Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீரிழிவும் சிறு நீரகமும்

"ஒரு வினைத்திறனான இயந்திரம் மிகவும் சிக்கனமானது. அதனால், அவசியமில்லாத எந்தவொரு பாகமும் ஒரு நல்ல இயந்திரத்தில் இருக்காது!"

  - HUGO திரைப்படத்தில் கதாநாயகன்.

large.Renal.jpg.9a391cea23bd6b9e2f3dd7b84b8861d4.jpg

பட உதவி நன்றியுடன்: Huppert’s Notes: Pathophysiology and Clinical Pearls for Internal Medicine; 2021.

எங்கள் உடலும் ஒரு வினைத்திறனான இயந்திரத்திற்கு ஒப்பிடக் கூடிய ஒன்று. கூர்ப்பின் எச்சங்களாக குடல்வால் போன்ற சில அமைப்புகள் முக்கிய தொழில்களின்றி எங்கள் மனித உடலில் தங்கி விட்டாலும், அனேகமாக எல்லா உறுப்புகளும் எங்கள் வாழ்க்கைக்குத் தேவை. இவ்வுறுப்புகளில், உயிர் உடலில் தங்கி நிற்க அவசியமான  ஐந்து உறுப்புகளை முக்கியமான உறுப்புகள் (vital organs) என்று சொல்லலாம். இதயம், மூளை, சுவாசப்பை, சிறு நீரகம், கல்லீரல் என்பனவே அந்த 5 முக்கிய உறுப்புகள். எனவே, இந்த உறுப்புகளை நேரடியாக , அல்லது மறைமுகமாகப் பாதிக்கும் நோய்கள் அனேகமாக உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவை. தற்போது, உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நீரிழிவு இந்த உறுப்புகளில் மூன்றை நேரடியாகப் பாதிக்கும் தன்மை கொண்டதால் பிரதானமான மரணம் விளைவிக்கும் தொற்றா நோயாக விளங்குகின்றது. நீரிழிவினால் கல்லீரல், சிறுநீரகம், இதயம் என்பன பாதிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் நீரிழிவிற்கும் சிறுநீரகத்திற்குமிடையிலான தொடர்பைப் பார்க்கலாம்.

சிறுநீரகத்தின் முதன்மைத் தொழில்

கழிவுகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் முதன்மையான தொழில்.  உடலினுள் உருவாகும் கழிவுகளும், நாம் உள்ளெடுக்கும் உணவுப் பொருட்களை, மருந்துகளை உடல் உடைப்பதால் வரும் கழிவுகளும் இப்படி அகற்றப்படும். இப்படி சிறுநீரகம் அகற்றும் கழிவுகளை இரத்தத்தில் அளப்பதன் மூலம் சிறுநீரகத்தின் கழிவகற்றும் செயல்பாட்டை ஓரளவு மதிப்பிட முடியும். உதாரணமாக கிரியற்றினைன் (creatinine) எனும் கழிவுப் பொருளை இரத்தத்தில்  அளந்து சிறுநீரக நலனை மதிப்பிடுவர்.

ஆனால், இந்தக் கழிவகற்றல் மூலம், உடலின் மேலும் பல தொழிற்பாடுகளுக்கும் சிறுநீரகம் பங்களிப்புச் செய்கிறது. உதாரணமாக, சிறுநீரகம் உப்பையும், நீரையும் அகற்றுவதால் எங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்கும் முக்கிய வேலையை மறைமுகமாகச் செய்கிறது. மேலும், சிறுநீரகத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி இரத்த உற்பத்திக்கு அவசியமான ஒரு ஹோமோனையும் சுரக்கிறது. எனவே, நீண்டகால சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப் பட்டோரில் இரத்தச் சோகையும் ஏற்படக் கூடும். 

நீரிழிவில் சிறுநீரகம் பாதிக்கப் படுவது ஏன்?

