Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகொரிய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க வீரர் - ஜோ பைடனுக்கு நெருக்கடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடகொரியா ராணுவ வீரர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அன்டாய்நெட் ராட்ஃபோர்ட் & சைமன் ஃப்ரேசர்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 19 ஜூலை 2023, 08:07 GMT
    புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

தென்கொரியாவில் இருந்து பாதுகாப்புமிக்க எல்லையை கடந்து வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரரை வடகொரியா பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வீரர், இரு நாடுகளையும் பிரிக்கும் பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நிர்வகித்து வரும் பாதுகாப்பு மண்டலத்திற்கு (DMZ) ஏற்கெனவே திட்டம் போட்டு பயணம் செய்திருக்கிறார். அங்கிருந்து அவர் எல்லை தாண்டி வட கொரியாவுக்குச் சென்றதாகத் தெரியவருகிறது.

ஐ.நா. மற்றும் உலக அரசுகளால் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் பதற்றம் நிலவும் நேரத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்கா தனது குடிமக்கள் வடகொரியாவுக்கு போகவேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

வடகொரியா பிடித்து வைத்துள்ள அந்த ராணுவ வீரரை எந்த விதத்திலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று அமெரிக்க ராணுவத்தின் மூத்த தளபதி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கமாண்டின் அட்மிரல் ஜான் அக்விலினோ பேசிய போது, வட கொரியாவுடன் "தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை" என்றார். அந்த ராணுவ வீரர், அமெரிக்க ராணுவத்தின் அறிவுரையை மீறி தன் விருப்பத்துடன் எல்லையைக் கடந்து சென்றிருக்கிறார் என்றும், இது குறித்து வடகொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவம் விசாரித்து வருகிறது என்றும் கூறினார்.

 

வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, வட கொரியா சந்தேகத்திற்கிடமான இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை அருகிலுள்ள கடல் பகுதியில் ஏவியது.

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த ஏவுகணைகள் குறித்த தகவல் தென்கொரியா ராணுவத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும், அமெரிக்க ராணுவ வீரரை வடகொரியா பிடித்து வைத்திருப்பதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

அந்த ராணுவ வீரர் தப்பிச் செல்லும் நோக்கத்துடன் வட கொரியாவுக்குச் சென்றாரா அல்லது மீண்டும் திரும்பிவர முடிவெடுத்திருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து வடகொரியாவில் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை.

வட கொரியாவால் பிடிக்கப்பட்ட அமெரிக்க வீரர்

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

தென்கொரிய வீரர்கள், இருநாடுகளின் கூட்டுப் பாதுகாப்புப் பகுதியில் உள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

அவர் பிரைவேட் செகண்ட் க்ளாஸ் (பிவி2) படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் டிராவிஸ் கிங் என்றும், கடந்த 2021 ஜனவரியில் அவர் ராணுவப் பணியில் சேர்ந்ததாகவும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அடையாளம் கண்டுபிடித்துள்ளது.

அவர் ஒரு குதிரைப்படை வீரர் என்றும், தென் கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தில் சுழற்சி முறையில் 1வது கவசப் பிரிவில் நியமிக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிராவிஸ் கிங் ஒரு தாக்குதல் குற்றச்சாட்டில் சிக்கியதால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இருந்ததாகவும், இதனால் அவர் வடகொரியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது.

பிபிசியின் அமெரிக்க கூட்டுச் செய்தி நிறுவனமான சிபிஎஸ் செய்திகளின்படி, டிராவிஸ் கிங் சியோல் நகர விமான நிலையப் பாதுகாப்பைக் கடந்து சென்றதாகவும், ஆனால் எப்படியோ அங்கிருந்து வெளியேறி எல்லைப்பகுதிக்குச் சென்றதாகவும் அதன் பின் அவர் வடகொரியாவுக்குச் சென்றதாகவும் தெரியவருகிறது.

