி. ஆனால்அவரை எல்லோரும் ‘புஷ்பம் மிஸி’ என்றுதான் அழைப்பார்கள். யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரியில் பிரசவவிடுதிக்குத் தலைமைத் தாதியாக அம்மா இருந்தார். அம்மா தேவதையைப் போல கருணையும் அன்பும் கொண்டவர்என அங்கே பெயர் வாங்கியிருந்தார். அம்மா அய்ந்தடி பத்து அங்குலம் உயரமுள்ளவர். எப்போதுமே நிமிர்ந்துகம்பீரமாக நடப்பார். சுத்தம் குறித்து அதீத கவனம். எப்போதும் தனது கைளையும் கால்களையும்கழுவியவாறேயிருப்பார். அவரது சருமத்தில் உரோமமோ மறுக்களோ இருக்காது. வீட்டிலிருக்கும்போது கூட மிகத்தூய்மையான ஆடைகளையே அணிந்திருப்பார். வீட்டுத் தரையையும் கதவுகளையும் சன்னல் கண்ணாடிகளையும்நாள் தவறாமல் சுத்தமாகத் துடைத்து வைப்பார்.

அம்மா தனது அய்ம்பதாவது வயதில் தாதிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வுபெற்றதற்குஅடுத்தநாள்தான் மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்தது. அப்பா, அம்மாவைத் தனது மோட்டார் சைக்கிளில்உட்காரவைத்துக்கொண்டு ஒரேயொரு பெட்டியோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறினார். இயக்கம்விரைவிலேயே மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிடும், தாங்கள் வீட்டிற்குத் திரும்பி வரலாம் என்று அப்பாநம்பியிருந்தார். அந்த இடப்பெயர்வு நடப்பதற்கு ஒரு வருடம் முன்பாகத்தான் அவர்களது ஒரே மகனை அவர்கள் இந்தநாட்டிற்கு அனுப்பிவைத்திருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் கொடிகாமம் போனார்கள். அங்கேயிருந்த அப்பாவின்தங்கை வீட்டில் தங்கினார்கள். அப்பா கடுமையான கோபக்காரர். இராசரட்ணம் மாஸ்டர் என்றால் ஊருக்குள்மரியாதையும் அதைவிடப் பயமுமிருந்தது. தலைமை ஆசிரியராகயிருந்து ஓய்வு பெற்றபின்பு சிற்றூர் அவையில்தலைவராகயிருந்தவர். கொஞ்ச நாட்களில் இராணுவம் கொடிகாமத்தையும் பிடித்தது. இராணுவம் அம்மாவையும்அப்பாவையும் அவர்களது ஊருக்கே திருப்பி விரட்டிவிட்டது.

பின்னால், அம்மாவும் அப்பாவும் ஊரில்தான் இருந்தார்கள். மகன் இந்த நாட்டுக்கு வருமாறு எத்தனையோ தடவைகள்அழைத்தும் அப்பா இங்கே வருவதற்கு மறுத்துவிட்டார். எங்கள் இரண்டு பேருக்கும் போதுமான அளவு ஓய்வூதியப்பணம் கிடைக்கிறது, நாங்கள் எதற்கு அகதிகள் போல அந்நிய நாட்டில் சீவிக்கவேண்டும் என்பது அவருடைய வாதம்.அம்மாவுக்கு மகனுடன் வந்து இருப்பதற்குத்தான் விருப்பமாயிருந்தது. அதற்காக அவர் பதினெட்டு வருடங்கள்அப்பாவை இடைவிடாமல் மன்றாடிக்கொண்டிருந்தார்.

அம்மாவின் அறுபத்தெட்டாவது வயதில்தான் அப்பாவுக்கு மனம் கொஞ்சம் இரங்கிற்று. சரி மகனுடன் போய் கொஞ்சநாட்களிற்கு இருப்போம் என்றார். சென்ற வருடத்தின் பனிக்காலத்தில் அம்மாவும் அப்பாவும் இந்த நாட்டிற்குவந்தார்கள்.

பேரனுக்கு ஏழு வயதாகியிருந்தது. பேரன் அவர்களது மகனின் சாயலில் இல்லாமல் அப்பாவின் சாயலிலேயேஇருந்தான். அப்பாவுக்கு பேரன்மீது அப்படி ஓர் ஈர்ப்பு. இப்போது, ஊருக்குத் திரும்பிப் போகலாம் என அம்மாஒருவேளை கேட்டாலும் அப்பா சம்மதியார். ஊரில் இருக்கும் வீட்டையும் காணி பூமிகளையும் அப்பாவின்தங்கையின் மகன் கவனித்துக்கொண்டிருக்கிறான்.

அப்பாவையும் அம்மாவையும் மகனும் மருமகளும் தெய்வங்கள் போல நடத்தினார்கள். மகன் விமானப் பராமரிப்புப்பொறியியலாளராக வேலை செய்கிறான். மருமகள் அம்மாவைப் போலவே மருத்துவத் தாதி. அந்த ஒருகாரணத்திற்காகவே அவளைக் கல்யாணம் செய்ததாக மகன் சொல்வான்.

அமைதியான மிகச் சிறிய பட்டினத்தில் அவர்களின் வீடு இருந்தது. அழகிய மாடிவீடு. வீட்டைச் சூழவரத் தோட்டம்.வீட்டின் பின்புறம் சிற்றாறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அடிவளவுக் கதவைத் திறந்தால் அந்த ஆற்றில் காலைநனைக்கலாம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கீழ்த்தளத்திலேயே விசாலமான அழகிய படுக்கையறையிருந்தது.அம்மாவுக்கென இருபது தமிழ் ‘சனல்கள்‘ இணைக்கப்பட்ட பெரிய தொலைக்காட்சி. அம்மாவின் பகல் பொழுதுகள்தொலைக்காட்சியில் தமிழ் நாடகத் தொடர்களைப் பார்ப்பதிலேயே கழியும். அப்பா எப்போதும் படிப்பறையில்புத்தகங்களிற்குள் மூழ்கியிருப்பார். அவர் பண்டைய ஈழத் தமிழரது பக்தி மரபு குறித்து ஆய்வு நூலொன்றை எழுதும்முயற்சியிலிருக்கிறார். அப்பா, வெள்ளிக்கிழமை காலைகளில் மட்டும் பேருந்தில் நீண்டதொரு பயணம் செய்துதலைநகரத்திலுள்ள அம்மன் கோயிலுக்குப் போவார். மதியமளவில் திரும்பி வரும்போது அந்தக் கிழமைக்கானமளிகைப் பொருட்களையும் இலங்கைக் காய்கறிகளையும் வாங்கி வருவார். மகனும் மருமகளும் பேரனும்பெரும்பாலும் இந்த நாட்டு உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுவார்கள். மருமகள் வெள்ளிக்கிழமைகளில்மட்டும் சைவ உணவு சாப்பிடுவாள்.

