Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாமலே சாதித்த விஜய் மக்கள் இயக்கம்.. நாம் தமிழரை விட அதிக இடங்களில் முன்னிலை- எப்படி சாத்தியமானது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமலே சாதித்த விஜய் மக்கள் இயக்கம்.. நாம் தமிழரை விட அதிக இடங்களில் முன்னிலை- எப்படி சாத்தியமானது?

 

Updated: Wed, Oct 13, 2021, 12:27 [IST]

விஜய் மக்கள் இயக்கம் 

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடியை வைத்தும், விஜயின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்ய விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. மொத்தம் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

வெற்றி 

அதாவது மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டனர். இதில் மாவட்ட கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி எதிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றிபெறவில்லை. மற்றபடி பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

Advertisement

எத்தனை 

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் புதிய சாதனை படைத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

Advertisement

Advertisement

தேர்தல் வெற்றி 

ஏனென்றால் இவர்கள் பெரிய கட்சி பின்னணியை கொண்டவர்கள் கிடையாது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். உள்ளூர் அளவில் பிரபலமான நபர்களாக இருப்பதால்தான் இவர்களுக்கு தேர்தலில் வெற்றி கிடைத்து இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு இது ஒரு வகையில் நல்ல சிக்னலாக பார்க்கப்படுகிறது. எப்படி தேமுதிகவை தொடங்கிய காலத்தில் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் ஆழம் பார்த்தாரோ அதேபோல்தான் தற்போது விஜய் ஆழம் பார்த்து அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

நாம் தமிழர் 

அதிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77 பதவிகளை பெற்றதன் மூலம் நாம் தமிழர் கட்சியை விட அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் வென்று உள்ளனர். நாம் தமிழர் கட்சி எந்த விதமான மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவியிலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டிலும் நாம் தமிழர் எந்த இடத்திலும் வெல்லவில்லை. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழரை விட இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வருகின்றன. முழு முடிவுகள் வெளியாகும் போதும் நிலைமை மாறலாம். பெரிய அளவில் பிரச்சாரம், பேட்டி எதுவுமே இல்லாமல் சத்தமே இன்றி விஜய் மக்கள் இயக்கம் இந்த சாதனையை செய்துள்ளது.

வார்த்தை போர் 

இது இணையத்தில் தற்போது நாம் தமிழர் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் வார்த்தை போரை உண்டாக்கி உள்ளது. நாம் தமிழரை விட நாங்கள் அதிக இடங்களில் வென்றுவிட்டோம் என்று விஜய் மக்கள் இயக்கத்தினரும், விஜய் ரசிகர்களும் இணையத்தில் ட்வீட் செய்து கொண்டாடி வருகிறார்கள். இதற்கு நாம் தமிழர் தரப்போ, நடிகர்களை பார்த்துதான் இப்போதும் தமிழர்கள் வாக்களிக்கிறார். களத்தில் நிற்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

எப்படி சாத்தியமானது 

தனிப்பட்ட வகையில் பாமகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் பெரிய கட்சியாக இந்த தேர்தலில் பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இந்த தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ளனர். இதற்கு நிர்வாகிகளின் தனிப்பட்ட பிரபலம் காரணமாகவும், வீடு வீடாக பிரச்சாரம் காரணமாகவும் விஜய் மக்கள் இயக்கம் இந்த வெற்றியை பெற்று இருக்கலாம். அதோடு இதில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் ஏற்கனவே ஊரக அளவில் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பதும் அந்த இயக்கத்திற்கு தேர்தலில் சாதகமாக இருந்தது.

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/tn-local-body-election-result-how-vijay-makkal-iyakkam-performed-well-in-this-time-435659.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி ஒட்டியவரின் கருத்து

நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக வை 2ம் பெரிய கட்சியாக ஏற்கவும் மக்கள் தயாரில்லை என்பதும் தெளிவாகிறது.

ரஜனிகாந்த் அன்று சொன்ன வெற்றிடம் இப்போதுதான் உருவாகியுள்ளது. 

இதை நிரப்ப போவது சசிகலா தலைமையில் புத்துயிர் பெறும் (பெற்றால்) அதிமுகவா? அல்லது விஜையா?

தான் களத்தில் இறங்காமல் பெயரை, படத்தை மட்டும் வைத்து இந்த வெற்றியை விஜை ஈட்டி இருப்பது சாதனைதான். 

துணிந்து முழு நேரமாக இறங்குவாரா?

எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்பது உண்மைதான். அதே போல் எல்லாரும் ரஜனி ஆகவும் வேண்டும் என்பதும் இல்லை.