அவர் "வேண்டுமென்றே, ராணுவ விதிகளுக்கு முரணாக" வடகொரியாவுக்குச் சென்றதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

 

ராணுவ வீரர் வட கொரியாவுக்குச் சென்றபோது அவருடன் இருந்தவரும், நேரில் கண்ட சாட்சியுமான ஒருவர் CBS இடம் பேசியபோது, அவர்கள் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தைக் கண்டதாகவும் - உள்ளூர் ஊடகங்கள் அந்த இடம் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள பன்முன்ஜோம் என்ற கிராமம் எனத் தெரிவிக்கின்றன - அங்கு சென்றபின் அந்த ராணுவ வீரர் சத்தமாக 'ஹா ஹா ஹா' என்று சிரித்ததாகவும், அங்கிருந்த பல கட்டடங்களுக்கு இடையே நடமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "அந்த வீரர் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்ததைப் பார்த்து, அது ஒரு மோசமான நகைச்சுவை என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை என்பதை அறிந்த பின் அது ஒரு நகைச் சுவை அல்ல என உணர்ந்தேன். அதன் பின் தான் இத்தனை விஷயங்களும் நடந்துள்ளன," என்று அவர் கூறினார்.

இராணுவமயமாக்கப்பட்ட மண்டலம் மற்றும் கூட்டுப் பாதுகாப்புப் பகுதியை நிர்வகிக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் படைப்பிரிவினர் வட கொரிய இராணுவத்துடன் தொடர்பு கொண்டு அந்த வீரரை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறினர்.

"அவர் தற்போது வட கொரியாவின் காவலில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். மேலும் அவரை மீட்கும் விதமாக நாங்கள் தென் கொரியா மற்றும் வட கொரிய ராணுவங்களுடன் இணைந்த பேச்சு நடத்திவருகிறோம்," என்று அவர்கள் தெரிவித்தனர்.

டிராவிஸ் கிங் எங்கு அல்லது எந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வடகொரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாஷிங்டன் டிசி-ஐ தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழுவின் நிர்வாக இயக்குனர் க்ரெக் ஸ்கார்லட்டாய் (Greg Scarlatoiu) பிபிசியிடம் பேசியபோது, வட கொரிய அதிகாரிகள் அவரது ராணுவப் பணிகள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள அவரைக் கட்டாயப்படுத்திப் பேசவைப்பார்கள் என்றும், அதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கியிருக்கும் என்றும், அவரை ஒரு பிரச்சார பீரங்கியாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் கூறினார்.

ராணுவம் அற்ற பகுதி இரு கொரிய நாடுகளையும் பிரிக்கிறது என்பதுடன், இது உலகின் மிக அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், இப்பகுதி கண்ணிவெடிகளால் நிரம்பியுள்ள பகுதியாகவும் உள்ளது, அது மட்டுமின்றி இப்பகுதியைச் சுற்றிலும் மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் இப்பகுதியில் உஷார் நிலையில் இருக்கின்றனர்.

வடகொரியா

ராணுவம் விலக்கப்பட்ட மண்டலம் என்பது என்ன?

1950 களில் நடந்த கொரியப் போருக்குப் பிறகு ஆயுதமற்ற இந்தப் பகுதி இரு நாடுகளையும் பிரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா தெற்குப் பகுதியை ஆதரித்தது. தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு கொரியப் போர் முடிவடைந்தது. அதாவது விதிகளின்படி பார்த்தால் இரு தரப்பும் இன்னும் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் வட கொரியாவிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் DMZ எனப்படும் இந்த ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது. கொரோனா பரவல் தொடக்கத்தில் வடகொரியா அதன் எல்லைகளை சீல் வைத்தது. இன்னும் அவற்றை மீண்டும் திறக்கவில்லை.

கடைசியாக 2017-ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து ஒரு ராணுவ வீரர் காரை ஓட்டியும், ஓடியும் தப்பிக்க முயன்றதாக தென்கொரியா கூறுகிறது. அவர் 40 முறை சுடப்பட்டதாகவும், அதில் உயிர் தப்பியதாகவும் தென்கொரியா கூறுகிறது.

கொரோனாவுக்கு முன்பு தென் கொரிய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் வட கொரியாவிலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் சீனாவுக்கு தப்பி ஓடினர்.

