Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர்ந்த சாதியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம்

புலம் பெயர்ந்த சாதியம்

    — அ. தேவதாசன் —

1983 தைமாதம் ஒன்பதாம் திகதி பாரிசில் வந்து இறங்குகிறேன். ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா பயண விசா பெற்றுக்கொண்டு பிரான்சுக்குள் சட்ட விரோதமாக நுழைகிறேன். உள் நுழைவு என்பது லேசுப்பட்ட காரியமில்லை- உயிரை பணயம் வைத்தல் – அது ஒரு தனிக்கதை. திகில்க்கதை…

நான் சவூதி போன்ற நாடுகளுக்கு போவதைப் போலவே பிரான்சுக்கும் வந்தேன். நான்கு ஆண்டுகள் வேலை செய்து உழைக்கும் பணத்தில் இரண்டு தங்கைகளை கரைசேர்ப்பது. மீண்டும் ஊரில் பணிபுரிந்த தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவு சங்கத்தில் வேலையை தொடர்வது. இதுவே எனது திட்டம். நான் வரும்போது அரசியல் அகதியாக வரவில்லை. பொருளாதார அகதியாகவே வந்தேன். பிரான்சில் தங்கி வாழ்வதற்கும், தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் அரசியல் அகதியாக பதிவு செய்யவேண்யது அவசியம். அதனாலையே அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்தேன்.

1983 இனக்கலவரம், அதனைத் தொடர்ந்து தனி நாட்டிற்கான ஆயுதப்போராட்டம் போன்றவை இலங்கையை யுத்த பூமியாக மாற்றின. இதுவே என்னை நிரந்தர அரசியல் அகதியாகவும் மாற்றியது.

நான் பிரான்ஸ் வந்த புதிதில் தமிழர்கள் மிக குறைவானவர்களே இருந்தனர். இதனால் எங்காவது ஒரு தமிழ் முகத்தை பார்த்தவுடன் நட்புக் கொண்டாடி விடுவோம். காரணம் தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் தெரியாததும் பிரெஞ்சு மொழி அறவே தெரியாததுமாகும். தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஊர் தெருக்களை விசாரிக்க மறந்ததில்லை. ஆனாலும் அதை பெரிதுபடுத்திப் பார்க்கும் சூழல் அப்போது இருக்கவில்லை.

நான் பிரான்ஸ் வரக்காரணமாக இருந்த அண்ணன் காசி, ரஞ்சினி அக்கா அவர்களிடமே வந்து சேர்ந்தேன். அது ஒரு சிறிய அறை, அதற்குள் ஏற்கனவே நண்பன் தங்கம் உட்பட ஐவர் இருந்தனர். நான் ஆறாவது ஆள். மிகுந்த சிரமத்தோடேயே பல நாட்கள் கழிந்தன. 

பின்னர் ரஞ்சினி அக்காவின் முயற்சியால் வேறு ஒரு வீடு எடுத்தோம். அதற்குள் பெடியங்கள் தனியாக வந்து விட்டோம். ஒரு சிறிய அறை, அதற்குள் சிறிதாக ஒரு குசினி, ரொய்லெற் இதை ஸ்டூடியோ என அழைப்பர். இதற்குள் ஏழுபேர் இருந்தோம். சில நாட்களில் பத்து பன்னிரண்டாகவும் கூடிவிடும். ஒரு போர்வைக்குள் நான்கு பேர் முடங்கும் நிலை. இவ்வேளைகளில் ஆண்களும் ஆண்களும் அணைத்தபடி சுகம் காண்பது ஒன்றும் புதினமில்லை. 

நமது அறையில் ரீ.வி, டெக் எதுவும் கிடையாது. படம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் பாரிஸ் நகரில் பெல்வில் எனும் பகுதியில் ஒரு தமிழ் கடை இருந்தது, அங்கே ரீ.வி, டெக், தமிழ் படக் கசெட் வாடகைக்கு விடுவார்கள். அதை இரண்டு நாள் வாடகைக்கு நாம் காவி வந்து. படங்கள் பார்த்து மகிழ்வோம். மாதம் ஒரு முறையாவது இந்நிகழ்வு இடம்பெறும். இப்படியான நேரங்களில் சொல்லாமல் கொள்ளாமல் பல நண்பர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். அப்போது சாப்பாடு பெரிய பிரச்சினை ஆகிவிடும். சினிமா பார்க்கும் ஆர்வத்தில் யார் சமைப்பது என்னும் குழப்பத்தில் இருக்கும்போது நண்பர்கள் பலர் வந்து விட்டால் சொல்லவா வேண்டும். சோறும், கோழிக்கறியும், பருப்பும் – தினமும் காலை, இரவு, பகல் என மூன்று நேரங்களும் இதுவே எமது உணவு. அதில் நண்பர்கள் அதிகமாக வந்து விட்டால் கறிக்குள் தண்ணீர் ஊற்றி பெரிதாக்கி விடுவோம். ஒருவருக்கு ஒரு இறைச்சித் துண்டு கிடைத்தால் அது அவரது அதிஷ்டம். 

அந்த சில வருடங்கள் யாரு என்ன சாதி என்பதை கண்டுகொள்ளாத காலம். ஒரே கோப்பையில் ஒன்றாக கூடிச் சாப்பிட்ட காலம்.

யாழ்ப்பாணமே ஐரோப்பாவுக்கு… 

பின்னர் இலங்கையில் யுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க யாழ்ப்பாணமே ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தது. அதனால் எப்படியோ கஷ்டப்பட்டு தமக்கு தமெக்கென வீடுகள் எடுக்கத் தொடங்கினர். அண்ணன், தம்பி, மாமன், மச்சான், ஊரான், உறவு என தனித்தனி குடும்பங்களாக வீடுகள் அதிகரித்தன. அதோடு சேர்ந்து சாதிச்சமூகமும் தளிர் விடத்தொடங்கியது.

அரபு ஆபிரிக்க நாட்டவர்களின் கைவசமிருந்த பாரிஸ் நகர உணவகங்களின் சமையலறைகள், குறைந்த விலையில் நிறைந்த சேவை என்பதற்கு, இணங்க தமிழ் இளைஞர்களின் கைகளில் மாறின. அரபு நாட்டவரின் பலசரக்கு கடைகள் தமிழர்கள் கைக்கு மாறின. அடையான் கடையென கேலியாக அழைக்கப்பட்ட கடைகள் தமிழர்களால் அடையாத கடைகளாகவே மாறிப்போயின. கடைகளின் வாடகைகளும், விலைகளும் இரட்டிப்பாக ஏறிப்போயின. இரவு, பகல் பாராமல், ஊண், உறக்கம் இன்றி பணமே வாழ்வென வாழ்வு முடங்கிப் போனது.

சிலர் மன ஆறுதலுக்காகவும், சிலர் பெயர் புகழ்ச்சிக்காகவும், சிலர் ஊர் மக்கள் மீது கொண்ட பற்றின் காரணமாகவும், சிலர் தொழிலாகவும் ஊர்ச்சங்கங்களை உருவாக்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள குக்கிராமங்களின் பெயரிலும் சங்கங்கள் அமைந்தன. ஊரில் உள்ள பாலர் பாடசாலையில் இருந்து பட்டப்படிப்புக்கு தேர்வாகும் பென்னம்பெரிய பாடசாலை வரை சங்கங்கள் உருவாகின. ஊரில் உள்ள குலதெய்வக்கோயில்கள் தவிர இந்தியாவின் பெரும்கடவுள்கள் அனைவரும் சிலையாகவும் சிற்பமாகவும் அவைகளுடன் கூடவே சிலைகளுக்கு பூசைகள் செய்ய அந்தணர்களும் வந்திறங்கினார்கள்.

ஒருபுறம் சாதி பேதமற்ற சமுத்துவ தமிழீழம் வேண்டும் என போராடியவர்களே, மறுபுறத்தில் சாதிச் சங்கங்களையும், கோயில்களையும் நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஊரில் மாட்டுக்கொட்டில் அளவு இருந்த கோயில்களெல்லாம் கோபுரமும் கலசமுமாக கொழுத்து வீங்கிவிட்டன. புலம்பெயர் தமிழர்களின் அன்பளிப்பால் வாங்கிய சாமிதூக்கும் வாகனங்கள் தூக்க ஆளின்றி துருப்பிடித்து கிடக்கின்றன.

ஊரில் இருந்து வந்த கத்தோலிக்க பக்தர்களும், சைவப்பழங்களும் தங்கள் தங்கள் மதவழிகளில் நம்பிக்கை அற்றவராய் பைபிள் என்னும் ஒரு புத்தகத்தில் இருந்து உருவான பல விதமான சபைகளிலும் தங்களை இணைத்துக்கொண்டனர். புகையிரத நிலையங்களிலும் தெருக்களிலும் குழந்தை குஞ்சுகளுடன் நின்று மத உபதேசம்  வழங்குகின்றனர்.

இவர்கள் தெருவில் போகும்போது வீட்டுக்கதவில் தமிழர் பெயரைக் கண்டால் கதவைத்தட்டி நேரடித் தரிசனமும் கொடுப்பர். ஒருநாள் எனது வீட்டுக் கதவையும் தட்டினார்கள். வணக்கம் சொன்னார்கள், நான் பதிலுக்கு அஸ்லாம் ஆலேக்கும் என்று சொன்னேன், திரும்பிக்கூட பார்க்கவில்லை கழன்று விட்டார்கள். இவர்களது  கவர்ச்சிப்பேச்சு முஸ்லிம்களிடம் எடுபடாது என்பதுதான் இதற்குக் காரணம்.

இவர்களிடத்திலும் சாதிச்சபைகளும் உண்டு. ஆனாலும் ஒரு சிறப்பம்சமும் உண்டு.
இந்துக்கோயில்களில் பிராமணர் என்கிற சாதியினர் மட்டுமே அர்ச்சகராக சமஸ்கிருத மொழியில் பூசை செய்ய முடியும். ஆனால் கிறித்தவ சபைகளில் எளிய சாதிகள் என ஒதுக்கப்பட்டோரும் போதகர்களாக வரமுடியும். இதற்காகவே பலர் சபைகளில் இணைந்தனர்.

ஒவ்வொரு ஊர்ச்சங்கங்கள், பாடசாலைச் சங்கங்கள், ஆலயச்சங்கங்கள் அனைத்திலுமே சாதிய விசம் கலந்தே கிடக்கிறது.
(தொடரும்……) 

 

https://arangamnews.com/?p=4499

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம் – 2

புலம் பெயர்ந்த சாதியம் – 2

    — அ. தேவதாசன்  

என்னோடு அறையில் ஒன்றாக தங்கி ஒன்றாக உணவருந்தி இருந்த பல நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாது. சிலர் மட்டும் ஒரு குடும்பம் போலத்தொடர்கிறோம். இதன் பின்னணியிலும் சாதியே ஒட்டி இருக்கிறது. நான் பிரான்சுக்கு வரமுன்னர் இருந்த நட்புக்களில் சிலரே இன்றுவரை எனது நன்மை தீமைமைகளில் ஒன்றறக் கலக்கும் உறவாக தொடர்கிறார்கள்  .