மகனும் மருமகளும் தங்களிற்குள் இந்த நாட்டு மொழியில்தான் பேசிக்கொள்வார்கள். பேரனுக்கோ தமிழ் துண்டறத்தெரியாது. “நீங்கள் புருசனும் பெண்சாதியும் தமிழில் பேசிக்கொண்டால்தானே பேரனும் தமிழ் பேசுவான்” என்பார்அப்பா. அந்த நேரத்தில் மட்டும் மகனும் மருமகளும் தமிழில் பேசிக்கொள்வார்கள்.

மகனும் மருமகளும் காலை ஏழு மணிக்கே ஆளுக்கொரு காரில் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள்.பேரனைப் பராமரிக்கவும் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடவும் அழைத்து வரவும் முன்பொரு ஆபிரிக்கன் ஆயாஇருந்தார். அம்மா வந்ததன் பின்பாக, அம்மா மகனோடு சண்டை போட்டு அந்த ஆயாவை வேலையால் நிறுத்திவிட்டுஅம்மாவே அந்தப் பணிகளை ஏற்றுக்கொண்டார்.

இப்போது பேரனைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டுத்தான் அம்மா திரும்பி வருகிறார்.பதினொன்றரை மணிக்குச் சென்று பேரனைத் திரும்ப அழைத்து வர வேண்டும். மற்றைய நாட்களில் அந்த நேரத்தில்அம்மா சமையலைக் கவனிக்க அப்பாதான் போய் பேரனைக் கூட்டிக்கொண்டு வருவார். இன்று வெள்ளிக்கிழமைஎன்பதால் காலையிலேயே அவரும் புறப்பட்டுக் கோயிலுக்குப் போய்விட்டார். பாடசாலை விடுமுறைக்காலங்களில்பேரனையும் அழைத்துக்கொண்டு அப்பாவுடன் அம்மாவும் கோயிலுக்குப் போவதுண்டு. பேரன் இந்த நாட்டில் பிறந்துவளர்ந்த பிள்ளையென்றாலும் அவனுக்கு இலங்கை ‘யானை மார்க் சோடா’ என்றால் பைத்தியம். கோயிலுக்குஅழைத்துச் செல்லும் நாட்களில் பேரனுக்கு இரண்டு போத்தல் யானைச் சோடாக்கள் நிச்சயமுண்டு.பனங்கொட்டையைக் கொண்டுபோய் சந்திரமண்டலத்தில் போட்டாலும் வடலி முளைக்கும் என்பார் அப்பா.

அம்மா வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போவதைக் குற்றவாளி பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது மழை சற்றேவலுக்கலாயிற்று. குற்றவாளி காருக்குளிருந்து இறங்கி குடையை விரித்து, குடையால் தனது முகத்தைமறைத்தவாறு வேகமாக நடந்து சென்று அம்மாவின் வீட்டின் முன்னின்று குடையை வாசலில் வைத்தான். மழைஅவனைச் சற்று நனைத்தது. பின்பு குற்றவாளி தனது இடது கையால் அழைப்பு மணியை அழுத்தினான். அவனதுவலது கையில் சிறிய ப்ளாஸ்டிக் பையிருந்தது.

அந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள் என அம்மா ஆச்சரியப்பட்டார். எப்போதும் கதவில் பொருத்தப்பட்டிருக்கும்குமிழ் கண்ணாடி வழியாக வெளியே பார்த்துவிட்டுத்தான் கதவைத் திறக்கவேண்டும் என மருமகள்சொல்லியிருந்தாள். ஆனால் அம்மா அதைப் பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் இன்று அம்மா அந்தக்கண்ணாடிக் குமிழ் வழியே வெளியே பார்த்தபோது முப்பத்தைந்து வயதுகள் மதிக்கத்தக்க சற்று உயரம் குறைந்தசிவந்த நிறமுடைய இளைஞன் மழையில் நனைந்த கோலத்தில் நிற்பதைக் கண்டார். அவன் தமிழ் இளைஞனாகத்தெரிந்தான். அம்மா உடனேயே கதவைத் திறந்தார்.

குற்றவாளி ஈரமாகிவிட்ட தனது அடர்த்தியான சுருட்டைத் தலைமுடியை கையால் துவட்டியவாறே அம்மாவைப்பார்த்துப் புன்னகைத்துவிட்டு மகனின் பெயரைச் சொல்லி அவர் இருக்கிறாரா எனக் கேட்டான்.

“நீங்கள் யார் தம்பி?” என அம்மா கேட்டார்.

“என்னுடைய பெயர் கபிலன், உங்களது மகனின் சிநேகிதன், எனக்குத் திருமணம் நடக்கயிருக்கிறது. அவருக்குஅழைப்பிதழ் கொடுக்க வந்தேன்” என்றான் குற்றவாளி.

“மழைக்குள் நிற்காதீர்கள்..உள்ளே வாருங்கள்” எனக் கதவை அகலத் திறந்தார் அம்மா. குற்றவாளி தனதுகாலணிகளை கழற்றிவிட்டுத் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். அம்மா கதவை மூடினார்.

” மகன்..இல்லையா அம்மா?”

“இல்லைத் தம்பி..வேலைக்குப் போய்விட்டார்.. நீங்கள் இருங்கள்..”

அம்மா உள் அறைக்குப்போய் வெண்ணிறத் துண்டொன்றை எடுத்துவந்து தலையைத் துவட்டுமாறு குற்றவாளியிடம்கொடுத்தார்.

அப்போது குற்றவாளி தனது கைத் தொலைபேசியைக் காதில் வைத்திருந்தான்.

“அம்மா மகனின் எண்ணுக்கு அழைத்தேன், அவர் எடுக்கிறார் இல்லையே“

அம்மா சிரித்தார். “அவர் இப்பிடித்தான், வேலையில் இருக்கும்போதோ, வாகனம் ஓட்டும்போதோ தொலைபேசியைஅநேகமாக எடுக்கமாட்டார். ஆனால் திரும்பக் கூப்பிடுவார். நீங்கள் கொஞ்சம் இருங்கள் நான் உங்களிற்கு கோப்பிஎடுத்துவருகிறேன்” என்று சொல்லிவிட்டு அம்மா சமையலறைக்குள்ளே போனார். குற்றவாளி இங்கிருந்தவாறேஅம்மாவின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக் கவனித்தான்.

