Jump to content

ஆசான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஆசான்

1988.....

இதுதான் அந்த ஆண்டு. சரியாக இருக்கும். என் வாழ்நாளில் நான் சந்தித்த இன்னொரு ஆளுமையின் கதை இது. 

யாழ்ப்பாணத்து நரக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டு மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள். புதிய இடம், புதிய மனிதர்கள், இவை எல்லாவற்றிற்கும் புதியவனாக நான் என்று என்னை நான் நிலைபெறச்செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்திகொண்டிருந்த நாட்கள் அவை. 

சித்தியின் தயவில் அநாதைகள் விடுதியில் சேர்க்கப்பட்டு, மறுநாளே மிக்கேல் கல்லூரி வாசலில் கட்டைக் காற்சட்டை அணிந்துகொண்டு கமலா டீச்சரின் வரவிற்காக காத்திருந்த அந்தக் காலை இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. விசாலமான பாடசாலை, இரைச்சலான மாணவர் கூட்டம், உயர்ந்த இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் தெரிந்த நீண்ட விறாந்தை, அதன் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த வகுப்பறைகள். இடைக்கிடையே அந்த அலுவலக வாசலுக்கு வந்துபோன சில ஆசிரியர்கள், சில மாணவர்கள் என்று அனைத்தையும் அவதானித்துக்கொண்டு சித்தியுடன் காத்திருந்தேன்.

கமலா டீச்சரும் வந்தார். ஏற்கனவே எனது சித்தியுடன் அவருக்கு இருந்த பரீட்சயத்தை அவரின் முகத்தில் இருந்த புன்னகை கூறியது. "வாங்கோ சிஸ்ட்டர், இவரைத்தான் சேர்க்கப் போறீங்களோ?" என்று கேட்டுக்கொண்டு தனது அதிபர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே பேசி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது, சில நிமிட சம்பிரதாயங்களுக்குப் பின்னர் என்னை வகுப்பறை ஒன்றிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அன்று காலை சித்தி என்னை அப்பாடசாலையின் வாசலில் விட்டுச் சென்றபோது தனிமையை சட்டென்று உணர்ந்தேன். மட்டக்களப்பில் எனக்கு ஆதரவாக இருப்பார் என்று நம்பிவந்த சித்தியும் அன்று காலை என்னிடம் இருந்து விடைபெற்றுச் சென்றுவிட மனதில் பயம் பற்றிக்கொண்டுவிட்டது. சிலநிமிடங்கள் அவர் சென்ற திருகோணமலை வீதியை பார்த்துக்கொண்டே நின்றேன்."அட, அவசரப்பட்டு விட்டோமோ? பேசாமல் அப்பா எனும் மிருகத்துடனேயே , நரக வாழ்வென்றாலும் , யாழ்ப்பாணத்திலேயே இருந்திருக்கலாமோ? என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன். சீ சீ, அந்த ஆளுடன் இருக்கக் கூடாதென்றுதானே இங்கு வந்தேன், இப்போது அதை நினைத்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை என்று மனதிற்குச் சமாதானம் கூறிவிட்டு, அந்த வகுப்பில் எனக்கு வழங்கப்பட்டிருந்த கதிரையில் (எல்லாம் கடைசி வரிசை தான்) வந்து அமைதியாக அமர்ந்துகொண்டேன். 

அன்றைய முதலாம் பாட நிறைவில் நான் யார், எங்கிருந்து வந்தேன், இதற்கு முன்னர் எங்கே இருந்தேன் என்று அறிந்துகொள்ள முன்னாலிருந்த சில மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். வகுப்பு இடைவேளையில் வந்து பேசத் தொடங்கினார்கள். "எங்கே இருந்தடா வாறாய்? உன்ர பெயர் என்ன? இதற்கு முதல் எங்க படித்தாய்?" இப்படியான சம்பிரதாயக் கேள்விகள். "ரஞ்சித், யாழ்ப்பாணத்திலிருந்து வந்தேன்" என்று அமைதியாகக் கூறினேன். "ஓ, யாழ்ப்பாணமோ, எந்த ஊரடா?" என்று ஒருவன் கேட்டான். அவனும் யாழ்ப்பாணமாக இருக்கலாம். எனது ஊரை அறியும் ஆவல் அவனது கேள்வியில் தொனித்தது. "கோண்டாவில்" என்றேன். அவன் மெய்யழகன். மட்டக்களப்பில் நெடுங்காலம் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீமகாகக் கொண்ட ஒருவன். மதனழகன் என்று அவனுக்கொரு சகோதரன், அதே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். இவர்களைப்போன்றே சுகந்த் ராமலிங்கம், கிருபாகரன், பிரபாகரன் என்று யாழ்ப்பாணத்துப் பூர்வீக தமிழர்கள். இடையிடையே வந்து விசாரித்துவிட்டுச் சென்றார்கள். இவர்கள் எல்லோருமே முன்வரிசை மாணவர்கள். படிப்பில் சிறந்தவர்கள். ஆசிரியர்கள் அனைவரினதும் பிரபல்யங்கள். ஒரு சிலர் மட்டுநகரில் இயங்கிவந்த பிரபல வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களின் பிள்ளைகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்களைத் தவிரவும், இன்னும் சில மாணவர்கள் அங்கே இருந்தார்கள். குறிப்பாக எனதருகில் அமைதியாக இருந்த ஆரைப்பத்தைச் சிவலிங்கம், ஜெயந்தன் என்கிற மட்டக்களப்புப் பூர்வீக மாணவர்கள். எளிமையானவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். என்றோ சந்தித்ததுபோன்று என்று சொல்வார்களே, அதுபோலத்தான் அவர்களின் நட்பும். சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்டார்கள். மிக இயல்பாகவே மச்சான் என்று விழித்துப் பேசிய சிவலிங்கம். அவ்வயதிலும் அழகழகாகக் கவிதை எழுதுவான். இடைக்கிடை எழுதியவற்றை என்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவான். கவிதை என்றால் என்னவென்று எனக்குத் தெரியாத பருவத்தில் கவிதைபற்றி விபரிக்கும் அவனை வியப்புடன் பார்த்திருப்பேன். அவனது தந்தை மட்டக்களப்பு அரச நிர்வாகத்தில் அதியுயர் பதவியில் இருந்தார் என்று அவன் கூறிய ஞாபகம், ஆனால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் மிக எளிமையாக இருந்தான். என்னுடன் அடிக்கடி, "வாடா, கைச்சண்டை போட்டுப் பாப்போம்" என்று அழைப்பான். விடுதியில் வெறும் பாணும், சொதியும் தினமும் சாப்பிடும் எனக்கும் வீட்டில், ஓரளவு தரமான உணவை உட்கொண்டு வரும் அவனுக்கும் இடையே நடக்கும் கைச்சண்டையினைப் பார்க்க சிறு கூட்டமே கூடிவிடும். பலமானவன், அவனுடன் தோற்றாலும் வெட்கப்படவில்லை. யாரிடம் தோற்றுப்போனோம், சிவலிங்கத்திடம் தானே? என்று மனது ஆசுவாசப்பட்டுக்கொள்ளும். 

அதேபோல ஜெயந்தன். குருக்கள் மடத்தைச் சேர்ந்தவன். அறிவாளி. மிகவும் எளிமையானவன். பண்பானவன். உதட்டில் எப்போதுமிருக்கும் சிறு புன்னகையுடன் பேசும் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். எனது சிறுபராயம் தொடர்பாக அவன் அடிக்கடி கேட்டுக்கொள்வான். தந்தையை சிறுபராயத்தில் இழந்த அவனை, ஆசிரியராக இருந்த தாயார் வளர்த்துவந்தார். அடிக்கடி பாடசாலைக்கு வந்து அவனுக்கு தேவையானவற்றைச் செய்து, அன்புடன் அரவணைத்துச் செல்லும் அவன் தாயாரைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் இப்படியொரு தாய் இருந்தாள் என்கிற ஞாபகமும், கூடவே ஏக்கமும் வந்துபோகும். கொடுத்துவைத்தவன் என்று நினைத்துக்கொள்வேன். ஜெயந்தனின் முகத்தில் இருக்கும் மகிழ்வினை நானும் அவ்வப்போது பகிர்ந்துகொள்வேன்.