பிரான்சில் தமிழ் ஈழ விடுதலைப்பேரவை எனும் அமைப்பில் 1983ல் அண்ணன் காசி. ஊடாக என்னை இணைத்துக்கொண்டேன். பாலகிருஷ்ணன், சபாலிங்கம், உமாகாந்தன், கொம்மினிஸ் பாலா ஆகியோரது நட்பு அங்கிருந்தே உருவானது.  பேரவையால் வெளியிடப்பட்டு வந்த தமிழ் முரசு பத்திரிகை ஆரம்பத்தில் கையெழுத்து பிரதியாகவும் பின்னர் தட்டச்சு பிரதியாகவும் வெளியானது. எனக்கு ஓரளவு ஓவியம் வரையத் தெரிந்த காரணத்தால் அட்டைப்படம் வரைதல், கட்டுரைகளுக்கான தலைப்புகள் எழுதுதல் போன்ற வேலைகள் ஊடாக சங்க நிர்வாக சபையில் நானும் ஒருவனானேன். அச்சங்க நிர்வாகம் சாதிய ரீதியான பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டதை அறிவேன். அவர்களது வீட்டுக்குள் எப்படி இருந்தார்கள் என்பதை நானறியேன். சமூகக் கட்டமைப்பு அவர்களை மட்டும் விட்டுவைக்குமா?

கருத்தோவியங்கள் பக்கம் சிந்திக்க வைத்ததில் தமிழ் முரசுக்கு முக்கிய பங்குண்டு. பாலஸ்தீன விடுதலைக் கருத்தோவியங்கள் போன்றவற்றை சேகரித்து தரும் சபாலிங்கம் மிகப்பெரிய உற்சாக ஊட்டியாக இருந்தார். உமாகாந்தன் நெருங்கிய நண்பன் ஆனான். நேரத்தை மதிக்கத்தெரியாத சமூகத்தில் நேரமும், நிர்வாகமும் மனித சக்திக்கு அவசியம் என்பதை செயலில் கற்பித்தவர் பாலகிருஷ்ணன். சாதி மதம் அற்ற சமத்துவ ஈழம் அமைய வேண்டும் என்பதை பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்தனர்.

இதனாலேயே பின்னாளில் eprlf இயக்கத்திற்கு பேரவை சார்பெடுக்கக் கூடிய சூழல் உருவானது. அது சாதாரணமாக நடந்து விட்ட காரியமல்ல.
பேரவை ஆரம்பித்த காலத்தில் இருந்ததை விட 1983க்குப் பின்னர் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் மிக வேகமாக வளர்ந்தன. அதன் தாக்கம் பேரவையையும் தாக்கியது. பிரான்சில் வாழும் தமிழர்களில் அதிகமானோர் அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு பேரவை இயங்கியது. மாதம் ஐநூறு புத்தகங்கள் விநியோகம் செய்தோம். அதில் சில பக்கங்கள் பிரெஞ்சு மொழியிலும் தகவல்கள், செய்திகள் எழுதபட்டிருந்தன.  

நாம் பேரவை சார்பில் இலங்கை இனப்பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து மக்களை சந்திக்கும் போதெல்லாம் நீங்கள் எந்த இயக்கத்திற்கு சார்பு என்கிற கேள்விகள் தொடர்ச்சியாக எழ ஆரம்பித்தன. இதனால் எமது அமைப்பு ஏதோ ஒரு இயக்கத்திற்கு சார்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பன தனிநபர் இயக்கங்களாக கருதப்பட்டு பேரவையினால் உடனேயே நிராகரிக்கப்பட்டன. மீதியாக இருந்த EROS, EPRLF, TELO ஆகிய மூன்று இயக்கங்களில் எது என்பதே விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. இதிலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் EPRLF கருத்தியல் ரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் பேரவையின் கருத்தோடு ஒன்றிப்போய் உள்ளதால் EPRLF அமைப்புக்கு சார்பெடுப்பது என்பதே தீர்மானமாகியது.

அங்கேதான் மாற்றுக்கருத்து, ஜனநாயகம், சர்வதேசியம் போன்ற பல விடயங்களை கற்கும்  வாய்ப்பு ஏற்பட்டதுடன்,  பல புதிய நண்பர்களும் கிடைக்கக்பெற்றனர். பேரவை ஈபிஆர்எல்எவ் இயக்கத்திற்கு சார்பெடுத்தபோது தோழர் புஷ்பராஜா அவர்கள் கட்சியின் மத்திய குழுவால் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் எனக்கு அறிமுகமானார். பின்னாளில் நாங்கள் உறவினரானோம். இவரோடு அசுரா, கலாமோகன், அருந்ததி போன்ற பலர்  அடங்குவர். இதில் அசுரா மட்டுமே அன்று தொட்டு இன்றுவரை எல்லா காலங்களிலும் இணைந்து வேலை செய்பவராகவும் குடும்ப நண்பராகவும் தொடர்கிறார்.

ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பித்த காலங்களில் சாதியத்தின் வீரியத்தை தெளிவாக புரிந்து வைத்திருக்கவில்லை. சோசலிச ஈழமோ, தமிழீழமோ அமைந்தால் சாதியம் அற்ற சமூகம் அமைந்துவிடும் என பெரும்போக்காக நினைத்ததுண்டு. ஒரு இயக்கத்தை சாதியின் பெயரோடு இணைத்து ஏளனமாக அழைக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து அந்த இயக்கம் அழிக்கப்டடதுமே அதன் பின்னால் உள்ள சாதியத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

Eprlf விடுதலைப்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. அதன் விளைவு பிரான்சிலும் எதிரொலித்தது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கட்சியின் தலைவர் பதவி ஏற்று சில காலங்களிலேயே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சரணடைந்தார். இதை பிரான்சில் வேலை செய்த தோழர்கள் யாவரும் ஏற்றுக்கொள்வில்லை. அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ச்சியாக இயங்கி வந்த என்போன்ற தோழர்கள் அடுத்து என்ன செய்வது என குழப்பிக் கொண்டிருந்தோம்.

“தமிழ் முரசும்” நின்று போயிருந்த காலம், அதனால் “புன்னகை” எனும் பெயரில் ஒரு சிற்றிதழை கொண்டு வந்தேன் அதுவும் ஒன்றோடு நின்றுபோனது.

ஜேர்மனியில் சில நண்பர்களால் உருவாக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு ஜனநாயகத்தின் குரலாகவும், மாற்றுக்கருத்தை பேசுவதாகவும், பாசிசத்திற்கு எதிரான குரலாகவும் செயற்பட்டு வந்தது. எனது கருத்தோடு அவர்களது கருத்தும் ஒத்துப்போனதால் அவர்களது சந்திப்புக்களில் தொடர்சியாக பங்கெடுத்துவந்தேன்.

ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு போன்ற உரையாடல்களே சாதியம், தேசியம், மதம், பெண்ணியம், தலித்தியம், மாற்றுக்கருத்து என பல விடயங்களை தேடலுக்குள்ளாக்கியது. பெரியார், அம்பேத்கர் போன்றோரையும் படிக்கத்தூண்டியது. விவாதங்களை உருவாக்கியது. இலக்கியச் சந்திப்பு ஊடாக பல ஆற்றல் மிக்க தோழர்கள் அறிமுகமானார்கள். செயற்பாட்டாளர்களாக, எழுத்தாளர்களாக, ஆய்வாளர்களாக, சிறுபத்திரிகை வெளியீட்டாளர்களாக, பெண்கள் சந்திப்பு நடாத்துபவர்களாக, விமர்சகர்களாக, நடிகர்களாக, ஓவியர்களாக, இப்படி பல்வேறு துறைகளின் வல்லுனர்கள் எனது நண்பர்களானார்கள்.

விஜி, ஞானம், நிர்மலா, ராகவன், உமா,முரளி, ஜெபா, கற்சுறா, லக்ஷ்மி, கலைச்செல்வன், இன்பா, சுசீந்திரன், றஞ்சி, ரவி, பத்மபிரபா, புதுமைலோலன், வனஜா, சின்ரா, நித்தியானந்தன், சிவராஜா, கேகே ராஜா, ஷோபாசக்தி, சுகன், சரவணன், கீரன், காண்டீபன், றங்கன், முத்து, தமயந்தி,  அசோக், கரவைதாஸ், கலையரசன், அரவிந் அப்பாத்துரை, வாசுதேவன், றயாகரன், மனோ, பௌவுசர், தர்மினி இப்படி பலரோடு இணைந்த எனது பங்களிப்பானது   அற்புதமான அனுபவங்கள்.

பிரான்சில் முப்பத்தியெட்டு வருடங்கள் பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயற்பட்டமையால் சாதியம் எவ்வளவு நுணுக்கமாக செயற்படுகிறது என்பதை அனுபவபூர்வமாக அறிந்து வந்துள்ளேன்.
யாழ்ப்பாண குடாநாட்டின் குடியிருப்புகள் யாவும் சாதிச் சமூகங்களாகவே பிரிந்து கிடக்கின்றன. அதனாலேயே ஒருவரின் சாதியை அறிய வேண்டுமெனில் ஊர், தெரு, வட்டாரம் போன்றவைகளை விசாரித்தால் யார் என்ன சாதி என்பதை இலகுவாக அறிந்து விடலாம்.

உதாரணமாக நான் பிறந்து வளர்ந்தது வேலணை. வடமாகாணத்தில் ஏழு தீவுகளில் ஒரு தீவான வேலணையும் அடக்கம். அதனால் நான் ஒரு தீவான். வேலணையானது மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு எனப்பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னிரண்டு வட்டாரங்களும் உள்ளன. அங்குள்ள வாழ்விடங்கள் சாதிளாகவே இன்றும் பிரிக்கப்பட்டுள்ளன. தெற்கிலிருந்து முக்கியர், பள்ளர், நளவர், கோவியர் , தச்சசர், வெள்ளாளர் என வரிசைபப்படுத்தப்பட்ட வாழ்விடங்கள் இப்போதும் அப்படியேதான் காட்சி தருகின்றன. முப்பது வருட ஆயுதப்போராட்டம் பத்துவருட இடப்பெயர்வு இவைகளால் கூட இதை அசைக்க முடியவில்லை.

ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்சிலும் அதே மனநிலையை அறிவேன். ஆரம்பத்தில் நம்மவர்கள் பல மாடிக் கட்டிடத்தொடர்களிலேயே வீடுகள் வாங்க ஆரம்பித்தனர். அவர்கள் வீடு பார்க்க வரும்போது அந்த மாடியில் ஆபிரிக்கர்கள், அரேபியர்கள், சீனர்கள் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால், தமிழர்கள் இருந்தால் அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பதை விசாரித்து விட்டே வீடு வாங்குவர். தட்டத்தவறி ஏற்கனவே பள்ளரோ, நளவரோ அந்த மாடியில் குடியிருந்தால், அவர்கள் அந்த இடத்தை தவிர்த்து விடுவார்கள். அந்தளவுக்கு நிறம், மொழி, தேசம் யாவற்றையும் பின்தள்ளி விட்டு சாதி மட்டும் முன்செல்கிறது. இதேவே தமிழரின் முதன்மை கலாச்சாரம் என்பேன்.