தகுந்த நேரத்தில் சரியாக களம் கண்டால் வெற்றி சாத்தியப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சீமானின் நாம் தமிழர் கட்சி படுதோல்வி ஏன்?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இடங்களில் ஓர் இடத்தைக்கூட நாம் தமிழர் கட்சி பெறவில்லை. ''ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரேநாளில் ஒரு செடியில் பூ பூப்பதும் இல்லை, காய்ப்பதும் இல்லை'' என்கிறார் சீமான். நாம் தமிழர் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

கடந்த செவ்வாய் கிழமையன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 986 இடங்களுக்கு மேல் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 137 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் தி.மு.க வெற்றி பெற்றுள்ளன அல்லது முன்னிலை வகிக்கின்றன. அதேநேரம், 199 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலை வகிக்கின்றது.

ம.தி.மு.க, வி.சி.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் படுதோல்வியை சந்தித்துள்ளன. குறிப்பாக, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி மன்ற பதவிகளில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை. `இப்படியொரு தோல்வியை அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை' எனவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்காக ஓட்டு விழுந்ததா?

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய சீமான், ` மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் நான் ஒருவன்தான் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்து வருகிறேன். மற்ற கட்சியினர் எல்லாம் வாக்காளர்களுக்கு பணம், பட்டுப்புடவை, நகை எனக் கொடுத்து வாக்குகளைப் பறிப்பதற்கு வரிசை கட்டி நிற்கிறார்கள்' என விமர்சனம் செய்தார். சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்றதால் இந்தமுறை அதிகப்படியான உள்ளாட்சிப் பதவிகள் கிடைக்கலாம் எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பேசி வந்தனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளன.

விஜய்

பட மூலாதாரம்,TWITTER@ACTORVIJAY

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள், `விஜய் மக்கள் இயக்கம் அதிக இடங்களில் வென்றுள்ளதே?' எனக் கேட்டபோது, ``விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால் அவர்களுக்கு வாழ்த்துகள். உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் வெற்றிக்கு அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களின் செல்வாக்குதான் காரணம். எனவே, விஜய்க்காக மக்கள் வாக்கு செலுத்தினார்கள் என நான் நினைக்கவில்லை" என்றார்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தோல்வி குறித்துப் பேசிய சீமான், ``நாங்கள் பல இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். இதனை படுதோல்வி என எப்படிக் கருத முடியும்? ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரே நாளில் ஒரு செடி பூப்பதும் காய்ப்பதும் கிடையாது. இதனை தோல்வி என களத்தில் நிற்கும் நாங்களே நினைக்கவில்லை. கோடிகளைக் கொட்டாமல் கொள்கைகளைப் பேசி இந்தக் கட்சிகள் களத்தில் நிற்குமா? தி.மு.க தனித்துப் போட்டியிடுமா? இன்றைக்கு மக்கள் எங்களுக்கு ஆதரவு தராவிட்டால், நாளை தருவார்கள். நாளை மறுநாள் தருவார்கள். 5 வருடங்கள் கழித்து இதே கேள்வியை என்னிடம் கேளுங்கள்" என்றார்.

பிரசாரம் செய்யவே ஏகப்பட்ட தடைகள்

``உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, `கட்டாயம் வெற்றி பெற வேண்டும்' என்ற சூழல் அவர்களுக்கு இருக்கிறது. நாங்கள் 21 ஊராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளோம். ராணிப்பேட்டையில் ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பெற்றுள்ளோம். களத்தில் இன்னமும் நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்பது தெரிகிறது. இந்தத் தேர்தலை நாங்கள் மனதில் வைக்கவும் இல்லை, இலக்காக வைத்து செயல்படவும் இல்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், `` இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியின் நடவடிக்கைகளும் பணமும் பிரதான பங்கு வகித்தன. மக்களிடம் நாங்கள் வாக்குக் கேட்டுச் செல்வதிலேயே பிரச்னைகள் இருந்தன. சட்டமன்றத் தேர்தலின்போது, `இந்த இடத்தில் பிரசாரம் செய்கிறோம்' எனக் கூறினால் அனுமதி கிடைக்கும். நாங்களும் எளிதாக பிரசாரம் செய்தோம். இந்தமுறை அவ்வாறு பிரசாரம் செய்வதிலேயே தடைகள் இருந்தன.

