முட்டி மோதாமலேயே வென்றான் காளமாடன்!
Ko.Ragupathi
திரையில் நீலச் சுவாலை
கலை இலக்கியப் படைப்புகளையும் திரைப்படங்களையும் ‘கற்பனை’ எனக் கூறினாலும் அவற்றுக்குள் சமூகத்தின் எதார்த்தங்களும் இருக்கின்றன. இந்த அடிப்படையைக்கூட அறியாமல் ‘உன்குழலில்’ (YouTube) திரைப்படங்களை ‘மதிப்பிடு’கின்றனர். தனக்கு மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட ஒருவர் ‘பைச’னை வரவேற்றதால் அப்படத்தைச் சந்தேகத்துடன் பார்க்கச் சென்றதாக ‘உன்குழலர்’ ஒருவர் கூறியுள்ளார். ஜாதியக் கட்டமைப்பையும் தென்மாவட்டங்களின் ஜாதிய மோதல்களின் பின்னணியை மட்டுமன்றி, கபடியின் விதிகளைக்கூட அறியாதோர்தான் ‘பைச’னை ‘மதிப்பிட்டுள்ளனர்’. ‘விளையாட்டு வடிவம்’ (sports formula) திரைப்படத்துக்கு வெற்றியைத் தருமென்ற நம்பிக்கையில் ‘பைசன்’ உருவாக்கப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். திரைப்படங்கள் அரசியல் பொருளாதார ஆதாயத்துக்கான கலைத் தொழிலாக இருப்பதை மறுக்க இயலாதுதான். ஆனால் அதேசமயம், ‘சார்பட்டா பரம்பரை’ (2021), ‘ப்ளூ ஸ்டார்’ (2024), ‘லப்பர் பந்து’ (2024), ‘பைசன்’ (2025) போன்ற சமகால திரைப்படங்களை வெறும் வணிகச் செயலாகவும் குறுக்க இயலாது. ஜாதிய முரண்கள் விளையாட்டுகளிலும் விளையாடுவதை அத்திரைப்படங்கள் உரையாடுகின்றன. அவை வணிகச் செயலாக இருந்தாலும்கூட நமக்குச் சிக்கல் இல்லை. ஆர்ய ப்ராமண, ஜாதிதிராவிட இயக்குநர்கள் திரைப்படங்களை இயக்கி பெரும் முதலாளிகளாக மாறுகிறபோது ஆதிதிராவிட இயக்குநர்களும் அவ்வாறு மாறுவதில் எந்தத் தவறும் இருக்க இயலாது. தலித் இயக்குநர்கள் அவர்களின் சமூகத்தைப் படமாக்கிப் பணமாக்குகிறார்கள் எனக் குற்றம் சுமத்துவதே தலித் வெறுப்பு மனநிலைதான். பொதுவாகத் திரைப்படங்களின் ரசனைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் எதிர்பார்ப்பு இருக்கும்; தலித் இயக்குநர்களின் திரைப்படங்கள்தான் ‘ஜாதி அரசியலுடன்கூடிய’ ரசனைக்காக எதிர்பார்க்கப்படுகின்றன; அவை சலசலப்பையும் விவாதத்தையும் உருவாக்குகின்றன.
அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி வீரியமாக எழுந்த தலித் இலக்கியங்களும் பனுவல்களும் விளைவித்த விவாதம் முனை மழுங்கிய இக்காலத்தில் அது திரைத்துறையில் சுடர்விட்டு எரிகிறது. இதைப் பற்ற வைத்தது இயக்குநர் பா.இரஞ்சித்தும், அவருடைய நீலம் நிறுவனமும் என்ற கூற்று மிகை மதிப்பீடு அல்ல. ‘நான் யார்’ எனத் தன் அடையாளத்தை வெளிப்படுத்தியதும், ‘இதைப் பேசுவது எதற்காக’ எனத் தன் அம்பேத்கரிய அரசியலைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் அறிவித்ததும் ஜாதிய சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. நீலம் அறிமுகம் செய்த மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ வழி ஜாதி உரையாடலைத் தொடங்கினார். தன்னுடைய மக்களின் வலியை, வேதனையைத் தொடர்ந்து திரைப்படமாக்குவேன் என அப்பட்டமாக அறிவிக்கிறார். அவர் பிறந்த சமூகத்துக்குள் ஒரு பிரிவினர் தலித் என்ற சொல்லையும், ஒடுக்கப்பட்டோர் என்ற சமகால எதார்த்த நிலையையும் மறுக்கின்றனர். தாங்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் என்ற ‘அரசாண்டப் பரம்பரை’யினர் உரிமையைக் கோருகின்றனர். இவற்றின் தொடர்ச்சியாக அரசின் ‘பட்டியல் வகைமை’யிலிருந்தே வெளியேற வேண்டுமென்ற இயக்கத்தையும் முன்னெடுக்கின்றனர். இந்த நிலைப்பாடுகளுக்கு முரணாக மாரி செல்வராஜ் தானும் தன் சமூகத்தினரும் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகிற அவலத்தைப் பேசுகிறார். ஒடுக்கப்படுகிற மக்களின் எந்தச் சிக்கல்களையும் எந்த வடிவங்களில் பேசினாலும் அவர்களைச் சுரண்டுகிற, ஏமாற்றுகிற, தாக்குகிற ஆதிக்க ஜாதிகளையும் பேசுவது தவிர்க்க இயலாது. இதனால் சுயஜாதியும், ஆதிக்க ஜாதிகளும் அவரைக் கண்டிக்கின்றனர். எழுகின்ற எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதார்த்தங்களை எடுத்துரைப்பேன் என அறிவிக்கும் மாரி செல்வராஜின் பெருங்கோபமும் அரசியலும் திரைப்படங்களாய் வெளிப்படுகின்றன. அவருடைய ‘பரியேறும் பெருமாள்’ (2018), ‘கர்ணன்’ (2021), ‘மாமன்னன்’ (2023), ‘வாழை’ (2024), ‘பைசன்’ (2025) ஆகிய ஐந்து திரைப்படங்களும் ஒடுக்குமுறைகளின் வெவ்வேறு வடிவங்களையும் அவற்றுக்கெதிராகப் போராடுவதையும் கருவாகக் கொண்டிருக்கின்றன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ‘தமிழ்நாட்டில் தேவேந்திரகுல வேளாளர் இயக்கம், 1920 – 2000’ என்ற தலைப்பில் கா.அ.மணிக்குமார் நெறியாள்கையில் மேற்கொண்ட ஆராய்ச்சியால் முனைவர் பட்டம் பெற்ற நான், மாரி செல்வராஜின் திரைப்படங்களைத் தென்மாவட்டங்களின் ஜாதிய எதார்த்தத்தின் பின்புலத்தில்தான் மதிப்பிடுகிறேன். ‘பரியேறும் பெருமா’ளில் உரையாடலை முன்வைத்த மாரி செல்வராஜ், ‘கர்ண’னில் உரசலைத் தூண்டுகிறாரோ எனச் சிலர் விமர்சித்தபோது, “அத்திரைப்படம் சமூக எதார்த்தத்தை, வரலாற்றை, உண்மையைப் பேசுகிறது” என இடதுசாரி தோழர்கள் சிலரிடம் வாதித்தேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் விழுப்புரம் கிளை சார்பில் மதுசூதனன் ஏற்பாடு செய்த இணையக் கூட்டத்திலும் அவ்விவாதத்தை வலுப்படுத்தினேன். ‘கர்ண’னின் கருப்பொருள்தான் ‘மண்டேலா’ (2021) திரைப்படத்திலும் பேசப்பட்டிருப்பதால் ‘கர்ணனும் மண்டேலாவும் பொதுவுரிமையின் கலகக் குரல்கள்’ என்ற கட்டுரையைக் காலச்சுவடு (ஜூன் 2021) இதழில் எழுதினேன்.