எனது நண்பன் ஞானம் தானும் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதால் பல வீடுகள் பார்த்தார். Bondy என்னும் இடத்தில் வீடு பார்க்க சென்றபோது முன்னர் இவரோடு ஒரே அறையில் வசித்த நண்பரை தற்செயலாக காண்கிறார். பரஸ்பரம் சுகம் விசாரித்துவிட்டு வீடு பார்க்க வந்த செய்தியை சொல்கிறார். பதிலுக்கு அந்த நண்பர் “ஏன் இதுக்குள்ள வீடு பாக்கிறியள் இதுக்குள்ள நளவரொல்லோ கனபேர் இருக்கினம்” என்கிற தனது நல்லெண்த்தையும் பகிர்ந்து விட்டு நகர்ந்தார். ஞானம் என்னைக் கண்டு “உங்கட யாழ்ப்பாணத்தார் என்னடாப்பா இப்படி சொல்கிறார்” எனச்சிரித்தார். “இப்படி அவர் சொல்லாவிட்டால் தான் ஆச்சரியம்” என பதில் சொன்னேன்.

ஐரோப்பாவில் வெள்ளையர்களது ஆட்சியில் அவர்களது நிர்வாகத்திற்குள் வாழ்ந்தாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர் எனச்சொல்லப்படுவோர் இன்னொரு தமிழரிடம் தனது சாதியை மறைத்து வாழ்வதே பண்பாடாகவுள்ளது. எனது மைத்துனர் முறையானவர் ஜேர்மனியில் வாழ்கிறார். அவரது வீட்டிற்கு ஒருநாள் சென்றேன். பல வருடங்களுக்கு பின்னர் அவரோடு உரையாடுவது மகிழ்ச்சி, அவரும் ஊரில் என்னைப்போலவே தெங்கு பனம்பொருள் சங்கத்தில் பணிபுரிந்தவர். அந்த அனுபவங்கள் பற்றி நான் பேச்சு எடுக்கும்போது, பதட்டப்பட்ட அவர் அதனை தொடர வேண்டாமென கண்ணசைவால் காட்டினார். என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் கதையை மாற்றிக் கொண்டேன் காரணம் அவர் பக்கத்தில் இன்னுமொரு நண்பரும் இருந்தார். அந்த நண்பர் சென்றவுடன், ‘தாசன் (என்னை தாசன் என்றே அழைப்பார்) அவை பெரியாக்கள் நான் எனது ஊரை மறைத்து அறிமுகப்படுத்தியிருக்கிறேன் நமது சங்கத்தைப் பற்றி கதைத்தால் என்னை கண்டுபிடித்து விடுவார் நட்பு கெட்டுவிடும்’ என விளக்கம் கொடுத்தார். நானும் கூட ஆரம்பத்தில் அப்படித்தான்.   

(தொடரும்..) 

https://arangamnews.com/?p=4570

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம் 3

  — அ. தேவதாசன் —  

எனது இளம் வயதில் சாதியை மறைக்க முயற்சித்துள்ளேன். எனக்கு அழகான பெண்கள் எனத்தெரிபவரோடு பேச வேண்டுமெனில், பழக வேண்டுமெனில், காதல் கொள்ள வேண்டுமெனில் சாதி மிகப்பெரிய தடையாக இருக்கும். இதனால் ஊர்களை மாறிச் சொல்லும் பழக்கம் இருந்தது. சாதி தெரிந்தபின் அத்தான் அண்ணாவாகிய அனுபவங்களும் உண்டு.

பிரான்ஸ் வந்த பின்னரும் பலர் என்னை அறிந்துகொள்ள முயற்சி செய்வர்.
(என்னை அறிந்து கொள்ளல் என்பது எனது சாதியையும் அறிந்து கொள்ளல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.)

‘யாழ்ப்பாணத்தில் எவ்விடம்?’
‘வேலணை.  _வேலணையில் எவ்விடம்?’
‘வேலணை மேற்கு_ மேற்கில் எவ்விடம்?’
‘பஸ் கொம்பனி’ _ ‘பஸ்கொம்பனியெண்டால் கிழக்கா? மேற்கா?’ ‘பஸ்கொம்பனியக் கடந்து புங்குடுதீவு போற றோட்டு’_ ‘அந்த முதலாளியைத் தெரியுமா? இந்த வாத்தியாரைத் தெரியுமா?’ (இந்தக் கேள்வியில் தனது சாதியின் பெருமையை தெரியப்படுத்திக்கொண்டார் என்பதை அறிக).. என்னால் இனியும் ஏலாது “கள்ளுத்தவறணைக்கு பின்னால” பிரச்சினை முடிஞ்சிது நானும் எவ்வளவு நேரமெண்டுதான் அடிய வாங்கிறது.
அதன்பிறகு அவர்களுக்கு தெளிவாக விளங்கிவிடும்.
நான் ஒரு வாகனம் திருத்தும் கடை (கார் கறாஜ்) நடாத்தி வந்தேன். அங்கு தமிழர்கள் அதிகம் வருவார்கள் அவர்கள் கறாஜ்க்குள் வாகனத்தை விட்டதும் தம்பி எந்த ஊர் என்பதே முதல் கேள்வியாக இருக்கும். இதற்கு விளக்கம் சொல்வதென்பது பெருந்துன்பமான காரியம். இதனால் எனது ஊரை விசாரிப்பவர்களுக்கு  நான் அம்பாறை எனச்சொல்லி விடுவேன். எந்தத் தெரு, எந்த வட்டாரம், அவரத்தெரியுமா, இவரத்தெரியுமா போன்ற கேள்விகள் வரமாட்டாது. எனக்கு நேரம் மிச்சம். அதில் ஒருவர் மட்டும் “ஓ…அங்கயிருந்தும் வாறீங்களா” எனக்கேட்டார். நான் எதிர் பார்க்கவே இல்லை. அந்தக்கேள்வி லேசான கோபத்தையும் உண்டாக்கியது. நான் சொன்னேன் அம்பாறைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பில் தான் விமான நிலையம் என்றேன். நான் சொன்னது அவருக்கு கேட்காததைப்போன்று நகர்ந்தார்.

சாதியம் பற்றிய தெளிவும், சுயமரியாதையின் அவசியமும் புரிந்தபின்னர் என்னைப்பார்த்து யாரும் கேட்பதில்லை. நானாகவே சொல்லிவிடுவேன்.
இந்த தைரியம் பல வாசிப்புக்கள் உரையாயாடல்களென ஐரோப்பிய அளவில் பல நிகழ்வுகள் நடைபெற்றன. ஐரோப்பா எங்கும் நடைபெறும். இலக்கியச் சந்திப்புகளில் ஆர்வமாக கலந்துகொள்ளும் பலரும் சாதி அழிந்து விட வேண்டும் என்கிற கருத்துடையவர்களாக இருப்பதினால் சாதியம் பற்றிய உரையாடல்கள் ஒவ்வொரு சந்திப்புக்களிலும் தவறாது இடம்பெறும்.  

பெரியார், அம்பேத்கர் ஆகியோரது சாதியம் பற்றிய பார்வைகள் விவாதிக்கப்படும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலிருந்து வரவிக்கப்பட்ட நிறப்பிரிகை, தலித் முரசு, புதிய கோணங்கி போன்ற சிறு பத்திரிகைகள் வாசிக்க நேர்ந்தது. அத்துடன் அ மார்க்ஸ், குணசேகரன், திலகவதி போன்றோர் தமிழ்நாட்டிலிருந்து பிரான்ஸ் வந்தபோது பல சந்திப்புகள், உரையாடல்கள் நிகழ்ந்தது. இவைகள் எல்லாமே எனது சிந்தனைப் போக்கை புரட்டிப் போட்டது. என்னை மட்டுமல்ல என்போன்ற பல தோழர்களையும்.

சிலர் ஒருவரைப் பற்றி கிண்டிக் கிளறி விசாரிக்க விரும்புவது அவரது சாதியை அறிவது தனது சாதிப்பெருமையை தெரியப்படுத்தவே!
ராகுலன் என்கிற நண்பர் பாரிசில் சிறு தேநீர்க்கடை வைத்திருந்தார். அவரிடம் தேநீர் குடிக்க வந்த ஒருவர் ஊரை விசாரித்திருக்கிறார். அதற்கு அவர் யாழ்ப்பாணம் என்றார்_ யாழ்ப்பாணம் எவிடம்? றெயில் ஸ்டேசனுக்கு அருகில் _அருகில் எண்டால்?  நான் யாழ்ப்பாணம் முலவை நளவன் போதுமா?
கேட்டவர் வாயடைத்துப்போனார்.  

தோழர் புஷ்பராஜா அவர்களிடமும் முகத்திற்கு நேரே தன்னை அறிமுகப்படுத்திவிடும் தைரியம் உண்டு. இதில் ஒரு சிறப்பு இருக்கிறது. நாம் சாதியை மறைத்து மறைத்து பழகும் போது அது ஒரு கள்ள உறவாகவே தொடரும். ஒரு அடிமை மனநிலை எம்மனதுக்குள் உழன்று கொண்டே இருக்கும். அது காலம் கடந்த பின் மனதில் கவலையை ஏற்படுத்தும். நேரடியாக நம்மை இனம்காட்டிவிட்டால் பிடித்தவர் பழகுவார் பிடிக்காதவர் நழுவிவிடுவார்.

சாதியை மறைத்து பழகும் போது வீட்டிற்கு வந்து மச்சி, மச்சான் போட்டு பழகுவவர்கள் அவர்களுக்கு குழந்தை பிறந்து பெண்பிள்ளைக்கு பதின்மூன்று வயதும் ஆண்பிள்ளைக்கு பதினைந்து வயதும் வரும்போது சிறிது சிறிதாக உறவை துண்டித்துக்கொள்வர். அதற்கான ஆயிரம் காரணங்கள் சொல்லிவிடலாம். வேலைப்பளு, உடல் நிலைக்கோளாறு இப்படி பல. உறவைத் துண்டிப்பதற்கான உண்மைக் காரணம் சாதி மட்டுமே. இரண்டு குடும்பங்கள் நெருங்கிப்பழகும் பொது சிலவேளைகளில் பிள்ளைகளுக்கு பருவத்தில் வரும் காதல் சாதி அறியாமல் வந்துவிட்டால் சாதியால் பின்னப்பட்ட குடும்ப மானம் என்னாவது. அதனால் முன்கூட்டியே முடிவெடுத்து செயற்படும் செயற்திறன் நமது இனத்தின் பிரத்தியேக நுண்ணறிவு.

சமூக மாற்றத்தை விரும்புவோரும், மாற்றுக் கருத்தாளர்களும் சாதிய சமூகத்தை இல்லாதொழிப்பதற்கான காரணங்களை கண்டறிய பலதரப்பட்ட விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர். தீவிர இடதுசாரிக் கருத்துடைய சிலர் வர்க்கப் போராட்டம் மட்டுமே சாதியை அழிக்க வல்லது எனவும் மார்க்சியம் அதற்கான மருந்து என்பதிலும் விடாப்பிடியாக உள்ளனர். இதற்கு நேர் எதிராக திறந்த பொருளாதாரக் கொள்கையே கிராமங்களை உடைக்கும் சாதியை அழிக்கும் என்கிற கருத்தும் உண்டு.  

தமிழ் கலாச்சாரம் சாதியோடு பின்னப்பட்டுள்ளது. எனவே கலாச்சாரப் புரட்சி அவசியம் என்கின்றனர். மற்றும் சாதிய மறுப்புத்திருமணம், சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது, கல்வி பொருளாதாரத்தை மேம்படுத்துவது. இப்படி பலர் பலவகையான காரணங்களை முன்வைக்கின்றனர். இவைகளில் நடைமுறைச் சாத்தியம் எது என்பதை நாம் கண்டறிய வேண்டியவர்களாக உள்ளோம்.

