Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்மராட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடதமிழீழத்தில் யாழ் குடாநாட்டின் தென் மூலையில் உள்ள தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. ஏ 9 வீதி என்று அழைக்கப்படும் யாழ் நகருக்கும் இலங்கையின் புராதன நகரான கண்டிக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பாதையில் உள்ள ஒரு அழகிய நகரம் அது.

சாவகச்சேரி நகரின் அயற்கிராமங்களாக மட்டுவில், நுணாவில், சங்கத்தானை, கச்சாய், மீசாலை, கைதடி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இன்னும் பல சிறிய இடங்களும் இருக்கின்றன. அதையும் பட்டியல் இட்டால் அதுவே தனியொரு கட்டுரை ஆகிவிடும்.

புவியியல் ரீதியாக நோக்கின் குடாக்கடலின் உப்புக்காற்று தூர இருந்து வருகிறது. ஆங்காங்கே வெண் மணற்தரைகள். பொதுவாக நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக இருக்கும். இருந்தாலும் நன்னீர் கிடைக்கும் இடங்களும் அதிகம் உண்டு. நிலத்தைத் தோண்டந்தோன்ட மணல் வந்து கொண்டே இருக்கும். வெகு ஆழத்தில் மட்டும் படிவுப்பாறைகள் தோன்றும். சில இடங்களில் வழமைக்கு மாறாக கருங்கற்பாறைகள் மட்டும் வருவதுண்டு. அப்படி ஒரு கிணறை அவதானித்து இருக்கின்றோம். அவர்கள் அந்தக் கிணற்றுக்கு எந்த சீமெந்து வேலையும் செய்யவில்லை. இயற்கையாகவே அந்த இடத்தில் கருங்கற்பாறைகள் உள்ளன.

தாவரங்கள் விலங்குப் பரம்பல்கள் என்று நோக்கின் நீண்டு வளர்ந்த தென்னைகளும் பனைகளும் பூவரசும் பலாவும் மாவும் நாவலும் இலுப்பையும் வாகையும் இலந்தையும் முருங்கையும் மரமுந்திரிகையும் ஈச்சும் அலங்கரிக்கும் ஒரு சோலை கொள் நகரம் சாவகச்சேரி என்றால் மிகையல்ல.

பறவைகளில் பலாக்கொட்டைக் குருவி, கொண்டைக்காரக் குருவி, அண்டங்காகம், அரிசிக்காகம், பச்சைக்கிளி, செம்பகம், மயினா, புலுனி, ஆந்தை மற்றும் மாடப்புறா, மணிப்புறா வகைகள் நிறைந்திருக்கின்றன. பல அரிய வகைப் பறவைகளையும் அவதானித்ததுண்டு. மாரி காலங்களில் பூமிப் பந்தின் வடதுருவத்தில் இருந்து இடம்பெயரும் பறவைகள் வயல்வெளிகளில் இருப்பதைக் காணலாம். குறிப்பாக பிளமிங்கோ வகைகளைக் கண்டதுண்டு.

விலங்குகள் ஊர்வனவற்றில் பாம்பு மிக அதிகம். விசமுள்ள பாம்புகளில் இருந்து விசம் குறைந்த சாரைப்பாம்பு, கோடாலிப்பாம்பு, மரங்களில் வாழும் பச்சைப்பாம்பு என்று பல பாம்புகள் உள்ளன. பூச்சிகளில் மட்டத்தேள், தேள், கறுப்புத் தேள், புலிமுகச் சிலந்தி என்று விச ஜந்துகளுக்கு குறைவே இல்லை. தேவாங்கு என்ற ஒன்று (குரங்கு போல சிறியது, இரண்டு பெரிய கண்கள் உண்டு) இரவில் மாமரங்களில் அதிகம் இருந்து ஓசை எழுப்பும். குரங்குகள் அட்டகாசமோ அது தனி. கீரி, கோழிகளைப் பிடிக்கும் மரநாய், உடும்பு மற்றும் ஓணான் போன்றவை பல வகைகளின் உண்டு. நிறைந்த உயிரினப்பன்மையை சாவகச்சேரியிலும் அவதானிக்கலாம்.

