வீதியோரம்.
மலர் ...........2.
அந்தப் பெண் கொஞ்சம் தெம்பு வந்து எழுந்து தன் நிலையைப் பார்க்கிறாள். நேற்று மாலை நடந்ததெல்லாம் மனதில் நிழலாடுகின்றது. கிழிந்த ஆடைகளோடு உடலெல்லாம் இரத்தம் வழிந்து உறைந்து இருக்கு. திரும்பி அந்த இளைஞனைப் பார்க்க அவனுக்கு நினைவுகள் வருவதும் போவதுமாய் புசத்திக் கொண்டு இருக்கிறான். அந்நேரம் ஏதோ ஸ்லோகங்கள் சொல்லியபடி காவியுடை தரித்து தலை மழித்த சாதுக்களும் சிறுவர்களும் அவ்வழியே நடந்து வருகின்றனர். அவர்கள் இவர்களின் நிலையைக் கண்டு விசாரித்து விட்டு இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை மறித்து அவர்களை பன்சாலையில் சேர்க்கும்படி சொல்லி கொஞ்சம் பெரிய சிறுவர்களை அவர்களுடன் அனுப்பிவிட்டு தாங்களும் விகாரையை நோக்கி விரைந்து நடக்கின்றனர்.
பௌத்த விகாரையில் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பிக்குமாரும் ஓரிரு வயதான பிக்குணிகளுமாய் சிரத்தையுடன் செய்கிறார்கள்.அவர்களின் காயங்களைக் கழுவி நீராட்டி மூலிகை தைலங்களால் வலிகுறையும் பொருட்டு நன்றாகத் தேய்த்து அமைதியாகத் தூங்க வைத்து விடுகிறார்கள். அப்படி மாலை ஐந்து மணிவரை நன்றாக உறங்கியவர்கள் பின் ஒவ்வொருவராய் எழுந்து வெளியே வருகிறார்கள்.அவர்களை வராந்தாவில் இருந்த பிக்குமார் அங்கன வந்து அமரும்படி கூறுகிறார்கள். அப்போது அங்கு வந்த தலைமைப் பிட்சுவானவர் பொதுவாய் அவர்களின் நலன்களை விசாரித்துக் கொண்டே பெயர் விபரங்களையும் கேட்டுக் கொள்கிறார். அதில் அந்த வாலிபனின் பெயர் விநோதன் என்றும், பெண்ணின் பெயர் மணிமேகலை என்றும், சிறுவன் யுகேந்திரன்,மற்றும் சிறுமி சுஜிதா என்றும் தெரிந்து கொள்கிறார்கள். அதிலும் அவர்கள் முன்பின் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்திருக்கவில்லை.நேற்று அந்த ஜீப்பில் கிடந்து வந்து வீதியில் விழுந்ததுவரை எதுவும் தெரியாது.
நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்து பிடித்து வரப்பட்டு வாரங்கள் மாதங்களாய் எங்கெங்கோ காம்புகளில் ஆளாளாய் கைமாறி சொல்லொனா சித்திரவதைகள் அனுபவித்துக் கொண்டு வந்த நிலையில் ஏதோ அவங்களுக்கு ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணத்தால் எல்லோரையும் கொண்டுவந்து வீதியில் வீசி விட்டுப் போய் விட்டார்கள்.இவர்களின் கதையைக் கேட்ட பிக்கு பிக்குணிகள் எல்லோரும் மிகவும் பச்சாதாபப்பட்டு வார்த்தைகளால் இவர்களை ஆறுதல் படுத்துகிறார்கள்.சிலநாளில் அவர்கள் அந்த வளாகங்களில் நடக்கவும் மடத்துக்கு தேவையான சில சில வேலைகள் செய்யவும் தயாராகி விடடார்கள்.
சில வாரங்களின்பின் சாதுக்களின் முறையான சிகிச்சையாலும் கவனிப்பாலும் உடல் தேறி நன்றாகக் குணமடைந்து விட்டனர். அன்று நல்ல பௌர்ணமி நாள். காலை நேரம் தலைமைப் பிக்குவானவரும் மற்றும் சிலரும் அவர்களைக் கூட்டிக் கொண்டு நடந்து வந்து அன்று எந்த வீதியோரத்தில் அவர்கள் விழுந்து கிடந்தார்களோ அங்கே வந்து சேர்ந்தார்கள். அங்கு கிடுகுகளால் ஒரு நீண்ட கொட்டில் போடப்பட்டு தரையில் பலதரப்பட்ட காய்கறிகள்,பழவகைகள், வாழைக்குலைகள் எல்லாம் ஓலைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பின்னால் ஒரு மூலையில் களிமண்ணால் பிடித்த அடுப்பும்,சில சமையல் பாத்திரங்களும், ரெண்டு வாளிகளும் இருக்கின்றன. அடுத்த மூலையில் சில பாய்கள், தலையணைகள், போர்வைகளுடன் அவரவர்களுக்கேற்ற ஆடைகள் துவாய்கள் என்று எல்லாம் இருக்கின்றன.
பிக்குவானவர் அவர்களிடம் இப்போதைக்கு நாங்கள் உங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான சில பொருட்கள் தந்திருக்கின்றோம். பின்னாலே ஒரு பெரிய குளமும் இருக்கின்றது. அங்கு முதலைகளும் கபரகொய்யாக்களும் பெரிய பெரிய மீன்கள் பாம்புகள் இருப்பதால் பிள்ளைகளுடன் நீங்களும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் எடுக்கும் போதும், இரவுகளில் அவ்வழியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு யானைகளும் வந்து போகும். முக்கியமாய் பிள்ளைகள் கவனம். ஒருநாளும் தனியே விடவேண்டாம். நரி, ஓநாய்,பாம்புகள் போன்றவையும் நிறைய இருக்கின்றன. இந்த பொருட்கள் யாவும் உங்களுக்காக நாங்கள் மக்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டு வந்தவையே. நீங்கள் விகாரையில் தங்கியிருந்த நாட்களில் உங்களுக்குத் தெரிந்திருக்கும் நாங்களும் எங்களுக்குத் தேவையான அளவு மட்டுமான சொற்ப சாமான்களே வைத்திருக்கிறோம். நாளைக்கு என்று எதையும் நாங்கள் சேர்த்து சேமித்தோ வைத்திருப்பதில்லை.நாம் அணியும் ஆடைகள் கூட சனங்களிடம் யாசகமாய் பெற்று ஊசி நூல் கொண்டு கைகளால் தைத்து அணிகிறோம்.கூடியவரை பகவான் புத்தமுனி போதித்த நெறிகளில் இருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வருகின்றோம்.இனி நீங்கள் இவைகளைக் கொண்டு வீண் ஆடம்பரங்களை நாடாமல் உங்களின் தேவைகளை சுருக்கி வாழ்ந்து வரவும்.
பிள்ளைகளைப் பார்த்து நீங்கள் இருவரும் தினமும் காலையில் சிலமணி நேரம் பன்சாலைக்கு வந்து பாடங்கள், பாஷைகள், உடற்பயிற்சிகள், கலைகள், கைவினை வேலைகள் என்று கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றுக்காக அங்கு பாடசாலையும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.பின் மாலையில் நீங்கள் இங்கு வந்து இவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்று சொல்ல அவர்களும் அவர் பாதத்தில் விழுந்து வணங்கி அப்படியே செய்கிறோம் சாமி என்கிறார்கள். பின் சாதுக்களும் அவர்களை ஆசீர்வதித்து விட்டு தம் வழியே செல்கின்றார்கள்.....!
மலர் . ........ 2. 🌼🌼
By
suvy ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.