இன்றைய உலகம் முழுவதும் உள்ள பொருளாதாரக் கொள்கையில் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறுவது என்பது தனி ஒரு நாட்டில் சாத்தியப்படும் சூழல் இல்லை. அதிலும் இலங்கை போன்ற சிறிய நாட்டில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாட்டில் சுயமாக முடிவெடுக்கும் சக்தி இல்லாத நாட்டில் வர்க்கப் போராட்டம் மிக தூரத்திலேயே உள்ளது.

தமிழ் கலாச்சாரம் என்பது முழுக்க முழுக்க இந்துக் கலாச்சாரமே. தமிழர்களுக்கு என தனித்துவமான கலாச்சாரம் எதுவுமே இல்லை. இந்துத்துவா வர்ணாசிரம கோட்பாட்டில் கட்டப்பட்டது. நாலு வர்ணங்கள் உருவாக்கப்பட்டு பிராமணன் தலையில் இருந்து பிறந்தவனென்றும், சத்ரியன் தோளில் இருந்தும், வைசியன் தொடையில் இருந்தும், சூத்திரன் காலில் இருந்தும் பிறந்தவன் என  மனித உயிரை சாதிகளாக பிரித்து வைத்துள்ளது. மனித உயிரை மதிக்காத மதத்தில் இருந்து சமத்துவம் மலரும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய பொய்.

ஆகவே இந்துத்துவம் அழியாமல் சாதி அழியவே முடியாது. மாறாக இன்று இந்தியாவில் பாஜக கட்சி இரண்டு முறை ஆட்சியில் இருப்பதால் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் முன்னதை விட இந்துத்துவம் வலுப்பெற்று வருகிறது. இது தமிழ் மக்கள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தவே வழி செய்யும்.
சாதிய மறுப்புத் திருமணங்கள் இலங்கையைவிட புலம்பெயர் தேசத்தில் ஒரளவு அதிகமாகவே நடைபெறுகின்றன. அதற்கான காரணம் கல்விச் சுதந்திரம், சட்டரீதியான பாதுகாப்பு, பதினெட்டு வயதைக் கடந்த சுதந்திர உணர்வின் செயலாக்கம்.

இலங்கைத் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்தாலும் புறச்சூழல் பெற்றோர்களின் எண்ணங்களுக்கு மாறாகவே காணப்படுகிறது. இந்த புறச்சூழலில் இருந்து பிள்ளைகளை தம் வசப்படுத்த அளவுக்கு அதிகமான பாசத்தைக்காட்டுவது, இரத்த உறவுகளோடு உறவுகளை இறுக்கமாக வைத்திருப்பது, தாங்கள் விரும்பாத தேர்வுகளை பிள்ளைகள் விரும்பினால் தாங்கள் செத்துவிடுவோம் என மிரட்டுவது. இப்படி பல காரணங்களால் பெற்றோர் விரும்பக்கூடியவர்களையே தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் சூழலே அதிகம் காணக்கூடியதாக இருக்கிறது. இதன் மறு பக்கம் தாங்கள் விரும்பியவரையே திருமணம் செய்வேன் என உறுதியாக இருப்பவர்கள் தற்கொலை வரை சென்று வெற்றி அடைந்தவர்களும் உண்டு. தோல்வியடைந்தவர்களும் உண்டு.

ஒரு சோடி இணைந்து வாழ பெண்ணின் தந்தையார் தடைவிதித்தன் காரணத்தால் அவரது கடையிலேயே வந்து பையன் நீதி கேட்டான். நாங்கள் இணைந்து வாழ மறுத்தால் இந்த இடத்திலேயே தற்கொலை செய்வேன் என்றான். பெண்ணின் தந்தையார் அவனது பேச்சை கருத்தில் எடுக்கவில்லை. அதனால் பையில் கொண்டுவந்த நஞ்சை அவ்விடத்திலேயே விழுங்கி விழுந்தான். அருகில் நின்றவர்கள் அவசர உதவியாளர்களை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபடியால்  அவன் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனாலும் பெண் குடும்பத்தினர் இணைந்து விடக்கூடாது என தொடர்ந்தும் பல முயற்சிகள் செய்தனர். நாடுநாடாக பிள்ளையை கடத்தினர், பெண் தன் காதல் மேல் வைத்திருந்த வலிமையால் சிலகாலத்திற்குப்பின் காதலனுடன் இணைந்தார். இதற்கான காரணம் பெரிதாக எதுவும் இல்லை பையன் சாதியில் குறைவாம்.!!

இன்னுமொரு சம்பவம் நடந்தது… பெண் பிள்ளையின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட தகப்பன் பிள்ளையை பின் தொடர்ந்து ஒரு நாள் இருவரையும் கண்டுகொண்டார். ஆனாலும் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு தன் மகளுக்கு ஒரு புதுக்கதையை உருவாக்கினார்.  

‘நீ காதல் செய்வதில் எனக்கு எந்த கோபமோ முரண்பாடோ இல்லை. ஆனால் அவன் நல்லவன் இல்லை முக்காலா குரூப்பில் இருக்கிறானாம். ஒரு நாள் யாரையாவது வெட்டிவிட்டு சிறைக்குப் போய்விடுவான், அல்லது இவனை யாராவது வெட்டுவாங்கள், அதன் பின்னர் உன் வாழ்க்கை என்னாவது’ என அழுதுள்ளார். (முக்காலா என்பது பிரான்சில் அடிதடி செயல்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படும் ஒரு தமிழ் இளைஞர் குழு) தகப்பன் உண்மையைத்தான் சொல்லியிருப்பார் என்று நம்பி அதோடு அந்தப் பெண் தனது காதலை நிறுத்தி விட்டார். முக்காலாவோடு எந்த ஒட்டும் உறவுமில்லாத அந்தப் பையன்  தன் மேல் சுமத்தப்பட்ட பழியை தாங்க முடியாமல் மனமுடைந்து நஞ்சு அருந்தினான். மருத்துவ உதவியால் நூலிழையில் உயிர் தப்பினாலும் அவனது காதல் தோற்றே போனது. இதிலும் பையன் சாதி குறைவாம்.! இப்படி பல சம்பவங்கள் புலம்பெயர் தேசங்களில் நடந்து கொண்டேயிருக்கிறது.

 (தொடரும்……)
 

 

https://arangamnews.com/?p=4664

  • கருத்துக்கள உறவுகள்

"ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பித்த காலங்களில் சாதியத்தின் வீரியத்தை தெளிவாக புரிந்து வைத்திருக்கவில்லை. சோசலிச ஈழமோ, தமிழீழமோ அமைந்தால் சாதியம் அற்ற சமூகம் அமைந்துவிடும் என பெரும்போக்காக நினைத்ததுண்டு. ஒரு இயக்கத்தை சாதியின் பெயரோடு இணைத்து ஏளனமாக அழைக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து அந்த இயக்கம் அழிக்கப்டடதுமே அதன் பின்னால் உள்ள சாதியத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

Eprlf விடுதலைப்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. அதன் விளைவு பிரான்சிலும் எதிரொலித்தது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கட்சியின் தலைவர் பதவி ஏற்று சில காலங்களிலேயே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சரணடைந்தார். இதை பிரான்சில் வேலை செய்த தோழர்கள் யாவரும் ஏற்றுக்கொள்வில்லை. அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ச்சியாக இயங்கி வந்த என்போன்ற தோழர்கள் அடுத்து என்ன செய்வது என குழப்பிக் கொண்டிருந்தோம்."

தொண்டை குழிக்குள் என்னத்தை வைத்து கொண்டு 
முக்கிறார் என்று புரியவில்லை. 

5 லீட்டர் பால் 
அரை லீட்டர் நஞ்சு 

இந்த ரெசிப்பி மிகவும் பழைய ரெசிப்பி 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

34 minutes ago, Maruthankerny said:

"ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பித்த காலங்களில் சாதியத்தின் வீரியத்தை தெளிவாக புரிந்து வைத்திருக்கவில்லை. சோசலிச ஈழமோ, தமிழீழமோ அமைந்தால் சாதியம் அற்ற சமூகம் அமைந்துவிடும் என பெரும்போக்காக நினைத்ததுண்டு. ஒரு இயக்கத்தை சாதியின் பெயரோடு இணைத்து ஏளனமாக அழைக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து அந்த இயக்கம் அழிக்கப்டடதுமே அதன் பின்னால் உள்ள சாதியத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

Eprlf விடுதலைப்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. அதன் விளைவு பிரான்சிலும் எதிரொலித்தது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கட்சியின் தலைவர் பதவி ஏற்று சில காலங்களிலேயே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சரணடைந்தார். இதை பிரான்சில் வேலை செய்த தோழர்கள் யாவரும் ஏற்றுக்கொள்வில்லை. அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ச்சியாக இயங்கி வந்த என்போன்ற தோழர்கள் அடுத்து என்ன செய்வது என குழப்பிக் கொண்டிருந்தோம்."

தொண்டை குழிக்குள் என்னத்தை வைத்து கொண்டு 
முக்கிறார் என்று புரியவில்லை. 

5 லீட்டர் பால் 
அரை லீட்டர் நஞ்சு 

இந்த ரெசிப்பி மிகவும் பழைய ரெசிப்பி 

 

ஆனால் பிரான்சில் நான் கடந்த பல சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்தியது 

 

அந்த ரீபப்லிக் ரீவி டெக் வாடகை

 

உணவகம் வைத்திருந்த பழம் ரோட்டை சேர்ந்த ராகவன். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் இலங்கையில்  மீள புகைய ஆரம்பித்திருக்கும் ஒர் தீ என்றும் சொல்லலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தொடரட்டும் இலங்கையில்  மீள புகைய ஆரம்பித்திருக்கும் ஒர் தீ என்றும் சொல்லலாம் 

உந்த பிரச்சனையை தீர்க்க உங்களிட்டை ஏதாவது ஐடியா இருக்கே? 😁

சாதி பார்த்தால் பச்சைமட்டையடி தண்டனை என்ற சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.
அது சரி இஞ்சை  எங்கடை சனம் ரோட்டு கூட்டினாலும் அவன் என்ன சாதி இவன் என்ன சாதி எண்டு விசாரிக்காமல் விடாதுகள்.😡

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியிலும் பொருளாதாரத்திலும் தங்கியிருக்கும் சாதியம்
ஒரு நாள் இல்லாமல் சென்றுவிடும்.
அதற்கு முதல்  யார்.. எங்கு..  யாரை... எதிர்கொண்டாலும் தோளில் இருக்கும் துணியைக் கீழே எடுக்கக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

உந்த பிரச்சனையை தீர்க்க உங்களிட்டை ஏதாவது ஐடியா இருக்கே? 😁

சாதி பார்த்தால் பச்சைமட்டையடி தண்டனை என்ற சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.
அது சரி இஞ்சை  எங்கடை சனம் ரோட்டு கூட்டினாலும் அவன் என்ன சாதி இவன் என்ன சாதி எண்டு விசாரிக்காமல் விடாதுகள்.😡

ஊரில எங்க என்றும் எந்தப்பக்கம் என்று கேட்பது ஆளின்ற சாதிய கண்டு பிடிக்கத்தான்  கிழக்கில் ஆளுக்கொரு குடும்பத்துக்கு ஒரு சாதிக்கோவிலை கட்ட கேணல் ரமணன் அண்ணன் அவர்கள் 30ற்கு மேற்பட்ட கோவில்களை அழித்தார் இதனால் தான் என்னமோ மட்டக்களப்பு , அம்பாறயில் சாதி பார்ப்பது குறைவாக இருந்தது ஆனால் கல்யாணம் காட்சி என்று வந்திட்டால் தூசு தட்டி தூர் வாருவார்கள் சாதிகளை .