நாங்கள் பத்து பேருடன் வாக்கு கேட்டுச் செல்லும்போது, அதே இடத்தில் மற்றவர்களும் பிரசாரம் செய்ய வந்தனர். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கேள்வி கேட்பதிலும் பிரச்னைகள் இருந்தன. பல இடங்களில் பத்திரிகையாளர்களையே அனுமதிக்கவில்லை. இனி வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எங்களின் செயல்பாடுகளைப் பாருங்கள். அதன்பிறகு முடிவு செய்யுங்கள்" என்கிறார்.

நா.த.க கவனிக்க வேண்டியது என்ன?

நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு ஏன்?

பட மூலாதாரம்,NAAMTAMILARKATCHIOFFL FACEBOOK PAGE

``நாம் தமிழர் கட்சியின் தோல்வியை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் தாங்கள் சொல்லும் அதிரடியான கருத்துகளுக்காக கவனத்தைப் பெறுகின்றனர். சீமானின் உரைகளும் நேர்காணல்களும் கவனத்துடன் பார்க்கப்படுகின்றன. ஆனால் இந்த ஊடகக் கவனத்தை தேர்தல் களத்தில் பெறும் வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் இன்னும் எவ்வளவோ தூரம் மேல் எழுந்து வரவேண்டியதாக உள்ளது" என்கிறார்.

மேலும், `` அவர்களின் அடித்தள, செயல்பாட்டு அரசியலில் இன்னும் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்பதை உணர்த்துவதாகவே இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பார்க்கவேண்டும். சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் கருத்தியல் பரப்புரை ஒருபுறம் இருக்கலாம். அதே சமயம் களத்தில் செயல்பாடுகள்தான் வாக்குகளாக மாறும் என்பதே எதார்த்தம். நாம் தமிழர் கட்சியினர், இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும்" என்கிறார்.

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சீமானின் நாம் தமிழர் கட்சி படுதோல்வி ஏன்? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ்ப்பாண மருமகனான விஜய் தமிழகத்தில் அரசியலுக்கு வந்தால், வந்து எங்களுக்கு சார்பாகப் பேசினால், இப்போது நாம் தமிழர் ஆதரவாக இருப்போர் விஜயை ஆதரிப்பார்களா? 

(விஜய் "தூய தமிழர்" இல்லையென நினைக்கிறேன், உண்மையா?) 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 யாழ்ப்பாண மருமகனான விஜய் தமிழகத்தில் அரசியலுக்கு வந்தால், வந்து எங்களுக்கு சார்பாகப் பேசினால், இப்போது நாம் தமிழர் ஆதரவாக இருப்போர் விஜயை ஆதரிப்பார்களா? 

(விஜய் "தூய தமிழர்" இல்லையென நினைக்கிறேன், உண்மையா?) 

“யாழ்ப்பாண மருமகன் என்கிறீர்கள்”,தூய தமிழர் இல்லையென நினைக்கிறேன் என்கிறீர்கள்” 

இரண்டையும் பார்க்கையில் ஒரே குழப்பமாக இருக்கிறதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தி said:

“யாழ்ப்பாண மருமகன் என்கிறீர்கள்”,தூய தமிழர் இல்லையென நினைக்கிறேன் என்கிறீர்கள்” 

இரண்டையும் பார்க்கையில் ஒரே குழப்பமாக இருக்கிறதே.

குழப்பத்தின் அடுத்த படி தெளிவு தானே?😂 பொறுத்திருங்கள் - விளக்கங்கள் சிலர் தருவர்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் விஜை தமிழன் தான்.அதனால் தான் மதத்தை காவுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

யாழ்ப்பாண மருமகனான விஜய் தமிழகத்தில் அரசியலுக்கு வந்தால், வந்து எங்களுக்கு சார்பாகப் பேசினால், இப்போது நாம் தமிழர் ஆதரவாக இருப்போர் விஜயை ஆதரிப்பார்களா? 

(விஜய் "தூய தமிழர்" இல்லையென நினைக்கிறேன், உண்மையா?) 

சீமான் கட்சிக்கு இனி தேய்மானம்.  புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் இப்போது வரலாற்று திருப்பு முனையில் நிற்கிறார்கள்.நாம் தமிழர் கட்சியினரின்   பேச்சுக்ளை இதுவரை கேட்டுவந்தபடியால் தமிழர்களை துய தமிழர்கள் - தமிழர்கள் அல்லாதோர் என்று பார்க்கும் ஒரு பிரச்சனை விஜய்யை ஏற்பதிலும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக வை 2ம் பெரிய கட்சியாக ஏற்கவும் மக்கள் தயாரில்லை என்பதும் தெளிவாகிறது.

அரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் அப்படி பணம் கொடுத்து திமுக வெற்றி பெற்றாலும் பாஜக தான் ஆட்சி செய்யும் என்று இங்கே தெரிவித்தார்களே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நந்தி said:

“யாழ்ப்பாண மருமகன் என்கிறீர்கள்”,தூய தமிழர் இல்லையென நினைக்கிறேன் என்கிறீர்கள்” 

இரண்டையும் பார்க்கையில் ஒரே குழப்பமாக இருக்கிறதே.

 

19 hours ago, Justin said:

குழப்பத்தின் அடுத்த படி தெளிவு தானே?😂 பொறுத்திருங்கள் - விளக்கங்கள் சிலர் தருவர்!

 

18 hours ago, சுவைப்பிரியன் said:

நான் அறிந்த வரையில் விஜை தமிழன் தான்.அதனால் தான் மதத்தை காவுகிறார்கள்.

இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கு.

1. விஜை அம்மா ஷோபா மலையாளி. அப்பா தமிழ்.

2. தவிரவும் விஜை ஒரு கிறிஸ்தவர் (ஜோசப் விஜை -சர்சை).

3. இப்போ விஜை தமிழனா? மலையாளியா? தூய தமிழனா? என்பதில் தம்பிகளுக்கு குழப்பம். 

4. இந்த குழப்பத்தை மேலும் அதிகமாக்கும் நான்கு காரணிகள்.

A. லைக்காவுக்கு ஆதரவாக இறங்கிய சமயம் சீமான் விஜயை எளிய தமிழ் பிள்ளை என்று அங்கிகரித்த நியாபகம். இப்போ மலையாளி என சொன்னால் - தமக்கு பிடித்தால் தமிழன், பிடிக்காட்டில் மலையாளி என்று சொல்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரியும்.

B. சீமானின் மனைவியின் தாயார் தெலுங்கர் என்கிறார்கள் ஆகவே இதே வரைவிலக்கணத்தின் படி சீமானின் மகனும் தமிழன் இல்லை என ஏற்க வேண்டி வரும்.

C. விஜையின் பலம் - ரஜனியை போல அல்ல துடிப்பான இளைஞர்கள் விஜையோடு உள்ளார்கள். நேற்று ஒரு வாண்டு வீடியோ விட்டிருக்கு சீமானை திட்டி. 

D. சீமானும் கிறிஸ்தவர் ஆகவே அந்த பருப்பும் வேகாது.

இப்படி எல்லா பக்கத்தாலும் விஜய் கேட்டை போடுவதால்- விஜே சேதுபதியை, பார்தீபனை தெலுங்கன் என கட்டம் கட்டியது போல் விஜையை செய்ய யோசிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

 

A. லைக்காவுக்கு ஆதரவாக இறங்கிய சமயம் சீமான் விஜயை எளிய தமிழ் பிள்ளை என்று அங்கிகரித்த நியாபகம். இப்போ மலையாளி என சொன்னால் - தமக்கு பிடித்தால் தமிழன், பிடிக்காட்டில் மலையாளி என்று சொல்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரியும்.

B. சீமானின் மனைவியின் தாயார் தெலுங்கர் என்கிறார்கள் ஆகவே இதே வரைவிலக்கணத்தின் படி சீமானின் மகனும் தமிழன் இல்லை என ஏற்க வேண்டி வரும்.

C. விஜையின் பலம் - ரஜனியை போல அல்ல துடிப்பான இளைஞர்கள் விஜையோடு உள்ளார்கள். நேற்று ஒரு வாண்டு வீடியோ விட்டிருக்கு சீமானை திட்டி. 

D. சீமானும் கிறிஸ்தவர் ஆகவே அந்த பருப்பும் வேகாது.

இப்படி எல்லா பக்கத்தாலும் விஜய் கேட்டை போடுவதால்- விஜே சேதுபதியை, பார்தீபனை தெலுங்கன் என கட்டம் கட்டியது போல் விஜையை செய்ய யோசிக்கிறார்கள்.

ஆம், யாழிலேயே  தொண்டைக்குள் மீன்முள் சிக்கியமாதிரி மௌனம் நிகழ்கிறது எனும் போது சிக்கல் விளங்குகிறது.🤣 

"தமிழர்கள் இனத்தூய்மையை முன் வைத்து அரசியல் செய்வது இரு பக்கக் கூரான கத்தியை வைத்து விளையாடுவது போல- எம் மூக்கையே ஒரு நாள் பதம் பார்க்கும்" - இதை இன்னொரு திரியில் பரம்பரையியல் ஆதாரத்தோடு சொல்லியிருந்தேன்!  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 'விஜயகாந்த் வெற்றிக்கு ஆதாரம் உள்ளது; விஜய் வென்றாரா?'