வீடுகளில் வளர்ப்புப் பண்ணைகளில் மாடு ஆடு கோழி நிறைந்திருக்கும். சிலர் முயலும் வளர்ப்பர். சாவகச்சேரி நகரின் சுற்றயலில் கிராமங்களில் கொய்யா நாவல் ஈச்சு நிறைந்த பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுவதால் அவ்விடங்களில் உடும்பு, முயல், வெளவால் வேட்டையாடுதலை பொழுதுபோக்காகவும் சிலர் உணவுத் தேவைகளுக்காகவும் செய்வர்.

பழங்களில் பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் நாவற்பழம் கொய்யாப்பழம் அன்னமுன்னாப் பழம் மரமுந்திரிகை இலந்தைப்பழம் என்று பல வகைப் பழங்கள் இலவசமாகக் கிடைக்கும்.

மாம்பழத்தில் கறுத்தக் கொழும்பு, வெள்ளைக் கொழும்பு, விலாட், அம்பலவி, சேலம், கிளிச்சொண்டு (புளி மாங்காய்) என்று பலவகைகள் உண்டு.

தொடர்ந்து சாவகச்சேரியின் முக்கிய அம்சங்கள் குறித்து நோக்குவோம்,

நகரின் மத்தியில் சாவகச்சேரிச் சந்தை உண்டு. நவீன தொடர்மாடிக் கட்டிடத்துடன் கூடிய வியாபார நிலையங்களும் அங்கு உண்டு. சந்தைப் பகுதியில் வார இறுதியில் சந்தை கூடுதல் விசேடமாக இருக்கும். பல ஊர்களிலிருந்தும் வாகனங்களில் பலாப்பழம் மாம்பழம் மரக்கறி வகைகள் பனங்கிழங்கு மரவள்ளிக் கிழங்கு வாங்குவதற்காக அவை மலிந்திருக்கும் காலங்களில் மக்கள் படையெடுப்பர். நவீன வசதிகளுடன் கூடிய பஸ்தரிப்பு நிலையமும் நகரின் மத்தியில் அமைந்திருக்கிறது. சாவகச்சேரி புகையிரத நிலையமும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் ரயிலில் பயணித்து யாழ் நகர் சென்ற நினைவுகளும் இப்போதும் உள்ளன. சாவகச்சேரி புகையிரத நிலையம் விசாலமானதுடன் நீண்ட மேடையையும் கொண்டது. மேற்குலக நகரங்களில் உள்ளது போன்ற அடிப்படைக் கட்டுமானம் அங்கும் இருந்திருக்கிறது. ஆனால் நவீனத்துவமான கருவிகள் உபகரணங்கள் புகையிரதங்கள் இல்லை. மின்சாரத்தில் இயங்கும் அதிவேக, நவீன வடிவமைப்புள்ள புகையிரதங்களாக அன்றி டீசல் எரிபொருளில் இயங்கும் புகையிரதங்களே இயக்கப்பட்டன. நகரின் வர்த்தகச் செயற்பாட்டுக்கும் மக்களின் போக்குவரத்துக்கும் இந்த புகையிரத நிலையம் அளப்பரிய சேவை செய்தது. பின்னர் ஏற்பட்ட போர்ச்சூழல் அந்தப் பகுதியையே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக்கிவிட்டது.