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தொடரட்டும் இலங்கையில்  மீள புகைய ஆரம்பித்திருக்கும் ஒர் தீ என்றும் சொல்லலாம் 

சாதி பாக்கிறது நீறு பூத்த நெருப்பாக போராட்ட காலத்தில் இருந்தது, இப்ப பழைய மாதிரி வந்துவிட்டது.

கல்வி, பொருளாதார மேம்பாடு வர ஓரளவு குறையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

கல்வி, பொருளாதார மேம்பாடு வர ஓரளவு குறையலாம்.

இது மேம்படவே சாதி விடயம் அதிகரிக்கிறது என்று சொல்லலாம் ஏராளன்  ஒரு நிறுவனத்தில் கடை நிலை ஊழியர்களை, எப்படி தொழிலை வைத்து ஒதுக்குவார்கள் ஒதுக்கிரார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா எனக்கு தெரிந்த சம்பவம் ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியர் ஒருவர் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார் ஆனால் யாரும் கல்யாணத்திற்கு செல்லவில்லை ஆனால் அவர் சொன்னார் நான் நங்கள் சமைக்கவில்லை எல்லாம் சமையல்க்காரர்கள் என சொல்லியும் செல்லவில்லை மனிதம் எங்கிருக்கிறது  நான் எனது சக ஊழியர்களை கூட்டிச்சென்றேன்  ஆனால் எங்களுக்கு கடையில்  சோடா வாங்கி கொடுத்தார்கள் அவர்கள் டீ போட்டு தரவில்லை மனிதனில் ஏது பதர் என நினைப்பவன் நான் .

ஊரில் சலூனுக்கு மாதா மாதாம் முடி வெட்ட செல்வதால் அந்த சலூன் கடை பையன் எனக்கு நண்பனாக குடும்பத்தில் இருக்கும் சில கிழடு கட்டைகளுக்கு அது பிடிக்கவில்லை  கொரோனா காலம் எல்லாம் காட்டுவாசிகள் போலவே இருந்ததுகள் அதுகள் அப்போது கேட்டேன் இப்ப உங்களுக்கு நீங்கள் சிரைக்க வேண்டியதுதானே என ஆனால் எனக்கும் எல்லைகோட்டினை கீறி வைத்துள்ளது முன்னர் வாழ்ந்த இனம் கோட்டைதாண்டினால் என்னையும் ஒதுக்கிவிடுவார்களோ என்ற பீதியில் கோட்டின் அருகில் பயணிக்கிறேன் அழித்துக்கொண்டு ஆனால் அந்த கோடுகள் மட்டும் மாறப்போவதில்லை என்பது  திடமான உண்மை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது மேம்படவே சாதி விடயம் அதிகரிக்கிறது என்று சொல்லலாம் ஏராளன்  ஒரு நிறுவனத்தில் கடை நிலை ஊழியர்களை, எப்படி தொழிலை வைத்து ஒதுக்குவார்கள் ஒதுக்கிரார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா எனக்கு தெரிந்த சம்பவம் ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியர் ஒருவர் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார் ஆனால் யாரும் கல்யாணத்திற்கு செல்லவில்லை ஆனால் அவர் சொன்னார் நான் நங்கள் சமைக்கவில்லை எல்லாம் சமையல்க்காரர்கள் என சொல்லியும் செல்லவில்லை மனிதம் எங்கிருக்கிறது  நான் எனது சக ஊழியர்களை கூட்டிச்சென்றேன்  ஆனால் எங்களுக்கு கடையில்  சோடா வாங்கி கொடுத்தார்கள் அவர்கள் டீ போட்டு தரவில்லை மனிதனில் ஏது பதர் என நினைப்பவன் நான் .

ஊரில் சலூனுக்கு மாதா மாதாம் முடி வெட்ட செல்வதால் அந்த சலூன் கடை பையன் எனக்கு நண்பனாக குடும்பத்தில் இருக்கும் சில கிழடு கட்டைகளுக்கு அது பிடிக்கவில்லை  கொரோனா காலம் எல்லாம் காட்டுவாசிகள் போலவே இருந்ததுகள் அதுகள் அப்போது கேட்டேன் இப்ப உங்களுக்கு நீங்கள் சிரைக்க வேண்டியதுதானே என ஆனால் எனக்கும் எல்லைகோட்டினை கீறி வைத்துள்ளது முன்னர் வாழ்ந்த இனம் கோட்டைதாண்டினால் என்னையும் ஒதுக்கிவிடுவார்களோ என்ற பீதியில் கோட்டின் அருகில் பயணிக்கிறேன் அழித்துக்கொண்டு ஆனால் அந்த கோடுகள் மட்டும் மாறப்போவதில்லை என்பது  திடமான உண்மை. 

வீட்டுக்கு வீடு வாசற்படி.😎
எனக்கும் உதே பிரச்சனையள் நடந்தது. நான் கொஞ்சம் மீறிவிட்டேன். ஒரு சில குடும்ப உறவுகள் என்னை ஒதுக்கியே விட்டார்கள். அது இன்று வரைக்கும் தொடர்கின்றது.

சென்ற வருடம் எனது நெருங்கிய உறவுக்கு ரெலிபோன் எடுத்தேன். சரளமாக பேசினோம். இடையில் ஓரிடத்தில் சொன்னார் நீ இருக்கிறாய் ஜேர்மனியில் இருக்கிறாய் என்று நான் ஒருவருடனும் கதைப்பதில்லை.எல்லாம் முடிந்த கதை என்றார்.அவ்வளவிற்கு சாதி விரோதம் ஊன்றிவிட்டது.இவ்வளவிற்கும் எனது நண்பன் வீட்டு கொண்ட்டத்தில் முன்னுக்கு நின்று நடத்தி பந்தியில் இருந்து சரிசமமாக சாப்பிட்டது தான் நான் செய்த குற்றம். இது அப்போது ஊரிலும் சூடு பிடித்த கதை.😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது மேம்படவே சாதி விடயம் அதிகரிக்கிறது என்று சொல்லலாம் ஏராளன்  ஒரு நிறுவனத்தில் கடை நிலை ஊழியர்களை, எப்படி தொழிலை வைத்து ஒதுக்குவார்கள் ஒதுக்கிரார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா

சாதி ஒழிவதென்றால் எல்லா விதத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றப்பட வேண்டும்.

35  வருடங்களின் முன்னர் நாம் புலம்பெயர்ந்து ஐரோப்பிய மண்ணில் கால் வைத்தவுடன் எமக்கு எப்படியான தொழில் வாய்ப்புக்கள் அமைந்தன.
ஆனாலும் இதை நாம் ஊரில் செய்வதில்லை.
இங்கே பணத்திற்காகச் செய்கின்றோம்.
அவர்களும் அங்கே பணத்திற்காகவே செய்கின்றார்கள்
 கட்டமைப்புக்கள் புதிப்பிக்கப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முன்னர் வாழ்ந்த இனம் கோட்டைதாண்டினால் என்னையும் ஒதுக்கிவிடுவார்களோ என்ற பீதியில் கோட்டின் அருகில் பயணிக்கிறேன் அழித்துக்கொண்டு ஆனால் அந்த கோடுகள் மட்டும் மாறப்போவதில்லை என்பது  திடமான உண்மை. 

ஆங்கிலத்தில் carpenter  என்று சொன்னால் நல்ல சாதி.  

ஆனால் நம்மிடையே தச்சு வேலை செய்பவர்கள் தாழ்ந்த சாதி.
ஜெர்மனியில் Tischler  என்றால் அவர்கள் தான் மேலானவர்கள்.

எல்லாமே பணமும் அதைச் சம்பாதிக்கும் முறையும்தான்  காரணம்

ஒவ்வொரு ஊரிலும் 100  சலவை இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கி அதன் சேவையை ஊக்குவித்தால் ஒரு சாதி குறையும்
அப்படியே சிந்தித்தால் .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வாத்தியார் said:

சாதி ஒழிவதென்றால் எல்லா விதத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றப்பட வேண்டும்.

35  வருடங்களின் முன்னர் நாம் புலம்பெயர்ந்து ஐரோப்பிய மண்ணில் கால் வைத்தவுடன் எமக்கு எப்படியான தொழில் வாய்ப்புக்கள் அமைந்தன.
ஆனாலும் இதை நாம் ஊரில் செய்வதில்லை.
இங்கே பணத்திற்காகச் செய்கின்றோம்.
அவர்களும் அங்கே பணத்திற்காகவே செய்கின்றார்கள்
 கட்டமைப்புக்கள் புதிப்பிக்கப்படவேண்டும்

தொழில்/வியாபார ரீதியாக/ பொருளாதார ரீதியாக முன்னேறினாலும் தமிழினத்துக்குள் இருக்கும் அந்த சாதி எனும் ஓட்டையை இன்றைக்கோ நாளைக்கோ அடைக்க முடியாது.பல காலங்கள் செல்லும்.

இதை புலம்பெயர் நாடுகளுக்கு வந்தும் அழிக்க /மறக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 02:30, கிருபன் said:

சிலர் ஒருவரைப் பற்றி கிண்டிக் கிளறி விசாரிக்க விரும்புவது அவரது சாதியை அறிவது தனது சாதிப்பெருமையை தெரியப்படுத்தவே!

உண்மைதான்.என்னைவிட மற்றவன் தன் சொந்தமுயற்சியால் உயரும் போது யாரோ உருவாக்கி வைத்த சாதிச்சாயத்தைப்பூசி நான் உயர்ந்தவன் எனக்கூறிக் கொள்ளும் ஒரு கையாலாகாத்தனம் இது.உளவியல் நோயாளிகளில் இவர்களும் அடங்குவர்.

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் தீமைகளை விளைவிக்கும் முழு மூடர்களும், மனித தன்மையில் கடை நிலையில் உள்ளோரும், மாயைகளால் கவரப்பட்ட அறிவுடையோரும், ஆவி மண்டல அசுரர்களின் ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்தோரும் கடவுளை சரணடைவதில்லை 

தொடர்புகளுக்கு: niyani@yarl.com

இந்த கருத்து களத்தில் 
எந்த காரணமும் இன்றி கருத்துக்களை வெட்டுவதும் விடுவதும் என் இஸ்டம் 
என்ற அதிகார தோணி உடையவரின் மனநிலையே மேலே இருப்பதுதான் 

இல்லாத கடவுளை நம்புவன்தான் மனிதரில் உயர் நிலை உள்ளவன் என்ற 
மனநிலை எழுத்தில் இருக்கும்போது. மனிதருக்குள் சமநிலை எப்படி இருக்கும்?