நாள்பட்ட சிறுநீரக வியாதி (Chronic Kidney Disease – CKD) என்று அழைக்கப்படும் சிறுநீரக செயலிழப்பிற்கு நீரிழிவு பிரதான காரணியாக இருக்கின்றது. Diabetic nephropathy என்று அழைக்கப் படும் இந்த நாள்பட்ட சிறுநீரக வியாதி அமெரிக்காவைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு  பங்கு நீரிழிவு நோயாளர்களில் ஏற்படுகிறது. உலக ரீதியிலும், ஏனைய நாடுகளிலும் கூட இதே விகிதாசாரத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் இருக்கக் கூடும்.

எங்கள் ஒவ்வொரு சிறுநீரகத்தினுள்ளும் சிறுநீரகத்திகள் (nephrons) என அழைக்கப் படும் நுண் அமைப்புகள் வடிகட்டிகளாக வேலை செய்த படி இருக்கின்றன. இந்த வடிகட்டிகள் 30 மணித்தியாலங்களில், எங்கள் உடலின் 5 லீற்றர் வரையான இரத்தத்தை முழுமையாக சுத்திகரிக்கும் அயராத பணியைச் செய்கின்றன. நீரிழிவின் போது ஏற்படும் ஒரு முக்கியமான மாற்றம் மேலதிகமாக எங்கள் இரத்தத்தில் சுற்றித் திரியும் குழூக்கோஸ் இந்த சிறுநீரகத்திகளால் வடிக்கப் பட்டு, அதில் ஒரு பகுதி சிறுநீரோடு வெளியேற்றப் படுவது. இதைத் தான் நாம் glucosuria என்று அழைக்கிறோம். நீரிழிவு நோயாளர்களில் இது நீண்டகாலப் போக்கில் நிகழும் போது, சிறுநீரகத்திகள் நிரந்தரமாகப் பாதிப்படைந்து அவற்றின் வடிகட்டும் தொழிலும் பாதிக்கப் படுகிறது. சேதமடைந்த சிறுநீரகத்திகளூடாக, சாதாரணமாக வடிக்கப் படாத புரதங்களும் கூட வெளியேறுவதால், உடல் மேலும் புரத இழப்பையும், பின் விளைவுகளையும் எதிர் கொள்ள வேண்டியேற்படுகிறது.

குழூக்கோஸ் என்பது பக்ரீரியாக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு போசணைப் பொருள். இதனால், அதிகரித்த குழூக்கோஸ் சிறுநீரில் சேரும் போது, பக்ரீரியாத் தொற்றுக்கள் ஏற்படுவதாலும் சிறுநீரகம் பாதிக்கப் படலாம். இன்னொரு பொறிமுறை, நீரிழிவு நோயாளர்களில் ஏற்படக் கூடிய உயர் குருதியமுக்கம் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிக்கப் பட்டு, அதனால் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம். எனவே, இந்த மூன்று முக்கிய பொறிமுறைகளையும் கட்டுப் படுத்துவது மூலம், நீரிழிவு நோயாளர்கள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பேண முடியும்.

 பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு நோயோடு வாழும் நோயாளிகளில் தான் இந்த நாள்பட்ட சிறு நீரக நோய் நிலை ஏற்படுகிறது.  ஆனாலும், மூன்றில் ஒரு நீரிழிவு நோயாளியில் தான் இந்த நிலை ஏற்படுகிறது. எனவே இதைத் தடுக்கும் இயற்கையான பாதுகாப்பு சிலரில் இருக்கக் கூடும். இது ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்போரில் கூட வாழ்க்கை முறை மாற்றங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நாள்பட்ட சிறுநீரக நோயேற்படும் ஆபத்தை நீக்க அல்லது குறைக்க உதவுகின்றன.    

தடுப்பு முறைகள் எவை?

நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு, இரத்த குழூக்கோஸ் எகிறுவதும், அதனால் சிறுநீரில் குழூக்கோஸ் வெளியேறுவதும் முக்கிய காரணிகள் என மேலே பார்த்தோம். எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்த குழூக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனை ஒழுங்காக நீரிழிவு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்வதாலும், உணவு முறையில் கட்டுப்பாடு கொள்வதாலும், உடற்பயிற்சிகளாலும் தான் அடைய முடியும்.

உலகின் 90% ஆன நீரிழிவு  நோயாளிகளுக்கு உடலில் இன்சுலின் சுரந்தாலும் அது வேலை செய்யாத "இரண்டாம் வகை" நீரிழிவு (T2D) தான் வருகிறது. இவர்களில் அதிகம் பரிந்துரைக்கப் படும் மருந்து மெற்fபோமின் (Metformin) எனப்படும் தீவிர பக்க விளைவுகள் குறைவான மருந்தாகும். ஆனால், உடலில் தன் வேலையை முடித்த பின்னர், மெற்fபோமின் நேரடியாக சிறுநீரகத்தினால் அகற்றப் படுவதால், நாள் பட்ட சிறுநீரக நோயுடைய நோயாளிகளில் மெற்fபோமின் பயன்பாடு பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. சில ஆய்வுகளில், மெற்fபோமின் நாள் பட்ட சிறுநீரக நோயாளிகளில் மரணத்தைக் குறைத்ததாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், மெற்fபோமின் பாவனையினால் நாள் பட்ட சிறுநீரக நோய் உருவாவதாக நிறுவும் ஆய்வுத் தகவல்கள் இல்லை. எனவே, தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, மோசமான நாள்பட்ட சிறுநீரக நோயுடையோரில் மட்டும் மெற்fபோமின் பாவனையைத் தவிர்க்கும் படி ஆலோசனை வழங்கப் படுகிறது.

ஏனைய  சிறுநீரகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவை?

35 - 40 வயதுக்கு மேல் அனைவரும் வருடாந்தம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரத்த, சிறுநீர்ப்பரிசோதனைகள் இந்த வருடாந்த சோதனையில் உள்ளடங்கியிருக்க வேண்டும்.

முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், சிறு நீரக செயல்பாட்டை மதிப்பிடும் சில பரிசோதனைகளை வருடாந்தம் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் கால இடைவெளியில் செய்து கொள்வது அவசியம். அனேகமாக இந்தப் பரிசோதனைகளில் இரத்த கிரியேற்றினைன் மட்டம், இரத்த யூரியா நைட்ரஜன் (Blood Urea Nitrogen – BUN) மட்டம், Glomerular Filtration Rate (GFR) எனப்படும் சிறுநீரக வடிகட்டல் வேகம் ஆகிய மூன்று அளவீடுகளை மருத்துவர் கவனித்து உங்கள் சிறுநீரக நலனை மதிப்பீடு செய்வார். மேலதிகமாக, சிறுநீரில் வெளியேறும் அல்புமின் புரதத்தின் அளவையும் பரிசோதிப்பார்கள் - இது நீரிழிவு நோயாளிகளில் முக்கியமானது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவர் ஆலோசனைகளை வழங்கினால், அவற்றைக் கவனமாகப் பின்பற்றுவது உசிதம். 

நீரிழிவு நோயாளிகளில் மட்டுமன்றி, எல்லோரிலும் உப்புக் குறைந்த உணவுப் பழக்கம் சிறுநீரகத்தின் நண்பன். உப்புக் குறைந்த உணவினால் இரத்த அழுத்தம் குறையும், இதனால் சிறு நீரகம் மட்டுமன்றி, இதயமும் நன்மை பெறும். மூளை இரத்த அடைப்புக்கான (stroke) ஆபத்தும் குறையும்.

எனவே, சுருக்கமாக, நீரிழிவு நோயாளிகள்:

1. இரத்த குழூக்கோசைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

2. கிரமமாக சிறுநீரக நலனை மருத்துவர் மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

3. உப்பைக் குறைத்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. உயர் குருதி அமுக்கம் இருந்தால் அதைக் குறைக்கும் உணவு, மருந்து வழியான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

இவ்வழிகளால் சிறுநீரக நலனைச் சிறப்பாக நீண்டகாலத்திற்குப் பேண முடியும்.