நக்ரின் மத்தியில் டிறிபேர்க் கல்லூரி என்ற புகழ்பூத்த கல்லூரி உண்டு. முன்னர் ஒரு காலத்தில் குடாநாட்டின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகவும் இது விளங்கியுள்ளது. பல கல்விமான்களை உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு.காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கூட தனது ஆரம்பக் கல்வியை அங்குதான் பயின்றுள்ளார். இக்கல்லூரியும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியும் தற்போதும் புகழோடு விளங்குகின்றன. சாவகச்சேரி இந்துக் கல்லூரி இலங்கையின் தேசிய பாடசாலைகளில் ஒன்றாக மிளிர்ந்து நிற்பதோடு தென்மராட்சியில் இருந்து பல மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வரும் சிறப்பையும் பெற்று விளங்குகிறது. இவை இரண்டும் ஆண்கள் - பெண்கள் கலந்து கல்வி கற்கும் பாடசாலைகள் ஆகும். நகரின் மத்தியில் பெண்களுக்கான ஒரு கல்விக் கூடமும் உண்டு. அது சாவகச்சேரி இந்து மகளிர் மகா வித்தியாலயம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றைத் தவிர பல சிறிய கல்விக் கூடங்களும் உள்ளன. நகரின் வடக்கே நுணாவில் கிழக்கில் அமிர்தாம்பிகை வித்தியாலயம் என்ற ஒரு கல்விக்கூடம் உண்டு. அங்குதான் அடியேன் ஆரம்பக் கல்வி கற்றேன் (ஆண்டு 1 தொடக்கம் 3 வரை). தென்மராட்சியில் பலரைப் ஆண்டு 5 புலமைப் பரிசியில் பரீடசையில் சித்திபெற வைக்கும் பாடசாலையது. தமிழர்களின் சொத்தே கல்வி என்பதற்கு சாவகச்சேரி நகரை அலங்கரிக்கும் கல்விக் கூடங்களும் சாட்சி பகர்கின்றன.

நகரின் மத்தியில் இருந்து சற்று தெற்கு நோக்கி ஏ9 சாலை வழி செல்லின் சாவகச்சேரி பொது மருத்துவமனை இருக்குமிடத்தை போய் சேரலாம். நடுத்தர அளவிலான மருத்துவமனை அது. 24 மணி நேரமும் சேவை வழங்கி வருவதோடு நகரில் உள்ள மக்களின் சுகாதார வைத்திய வசதிகளை மேம்படுத்திய நிலையில் வைத்திருக்கவும் பணியாற்றி வருகிறது. போர்ச் சூழலால் பல இடர்களைக் கண்டும் தளராத உறுதியோடு அதன் பணியாளர்களும் வைத்தியர்களும் தாதியரும் சேவையாற்றி வருகின்றனர்.

நகரின் மத்தியில் சற்று ஒதுக்குப்புறமாக சிறப்பான பெரிய நூலகம் உண்டு. அறிவு தோன்ற முதலே அங்கு சென்று நூல்களைக் கிழித்து விளையாடியதில் எமக்கும் பங்குண்டு.சிறிது வளர்ந்த பின்னர் சிறுவர் நூல்கள் பலவற்றை கடன் வாங்கிப் படித்துள்ளோம். சிறுவர்கள் பெரியவர்கள் என்று அந்த ஊர் மக்களின் அறிவுப்பசிக்கு தீனியிட்ட நூலகங்களில் சாவகச்சேரி நூலகம் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளது. சமீபத்திய போரின் பின் இப்போ அதற்கு என்ன கதி நேர்ந்துள்ளதோ தெரியவில்லை. இதைத் தவிர ஊரெங்கும் வாசிகசாலைகள் இருக்கின்றன. நாளந்த செய்தித் தாள்களை அங்கு படிக்கலாம்.

சாவகச்சேரி நகரை அண்டி ஒரு இடிந்த கட்டிடம் உண்டு. அதுதான் சிறீலங்கா அரசு தந்த அடிமைச் சின்னம். சிறீலங்கா பொலிஸ் நிலையம். அது அப்போ போராளிகளால் தாக்கி அளிக்கப்பட்டது. இப்போ மீண்டும் எழுந்து நிற்கிறதோ தெரியவில்லை. சாவகச்சேரி நீதிமன்றமும் இடிந்து போய்விட்டது. இப்போ அது எங்கே இயங்குகின்றது என்பதும் தெரியவில்லை.