‘பைசன் என்ற காளமாடன்’ என்னுள் உணர்ச்சிவய மனநிலையையும் ஏற்படுத்தியது. காளமாடனை உருவாக்கிய தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷியஸ் பள்ளியில்தான் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை நானும் பயின்றேன். அப்பள்ளியின் கால்பந்தாட்டக் குழுவிலும் இடம்பெற்றேன். மர்காஷியஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தில் சேர்ந்தபோதும் கால்பந்தாட்டக் குழுவில் இணைந்து சில மாதங்கள் விளையாடினேன். கால்பந்தாட்ட வீரர்கள் அனைவருக்கும் பூட் கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் சில்வியா, அதை எனக்குத் தராதபோதுதான் பாகுபாட்டை உணர்ந்தேன். இதைக் கிறிஸ்துவ தேவேந்திர சமூகத்தைச் சேர்ந்த தேவா, தேவர் சமூகத்தைச் சேர்ந்த கணேசன் ஆகியோரிடம் கூறினேன். தேவா எனக்கு இலவசமாக பூட் தந்தார். பாகுபாடு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அனுபவத்திலும் வயதிலும் என்னைவிட மூத்தவர்களான அவர்கள் நட்சத்திர வீரர்களாகப் பிரகாசித்ததால் “வேலியிட இயலாது நிலையில் இருந்தனர்.” இச்சிக்கலைக் கல்லூரியின் கபடி வீரர்களும், தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த என் நண்பர்களுமான தேமாங்குளம் சுந்தர், செம்பூர் ஜூலியஸ் போன்றோரிடம் கூறினேன். கல்லூரியின் கபடி அணிக்குத் தேவேந்திரர் சமூக மாணவர்களே பலமானவர்கள் என்பதால் ஜாதிய பாகுபாடு இல்லை எனப் பதிலளித்தனர். நானும் அவ்வப்போது கபடி விளையாடினேன். மணத்தி கணேசனையும் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே அறிந்தேன். ஜாதி பாகுபாட்டால் குழுவிலிருந்து வெளியேறி விளையாடுவதையே முற்றிலும் நிறுத்தினேன். விளையாடிய நேரத்தைத் தட்டச்சும் சுருக்கெழுத்தும் படிக்கச் சென்றேன். முனைவர் பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் தலித் இலக்கிய எழுச்சியின் தாக்கத்தால் பள்ளி கல்லூரி அனுபவங்களுடன் வேறுசில பாகுபாட்டு அனுபவங்களையும் இணைத்து ‘அந்தப் பாவிகளைத் தண்டிப்பீராக!’ எனத் தலைப்பிட்டுக் குறுநாவல் எழுதினேன். அப்பிரதியைத் தொலைத்துவிட்டேன்! என் சுய அனுபவங்களால், பிற ஜாதியைச் சேர்ந்த அனைவருமே பாகுபாட்டைக் கடைபிடிப்பர்; பகையுடன் அணுகுவர் எனக் கூற இயலாது. ஏனென்றால், மர்காஷியஸ் பள்ளியிலும் கல்லூரியிலும் பிற சமூகத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் (விலங்கியல்), ஃப்ரடெரிக் (இயற்பியல்), பியூலா (தமிழ்), ஜாஸ்மின் (வரலாறு), கிறிஸ்டோபர் (வரலாறு), பீட்டர் (வரலாறு) போன்றோர் படிப்பில் என் ஆர்வத்தைக் கண்டு என்னை ஊக்கப்படுத்தினர்; அரவணைத்தனர். ஆசிரியர்களில் ஒரே ஜாதியைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டில் பாகுபாட்டையும், சிலர் படிப்பில் ஊக்கப்படுத்தலையும் பின்பற்றிய பின்னணியிலும், தேவேந்திரர் சமூக ஆராய்ச்சி அனுபவத்திலும்தான் காளமாடனை மதிப்பிடுகிறேன்.