தற்போது அமெரிக்க ராணுவ வீரர் வடகொரியாவில் சிக்கியிருப்பது அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. ஓராண்டுக்கு முன்புதான் முன்னர் ஒரு பரப்புரை குறியீட்டைத் திருடியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு அமெரிக்க மாணவர் கோமா நிலையில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டார். அவரது மரணத்திற்கு வடகொரிய அதிகாரிகளே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

2018 இல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது மூன்று அமெரிக்க குடிமக்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இறுதியில், கிம் ஜாங் உன்னுக்கும் டிரம்புக்கும் இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தைகள் உறவை மேம்படுத்த சிறிதும் உதவி செய்யவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c8v0ge37p8po

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, வட கொரியா சந்தேகத்திற்கிடமான இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை அருகிலுள்ள கடல் பகுதியில் ஏவியது.

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த ஏவுகணைகள் குறித்த தகவல் தென்கொரியா ராணுவத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும், அமெரிக்க ராணுவ வீரரை வடகொரியா பிடித்து வைத்திருப்பதற்கும் எந்த வித தொடர்பும்

அமெரிக்காவின்  அணுநீர்மூழ்கி கப்பல்  அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டதால் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nunavilan said:

அமெரிக்காவின்  அணுநீர்மூழ்கி கப்பல்  அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டதால் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது.

இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் "தெய்வ மச்சான்" கிம் சரியான காரணங்களின்றி எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை!😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் "தெய்வ மச்சான்" கிம் சரியான காரணங்களின்றி எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை!😎

அவர் சொன்ன  காரணம் அது தான். அமரிக்கா எடுக்கும் முடிவு எப்படி அமெரிக்காவுக்கு சரியோ அது போல் கிம் எடுக்கும் முடிவு கிம்முக்கு சரியே. ஒரு வேளை கிம் பைடனை பார்த்து தெய்வ மச்சான் என சொல்லக்கூடும்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

அவர் சொன்ன  காரணம் அது தான். அமரிக்கா எடுக்கும் முடிவு எப்படி அமெரிக்காவுக்கு சரியோ அது போல் கிம் எடுக்கும் முடிவு கிம்முக்கு சரியே. ஒரு வேளை கிம் பைடனை பார்த்து தெய்வ மச்சான் என சொல்லக்கூடும்.🙃

இந்த சரி, பிழை என்பது தன்னிலை (subjective)  விளக்கத்தில் இருந்தா நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?

இடி அமீன் செய்தது இடி அமீனுக்குச் சரி, ஹிற்லர் செய்தது நாசிகளுக்குச் சரி, ஏன் கோத்தா செய்தது கோத்தா பின் திரண்ட சிங்களவர்களுச் சரி..இப்படி எல்லாரும் "தன்னிலையில சரியாகத் தான்" நடந்திருக்கிறார்கள் என்று கதையை முடித்து விட்டு நகர்ந்து கொண்டேயிருக்கலாம் அல்லவா? ஏன் செய்ய இயலவில்லை என நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இந்த சரி, பிழை என்பது தன்னிலை (subjective)  விளக்கத்தில் இருந்தா நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?

இடி அமீன் செய்தது இடி அமீனுக்குச் சரி, ஹிற்லர் செய்தது நாசிகளுக்குச் சரி, ஏன் கோத்தா செய்தது கோத்தா பின் திரண்ட சிங்களவர்களுச் சரி..இப்படி எல்லாரும் "தன்னிலையில சரியாகத் தான்" நடந்திருக்கிறார்கள் என்று கதையை முடித்து விட்டு நகர்ந்து கொண்டேயிருக்கலாம் அல்லவா? ஏன் செய்ய இயலவில்லை என நினைக்கிறீர்கள்?

பைடன் செய்தது பைடனுக்கு சரி என்றதை எழுத மறந்து விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

பைடன் செய்தது பைடனுக்கு சரி என்றதை எழுத மறந்து விட்டீர்கள்.

ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்ததை ஏன் எழுதுவான்?

