Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்பதை ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யூலை ஓகஸ்ட் மாதங்கள் ஐரோப்பிய மக்களுக்கு முக்கியமானவையான காலங்களாகும். இந்த மாதங்களில் வரும் கோடைகால விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக உல்லாசத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடங்களையும் நாடுகளையும் நாடி செல்வதை மேற்குலக நாடுகளில் உள்ள மக்கள் வழமையாக கொண்டுள்ளனர்.

இலங்கையை போன்ற ஆசிய நாடுகளை போலன்றி ஐரோப்பிய நாடுகளில் வழமையான விடுமுறை நாட்களை தவிர நான்கு முதல் 6 கிழமைகள் வரை விடுமுறைகள் வழங்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வருடத்தில் மேலதிகமாக ஒரு மாத சம்பளமும் வழங்கப்படுகிறது.

இலங்கையர்களை போல சொத்து வீடு நகை நட்டு வாங்கி சேர்க்கும் பழக்கம் ஐரோப்பியர்களிடம் கிடையாது. அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அல்லது அடுத்த சந்ததிக்கு என சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. உழைப்பு, விடுமுறைகாலத்தில் உல்லாசமாக பொழுதை கழிப்பது, என வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என கொள்கையை கொண்டவர்கள்.

கோடைகால விடுமுறை அல்லது தமக்கு கிடைக்கும் விடுமுறைகளின் போது வேறு நாடுகளுக்கு சென்று உல்லாசமாக பொழுதை கழிப்பதை வழங்கமாக கொண்டுள்ளனர். இதனால் தான் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் மகிழ்;ச்சியாக வாழும் நாடுகள் என்ற பட்டியலில் இணைந்து கொள்கின்றன.
உலகில் உள்ள 155 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. சுதந்திரம், பெருந்தன்மை, சுகாதாரம், சமூக ஆதரவு, வருமானம், நம்பகமான ஆட்சி என்பனவற்றை அடிப்படையாக வைத்து மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இதில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வையும், இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும், மூன்றாம் இடத்தில் ஐஸ்லாந்தும், நான்காம் இடத்தில் சுவிட்சர்லாந்தும், ஐந்தாம் இடத்தில் பின்லாந்தும் உள்ளன.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்திருக்கும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகள் தான்.

இந்த நாடுகளில் உள்ள மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் மட்டுமல்ல விடுமுறைக்கு செல்லும் நாடுகளிலும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து திரும்புகிறார்கள்.

மகிழ்ச்சியான நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? விடுமுறைக்கென சென்று சந்தோசமாக திரும்புகிறார்களா என்பதை ஆராய்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.

மேற்குலக நாடுகளில் இருவகையான ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள்.

1. உயர்கல்வி மற்றும் தொழிற்தகமையுடன் மேற்குலக நாடுகளில் குடியேறியவர்கள். உதாரணமாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், தொழில்சார் நிபுணர்கள். இவர்கள் ஆங்கில மொழி பேசும் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஒஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளிலேயே இவர்கள் பெரும்பாலும் குடியேறினர்.

2. இரண்டாவது வகையினர் 1983ஆம் காலப்பகுதியின் பின் ஐரோப்பிய நாடுகள் எங்கும் குடியேறியவர்கள். இவர்கள் தொழில்தகமையோ மொழி அறிவோ கொண்டவர்கள் அல்ல. அந்தந்த நாடுகளில் குடியேறி அந்நாட்டு மொழியை ஓரளவு புரிந்து கொண்டு தொழில்பயிற்சி அற்ற தொழில்களை செய்து வாழ்பவர்கள்.

இலண்டன் போன்ற நாடுகளில் முதலாவது தரப்பினர் இரண்டாவது தரப்பினருடன் சேர்வது கிடையாது. இரண்டாவது தரப்பினரை அகதிகள் என்ற அடைமொழி கொண்டே அழைப்பார்கள்.

முதலாவது தரப்பினரின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் தாங்கள் தமிழர்கள் என்றோ அல்லது தமது தாய்நாடு இலங்கை என்றோ இப்போது வெளிக்காட்டி கொள்வதில்லை. ஐரோப்பிய வாழ்க்கை மற்றும் கலாசாரத்துடன் சங்கமமாகி விட்டார்கள். லண்டன் போன்ற நாடுகளில் முதலாவது தரப்பினர் இரண்டாம் தரப்பினரின் திருமணம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா போன்ற வைபவங்களில் கலந்து கொள்வது கிடையாது. அவர்கள் இப்போது இலங்கைக்கு வருவதும் கிடையாது.

இரண்டாம் தரப்பில் உள்ளவர்கள் தான் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள். அவர்களால் மேற்குலக நாடுகளின் கலாசாரங்களுடன் ஒட்டிக்கொள்ளவும் முடியாமல் இரண்டும் கெட்டான் நிலையில் வாழ்கின்றனர். தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக பிறருக்கு காட்டிக் கொண்டாலும் திரைக்கு பின்னால் இருக்கும் சோகங்களும் கவலைகளும் சொல்ல முடியாதவை.

பூப்புனித நீராட்டு விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள்.

இலங்கையில் பெண்பிள்ளை ஒன்று பருவமடைந்து விட்டால் 31ஆம் நாள் அல்லது 41ஆம் நாள் சமத்திய சடங்கு செய்வார்கள். அதனை தண்ணீர்வார்ப்பு என்றும் அழைப்பர். 6மாதம் கழித்து அல்லது ஒரு வருடம் கழித்து அச்சடங்கை செய்வது கிடையாது.

ஆனால் ஐரோப்பிய நாட்டவர்கள் தங்கள் பெண்பிள்ளை ஒன்று பருவம் அடைவது பற்றி வெளியில் யாருக்கும் காட்டிக்கொள்வதில்லை. சிலவேளையில் அப்பிள்ளையின் தாய்க்கு மட்டும் தெரியலாம்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தங்கள் பிள்ளை பருவமடைந்து விட்டால் முதலாம் தண்ணி வார்ப்பு என வீட்டில் செய்வார்கள். அதன் பின் 6மாதம் ஒரு வருடம் இரண்டு வருடம் கழித்து பிரமாண்டமான விழாவாக செய்வார்கள். வட்டிக்கு கடன் எடுத்து மண்டபம் எடுத்து விழா எடுக்கும் ஆரவாரத்தை கண்டு ஐரோப்பிய மக்கள் திகைத்து கொள்வார்கள்.

பருவமடைந்த பிள்ளையை ஹெலி கொப்டரில், குதிரை வண்டியில், ஆடம்பர காரில் ஏற்றிச்செல்லும் விநோத காட்சிகளும் இடம்பெறும். ஏன் தனக்கு விழா நடந்தது என தன் பள்ளித்தோழிகளுக்கு விளக்க முடியாமல் திணறும் பரிதாபங்களும் இடம்பெறும்.

இந்த விழாக்களை சில நோக்கங்களுக்காக தமிழர்கள் செய்கின்றனர். தாங்கள் இப்படிபட்ட வைபவங்களுக்கு சென்று கொடுத்த பணத்தை மீள அறவிட்டு கொள்வதற்காகவும், தங்கள் பகட்டை காட்டிக்கொள்வதற்காகவும், இதனை செய்கின்றனர். பெரும்பாலானவர்கள் கடன்பட்டே இத்தகைய வைபவங்களை நடத்துகின்றனர்.

சிலர் தாம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்து விட்டு இரண்டு மூன்று வருடங்கள் கழித்து இலங்கைக்கு விடுமுறையில் செல்லும் போது அங்கும் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தி வருகின்றனர். பிள்ளை நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவத்திற்கு வந்தாலும் அடுத்த கோடை விடுமுறையில் தான் பூப்புனித நீராட்டு விழாவை நடத்துவார்கள்.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்போது இலங்கையிலும் பிரபல்யமாகி வருகிறது. எனினும் ஐரோப்பாவில் உள்ள தமிழர்களை போல விசித்திரமான கொண்டாட்டங்கள் நடைபெறுவதில்லை.

உதாரணமாக யூன் 21ஆம் திகதி பிறந்த தினமாக இருந்தால் அன்றைய தினம் அதை செய்வதை விட சனி, ஞாயிறு, அல்லது ஒரு மாதம் கழித்து அல்லது 6 மாதம் கழித்து பிறந்த நாள் விழாவை நடத்துவார்கள். ஒருவரின் பிறந்த திகதியில் தான் பிறந்தநாள் வரும். யூன் 21 பிறந்தவருக்கு எப்படி ஓகஸ்ட் மாதத்தில் பிறந்த நாள் விழாவை கொண்டாட முடியும்? இதற்கான சூத்திரம் ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்கு தான் தெரியும்.