மர்காஷியஸ் பள்ளியின் பிரார்த்தனை நேரத்தில் வகுப்பறையில் பிறரின் சாப்பாடு பாத்திரங்களைத் திறந்து தன் பசியை அடக்கும் காளமாடனைக் கண்டிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் சந்தனராஜ், அவனுடைய கபடி ஆர்வத்தைக் கண்டுணர்கிறார்; அவனை அரவணைத்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்துகிறார். சந்தனராஜின் உடல்மொழியும் வார்த்தைகளும்கூட கனக்கச்சிதமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவரைப் போல் ‘கடா மீசை’யுடன் ஒர் உடற்பயிற்சி ஆசிரியர் நான் பயின்றபோது மர்காஷியஸ் பள்ளியில் இருந்தார். அவருடைய பெயர் மோகன் என்பது என் நினைவு. பிறர் உணவை உண்ணும் காட்சி இடம்பெற்றிருக்க வேண்டாம் எனச் சிலர் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமல் பிறரின் உணவை உண்ணுவது இயல்பாக நடைபெறும். அந்தப் பிறர் நண்பர்களாகவும் வகுப்புத் தோழர்களாகவும் இருப்பர். இச்செயலைத் ‘திருட்டு’ என எவரும் கருதவில்லை. விளையாடிய காலங்களில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. கொடும்பசியில் இருக்கும் விளையாட்டு வீரனுக்கு ஒருடிபன் பாக்ஸ் உணவு போதுமானது அல்ல; கூடுதலாகத் தேவைப்படுவது இயல்புதானே. அவனுடைய கொடும்பசிக்காகப் பச்சாதாபம் கொள்வதுதானே சரியாக இருக்க இயலும்! இதைப் போன்று, 300 பரோட்டாக்களைச் சாக்கு மூட்டையில் கொடுக்கும் காட்சியும் விமர்சிக்கப்படுகிறது. தென்மாவட்டக் கிறிஸ்துவ தேவாலயங்களில் வருடத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாள் ‘அசனம்’ என்ற பெயரில் உணவு வழங்குவது இன்றுவரை பின்பற்றப்படுகிறது. இது சமத்துவத்துக்கான செயலாகத் தோன்றியிருக்கலாம். அதைப் புனிதமாகக் கருதுவர். அனைத்து ஜாதியினரும் வேறுபாடற்றுச் சமத்துவமாய் ‘அமர்ந்து’ உண்பதும், ‘அசனச் சோற்றைத்’ தோளிலிடும் துண்டுகளில் வாங்கி பொதிந்துச் செல்வதும் நடைபெறும். நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் டீ வாங்கும் பழக்கமுடைய இக்காலத்தில் சாக்கு மூட்டை பரோட்ட சிக்கலானது அல்ல.
தென்மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களின் இரவு நேரங்களில் நடத்தப்படும் ‘மின்னொளி கபடி போட்டி’களைக் காண்பதற்கெனக் கூட்டம் கூடும். எங்கள் கிராமத்திலிருந்தும் சென்றிருக்கிறோம். ஒவ்வொரு கிராமங்களும் குழுக்களும் இதில் விளையாடினர். இது தனித்த ஜாதியாகவும், ஜாதிகள் கலந்தும் இருக்கும். சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் கபடிக் குழுக்களில் முக்கியமான காளமாடன்கள் சிலர் இருந்தனர். தனியார் கம்பெனிகளும் கபடி குழுக்களைக் கொண்டிருந்தன. விளையாட்டுத் திறமையால் கபடி அணியில் சேர்க்கப்பட்டு அக்கம்பெனிகள் வேலையும் கொடுத்தன. பல்கலைக்கழக, மாநில அளவிலான வீரர்களுக்கு அரசு வேலை எளிதாகக் கிடைத்ததும் கால்பந்து, கபடி விளையாட்டுகளில் பங்கெடுப்பதற்கான முக்கியக் காரணமாக இருந்தது. இந்த நிலைக்கு முன்னேறுவது எளிதானது அல்ல. ஜாதி மோதல் கூர்மைபெற்ற 1990களில் ஜாதிகளுக்குள் பகை புகைந்தது; மோதல் வெடித்தது. நட்பும் பகையும் மின்னலாய் வந்துசென்று ஏற்படுத்திய தாக்கத்தின் பின்புலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டு வீரராகவும் நட்சத்திரமாகவும் உருமாறுவது கடினம். விளையாட்டில் பதுங்குதல், பாய்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட நுணுக்கங்களை வீரனுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் அவசியம். அவனுக்கு உணவு, உடை உட்பட சில பொருட்கள் வேண்டும். அவற்றை வாங்கும் பொருளாதாரச் ‘சக்தி’ ஒடுக்கப்பட்டோருக்கு இல்லை. இவை புற ஜாதிகளிடமிருந்து கிடைக்கின்றன. காளமாடன் கபடி வீரனாக உருவாவதிலும் அவனை அங்கீகரிப்பதிலும் ஜாதியின் உள்முரண்தான் முக்கியத் தடையாக இருக்கிறது. முந்தைய நான்கு படங்களிலும் ஜாதியின் புறமுரணைப் பேசிய மாரி செல்வராஜ், முதன்முதலாகக் காளமாடனில் அகமுரணைக் காட்சிப்படுத்தியுள்ளார். ஆசிரியரின் ஆதரவில் வயிறாற பரோட்டா உண்ணும்போதுதான், தன் முன்னே ஒருவர் அறுத்துக் கொல்லப்படுவதைக் கண்டு ‘காளமாடனே’ அஞ்சுகிறான்; பதறுகிறான். கொல்லப்பட்டது தன் ஜாதியைச் சேர்ந்தவர் என்றபோதிலும் அச்சம்பவத்தில் காளமாடன் சாட்சியாய் மாறி அவன் வாழ்க்கைத் திசை திரும்பாதிருக்க அந்த ஆசிரியர் காளமாடனைக் காப்பாற்றுகிறார். ஜாதி மோதலில் ஏதாவது ஒருவகையில் வழக்கில் சிக்கியவர்களின் வாழ்க்கை சீரழிந்ததைப் பார்த்தால் இக்காட்சியின் முக்கியத்துவம் விளங்கும். விளையாட்டும் வினையாவதை அனுபவத்தில் உணர்ந்த காளமாடனின் தந்தை பசுபதி, மகன் விளையாடுவதை மறுக்கிறார். அப்போதும் ஆசிரியர்தான் விளையாட உதவுகிறார். இக்காட்சிகள் ஒருவேளை ‘உண்மைச் சம்பவங்கள்’ என்றால், காளமாடனின் ஆசிரியருக்கு இந்த நாடே நன்றிக் கடன் பட்டிருக்கிறது!