சரி, தேவையானளவிற்கு எனது மிகச் சிறுத்த நண்பர் வட்டம் பற்றிய அறிமுகத்தைச் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இனிக் கதைக்குச் செல்லலாம். 

நான் அந்த வகுப்பில் சேர்ந்த சில நாட்களில் அவதானித்த ஒரு விடயம் தான், வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் தமக்குப் பிடித்த மாணவர்களுக்காக மட்டுமே பாடம் நடத்துவார்கள் என்பது. குறிப்பாக முன்வரிசையில் இருக்கும் "பிரபல்யமான" மாணவர்களுக்குக் கற்பித்தலுடன் தமது பணி முடிந்துவிட்டதாக நினைக்கும் ஆசிரியர்கள். எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் பற்றி விமர்சிப்பது எனது நோக்கமல்ல, ஆனால் நான் கூறும் கதையில் இவர்களின் வரவும் தவிர்க்கமுடியாதமையினால், அவர்கள் பற்றியும் தொட்டுவிட்டுச் செல்கிறேன்.

முதலாவது சின்னையா டீச்சர். மிகவும் அழகானவர். மிகவும் பண்பானவர். மட்டக்களப்பு உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். கோவிந்தன் வீதியில் அவரது வீடு அமைந்திருந்தது. பிள்ளைகள் இருக்கவில்லை. அவர் பேசும்போது வசீகரம் இருக்கும். சில மாணவர்களுக்கு அவர் வகுப்பறைக்கு வருகிறார் என்றாலே பரவசம் பற்றிக்கொள்ளும். சிவப்பு, மென்சிவப்பு, செம்மஞ்சள் நிறங்களில் புடவை அணிவார். அவரது மாநிறத்திற்கு அவை இன்னும் அழகைக் கூட்டிக்கொண்டிருக்கும். அவர் எமக்குப் படிப்பித்த "பல பாடங்களில்" கணிதமும் ஒன்று. ஆனால் எனக்கு எதுவுமே ஏறவில்லை. காரணிப்படுத்துங்கள், ஒருங்கமை சமன்பாடுகளைத் தீருங்கள், கோணங்களைக் கண்டுபிடியுங்கள், நூற்றுவீதம் கண்டுபிடியுங்கள் என்று அவர் கூறிக்கொண்டே செல்ல மண்டை விறைத்து நின்றுவிடும். பாடம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மனது வகுப்பறையை விட்டு தனியே எழுந்து சென்றுவிடும். சிவலிங்கத்துடன் தனகத் தொடங்குவேன். அவனும் என்னைப்போலத்தான், ஏதாவது சொல்லிச் சிரிக்கவைத்துக்கொண்டிருப்பான். சின்னையா டீச்சர் எமது பக்கம் ஒருபோதுமே வரப்போவதில்லை என்கிற தைரியமே எம்மை வேறு வேலை பார்க்கச் செய்துவிடும். நாம் கற்கிறோமா, அல்லது வேறு ஏதாவது செய்கிறோமா, தான் கற்பிக்கும் விடயம் வகுப்பில் உள்ள அனைவருக்கும் புரிகிறதா என்கிற சின்னக் கேள்வியோ, தேவையோ கூட இன்றி அவர் பாடம் நடத்திக்கொண்டிருப்பார். முன் வரிசையில் இருந்த மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வேலையுடன் அவரது கடமையும் முடிந்துவிடும் என்று நினைத்திருந்தாரோ என்னவோ, மற்றைய மாணவர்களை அவர் அதிகம் கஷ்ட்டப்படுத்தவில்லை. ஒருமுறை நாம் இருக்கும் கடைசி வாங்கிற்கு வந்தார். நானும் சிவலிங்கமும் வேறு கதை பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்க வேண்டும், "  எங்கே, இன்று நீங்கள் செய்த கணக்கைக் காட்டுங்கள் பார்க்கலாம் ?" என்று கேட்டார். கொப்பியில் கணக்கை எழுதியதைத் தவிர பதிலளிக்கும் எண்ணமே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்த எங்கள் இருவரையும் அவர் பார்த்த பார்வையிலேயே  கூணிக் குருகிப் போய்விட்டேன். அதுவும், பாடசாலையின் மிகவும் பிரபலமான (அழகுக்காகத்தான்) சின்னையா டீச்சர் உங்களை ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோலப் பார்த்தால் வேறு எப்படியிருக்கும்? அதுவும், வகுப்பில் ரஞ்சித் என்கிற பெயரில் ஒருவன் இருக்கிறான் என்று அறியமுன்னமே அவருக்கு நான் அறிமுகமாகிய விதம் மனதை நன்றாகப் பாதித்து விட்டிருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, ரஞ்சித் said:

இன்று நீங்கள் செய்த கணக்கைக் காட்டுங்கள் பார்க்கலாம் ?" என்று கேட்டார். கொப்பியில் கணக்கை எழுதியதைத் தவிர பதிலளிக்கும் எண்ணமே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்த எங்கள் இருவரையும் அவர் பார்த்த பார்வையிலேயே  கூணிக் குருகிப் போய்விட்டேன். அதுவும், பாடசாலையின் மிகவும் பிரபலமான (அழகுக்காகத்தான்) சின்னையா டீச்சர் உங்களை ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோலப் பார்த்தால் வேறு எப்படியிருக்கும்?

மண்ணுக்குள் புதைந்து போயிருந்திருக்கமாட்டோமோ என தோன்றியிருக்கும்..😂..

நான் படித்தது பெண்கள் கல்லூரி ஒன்றில்(நல்லகாலம்).. அங்கே ஆண் ஆசிரியர்கள் இல்லை😞.. ஒருதரம் அருமையாக ஒரு ஆண் ஆசிரியர் வந்திருந்தார்(குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்).. அப்பொழுது நாங்கள் பதின்ம வயது மாணவிகள் .. இப்படித்தான் ஏதாவது குளறுபடி செய்து பிடிபட்டால் மிகவும் அவமானமாக இருக்கும்(அப்பொழுது).. இப்ப நினைத்தால் sillyயாக தெரியும்.. 

சில ஆசிரியர்கள் எங்களது எண்ணங்களை விட்டு இலகுவில் மறைய மாட்டார்கள். கல்லூரி நினைவுகளை மீட்டும் ஒரு கதை.. 

தொடருங்கள்..

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

9 ஆம் வகுப்பில் நான்கு டிவிசன்கள் இருந்தன. ஒவ்வொரு வகுப்பிற்கும் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் என்று நால்வர் இருந்தனர். ஆனால், சின்னையா டீச்சரே நான்கு வகுப்புகளுக்கும் கணிதப்பாட பரீட்சை தயாரித்தார். அவர் தயாரிக்கும் பரீட்சைகள் அனைத்துமே மிகவும் கடிணமனாதாக எனக்குத் தெரிந்தது. படிக்காமல் பரீட்சை எழுத வந்தால் வேறு எப்படித்தான் தெரியும்?

ஆகவே, எதிர்பார்த்ததைப் போலவே மிகவும் கேவலமான புள்ளிகள். முதலாவது தவணைப் பரீட்சையில் நூற்றுக்கு 23%. அவமானமாக இருந்தது. எனது விடுதி நடத்துனரே பாடசாலையின் உப அதிபராகவும் இருந்ததினால் இருமுறை அடிவாங்கவேண்டியதாயிற்று. முதலாவது, ரிப்போட் காட்டை அவர் வகுப்பில் வந்து தந்தபோது, மீதி விடுதிக்கு வந்து சேர்ந்தபோது. அவமானம் ஒருபுறம், அடியின் நோவு ஒருபுறம் என்று நன்றாகப் பாதித்துவிட்டது.

ஆனால், இவை எதுவுமே என்னை கணிதத்தில் ஈடுபாட்டுடன் இருக்க உதவவில்லை. இரண்டாம் தவணையிலும் அதே புள்ளிகள், ஒன்றிரண்டு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்திருக்கலாம். எதுவுமே மாறவில்லை. கணிதபாட பெறுபேறுகளுடன் வகுப்பில் சிறிய பிளவொன்று ஏற்படுவதை உணர்ந்தேன். நான், சிவலிங்கம், ஜெயந்தன், பிரபா, கிருபா என்று இன்னும் சிலருடன் வகுப்பு இரண்டாகப் பிரிந்துவிட்டது. மெய்யழகன், மதனழகன், சுகிர்தர், சுகந்த், கிரிந்தி, பிரதீப், வசந்தசுதன், நசீர் என்ற கெட்டிக்கார மாணவர்களுக்கு மட்டுமே சின்னையா டீச்சர் பாடம் நடத்தத் தொடங்கினார். அவ்வகுப்பில் இன்னொரு மாணவர் கூட்டமும் பிரசன்னமாயிருக்கிறது என்ற பிரக்ஞை கூட இன்றி அவர் பாடம் நடத்தினார். 