குற்றவாளி கிட்டத்தட்ட ஒரு மாதம் அந்த வீட்டைக் கண்காணித்திருந்தான். மகனும் மருமகளும் வேலைக்குப்போகும் நேரம், வெள்ளிக்கிழமை காலைகளில் அப்பா தவறாமல் கோயிலுக்குப் போவது, அன்றைய தினங்களில்காலை முழுவதும் அம்மா மட்டுமே தனியே வீட்டில் இருப்பது என எல்லாவற்றையும் அவன் அறிந்துவைத்திருந்தான். இப்போது உட்கார்ந்தபடியே வீட்டின் உட்புறத்தை மிகக் கவனமாகக் கவனித்தான்.

அம்மா கோப்பியைக் கொண்டுவந்து குற்றவாளிக்குக் கொடுத்துவிட்டு அவனுக்கு எதிராக அமர்ந்துகொண்டார்.குற்றவாளி கோப்பியை வாங்கி ஒரு மிடறு குடித்துவிட்டு கோப்பையை மேசையில் வைத்துவிட்டு எழுந்தான்.

“அம்மா நான் திருமண அழைப்பிதழை உங்களிடம் தருகிறேன். நீங்கள் மகனிடம் கொடுத்துவிடுங்கள். கண்டிப்பாகநீங்கள் எல்லோரும் எனது கல்யாணத்திற்கு வரவேண்டும்” என்று சொல்லியவாறியே அம்மாவின் அருகில் வந்துகையிலிருந்த ப்ளாஸ்டிக் பையைத் திறந்தான். அம்மா எழுந்து நின்று அழைப்பிதழைப் பெறுவதற்காக இரண்டுகைகளையும் நீட்டினார். குற்றவாளி ப்ளாஸ்டிக் பையிலிருந்து பளபளக்கும் நீண்ட கத்தியொன்றை எடுத்துஅம்மாவின் முகத்துக்கு நேரே நீட்டினான்.

அம்மா திடுக்கிட்டுப்போய் “என்ன தம்பி” என்றார்.

“பேசாமல் நாற்காலியில் உட்கார்” என்றான் குற்றவாளி.

அம்மாவின் உதடுகள் ஒட்டிக்கொண்டன. அவரது கண்களிலிருந்து பொசுக்கென்று கண்ணீர் தெறித்தது. அவரது தேகம்நடுங்கியது.

குற்றவாளி மெல்லிய குரலில் ஆனால் கடுமையான தொனியில் சொன்னான் ” எடியே கிழட்டுxxxx, சொல்வதுவிளங்கவில்லையா, வாயை மூடிக்கொண்டு அசையாமல் இந்த இடத்திலேயே இருக்கவேண்டும். அசைந்தாயோஉன்னுடைய xxxxxxxxx கத்தியைச் சொருகுவேன்“.

அம்மா அப்படியே ரப்பர் பொம்மை போல மடிந்து நாற்காலியில் உட்கார்ந்தார். அவர் தனது கைகளால் முகத்தைமூடியபடியே விசும்பத் தொடங்கினார்.

குற்றவாளி கத்தியின் முனையால் அம்மாவின் உச்சந்தலையில் மெல்லத் தட்டியவாறே சொன்னான்:

“மூச்சும் காட்டக்கூடாது! அலுமாரிச் சாவிகளெல்லாம் எங்கே?”

அம்மா அழுதுகொண்டே சொன்னார்:

“நீங்கள் என்னுடைய மகனின் சிநேகிதன் என்பதால்தானே வீட்டுக்குள் விட்டேன்“

குற்றவாளி தனது கையைச் சுழற்றி அம்மாவின் கன்னத்தில் பலமாக அறைந்தான். அம்மா கத்தக் கூட முடியாதவராகநடுங்கினார்.

“சாவிகள் எங்கே?”

அம்மா எதிரிலிருந்த பெரிய மேசையைச் சுட்டிக் காட்டினார். அந்த மேசையில் சின்னதும் பெரிதுமாகப் பலஇழுப்பறைகள் இருந்தன. குற்றவாளி அந்த மேசையின் அருகே குனிந்து மண்டியிட்டிருந்து மிக நிதானமாகஒவ்வொரு இழுப்பறையாக ஆராய்ந்தான்.

குற்றவாளியின் முதுகை அம்மா பார்த்துக்கொண்டிருந்தார். அவன் எந்தக் கணத்திலும் தனது பார்வையைஅம்மாவிடம் திருப்பலாம். அவனுக்கும் அம்மாவுக்கும் இடையே ஆறடி தூரம் மட்டுமேயிருந்தது. அம்மாவுக்குஅருகிலிருந்த ஒரு பீடத்தில் இரண்டடி உயரத்தில் தில்லையில் கூத்திடும் நடராஜரின் வெண்கலச் சிலையிருந்தது.அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான சிலை. அந்தச் சிலையையும் குற்றவாளி எடுத்துப் போய்விடுவான் என அம்மாநினைத்துக்கொண்டிருந்தபோதே அம்மாவின் வலதுகால் இரண்டி தூரத்தை ஒரேயடியாகப் பாய இரு கைகளும் சுழன்றுநடராஜர் சிலையைத் தூக்க இடதுகால் மறுபடியும் இரண்டி முன்னே பாய, மண்டியிட்டிருந்து இழுப்பறைகளிற்குள்தேடிக்கொண்டிருந்த குற்றவாளி சத்தம் கேட்டுச் சடாரெனத் திரும்ப அவனது நடு நெற்றியில் நடராஜர் ‘டங்’ எனமோதினார்.

குற்றவாளி ஒரு விலங்கைப்போல உறுமிக்கொண்டே தனது நெற்றியை இடது கையால் பிடித்துக்கொண்டான்.அவனது நெற்றியிலிருந்து இரத்தம் வடிந்தது. அவனது வாய் பாலியல் வசவுகளைச் சொல்லியபடியேயிருந்தது.அம்மா முகத்தில் அச்சமும் கோபமும் தெறிக்க அவனை வெறித்துப் பார்த்தார். அவரது கைகளிலே நடராஜர்இருந்தார். “போ வெளியே” என்று அம்மா கத்தினார். அவன் மெதுவாக நடந்துசென்று அங்கிருந்தநிலைக்கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தான். பொட்டு வைத்தது போல அவனது நெற்றியில் பிளவிருந்தது.அதிலிருந்து வடிந்த இரத்தம் அவனது கன்னமோடி அடர்த்தியான மீசையில் படிந்துகொண்டிருந்தது.