எனக்கு தெரிந்த ஒருவர் தனது மகளின் 18ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு திட்டமிட்டார். இரண்டு வருடம் கழித்து 18ஆவது பிறந்தநாளை மண்டபம் எடுத்து பிரமாண்டமாக கொண்டாடினார். 20வயது எப்படி 18வயதாகும்?

தாங்கள் வாழும் நாடுகளில் மகிழ்ச்சியாக வாழ்வதாக கட்டிக்கொள்வதற்காக கடன்பட்டு பல காரியங்களை செய்வார்கள். அவற்றில் ஒரு சிலதான் நான் மேலே சொன்ன விடயங்கள்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக தாய்லாந்து இலங்கை மாலைதீவு போன்ற நாடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள்.

கோடைகால விடுமுறை என்றதும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களும் அந்த விடுமுறை காலத்தில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தமது தாய் நாடான இலங்கைக்கு செல்வார்கள்.
ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளில் விடுமுறைகளை கழித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்புவார்கள்.

ஆனால் இலங்கையர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்று மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தொலைத்து விட்டே திரும்புவார்கள்.

கோடைகால விடுமுறைக்கு தமது ஊருக்கு செல்லும் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் கடன்பட்டே செல்வார்கள். சிலர் தனிநபர்களிடம் அறாவட்டிக்கு பணத்தை பெற்று செல்வார்கள்.

இங்கிருந்து புறப்படுவதற்கு முதல் உடுப்பு சொக்லட் மற்றும் தங்கள் உற்றார் உறவினர்களுக்கு அன்பளிப்பு பொருட்களை வாங்கி கட்டி அதை கொண்டு போய் சேர்ப்பதற்கு அல்லோலப்படுவார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் பெண்கள் கல்யாணம், பூப்புனித நீராட்டுவிழா பிறந்த நாள், கோயில் திருவிழா போன்ற வைபவங்களுக்கு ஒரு முறை உடுத்த சேலைகள் பஞ்சாபிகளை மீண்டும் போட மாட்டார்கள். அதனை ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு அனுப்புவார்கள். உதாரணமாக ஒரு சேலை சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மனி, பிரான்ஸ் என போய் இறுதியாக இலங்கைக்கு கோடைகால விடுமுறைக்கு செல்லும் போது கொண்டு செல்வார்கள். அங்கு அவர்கள் இது பழைய சேலை என கண்டறிந்தால் பழுசுகளையா எங்களுக்கு தருகிறீர்கள் என தூக்கி எறியும் சம்பவங்களும் உண்டு.

இலங்கையில் இறங்கியதும் தாங்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என காட்டுவதற்காக சில காரியங்கள் செய்வார்கள். கழுத்திலும் கையிலும் இரண்டு மூன்று சங்கிலியை போட்டுக்கொள்வார்கள். இங்கிருந்து மூன்று கறுப்பு கண்ணாடிகளை வாங்கி செல்வார்கள். ஒன்றை தலையில் போடுவார்கள். மற்றதை கண்ணுக்கு போடுவார்கள். இன்னொன்றை ரி சேட்டில் கொழுவி விடுவார்கள். சிலர் நான்காவது கண்ணாடியை பின்பக்க இடுப்பிலும் கொழுவிக்கொள்வார்கள். பின்னால் நிற்பவர்களும் தங்களை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என அடையாளம் காண்பதற்காக.

ஊரிலிருந்து இரண்டு மூன்று பேர் இவர்களை அழைத்து செல்ல வானில் வருவார்கள். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து இவர்களின் அலப்பறைகள் ஆரம்பமாகும்.

ஊருக்கு சென்றதும் உறவினர்கள் அயலவர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு செல்லும் இவர்கள் தாங்கள் மிக வசதியாக வாழ்கிறோம் என்பதை காட்டுவதற்காக பணமும் அன்பளிப்பு பொருட்களையும் வழங்குவார்கள். இவர்கள் போனதும் பிச்சைக்காசு தந்து விட்டு போகிறார்கள் என நையாட்டி பண்ணிய சம்பவங்களும் உண்டு.

தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என காட்டிக்கொள்வதற்காக இவர்கள் ஆட்டங்களை கண்டு அயலவர்கள் தங்களுக்குள் நையாண்டி செய்து சிரித்து கொள்வார்கள்.
லண்டன் கனடா போன்ற இடங்களில் இருந்து வருபவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என பெருமையாக சொல்லிக்கொள்வார்கள்.

ஆடு வெட்டி சாப்பாடு போட்டு வான் பிடித்து கசோனா, பாசிக்குடா, சீனங்குடா என அயலவர்களையும் கூட்டிக்கொண்டு சுத்திய பின் வட்டிக்கு எடுத்து போன பணமும் இரண்டொரு வாரங்களில் முடிந்து விடும். இவர்களின் கை காய்ந்து விட்டது என அறிந்து கொண்டதும் இவர்களிடம் ஒட்டிக்கொண்டு திரிந்தவர்களும் மெல்ல மெல்ல கழண்டு விடுவார்கள். கந்தசாமி அண்ணை வெளிநாட்டில இருந்து வந்திருக்கிறாராம், ஆளுக்கு 10ஆயிரம் கொடுக்கிறாராம் என கேள்விப்பட்டு வீட்டில் குவியும் சனத்தை கண்டு ஓடி ஒளியும் நிலையில் மூன்றாவது வாரம் கழியும். திரும்பவும் இங்கு தொடர்பு கொண்டு வட்டிக்கு பணம் பெற்றே பிந்தி வருபவர்களுக்கு 5ஆயிரம் 6ஆயிரம் பணத்தை கொடுக்க இந்த பிச்சைக்காசு எங்களுக்கு எதுக்கு என தூக்கி எறிந்து விட்டு போக அவமானப்பட்ட நிலையில் கொழும்பு திரும்புவார்கள்.

கடந்த கோடை விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற ஒருவர் திரும்பி வந்ததும் 10ஆயிரத்திற்கு குறைய அங்கு யாரும் வாங்க மாட்டார்கள் என சொன்னார். ஏன் பணத்தை கொடுக்க வேண்டும் என கேட்ட போது வெளிநாட்டில் இருந்து சென்றால் அங்கு உற்றார் உறவினர்கள் நண்பர்கள் தெரியந்தவர்கள் அயலவர்கள், வீட்டிற்கு வருபவர்கள் என அனைவருக்கும் குறைந்தது 10ஆயிரம் வீதம் பணம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து செல்பவர்கள் இப்படி பணத்தை கொடுத்து பழக்கி விட்டார்கள். நாங்கள் கொடுக்கவில்லை என்றால் எங்களை மதிக்க மாட்டார்கள் என சொன்னார். தாங்கள் வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறோம் என பகட்டு காட்டுவதற்காக இப்படி செய்கிறார்கள்.

விடுமுறையை உல்லாசமாக கழித்த மகிழ்ச்சியில் ஐரோப்பியர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானம் ஏறுவார்கள்.

ஆனால் விடுமுறையை கழிப்பதற்காக தமது தாய் நாட்டிற்கு சென்ற தமிழர்கள் வேதனைகளையும் கவலைகளையும் சுமந்து கொண்டு பட்ட கடனை எப்படி தீர்ப்பது என்ற மனச்சுமையுடன் விமானம் ஏறுவார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்பதை ஐரோப்பிய மக்களிடமிருந்து ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை.

இரா.துரைரத்தினம்.

thurair@hotmail.com

  • Replies 60
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் மட்டுமில்லை.உலகத்திலை வாழுற ஒவ்வொரு நாட்டு இனமும் மக்களும் தங்களுக்கெண்டு ஒரு கலாச்சாரத்தை/பாணியை வைச்சிருக்கினம்.அதை கடைப்பிடிக்கினம். எங்களை விட துருக்கி,போலந்து,ரஷ்யா,பால்கன் நாட்டுக்காரர் எல்லாம் சுத்த மோசம் கண்டியளோ tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு போனடித்து காசு கேட்பதை அங்கு இருப்பவர்கள் நிறுத்தினாலோ அல்லது ஊருக்கு காசு அனுப்புவதை ஐரோப்பிய தமிழர்கள் நிறுத்தினாலோ நீங்கள் குறிப்பிட்ட மகிழ்ச்சி தானா ஓடி வரும்.