இந்தப் பிளவு பற்றிய செய்தி அதிபரின் காதுக்கும் எட்டியிருக்க வேண்டும். ஒருநாள் காலை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த சின்னையா டீச்சரை வகுப்பின் வாசலுக்கு வெளியே அழைத்துச் சென்ற அதிபர் ஏதோ சிலநேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் உள்ளே வந்து என்னையும், எனது நண்பர்களையும்  பெயர் சொல்லி அழைத்து, "இனிமேல் கணித பாட நேரத்தில் நீங்கள் இந்த வகுப்பில் இருக்க வேண்டாம், வேறு வகுப்பில் ஒரு ஆசிரியரை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். உங்களுக்கு என்னால் இனிமேல் படிப்பிக்க முடியாது, உங்களின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வெளியே வாருங்கள்" என்று சின்னையா டீச்சர் கூறினார். எதுவுமே புரியவில்லை. ஏன் இப்படி ஒதுக்கப்படுகிறோம்? எதற்காக எமக்குக் கற்றுக்கொடுக்க முடியாதென்கிறார்? என்று எனக்குள் கேட்கத் தொடங்கினேன். அதுவரை சின்னையா டீச்சர் மீதிருந்த சின்ன அபிமானமும் அத்துடன் முற்றாகத் தொலைந்துபோயிருந்தது. ஆத்திரம் ஒருபுறம், அவமானம் இன்னொருபுறம் என்று உணர்வுகளால் பின்னப்பட்டு கணிதக் கொப்பியுடன் தலை குனிந்தபடி எழுந்து வரிசையில் செல்லத் தொடங்கினோம். வகுப்பின் பிரபல்யமான மாணவர்கள் முகத்தில் ஏளனமும், கேலியும் கலந்திருந்ததைக் கடைக் கணால் பார்த்துக்கொண்டு வகுப்பறையினை விட்டு எனது நண்பர்களுடன் வெளியேறி நடக்கத் தொடங்கினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெறுமையாக இருந்த அறையொன்றில் போய் அமர்ந்துகொண்டோம். வெறு 7 அல்லது 8 மாணவர்களே அன்று தனியாக ஒதுக்கப்பட்டு "இழுத்து" வரப்பட்டிருந்தோம்.

சில நிமிடங்கள் இருக்கும், கமலா டீச்சர் ஒருவருடன் பேசிக்கொண்டே வகுப்பறைக்குள் வந்தார். "இவங்கள் தான் மாஸ்ட்டர். சின்னையா டீச்சரால இவங்களைக் காட்டுப்படுத்த முடியேல்லை, இவங்களுக்குத்தான் நீங்கள் கணிதம் படிப்பிக்கப் போறீங்கள்" என்று எங்களைப் பார்த்துக்கொண்டு கூறினார்.

அப்போதுதான் அவரைக் கவனித்தேன். கருமையான நிறம். கறுத்த, ஒரு பக்கத்திற்கு எண்ணை தடவி வரிந்து இழுக்கப்பட்ட தலை முடி, மெல்லிய மீசை, மிக நேர்த்தியாக அழுத்தப்பட்டு அணியப்பட்ட வெண்ணிற நீட்டுக் கை சேர்ட், இறுக்கமான கறுத்த நிறப் பாண்ட், மெழுகப்பட்ட கறுப்புநிற சப்பாத்து, கைய்யில் பிரீப்கேஸ்.....யாரிவர்? எதற்காக இங்கே வந்திருக்கிறார்? ஏதாவது பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டு விட்டோமோ? என்றெல்லாம் மனது நினைக்கத் தொடங்கியது. 

ஒரு சில நிமிட அறிமுகத்தின் பின்னர் கமலா டீச்சர் சென்றுவிட்டிருந்தார். நாங்கள் ஏழு பேரும் அந்த "புதிய" மாஸ்ட்டரையே பார்த்துக்கொண்டிருக்க, அவர் மிக அமைதியாக எங்கள் அனைவரையும் ஒருமுறை பார்த்தார். "இவங்களை எப்படித்தான் கரையேற்றப்போகிறேனோ?"  என்று எண்ணிப்பார்த்திருப்பார் போலும். சில நிமிட அமைதிக்குப் பின்னர் மென்மையாகப் பேசத் தொடங்கினார்.

"என்ர பெயர் பேரின்பராஜா. உங்கள் அனைவருக்கும் கணிதத்தில் இருக்கும் சிக்கல்களை புரியப்படுத்தி, உங்களை கணிதத்தில் மெருகேற்றவே வந்திருக்கிறேன்" என்று அவர் கூறவும் எனக்குச் சிரிப்பே வந்துவிட்டது. ஆனால், அவர் அதுபற்றியெல்லாம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. "நீங்கள் இந்த வகுப்பறையில் இறுதியாகச் செல்லும்போது உங்களுக்கு இருக்கும் கணிதப் புலமை பற்றி என்னிடம் வந்து பேசுங்கள். அதுவரை என்னுடன் பொறுமையாக பயணியுங்கள்" என்று மிகவும் அழுத்தமாக, ஆனால் மென்மையாகச் சொன்னார். இதுவரை எம்மை யேரென்று தெரியாமால், ஆசட்டைசெய்து கற்பித்த சின்னையா டீச்சர் எங்கே, எமது நகைப்புகளுக்கு மத்தியிலும் எம்மீது நம்பிக்கை வைத்து உற்சாகமூட்டிப் பேசிய பேரின்பராஜா சேர் எங்கே என்று ஒருகணம் எண்ணிப்பார்த்தேன்.  ஆம், அவர்தான் நான் எப்போதும் விரும்பி "சேர்" என்றழைக்கும் , எனது வாழ்நாளில் நான் மறக்கமுடியாத ஒற்றை ஆசான் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கிருந்து ஆரம்பிப்பது? 

அவர் எழுதும் எழுத்துக்களின் ஒழுங்கிலா, அவர் ஒரு விடயத்தைப் புரியவைக்கைக் கைக்கொள்ளும் முறையிலா, அவர் எமது பதிலுக்காகக் காத்திருந்து பேசும் பாணியிலா? எல்லாமே வித்தியாசமாயிருந்தது. அவர் கற்பித்தலை வேறு வடிவிற்கு மாற்றியிருந்தார்.

ஒரு விடயத்தைக் கற்பித்துவிட்டு, நாம் அதனை முயன்று பார்க்க பயிற்சிகள் தந்துவிட்டு, அமைதியாக வகுப்பறையின் யன்னலருகே நின்று புகைக்கத் தொடங்குவார். புகைத்துக்கொண்டே வானத்தை வெறித்துக்கொண்டு நிற்கும் அவரைப் பார்க்கும்போது இனம் புரியாத கவலை ஆட்கொள்ளும். 

அவர் தந்த பயிற்சிக் கணக்குகளை யார் முதலில் அவரிடம் காட்டி, "சரி" எடுப்பது என்பதில் எமக்குள் போட்டி. அடித்துப் பிடித்துக்கொண்டு, ஒருவர் கொப்பியை இன்னொருவர் பறித்தெடுத்து அவரிடம் கணக்குக் காட்டுவோம். எமது சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை அவர் சிரித்துக்கொண்டே சகித்துக்கொண்டார். ஒரு ஆசான் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு அவர் இலக்கணமாகத் தெரிந்தார். அதுவரை கணிதத்தில் எமக்கிருந்த வெறுப்பை நீக்கி, நாம் அதனை விரும்புவதில் அவர் வெற்றி கண்டார். "நீங்கள் நினைப்பது போல கணிதம் அப்படியொன்றும் கடிணமனாது இல்லை" என்று எங்களை நம்பவைப்பதில் வெற்றி கண்டார். அதுவரை யாரென்று தெரியாமல் இருந்த எமக்கு பெயர் சொல்லி அழைத்து புதிய முகவரியை அவர் தந்தார். வகுப்பின் கடைப்பிள்ளைகள், காவாலிகள் என்று எமக்கு மேல் இருந்த போர்வையினை தனி மனிதனாக பேரின்பராஜா சேர் மெது மெதுவாக விலக்கிக்கொண்டு வந்தார். இடையிடையே வகுப்பிற்கு வந்து செல்லும் கமலா டீச்சரிடம் எம்மைப்பற்றிப் பெருமையாகப் பேசுவார், கமலா டீச்சருக்கே எம்மைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்திருக்கும். 