அவன் மெதுவாக நடந்து அம்மாவிடம் வந்து ” சிவபெருமான் எனக்கு நெற்றிக் கண்ணைத் திறந்திருக்கிறார்” என்றான்.அம்மா எதுவும் பேசாமல் தொலைபேசி அருகே சென்று இடது கையால் நடராஜரைத் தனது மார்போடு சேர்த்துஅணைத்தவாறே வலது கையால் ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு தோளை உயர்த்தி ரிஸீவரைக்காதோடு அணைத்துக்கொண்டு எண்களை அழுத்தத் தொடங்கினார். அப்போது குற்றவாளிக்கும் அம்மாவுக்கும்நடுவில் பதினைந்து அடிகள் தூரமிருக்கும்.

அந்தத் தூரத்தை ஓநாய்போல குற்றவாளி ஒரே தாவாகத் தாவிக் கடந்து அம்மாவை வன்மத்துடன் கீழேதள்ளிவிட்டான். அம்மா குப்புறக் கீழே விழுந்தார். அவர் நடராஜர் சிலையைத் தன்னிடமிருந்து விலக விடவில்லை.குற்றவாளி அம்மாவை மல்லாக்கப் புரட்டிப் போட்டுவிட்டு அவரருகே குனிந்திருந்து அவரது முகத்தைப் பார்த்தான்.அம்மாவின் கண்கள் வெறித்திருந்தன. ‘உன்னால் முடிந்ததைச் செய்துபார்’ என்ற ஏளனம் அந்தக் கண்களில்தெரிவதாகக் குற்றவாளி உணர்ந்தான். அவன் பற்களை இறுகக் கடித்துக்கொண்டு உதடுகளுக்குள் ஏதோமுணுமுணுத்தவாறே அம்மாவின் முகத்தில் ஓங்கி அறைந்தான். அம்மாவின் மூளை பளீரிட்டு அணைந்தது.அம்மாவின் கைகளிலிருந்து நடராஜார் வழுவிப் போனார். அம்மா மயங்கிப்போனார்.

குற்றவாளி அம்மாவை உலுக்கினான். அம்மா விறைத்த சவமாகக் கிடந்தார். அம்மாவின் சேலை மார்பிலிருந்துவிலகிக்கிடந்தது. ரவிக்கை வலது பக்கத் தோளிலிருந்து சற்று விலகியிருக்க அந்த இடத்தில் அம்மாவின் மாசற்றசருமத்திற்கு நடுவே பிரேஸியரின் கறுப்பு நிறப் பட்டை தெரிந்தது. குற்றவாளி மெதுவாகக் குனிந்து அந்தப் பட்டையைமுகர்ந்தான். பின்பு அம்மாவின் முகத்தை முகர்ந்தான். அம்மாவில் தூய பனியின் குளிர்ச்சியை குற்றவாளிஉணர்ந்தான்.

2

பதினொன்றரை மணிக்குப் பேரனைப் பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல யாரும் வராததால்பாடசாலையிலிருந்து மருமகளைத் தொலைபேசியில் அழைத்தார்கள். பதறிப்போன மருமகள் வீட்டு எண்ணிற்குத்தொலைபேசியில் அழைத்தபோது யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. மருமகள் உடனே தனது காரைஎடுத்துக்கொண்டு விரைந்தாள். அவள் பாடசாலைக்குச் சென்றுகூடப் பார்க்காமல் முதலில் வீட்டிற்கே போனாள். கதவுமூடிக் கிடந்தது மருமகளிற்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது. அவள் தன்னிடமிருந்த சாவியால் கதவைத்திறந்துகொண்டு உள்ளே போனபோது, நடுக் கூடத்தில் அம்மா ஆடைகள் விலகிய நிலையில் அரை நிர்வாணமாகஅசைவற்றுக் கிடந்தார். மருமகள் கூச்சலிட்டபடியே ஓடிச் சென்று முதலில் அம்மாவின் ஆடைகளைச்சரிப்படுத்தினாள். அதற்குப் பின்பு அம்மாவின் கையைப் பிடித்துப் பார்த்தாள். அம்மாவிற்கு உயிர் இருந்தது. மருமகள்அம்புலன்ஸை தொலைபேசியில் அழைத்தாள். அய்ந்து நிமிடங்களில் சைரன்களின் கூட்டு ஒலியால் அந்தச் சிறுபட்டினத்தையே அதிரச் செய்தவாறு அம்புலன்ஸும் காவற்துறையினரும் வந்து சேர்ந்தார்கள்.

மருத்துவமனையில் அம்மாவைச் சேர்த்துவிட்டு மருமகள் காத்துக்கொண்டிருக்கையில் மகன் வந்து சேர்ந்தான். சற்றுநேரத்தில் மருத்துவர் இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்துவிட்டுச் சொன்னார்:

“ஒன்றும் பயமில்லை. ஆனால் ஒரு கடுமையான குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அம்மா பாலியல் வல்லுறவுசெய்யப்பட்டுள்ளார்.” மருத்துவர் சொல்லிவிட்டு உதடுகளை மடித்துக்கொண்டு அவர்களைப் பார்த்தார்.

மகன் நாற்காலியிலிருந்து மெதுவாக எழுந்தான். நடந்துபோய் அந்த அறையின் கதவினருகே நின்று மருத்துவரைப்பார்த்தான். அவனின் பார்வை மருத்துவரை அறையிலிருந்து வெளியேற அனுமதிக்க மாட்டேன் என்பது போலிருந்தது.மகன் மூச்சுவிடச் சிரமப்படுபவன்போல் உடலைக் குலுக்கிக்கொண்டான். மருமகள் எழுந்துபோய் அவனது கைகளைப்பிடித்தபோது அவன் வெடித்து வாயைக் கைகளால் பொத்தியவாறு அழுதான். அம்மா கொடுத்த பால் அவன் கண்களில்நீராக வழிந்தது. அவனைத் தேற்றுவதற்கு மருத்துவர் படாத பாடுபட்டார்.

மருமகள் தனது கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்து தனது கணவனைப் பார்த்துக் கும்பிடுவது போல உயர்த்தினாள்.அவளது கைகள் கிடுகிடுவென நடுங்கிக்கொண்டிருந்தன. ” அம்புலன்ஸில் வரும்போதே மாமிக்குச் சாடையாக மயக்கம்தெளிந்தது. நான் என்ன நடந்தது மாமி என்று கேட்டதற்கு, ‘கள்ளன் வந்து என்னை அடித்துவிட்டான் நான்மயங்கிப்போனேன்’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் மாமி மயக்கமாகிவிட்டார்” என்றாள் மருமகள்.