ஆனால் எங்களுக்கு எத்தனை பிரச்சனை இருந்தாலும் பரவாயில்லை அங்கு உள்ளவர்களுக்கு உதவி செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

ஊரிலிருந்து இரண்டு மூன்று பேர் இவர்களை அழைத்து செல்ல வானில் வருவார்கள். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து இவர்களின் அலப்பறைகள் ஆரம்பமாகும்.

ஊருக்கு சென்றதும் உறவினர்கள் அயலவர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு செல்லும் இவர்கள் தாங்கள் மிக வசதியாக வாழ்கிறோம் என்பதை காட்டுவதற்காக பணமும் அன்பளிப்பு பொருட்களையும் வழங்குவார்கள். இவர்கள் போனதும் பிச்சைக்காசு தந்து விட்டு போகிறார்கள் என நையாட்டி பண்ணிய சம்பவங்களும் உண்டு.

தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என காட்டிக்கொள்வதற்காக இவர்கள் ஆட்டங்களை கண்டு அயலவர்கள் தங்களுக்குள் நையாண்டி செய்து சிரித்து கொள்வார்கள்.
லண்டன் கனடா போன்ற இடங்களில் இருந்து வருபவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என பெருமையாக சொல்லிக்கொள்வார்கள்.

இது மட்டும் அடிக்கடி இங்கே நடப்பதுண்டு ..
சமீபத்தில் லண்டனிலிருந்து வந்த உறவினர் (ஓவர் அலும்பு பார்ட்டி ), தனது செல் போனில் பற்றரி காலியாம் என்று 
என்னிடம் நீங்கள் என்ன போன் பாவிக்கிறீர்கள் ...என்னுடைய ஐ  போன்  6 ஸ்  ஐ சார்ஜ் போட முடியுமா...? என்று 
(நக்கல் அடிக்கிறார்களாம்)  கேட்டு பல்பு வாங்கினார் ...எனது கையிலோ ஐ போன் 7 பிளஸ் போதாக்குறைக்கு 
இரவு பேசிக்கொண்டிருக்கும் போது எனது கையில் MacBook Pro  வேறு .அடுத்தநாளே வேறுவேலை இருப்பதாக வீட்டை காலி பண்ணிவிட்டார் .மீண்டும் வீட்டு பக்கம் வரவே இல்லை 
பாவம் இவர்களுக்கு நினைப்பு  இலங்கை தாங்கள் ஊரை விட்டு சென்றபோது இருந்ததை போலவே இன்றும் இருக்கும் என்று 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

லண்டன் கனடா போன்ற இடங்களில் இருந்து வருபவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என பெருமையாக சொல்லிக்கொள்வார்கள்.

இதன்  அடி  தாயகத்தில் தான் அதிகம்

அங்கிருந்து தான் புலத்துக்கு வந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

இதன்  அடி  தாயகத்தில் தான் அதிகம்

அங்கிருந்து தான் புலத்துக்கு வந்தது 

ஊரில் உள்ள பலபேருக்கு தமிழ் தெரியாது என்பது இந்த கட்டுரையாளருக்கு தெரியவில்லை.

இலங்கையில் உள்ள ஒருவர் போட்ட பதிவு, தனது மகன்

"தமிழில் பெயர் எழுத சொல்ல Capital யோ Small யோ எழுதிறதாம்?"

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, அக்னியஷ்த்ரா said:

எனது கையிலோ ஐ போன் 7 பிளஸ் போதாக்குறைக்கு 
இரவு பேசிக்கொண்டிருக்கும் போது எனது கையில் MacBook Pro  வேறு .அடுத்தநாளே வேறுவேலை இருப்பதாக வீட்டை காலி பண்ணிவிட்டார் .மீண்டும் வீட்டு பக்கம் வரவே இல்லை 

தம்பியும் முன்னேறிட்டான்   அக்கி  என்ன அப்பிளப்பா அது சிவப்பா, அல்லது பச்சையா  பச்சையென்றால் அது பழுக்க நாள் எடுக்குமே நமக்கு தெரிஞ்ச அப்பிளை கேட்டாச்சு :24_stuck_out_tongue::24_stuck_out_tongue::cool:

15 hours ago, MEERA said:

ஊரில் உள்ள பலபேருக்கு தமிழ் தெரியாது என்பது இந்த கட்டுரையாளருக்கு தெரியவில்லை.

இலங்கையில் உள்ள ஒருவர் போட்ட பதிவு, தனது மகன்

"தமிழில் பெயர் எழுத சொல்ல Capital யோ Small யோ எழுதிறதாம்?"

நாங்களும் மாறக்கூடாதா என்ன மாறி வரும் உலகத்தில்  

வீ னோ இங்லிசு வட்டு தமிழு டோன்ற்று னோ

ஆனால் யாரும் அடிச்சா அம்மா என்றுதான் கத்துவம்   சும்மா பீலா விடுவதுதான் தமிழ் தெரியாது  என இங்க  ஆங்கிலமும் அறை குறைதான் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனி ஒருவன் said:

தம்பியும் முன்னேறிட்டான்   அக்கி  என்ன அப்பிளப்பா அது சிவப்பா, அல்லது பச்சையா  பச்சையென்றால் அது பழுக்க நாள் எடுக்குமே நமக்கு தெரிஞ்ச அப்பிளை கேட்டாச்சு :24_stuck_out_tongue::24_stuck_out_tongue::cool:

நாங்களும் மாறக்கூடாதா என்ன மாறி வரும் உலகத்தில்  

வீ னோ இங்லிசு வட்டு தமிழு டோன்ற்று னோ

ஆனால் யாரும் அடிச்சா அம்மா என்றுதான் கத்துவம்   சும்மா பீலா விடுவதுதான் தமிழ் தெரியாது  என இங்க  ஆங்கிலமும் அறை குறைதான் 

புலம் பெயர்ந்தவர்கள் மீது விமர்சனம் இருக்கலாம்

ஆனால் அவர்களது பிள்ளைகளின் பிற  மொழி  அறிவு பற்றி  மட்டமாக  பேசுவது

ஒருவித அறியாமையும் ஆற்றாமையும் தான்

அதுவும்  ஆங்கிலம்   தெரிந்தால் தாங்கள் பெரிய அறிவாளிகள்  எனக்காட்டிக்கொள்ளும் தமிழருக்கு....???

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

புலம் பெயர்ந்தவர்கள் மீது விமர்சனம் இருக்கலாம்

ஆனால் அவர்களது பிள்ளைகளின் பிற  மொழி  அறிவு பற்றி  மட்டமாக  பேசுவது

ஒருவித அறியாமையும் ஆற்றாமையும் தான்

அதுவும்  ஆங்கிலம்   தெரிந்தால் தாங்கள் பெரிய அறிவாளிகள்  எனக்காட்டிக்கொள்ளும் தமிழருக்கு....???

யார் புலம்பெயர் உறவுகளில் இந்த பொருள் அல்லது பணம் கொடுக்கும் நடத்தையைத் தூண்டுவது?

பொருள் அல்லது பணம் இல்லாமல் உறவு என்று சொல்லி புலம்பெயர் உறவுகள் சென்று  வந்த பின் அநேகமானோர் கேலிக்கு உள்ளாகின்றார்கள்.

"வெளி நாட்டில் இருந்து வந்தார்கள் என்னத்தை  கொண்டு வந்தார்கள்?" இது சர்வசாதாரணமாக கேட்கப்படும் கேள்வி.

இத்திரியில் இருக்கும் சில பதில்களில் இருந்தே அதை உணரலாம்.
    
எனது நோக்கம் இங்கே பதில் எழுதியர்வர்களை குத்திக்காட்டுவது அல்ல.

சில பதில்களில் நாம் புலம் பெயர் உறவுகளை விட வசதி படைத்தவர்களாக இருக்கிறோம் என்ற எண்ணவோட்டத்தை காண முடிகிறது.

அவ்வாறு வசதி படைத்தவர்களாகவே இலங்கை தீவில் வசிக்கும் உறவுகள் இருக்கட்டும், ஆனால் உறவு என்று வரும் போது அதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.