பேரின்பராஜா சேருடனான கணித பாட வகுப்பிற்காக மட்டுமே பாடசாலைக்கு வரவேண்டும் என்று விரும்பினேன். வேறு எதுவும் எனக்கு முக்கியமானதாக அன்று தெரியவில்லை எனக்கு. எட்டு மணித்தியாலம் நடக்கும் பாடசாலை நேரத்தில் வெறும் 40 நிமிடங்களே பேரின்பராஜா சேரின் வகுப்பில் இருக்கக் கிடைப்பதுபற்றிக் கவலைப்படத் தொடங்கினேன். எம்மைத்தவிர பேரின்பராஜா சேர் வேறு எவருக்கும் படிப்பிப்பதில்லை என்றும் நம்பத் தொடங்கினேன். 

வகுப்பின் கற்றுக்குட்டிகள், கடைவரிசை காவாலிகள் புதிய ஆசிரியருடன் எப்படி பயணிக்கிறார்கள் என்று அறியும் ஆவல் சின்னையா டீச்சரின் "பிரபல்யமான" மாணவர்களுக்கு வந்திருக்க வேண்டும். அடிக்கடி எம்மிடம் பேரின்பராஜா சேரின் கற்பித்தல் பற்றிக் கேட்கத் தொடங்கினார்கள். 

சேர் பற்றிய நக்கலுடன் ஆரம்பிக்கும் அவர்களது கேள்விகளில் ஏளனமே தொக்கி நின்றாலும், நாம் எப்படிக் கற்கிறோம் என்பது பற்றி அறியும் ஆவலும் இருந்தது. அதிலும் குறிப்பாக சிலர் சின்னையா டீச்சரின் "ரெக்கி" களாக இருந்தார்கள். அதாவது, பேரின்பராஜா சேர் எப்படிப் படிப்பிக்கிறார் என்பதை இவர்கள் மூலம் சின்னையா டீச்சர் அறிய விரும்பியிருக்கலாம். 

எமது "சேர்" பற்றிப் பெருமையாகப் பேசக் கிடைத்த எந்தத் தருணத்தையும் இழக்க நாம் விரும்பவில்லை. ஆகவே, அவரது புராணமே எமது நாவில் தவழத் தொடங்கியது. ஆனால்,பிரபல்யமான மாணவர்களில் சிலர் நம்ப விரும்பவில்லை. சின்னையா டீச்சரில் எமக்கிருக்கும் கோபமும், எரிச்சலுமே பேரின்பராஜா பற்றி புராணம் பாட வைக்கிறதென்று கூறினார்கள். சின்னையா டீச்சரா? யார் அது என்று அவரை ஓரளவிற்கு நாம் முழுமையாகவே மறந்துவிட்டிருந்தோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லோருக்கும் பாடசாலை அனுபவங்கள் உண்டு ஆனால் எல்லோராலும் அவற்றை சரியாகவும் சுவையாகவும் வெளிப்படுத்த முடிவதில்லை.....உங்களிடம் அந்த ஆற்றல் இருப்பதும் அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வதும்  வரப்பிரசாதம்.......உங்களின் பாடசாலை அனுபவங்கள் படிக்கும் பலருக்கும் பல நல்ல செய்திகளை கூறும் சிறந்த கட்டுரையாக வருகின்றது......தொடருங்கள் ரஞ்சித்.......!  👏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூன்றாம் தவணைப் பரீட்சையும் வந்தது. அதாவது பேரின்பராஜா சேர் எமக்கு ஆசிரியராக வந்த பின்னர் நடக்கப்போகும் முதலாவது கணிதப் பரீட்சை. ஆகவே, நாம் மட்டுமல்லாமல், சின்னையா டீச்சர், அவரது பிரபல்யமான மாணவர்கள் என்று பலரும் "ஆவலுடன்" காத்திருந்த பரீட்சை அது. 

என்னவோ பரீட்சை முன்னரைப் போலவே கடிணமானதாகத்தான் இருந்தது எமக்கு. அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று ஆளாளுக்குக் கூறிக்கொண்டிருந்தோம். சின்னையா டீச்சரின் மாணவர்களுக்கும் பேரின்பராஜா சேரின் சீடர்களான எமக்கும் இடையே ஒரு பனிப்போரே அப்போது நடந்துகொண்டிருந்தது. "அடேய், உங்களுக்கு ஆர் வந்து படிப்பிச்சாலும், உங்கட மூளைக்குள்ள எதுவும் ஏறாதடா" என்று கூறிச் சிரித்தார்கள். "ஒரு நாளைக்கு உங்களுக்கு ஆப்பு வைப்பமடா" என்று கூறிவிட்டு வருவோம். அதைத்தவிர அப்போதைக்கு கூறுவதற்கு எம்மிடம் எதுவுமே இருக்கவில்லை. 

பரீட்சைப் பெறுபேறும் வந்தது. இம்முறையும் சின்னையா டீச்சரின் மாணவர்களே முன்னணியில் இருந்தார்கள். எமது மாணவர்களின் அதிகூடிய புள்ளி நூற்றுக்கு அறுபது. ஆனாலும் முன்னேறியிருக்கிறோம் என்று புரிந்தது. 23 இலிருந்து 60 இற்கு வருவதென்பது நல்ல பாய்ச்சல்தான். எம்மில் ஒருவனால்க் கூட சின்னையா டீச்சரின் மாணவர்களை வெல்லமுடியாமல்ப் போய்விட்டதே என்கிற ஆற்றாமை மனதில் குடிகொண்டிருக்க, பேரின்பராஜா சேரின் வரவிற்காகக் காத்திருந்தோம். சேர் வந்து ஒவ்வொருவரிடமும் அவரவர் புள்ளிகள் பற்றிக் கேட்கத் தொடங்கினார். "அறுபது சேர்" என்று ஏமாற்றத்துடன் கூறினேன். அவர் கவலைப்படவில்லை. "நீ முன்னரைக் காட்டிலும் முன்னேறியிருக்கிறாய். சிறிதுகாலத்திலேயே நீங்கள் அனைவரும் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். அடுத்தமுறை இன்னும் சிறப்பாகச் செய்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று கூறிவிட்டு தனது பணியை ஆரம்பித்தார். சோர்ந்துபோகாமல் எம்மை தூக்கி நிறுத்தி, தட்டிக்கொடுத்து, நம்பிக்கை தந்த சேருக்காகவாவது நாம் படிக்க வேண்டும் என்கிற உறுதி ஏற்படத் தொடங்கியது.

சில மாதங்கள் போயிருக்கும். சின்னையா டீச்சரின் வகுப்பிலிருந்து சுகந்தும், நசீரும் எமது வகுப்பிற்கு வர விரும்பினார்கள். சின்னையா டீச்சர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பேரின்பராஜா சேருடன் வாக்குவாதப் பட்டார். பாவம் சேர். சுகந்தையும் நசீரையும் எங்களுடன் இழுத்துவந்தது நாங்கள், சேருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. வெறும் 7 அல்லது 8 பேருடன் ஆரம்பித்த பேரின்பராஜா சேரின் வகுப்பு பெருக்கத் தொடங்கியது. வாரங்கள் செல்லச் செல்ல சின்னையா டீச்சரின் வகுப்பிலிருந்து வெறும் 6 மாணவர்களைத்தவிர மீதி அனைவருமே எம்முடன் இணைந்துவிட்டார்கள். ஒவ்வொரு மாணவனும் எம்முடன் வந்து இணையும்போது சேர் சங்கடப்பட்டார். சின்னையா டீச்சர் தன்னுடன் வாக்குவாதப்படலாம் என்று அவர் அஞ்சினார். ஆனால், ஒரு கட்டத்தின் பின்னர் சின்னையா டீச்சர் இதுகுறித்துப் பேசுவதையே நிறுத்திவிட்டிருந்தார் என்றுதான் நினைக்கிறேன். 