மருத்துவர் தலையை ஆட்டிக்கொண்டார். “அவரது உடலைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவர் மயக்கமாகயிருந்தநிலையில்தான் வல்லுறவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது” என்றார் மருத்துவர்.

இப்போது மகன் தனது கண்களை அழுந்தத் துடைத்துவிட்டுக்கொண்டான். அவன் மருத்துவரைப் பார்த்து, அம்மாவல்லுறவு செய்யப்பட்ட விசயம் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ எக்காரணம் கொண்டும் தெரியக் கூடாது என்றுகேட்டுக்கொண்டான்.

“ஆனால் இது காவற்துறை தொடர்புள்ள விடயாமாயிற்றே, எப்படி மறைக்க முடியும்?” என்று மருத்துவர் கேட்டார்.

“அவர்களிடமிருந்தும் மறைத்துவிடலாம்” என்றாள் மருமகள்.

மகன் அவளைப் பிடித்துத் தூரத் தள்ளிவிட்டான்.

“இல்லை..இந்தக் கொடூரத்தைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். அவன் எக்காரணம் கொண்டும்தண்டனையிலிருந்து தப்பிக்கக் கூடாது. “

“அப்படியென்றால் இந்த விசயத்தை மாமியிடமிருந்தோ மாமாவிடமிருந்தோ எப்படி மறைக்க முடியும்?”

“முடியும்..நான் காவற்துறை அதிகாரிகளிடம் பேசுகிறேன். இந்த விசயம் தெரிந்தால் என் அம்மா தற்கொலைசெய்துகொள்வார் என்ற உண்மையை நான் அவர்களிற்குச் சொல்லி அவர்களிடம் இரந்து நிற்பேன். அவர்கள் எனதுஅம்மாவைக் காப்பாற்றுவார்கள்” என்று அழுதுகொண்டே மகன் சொன்னான்.

காவற்துறை அலுவலகத்தில் உயரதிகாரியோடு மகனுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடாகியது. அந்த அமைதியானபட்டினத்தில் நடந்த அந்தக் கொடூரமான குற்றம் குறித்து அதிகாரி கடுமையான கோபத்திலும் வருத்தத்திலுமிருந்தார்.எனினும் அவர் மகனோடு ஆதரவாகப் பேசி அவனது கோரிக்கையைக் கவனமாகக் கேட்டார்.

“திருவாளர் சஜிதரன், உங்களது வேதனையையும் மனவுணர்வையும் நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். அதைமதிக்கிறேன். சட்டத்திற்கு விரோதமில்லாத எந்த உதவியையும் நான் உங்களிற்குச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.இந்த விடயத்தை உங்களது பெற்றோர்களிடமிருந்து மறைத்துவிட சட்டத்தில் கூட வாய்ப்பிருப்பதாகவே நான்கருதுகிறேன். நான் இது குறித்துப் பேச நீதிபதியிடம் உங்களை அழைத்துப்போவேன். எங்கள் எல்லோரது முழுச்சக்தியைச் செலவு செய்து இந்த விசயத்தை உங்களது பெற்றோரிடமிருந்து மறைக்க முயற்சிப்போம். உங்களதுபெற்றோர்களிற்கு இந்த நாட்டு மொழி தெரியாமலிருப்பதும் ஒருவகையில் எங்களுக்கு உதவி செய்யும். பாலியல்வல்லுறவுக் குற்றம் நிகழ்ந்ததற்கான வலுவான மருத்துவ அறிக்கை ஆதாரங்கள் இருப்பதால் குற்றவாளி தப்பிக்கமுடியாது. இது எங்களுக்குக் கொஞ்சம் விநோதமானதும் சிக்கலானதுமான வழக்குத்தான். எனினும் சட்டத்தைமனிதாபிமானம் வென்றதாகச் சில பதிவுகள் எங்களது துறையிலுமுண்டு. எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும்நாங்கள் உங்களிற்குச் செய்வோம்” என்றார் காவற்துறை அதிகாரி.

மகன் கைகுலுக்கக் கைகளை நீட்டியபோது அதிகாரியும் தனது கைகளை நீட்ட அதிகாரியின் கரத்தைப் பற்றி அதில்குனிந்து மகன் முத்தமிட்டான். அவனது கண்ணீர் அந்த அதிகாரியின் கையைக் கழுவிற்று.

3

அம்மா நான்கு நாட்கள் மட்டுமே மருத்துவமனையிலிருந்தார். அவரது உடலிலிருந்த வீக்கங்கள் வற்றிவிட்டன. வலதுகண்ணுக்குக் கீழே மட்டும் சருமம் கொஞ்சம் கறுத்திருந்தது. அவர் பழையபடி கலகலப்பாகச் சிரித்த முகத்துடன்வீட்டை வளைய வரத் தொடங்கினார். அம்மா விரைவிலேயே தேறியதால் அப்பாவுக்கும் மகிழ்ச்சி.

அந்தச் சம்பவம் நடந்தபோது குற்றவாளியால் அதிகம் பொருட்களைத் திருட முடியாது போயிற்று. நகைகளும்பெறுமதியான பத்திரங்களும் வங்கிப் பெட்டகத்தில் பாதுகாப்பாகயிருந்தன. இரண்டு மடிக்கணினிகளையும் வெறும்சில்லறைச் சாமான்களையும் மட்டுமே குற்றவாளியால் எடுத்துப்போக முடிந்திருக்கிறது. எடுத்துப் போன வங்கிஅட்டைகளை வைத்தும் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குற்றவாளி, மகன் குடிக்கும் உயர்ரக விஸ்கிப்போத்தல் ஒன்றையும் திருடிச் சென்றிருந்தான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மகனின் ஒரு மாதச் சம்பளத்தில்பாதிக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களே மொத்தமாகத் திருடப்பட்டிருந்தன.

ஆனால் அந்தச் சம்பவத்திற்குப் பின்னாக மகன் எப்போது பார்த்தாலும் இருண்ட முகத்தோடு இருந்தது அம்மாவையும்அப்பாவையும் வருத்தியது. மகன் அதிகமாகக் குடித்தான். அப்பாவுக்கு முன்னால் ஒருநாளும் குடியாதவன் அவர்இருப்பதையும் சட்டை செய்யாமல் குடித்து வெறித்தான். வேலைக்கும் ஒழுங்காகப் போகாமல் அடிக்கடிபடுக்கையிலேயே கிடந்தான். அம்மாவோடும் அப்பாவோடும் ஒன்றிரண்டு வார்த்தைகளிற்கு மேல் அவன்பேசுவதில்லை.