ஆனால், வசனங்களில் தொங்கிக் கொண்டிருக்காமல், மறக்காமல் உங்கள் பதிலைச் சொல்லுங்கள்! தன்னிலை விளக்கம் மட்டும் சரி பிழையை தீர்மானிக்கப் போதுமா அல்லது வேறெதுவும் அதற்கு வெளியே தேவையா? 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வீரர் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு.. நாடு மாறிவிட்டார். என்ன கறுப்பினத்தவர் மீதி பழியை போட்டுவிட்டு.. அமெரிக்கா இதையும் கடத்து போகும். அடுத்தவனுக்கு பிரச்சனை கொடுப்பது என்றால்.. அமெரிக்காவுக்கு ஆலாதிப் பிரியம். தனக்கு ஒரு பிரச்சனை என்றால்.. பூசி மொழுகிற மொழுகு இருக்கே.. சொல்லி வேலையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இராணுவ வீரர் தென்கொரியாவில் 2022 இல் இருந்து இன்றுவரை குறைந்தது இருமுறை களியாட்ட விடுதிகளில் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார், பொலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தினார் என்று வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கொரியாவில் இவரால் ஏற்படுத்தப்பட்ட நஷ்ட்டங்களுக்குத் தண்டப்பணமும் இவரால் கட்டப்பட்டிருக்கிறது. இவர் அமெரிக்க ராணுவத்தின் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு விசாரணைகளுக்கு அனுப்பப்பட ஒரு நாள் இருக்க , கொரிய எல்லையைப் பார்க்கக் கூடும் மக்கள் கூட்டத்துடன் இணைந்து எல்லையைத் தாண்டி வட கொரியாவின் பக்கம் சென்றிருக்கிறார். தனது செயல்களுக்காக விசாரணை, தண்டனை என்று முகம் கொடுக்க நேரும்போது இவர் தண்டனையிலிருந்து தப்புவதற்காக வடகொரியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவே படுகிறது.

மற்றும்படி இவர் கறுப்பினத்தவர் என்பதற்காக அமெரிக்கா இவரைத் தண்டிக்கப் பார்த்தது என்று கதைவிடுவது காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இராணுவ வீரர் தனது குற்றங்களில் இருந்து தப்புவதற்காக வட கொரியாவிற்குள் சென்றுள்ளார்..அப்படி செல்வதற்கு முன்பு எமது ரஷ்ய ஆதரவு ஈழதமிழர் சம்மேளனத்தின் உறுப்பினர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ,ஆலோசனை கேட்டு  இருப்பார் ஆனால் இப்படியான பைத்தியகார செயலை செய்திருக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

இந்த இராணுவ வீரர் தென்கொரியாவில் 2022 இல் இருந்து இன்றுவரை குறைந்தது இருமுறை களியாட்ட விடுதிகளில் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார், பொலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தினார் என்று வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கொரியாவில் இவரால் ஏற்படுத்தப்பட்ட நஷ்ட்டங்களுக்குத் தண்டப்பணமும் இவரால் கட்டப்பட்டிருக்கிறது. இவர் அமெரிக்க ராணுவத்தின் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு விசாரணைகளுக்கு அனுப்பப்பட ஒரு நாள் இருக்க , கொரிய எல்லையைப் பார்க்கக் கூடும் மக்கள் கூட்டத்துடன் இணைந்து எல்லையைத் தாண்டி வட கொரியாவின் பக்கம் சென்றிருக்கிறார். தனது செயல்களுக்காக விசாரணை, தண்டனை என்று முகம் கொடுக்க நேரும்போது இவர் தண்டனையிலிருந்து தப்புவதற்காக வடகொரியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவே படுகிறது.

மற்றும்படி இவர் கறுப்பினத்தவர் என்பதற்காக அமெரிக்கா இவரைத் தண்டிக்கப் பார்த்தது என்று கதைவிடுவது காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை.

அது மட்டுமல்ல விமான நிலைய பாதுகாப்பு எல்லை வரை பாதுகாப்பு படையினரால் கொண்டுவந்து விடப்பட்டார். 

அங்கிருந்து தப்பி எல்லையை சுற்றிக்காட்டும் உல்லாச பயணிகளுக்கான குழுவுடன் சேர்ந்து எல்லை வரை சென்று இருக்கிறார்.

மீன் துள்ளி எண்ணைச்சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதை தான். 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முதல்வன் said:

அது மட்டுமல்ல விமான நிலைய பாதுகாப்பு எல்லை வரை பாதுகாப்பு படையினரால் கொண்டுவந்து விடப்பட்டார். 

அங்கிருந்து தப்பி எல்லையை சுற்றிக்காட்டும் உல்லாச பயணிகளுக்கான குழுவுடன் சேர்ந்து எல்லை வரை சென்று இருக்கிறார்.

மீன் துள்ளி எண்ணைச்சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதை தான். 