- ஜஸ்ரின்.

மூலங்களும், மேலதிக தகவல்களும்:

1.       அமெரிக்க உணவு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு: மெற்fபோமின் பற்றிய 2022 குறிப்பு. https://www.fda.gov/drugs/fda-drug-safety-podcasts/fda-drug-safety-podcast-fda-revises-warnings-regarding-use-diabetes-medicine-metformin-certain

2.       அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி மையம் (NIH). நாள்பட்ட சிறுநீரக நோய் பற்றிய குறிப்பு.  https://www.niddk.nih.gov/health-information/kidney-disease/chronic-kidney-disease-ckd/causes

3.       அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி மையம் (NIH). மெற்fபோமின் பாவனை, சிறுநீரக நலன் பற்றிய விளக்கங்கள். https://www.niddk.nih.gov/health-information/professionals/diabetes-discoveries-practice/metformin-and-chronic-kidney-disease

4.       சிறுநீரக அமைப்புத் தொழில்பாடுகள் பற்றிய குறுங்காணொளி: நாள்பட்ட சிறு நீரக நோயோடு தொடர்பில்லா விட்டாலும், விளக்கத்திற்காகப் பார்க்கக் கூடியது.  https://www.nature.com/articles/d41586-023-00805-8

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு பயனுள்ள தகவல்களை நிர்வாகம் பின்ட் பண்ணி விடுவது நன்று.தகவல்களுக்கு மிக்க நன்றி யஸ்ரின் அண்ண..🖐️✍️

  • கருத்துக்கள உறவுகள்

பயனுடைய தகவல்கள்.

7 hours ago, Justin said:

உப்பைக் குறைத்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கவனித்த அளவில் அந்த நோய் உள்ளவர்கள் பலர் குளிசை மாத்திரை எடுத்தால் போதும் என்று மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது.கேக்கும் சொக்லேற்றும் தீமை என்று சாப்பிடுவது விட்டுட்டோம் என்றுவிட்டு crisps மிக்சரும் சாப்பிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்கள் ........!  👍

நன்றி ஜஸ்டின் .......!  

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல் ஜஸ்ரின். நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்கள் நரம்பியல் பாதிப்பு அடைகின்றனர். அண்மையில் வேலையிடத்தில் ஒருவர் நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு அவதியுறுவதைக் கூறினார். இதை சில தமிழர்களும் சொல்ல கேட்டுள்ளேன். அதன் பிறகு அதுபற்றி இணையத்தில் நரம்பியல் சார்ந்து தேடி வாசித்த போது அது மாற்ற முடியாது என்று இருக்கிறது. 

நரம்பியல் பாதிப்பு பற்றிய பதிவுகள்  மொழிபெயர்ப்பில் இருப்பின் அவற்றையும் பகிருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி @Justin அண்ணை.
மக்கள் சமவிகித உணவு உட்கொள்ளும் முறைக்கு மாறுவதன் ஊடாக தொற்றா நோயான நீரிழிவை கட்டுப்படுத்தலாமா?

@Justin

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கும் பயனுள்ள தகவல்.

நன்றி.

@Justin

வேறு காரணங்களால் சிறு நீரகம் பாதிக்கப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று உங்கள் பத்தியின் மூலம் அறிந்து கொண்டேன்.

இதே போன்று, சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு உயர் இரத்த அழுத்தமும் ஒரு முக்கிய காரணம் என்று அறிந்தேன். உயர் இரத்த அழுத்தத்தினால் சிறுநீரகத்தின் தசைகள் தடிப்படைவதால் நாள் செல்ல நாள் செல்ல, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயல் இழக்கும் என அறிந்தேன்.