அம்மா ஆனமட்டும் மகனைத் தேற்றப் பார்த்தார். தனக்கு இப்போது உடல் முழுமையாகத் தேறிவிட்டதென்றும்திருடனுக்குத் தானும் செம்மையான அடி கொடுத்தாரென்றும் அம்மா சிரித்தவாறே சொன்னார். “இதுவொரு சிறியவிபத்து, அவ்வளவும்தானே.. அதற்கு எதற்கு நீ இப்படிக் கவலைப்படுகிறாய்?” என்று மகனின் நாடியைத் தடவிவிட்டவாறே அம்மா கேட்டார்.

மகன் அம்மாவின் கண்களை நேருக்கு நேராகச் சந்திக்க அஞ்சினான். “அம்மா உங்களிற்கு நிகழ்ந்திருக்கும்கொடுமையை நீங்கள் அறிய நேர்ந்தால் நீங்கள் செத்தே போய்விடுவீர்கள்” என அவன் மனதுக்குள் அழுதான். மருமகள்இப்போது வெள்ளிக்கிழமைகளில் சைவ உணவு சாப்பிடுவதில்லை. அதை மகன் கவனித்தான்.

அம்மா பேரனோடு விளையாடியபடியே வழமைபோலவே அவனைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார்.அப்பாவுக்குச் சுவையாகச் சமைத்துப் போட்டார். எப்போதும் போலவே வீடு வாசலையும் தோட்டத்தையும் மிகத்தூய்மையாக வைத்திருந்தார். அப்பா தனது ஆய்வு நூலை எழுதி முடிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்தினார்.மகன் ஒவ்வொரு நாள் மாலையிலும் காவற்துறை அதிகாரியைச் சந்தித்து குற்றவாளியைக் கைது செய்துவிட்டீர்களாஎன விசாரித்துக்கொண்டேயிருந்தான்.

ஒருநாள் அதிகாலையில் படுக்கையிலிருந்தபோது மருமகள் தனது கணவனின் மார்பைத் தடவி விட்டபடியேஅவனிடம் தயக்கத்துடன் பேசினாள்.

“நான் ஒன்று சொன்னால் நீங்கள் தவறாக நினைக்கக் கூடாது“

“ம்”

“உங்களைப் பார்த்தால் என்னால் சகிக்க முடியவில்லை. சரியாகச் சாப்பிடுகிறீர்களில்லை, தூங்குவதில்லை,ஆடைகளைக் கூடச் சரியாக நீங்கள் அணிவதில்லை. நான் புரிந்துகொள்கிறேன்…அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம்நீங்கள் நிலைகுலைந்து போய்விடுகிறீர்கள். கொஞ்ச நாட்களிற்கு அம்மாவையும் அப்பாவையும் இலங்கைக்குஅனுப்பிவைத்தால் என்ன?”

மருமகளின் கன்னத்தில் சடாரென ஓர் அறை விழுந்தது. அந்த அதிகாலை வேளையில் வெறி பிடித்தவன் போலவண்டியை எடுத்துக்கொண்டு மகன் காவல் நிலையத்தை நோக்கி படுவேகமாகச் சென்றான். அவன் காவற்துறை மீதுவசவுகளைச் சொல்லிக்கொண்டே வண்டியைச் செலுத்தினான். மகன் காவல் நிலையத்தை அடைவதற்கு நூறுமீற்றர்கள் முன்பாக உறைபனியில் சறுக்கி வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதிக் கவிழ்ந்தது.

மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கிறான் என்ற செய்தி வந்தபோது அம்மா மயங்கி விழுந்தார். மருமகள்வீறிட்டுக் கத்தினாள். அப்பா தாளாத துயரத்துடனும் பதற்றத்துடனும் மயங்கி விழுந்துகிடக்கும் அம்மாவைப் பார்ப்பதாஅல்லது சுவரோடு தலையை மோதிக்கொண்டு அலறும் மருமகளைப் பார்ப்பதா அல்லது படுக்கையிலிருந்துகொண்டேதேம்பியழும் பேரனைப் பார்ப்பதா எனத் தவித்துப் போனர். எனினும் இனி நடக்கவேண்டிய காரியங்களைச்செய்வதற்கு மருமகளையே முதலில் தேற்ற வேண்டும் என்பது அவரது புத்திக்குத் தெரிந்தது. அவர் மருமகளைஅணைத்துக்கொண்டு அவளை ஆறுதல்படுத்த முயன்றார். அப்போதுதான் மருமகளின் வாயிலிருந்து அந்தவார்த்தைகள் அவளை அறியாமலேயே உருண்டு வந்தன:

” அய்யோ மாமா.. மாமி ‘ரேப்’ செய்யப்பட்ட நாளிலிருந்தே உங்களது மகன் நிதானமில்லாமல்தான் கிடக்கிறார்.. நான்பாவி அவருடைய மனம் நோகக் கதைத்து அவரைச் சாவுவரை துரத்திவிட்டேனே!”

3

ஒருமாத தீவிர சிகிச்சைக்குப் பின்பு மகன் ஓரளவு தேறி வீட்டுக்குத் திரும்பினான். முன்னிலும் இப்போது அவன்நிதானம் இழந்திருந்தான். எப்போதும் அழுக்கான ஆடைகளையே அணிந்திருந்தான். சவரம் கூடச் செய்வதில்லை.ஆனால் நாள் தவறாமல் காவற்துறை அதிகாரியைத் தொலைபேசியில் அழைத்து “குற்றவாளியை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை?” எனச் சண்டை போட்டான். தனது அம்மா பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் தனதுமனைவியின் வாயிலிருந்து தனது தந்தைக்குத் தெரிந்திருப்பதை அவன் அறியாமலேயேயிருந்தான்.

மகன் வீட்டுக்கு வந்ததும் அம்மா பழையபடி உற்சாகமான நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்பினார். ஆனால் இப்போதுஅப்பா, அம்மாவுடனோ மகனுடனோ மருமகளுடனோ எதுவும் பேசுவதில்லை. ஏதாவது கேட்டால் ஆம், இல்லைஎன்பதற்கு மேல் ஒரு சொல் அவரது வாயிலிருந்து வராது. வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவதுமில்லை.அப்பா இப்போது புத்தகங்கள் படிப்பதில்லை. எப்போதும் வீட்டிற்குப் பின்னாலிருக்கும் ஆற்றங்கரையிலேயேஇருக்கிறார். இருட்டானதற்குப் பின்பும் அங்கேயே அசையாமல் இருப்பார். யாராவது போய் வீட்டிற்குக்கூட்டிவருவார்கள்.