 

ஆனால் வடகொரியா இவரை வைத்து செய்யும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DMZ: ராணுவம் இல்லாத மண்டலம் என்றாலும் கெடுபிடி அதிகம் - உள்ளே நுழைந்தால் என்ன நடக்கும்?

கொரிய போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரிய போரின் அடையாள சின்னமாக திகழும் டிஎம்இசட் மண்டலம், கடந்த ஏழு தசாப்தங்களாக தொடர்ந்து போர் பதற்றத்தை உணர்ந்து தான் வருகிறது

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அதாஹுல்பா அமெரிஸ்
  • பதவி, பிபிசி உலக செய்திகள்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாத ஆனால், அதே நேரம் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் நிறைந்த எல்லைகள் என்று உலக நாடுகளில் சில பகுதிகள் உள்ளன. இவற்றில் ஓர் முக்கியமான பகுதியாக கொரியாவின் ராணுவ நடவடிக்கைகள் இல்லாத மண்டலம் (DMZ) திகழ்கிறது.

தென்கொரியா மற்றும் வடகொரியா சட்டப்படி விதித்துள்ள தடையின் காரணமாகவும், எப்போதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாலும் இந்த மண்டலத்திற்குள் ஒருவர் நுழைவதென்பது அனேகமாக இயலாத காரியமாகவே கருதப்படுகிறது. இருநாடுகள் விதித்துள்ள தடைகள் மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி, யாரேனும் ஒருவர் இந்த எல்லைக்குள் பிரவேசித்து விடுவாரேயானால் அவர் உலக அளவில் தலைப்புச் செய்தியாக பேசப்படுபவராகி விடுகிறார். இப்படி உலக அளவில் கவனம் பெற்றுள்ள நபராக தான் அமெரிக்க இராணுவ வீரரான ‘திராவிஸ் கிங்’ தற்போது திகழ்கிறார்.

வட கொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்

இரு கொரிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கின் காரணமாக, தென் கொரியாவில் குவிக்கப்பட்டுள்ள 28 ஆயிரம் 500 அமெரிக்க ராணுவ வீரர்களில் ஒருவர் தான் கிங். நேற்று முன்தினம் (ஜூலை 18) உரிய அனுமதியின்றி, வேண்டுமென்றே தென்கொரியாவின் டிஎம்இசட் எல்லையின் வழியாக வட கொரியாவுக்குள் நுழைந்திருக்கிறார் என்று இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த தன்னிச்சையான செயலுக்காக அவர் மீது கூடிய விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க மற்றும் தென்கொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அங்கு அவர் வடகொரிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பார் என்று நம்புவதாக கூறும் தென்கொரிய ராணுவ அதிகாரிகள், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வடகொரிய ராணுவத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

சிறப்பான வாழ்வை தேடி தென் கொரியாவுக்கு பயணிக்கும் வடகொரியர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வடகொரியாவுக்கு செல்லும் தென்கொரியர்கள் என டிஎம்இசட் எல்லைையை இரகசியமாக தாண்டுபவர்கள் தொடர்பாக கடந்த ஏழு தசாப்தங்களாக இருதரப்பிலும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

 
கொரிய போர்

முற்றுப்பெறாத போரின் அடையாளம்

டிஎம்இசட் என்று அழைக்கப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதி, 263 கிலோமீட்டர் நீளமும், 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இது கம்யூனிச சிந்தாந்தத்தை கொண்ட வடகொரியாவையும், முதலாளித்துவம் பேசும் தென்கொரியாவையும் பிரிக்கிறது.

1950 முதல் 1953 வரை மூன்றாண்டுகள் நீடித்த கொரிய போர், 5 மில்லியன் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரை பலி கொண்டது. அதையடுத்து ஒரு வழியாக 1953 இல் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே போர் நிறுத்த அமைதி உடன்படிக்கை கையெழுத்திட முடிவு செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரை இருநாடுகளுக்கும் இடையே எழும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், ராணுவ நடவடிக்கைகள் இல்லாத எல்லைப் பகுதியாக டிஎம்இசட் மண்டலம் வரையறுக்கப்பட்டது. ஆனால்,போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் ஒருபோதும் கையெழுத்திடப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே இன்றும் போர் பதற்றம் நீடித்து கொண்டிருப்பதாலும், புகைந்து கொண்டிருக்கும் பகை உணர்வாலும், வட கொரியா மற்றும் தென் கொரியா இடையேயான மோதலின் மிகப்பெரிய வரலாற்று அடையாளமாக டிஎம்இசட் மண்டலம் திகழ்கிறது.