உள்ளூரின் உள்பகையால் ஊர்க் கபடிக் குழுவிலேயே காளமாடனை வீரனாக அங்கீகரித்துச் சேர்க்க மறுப்பதும் நிகழ்கிறது. ஒரேநேரத்தில் உள்பகையின் புறக்கணிப்பையும், புறஜாதியைச் சேர்ந்த பண்ணையாரின் ஆதரவையும் பெறுகிறான். வீரனின் திறமையைத்தான் பார்க்கிறார்; அவரின் ஜாதியை அல்ல. இதைப் புரிய வைக்க ஆசிரியரும் பண்ணையாரும் முயற்சிக்கின்றனர். இது காளமாடனின் தந்தைக்கு அச்சமாகவும் நம்பிக்கையற்றதாகவும் இருக்கின்றன. நம்பிக்கைக்குப் பின் ஏற்படும் ஜாதிய தாக்குதலால் காளமாடனைப் பண்ணையாரின் ஆட்கள் சந்தேகித்தாலும், ‘வீரன்’ துரோகம் செய்ய மாட்டான் எனப் பண்ணையார் நம்புகிறார்; அவனைப் பாதுகாப்பாக அனுப்புகிறார்; தொடர்ந்து விளையாட அறிவுறுத்துகிறார். அச்சமும் சந்தேகமும் ஜாதியம் உற்பத்தி செய்ததாகும். காளமாடன் கபடி நட்சத்திரமாகி இந்திய அணியில் சேர்வதற்குப் புறஜாதியினரின் ஆதரவுதான் முக்கியப் பங்காற்றுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு அவர்களைச் சுரண்டுகின்ற ஆதிக்க ஜாதியினர்களே உதவுவார்களா?
ஜாதிய அமைப்பு, ஜாதிகளுக்கிடையே பாகுபாட்டையும் பகையையும் விளைவித்தாலும் திறமைக்கான ஆதரவைப் பிற ஜாதிகளின் ‘தனிநபர்கள்’ கொடுக்கச் செய்கிறது. நான் பிறந்துவளர்ந்த கிராமத்தை என் தந்தை கோ.பெ.கோயில்பிள்ளை புதிதாக உருவாக்கிய காலத்தில், எங்கள் உறவினர்களுக்குத் தன் நெருங்கிய நண்பரான டி.கே.செல்லத்துரை நாடார் செய்த உதவிகளுக்காக ‘டிகேசி நகர்’ என என் தந்தை பெயரிட்டார். எனக்கும் பிற ஜாதியினரின் உதவிகள் முக்கியமானவை. எனவே, ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் பிற ஜாதி தனிநபர்களின் ஆதரவு கிடைப்பது இயல்பு. சுரண்டும் ஜாதிகளிலும் இரக்கமும் மனிதநேயமும் இருக்கின்றன. பண்ணையார் ‘திறமையை’ அங்கீகரிப்பதில் ஜாதியைப் புறக்கணிக்கும் வகையைச் சேர்ந்தவர். சுயஜாதித் தலைவரும் பண்ணையாரும் எதிரிகளாக இருந்தபோதிலும் காளமாடனின் விளையாட்டுத் திறமையை அங்கீகரிப்பதில் ஒத்தச் சிந்தனையுடன் இருக்கின்றனர்! அத்திறமையை அவனுடைய ஜாதியினர் அங்கீகரிக்க மறுக்கின்றனர்; இழிவாகப் பேசுகின்றனர். இதைக் கண்டிக்கும் ஜாதித் தலைவர், காளமாடன் அவனுடைய திறமையால்தான் நிற்கிறான்; அதுவே சமூகத்தின் பெருமை எனக் கூறுகிறார். இத்தகைய தனிநபர்கள், திறமையை ஜாதியிலிருந்து மதிப்பிடவில்லை; திறமையைத் திறமையாகப் பார்க்கிறபோது ஜாதியைப் புறக்கணிக்கின்றனர். உடற்பயிற்சி ஆசிரியரும், பண்ணையாரும், விளையாட்டுத் தேர்வுக்குழு நபரும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் திறமையைத் திறமையாகப் பார்த்ததால் அத்திறமை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றனர். இதனால் காளமாடன் நட்சத்திரமானான். திறமைதான் திறமையை அங்கிகரீக்கும்; திறமை ஜாதியையும் புறக்கணிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியது மாரி செல்வராஜின் தனித்திறமை! அது