தனிபட்ட முறையில், நானோ என் மனைவி அல்லது பிள்ளைகளோ பெருமைப்படவும்மாட்டோம் அன்றி எவரும் எம்மை சிறுமைப்படுத்தவம் முடியாது. ஏனெனில் ஏமது வசதிகள் எமக்கவே அன்றி பிறரின் பார்வைக்கு அன்று.

மொழி என்று வரும் போது புலம் பெயர் பெற்றோரே தம்பட்டம் அடிப்பது கண்கூடு. அது அவர்களின் அறியாமையும் கூட.

ஆயினும் இலங்கையில் இருக்கும் பிள்ளகைளில் கூட தற்போது ஒரு ஆங்கிலத்தில், அதுவும் தவறான ஆங்கிலத்தில்,  பதிலிறுக்கும் பழக்கம் வந்துகொண்டிருக்கிறது. இலங்கையில் இருக்கும் பிள்ளைகள் ஆங்கிலத்தில் உரையாடக் கூடாது என்பது இதன் அர்த்தம் அல்ல.

எனது நெருங்கிய உறவின் மகன் அதை  இம்முறை இலங்கையில் எதிர்கொண்டார். எனது நெருங்கிய உறவின் மகன் தமிழிலேயே உரையாடலைத் தொடங்கினார்.  நெருங்கிய உறவின் மகனின்  தமிழில் மிகவும் மெலிதான ஆங்கில வாடையுண்டு. ஆனால்  பதில் ஆங்கிலத்தில் வந்தது.

உரையாடல் முடிந்த பின் கதைத்தவரை (அவரும் ஒரு உறவினர்) மிகவும் நெருக்கமாக அழைத்து அவரின் இலக்கண,  சொற்பிரயோக, வசன நடை தவுறுகளையும் மற்றும் இதர தவறுகளையும் சொல்லி, கதைத்தவர் என்ன சொல்ல வந்தார் என்பதை தனது  தமிழ், ஆங்கில அறிவின் மூலமாக உய்த்து உணர்ந்ததையும் கதைத்தவரிடம் சொன்னார். ஆயினும் கதைத்தவரிக்கு முற்றாக அவரின் தவறுகளை விளங்கபடுத்த முடியமல் போய்விட்டது. எனெனில் கதைத்தவரிடம் ஆங்கில அறிவும், சொல்வளமும் போதிய அளவில் இல்லை. இதையும் நெருங்கிய உறவின் மகன் பவ்வியமாக கதைத்தவரிடம் சொன்னார். இதை அறிந்த கதைத்தவரின் பெற்றோர் எனது நெருங்கிய உறவின் மகன் மீது எரிச்சல் அடைந்தனர். "லண்டன் இல் இருந்து வந்திருக்கினம் என்ற நினைப்பு" எனபதே அப்பெற்றோரின் வாதம். அதையும் எனது நெருங்கிய உறவின் மகன் பவ்வியமாக  தமிழிலேயே சமாளித்துவிட்டார். 

 He finally whispered to his mother, "they have a long way to go for their progress in their life time".

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனி ஒருவன் said:

தம்பியும் முன்னேறிட்டான்   அக்கி  என்ன அப்பிளப்பா அது சிவப்பா, அல்லது பச்சையா  பச்சையென்றால் அது பழுக்க நாள் எடுக்குமே நமக்கு தெரிஞ்ச அப்பிளை கேட்டாச்சு :24_stuck_out_tongue::24_stuck_out_tongue::cool:

முனி உது சாதா ஆப்பிள்  இல்லை ,ஒரு பக்கம் கடி வாங்கின ஆப்பிள் 
என்ன லேசில பழுக்காது ,பழுத்தால் கோதாரிதான் பேர்சில பெரிய ஓட்டை விழும் :10_wink:
 
1 hour ago, Kadancha said:

எனது நோக்கம் இங்கே பதில் எழுதியர்வர்களை குத்திக்காட்டுவது அல்ல.

சில பதில்களில் நாம் புலம் பெயர் உறவுகளை விட வசதி படைத்தவர்களாக இருக்கிறோம் என்ற எண்ணவோட்டத்தை காண முடிகிறது.

அவ்வாறு வசதி படைத்தவர்களாகவே இலங்கை தீவில் வசிக்கும் உறவுகள் இருக்கட்டும், ஆனால் உறவு என்று வரும் போது அதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.

தனிபட்ட முறையில், நானோ என் மனைவி அல்லது பிள்ளைகளோ பெருமைப்படவும்மாட்டோம் அன்றி எவரும் எம்மை சிறுமைப்படுத்தவம் முடியாது. ஏனெனில் ஏமது வசதிகள் எமக்கவே அன்றி பிறரின் பார்வைக்கு அன்று.

நண்பரே இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ...நீங்கள் எங்கள் உறவாகவே வந்து செல்லுங்கள் 
நீங்கள் புலம்பெயர் நாடுகளில் இலகுவாக பலவேலைகள் செய்து உழைத்து அடைந்த பொருட்களை வைத்து  மூன்றாம் உலக நாடான இலங்கையில்  உழைத்து அதை விட தரம்  குறைந்த பொருள்களை பாவிப்பர்களை 
ஏன் ஏளனம் செய்கிறீர்கள். இலங்கையில் ஒரு சாதரண  குட்டிக்காருக்கான விலையில் லண்டனில்  BMW வெ ஓடலாம் . இது உங்களுக்கும் தெரியும் 
எங்களுக்கும் தெரியும் ஆனால் நீங்களோ அந்த குட்டிக்காருக்குள் ஏறி இருந்துகொண்டு உங்களது BMW பற்றி புழுகினால் கேட்பவனுக்கு விசர் ஏறும்தானே.
வசதி ,வாய்ப்பு வெற்றுபந்தா இவற்றை ஒரு  ஓரம் வைத்துவிட்டு எங்கள் உறவாகவே வாருங்கள் ..உங்களை போதும் போதும் என்று உபசரிக்க தயாராகவே இருக்கிறோம்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

முனி உது சாதா ஆப்பிள்  இல்லை ,ஒரு பக்கம் கடி வாங்கின ஆப்பிள் 
என்ன லேசில பழுக்காது ,பழுத்தால் கோதாரிதான் பேர்சில பெரிய ஓட்டை விழும் :10_wink:
 
நண்பரே இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ...நீங்கள் எங்கள் உறவாகவே வந்து செல்லுங்கள் 
நீங்கள் புலம்பெயர் நாடுகளில் இலகுவாக பலவேலைகள் செய்து உழைத்து அடைந்த பொருட்களை வைத்து  மூன்றாம் உலக நாடான இலங்கையில்  உழைத்து அதை விட தரம்  குறைந்த பொருள்களை பாவிப்பர்களை 
ஏன் ஏளனம் செய்கிறீர்கள். இலங்கையில் ஒரு சாதரண  குட்டிக்காருக்கான விலையில் லண்டனில்  BMW வெ ஓடலாம் . இது உங்களுக்கும் தெரியும் 
எங்களுக்கும் தெரியும் ஆனால் நீங்களோ அந்த குட்டிக்காருக்குள் ஏறி இருந்துகொண்டு உங்களது BMW பற்றி புழுகினால் கேட்பவனுக்கு விசர் ஏறும்தானே.
வசதி ,வாய்ப்பு வெற்றுபந்தா இவற்றை ஒரு  ஓரம் வைத்துவிட்டு எங்கள் உறவாகவே வாருங்கள் ..உங்களை போதும் போதும் என்று உபசரிக்க தயாராகவே இருக்கிறோம்  

வாதம் என்னவெனில் புலம்பெயர் உறவுகளின் இந்த நடத்தையை தூண்டுவது யார் அல்லது எது?

பெரும்பாலான புலம்பெயர் உறவுகள் தாமாகவே இதை வலிந்து செய்கிறார்களா?

பெரும்பாலான புலம்பெயர் உறவுகளில் இந்த நடத்தை இலங்கையால் இருக்கும் உறவுகளின் எதிர்பார்ப்பினால்  அல்லது இலங்கையால் இருக்கும் உறவுகள் பழகும் முறையாலேயே புலம்பெயர் உறவுகள் இத்தகைய  நடத்தை நோக்கி  தள்ளப்படுகிறார்கள் என்பதே எனது கருத்து.

இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை புலம்பெயர் உறவுகளை  தேங்காய் என்று அழைப்பதே சாலப்  பொருத்தமாக இருக்கும்.