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
13 அக்டோபர் 2021
புதுப்பிக்கப்பட்டது 14 அக்டோபர் 2021
விஜய்

பட மூலாதாரம்,XB CREATIONS

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வென்றிருப்பதாக விஜய் மக்கள் மன்றத்தினர் தெரிவித்து வந்தாலும், அவ்வாறு வென்றவர்கள் விஜய் மக்கள் மன்றத்தில் உறுப்பினராகவோ நிர்வாகியாகவோ இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் வேறு மாவட்டங்களில் இடைத் தேர்தல் நடந்த மிகச் சில இடங்களும் அடக்கம்.

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.

மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட ஆட்கள் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23,978 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் 110 இடங்களைக் கைப்பற்றியுள்ளோம் என்கின்றனர் விஜய் மக்கள் மன்றத்தினர்.

'இயக்கத்தின் கொடி, பெயர் பயன்படுத்தியதால் வெற்றி'

`மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்தலில் நின்றதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது' என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் சரவணன். என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் அக்டோபர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி என ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை ஆளும்கட்சியான தி.மு.க பெற்றுள்ளது.

பல மாவட்டங்களில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க படுதோல்வியடைந்துள்ளது. தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அ.ம.மு.க வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்தமுறை படுதோல்வியை சந்தித்துள்ளது.

போட்டி 169 இடங்கள்.. வெற்றி?

அதேநேரம், 109 இடங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நேற்று மாலை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நேரம், 55 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து நேற்று இரவு முழுக்க வாக்கு எண்ணும் பணிகள் நீடித்தன. முடிவில் 110 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

விஜய்
 
படக்குறிப்பு,

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார் நடிகர் விஜய்

இதன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் நடிகர் விஜய்யை சந்தித்து ஆசி பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் என்பது பிரதானமாக இருப்பதில்லை என்பதால், அந்தந்த பகுதிகளில் செல்வாக்கானவர்களை அரசியல் கட்சிகள் களமிறக்கின. சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக உள்ளாட்சித் தேர்தலிலும் பணம் பிரதானப் பங்கு வகித்ததாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை மிக முக்கியமான ஒன்றாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

போட்டியின்றி தேர்வான 13 பேர்

உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் குறித்து, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளரும் மாவட்ட இளைஞர் அணி தலைவருமான சரவணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னரே ஒன்பது மாவட்டங்களில் போட்டியின்றி 13 பேர் தேர்வானார்கள். குறிப்பாக, காஞ்சிபுரத்தில் 2 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர் என வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே இந்த வெற்றி எங்களுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய சரவணன், `` உள்ளாட்சியில் 169 இடங்களில் போட்டியிட்டோம். இந்த நிமிடம் வரையில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 2019 உள்ளாட்சித் தேர்தலில் 32 மாவட்டங்களில் சுயேச்சையாக கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் போட்டியிட்டோம். அப்போது 135 பேர் வெற்றி பெற்றனர். இந்தமுறை மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அறிய முடிந்தது.

விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறோம். எங்களின் சேவைகளைப் பார்த்து மக்களும் ஆதரவு கொடுத்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, `100 இடங்களில் வெற்றி பெறுவோம்' என உறுதியாக நம்பினோம்" என்கிறார்.

``தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து எதாவது தகவல்கள் வந்ததா?" என்றோம். `` மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டலில்தான் நாங்கள் தேர்தலில் நின்றோம். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளிடம் இருந்து எங்களுக்கு எந்தவித சிக்கல்களும் வரவில்லை. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் மாநிலத் தலைமைக்கு அனுப்பி வந்தோம்" என்கிறார்.

என்ன ஆதாரம் இருக்கிறது?

`` உள்ளாட்சியில் வெற்றி பெற்றதை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்களே?" என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

விஜய்

பட மூலாதாரம்,ACTOR VIJAY

`` தாங்கள் வெற்றி பெற்றதற்கு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் விஜய்யை முன்வைத்து உரிமை கோருகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில்தான் அனைவரும் போட்டியிட்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் யாரும் போட்டியிடுவதில்லை. அப்படியிருக்கும்போது, `நடிகர் விஜய்யின் ஆதரவில்தான் நாங்கள் வெற்றி பெற்றோம்' என இவர்கள் கூறுவதை யாரும் சென்று சரிபார்க்கப் போவதில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசிய சிகாமணி, `` ஊரக உள்ளாட்சியில் இவர்கள் அனைவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடவும் வாய்ப்பில்லை. தனது தந்தை புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, அதனை மறுத்து விஜய் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களில் உள்ளாட்சியில் அதிக இடங்களில் விஜயகாந்த் வெற்றி பெற்றார் என்றால், அதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தன. அதேநேரம், விஜய் ரசிகர்கள் தரப்பில் கற்பனையான, நிரூபிக்க முடியாத தகவல்களைக் கூறுவது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார்.