தனக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்குது என்று தெரியாமலே பல வருடங்கள் வாழ்ந்து, அதனால் சிறு நீரகம் செயல் இழந்து போகின்றவர்கள் பலர் என கேள்விப்பட்டேன்.

இது சரியா?

இன்னொரு கேள்வி.

இளநீர் குடித்தால் சிறு நீரகத்துக்கு நன்மை என்ற நம்பிக்கை ஈழத்தமிழர்களிடம் உண்டு. இளநீரில் குளுக்கோஸ் அதிகம் உள்ளதால் அது சிறு நீரகத்துக்கு பாதிப்பைத்தானே கொண்டு வரும்? அது எப்படி நன்மை பயக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2023 at 06:41, ஏராளன் said:

மிக்க நன்றி @Justin அண்ணை.
மக்கள் சமவிகித உணவு உட்கொள்ளும் முறைக்கு மாறுவதன் ஊடாக தொற்றா நோயான நீரிழிவை கட்டுப்படுத்தலாமா?

@Justin

ஏராளன், ஏற்கனவே வேறு சில திரிகளில் பேசியிருக்கிறோம். நீரிழிவின் எந்த நிலையில் நோயாளி இருக்கிறார் என்பதைப் பொறுத்து உணவுப் பழக்க மாற்றம் வேலை செய்யலாம்:

1. நீரிழிவு வர முதல்: உணவு முறையாலும் உடலுழைப்பாலும் பெரும்பாலும் வராமல் தடுக்கலாம்.

2. முன் - நீரிழிவு (pre-diabetic, 100-125 mg/dL fasting glucose) எனப்படும் ஆரம்ப நிலையில்: மருந்து எடுக்காமல், உணவு, உடலுழைப்பு என்பன மட்டும் கொண்டு மீளச் செய்ய முடியும் , ஆனால் மருத்துவரின் ஆலோசனையோடு இதைச் செய்ய வேண்டும்.

3. நீரிழிவு வந்த பின்னர்: உணவு மாற்றம், உடற்பயிற்சியோடு இரத்த குழூக்கோசைக் குறைக்கும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் - அதன் வீரியம், அளவு மாறுபடலாம், ஆனால் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

On 8/6/2023 at 05:46, shanthy said:

பயனுள்ள தகவல் ஜஸ்ரின். நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்கள் நரம்பியல் பாதிப்பு அடைகின்றனர். அண்மையில் வேலையிடத்தில் ஒருவர் நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு அவதியுறுவதைக் கூறினார். இதை சில தமிழர்களும் சொல்ல கேட்டுள்ளேன். அதன் பிறகு அதுபற்றி இணையத்தில் நரம்பியல் சார்ந்து தேடி வாசித்த போது அது மாற்ற முடியாது என்று இருக்கிறது. 

நரம்பியல் பாதிப்பு பற்றிய பதிவுகள்  மொழிபெயர்ப்பில் இருப்பின் அவற்றையும் பகிருங்கள். 

சாந்தி, ஆம், diabetic neuropathy என்பது சுற்றயல் நரம்புகளைப் பாதிக்கும் நிலை. இதற்கும் அதிகரித்த இரத்த குழுக்கோஸ் தான் காரணம். இதனால் ஏற்படும் மரத்த தன்மை (numbness) காரணமாக வலியுணர்வு குறையும், காலில் முள்ளுக் குத்தினாலும் தெரியாது. இதனால் தான் காயம் ஆழமாகி விரல், பாதம், கால் என்பன அகற்றப் படும் நிலை ஏற்படுகிறது. நேரம் கிடைக்கும் போது மேலதிக தகவல்களைப் பகிர்வேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

@Justin

வேறு காரணங்களால் சிறு நீரகம் பாதிக்கப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று உங்கள் பத்தியின் மூலம் அறிந்து கொண்டேன்.