தென்மராட்சி மக்கள் ஆன்மீக பற்றுதல் கொண்டவர்கள். சாவகச்சேரி நகரின் சுற்றயலிலும் சைவம் கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மதங்களைப் பின்பற்றும் மக்கள் தாங்கள் வழிபட என கோயில்களும் கிறிஸ்தவ தேவாயலங்களும் மசூதிகளும் கட்டி வைத்துள்ளனர். சாவகச்சேரி நகரில் தமிழ் முஸ்லீம் மக்கள் சகோதரர்களாக நெடுங்காலம் வாழ்ந்து வந்துள்ளனர். பல வியாபார ஸ்தாபங்கள் முஸ்லீம்களுக்குச் சொந்தமானவையாகவும் விளங்கின.

சாவகச்சேரி மக்களின் வாழ்வியல் பெரிதும் விவசாயம் சார்ந்திருக்கிறது

நகரைச் சுற்றிய பகுதிகள் பொன் விளையும் பூமி என்றால் மிகையல்ல. நீண்டி நீடித்த வயல்களும் பச்சைப்பசேல் என்று தெரியும் நெற்பயிர்களுமாக ஆண்டு தோறும் வருட இறுதில் நகரின் சுற்றுப்புறம் பசுமை கொண்டிருக்கும்.

பயணப்பாதை நெடுகினும் பசுமை கோலோஞ்சி இருக்கும். கண்ணுக்கும் மனதுக்கும் ரம்பியமாக இருக்கும் அக்காட்சிகள். மாஞ்சோலைகளும் தென்னந்தோப்புக்களும் பனங்கூடல்களும் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கும். இன்று சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்பால் பல தென்னைகளும் பனைகளும் வயல்களும் அவற்றின் செழிப்பிழந்து போயுள்ளன.

தென்மராட்சி மக்களின் பிரதானமாக நெற்பயிற்செய்கை செய்வோரே அதிகம். சிலர் தோட்டங்கள் செய்வர். இதை சாவகச்சேரி நகரை அண்டிய இடங்களிலும் தெளிவாகக் காணலாம். பாரம்பரிய நீரிறைப்பு முறைகளில் ஒன்றான துலாமிதித்தல் மூலம் நீர் இறைப்பை மேற்கொண்டு தோட்டங்களில் உள்ள கத்தரி, மிளகாய்,புடோல், பயற்றை, பூசணி, மரவள்ளி போன்ற மரக்கறிப் பயிர்களுக்கு வாய்க்கால்கள் வழி நீர் பாய்ச்சுவதைப் பார்த்திருக்கின்றோம். பலர் நவீன முறைகளையும் கையாள்கின்றனர்.சாவகச்சேரி கத்தரிக்காய்க்கு தனி மதிப்புண்டு.சாவகச்சேரி கத்தரிக்காய் வலிகாமம் பகுதியில் விளையும் கத்தரிக்காய் போன்று ஊதா கலந்தன்றி வெள்ளையாக குண்டாக சிறிதாக இருக்கும். பாடசாலையில் வெள்ளையாக குண்டா கட்டையாக இருப்பவர்களை வரணிக் கத்தரிக்காய் என்று பட்டம் சொல்வார்கள். காரணம் வரணியிலும் கத்தரி பயிரிடுதல் அதிகம். சாவகச்சேரி நகரின் சுற்றயலிலும் கத்தரிப் பயிர்ச்செய்கை நடந்தது. இப்போ அவர்கள் எல்லாம் இடம்பெயர்ந்து வெளிநாடுகள் போய்விட்டார்கள்.