மேலும், `` தற்போதைய அரசியல் சூழலில், யாராவது ஒருவர் வந்துதான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் எதுவும் தற்போது இல்லை. உள்ளாட்சியில் எதாவது ஒரு காரணத்தால் சிலர் வெற்றி பெற்றிருக்கலாம். அதற்காக, விஜய்க்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இதன்மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 110 இடங்களில் வெற்றி பெறுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?" என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-58895863

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் பேசவே இல்லை... தான் சார்ந்து அரசியல் இயக்கம் நடக்குதுன்னு. அப்புறம்.. எப்படி இது விஜயின் வெற்றி ஆகும். இதனை விட பெரிசா சாதிச்ச விஜய்காந்தின் நிலை இன்று..??!

மிகச் சில  ஆயிரம் அல்லது நூறு வாக்குகளில் தெரிவாகக் கூடிய இந்த தேர்தலில்... உள்ளூர் ரெளடிகளும்.. பணக்காரர்களும்.. செல்வாக்குள்ளவர்களுமே வெற்றியடைகின்றனர்.. தெற்காசிய சாக்கடை அரசியலில்.

இதில் 60 வீதமே எழுத்தறிவு கொண்ட தமிழக கிராமங்களில் மக்கள் அரசியல் தெளிவடைந்து வாக்குப் போடுவினம் என்பது வெறும் எதிர்பார்ப்பே. இந்த தேர்தல்களில் இளையோரை விட வயதானவர்களே அதிகம் வாக்களிக்கின்றனர். அவர்கள் பாரம்பரியமாக காசுக்கு வாக்குப் போடும்.. சலுகைகளை எதிர்பார்த்து வாக்குப் போடும் மக்களாகவே வைக்கப்பட்டுள்ளனர்.. திமுக.. அதிமுக போன்ற திராவிடக் கும்பல்களால்.

அந்த வகையில் நாம் தமிழரின் எழுச்சி மக்களிடம் முழுச் செல்வாக்குச் செய்ய காலம் எடுக்கும். அதேவேளை நாம் தமிழரும்.. அடிமட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியலினூடான தமிழின முன்னுந்தல் அரசியலை செய்தால் அன்றி.. திராவிடக் கும்பல்களின் 50 ஆண்டுகளாக திராவிட அரசியல் பீடையை தமிழகத்தில் இருந்து பிடிங்கி எறிவது அவ்வளவு இலகுவான விடயமல்ல.

நாம் தமிழர் தோற்கனும் என்று விரும்புவர்களின் தேடிப்பிடித்த பிரச்சாரங்களை எல்லாம் முறியடித்து நாம் தமிழர் கட்சி தோற்கும் கட்சி என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டு வந்து மக்கள் வாக்குகளால்... வெல்லப்படக் கூடிய கட்சி என்ற நிலையை உருவாக்காமல்.. நாம் தமிழருக்கான வாக்கு சதவீதத்தை வெற்றி வாக்கு சதவீதமாக்க முடியாது. 

நாம் தமிழர் வெல்ல முடியாத கட்சி என்ற மக்களின் சிந்தனை மாறி.. வெல்லக் கூடிய கட்சி என்ற செயற் திட்டங்களே.. நாம் தமிழரின் அரசியலில் அதனை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். அதுவே ஈழத்தமிழினத்தின் எதிர்கால அயலக உறவு ஈழத்திற்கு சாதகமாக அமைய வாய்ப்பளிக்கும்.

இன்றி சுப்பிரமணியம் சுவாமி போன்ற கொரோனாவை விட மோசமான கிருமிகளின் ஆதிக்கமே  தமிழகத்தையும் மொத்த தமிழினத்தையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் படு தோல்வி- வாய் மட்டும் பேசும் நாம் தமிழர் கட்சி!

அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறும் நோக்கோடுதான் உருவாக்கப்படுகிறது. மக்களின் ஆதரவைப் பெற பல விதமான வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளிக்கிறது. அதே கட்சி ஆளும் கட்சி ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றி தங்கள் அணுகுமுறையால் வெல்கிறது.