மகன் தேறிவருகிறான், கவலைப்படாதீர்கள், உங்களது புத்தகத்தை எழுதி முடியுங்கள், கோயிலுக்குப் போய்வருவோம்வாருங்கள்.. என்றெல்லாம் சொல்லி அப்பாவைச் சமாதானப்படுத்த அம்மா முயன்றுகொண்டிருந்தார். ஆனால் அப்பாஆற்றங்கரையிலேயே இருந்தார்.

ஒருநாள் இரவு ஒன்பது மணிக்கு அப்பா படுக்கைக்குப் போனார். பத்துமணிபோல அம்மா வந்து பார்த்தபோது அப்பாகண்களை மூடிக்கிடந்தார். அம்மா, அப்பாவின் நெற்றியைத் தடவிக்கொடுத்துவிட்டு அருகில் படுத்துக்கொண்டார்.இரவு திடீரென அம்மா தூக்கத்திலிருந்து விழித்தபோது அருகில் அப்பா இல்லாததைப் பார்த்தார். அம்மா மெல்லஎழுந்துபோய் கதவைப் பிடித்துக்கொண்டு வெளியே பார்த்தார். அப்பாவின் படிப்பறையில் விளக்குஎரிந்துகொண்டிருந்தது. ஒரு புன்னகை ஓடி அம்மாவின் முகத்தில் உறைந்தது. ” சந்நிதியானே” எனச்சொல்லிக்கொண்டே அம்மா திரும்பவும் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டார். அசதி அவரது கண்களை அமுக்கிற்று.

அதிகாலையில் அம்மா விழித்தபோதும் அப்பா அருகிலில்லை. அம்மா எழுந்து நடந்துபோய் படிப்பறையைப்பார்த்தார். அங்கே இன்னும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அம்மா பல் துலக்கி, முகம் கழுவிவிட்டு கோப்பிதயாரித்து எடுத்துக்கொண்டு சென்று படிப்பறையின் கதவைத் தள்ளித் திறந்தார். அங்கே அப்பா இல்லை.

அம்மா வீடு முழுவதும் அப்பாவைத் தேடிப் பார்த்துவிட்டுப் போய், மகனின் அறைக் கதவைத் தட்டினார். மருமகள்கதவைத் திறந்தபோது, ” இன்று வெள்ளிக்கிழமையா?” என்று அம்மா கேட்டார். அன்று சனிக்கிழமை. குளிரின் அளவுமைனஸ் ஏழு டிகிரி.

வீட்டுக்குப் பின்னாலுள்ள ஆற்றங்கரையில்தான் அப்பாவின் உடல் விறைத்துப் போய்க்கிடந்தது. கொலையோதற்கொலையோ அல்ல. குளிரில் உடல் விறைத்து மரணம். அந்த வீட்டில் அழுவதற்குக் கூட யாருக்கும்சக்தியிருக்கவில்லை. அப்பாவின் உடலை மயானத்தில் எரியூட்டவிருந்த தருணத்தில் மருமகள் அம்மாவைஅணைத்துக்கொண்டு ” அழுதுவிடுங்கள் மாமி, எல்லாவற்றையும் அழுது தீருங்கள்” என்றாள்.

அந்த வீடு ஒளியற்றுக் கிடந்தது. அம்மா எப்போதும் போல வீட்டைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். மகனையும்மருமகளையும் ஆறுதல் சொல்லித் தேற்றிக்கொண்டேயிருந்தார். அப்பாவும் இல்லாத இடத்தில் தாய்க்குத் தாயாகவும்தகப்பனுக்குத் தகப்பனாகவும் அவர்களிற்குத் தான் இருக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வு அம்மாவிடம்மிகுந்திருந்தது. எப்போதும் போல பேரனுடன் விளையாடியவாறே அவனைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார்.பேரன் இப்போது கொஞ்சம் தமிழ் பேசப் பழகியிருந்தான்.

அப்பா இறந்த பதினாறாவது நாள் காவற்துறை அதிகாரியிடமிருந்து மகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.வீட்டைக் கொள்ளையடித்து, அம்மாவைப் பாலியல் வல்லுறவு செய்ததாகத் தாங்கள் சந்தேகிக்கும் ஒரு நபரைக்கைதுசெய்துவிட்டதாக அந்த அதிகாரி சொன்னார். அந்தச் செய்தியைக் கேட்டதும் மகனுக்கு இன்னும் வெறிஅதிகமாகியது. “நான் அந்த நாயைப் பார்க்க வேண்டும்” என்று மகன் தொலைபேசியில் கூச்சலிட்டது அந்த வீடுமுழுவதும் கேட்டது. “இந்த வீடு பேய் வீடாக மாறிக்கொண்டிருக்கிறது” என மருமகள் தனக்குள்முணுமுணுத்துக்கொண்டாள். கடந்த சில நாட்களாகவே விவாகரத்து குறித்த எண்ணம் அவளைஅலைக்கழித்துக்கொண்டிருந்தது.

காவலதிகாரி ஓர் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்த நாள் குளிர்காலத்தின் இறுதி நாளாகயிருந்தது.மகன், அம்மாவிடம் எந்த விபரமும் சொல்லாமல் ” அம்மா நாங்கள் எல்லோரும் வெளியில் போய்விட்டு வருவோம்”என்று முணுமுணுத்தான். அம்மாவின் முகம் மகிழ்ச்சியால் பொங்கிற்று. எத்தனையோ நாட்களிற்குப் பிறகு அவர்கள்குடும்பத்தோடு வெளியே கிளம்புகிறார்கள். அம்மா எப்போதும் போல தூய ஆடைகளை அணிந்து உற்சாகத்துடன்தயாரானர். வண்டியை மருமகள் ஓட்டினாள். அவளுக்கு அருகில் மகன் வெறிபிடித்தவன் போலயிருந்தான். பின்இருக்கையில் அம்மா பேரனோடு விளையாடிக்கொண்டிருந்தார்.