இதன் அர்த்தம் UK  இல் இருக்கும் பெரும்பாலானோருக்கு தெரியுமையாயினும், எல்லோருக்கும் அறிவதற்காக  சிறிய விளக்கம் தருகின்றேன்.

தேங்காய் - வெளியே மண்ணிறத்திலிந்து கறுப்பு வரை இருக்கும் தும்பும் இருக்கும், தேங்காய் உள்ளே சொட்டின்  ஒரு பக்கம் நன்றான வெண்மையாகவும் மறு பக்கம் இளம் மண்ணிறதில் இருக்கும்.

அது போலவே இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை புலம்பெயர் உறவுகலின் எண்ணவோட்டமும் வாழ்க்கையின் கண்ணோட்டமும் ஐரோப்பியருடன் ஒத்திருக்கும்.

ஆனால் அவர்களின் வெளித்தோற்றத்தால், ஐரோப்பியர் அவர்களை தம்மில்  ஒருவராக  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துரையர் அனுபவித்து எழுதினாரா, அல்லது கேளிவிப்படட விடையங்களை எழுதினாரோ என்ற கேள்வி எழுகின்றது.

இங்கே மக்கள் தமிழ், கலை கலாச்சாரம் என்று தான் வாழ்கின்றார்கள். கோவில் கட்டி ஆன்மிகப் பலத்துடன் வாழ்கின்றனர். 

கோவில், கோவிலாக கட்டி உழைக்கிறார்கள் என்று நெகடிவாக சொல்பவர்கள் ஒரு விசயத்தினை மறக்கிறார்கள். மக்கள் ஆதரவு இன்றி எந்த கோவிலும் நிலைக்க முடியாது.

கல்வியில் சிறப்பாக செயல் படுகிறார்கள். வியாபாரத்தில் முன்னேறுகிறார்கள். பிரித்தானிய, ஆஸ்திரேலியா, கனடிய பிரதமர்கள் மதிக்கும் அளவுக்கு தான் வாழ்கின்றனர். அதே பிரதமர்கள் சோமாலி இன மக்களை குறித்து பேசுவதில்லை ஏன்?

அங்கே வருபவர்களில் வசதியான பலர், உறவினர், நண்பர்களுக்கு உபத்திரவம் கொடுக்க விரும்பாமல் தாமாகவே ஹோட்டலில், அல்லது வாடகை வீடுகளில் தங்கி விடுவார்கள்.

கையில் காசு இல்லாமல் இருக்கும், அவசரமாக ஊருக்கு போகவேண்டிய தேவையும் வந்திருக்கும். அவர்கள் ஹோட்டலுக்கு, உணவுக்கு தனியே செலவழிக்காது, உறவினர் வீடுகளில் தங்கி கடமைப் படுகின்றனர். மறுபக்கம் உறவினர் எதிர்பார்ப்புக்கு செலவழிக்க முடியாது அவமானப் படுகின்றனர்.

அலம்பரை பண்ணும் ஆட்கள் தான் உந்த உறவினர் வீடுகளில் தங்கி கடமை படுகின்றனர். உறவினர் எதிர்பார்ப்பும் இருக்கும்.

அக்கினியாத்திரா சொல்வதன் மறுபக்கம் அலம்பரை இல்லை: அவரிடம் 6s 2 வருட கொண்ட்ராக்ட்டில் இருக்கும். எனது நிலையும் அதுதான். காண்ட்ராக்ட் முறித்து 7 எடுக்க, அவசியம் எனக்கு இல்லை. வாங்க முடியாது என்று இல்லை. ஆனால் மேலதிக பணம் கொடுத்து இருக்கும் கான்ட்ராக்ட்டினை முறித்து புதிய கான்ட்ராக்ட் போடுவதிலும் பார்க்க, அடுத்த புதியது வரும் வரை 7 க்குப் போகாமல், காத்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் வசதியான எம்மவர்கள் இலங்கை விடுமுறை செல்வதில்லை. கிழக்கு ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா, கரிபியன், தென் கிழக்கு ஆசியா என்று போகின்றார்கள்.

கட்டுரையாளர் ஐரோப்பியர் சந்தோசம் குறித்து சொன்னார். அனுமானதுடன் போல உள்ளது. இங்கே கல்வியில் சீனர், இலங்கையர், இந்தியர் வெள்ளையர் என்ற வரிசையில் நிலைமை உள்ளது.

அதன் அர்த்தம் வெள்ளையர்கள் மூடர்கள் என்பதல்ல. திருமண பந்தத்தினை நம்பாத குடும்ப உறவுகள் இல்லாத அவலத்தில் சிறுவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி படிப்பு பாழாகிறது. விவாகரத்து, சேர்ந்து வாழுதல், ஒரு தாய் குடும்பம் போன்ற குழந்தைகளை பாதிக்கும் விசயங்கள் பல.

கம்பெனி வேலை விடயமா அனுப்புகிறது என்று இருபக்க குடும்பத்திடமும் சொல்லிவிட்டு, இடையே சந்தித்த வேறு தொடர்புடன், ஹாலிடே போகும் ஐரோப்பியர்கள் சந்தோசமாகத் தான் இருப்பார்கள்.

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பல கவலைகள், சில சந்தோசங்கள் உண்டு. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஊர் அரசியல் நிலைமை குறித்த, கரிசனம், கவலை உண்டு.  

வெள்ளையர்கள் கவலை இல்லாதவர்களாயும், மகிழ்வு கொண்டவர்களாயும் சொல்ல முடியாது. இதன் முக்கிய காரணம், சுயநலம் சார்ந்த எண்ணம். ஒரு வாழ்க்கை. அனுபவித்துப் போவோம். வயதான காலத்தில் அரசு கவனிக்கும். பிள்ளைகளையும் அரசு கவனிக்கும் என்கிற, சமூகவியல் சிந்தனையினால், பிள்ளைகளுக்கு சேர்க்க தேவை இல்லை என்கிற மனவியல்.

கோர்டன் ராம்சே எனும் 145 மில்லியன் பௌண்ட்ஸ் உழைத்துவிட்ட புகழ் மிக்க சமையல் வல்லுனர், தானும், மனைவியும் முதல் வகுப்பிலும், பிள்ளைகள் அனைவரும் எகானமி வகுப்பிலும் ஆக விமானத்தில் பயணித்தார். ஒரு சதம் கூட அவர்களுக்கு கிடையாது. அனைத்தும் தர்மத்துக்குதான் என்கிறார். தாமே உழைக்கட்டும் என்கிறார்.

உலக பெரும் பணக்காரராக ஒரு முறை இருந்த, இப்பொது 3 அல்லது 4 ஆக இருக்கும் பில்லியனர் வாரன் பூப(ட்) மகள், கார் வாங்க பணம் $20,000 கேட்ட போது, வங்கியில் போய் கடன் வாங்கு என்றார்.  

அதுதான் அவர்கள் சிந்தனை முறை. 16 வயதில் வீட்டில் இருந்து பிள்ளைகளை ஒன்று பல்கலைக்கழகம் அல்லது வேலை என்று அனுப்பி விடுவார்கள்.

எம்மவர்கள் அப்படி இல்லையே.   ஆணோ, பெண்ணோ, கலியாணம் கட்டும் வரை வீடு தான். 

மிகச் சிறந்த கல்வி அளிக்கிறோம். அவர்கள் முன்னேற உறுதுணையாக இருக்கிறோம்.

யாரிடம் உள்ளது போலி மகிழ்ச்சி

யாரிடம் உள்ளது உண்மையான மகிழ்ச்சி?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 கருத்தெழுதும்  உறவுகள்  அனைவருக்கும் நன்றி

நல்லதொரு எடுத்துக்காட்டாக இப்பதிவு செல்கிறது

நாம் பேசணும்

மாறணும்

மாற்றணும்

தொடருங்கள்

10 hours ago, Kadancha said:

மொழி என்று வரும் போது புலம் பெயர் பெற்றோரே தம்பட்டம் அடிப்பது கண்கூடு. அது அவர்களின் அறியாமையும் கூட.