ஆனால், திமுக, திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு உருவான கட்சிதான் நாம் தமிழர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல் அக்கட்சியின் கீழ் மட்ட பிரமுகர்கள் வரை வாயைத் திறந்தால் வன்முறை வாடை வீசுகிறது. தலைவர்களை அருவருப்பாக பேசுவது. அரசியல் தலைவர்களின் குடும்பங்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது, பெண்களை அவதூறாகப் பேசுவது என இதையே அரசியல் பணியாகச் செய்து வருகிறார்கள்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடம் இருந்து ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாயை நன்கொடையாகப் பெறும் நாம் தமிழர் கட்சி அந்த நிதி பற்றி எதுவும் பேசுவதில்லை. இந்திய  தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அரசியல் கட்சி எந்த வெளிநாட்டிடம் இருந்தும் தேர்தல் நிதி பெறக்கூடாது. ஆனால், நாம் தமிழர் கட்சி வெவ்வேறு காரணங்களைச் சொல்லி நிதி பெறுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் முதல்வரின் பிறப்பைப் பற்றி மோசமாகப் பேசி சாட்டை துரைமுருகன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சரி, இவ்வளவு பேசும் இவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வெல்வதில்லை. இப்போது நடந்து முடிவுகள் வெளியாகி வரும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை. சரி மாவட்ட அளவில்தான் வெல்ல முடியவில்லை. ஒரு வார்டிலாவது வென்றார்களா என்றால் இல்லை.

வார்ட் என்பது போட்டியிடும் வேட்பாளர்கள் வசிக்கும் பகுதி அன்றாடம் மக்களோடு புழங்கும் இடம் என்பதால் ஓரளவுக்கு போட்டியிடும் அனைவருக்குமே மக்களிடம் செல்வாக்கு இருக்கும். ஆனால், நாம் தமிழர் கட்சி ஒரு வார்ட் தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு மக்களோடு நெருக்கமாக  இருக்கிறார்கள்.

மைக், மேடை, வாட்சப், பேஸ்புக் போன்றவற்றின் மூலமாகவே ஒரு கட்சியை வளர்த்து விட முடியாது என்பதையே நாம் தமிழர் கட்சி  துவங்கிய நாள் முதல் சந்தித்து வரும் தோல்விகள் எடுத்துக் காட்டுகின்றன.

https://inioru.com/தேர்தலில்-படு-தோல்வி-வாய/

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித விருப்புவெறுப்பகளைக் கொண்டு அரசியலை பார்க்க முடியாதென்பதை அரசறிவியலாளர்கள் சுட்டுகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
1FABCC47-0B66-482D-9E4F-CC5C6A56BBA7.jpeg
 

 

சீமானின் “கர்வாப்ஸி” பேச்சைக் கேட்ட போது ஒருவிசயம் தெளிவாகியது: அவருக்கு தன்னுடைய சுயசாதி, தமிழ் தேசிய தொண்டர் படை தன்னை விட்டுப் போகிறதோ எனும் அச்சம் அவருக்கு உண்டாகி இருக்கிறது. அந்த பேச்சில் அவருடைய முகத்திலும், குரலிலும் அந்த பதற்றம், கசப்பு தெரிகிறது. இந்த அச்சம் விஜய்யின் ரசிகர் மன்றம் உள்ளாட்சி தேர்தலில் 120க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளது மிகப்பெரிய கவனத்தை ஊடகங்களில் பெற்றது, நாம் தமிழர் கட்சி இன்னொரு பக்கம் இதே தேர்தலில் டவுசர் கழன்று போயுள்ளது குறித்த கேலி, கேள்விகளில் இருந்து வருகிறது. இன்னும் தெளிவாக சொல்லுவதானால், விஜய் தன்னுடைய சாதியை சேர்ந்த மற்றும் சேராத இளைஞர்களை மொத்தமாக அள்ளிக் கொண்டு போய் விடுவாரோ என சீமான் பதறுகிறார். ஒருவேளை விஜய்யின் ரசிகர் மன்றம் ஒரு கட்சியாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு இதே போல கணிசமான வாக்குகளைப் பெற்றால் அது சீமானின் வாக்குவங்கியை அரித்து விடும். 