இதே போன்று, சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு உயர் இரத்த அழுத்தமும் ஒரு முக்கிய காரணம் என்று அறிந்தேன். உயர் இரத்த அழுத்தத்தினால் சிறுநீரகத்தின் தசைகள் தடிப்படைவதால் நாள் செல்ல நாள் செல்ல, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயல் இழக்கும் என அறிந்தேன்.

தனக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்குது என்று தெரியாமலே பல வருடங்கள் வாழ்ந்து, அதனால் சிறு நீரகம் செயல் இழந்து போகின்றவர்கள் பலர் என கேள்விப்பட்டேன்.

இது சரியா?

இன்னொரு கேள்வி.

இளநீர் குடித்தால் சிறு நீரகத்துக்கு நன்மை என்ற நம்பிக்கை ஈழத்தமிழர்களிடம் உண்டு. இளநீரில் குளுக்கோஸ் அதிகம் உள்ளதால் அது சிறு நீரகத்துக்கு பாதிப்பைத்தானே கொண்டு வரும்? அது எப்படி நன்மை பயக்கும்?

நிழலி, நல்ல கேள்விகள்:

1. தங்களுக்கு உயர் குருதி அமுக்கம் இருப்பது தெரியாமல் வாழும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மூளை இரத்தப் போக்கு, அல்லது இரத்த அடைப்பு வராமல் தப்பினால், சிறுநீரகம் பழுதடைவது நடக்கும். உயர் குருதி அமுக்கம், நீரிழிவுக்கு அடுத்த படியாக அமெரிக்காவில் சிறு நீரக செயலிழப்பிற்கு இரண்டாவது பாரிய காரணம். இதுவே ஏனைய நாடுகளிலும் நிலையாக இருக்கும் என நினைக்கிறேன். இதனால் தான் வருடாந்த மருத்துவ பரிசோதனை முக்கியமென நினைக்கிறேன். தற்போது நாமாகவே வீட்டில் பயன்படுத்தக் கூடிய சிறந்த குருதி அமுக்கம் அளக்கும் கருவிகள் வாங்கி வீட்டிலேயே அளந்து கொள்ளவும் முடிகிறது. இந்த வழிகளில் எங்கள் குருதி அமுக்கத்தை நாம் கிரமமாகக் கண்காணித்து மருத்துவரின் ஆலோசனையை நாடலாம்.

2. இளநீரில் பல கனியுப்புக்கள் இருப்பதால் அது சிறுநீரகத்திற்கு நல்லது என்ற எண்ணம் வந்திருக்கும் போல. ஆனால், இளநீர் குடித்தால் சிறு நீரக நலன் கூடும் என்பதற்கு ஒரு மருத்துவ ஆய்வு ஆதாரமும் நான் காணவில்லை. மாறாக, இளநீரில் அதிக பொட்டாசியம் இருப்பதால், நாள்பட்ட சிறுநீரக நோயுடையோர் இளநீரைத் தவிர்க்க வேண்டும், இல்லையேல் பொட்டாசியம் மிகையாகி இதய இயக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படலாம். நீரிழிவு மட்டும் இருப்போர், இயற்கை இளநீரில் 10 கிராம் வரை சீனி இருக்கிறது என்பதைக் கவனித்து அதற்கேற்ப நுகர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2023 at 10:12, நிழலி said:

On 9/6/2023 at 20:03, Justin said:

தெளிவான பதிலுக்கு நன்றி ஜஸ்ரின். வேலைப்பளு காரணமாக உடனடியாக நன்றி கூற முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2023 at 20:03, Justin said:

இயற்கை இளநீரில் 10 கிராம் வரை சீனி இருக்கிறது என்பதைக் கவனித்து அதற்கேற்ப நுகர வேண்டும். 

உங்கள் விளக்கங்களிற்கு நன்றி.
நீரிழிவை இரண்டாக பகுக்கிறார்களே, இன்சுலின் resistance, அதிகளவு சீனியை உட்கொள்வதால் சிறுநீரகம் process  பண்ணாமல் விடுவது (கேள்விப்பட்டது/புரிந்தது இப்படித்தான் பிழையாகவும் இருக்கலாம்).
இரண்டிற்குமே இயற்கை சீனி (பழங்கள், தனியங்கள்) ஆகாதோ?