பத்தாம் வகுப்பிற்கு வந்துவிட்டிருந்தோம். பேரின்பராஜா சேரின் வகுப்புப் பற்றி பாடசாலையில் பலரும் பேசினார்கள். "ஸ்பெஷல்" கிளாஸ் என்றும் கூறத் தலைப்பட்டார்கள். சில மாத காலங்களுக்கு முன்னர் வரை காவாலிகள், கடைவரிசை குழப்பவாதிகள் என்று மட்டுமே அறியப்பட்ட எமக்கு அறிமுகம் கிடைத்தது. அவரிடம் மாணவர்களாக இருக்கிறோம் என்பதே பெருமையாக எமக்குத் தெரிந்தது. 

பத்தாம் ஆண்டின் தவணை ஒன்றின் பரீட்சை வந்தது. வழமை போலவே சின்னையா டீச்சர் பரீட்சைத் தாளினை தயாரித்திருந்தார். ஆனால், இம்முறை நாம் ஆயத்தமாக இருந்தோம். அப்பரீட்சை எமக்கு கடிணமானதாக அப்போது தெரியவில்லை. பேரின்பராஜா சேர் சொல்லிக்கொடுத்தவாறே எழுதினோம். பிரச்சினை இருக்கவில்லை. இம்முறை செய்துவிட்டோம் என்கிற நம்பிக்கையுடன் வெளியே வந்தோம்.

எதிர்பார்த்தபடியே நல்ல பெறுபேறுகள் எமக்கு. பலர் 90 இற்கு அதிகமான பெறுபேறுகளை எடுத்தார்கள். எமது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சேரை ஓடிச்சென்று கட்டியணைத்து அழவேண்டும் போல இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித்...  உங்களின் பாடசாலை  அனுபவப் பகிர்வுகளை மேலோட்டமாக வாசித்தேன்.
நல்ல எழுத்து நடையுடன் வாசிக்க சுவாரசியமாக இருந்தது. 👍
நிச்சயம் நேரம் ஒதுக்கி, முழுவதையும் ரசித்து வாசிப்பேன்.   🙂

3 hours ago, ரஞ்சித் said:

ஆசான்

1988.....

இதுதான் அந்த ஆண்டு. சரியாக இருக்கும். என் வாழ்நாளில் நான் சந்தித்த இன்னொரு ஆளுமையின் கதை இது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியே தவணை இரண்டும் முடிந்தது. எமது மாணவர்கள் மற்றைய பாடங்களில் பிந்தங்கியிருந்தாலும், கணிதத்தில் மிகச் சிறப்பாகச் செயற்படத் தொடங்கினார்கள். பேரின்பராஜா சேரின் பாதிப்பு எம் அனைவரிலும் வெகுவாகப் பரவியிருந்து. சேர் எம்முடன் எப்போதுமே இருப்பார் என்கிற அசட்டுத் தைரியமும் கூடவே வளர்ந்துகொண்டு வந்திருந்தது. கணிதத்தைக் கடந்து இன்னமும் 7 பாடங்கள் இருக்கின்றன என்கிற சிறு எண்ணம் கூட எமக்கு அன்று இருக்கவில்லை, "பார்த்துக்கொள்ளலாம்" என்கிற அசட்டுத்தனமான சமாதானப்படுத்தல்களுடன் கணிதத்தை மட்டுமே தொடர்ந்து படித்து வந்தோம். 

ஆண்டிறுதியின் பரீட்சை. ஜி. சி.இ சாதாரணதர பொதுப்பரீட்சைக்கு எல்லோரும் ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். நாமும் தான். கணிதப் பரீட்சைக்கு இன்னும் சில வாரங்களே இருக்க, வழமை போல பேரின்பராஜா சேரின் வகுப்பிற்காகக் காத்துக்கொண்டிருந்தோம். வழமையாக நேரத்திற்கு வரும் சேர் அன்று வரவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் கமலா டீச்சரும் சேரும் ஒன்றாக வந்தார்கள். சேரின் முகம் அமைதியாக இருந்தது. கமலா டீச்சர் பேசத் தொடங்கினார்.

"பிள்ளையள், நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்குக் கஷ்ட்டமாக இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், நான் அதனை உங்களிடம் இப்போது கூறுவதுதான் சரியாக இருக்கும்" என்று கூறிவிட்டு சிறிது மெளனத்திற்குப் பின்னர் தொடர்ந்தார். 

"உங்களின் சேர் இன்றுடன் உங்களிடமிருந்து விடை பெறப்போகிறார்" என்றதும் எமக்கு அழுகையே வந்துவிட்டது. இல்லையில்லை, இது நடக்கக் கூடாது. சேர் எங்களை விட்டு போகக் கூடாது என்று கதறத் தொடங்கினோம். கமலா டீச்சரினால் எங்களை ஆசுவாசப்படுத்த முடியவில்லை. 
"சேர் இன்றைக்கு உங்களுக்கு படிப்பிக்கப்போறதில்லை, நீங்கள் அவருடன் இன்று உங்களின் கடைசி வகுப்பினை நடத்தலாம்" என்று கூறிவிட்டு சேரை எங்களுடன் விட்டு விட்டுச் சென்றுவிட்டார். நாங்கள் துயர் தோய்ந்து, சேர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க அமைதியாவிருந்தோம்.

சேர் பேசத் தொடங்கினார்.

"பிள்ளையள், நான் ஒரு பள்ளிக்கூடத்திற்கு மட்டுமே சொந்தமானவனாகவோ, உங்களுக்கு மட்டும் கற்பிப்பவனாகவோ இருக்கமுடியாது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கும் அனைத்துப் பாடசாலைகளிலும் கணித பாடத்தில் சங்கடப்படும் மாணவர்களை உற்சாகமூட்டி, அவர்களை கணித பாடத்தில் மிளிரச் செய்வதே எனது பணி. இதற்காகவே மாவட்ட கல்விச் சபை என்னை இருவருடங்களுக்கொருமுறை ஒரு பாடசாலையினைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. இங்கே வரும்போது சில மாணவர்களுக்காகவே கற்பிக்கப் போகிறேன் என்று எண்ணிவந்தேன். இப்போது 25 மாணவர்கள் என்னிடம் கற்றீர்கள், உங்களின் பெறுபேறுகளைப் பார்க்கும்போது மகிழ்கிறேன். உங்களைப் போன்றே இம்மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பாடசாலை ஒன்றின் மாணவர்களை இனிவரும் இரு வருடங்களுக்குக் கற்பிக்கச் செல்லப்போகிறேன். அவர்களுக்கும் எனது உதவி தேவை. இந்த இருவருடங்களிலும் என்னை உங்களின் ஆசிரியராக மதித்து நடத்தியமைக்கு நன்றி, போய் வருகிறேன்" என்று சேர் கூறி முடிக்கவும் நாம் அனைவரும் அழத் தொடங்கினோம்.  ஏனென்றால், அவர் எமக்கு ஆசிரியர் மட்டுமல்ல. எமது வழிகாட்டியும், ஆசானும், நம்பிக்கையும் அவர்தான் என்று நாம் நம்பியிருக்க அவர் எம்மை விட்டு பிரிந்து செல்வதென்று சொல்லிக்கொண்டிருந்தார். மனதில் பெரும் பகுதியொன்று அகன்று செல்வது போன்ற உணர்வும், மிகப்பெருத்த வெற்றிடம் எம்மை ஆக்கிரமிக்கத் தொடங்குவது போன்றும் உணர்ந்தோம். அவர் மெல்ல மெல்ல வகுப்பறையினை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்க நாம் அவர் பின்னால் என்ன பேசுவதென்று புரியாது பிந்தொடர, நாம் எவரும் எதிர்பாராத தருணத்தில் சுகந்த் அவரின் காலில் விழுந்து அழத் தொடங்கினான். அவனைத் தூக்கி நிறுத்திவிட்டு, சேர் அமைதியாக பிரிந்து சென்றார்.

அவர் சென்ற திக்கை வெறித்துப் பார்த்துக்கொண்டு வகுப்பறைக்கு வர மனமின்றி வெகுநேரம் அங்கே நின்றிருந்தோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் கணிதம் வேப்பங்காயாய் இருந்தது பத்தாம் வகுப்பில் குமார் மாஸ்ரரின் கற்பித்தலால் சாதாரண தரத்தில் C எடுத்தது மறக்க முடியாதது.
சின்னையா மிஸ் போல நிறைய பேர் இருக்கினம்.
உங்களுடைய எழுத்து நானும் உங்கள் வகுப்பில் ஒருவனாக கற்பதாக எண்ண வைத்தது. நன்றி உங்கள் பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சேர்!