சாதி ஆதிக்கம் வெறி என்பது எதோ ஒரு வடிவில் தமிழனிடம் இருந்துதான் தீரும் 
நீங்கள் எட்டி உதைக்க தயங்கினால் .. கதவுகள் பூட்டித்தான் இருக்கும். 
நீங்கள் எட்டி உதைக்க தொடங்கினால் எல்லாம் தானாகவே திறக்கும் 

கருத்து நீதி 
சமூக நீதி 
மனித நீதி எல்லாம் மேடைக்கும் பேருக்கும் வெள்ளையடிக்க மட்டுமே 
உள்ளுக்குள் எல்லாமே அதே குட்டை அதே மட்டை தான், 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம் – 4

புலம் பெயர்ந்த சாதியம் –  4

    — அ. தேவதாசன் —  

‘கனடாவில் ஒருவர் தனது மகளை விரும்பியதற்காக தனது சொந்த வாகனத்தால் ஒரு இளைஞனை மரத்தோடு மோதி கொலை செய்ய முயற்சித்தார்.’ – இது அன்றைய நாளில் பரபரப்பாக பேசப்பட்டது.   

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்காளியாக இருந்த ஒருவர் தனது மகளை விரும்பிய குற்றத்திற்காக அவளது காதலனை கொலை செய்து காட்டில் புதைத்தார். இதை தேசிய சக்திகள் மூடி மறைக்க முயற்சி செய்தனர். ஆனாலும்  பல வருடங்களின் பின்னர் ஜேர்மனிய புலனாய்வு பொலிசார் மேற்படி நபரை கொலைக் குற்றவாளியாக கண்டுபிடித்தனர். இப்படி பல சம்பவங்கள் ஐரோப்பா முழுவதும் மற்றும் வட அமெரிக்காவிலும் நடைபெற்றுவருகின்றன. வெளிவந்தவை சில, வெளிவராதவை பல…. 

தமிழீழத்தின் பெயரில் தமிழர்கள் மத்தியில் நடாத்தப்படும் நிகழ்வுகளில் ஒலிவாங்கிக்கும், பொன்னாடைகளுக்கும் மயங்கிய சில கலைஞர்கள் தமது சாதியை மறைப்பதற்கு படாத பாடுபடுவதை பார்த்திருக்கிறேன். இப்படியானவர்களில் ஒருவர் என்னோடு பேசும்போது “நான் சாதிய மறைச்சு கனகாலம் வாழ்ந்திட்டன் நான் ஆரிட்ட போய் மாப்பிள கேக்கிறது, நீங்கள் எங்கட ஆக்களெண்டு அறிஞ்சன் பிள்ளைக்கு முப்பது வயதாகுது எங்கட ஆக்களுக்க மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கோ ஐரோப்பாவில் எந்த நாடெண்டாலும் பரவாயில்லை. மகனுக்கு பிரச்சினை இல்லை அவன் ஒரு வெள்ளைய புடிச்சிட்டான்” என்றார். இப்படியாகச் சிலர் மனச்சிக்கலுக்குள்ளானதை பார்க்க முடியும்.


உயர் சாதியினர் எனச்சொல்லப்படுவோர் ஒரே நாட்டில், ஒரே ஊரில், ஒரே மொழியில், ஒரே இனத்தில் ஏற்படும் காதலை சாதி பார்த்து ஏற்க மறுப்பார்கள். அதேவேளை வேறு நிறம், வேறு இனம், வேறு நாடு என்றாலும் வெள்ளை நிறத்தவர்கள் எனில் காதலை ஏற்றுக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இதுவே சாதிய விசம் நம்மவர் மனங்களில் ஊடுருவிச் கிடக்கிறது என்பதற்கு சான்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாரிசில் ஒரு தமிழ் அமைப்பு குறும்பட போட்டி நடாத்தியது. அதில் வெற்றி பெற்ற குறும்படத்திற்கு ஆறுமுகநாவலர் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. நாவலருக்கும் குறும்படத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஒரு பாலுமகேந்திரா நினைவாக, சார்லி சாப்ளின் நினைவாக இன்னும் சினிமாவில் சாதனை படைத்த பலர் இருக்கிறார்கள் அவர்கள் நினைவாக சின்னம் வழங்குவது பொருத்தமானது. அவைகளைப் பற்றி யோசிக்காமல் நாவலர் நினைவாக வழங்குவதில் ஒரு உள்நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒரு குறும்பட சினிமாவை அளவிடுவதற்கே சாதித்தடிப்பின் பிதாமகர்களை தேடுவது நமது இனத்தின் சாபக்கேடு.

சாதிய படிநிலைக்குள் உட்பிரிவுகள் என்கிற ஒரு விடயம் உண்டு. அது மிக விசித்திரமானது. ஒரே சாதிக்குள்ளேயே பல பிரிவுகள் இருக்கும். பிராமணர் தொடக்கம் கடைசிப் படிநிலையில் உள்ள சாதிகள் வரை இப்பிரிவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். ஒரே ஊருக்குள்ளேயே திருமண உறுவுகளை தவிர்த்துக்கொள்வார்கள்.


வடமாராட்சியை பிறப்பிடமாகக் கொண்ட வெள்ளாளர் தீவுப் பகுதி வெள்ளாளரை குறைவாகவே மதிப்பிடுவர். எந்தத்தராசை வைத்து இவ்வளவு நுணுக்கமாக நிறுக்கிறார்களோ தெரியவில்லை. இது அனைத்து சாதிகளுக்கும் பொருந்தும்.  

பொதுவாக தீவார் என்றால் தீவைக்கடந்த பலரும் ஒரு ஏளனமாகப் பார்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். யாழ்நகரில் உள்ள எனது அம்மாவின் உறவுக்காரரே நான் சிறு வயதில் அங்கு போனால் “இந்தா தீவான் வாறான்” எனப் பகிடியாக அழைப்பர். அது ஒருவகையில் பகிடி மாதிரி தெரியும், அதற்குள் ஏளனமும் கலந்திருக்கும். அதோடு சாதியும் சேர்ந்தால் அது பெருங்கொடுமை.  

வல்வெட்டித்துறையிலும் கரையார் என்கிற சாதி உண்டு, யாழ்நகரிலும் கரையார் என்கிற சாதி உண்டு. வல்வெட்டித்துறை கரையார் மேலோங்கிக்கரையார் (பிரபாகரன், பேராசிரியர் சிவத்தம்பி இதற்குள் அடங்குவர்) யாழ்நகர கரையார் கீழோங்கி கரையார். இதில் மேலோங்கி கரையார் தாங்கள் வெள்ளாளர்களுக்கு அடுத்த படிநிலை என்பதாக பெருமை கொள்வர். 

ஒரு நண்பரோடு சாதிகள் பற்றி பேசுகையில் இலங்கையில் முக்குவர் சாதிதான் பெரிது எனவும் யாழ்ப்பாணத்தில் தங்களை குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் மட்டக்கிளப்பில் தாங்களே பெரிய சாதி எனவும் கூறி பெருமிதப்பட்டுக்கொண்டார்.

பிரான்சில் அண்மையில் ஒரு நிகழ்வு நடந்தது. இரண்டு இளசுகள் ஒருவரை ஒருவர் விரும்பினர் திருமண நேரம் வரும்போது பெற்றோரால் சாதிகள் அலசப்பட்டன. ஒருபகுதி கரையார் ஒருபகுதி நளவர். நளவர் பகுதி சொன்னார்கள் “எங்களைவிட குறைந்த சாதியாக இருந்திருந்தால் எங்கட பிள்ளைய கட்டி வைச்சிருக்க மாட்டோம்” என்றனர்.


பத்து வருடக்காதல் பெண்ணின் பெற்றோர்கள் இணையவிடாமல் இழுத்துக்கொண்டே வந்தனர். உற்றாரின் ஆலோசனைக்கு ஏற்ப இந்தியா சென்று மாந்திரிகம் மூலம் காதலை மறக்க வைக்க முயற்சிகள் செய்தனர். அவளோ அவனை மறப்பதாக இல்லை. பிள்ளை படித்து ஒரு வேலையும் பெற்றுக்கொண்டு சிறிதளவு பணமும் சேமித்துக்கொண்டாள். இனியும் பெற்றோர் இணைத்து வைப்பார்கள் என்கிற நம்பிக்கையை இழந்து, தனது முடிவை தானே எடுக்கும் நிலைக்கு வந்தாள். எட்டு வருடங்கள் முன்பு அத்தாயார் மகளின் காதலனின் சாதியை மறைத்துக்கொண்டு என்னிடம் பேசினார். அவன் பொறுப்பற்றவன் மிகவும் குழப்படி, தாங்கள் ஓரளவு வசதியாக இருப்பதனால் அவன் தனது மகளை மயக்கிவிட்டான் நாளைக்கு இவன் கைவிட்டால் இவள் நிலை என்ன என்றெல்லாம் தொடர்ந்தார். இருபது வயதில் அந்தப் பையனின் பொறுப்பை அளவிட முடியுமா? படிப்பு முடித்து சுயமாக வாழும் சூழல் வரும் போது அவர்கள் காதல் தொடருமெனில் இணைத்து வைத்து விடுங்கள் என்றேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை அவர்களை பிரிக்கும் உத்திகள் என்னிடம் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்திருப்பார். அது என்னிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதனால் அப்பிரச்சனை பற்றி என்னோடு பேசவதை நிறுத்திக்கொண்டார். 

காதலர்கள் இருவரும் படிப்பை முடித்துக்கொண்டு சுயமாக வாழும் நிலையை ஏற்படுத்திக்கொண்டு இருவரும் இணைந்தனர். இந்திய மாந்திரிகம் ராசி பலன் என அனைத்தும் தோற்றுப்போனது. காதல் வென்றது. பெண் பிள்ளையின் தாயாரின் நண்பி என்னைக் கண்டபோது “அவள் ஏதோ தாங்கள் நாவலர் பரம்பரை எண்டு தடிப்பு பேசினாள் உங்களுக்கு தெரியுமே அவளின்ற மகள் இப்ப ஆரைக் கட்டியிருக்கிறாளெண்டு” என்று சொன்னார். நண்பிக்கு இச்சம்பவம் அற்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.

தொடரும்….

https://arangamnews.com/?p=4758

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 17:05, Maruthankerny said:

தொண்டை குழிக்குள் என்னத்தை வைத்து கொண்டு 
முக்கிறார் என்று புரியவில்லை. 

இல்லாதபொல்லாத தகவல்களை வைத்து நெருப்பு பத்த நிக்கிறார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

சிவத்தம்பியரின் இடம் தெரியாமல் சகட்டுமேனிக்கு எல்லாப்பக்கமும் கல் எறிகிறார் .கிருபர் தெரிந்துதான் இணைகிறாரோ  அல்லது இணைத்தபின் நம்மை போல் ஆறுதலா இருந்து படிக்கிறாரோ தெரியலை !!!!! பல சந்தேக மரணம்களையும் சாதிய  கொலையில் சேர்கிறார் உறுதியான தகவல்கள் அற்று எழுதப்பட்ட கட்டுரை.பாவம் இறந்தவர்கள் எந்த பூமரத்துக்கு பசளையாக  எந்த சைக்கோவால் போட்டு தள்ளப்பட்டார்களோ தெரியலை இவர் போலீசை முந்திக்கொண்டு சாதிய  கொலையில் சேர்த்து விடுகிறார் .