இப்படத்தின் தனிச்சிறப்பு! “நான் அல்ல, கண்ணகிநகர்தான் பிராண்ட்” எனக் கார்த்திகா அறிவித்த விளையாட்டின் ‘திறமை’ அரசியல்தான் காளமாடனின் அரசியலும். ஏககாலத்தில் காளமாடன் நிழலாகவும், கண்ணகிநகர் கார்த்திகா நிஜமாகவும் ஒடுக்கப்பட்டோரின் திறமைகளை வெளிச்சமாக்கியுள்ளனர். ஒடுக்கப்படும் சமூகங்களின் வலியை அவர்களை வதைப்பவர்களால் புரிந்துகொள்ளவே இயலாது என முன்வைக்கப்படும் விவாதத்துக்கு எதிராக அதைப் புரிந்துகொள்ள இயலும் என்று காளமாடன் பறைசாற்றுகிறான்.
பகையின் பரிமாணம்
பள்ளிக்கூடத்திலிருந்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தரும்வரை காளமாடன் ஜாதிப் பாகுபாட்டை அனுபவித்ததாகக் காட்சிகள் இல்லை. காளமாடனைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் அவனைப் பாதிக்கின்றன; விளையாட்டுக்குத் தடைகளாக இல்லை. ஒருவன் தன்னைக் கட்டிப்பிடிப்பதாகவும் மற்றொருவன் கத்தியால் குத்துவதாகவும் இதனால் யாரிடம் பேசுவது, சிரிக்கிறது, பழகுவது என ஜாதியரசியல் தெரியாத வெள்ளந்தி அவன். கபடியில்தான் எவராலும் கட்டுப்படுத்த இயலாத காளமாடன், ஆட்டைப் பலியிட கோயிலுக்குச் செல்கிறபோது வேற்று ஜாதியைச் சேர்ந்தவராலும், கிராமத்தில் தன் காதலியின் அண்ணனாலும், இந்திய அணியில் விளையாடச் செல்கிறபோது காவலர்களாலும் தன் தந்தை தாக்கப்படுகிறபோது காளமாடன் சீறிப் பாய்ந்து எதிர்த்துத் தாக்குகிறான். தன் தந்தையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்; வேறு அரசியல் இல்லை. உண்மையில் காளமாடனுக்கு அரசியல் தெரியவில்லை; குழந்தைப் பருவத்தில் ஒரு முத்தம் மட்டும் கொடுத்தவனுக்கு அதற்குப் பின் காதலும் வரவில்லை. மர்காஷியஸ் பள்ளியின் விளையாட்டு காலரியில் அமர்ந்து சைட் அடித்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இந்த அனுபவங்கள்கூட காளமாடனுக்கு இல்லை போலும்! வயதுக்கு மூத்தப் பெண்களைத் திருமணம் செய்ததும், குழந்தைக் கணவர் வழக்கமும் சில சமூகங்களில் இருந்தன. இவற்றைச் சிக்கலாக மாற்றியிருக்க வேண்டாம். தேசிய வீரனாகச் செல்கிறபோது அவனது தந்தை காவலர்களால் தாக்கப்படுவதும், காளமாடன் எதிர்த்துத் தாக்குவதும் அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற காட்சி. இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் ஜாதிய மோதல் சூழலில் அரசின் உரிய ‘மரியாதையுடன்’ காவலர்களின் பாதுகாப்பிலேயே சென்றிருக்க முடியும். இவ்விடத்தில் காவல்துறையுடன் மோதலை ஏற்படுத்தியது அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற, பொருத்தமற்ற, அவசியமற்ற காட்சி. சில சண்டைக் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். காளமாடன் எப்போதுமே கோபத்துடனேயே இருக்கிறான். அவன் முகத்தில் சிரிப்பே இல்லை. ஒடுக்கப்படுகிற சமூகங்களை மகிழ்ச்சியாக்கும் அவர்களுக்கு இடையேயான கேலியையும் கிண்டலையும் காட்சிப்படுத்தாமல் அவற்றை மாரி செல்வராஜ் விலக்குவது விளங்கவில்லை; அது வியப்பாகவும் இருக்கிறது.