நீங்கள் எங்கே. எப்படி இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் வாழும் இன்றைய வாழ்விற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தவர்களில் நீங்கள் முக்கியமானவர். நீங்கள் எங்கிருந்தாலும் நீடூழி வாழ வாத்துகிறேன்! நன்றி சேர்!

மட்டக்களப்பில் நான் வாழ்ந்த மிகச்சிறிய 3 வருடத்தில் எனக்கு ஆதரவாகவும் தேறுதலாகவும் இருந்து கற்பித்த ஆசிரியர்களான திருமதி அகஸ்ட்டின் (சமய பாடம்), திருமதி சேவியர்(ஆங்கிலம்), திருமதி கோமதி (வர்த்தகம்), திருவாளர் சுந்தரம்(வர்த்தகம்), திரு மணியம் (தமிழ்) உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி!

முற்றும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் வாசிக்க வில்லை.ஆறதலாக வாசித்து எனது கருத்தை பகிர்கிறேன்.மேலோட்டமாக வாசித்ததில் எழுத்து நடை அருமை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித் வழமையில் உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் வாசிப்பேன்.

ஆனாலும் இந்தப் பதிவை இன்னமும் வாசிக்கவில்லை.
நேரமிருக்கும் போது நிச்சயம் வாசித்து எனது கருத்துக்களையும் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆற அமர இருந்து வாசித்தேன். நல்லதொரு சுயசரிதை கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் அதிஷ்டாசாலி ரஞ்சித் ,,,உங்களுக்கு சரியான நேரத்தில் உதவ பேரின்பராசா சேர் கிடைத்தார்...கமலா டீச்சருக்கும்  நீங்கள் நன்றியுடையவராக இருக்க வேண்டும் .அவர் அண்மையில் ஓர் ,இரு வருடங்களுக்கு முன்பு காலமானார் ...அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 
சின்னையா டீச்சருக்காவது முன் வரிசை மாணவர்களுக்கு எப்படி படிப்பிப்பது என்று தெரிந்திருந்தது ..எங்களுக்கு வந்து வாய்த்த கணித ஆசிரியருக்கு அதுவும் தெரியாது ...அதுவும் 8ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை ஒரே ஆசிரியர்...சொல்லவும் வேண்டுமா ...அன்று நாங்கள் இருந்த நிலையில் ரியூசனுக்கு போகவும் வழி   இருக்கவில்லை .
மைக்கல் கல்லூரியில் உங்கள் பட்ச் மாணவர்கள் திறமையானவர்கள் என்று நினைக்கிறேன் .சுகந்தன் அண்ணா லண்டனின் வைத்தியாக இருக்கிறார். அவர் அப்பா மட்டுவில் பெரிய பணக்கார வியாபாரி .அவர் மகளுக்கு வீட்டில பிரைவேட் வகுப்பு கணித பாடத்துக்கு கொடுத்து இருந்தார் ..ஆனால் மதன் [இப்போது பெரிய வைத்தியராக இருக்கிறார் .] மெய்யழகன் போன்றோர் நடுத்தர குடும்பத்தை  சேர்ந்தவர்கள் ...தமது திறமையால் முன்னுக்கு வந்தவர்கள் .. உங்கள் இந்த கதை பழைய நினைவுகளை கிளறி விட்டது ...ஆக்கத்திற்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த, தாக்கத்தினை உண்டாக்கிய மனிதர்கள் பற்றிப் பேசவேண்டும் என்று விரும்பினேன். அதனால்,  அவ்வப்போது இவர்கள் பற்றி எழுதிவருகிறேன். இதன்மூலம் எனது சிறுவயது நினைவுகளை இரைமீட்டிப் பார்க்கவும் என்னால் முடிகிறது.

பேரின்பராஜா சேர் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர். இடையிடையே கல்வித்திணைக்களத்தின் மூலம் வெவ்வேறு பாடசாலைகளுக்குச் சென்று கஷ்ட்டப்படும் மாணவர்களுக்கு கணிதத்தினைக் கற்பிப்பதில் தேர்ச்சி பெற்றவர். கணிதத்தின்மீது எனக்கு விருப்பினை உருவாக்கியவர் அவர்தான். அவரன்றி இன்று ஒரு பொறியியலாளனாக நான் வந்திருக்கச் சாத்தியமில்லை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆகவேதான் அவர்பற்றிப் பேசுவேண்டும் என்று விரும்பினேன். 

இதே காலத்தில் இன்னும் பல ஆசிரியர்களும் எனக்குக் கற்பித்தார்கள். அகஸ்டின் டீச்சர் மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் நாடகம் ஒன்றிலும் பங்குகொள்ளும் அனுபவம் கிடைத்தது. நத்தார் கால ஒளிவிழா நிகழ்வுகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அரங்கேற்ற அவர் பட்ட பாடும், எம்மைப் பயிற்றுவிப்பதில் அவர் காட்டிய ஈடுபாடும் மெச்சத்தக்கது. தனது சொந்தப் பிள்ளைகள் போலவே அவர் எம்மை நடத்தினார். சுயநலமின்றி பிள்ளைகளை வழிநடத்தி, தம்மால் முடிந்தளவு முன்னேற்றப் பாடுபடும் இவர்கள் போன்ற ஆசிரியர்களிடம் கற்றது எனது பாக்கியமே. 

அதேபோல கோமதி டீச்சர். பாடசாலையில் எனது வகுப்பிற்கு வர்த்தகமும் கணக்கியலும் அவர் கற்றுத்தருவதில்லை. ஆனால், நான் ஒருமுறை அவரிடம் கணக்கியலில் உதவி கோரியிருந்தேன். எனக்கு பாடசாலையில் அவர் படிப்பிக்காதபோதும், மாலை நேரங்களில் இன்னும் ஒரு நண்பனுடன் அவரின் வீட்டிற்கு அழைத்துக் கற்றுத்தந்தார். டியூஷன் பணத்தை வாங்க மறுத்து சில மாதங்களாவது எமக்குச் சொல்லித் தந்தார். 

ஆங்கிலம் கற்றுத்தந்த சேவியர் டீச்சர். சொந்தப் பிள்ளைகளுடன் பேசுவது போல மிகவும் அன்பாகவும், இயல்பாகவும் எல்லோருடனும் பேசும், பழகும் அவர் வகுப்பிற்கு வந்தாலே கலகலப்பாகிவிடுவோம். மாணவர்கள் மேல் அவர் வைத்திருந்த நேசம் உண்மையானது.

அதே போல தமிழ் கற்றுத்தந்த மணியம் (பெயர் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்) மாஸ்ட்டர். வகுப்பில் இறுதிவாங்கில் இருக்கும் ஒருவனால் விவரணக் கட்டுரையும் எழுதமுடியும் என்று முழு வகுப்பிற்கும் சொல்லிக் காட்டியவர் அவர். மாலை நேரக் காட்சியை வர்ணித்து எழுதுங்கள் என்று கூறியபோது, நான் எழுதிக்கொடுத்த கட்டுரையினை, சுகந்தை அழைத்து, "இதை முன்னுக்கு வந்து நின்று சத்தமாக வாசி" என்று அவர் கூறவும், சுகந்தும் அதனைப் படித்து முடித்தான். வாசித்து முடித்தவுடன், "ஆர் இதை எழுதியது?
" என்று கேட்கவும், நான் கையை உயர்த்திக் காட்டினேன். அன்றிலிருந்து வகுப்பில் தமிழ்க் கட்டுரை எழுதுவதென்றால், என்னிடம் மாணவர்கள் வருவதும் நடந்தது. 

இவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் எனது வாழ்க்கையை தீர்மானித்திருக்கிறார்கள்.இவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/6/2022 at 18:03, பிரபா சிதம்பரநாதன் said:

சில ஆசிரியர்கள் எங்களது எண்ணங்களை விட்டு இலகுவில் மறைய மாட்டார்கள். கல்லூரி நினைவுகளை மீட்டும் ஒரு கதை.. 