ஆக சீமான் தமிழரின் பூர்வ மதம் இந்து மதம், கிறித்துவர்களும், இஸ்லாமியரும் அம்மதங்களை பின்பற்றும் வரையில் தமிழர்களாக அவர்களை ஏற்க முடியாது என்கிறார். இந்து மதம் என்று சொன்னால் தான் பாஜகவுடன் நேரடியாக அடையாளப்படுத்தப் படுவோம் என பயப்படும் அவர் சைவமும், மால்யமும் இந்து மதங்கள் அல்ல என்கிறார். கவனியுங்கள், சைவமும் வைணவமும் வைதீக மதங்கள் அல்ல என்று அவர் கூறவில்லை. வில்லியம் ஜோன்ஸ் சட்டமியற்றி தமிழர் மதங்களை இந்து மதம் என பெயர் மாற்றி விட்டார், அப்பெயரை நீக்கினால் அவை தமிழர் மதமாகி விடும் என குழப்புகிறார். வரலாறும், மெய்யியலும் அறிந்த எவரும் இந்த அபத்தமான விளக்கத்தை ஏற்க மாட்டார்கள். இந்து மதம் என அறியப்பவடுகிற பிரதான இரு கிளைகள் வைணவமும் சைவமும். இரண்டுமே அத்வைதத்தின் மெய்யியல் படி தொடர்ந்து விளக்கப்பட்டு வருகின்றன. தொன்மங்களும் அவ்வாறே வடிக்கப்பட்டுள்ளன. சீமான் வழிபடும் வடபழனி முருகனும் தான். சிவனையோ விஷ்ணுவையோ வைதீக பூச்சுகளை ஒழித்து பழங்குடி தெய்வங்களாக்கும் எந்த முயற்சியையோ சீமானின் கட்சியினர் எடுக்கவில்லை. சைவத்தை பக்தி காலகட்டத்தில் எப்படி முன்வைத்தார்களோ அப்படித்தான் சீமானும் பார்க்கிறார். சொல்லப் போனால் சிவனை வைதீக எதிர்ப்புக் கடவுளாக மறுகட்டமைப்பு பண்ணுவதும் அவருடைய நோக்கமல்ல; அவர் மதநம்பிக்கையும் சுயசாதி பாசமும் கொண்ட ஒரு மக்கள் திரளை தமிழ் தேசிய முலாம் பூசி தன் வசம் இழுக்க இப்போது முயல்கிறார். இந்து என்று சொன்னால் எடுபடாது என்றால் சைவம் எனும் தமிழர் மதம் என ஒரு புதிய கதையாடலை எடுத்து விடுகிறார். இங்கு தான் விஜய்க்கும் ஒரு செக் வைக்கிறார்:

 

விஜய்யை ஏற்கனவே கிறித்துவ வந்தேறி என பாஜக எதிர்க்க முயன்று தோற்றது. இப்போது சீமான் அதையே விஜய்யின் பெயர் சொல்லாமல் செய்கிறார். விஜய் நம்முடைய சாதி நடிகர் என்று எண்ணி பின்னால் போகாதீர்களடா, அவர் கிறித்துவர், அதனாலே அவர் தமிழர் அல்ல என்று தன் தம்பிகளை கையைப் பிடித்து இழுக்கிறார்.

சீமான் இதற்கு முன்பும் அவ்வப்போது விஜய்யை “என் தம்பி” என்று கூறுவது, பின்னர் தாக்குவது என இருந்திருக்கிறார். குறிப்பாக, தன்னுடைய 6% வாக்குகளுக்கு பங்கு வந்து விடுமோ என பயம் வரும் போது அவர் “அரசியல் செய்யாமல் நேரடியாக தேர்தலில் போட்டியிடும் நடிகர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று விஜய்யையும் சேர்த்து சாடுவார். இப்போது ஒரு படி மேலே சென்று “அந்நிய மிஷினரி” என்று தாக்கி விட்டு கூடவே இருக்கட்டும் என “அரபு வந்தேறிகள்” என இஸ்லாமியரையும் சாடி இருக்கிறார். கோபத்தில், அச்சத்தில் நிதானத்தை இழந்திருக்கிறார்.

 ஆனால் இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் சீமானின் வீழ்ச்சி வரும் பத்தாண்டில் வேகமெடுக்கும் எனத் தோன்றுகிறது.

 

http://thiruttusavi.blogspot.com/2021/10/blog-post_16.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் அபிலாசின் நட்சத்திரம் ,லக்கினம் என்பனவறையும் எழுதி விட்டால், இனி வரப்போகும் கருத்தாளர்கள் அவருக்கு திமுக சொம்பு என அர்ச்சனை செய்ய வசதியாக இருக்கும்🤣.

மேலே கட்டுரையில் அலசப்படும் சீமான் வீடியோ👇.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர் வாபஸி (வீடு திரும்புதல்) (தாய் மதம் திரும்புதல்) எனும் சங்பரிவாரின் நீண்ட கால திட்டத்தை விஷ்வஹிந்து பரிஷித் எப்படி நடைமுறை படுத்துகிறது என்பது பற்றிய கட்டுரை இது 👇.

https://www.hindutamil.in/amp/news/india/32942-15.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.