சாத்திரம் .பொய்கலந்தக்கதைகள் .பிக் பொஸ்  வரிசையில் இந்த சாதி கட்டுரைகளையும் சேர்த்து விடுவது உத்தமம் இன்னும் 20 வருடங்களில் தமிழ் வெளிநாடுகளில் இருக்குமா ? அல்லது அடுத்த மொரிஸியல் தமிழ் போல் படுத்திடுமா என்று இருக்க இதுக்குள் சாதி பீதி என்று .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

கிருபர் தெரிந்துதான் இணைகிறாரோ  அல்லது இணைத்தபின் நம்மை போல் ஆறுதலா இருந்து படிக்கிறாரோ தெரியலை

வாசிக்காமல் இணைப்பதில்லை.😎 

ஜேர்மனியில் நடந்த விடயம் யாழில் அலசப்பட்டதாக நினைவில் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வாசிக்காமல் இணைப்பதில்லை.😎 

ஜேர்மனியில் நடந்த விடயம் யாழில் அலசப்பட்டதாக நினைவில் உள்ளது. 

ஓம் ஆனாலும் ஊகத்தின் அடிப்படையில்தான் கதைத்தவர்கள் அதை  தவிர மற்றவைகளை போகிற போக்கில் சாத்தி விடுகிறார் .

 

3 hours ago, கிருபன் said:

வாசிக்காமல் இணைப்பதில்லை.

சிவத்தம்பி வல்வை இல்லையே கரவெட்டி தானே ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சிவத்தம்பி வல்வை இல்லையே கரவெட்டி தானே ? 

ஓம். கரவெட்டியில் பிறந்து வல்வெட்டித்துறையில் மணம்முடித்து வாழ்ந்து கொழும்பில் காலமானார். அதனால் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்று நினைத்திருக்கலாம்!

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம் – 5

புலம் பெயர்ந்த சாதியம் – 5

      ­ — அ. தேவதாசன் — 

இலங்கை யுத்தம் பல இலட்சம் தமிழர்களை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்து வாழ வழி செய்தது. இதற்கான வாய்ப்பு சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கும் கிடைத்தது. பொதுவாக புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு வருவதென்பது எல்லோராலும் முடியாது. பொருளாதார பலம் உள்ளவர்கள் மட்டுமே வரமுடியும்.

வடபகுதி மக்களில் பெரும்பகுதியானவர் நடத்தர வர்க்க மக்களாக இருப்பதனால் காணி, நிலம், நகை, சீட்டு என சேமிப்பு இருந்தது. இவர்களால் மட்டுமே மேற்கத்தைய நாடுகளுக்கு பயணிப்பது பற்றி யோசிக்க முடியும். நானும் எனது பெற்றோர்கள் குடியிருந்த வீட்டை ஈடு (அடகு) வைத்தே பிரான்ஸ் பயணித்தேன். என்னைப் போன்றே ஓரளவுக்கு வளமுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் மேற்குலக நாடுகளை நோக்கி வந்து சேர்ந்தனர். உயர்ந்த சாதியினர் எனச்சொல்லப்படுவோர் வெளியேறியதால் ஒரு நன்மை உண்டு, அது யுத்த ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது. ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் வெளியேறியதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று யுத்த ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது, இரண்டாவது சாதிய தீண்டாமையிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவது.

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகம் இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்ட நிலையில் கல்வி நிலையில் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். எம் தேசத்தில் பொருளாதார நெருக்கடியும், பெற்றோரின் ஊக்கமின்மையும், பாடசாலைகளின் பாரபட்சமான செயற்பாடும் “ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினர்” கல்வி கற்பதும், அதில் முன்னேறுவதும் வெகு தூரமாகவே இருந்தது. பல சவால்களை எதிர்கொண்டு கல்வித்தகுதியில் முன்னேறினாலும் சாதித்தகுதி கீழ்நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கும். ஆனால் நாம் இடம்பெயர்ந்த மேற்குலக நாடுகளில் மருத்துவம், பொறியியலாளர், சட்ட வல்லுநர்கள் இவ்வாறு பலதரப்புகளிலும் வளர்ச்சி பெற்று வரும் வாய்ப்பு பிந்தங்கிய சமூகங்களுக்கும் கிடைத்திருக்கிறது.

அதற்கும் மேலாக அவர்கள் வாழுகின்ற நாடுகளில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் அரசியலில் பங்கு கொண்டு பிராந்திய அளவிலும் மாவட்ட அளவிலும் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு அரச அதிகாரத்திலும் பங்காளர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.   

பிரான்சில் நான் வசிக்கும் பிராந்தியமான கார்ஜு பகுதி உதவி மேயராக ஒரு இளம் பெண்ணும் நோர்வே தலைநகரான ஒஸ்லோவில் உதவி மேயராக ஒரு இளம் பெண்ணுமாக இச் சமூகத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் பதவி வகித்து வருகின்றனர். இலங்கையில் அதிலும் வட மாகாணத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க இதுவரை எந்த சாத்தியங்களும் இல்லை. தமது திறமைக்கும் முயற்சிக்கும் தடைபோட இது தமிழ் தேசமும் இல்லை. தமிழர் நிர்வாகமும் இல்லை.  

ஒஸ்லோவில் உதவி முதல்வராக பதவியில் இருந்த பெண் யாழ்ப்பாணம் சென்றபோது தனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொண்டார். சாதி வெறி பிடித்தவர்கள் எளிய சாதிகள் எங்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை எனக்கூறி அவமானப்படுத்தப்பட்டார். தனது தேசத்திற்கு நல்லது செய்யலாம் எனும் ஆர்வத்துடன் சென்றவர் அவமானத்தோடு நோர்வே திரும்பினார். இத்தனைக்கும் அந்தப் பெண் தமிழ்த்தேசிய பாலை உண்டு வளர்ந்தவர். இருப்பினும் அறிவுரை சொல்வதற்கான தகுதி ஆதிக்க சாதிக்கு மட்டுமே உரித்தானது என்பது எழுதப்படாத விதியாகவே  உள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எனச்சொல்லப்படுவோர் கல்வியில் வளர்ந்த அளவு இன்றுவரை பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறவில்லை. அதற்கான காரணம் பணத்தை சேமிக்க தெரியாமை. சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அது அறவே தெரியாது. பணத்தை சேமித்து பணத்தை வைத்து பணம் உழைக்கும் வித்தை தெரியவில்லை. அன்றாடம் உழைத்து அன்றாடம் சாப்பிட்டு வளர்ந்த சமூகம். பணத்தின் ஆளுமை பெரிதாக புரியாத சமூகம்.

உயர்ந்த சாதி எனச்சொல்லப்படுவோர் அப்படியல்ல. வியாபாரத்தில் பணம், பொருள் சேர்ப்பதில் மிகப் பெரிய அனுபவம் பெற்றவர்கள். வெள்ளைக்காரன் ஆட்சி காலத்திலேயே இலங்கையின் மூலை முடக்குகளிலும் சிறு கடைகள், வியாபார நிறுவனங்கள் என நடாத்தி வந்தவர்கள். அந்தத் தொழில்நுட்பம் பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு அது சார்ந்த தந்திர மந்திரங்களை அறிந்து கொண்டவர்கள். 1982 காலப்பகுதி வரை இலங்கை முழுவதும் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். இது இலங்கை ஆட்சியாளர்களுக்கு உறுத்தலாக இருந்தாலும் ஜெயவர்தனா ஆட்சிக்காலத்தில்தான் தென்னிலங்கையில் இவர்ககளின் போருளாதார முகாம்களை அழிக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. அதன் காரணமாக அதிகமான வியாபாரிகள் மேற்குலக நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்தனர். இந்த நாடுகளின் பொருளாதார முறைமை அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமான நிலையை ஏற்படுத்தியது. இன்று சர்வதேச வியாபாரிகள் வரிசையில் வளர்ந்துள்ளார்கள் என்பது மிகையல்ல. இந்த வியாபார வளர்ச்சி இலங்கை தமிழர் விடுதலைப் போராட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தியது.

ஒரு சில மனிதர்களின் (குழுக்களின்) வன்முறைச் சம்பவங்களுக்கும் அதற்கான தூண்டுதலாக இருப்பவற்றுக்கும் குறிப்பிட்ட ஒன்றே புறக்காரணியாக இருந்துவிட முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அந்த வகையில் சாதிய ரீதியாக ஒடுக்கப்படும் ஒரு சமூகம் தான் எதிர் கொள்ளும் சமூக அவமானங்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது வன்முறை வழியாகவே எதிர் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஆயுத விடுதலைப் போராட்டத்தையும் அப்படி ஒரு சந்தர்ப்பமாகவே சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு அமைந்ததாகவே என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது.

இதனை தர்க்க ரீதியாக நாம் நியாயம் செய்ய முடியாது. இதை சமூக உளவியல் பார்வையூனூடாகவே அணுகி அறிய முடியும். அந்த வகையில் புலம்பெயர்ந்த நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்கு கிளைகள் உருவானது போல் இளைஞர் குழுக்களும் பல உருவாகின. குறிப்பாக பிரான்சில் முக்காலா, வெண்ணிலா, பாம்பு இப்படி பல குழுக்கள் உருவாயின. இதில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வந்த இளைஞர்கள் கணிசமாக இணைந்து கொண்டனர். சீட்டு, வட்டி, காதல் போன்ற விடயங்களில் தலையிட்டு அவைகளை அதிகளவு வன்முறை மூலமே தீர்த்துவைப்பவர்களாகவே இவர்கள் இருந்திருக்கிறார்கள். இதனால் அடி, தடி சம்பவங்களையும் தாண்டி பல குத்து, வெட்டு, கொலைகள் வரை சென்றிருக்கின்றன.  

பிரச்சினைகள் தீர்ந்திருக்கிக்கிறதோ இல்லையோ பல குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் பகைமையை வளர்ந்திருக்கிறனர். இவர்களது உளவியலை புரிந்து கொண்ட சிலர் தமது அரசியல் தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருவதென்பது லேசுப்பட்ட காரியமல்ல. அவர்களில் பலர் முக்காலா, வெண்ணிலா போன்ற குழுக்களில் இணைந்ததை எண்ணி கவலைப்பட்டேன். தொடர்ச்சியான பிரெஞ்சு அரசின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளால் அவ்வாறு செயற்படும் காரியங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. முன்பு இவ்வாறு செயற்பட்ட பெரும்பாலானவர்கள் இன்று குடும்பமாகி அமைதியாக வாழ்ந்து வருவதுடன் முன்னேற்றகரமான தொழில்களை நோக்கி நகர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.


( தொடரும்……)

 

https://arangamnews.com/?p=4886

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம் – 6

புலம் பெயர்ந்த சாதியம் – 6

 — அ. தேவதாசன் — 

மாடு ஓடவிட்டு கயிறு எறியவேணும் என்று சொல்லுவார்கள். புலம் பெயர் தேசங்களில் அந்த வித்தையை சாதிய பாதுகாவலர்கள் மிகவும் நிதானமாக கடைப்பிடிக்கிறார்கள். தங்களைவிட குறைந்த சாதியினர் எனக்கருதுவோரை தமது பிள்ளைகள் காதல் கொண்டுவிட்டால் அவர்கள் யாரைக் காதலிக்கிறார்கள் என்பதை தேடித்துளாவிக் கண்டுபிடித்து விடுகிறார்கள். தமது பிள்ளைகளோடு கதையோடு கதையாக “அவையளோட நாங்கள் ஊரில் பழகிறதில்லை, வீட்டுக்குள்ள விடுகிறதில்லை” இப்படியாக பல சுயபெருமைக் கதைகளை ஆலோசனை அல்லது அறிவுரை என்கிற பெயரில் பிள்ளைகளிடம் கூறி மனதை மாற்ற முயற்சிப்பார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு இது புரியாது. ஒரே மொழி, ஒரே நிறம், ஒரே தொழில், ஒரே நாடு இதிலென்ன வேறுபாடு என யோசிப்பார்கள். இது ஒருபுறம்!