ஆசிரியர்கள் என்கிற வகையில் என்னை அதிகம் பாதித்தவர் பேரின்பராஜா சேர். அடுத்ததாக நான் அதிகம் மதிப்பு வைத்திருப்பவர் பிரேம்நாத் மாஸ்ட்டர். அவர்பற்றியும் முன்னர் ஒருமுறை எழுதியிருக்கிறேன். இவர்களின் பாதிப்பும், அவர்களுடனான் எனது நினைவுகளும் என்றுமே மறக்கமுடியாதவை.

 

On 29/6/2022 at 18:52, suvy said:

உங்களிடம் அந்த ஆற்றல் இருப்பதும் அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வதும்  வரப்பிரசாதம்.......உங்களின் பாடசாலை அனுபவங்கள் படிக்கும் பலருக்கும் பல நல்ல செய்திகளை கூறும்

உங்களின் ஆதரவிற்கு நன்றி சுவி. எனது எழுத்து நடை எப்போதுமே ஒரே மாதிரியேதான் இருக்கிறது. இதனை மாற்ற என்னால் முடியவில்லை. சிலருக்கு இதனைப் படிக்கும்போது "ஒரே மாதிரி எழுதுகிறான்" என்கிற சலிப்பும் உருவாகலாம். அடுத்ததாக, எனது அனுபவக் குறிப்புகளில் சில வெறும் அனுபவங்கள் மட்டும்தான். பெரிதாக எதுவுமே இருப்பதில்லை. ஆனாலும், அனுபவத்தினை இங்கு பலருடன் பகிரும்போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. அதனால் எழுதுகிறேன். அத்துடன், எனது அனுபவங்களில் யாழில் இருக்கும் ஒருசிலராவது வந்துபோவார்கள், குறைந்தது நான் எழுதும் விடயங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கும் எனது அனுபவக் குறிப்பு ஒரு நினைவு மீட்டலாக மாறியிருக்கிறது.

 

On 29/6/2022 at 20:00, தமிழ் சிறி said:

ரஞ்சித்...  உங்களின் பாடசாலை  அனுபவப் பகிர்வுகளை மேலோட்டமாக வாசித்தேன்.
நல்ல எழுத்து நடையுடன் வாசிக்க சுவாரசியமாக இருந்தது. 👍
நிச்சயம் நேரம் ஒதுக்கி, முழுவதையும் ரசித்து வாசிப்பேன்.   🙂

 

மிக்க நன்றி சிறி, நான் எழுதுவதை படிக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். உங்களின் ஆதரவுக்கு எனது நன்றிகள்.

 

On 29/6/2022 at 20:23, ஏராளன் said:

உங்களுடைய எழுத்து நானும் உங்கள் வகுப்பில் ஒருவனாக கற்பதாக எண்ண வைத்தது. நன்றி உங்கள் பகிர்வுக்கு.

உங்களின் கருத்தைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். எனது எழுத்து உங்களையும் எனது அனுபவப் பகிர்வில் ஒருவனாக உணரவைத்தது என்பது மனநிறைவைத் தந்தது. மிக்க நன்றி !

 

20 hours ago, சுவைப்பிரியன் said:

இன்னும் வாசிக்க வில்லை.ஆறதலாக வாசித்து எனது கருத்தை பகிர்கிறேன்.மேலோட்டமாக வாசித்ததில் எழுத்து நடை அருமை.

மிக்க நன்றி சுவைப்பிரியன். நீங்களும் மட்டக்களப்பில் வாழ்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சிலவேளை நான் குறிப்பிடும் ஆசிரியர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். 

 

19 hours ago, ஈழப்பிரியன் said:

ரஞ்சித் வழமையில் உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் வாசிப்பேன்.

எனக்குத் தெரியும் அண்ணா. நான் எழுதும் எல்லாக் கட்டுரைகளிலும் நீங்கள தவறாது வந்து கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். தொடர்ச்சியாக உற்சாகமூட்டி ஆதரவளித்திருக்கிறீர்கள். வழமைபோல, இன்றும் உங்களின் அயராத ஆதரவிற்கு நன்றியண்ணா!

 

16 hours ago, குமாரசாமி said:

ஆற அமர இருந்து வாசித்தேன். நல்லதொரு சுயசரிதை கட்டுரை.

நன்றி குமாரசாமியண்ணை. உங்களுடன் இக்களத்தில் பலவிடங்களில் முரண்பட்டு எழுதியிருக்கிறேன். அப்படியிருந்தும் நீங்கள் தொடர்ந்தும் எனது அனுபவக் குறிப்புக்களில் ஆதரவு தந்துவருகிறீர்கள். மிக்க நன்றியண்ணா!

4 hours ago, ரதி said:

நீங்கள் அதிஷ்டாசாலி ரஞ்சித் ,,,உங்களுக்கு சரியான நேரத்தில் உதவ பேரின்பராசா சேர் கிடைத்தார்...கமலா டீச்சருக்கும்  நீங்கள் நன்றியுடையவராக இருக்க வேண்டும் .அவர் அண்மையில் ஓர் ,இரு வருடங்களுக்கு முன்பு காலமானார் ...அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 
சின்னையா டீச்சருக்காவது முன் வரிசை மாணவர்களுக்கு எப்படி படிப்பிப்பது என்று தெரிந்திருந்தது ..எங்களுக்கு வந்து வாய்த்த கணித ஆசிரியருக்கு அதுவும் தெரியாது ...அதுவும் 8ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை ஒரே ஆசிரியர்...சொல்லவும் வேண்டுமா ...அன்று நாங்கள் இருந்த நிலையில் ரியூசனுக்கு போகவும் வழி   இருக்கவில்லை .
மைக்கல் கல்லூரியில் உங்கள் பட்ச் மாணவர்கள் திறமையானவர்கள் என்று நினைக்கிறேன் .சுகந்தன் அண்ணா லண்டனின் வைத்தியாக இருக்கிறார். அவர் அப்பா மட்டுவில் பெரிய பணக்கார வியாபாரி .அவர் மகளுக்கு வீட்டில பிரைவேட் வகுப்பு கணித பாடத்துக்கு கொடுத்து இருந்தார் ..ஆனால் மதன் [இப்போது பெரிய வைத்தியராக இருக்கிறார் .] மெய்யழகன் போன்றோர் நடுத்தர குடும்பத்தை  சேர்ந்தவர்கள் ...தமது திறமையால் முன்னுக்கு வந்தவர்கள் .. உங்கள் இந்த கதை பழைய நினைவுகளை கிளறி விட்டது ...ஆக்கத்திற்கு நன்றி 

நீங்கள் கூறுவது மெத்தச்சரி. பேரின்பராஜா சேர் வந்திருக்காவிட்டால் நிச்சயம் எனது வாழ்வு மாறிப்போயிருக்கும். ஆம், நான் அதிஷ்ட்டசாலிதான். 
கமலா டீச்சருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். பாடசாலையில் படித்த காலத்திலும், பலகலைக் கழக அனுமதிக்குக் காத்திருந்த காலத்திலும் அவர் எனக்கு உதவியிருக்கிறார். கண்டிப்பானவர், ஆனால் உதவும் மனம் கொண்டவர்.  அவர் மரணித்த செய்தி கேள்விப்பட்டேன். அவரது மூத்த மகன், பிலிப் இங்குதான் இருக்கிறார். பலமுறை அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். தேவநம்பி என்று இன்னொரு மகனும் அந்தக் காலத்தில் எமக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். இப்போது பொறியியலாளராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
எமது வகுப்பில் படித்த பல மாணவர்கள் பலகலைக் கழகம் சென்றார்கள். மதனும், சுகந்தும் வைத்தியர்களானார்கள். ராதா, கிரிந்தி, மெளலி ஆகியோர் பொறியியிலாளர்களானார்கள். மெய்யழகன் பட்டப்படிப்பு முடித்ததாகக் கேள்விப்பட்டேன். பிரபா தொழிநுட்ப அதிகாரியாகவும் ஏனையவர்கள் நல்ல துறைகளில் தொழில்புரிவதாகவும் அறிந்தேன். ஆம், அந்த வகுப்புக் கொஞ்சம் பிரபலம் தான்.

எனது நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ரதி. உலகம் சின்னதுதான்.

உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

றஞ்சித் இப்போது தான் முழுமையாக வாசித்து முடித்தேன்.

சிறிய வயதில் குடும்ப சூழலால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.அதனால்த் தான் உங்கள் தம்பியும் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

தம்பியைத் தொடர்ந்து உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் எழவில்லையா?
தொடர்ந்தும் யாழில் இருந்திருந்தால் குழப்பம் வந்திருக்கலாம்.