அடையாள அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. மகன் எதுவும் பேசாமல்மவுனமாயிருக்க மருமகள்தான் அம்மாவுக்கு எல்லாவற்றையும் விளங்கப்படுத்தினாள். திருடனைப்பிடித்துவிட்டாகவும் அவனை அம்மா அடையாளம் காட்டவேண்டும் என்றும் அவள் சொல்லச் சொல்ல அம்மா அவள்சொல்வதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அம்மா அந்தக் குற்றவாளியை நினைத்துக்கொண்டார். அவனின்கண்கள் உடனடியாகவே அவரது ஞாபகத்தில் வந்தன. சில நொடிகளிலேயே அவனது மொத்த உருவமும் தெளிவாகஅவருக்கு ஞாபகத்தில் வந்தது.

ஆனால் அம்மா நினைத்திருந்ததுபோல அடையாள அணிவகுப்பில் அவரால் இலகுவாக குற்றவாளியை அடையாளம்காணமுடியவில்லை. கண்ணாடியால் தடுக்கப்பட்ட ஓர் அறைக்கு வெளியே அம்மாவும் காவற்துறை அதிகாரிகளும்நின்றிருந்தார்கள். கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கம் இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர்கள் அருகருகாகநிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் சந்தேக நபர். மற்றவர்கள் டம்மி நபர்கள்.

அம்மா கண்ணாடித் தடுப்புக்குள்ளால் உற்றுப் பார்த்தார். அந்த நான்கு பேர்களிடையே குற்றவாளி இல்லாததுபோலத்தானிருந்தது. அம்மாவின் முகபாவனையைக் கவனித்த தலைமைப் புலனாய்வு அதிகாரி, அந்த நால்வரையும்பக்கவாட்டில் திரும்பி நிற்குமாறு சைகை செய்தார். அம்மாவால் குற்றவாளியை அடையாளம் காணமுடியவில்லை.அதிகாரி மறுபடியும் நால்வரையும் பழைய நிலையில் திரும்பி நிற்குமாறு சைகை செய்தார். அம்மா கொஞ்சம்யோசித்துவிட்டு அந்த நால்வரும் கண்ணாடித் தடுப்பை இன்னும் நெருங்கி வரவேண்டும் என்பது போல அதிகாரியிடம்சைகை செய்தார். அந்த நால்வரும் இப்போது கண்ணாடித் தடுப்புக்கு மிக அருகே வந்தார்கள். இப்போது அவர்களிற்கும்அம்மாவுக்கும் இடையில் ஓரடி தூரமேயிருந்தது. அந்த நால்வர் வரிசையில் மூன்றாவதாக இருந்தவனின் தலைமுடிமிகக் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவனது முகம் மழுங்கச் சிரைக்கப்பட்டிருந்தது. அவனது நடு நெற்றியில்அம்மா நடராஜர் சிலையால் தாக்கியதால் உண்டான வடு இருந்தது. அவனது கண்கள் கண்ணாடித் தடுப்பை ஊடுருவிஅம்மாவை அருவருப்போடு பார்த்தன. அம்மாவால் அந்தப் பார்வையை எப்படி மறக்கமுடியும்.

தரையில் ஓரடி உயரத்திற்குத் தூய பனி கொட்டியிருந்த, மழை பெய்துகொண்டிருந்த அந்த வெள்ளிக்கிழமைகாலையில் குற்றவாளி அம்மா மீது தனது உடற் பாரம் முழுவதையும் கிடத்தித் தனது இரண்டு கைகளாலும்அம்மாவது கால்களை விரித்துப் பிடித்தபடி தனது முகத்திலிருந்து வடிந்த இரத்தமும் கழுத்திலிருந்து வடிந்தவியர்வையும் அம்மாவின் முகத்தில் சிந்த அம்மாவைப் புணர்ந்துகொண்டிருந்தபோது அம்மாவுக்கு மயக்கம்தெளிந்துவந்தது. அவர் அந்தக் குற்றவாளியிடம் நான்கு சொற்கள் பேசினார். அப்போது அந்தக் குற்றவாளி அம்மாவின்கண்களை அருவருப்புடன் பார்த்தவாறே அம்மாவின் இடது காலைப் பற்றியிருந்த தனது கையை வேகமாக எடுத்துஅம்மாவின் முகத்தில் அறைந்தான். அருவருப்பைக் கொப்பளித்த அவனது கண்களைப் பார்த்தவாறே அம்மா மீண்டும்மயங்கிப்போனார். மயங்குவதற்கு முன்பாக அம்மா குற்றவாளியிடம் இந்தச் சொற்களைச் சொல்லியிருந்தார்:

” நான் உனது அம்மா மாதிரியல்லவா“

தலைமைப் புலனாய்வு அதிகாரி ஓரடி முன்னால் வந்து தனக்கு அருகில் நின்று தன்னையே ஆர்வத்துடன் கவனிப்பதைஅம்மா உணர்ந்தார். உடனேயே அம்மாவினது கண்கள் குற்றவாளியிடமிருந்து விடுபட்டு நான்காவது நபரிடம்சென்றன. பிறகு, அம்மா அதிகாரியிடம் ஆங்கிலத்தில் சொன்னார்:

” இவர்களிடையே அந்தக் குற்றவாளி இல்லை“.

(’காலம்‘ டிசம்பர் 2014- இதழில் வெளியான கதை)

 

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ஒன்று.  வாசித்து முடிய தலை வலிக்க ஆரம்பித்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான  கதை ..அடையாளம்  காட்டும் போதும் தாய்மை தெரிகிறது.. பொன் பொருளைத்  திருடின போதும்  அவனுக்குள்    மறைந்து   இருந்த  குரூரத்தனம் தென்படுகிறது ..பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்தைய தாய்மையை கீழத்தேய தாய்மையுடன் கலந்து கற்பனையை உறுவாக்கியுள்ளார்.....

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் போதே எழுத்தாளாரின் ஆளுமை தெரிகிறது.கணவர் இறந்த போதும்,மகன் குடித்து அழிகின்ற போதும்,மகன் குடும்பம் பிரிகின்ற நிலைக்கு போதும் போது கூட அம்மாவுக்கு குற்றவாளியை நன்கு தெரிந்தும் காட்டிக் கொடுக்க மனமில்லாதது தமிழக சினிமா பார்த்த மாதிரி இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் எங்கள் அம்மாக்கள் எத்துணை துணிவுள்ளவர்கள். அதனால்தான் தமிழனின் புதிய புறநாநூறை உலகு கண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவன் அருவருப்பாக அந்த அம்மாவைப் பாக்கிறான்.  :rolleyes:

வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர் மட்டுமில்லாது அவரது குடும்பமே சீரழிவதை ஆழமாக பதிந்துள்ளார் சோபா சக்தி அவருக்கே உரிய பாணியில். சிந்திக்ககூடிய கரு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.