‘பைச’னில் காட்டப்பட்ட இரு ஜாதிகளுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட தலைவர்கள் அக்காலத்தில் இருந்தனர். வாலிபர்களும் மாணவர்களும்கூட அவரவர் ஜாதி தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர். வெவ்வேறு ஜாதி நபர்களுடன் நட்பாகவும் பழகினர். என் நண்பன் கண்ணன் பண்ணையாரைப் பார்க்கச் சென்றதாக அவ்வப்போது கூறியது என் நினைவில் உள்ளது. தென்மாவட்ட ஜாதி மோதல்களின் பரிணாமமும் பரிமாணமும் ஒற்றைத் தன்மை கொண்டவை அல்ல; அவை பன்மையானவை. இந்தப் படத்தின் ‘பகை’, தாமிரபரணி பாசனத்தின் தென்கிழக்குக் கடைகோடிக்கு உரித்தானது. இத்தாக்கம் பிற பகுதிகளில் இல்லை. பிற்காலத்தில் இது வேறுவடிவம் பெற்றது. ஆனால், “நான், நீங்க, தாத்தனுக்கும் தாத்தன் பிறக்கிறதுக்கு முன்னாடியே பகையும் பழியும் இருப்ப”தாகச் சித்திரிப்பது அவ்விரு ஜாதிகளுக்குமான பகை நிரந்தரமாக நீடிக்கிற தோற்றத்தைத் தருகிறது. இது சிக்கலுக்குரியது. பைசனின் கதைக்களம் நெல், வாழை என விவசாயமும் விற்பனையும் நிகழும் பகுதி. இவ்விரண்டும் வெவ்வேறு ஜாதியினரால் செய்யப்படுகின்றன. வியாபாரிகளும் விவசாயிகளும் ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருப்பதால் இணக்கமும் பிணக்கமும் உண்டு. இங்கு நிலவுடைமையாளர்களாக இருந்த பிராமண, வெள்ளாள ஜாதிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் காலத்திலேயே குடிபெயர்ந்து நவீன வாழ்க்கைக்குள் சென்றதால், அந்நிலத்தில் விவசாயம் செய்த தேவேந்திரர்கள் நிலவுடைமையாளர்களாகினர். அங்குச் சில இடங்களில் நாடார்களில் சிலரும் பண்ணையார்களாக இருந்தனர். காளமாடனின் கந்தசாமி, பண்ணையார்களின் பிரதிநிதியே. அவருடைய ஆட்களின் பொருளாதார நிலை அவரைப் போன்றது அல்ல. அந்த “ஆட்களின்” வீடுகளையும், உடற்பயிற்சி ஆசிரியரின் வீட்டையும், கிராமத்தையும் காட்சிப்படுத்தியிருந்தால் ஜாதியின் உண்மை நிலை பார்வையாளர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். பிற்காலத்தில்தான் பண்ணையார், ஜாதியின் பிரதிநிதியாக உருமாறுகிறார். அதற்கான அரசியல் பொருளாதார காரணிகள் வேறு. ஆராய்ச்சிக் காலத்தில் அப்பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வில் அங்கு பண்ணையார், பண்ணையாள் என்ற ‘வர்க்க’ முரண் இருப்பதை அறிந்தேன். வர்க்க முரண்தான் சமத்துவ உரிமைக்கான போராளியாகப் பாண்டியராஜாவையும் உருவாக்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பண்ணையடிமை முறைக்கு எதிரான போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கியதால் பிற்காலங்களில் அது ஜாதிய மோதலாக உருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வர்க்க அணிதிரட்டலின் பலகீனத்தால் அது ஜாதிய மோதலாக உருமாறியது. இது மேலும் ஆய்வுக்கு உரியதுதான். இருப்பினும், மாரி செல்வராஜ் கூறுவதுபோல் அது முப்பாட்டன் காலத்துக்கும் முந்தைய பகை அல்ல. ஏனென்றால், பகை உருவாவதற்குப் பொருளாதார ஆதிக்கமும் (நிலவுடைமை, முதலாளித்துவம்) அல்லது இவ்வமைப்புகளின் அதிகாரத்தின் பிரதிநிதியாக இருப்பதும், இவற்றால் ஆளப்படுகிற குழுக்கள் இருப்பதும் அவசியம். இவ்வமைப்பு முரண்களை உருவாக்கும்.