இது  உண்மைதான்

அண்மையில் தாயக உறவு  ஒருத்தர் கேட்டார்

ஏன் அண்ணை  புலத்திலிருந்து  தாயகத்துக்கு  வாற எல்லோருமே

தமது பிள்ளைகளை பொறியியலாளர்  என்கிறார்களே

இது உண்மையா? என்று

நான் சொன்னேன்

பெற்றோரிடம் இது பற்றி பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் நேரடியாக கேளுங்கள்

அவர்கள் இந்த வரட்டுக்கௌரவத்துக்குள் வராதவர்கள்

உண்மை பேசுவார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

முனி உது சாதா ஆப்பிள்  இல்லை ,ஒரு பக்கம் கடி வாங்கின ஆப்பிள் 
என்ன லேசில பழுக்காது ,பழுத்தால் கோதாரிதான் பேர்சில பெரிய ஓட்டை விழும் :10_wink:
 
நண்பரே இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ...நீங்கள் எங்கள் உறவாகவே வந்து செல்லுங்கள் 
நீங்கள் புலம்பெயர் நாடுகளில் இலகுவாக பலவேலைகள் செய்து உழைத்து அடைந்த பொருட்களை வைத்து  மூன்றாம் உலக நாடான இலங்கையில்  உழைத்து அதை விட தரம்  குறைந்த பொருள்களை பாவிப்பர்களை 
ஏன் ஏளனம் செய்கிறீர்கள். இலங்கையில் ஒரு சாதரண  குட்டிக்காருக்கான விலையில் லண்டனில்  BMW வெ ஓடலாம் . இது உங்களுக்கும் தெரியும் 
எங்களுக்கும் தெரியும் ஆனால் நீங்களோ அந்த குட்டிக்காருக்குள் ஏறி இருந்துகொண்டு உங்களது BMW பற்றி புழுகினால் கேட்பவனுக்கு விசர் ஏறும்தானே.
வசதி ,வாய்ப்பு வெற்றுபந்தா இவற்றை ஒரு  ஓரம் வைத்துவிட்டு எங்கள் உறவாகவே வாருங்கள் ..உங்களை போதும் போதும் என்று உபசரிக்க தயாராகவே இருக்கிறோம்  

இலங்கையில் இருந்து போனவர்கள் ..........
போன இடத்திலும் ஏதும் கற்காமல் அப்படியே திரும்புவர்கள் 
பற்றித்தான் நீங்கள் பேசுகிறீர்கள்.
அடிப்படை தவறு அங்குதான் இருக்கிறது ......... புலம் பெயர்த்தலில் இல்லை.
இங்கு ஏதும் கற்று இருந்தால் ........... இந்த நாட்டில் வாழும் மனிதர்கள்போல 
அடுத்தவனை மட்டம் செய்ய மாட்டார்கள் 
எங்கிருந்தோ .... கரிய ..... வறுமையில் வாடி ... தோல் சுருங்கி 
வந்த எமக்கு ...குலம் கோத்திரம் கேட்டு கதவு மூடி இருந்தால் 
நாம் இப்படி முன்னேறி இருக்க முடியாது.
எமக்கு பாஷை தெரியாது என்று அதை பழித்து இருந்தாலோ 
அல்லது அதை ஒரு குறையாகவோ அவர்கள் எடுத்து இருந்தால் ...
நாம் அதை கற்று இருக்கவே முடியாது.

கண்ணாடியில் தெரியும் விம்பம் பற்றி பல் இளிக்கிறேன் 
அது எனது என்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

துரையர் அனுபவித்து எழுதினாரா, அல்லது கேளிவிப்படட விடையங்களை எழுதினாரோ என்ற கேள்வி எழுகின்றது.

இங்கே மக்கள் தமிழ், கலை கலாச்சாரம் என்று தான் வாழ்கின்றார்கள். கோவில் கட்டி ஆன்மிகப் பலத்துடன் வாழ்கின்றனர். 

கோவில், கோவிலாக கட்டி உழைக்கிறார்கள் என்று நெகடிவாக சொல்பவர்கள் ஒரு விசயத்தினை மறக்கிறார்கள். மக்கள் ஆதரவு இன்றி எந்த கோவிலும் நிலைக்க முடியாது.

கல்வியில் சிறப்பாக செயல் படுகிறார்கள். வியாபாரத்தில் முன்னேறுகிறார்கள். பிரித்தானிய, ஆஸ்திரேலியா, கனடிய பிரதமர்கள் மதிக்கும் அளவுக்கு தான் வாழ்கின்றனர். அதே பிரதமர்கள் சோமாலி இன மக்களை குறித்து பேசுவதில்லை ஏன்?

அங்கே வருபவர்களில் வசதியான பலர், உறவினர், நண்பர்களுக்கு உபத்திரவம் கொடுக்க விரும்பாமல் தாமாகவே ஹோட்டலில், அல்லது வாடகை வீடுகளில் தங்கி விடுவார்கள்.

கையில் காசு இல்லாமல் இருக்கும், அவசரமாக ஊருக்கு போகவேண்டிய தேவையும் வந்திருக்கும். அவர்கள் ஹோட்டலுக்கு, உணவுக்கு தனியே செலவழிக்காது, உறவினர் வீடுகளில் தங்கி கடமைப் படுகின்றனர். மறுபக்கம் உறவினர் எதிர்பார்ப்புக்கு செலவழிக்க முடியாது அவமானப் படுகின்றனர்.

அலம்பரை பண்ணும் ஆட்கள் தான் உந்த உறவினர் வீடுகளில் தங்கி கடமை படுகின்றனர். உறவினர் எதிர்பார்ப்பும் இருக்கும்.

அக்கினியாத்திரா சொல்வதன் மறுபக்கம் அலம்பரை இல்லை: அவரிடம் 6s 2 வருட கொண்ட்ராக்ட்டில் இருக்கும். எனது நிலையும் அதுதான். காண்ட்ராக்ட் முறித்து 7 எடுக்க, அவசியம் எனக்கு இல்லை. வாங்க முடியாது என்று இல்லை. ஆனால் மேலதிக பணம் கொடுத்து இருக்கும் கான்ட்ராக்ட்டினை முறித்து புதிய கான்ட்ராக்ட் போடுவதிலும் பார்க்க, அடுத்த புதியது வரும் வரை 7 க்குப் போகாமல், காத்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் வசதியான எம்மவர்கள் இலங்கை விடுமுறை செல்வதில்லை. கிழக்கு ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா, கரிபியன், தென் கிழக்கு ஆசியா என்று போகின்றார்கள்.

கட்டுரையாளர் ஐரோப்பியர் சந்தோசம் குறித்து சொன்னார். அனுமானதுடன் போல உள்ளது. இங்கே கல்வியில் சீனர், இலங்கையர், இந்தியர் வெள்ளையர் என்ற வரிசையில் நிலைமை உள்ளது.

அதன் அர்த்தம் வெள்ளையர்கள் மூடர்கள் என்பதல்ல. திருமண பந்தத்தினை நம்பாத குடும்ப உறவுகள் இல்லாத அவலத்தில் சிறுவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி படிப்பு பாழாகிறது. விவாகரத்து, சேர்ந்து வாழுதல், ஒரு தாய் குடும்பம் போன்ற குழந்தைகளை பாதிக்கும் விசயங்கள் பல.

கம்பெனி வேலை விடயமா அனுப்புகிறது என்று இருபக்க குடும்பத்திடமும் சொல்லிவிட்டு, இடையே சந்தித்த வேறு தொடர்புடன், ஹாலிடே போகும் ஐரோப்பியர்கள் சந்தோசமாகத் தான் இருப்பார்கள்.

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பல கவலைகள், சில சந்தோசங்கள் உண்டு. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஊர் அரசியல் நிலைமை குறித்த, கரிசனம், கவலை உண்டு.  

வெள்ளையர்கள் கவலை இல்லாதவர்களையும், மகிழ்வு கொண்டவர்களாயும் சொல்ல முடியாது.

"அக்கினியாத்திரா சொல்வதன் மறுபக்கம் அலம்பரை இல்லை: அவரிடம் 6s 2 வருட கொண்ட்ராக்ட்டில் இருக்கும். எனது நிலையும் அதுதான். காண்ட்ராக்ட் முறித்து 7 எடுக்க, அவசியம் எனக்கு இல்லை. வாங்க முடியாது என்று இல்லை. ஆனால் மேலதிக பணம் கொடுத்து இருக்கும் கான்ட்ராக்ட்டினை முறித்து புதிய கான்ட்ராக்ட் போடுவதிலும் பார்க்க, அடுத்த புதியது வரும் வரை 7 க்குப் போகாமல், காத்திருக்கிறேன்."