 
கொரிய போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டிஎன்இசட் மண்டலத்தில் இம்ஜின் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சுதந்திர பாலம், கொரியாவின் வடக்கையும், தெற்க்கையும் இணைக்கும் ஓரே பாலமாக திகழ்கிறது

வரலாற்று சிறப்புமிக்க பன்முன்ஜோம் நகரம்

வடகொரியாவின் எல்லைக்குள் அமைந்துள்ள பன்முன்ஜோம் நகரில், 1953இல் கொரிய சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு முன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற இடமாகவும், கூட்டு பாதுகாப்புப் படையின் தலைமையகமாகவும் திகழ்வதால் பன்முன்ஜோம் நகரம் உலக அளவில் இன்றும் கவனம் பெற்றுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரியாவின் எல்லைகளை வரையறுக்கும் சிமெண்ட்டால் குறிக்கப்பட்டுள்ள கோடும், சோதனைச் சாவடிகளும் இந்த நகரின் முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. சமீபகாலமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாகவும் பன்முன்ஜோம் மாறி உள்ளது. இங்கு போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான இடம், அதன் அருகில் அமைந்துள்ள கூட்டுப் பாதுகாப்பு பகுதி உள்ளிட்டவற்றை அவர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

 
கொரிய போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்கள் ஜூன் 30, 2019 இல் பன்முன்ஜோமில் சந்தித்து பேசினர்

வரலாற்று மைல்கற்கள்

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே 1953 இல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் கடந்த 70 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வபோது போர் பதற்றம் ஏற்பட்டு கொண்டுதான் உள்ளது. இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்படும் போதெல்லாம் அதை தணிக்கும் விதமாக, அமைதி மற்றும் நல்லிணக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடமாக கொரியாவின் டிஎம்இசட் மண்டலம் விளங்கி வருகிறது.

குறிப்பாக, கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணித்து, இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ‘சன்ஷைன் பாலிசி’ குறித்து 1998 -2008 இடைப்பட்ட இரு தசாப்தங்களில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதன் மூலம் இந்த எல்லைப் பகுதி, உலக அளவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றது.

சமீப காலத்தில் சொல்ல வேண்டுமானால், வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டு தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு பன்முன்ஜோம் நகரில் 2018 இல் நடைபெற்றது. அத்துடன் கொரியப் போருக்கு பிறகு, தென் பிராந்தியத்தில் காலடி எடுத்து வைத்த முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றார் வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன்.

இதேபோன்று 2019 இல் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, டிஎம்இசட் மண்டலத்தில் தான் சந்தித்து பேசினார். இதன் மூலம் வட கொரிய எல்லையில் காலடி எடுத்து வைத்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 
கொரிய போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

1976 இல், மரம் ஒன்று வெட்டப்பட்டதையடுத்து அமெரிக்க ராணுவத்தினருக்கும், வட கொரியர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலை விவரிக்கும் புகைப்படம்

பதற்றங்களும், அதன் விளைவான சம்பவங்களும்

வடகொரியா, தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தால் கொரியாவின் டிஎம்இசட் மண்டலம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்களை காண்பது அரிதான விஷயமாகவே உள்ளது. குடியிருப்புகளோ, வணிக வளாகங்களோ இந்தப் பகுதியில் இல்லை. தென்கொரியாவின் பெரும்பாலான பகுதிகள் மக்கள்தொகை நெருக்கம் அதிகமுள்ள இடங்களாகவே அறியப்படுகின்றன. இதற்கு மாறாக, கொரியாவின் டிஎம்இசட் மண்டலம் அமைந்துள்ள பகுதி, பல்லுயிர் பெருக்கத்திற்கு சாதகமான இயற்கை சூழல் நிறைந்த பகுதியாக திகழ்கிறது.

 

தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டுள்ள மண்டலமான இப்பகுதியில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.