மறுபுறம் சிங்களவன்தான் நமது எதிரி நாம் எல்லோரும் தமிழர்கள் ஒன்றுபட்டு போராடி நாடு பிடிக்க வேண்டும் என்கிற கருத்துக்களும் பிள்ளைகள் மத்தியில் புகுத்தப்படுகிறது. ஒருபுறம் தமிழர் ஒற்றுமை, மறுபுறம் சாதிவேற்றுமை. பொது இடத்தில் பேசுவது ஒன்று வீட்டுக்குள் பேசுவது வேறொன்று.

தமிழர்களுக்கான ஒரு நாடு வேண்டும் என்பதில் தொண்ணூறுவீதமான தமிழர்களுக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை. அதற்காக தமிழ்த்தேசியத்தை கையில் எடுப்பதும் முரண்பாடு இல்லை. அதேவேளை சாதிய ஒடுக்குமுறை, பிரதேச வாதம், மதவாதம், பெண்ணிய ஒடுக்குமுறை, வர்க்கமுரண்பாடு என்பனவற்றின் தெளிவும், அதை அகற்றவேண்டும் என்கிற உறுதியும், அதற்கான வேலைத்திட்டங்களும் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் தலைமைகளிடம் அறவே இல்லை. மாறாக இவைகள் அனைத்தையும் அழியவிடாது தற்காத்துக்கொண்டே விடுதலையை வென்றெடுப்போம் என்கிற குறுகிய சிந்தனைப் போக்கும், இந்த முரண்பாடான வாழ்க்கை முறையும் இங்கு பிறந்த தலைமுறையினருக்கு விடுதலை பற்றிய பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோரது தர்க்கீகம் அற்ற ஆலோசனையை அல்லது அறிவுரையை கவனத்தில் கொள்வதில்லை. இதற்காக பெற்றோர்களும் துவண்டு விடுவதில்லை.

தொடர்ந்து குறைந்தது மூன்று வருடங்கள் காதல் தொடரும்போது காதலர்கள் மத்தியில் சிறிது சிறிதாக உரசல்கள், கோபங்கள், முரண்பாடுகள், சில நாள் பிரிவுகள் வந்து போவது இயல்பு. இந்த இடைவெளிகளை பெற்றோர்கள் மிகக்கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள். சில தினங்கள் பிள்ளைகள் சோர்வுற்று இருக்கும் நேரங்களில் “நாங்கள் முந்தியே சொன்னனாங்கள் நீதான் கேக்கயில்லை, நீ இப்படி இருக்கிறது எங்கட மனதுக்கு எவ்வளவு கஸ்டமாயிருக்கு” இப்படியாக அன்பு மழை கொட்டி இறுதியாக ஒன்று சொல்வார்கள், “சாதிப்புத்தியக் காட்டிப்போட்டான் அல்லது போட்டாள்”. இவ்வாறு தொடர்ந்து சொல்லிச் சொல்லி சிறிய இடைவெளியை பெரும் வெளியாக மாற்றி விடுவார்கள். கல்லும் கரையத்தான் செய்யும், அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்… இப்படியாக பல காதல்கள் பிரிந்து போன வரலாறுகளும் உண்டு.  

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதியை உடைத்து இணைந்த காதலர்களின் சாதிமறுப்புத் திருமணங்களை ஆதிக்க சாதியினர் அவசரமாக கொலைகள் செய்து பழி தீர்த்து விடுவதுண்டு. அதை ஆணவக்கொலை என்பர். அப்படி யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினர் அவசரப்படுவதில்லை. மிகவும் பொறுமையாக இலக்கை நோக்கி விழிப்புடன் இருப்பார்கள். மாடு ஓட கயிறு எறிந்து வீழ்த்திவிடுவார்கள். அதாவது சந்தர்ப்பம் பார்த்து பிரித்து விடுவார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆனாலும் சரி யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆனாலும் சரி நோக்கம் ஒன்றுதான் சாதியை காப்பாற்றுவது.
செயயற்பாடுகள்தான் வேறுபாடானவை..

சாதிய ஆதிக்கம் என்பது ஒவ்வொரு விடயத்திலும் மிக நுணக்கமாக புலம் பெயர் தேசங்களில் செயற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு ஊர்ச்சங்கங்கள் இருப்பது போன்று தமிழர்களுக்கு என பொதுவான சங்கங்களும் உண்டு. தமிழர் நட்புறவுச்சங்கங்கள், அபிவிருத்திச் சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், கோயில் பரிபாலன சபைகள் போன்ற பல அமைப்புகள் இயக்குகின்றன. இவைகளில் அதிகமானவை தமிழ்த்தேசிய பற்றாளர்கள் என்போரால் வழி நடாத்தப்படுகின்றன. இவ்வமைப்புக்கள் அறிவியல் பலத்தில் செயற்படுவதில்லை, மாறாக பொருளாதார பலத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே செயற்படுகின்றன. இப்பொருளாதார பலம் ஆதிக்க சாதியினர் எனப்படுவோர் கைவசமே இருப்பதனால் இவ்வமைப்புகளை ஆதிக்க சாதிகள் கையகப்படுத்த இலகுவான வாய்ப்பாக அமைகிறது.  

இவ்வமைப்புக்களை மேலோட்டமாக பார்க்கிற போது தமிழர்களின் விடுதலைக்கும் மேம்பாட்டுக்கும் சமத்துவமாக செயற்படுத்துவது போன்ற தோற்றப்பாடு தெரியும். இவைகளுக்கு உள்ளே சென்று பார்த்தால் சாதிய ஆதிக்கம் மிக நுணுக்கமாக செயற்படுவதை கண்டுகொள்ளலாம். இவ்வமைப்புகளுக்கு வெளித்தோற்றத்தில் ஒரு நிர்வாகம் இருந்தாலும் அதற்குள் ஒரு நிழல் நிர்வாகம் இருந்துகொண்டே இருக்கும். அந்த நிழல் நிர்வாகிகள் அந்த அமைப்புகளின் உறுப்பினராக கூட இருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களே நிர்வாகம் எப்படி இயங்கவேண்டும் நிர்வாகத்தில் யார் யார் இடம்பெறவேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். வெளிப்படைத்தன்மையற்ற இவ் இயங்கியல் முறை சரியான ஜனநாயக வடிவத்தை தேட முடியாமலும், சமூக மாற்றத்திற்கான விதைகளை ஊன்ற முடியாமலும், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியாமலும் பழமைவாத சிந்தனைகளுக்குள் முடங்கிக் கிடக்கிறது.  

இதனால், புலம்பெயர் தேசங்களில் பிறந்த இளஞ்சந்ததியினர் “பழமைவாத சக்திக”ளோடு தங்களை இணைத்துக்கொள்ள முடியாது தூர விலகி தமக்கான வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இச்செயற்பாடுகள் புலம் பெயர்ந்து வாழும் ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வுடன் கூடிய சமூக நல்லுறவை இழக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறது.

புலம் பெயர் தேசங்களில் உருவாக்கப்பட்ட சகல அமைப்புகளின் முதன்மை நோக்கம் என்பது கலாச்சாரத்தை காப்பாற்றுவது. இதற்காக சகல அமைப்புகளும் கலாச்சார நிகழ்வுகள் நடாத்த வேண்டியது கட்டாயம். கலாச்சார நிழ்ச்சிகளில் முதலாவது நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றுதல் நடக்கும். ஆளுயர குத்துவிளக்கு வைத்து, அந்தந்த அமைப்புகளுக்கு நிதி வழங்கும் ஊர்ப்பணக்காரர் சிலரும் ஊரில் ஆசிரியராக இருந்து இடையில் விட்டிட்டு வந்தவர்கள் அல்லது பென்சனுக்கு பிறகு வந்தவர்கள் ஆகியோரை அழைத்து விளக்கு ஏற்றப்பட்ட பின்னர் இறைவணக்கம் செய்யப்படும். இவ் இறைவணக்கம் பரதநாட்டிய நடனம் மூலம் கடவுளுக்கு காணிக்கையாக்கப்படும். இதனைத்தொடர்ந்து  நடனம், நாடகம், இசை இப்படி பல நிகழ்வுகள் இடம்பெறும் கலாச்சார நிகழ்வுகளின் பிரதான நிகழ்வாக பரத நாட்டியம் மட்டும் நிகழ்ச்சி நேரங்களில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஏனேனில், மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னர், “பரதம் தமிழர்களின் கலை” என்று பலராலும் கண்டுபிடிக்கப்பட்டு அது கற்றுக்கொள்ளபடுகிறது.

மேற்குலக நாடுகளின் பணபலம் நம்மவர் மத்தியிலும் பரவலாக புழக்கத்தில் உள்ளதால் பணம் படைத்தவர்களுக்கான கடவுளைப் புகழும் பரதநாட்டியம் தமிழரின் அதி உச்ச கலையாக மாறிப்போனது வேடிக்கை. மேற்குறிப்பிட்ட சங்க நிகழ்வுகளுக்கு பெண்கள் சீலை அணிந்து வருவதும் ஆண்கள் கோட்சூட் அணிந்து வருவதும் கலாச்சாரத்தை காப்பாற்றும் நோக்கம் என்றே கருதுகிறார்கள்.

நிகழ்வு மேடைகளிலும் கலாச்சாரம் காப்பாற்ற வேண்டும் என்கிற உபதேசங்கள் உரத்த குரலில் அறிஞர் பெருமக்களால் பேசப்படும். நானும் பலரிடம் தமிழ்க்கலாச்சாரம் பற்றிய அறிதலுக்காக அதற்கான கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். கலாச்சாரம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அறிஞர் பெருமக்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை அவர்களின் பதிலாக இருப்பது “பெண்கள் சேலை அணிவது, பொட்டு வைப்பது, தாலி கட்டுவது, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வது” ஆகியவைதான் என முடித்து விடுவார்கள். இந்தியாவில் தமிழர்கள் அல்லாதவரும் சேலை, போட்டு, தாலி, ஒருத்தனுக்கு ஒருத்தி வாழ்க்கை முறைப்படி வாழ்கிறார்கள். இதுதான் தமிழ் கலாச்சாரமா? தமிழர்களுக்கென தனித்துவமாக வேறேதும் இல்லையா? என திருப்பிக் கேட்டால் சிரிப்பு மட்டுமே பதிலாக வரும். நமக்கு தெரிவதெல்லாம் கலாச்சாரம் என்கிற ஒற்றைச் சொல் மட்டுமே! இந்த ஒற்றைச் சொல்லக்குப் பின்னால் சாதியமும் பெண்ணொடுக்கு முறையும் நிரம்பிக்கிடக்கிறது.            

தொடரும்……

 

https://arangamnews.com/?p=4998

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.