இந்த ஐபோன் பற்றிய விடயத்தை ஓர் உதாரணமாகவே எடுக்கிறேன். புலம்பெயர் உறவின்  ஐபோன்னின் வயது ஓர் பிரச்னையா?

புலம்பெயர் உறவின் இத்தகைய தேவைகளும்  மற்றும் அவசியமான அவசரமான  உதவித் தேவைகளும், அதற்கான இலங்கை வாழ் உறவுகளின் அந்த தேவை மற்றும் உதவி மீதான கண்ணோட்டங்களும் அக்கினியாத்திரா சொல்வதிற்கு அப்பாற்பட்டது. மேலும் இது அக்கினியாத்திரா பற்றியது அல்ல.  

புலம்பெயர் உறவு தனது ஐபோன்ஐ மின்னேற்றம் செய்வதட்கு உதவியைக் கேட்டார். அந்த உதவிக்கும் இலங்கை வாழ் உறவு வைத்திருக்கும் போனிட்கும் என்ன சம்பந்தம்?

ஒன்றில் புலம் பெய உறவிட்கு அவர் ஐபோன்ஐ மின்னேற்றம் செய்வதட்கு உதவுவது, அல்லது "மன்னிக்கவும்" முடியாது என்பதட்கான காரணத்தை சொல்வது.

ஆயினும் புலம் பெயர் உறவு அந்த உதவியை ஓர் செல்லிட மின் சக்தி வங்கியை (power bank, may be chargeable by solar energy) இலங்கை கொண்டு செல்வதன் மூலம் தவிர்த்திருக்கலாம்.

இது உற்ற உதாரணம் மட்டுமே.

ஐரோப்பாவில் இருக்கும் வாழ்க்கையை வசதிப்படுத்தும் சிற்சில  தொழில்நுட்ப கருவிகள் அல்லது செல்லிட  தொழில்நுட்ப கருவிகள், மற்றும் உணவு வகைகள் இலங்கையில் இலை என்பது உண்மை தான்.

ஐரோப்பாவில் இருக்கும் வாழ்க்கையை வசதிப்படுத்தும் சிற்சில  தொழில்நுட்ப கருவிகள் அல்லது செல்லிட  தொழில்நுட்ப கருவிகள், மற்றும் உணவு வகைகள்  இலங்கையில் இலை என்பது உண்மை தான்.

அனால் இலங்கையில் இருக்கும் அல்லது இல்லாத வசதிகளோ அல்லது வளங்களோ உறவுகளிக்கிடையில் இடைவெளியையோ அல்லது பேதங்களையோ உருவாக்க இரு சாராரும் இடமளிக்க கூடது என்பதே அனைத்து கரைத்து.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இங்கே வருபவர்கள் சிலர் அந்த நாடு போல இல்லை எனவும் அந்த மனிதர்கள் போல் இவர்கள் இல்லை எனவும் சொல்ல               கேள்விப்பட்டிருக்கிறேன்  இலங்கையை பொறுத்த வரையில் பல வருட யுத்தம்  நடந்த நாடு எல்லா இடங்களிளும் ஏசி  ம்ற்றும் துப்பரவு எதிர்பார்க்க முடியாது அந்தளவுக்கு இன்னும் வளர்ச்சியடைவில்லை அடைந்தாலும் அந்த நிலையில் இங்குள்ள மக்கள் அதை வைத்திருப்பார்கள் என்பது  பகற்கனவு அது தமிழர்கள் ஆகட்டும் சிங்களவர்கள் ஆகட்டும் முஸ்லீம் ஆகட்டும்  கொழும்பில் உதாரணம்  கொழும்பு பஸ் ஸ்டண்ட் மற்றும் பொது இடங்கள் 

ஆனால் வெளிநாட்டிலிருந்து   அந்த நாட்டில் இறக்குமதியாகும் பொருட்கள் கூட இங்கு வந்து விட்டது ஆனால் என்ன விலை அதிகம் அதை  இங்குள்ளவர்கள் அந்த விலை கொடுத்து வாங்கமாட்டார்கள் என       அவர்கள்  நினைத்திருப்பது உன்மையே

இதில் எல்லோரையும் நான் அடக்கவில்லை பழையதை மறந்தவர்கள் மட்டுமே மறக்காதவர்கள் நிறைய பேர் இருக்குரார்கள் எனது வெளிநாட்டு நண்பர்கள் ஹோட்டலில் சாப்பிடும் நான் கரண்டி , முள்ளுக்கரண்டி எடுக்க , கத்தி எடுக்க அதை பறித்து வைத்து விட்டு கையால் சாப்பிடு என்ற நல்ல  நண்பர்கள் 

ஆனால் அங்கு பிறந்த வளர்ந்த சந்ததியிடமிருந்து  இலங்கை வரும்  போது  நாம் அதை எதிர்பார்க்க முடியாது அது  மாறாகவே இருக்கும் சூழ்நிலை வேறான போது   ஏனென்றால் காலச்சக்கரத்தால் மாற்றப்பட்டவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

சகோதரா

ஐரோப்பிய  நாடுகளில் அநேகமானவை  வளர்ச்சியடைந்த நாடுகள்

அவற்றின் பொருளாதார  சுகாதார  போக்குவரத்து   அரச  மற்றும்  தனியார் செயற்பாடுகள் என்பது மிக மிக தரமானவை

அவற்றோடு இலங்கை போட்டி போட  வேண்டுமாயின்

இனங்களுக்கிடையிலான பாகுபாடு விரிசல் விலக்கப்படணும்

நீதியும் அரசும் எல்லோருக்கும் சமனானதாக எல்லோருக்கும் பொதுவானதான  மாறணும்

இவற்றை  அடைந்தால் மட்டுமே  இலங்கை ஐரோப்பிய  சமூகத்துடன் போட்டியை  தொடங்கவே முடியும்

ஆனால்  நிலமை????????????  

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

சகோதரா

ஐரோப்பிய  நாடுகளில் அநேகமானவை  வளர்ச்சியடைந்த நாடுகள்

அவற்றின் பொருளாதார  சுகாதார  போக்குவரத்து   அரச  மற்றும்  தனியார் செயற்பாடுகள் என்பது மிக மிக தரமானவை

அவற்றோடு இலங்கை போட்டி போட  வேண்டுமாயின்

இனங்களுக்கிடையிலான பாகுபாடு விரிசல் விலக்கப்படணும்

நீதியும் அரசும் எல்லோருக்கும் சமனானதாக எல்லோருக்கும் பொதுவானதான  மாறணும்

இவற்றை  அடைந்தால் மட்டுமே  இலங்கை ஐரோப்பிய  சமூகத்துடன் போட்டியை  தொடங்கவே முடியும்

ஆனால  நிலமை????????????  

நிலமை தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்  ஆனால் மாற்றத்தை யார் கொண்டு வரவேண்டும் என எதிர்ப்பார்கிறியள் மக்களா அல்லது அரசா??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனி ஒருவன் said:

நிலமை தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்  ஆனால் மாற்றத்தை யார் கொண்டு வரவேண்டும் என எதிர்ப்பார்கிறியள் மக்களா அல்லது அரசா??

முதலில்  அரசு

அரசு எல்லோருக்குமானது

அது பாகுபாடற்று நடந்தால்

தவறுபவர்கள் எவராக  இருந்தாலும் நீதியை  சரியாக வழங்கினால்

நாகரீகமான

மனிதாபிமான சமூகம் உருவாகும்

அதனைத்தொடர்ந்து

முதலீடுகளும் நம்பிக்கைகளும் வளரும்

இது இல்லாத  நாட்டில்?????

அதுவும் ஐரோப்பியர்களுடன் ஒப்பீடு..???????????????

  • கருத்துக்கள உறவுகள்

30 வருட கால போராட்டம் அதுவும் இனப்பிரச்சினை சம்பந்தப்பட்டதை வெறும்  ஆண்டுகளுக்கு கணித்து சொல்லிட முடியாது  நல்ல நிலைக்கு வரும் என இன்னும் பல் ஆண்டுகள் கழியலாம்  ஏன் இப்படியே தொடர்ந்து கொண்டு போகலாம்  .

ஆரம்பதிலிருந்து  பகைமையும் விட்டுக்கொடுக்க முடியாத தன்மையு ம் நம்மிலும் சிங்களவர்களிலும் வந்து விட்டது அப்படியிருக்க  உடனே  நீங்கள் கூறுவது  அத்தனையும்  அரசிடம் எதிர்பார்க்க முடியுமா?? 

ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை  தெரிந்தும் தெரியாமலும் ஓர் மூலையிலே உள்ளது 

20 minutes ago, விசுகு said:

முதலில்  அரசு

அரசு எல்லோருக்குமானது

அது பாகுபாடற்று நடந்தால்

தவறுபவர்கள் எவராக  இருந்தாலும் நீதியை  சரியாக வழங்கினால்

நாகரீகமான

மனிதாபிமான சமூகம் உருவாகும்

அதனைத்தொடர்ந்து

முதலீடுகளும் நம்பிக்கைகளும் வளரும்

இது இல்லாத  நாட்டில்?????

அதுவும் ஐரோப்பியர்களுடன் ஒப்பீடு..???????????????

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமக்கு சாதகமோ பாதகமோ இந்த பத்தியில் உள்ளது எனது நேரடி அனுபவத்தில் 90 விpதம் உண்மை.மற்றது இங்குள்ள சில பதிவுகளைப் பாக்கும் போது தெரிந்தோ தெரியாமலோ இங்கு எல்hம் திறம் அங்கு ஒன்றும் இல்லை என்ற மாதிரி கருத்துக்கள்.அக்கினி சொன்ன மாதிரி இலங்கை இன்னும் அப்படித்தான் இருக்குது என்று நினைப்பவர்களை விட எப்பவும் அப்படித்தான் இருக்க வேணும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.இது இந்த திரியில் மட்டும் இல்லை வேறு திரியிலும் தாயகத்தில் வாழும் மக்களை (இதில் கள உறவுகளும் அடக்கம்.)பரிகசித்த சம்பவம் உண்டு.எப்பவும் அவர்களை தம்மிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவே பல புலத்தார் விரும்புகிறார்கள்.இங்கிருந்து போவர்கள் அங்குள்ளவர்களை பரிகசிக்கலாம் என்றால் அங்கு வசதியாக வாழ்பவர்கள் இங்கிருந்து போய் பிலிம் காட்ட நினைப்பவர்னளை களுவி ஊத்தத்தான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தலைப்பு. அருமையான கருத்துக்கள்.
இரு தரப்பிலும்.... கருத்துக்களை, முன் வைப்பவர்களின் வாதங்களும், 
எது சரி, எது பிழை.... என்ற முடிவுக்கு வர முடியாத அளவில்.... நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

"அக்கினியாத்திரா சொல்வதன் மறுபக்கம் அலம்பரை இல்லை: அவரிடம் 6s 2 வருட கொண்ட்ராக்ட்டில் இருக்கும். எனது நிலையும் அதுதான். காண்ட்ராக்ட் முறித்து 7 எடுக்க, அவசியம் எனக்கு இல்லை. வாங்க முடியாது என்று இல்லை. ஆனால் மேலதிக பணம் கொடுத்து இருக்கும் கான்ட்ராக்ட்டினை முறித்து புதிய கான்ட்ராக்ட் போடுவதிலும் பார்க்க, அடுத்த புதியது வரும் வரை 7 க்குப் போகாமல், காத்திருக்கிறேன்."

இந்த ஐபோன் பற்றிய விடயத்தை ஓர் உதாரணமாகவே எடுக்கிறேன். புலம்பெயர் உறவின்  ஐபோன்னின் வயது ஓர் பிரச்னையா?

புலம்பெயர் உறவின் இத்தகைய தேவைகளும்  மற்றும் அவசியமான அவசரமான  உதவித் தேவைகளும், அதற்கான இலங்கை வாழ் உறவுகளின் அந்த தேவை மற்றும் உதவி மீதான கண்ணோட்டங்களும் அக்கினியாத்திரா சொல்வதிற்கு அப்பாற்பட்டது. மேலும் இது அக்கினியாத்திரா பற்றியது அல்ல.  

புலம்பெயர் உறவு தனது ஐபோன்ஐ மின்னேற்றம் செய்வதட்கு உதவியைக் கேட்டார். அந்த உதவிக்கும் இலங்கை வாழ் உறவு வைத்திருக்கும் போனிட்கும் என்ன சம்பந்தம்?

ஒன்றில் புலம் பெய உறவிட்கு அவர் ஐபோன்ஐ மின்னேற்றம் செய்வதட்கு உதவுவது, அல்லது "மன்னிக்கவும்" முடியாது என்பதட்கான காரணத்தை சொல்வது.

ஆயினும் புலம் பெயர் உறவு அந்த உதவியை ஓர் செல்லிட மின் சக்தி வங்கியை (power bank, may be chargeable by solar energy) இலங்கை கொண்டு செல்வதன் மூலம் தவிர்த்திருக்கலாம்.

இது உற்ற உதாரணம் மட்டுமே.

நண்பரே 
நீங்கள் ஒரு வீட்டிற்கு செல்கிறீர்கள் செல்போனை மின்னேற்றித்தர முடியுமா என்று கேட்கிறீர்கள் ...இந்த அடிப்படை உதவியை கூட செய்யத்தெரியாத 
பண்பற்றவர்கள் அல்ல நாங்கள் ஆனால் கேட்பதற்கு ஒரு முறை உண்டு அல்லவா ....?
நீங்கள் எனது போனை மின்னேற்ற முடியுமா என்று கேட்டிருக்கலாம் .....?
அல்லது இன்னும் ஒருபடி மேலே போய் எனது I Phone ஐ மின்னேற்றித்தர முடியுமா என்றும் கேட்டிருக்கலாம் .....? தவறில்லை 
ஆனால் எனது I Phone 6 S Plus ஐ மின்னேற்றித்தர முடியுமா என்று கேட்டால் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று நீங்களே சொல்லுங்கள் ...மற்றபடிக்கு அவர் மகிழ்ச்சியாக மின்னேற்றிவிட்டே சென்றார் 

புலம் பெயர் நாடுகளில் உள்ள காண்டிராக்ட் முறைமை எனக்கும் தெரியும் . ஆனால் இலங்கையில் இந்த முறைமை இல்லை இருந்தும் ஒரு விலை உயர்ந்த பொருள் வெளியாகும் அதே கணத்தில் 
PreOrder செய்து  முழுப்பணத்தையும் முதலில் செலுத்தி கொள்வனவு செய்யும் அளவுக்கு இங்குள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நாடும் முன்னேறியுள்ளது . ஆகவே இந்தகாலகட்டத்தில் 
இப்படியான வெற்று பந்தாக்கள் இங்குள்ளவர்களிடம் நகைப்பையே வரவழைக்கும் 

புலம் பெயர் உறவின் போனின் வயது எனக்கு பிரச்சினையில்லை ஆனால் அந்த புலம் பெயர் உறவுக்கு நான் வைத்திருக்கும் போனின் வயது பிரச்சினை ...
அப்போதுதானே அவரது பந்தா செல்லுபடியாகும் ...உண்மையில் I Phone பிரித்தானியாவை விட இலங்கையில் கொள்வனவு செய்வது மலிவு ..இந்த உண்மைகள் உறைக்காதவிடத்து ஒன்றுமே செய்யமுடியாது 
பார்த்து நகைக்க மட்டுமே முடியும் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஒரு ஐ போன் 7 பிளஸ் இலங்கையில் இப்போ என்ன விலை ?
அமெரிக்காவில்தான் விலை குறைவு என்பது எனது கணிப்பீடு 

இங்கு 7 பிளஸ் 4.5 இஸ்க்ரீன்  128 ஜி பி  $750.
(அங்கு ஒரு லட்ஷத்து 15 ஆயிரம் ரூபாய்) 

அங்கு என்ன விலை இருக்கும் என்று அறிய விரும்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Maruthankerny said:

ஒரு ஐ போன் 7 பிளஸ் இலங்கையில் இப்போ என்ன விலை ?
அமெரிக்காவில்தான் விலை குறைவு என்பது எனது கணிப்பீடு 

இங்கு 7 பிளஸ் 4.5 இஸ்க்ரீன்  128 ஜி பி  $750.
(அங்கு ஒரு லட்ஷத்து 15 ஆயிரம் ரூபாய்) 

இலங்கை காசா இது நமக்கு 2000 ரூபா போண் போதும் இரண்டிலும் ஒரே குரல் தான் வரும் ஆனால் ஐ போணை தடவலாம் 2000 போணை குத்த வேண்டும்  அம்புட்டுத்தானுங்கோ:10_wink::10_wink::10_wink::10_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.