1976 இல் இந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில், வடகொரியர்களால் கோடாரியால் வெட்டப்பட்டு இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2017 இல், வட கொரிய வீரர் ஒருவர், இந்த மண்டலத்தின் வழியாக தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றார். அப்போது தென் கொரிய ராணுவம் அவரை நோக்கி ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டது. இருப்பினும் அந்த தாக்குதலில் இருந்து வடகொரிய வீரர் உயிர் தப்பினார்.

குறைந்த எண்ணிக்கையிலான வடகொரியர்களும், தென்கொரியர்களும் பரஸ்பரம் இந்த மண்டலத்தின் வழியே எல்லையை கடக்க தான் செய்கின்றனர்.

ஆனாலும், பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த டிஎம்இசட் பகுதியைக் கடப்பது என்பது யாருக்கும் மிகவும் கடினமான முயற்சியாகவே இருந்து வருகிறது.

நாட்டின் தெற்கே தப்பிச் செல்ல முயற்சிக்கும் வடகொரியர்களில் பெரும்பாலானோர், மூன்றாவது நாட்டில் தஞ்சம் புகும் நோக்கில் சீனா வழியாக பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

கொரிய தீபகற்பத்தின் அரசியலில் தொடர்ந்து நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மாறிவரும் சர்வதேச உறவுகளின் விளைவாக, டிஎம்இசட் எனப்படும் ராணுவ நடவடிக்கைகள் அற்ற மண்டலம் 21 ஆம் நூற்றாண்டிலும் வட கொரியா மற்றும் தென்கொரியாவை பிரிக்கும் அடையாளமாகவே இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான பனிப்போர் அரசியல் நீடிக்கும் வரை இந்த மண்டலமும் இருக்கத்தான் செய்யும்.

https://www.bbc.com/tamil/articles/c4n0rp5xqpdo

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க சிப்பாய் தப்பியோடியமைக்கு அமெரிக்க இராணுவத்திலுள்ள இனவாதமே காரணம்: வட கொரியா

Published By: SETHU

16 AUG, 2023 | 10:16 AM
image
 

அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த மாதம், எல்லை கடந்து வட கொரியாவுக்கு தப்பியோடிமைக்கு அமெரிக்க இராணுவத்திலுள்ள இனவாதமே காரணம் வட கொரியா தெரிவித்துள்ளது.

ட்ரேவிஸ் கிங் எனும் 23 வயதான அமெரிக்க சிப்பாய், கடந்த மாதம் தென் கொரியாவிலிருந்து வட கொரியாவுக்குள் நுழைந்தார்.

அவர் புகலிடம் கோருவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார் எனவும் வட கொரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இவ்விடயத்தை தான் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேற்படி  சிப்பாயை பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அழைத்து வருவதற்கே தான் முன்னுரிமை அளிப்பதாகவும்  அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேற்படி சிப்பாய் வேண்டுமென்றே எல்லையை கடந்தார் என தாம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

தான் வேண்டுமென்றே வட கொரியாவுக்குள் நுழைந்ததாக அச்சிப்பாய் ஒப்புக்கொண்டார் என வட கொரியாவின் அரச செய்திச் சேவை தெரிவித்துள்ளது. எனினும், அவர் சட்ட நடவடிக்கை அல்லது தண்டனையை எதிர்கொள்கிறாரா என்பதை அச்செய்திச் சேவை தெரிவிக்கவில்லை. 

https://www.virakesari.lk/article/162468

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2023 at 05:17, nedukkalapoovan said:

அமெரிக்க வீரர் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு.. நாடு மாறிவிட்டார். என்ன கறுப்பினத்தவர் மீதி பழியை போட்டுவிட்டு.. அமெரிக்கா இதையும் கடத்து போகும். அடுத்தவனுக்கு பிரச்சனை கொடுப்பது என்றால்.. அமெரிக்காவுக்கு ஆலாதிப் பிரியம். தனக்கு ஒரு பிரச்சனை என்றால்.. பூசி மொழுகிற மொழுகு இருக்கே.. சொல்லி வேலையில்லை. 

அப்ப நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால், இனவாதம் அமெரிக்காவில் இப்பத்தான் தலைதூக்கியுள்ளது என்று… பைடன் இருக்கும்போதே இப்படியென்றால், டிரம்ப், டிசான்டிஸ் மாதிரியான வலதுசாரிகள் இருந்தால் எப்படிஇருந்திருக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.