‘பைச’னில் கந்தசாமியைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியினர் அடிப்படையில் ஜாதிய கிராம கட்டமைப்புக்குள் இல்லை. அவர்கள் தனித்த கிராமங்களில் சுயமாக, சுதந்திரமாக வசிக்கின்றனர். தென்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இவ்விரு பிரிவினருக்கும் இடையேயான உறவு ஆதிக்கமும் சார்பு நிலையையும் கொண்டிருக்கவில்லை. கந்தசாமி பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியில் பல பிரிவுகள் இருந்தன. அவர்களில் நிலவுடைமையாளர்களும் ஒரு பிரிவினர்; இவர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்குமான முரண் இயல்பானதே. இதுவும்கூட அந்தப் பகுதிகளுக்கு மட்டுமே உரியது. இது சுதந்திர இந்தியாவில் தோன்றிய முரண்தான். அது பாண்டியராஜா கொல்லப்படுவதுவரை நீடித்தது. ஒரு மூலையில் தோன்றிய வர்க்க முரண், அதற்குத் தொடர்பற்ற ஜாதிகளின் பகையாக மாறியதில் சில காரணிகள் உண்டு; இதைத் தனித்து விவாதிக்க வேண்டும். கந்தசாமிக்கும் பாண்டிராஜாவுக்கும் இடையிலான மோதலுக்கான அடிப்படைக் காரணத்தைக் காட்சிப்படுத்தாமல் மோதலை மட்டுமே காட்சிப்படுத்தியது, இரு ஜாதிகளுக்குமான “முப்பாட்டன் காலத்துப் பகை”யாகக் கூறுவது ஜாதியச் சிக்கலை மேலும் வலுப்படுத்துகிறது. காளமாடனுக்கே ஜாதியச் சிக்கல் புரியாதபோது, இதன் அரிச்சுவட்டை அறியாதோர் அதை விளங்குவது கடினம். ‘பைசன்’ என்ற பெயரைப்போல் உள்ளடக்கமும் அனைவரும் உள்வாங்கும் விதமாகக் காட்சியமைத்தல் அவசியம். பாண்டியராஜா, கந்தசாமி ஆதரவாளர்களாலும், கந்தசாமி காவலர்களாலும் கொல்லப்படுகிற சம்பவங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்டது ஜாதியின் பிரதிநிதிகள்தான் என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார். இவை, சுய ஜாதியினர் நம்பிக்கையானவர்கள் அல்லர்; அவர்கள் துரோகிகளாகவும் மாறுவர் என்பதற்குச் சாட்சி. ஒவ்வொரு துறைகளிலும் காளமாடன்கள் இயல்பிலேயே திறமையானவர்களாக இருப்பினும் அவர்கள் முட்டி மோதிதான் வெல்கிறார்கள். ஆனால், பைசன் என்ற காளமாடன் இதைச் செய்யாமலேயே வெற்றிபெறுகிறான். அவனுக்காகப் ‘பிறர்’தான் முட்டிமோதுகின்றனர்; அவன் விளையாட்டில்தான் காளமாடன். காளமாடன் பொதுச் சமூகத்தில் முன்வைக்கும் முக்கியக் கேள்வி: “சுயஜாதி அடையாள அணிதிரட்டல் அவசியமா?”
https://theneelam.com/bison-review/
By
கிருபன் ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.