நன்றி ஜஸ்ரின்.

அறிவியல் வளர்ச்சியடைந்த உலகில் உடலைப் பாதுகாப்பது என்பது ஒரு கலை. பொதுவாக உருவாகக் கூடிய வியாதிகளைப் பற்றி அறிந்து அதற்கேற்ப உணவுகளையும் பழக்கங்களையும் மாற்றிக் கொள்வது என்பது வாழ்வின் அங்கமாகிறது. உண்ணும்போது சுவையும் எனது உடலுக்கு அவசியமானவற்றை உட்கொள்கிறேன் என்ற உணர்வும் நிறைவைத் தரும். 

இளைய சந்ததியினரிடம் இதைப் பொதுவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஏனைய நாடுகள் பற்றித் தெரியாது, இங்கு எனக்குத் தெரிந்தவர்களின் பிள்ளைகள் உணவில் மிகுந்த கவனமுள்ளவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2023 at 09:13, Sabesh said:

உங்கள் விளக்கங்களிற்கு நன்றி.
நீரிழிவை இரண்டாக பகுக்கிறார்களே, இன்சுலின் resistance, அதிகளவு சீனியை உட்கொள்வதால் சிறுநீரகம் process  பண்ணாமல் விடுவது (கேள்விப்பட்டது/புரிந்தது இப்படித்தான் பிழையாகவும் இருக்கலாம்).
இரண்டிற்குமே இயற்கை சீனி (பழங்கள், தனியங்கள்) ஆகாதோ?

ஓம், நீரிழிவில் பிரதானமாக இரு வகைகள்: மிக அனேகம் பேருக்கு வருவது இன்சுலின் சுரக்கும், ஆனால் உடல் இன்சுலினுக்கு துலங்கல் காட்டாது. இது தான் T2D or insulin resistance. குறைந்த வீதத்தினருக்கு வருவது, இன்சுலின் சுரப்புக் குறைவதால் வருவது. இது மிக இளவயதில் வருவதால், இளவயது நீரிழிவு juvenile diabetes எனவும் சொல்வார்கள்.

"அரசர்களால் தடை செய்யப் பட்ட கவுனி அரிசி" என்றொரு திரியில் இரு ஆண்டுகள் முன்பு விரிவாக இதைப் பற்றிப் பேசினோம். அந்த திரியின் இணைப்பை யாராவது இங்கே இணைத்து விடுங்கள்.

இரண்டு வகையிலும் இரத்த குழூக்கோஸ் அதிகரிக்கும், அதனால் இரு வகை நீரிழிவிலும் சிறுநீரக, நரம்பு, கண் கோளாறுகள் வர வாய்ப்புகள் உண்டு. இரண்டிலும் சீனிக் கட்டுப்பாடு அவசியமாக இருக்கும். எடுக்க வேண்டிய மருந்துகள் மட்டும் வேறாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்தத் திரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே காது ஏன் திடிரென்று கேட்கும் திறனை இளக்கிறது என்பது பற்றியும் அறியத் தந்தால் நன்றாக இருக்கும்.எனக்கு தான் சில மாதங்களாக ஒரே உடல் நலமின்றி போய் விடுகிறது.எனது வைத்தியர் ஏதோ ஸ்பிறே மற்றும் மாத்திரை எல்லாம் தந்தார் அதனைப் பாவிக்கும் போது பக்க விளைவாக அலர்ஜி வந்து அவதிபட்டு விட்டேன்.
 
Edited by யாயினி

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு இரண்டு நாட்களின் பின்பு உலக நீரிழிவு தினம் வருகின்றதாம். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த நோய் வராம தடுப்பதற்காக. நான் சொக்லேற் சாப்பிடுவதை  குறைக்க போகிறேன்.

Edited by விளங்க நினைப்பவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.