இப்போது கூட உங்களை எண்ண மிகவும் சந்தோசமாக உள்ளது.
சிறிய வயதில் சந்தோசம் மட்டுமே அனுபவிக்க வேண்டிய வயதில் மிகவும் ஏக்கம் நிறைந்த சோகமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்கள்.

இத்தனை துன்பத்திலும் கடவுள் மாதிரி ஒரு ஆசிரியர் வந்தது பெரியதொரு திரும்பு முனையே.

நீங்கள் சிறுவயதில் பட்ட துன்பங்களுக்காக இன்று நல்லதொரு நிலையில் இடத்தில் இருக்கிறீர்கள்.மிகவும் சந்தோசமாக உள்ளது.

முன்வாங்கு மாணவர் செல்வாக்குள்ள மாணவர் என்று சகல பள்ளிகளிலும் இருப்பார்கள் போல தோன்றுகின்றது.

கடைசியாக வேடிக்கை என்னவென்றால் உங்கள் நண்பர்களை அடையாளம் புரிந்து தற்போது என்னென்ன செய்கிறார்கள் என்று @ரதிஎழுதியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முழுவதும் எழுதிய பின் வாசிக்கலாம் எனக் காத்திருந்தேன். ஆம் பள்ளிக்கால அனுபவங்களும் எம்மை முன்னேற்ற செய்யும் ஆசிரியரும் மறக்க முடியாதவர்கள்.  பாடசாலை வகுப்பின் பின்  "எனக்கும் கணித்துக்கு ஒரு பிரைவேற் கிளாஸ்  மாஸ்டர்"  அமைத்திருந்தார்.  " S " எடுத்த என்னை கணித்துக்கு " D"  எடுக்க வைத்தார்   பள்ளிக் கால நினைவுகளை மீட டுவது  "மீண்டும் பள்ளிக்கு செல்லலாம் " என ஆவலைத் துவண்டும் . பகிர்வுக்கு நன்றி .  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பானதொரு அனுபவப்பதி(பகிர்)வு. சிறப்பு. எழுத்துநடை இதயத்தைத் தொட்டுச் செல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்துநடை இயல்பானதே. மறக்கமுடியாத ஆசான்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் இருப்பார்களென்றே நம்புகின்றேன். உங்கள் ஆக்கத்தோடு ஒரு நடையாக வந்துபோகும் உணர்வு. சிலஇடங்களில் கண்கள் எனையறியாமலே பனிக்கிறது. சிறப்புக் கவனிப்புப் பெறுதல் என்பதை மாணவர்களது பெற்றோர் மற்றும் குமுகாய ஏற்ற இறக்கங்களும் இணைந்து எல்லா இடங்களிலும் கோலோச்சியுள்ளதை உங்கள் அனுபவமும் பதிவு செய்துள்ளது. 

உங்கள் நேரத்துக்கும் ஆக்கத்துக்கும் நன்றி.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பிக்கும் ஆசான்கள் இருப்பார்கள். ஆனாலும் பேரின்பராஜா போன்ற ஒருவரைப் பார்ப்பது அரிது. அப்படியானவர்கள் பலரின் வாழ்வுக்கு ஒளியூட்டும் தீபமாகவே இருப்பார்கள். அவருடனான உங்கள் கடைசி வகுப்பை எழுதிய விதம் நெகிழ்வைத் தந்துவிட்டது.

 

13 hours ago, ரதி said:

சுகந்தன் அண்ணா லண்டனின் வைத்தியாக இருக்கிறார்.

சின்ன வயதிலேயே கண்ணாடி போட்டு இருந்திருந்தவர் என்றால் எமது ஊர்தான் பூர்வீகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, கிருபன் said:

ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பிக்கும் ஆசான்கள் இருப்பார்கள். ஆனாலும் பேரின்பராஜா போன்ற ஒருவரைப் பார்ப்பது அரிது. அப்படியானவர்கள் பலரின் வாழ்வுக்கு ஒளியூட்டும் தீபமாகவே இருப்பார்கள். அவருடனான உங்கள் கடைசி வகுப்பை எழுதிய விதம் நெகிழ்வைத் தந்துவிட்டது.

 

சின்ன வயதிலேயே கண்ணாடி போட்டு இருந்திருந்தவர் என்றால் எமது ஊர்தான் பூர்வீகம்.

ஓம், அவரேதான். அவசர அவசரமாகப் பேசுவார். திருகோணமலை வீதியில் அவரின் தந்தை கட்டிடப்பொருள் வியாபாரம் நடத்தி வந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/7/2022 at 01:02, ஈழப்பிரியன் said:

சிறிய வயதில் குடும்ப சூழலால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.அதனால்த் தான் உங்கள் தம்பியும் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

தம்பியைத் தொடர்ந்து உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் எழவில்லையா?
தொடர்ந்தும் யாழில் இருந்திருந்தால் குழப்பம் வந்திருக்கலாம்.

உண்மைதான். தம்பி இயக்கத்தில் இணைவதற்கு அப்பாவும் ஒரு காரணம். ஆனால், அவனுக்கு வேறு காரணங்களும் இருந்தன என்றே நினைக்கிறேன். 

1986  இல் இயக்கத்தில் இணைவதற்கு நண்பன் ஒருவனுடன் முயன்றேன். ஆனால், வீட்டில் பயம் காரணமாக அது கைகூடவில்லை. அதுமட்டுமில்லாமல், அப்போது எனக்கு வயது வெறும் 13 தான். புலிகளும் சேர்த்திருக்க மாட்டார்கள். அதற்குப்பின் இயக்கத்தில் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/7/2022 at 05:06, nochchi said:

சிறப்பானதொரு அனுபவப்பதி(பகிர்)வு. சிறப்பு. எழுத்துநடை இதயத்தைத் தொட்டுச் செல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்துநடை இயல்பானதே. மறக்கமுடியாத ஆசான்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் இருப்பார்களென்றே நம்புகின்றேன். உங்கள் ஆக்கத்தோடு ஒரு நடையாக வந்துபோகும் உணர்வு. சிலஇடங்களில் கண்கள் எனையறியாமலே பனிக்கிறது. சிறப்புக் கவனிப்புப் பெறுதல் என்பதை மாணவர்களது பெற்றோர் மற்றும் குமுகாய ஏற்ற இறக்கங்களும் இணைந்து எல்லா இடங்களிலும் கோலோச்சியுள்ளதை உங்கள் அனுபவமும் பதிவு செய்துள்ளது. 

உங்கள் நேரத்துக்கும் ஆக்கத்துக்கும் நன்றி.   

உண்மைதான்.

பேரின்பராஜா சேர் போன்றவர்கள் இருப்பது போல சின்னையா போன்றவர்களும் இருக்கிறார்கள்.  மாணவர்களின் கல்வியில் உண்மையாகவே அக்கறையுள்ளவர்கள் தம்மால் முடிந்தளவிற்கு அவர்களைக் கற்பிப்பார்கள். ஏனையோரைப் பொறுத்தவரை, கற்பித்தல் என்பது வருவாய்க்கான தொழில் மட்டும் தான். 

உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி !

On 1/7/2022 at 07:06, கிருபன் said:

ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பிக்கும் ஆசான்கள் இருப்பார்கள். ஆனாலும் பேரின்பராஜா போன்ற ஒருவரைப் பார்ப்பது அரிது. அப்படியானவர்கள் பலரின் வாழ்வுக்கு ஒளியூட்டும் தீபமாகவே இருப்பார்கள். அவருடனான உங்கள் கடைசி வகுப்பை எழுதிய விதம் நெகிழ்வைத் தந்துவிட்டது.

உங்கள் கருத்திற்கு நன்றி கிருபன்,

பேரின்பராஜா சேர் எம்மை விட்டுச் சென்றது மிகுந்த துயரினைத் தந்திருந்தது. அதற்குக் காரணம் அவர் எப்போதும் எம்முடன் இருப்பார் என்கிற அசட்டுத் தைரியமும், அவரின் பணி ஒவ்வொரு பாடசாலையாகச் சென்று கற்பிப்பதே என்னும் புரிதலும் இல்லாமல் இருந்ததும் தான்.

அவரால் பயனடைந்த பலநூறு மாணவர்களில் நானும் ஒருவன் என்பது பெருமைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.