மழைக்காலத்தில் வயல்களுக்குப் போனால் பெரிய அகன்ற வரம்புகளும் அவை நிரம்ப மழை நீரும் தேங்கி இருக்கும். மீன் குஞ்சுகளும் வாற்பேத்தைகளும் நீந்தி மகிழும் காட்சியை வரப்போர புற்தரையில் நின்று மணிக்கணக்கில் ரசிக்கலாம். கிளிகளும் புறாக்களும் குருவிகளும் "விசிற்" அடிப்பதுவும் கும்மாளம் அடிப்பதும் அழகோ அழகு.

நெற்பயிற்ச் செய்கையானது உழவியந்திரங்கள் அல்லது மாடு பூட்டிய கலப்பைகள் கொண்டு நிலத்தை உழவு செய்வதில் இருந்து ஆரம்பமாகும். மண்ணைப் பண்படுத்திய பின் விதைப்பு நடைபெறும். விதைப்பின் சிறிது காலம் காத்திருப்பர். மழை பெய்ததும் மழை நீர் தேங்கி நிற்க சகதிகளுக்குள் இறங்கி நாற்றுநடுதலில் ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றி தங்களை உழைப்பை நல்குவர்.

நெற்பயிர்களில் நெற்கதிர்கள் தோன்றிய பின் வயல்களின் நடுவே சிறிய சிறிய குடில்கள் அமைத்துக் காவலிருப்பர். குடிசைகளுக்கு அருகில் பூவரசம் தடிகளால் ஆக்கப்பட்ட சிறிய கண்காணிப்பு நிலைகள் இருக்கும்.பொதுவாக இரு தட்டுக்கள் கொண்டதாக அமைந்திருக்கும் இந்த நிலைகளில் சாக்கு அல்லது கோணிப்பைகள் கொண்டு தளமிட்டிருப்பர். சுமார் எட்டுத் தொடக்கம் 10 அடிவரை உயரமான இந்தக் கண்காணிப்புக் கோபுரங்களில் ஏறி இருந்து வயலை நோட்டமிடுவர். வயலின் நடுவே ஆங்காங்கே பானை வைக்கோல் பூவரசம் தடிகள் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகள் ( வெருளிகள் என்றும் சொல்வார்கள்) நெற்பயிர்களைத் தேடி வரும் பறவைகளை விலங்குகளை விரட்ட என்று செய்து நாட்டி இருப்பர். மேற்குலக நாடுகளிலும் கோதுமை வயல்களில் இதே போன்ற காட்சியைக் கண்ட போது தேசங்கள் மாறினும் மக்களிடையே சில பாரம்பரிய நடைமுறைகளில் இருந்த, இருக்கின்ற ஒற்றுமைகளை மாற்றமின்றி காணவும் உணரவும் முடிந்தது.

இரவுவேளைகளில் வயல்களில் இருக்கும் கண்காணிப்பு நிலைகளில் லாந்தர் என்ற மண்ணெய்யில் எரியும் விளக்குகளை வைத்திருப்பர். சிலர் சிறிய மின்பிறப்பாக்கிகள் (ஜெனரேற்றர்) மூலம் மின் விளக்குகளால் வெளிச்சமூட்டியும் இருப்பர். லாந்தார் அளிக்கும் மங்கிய ஒளியும் அகன்ற இருளும் மனதுக்குள் பயத்துடன் கூடிய ஒரு குசியை உண்டு பண்ணும். நள்ளிரவில் பனி இரவில் போர்த்து மூடியபடி, விழித்து எழுந்து கண்பாணிப்பரணில் ஏறி நின்று துணிச்சல் பொங்க கத்தி மகிழ்ந்த இரவுகள் வாழ்வின் வசந்த இரவுகள்.

சூடடித்தல், பிரமிட்டு வடிவில் வைக்கற்போர் வைத்தல் என்று பல நிகழ்வுகள் வயலோடு நெற்பயிற்செய்கைக்காலம் முடியும் வரை தொடரும். அது ஒரு கனாக் காலமாக இன்று நினைவில் விரிகிறது. காரணம் கூட மகிழ்ந்திருந்த பல உறவுகள் இன்று ஊரோடு இல்லை. நெற்பயிற்செய்கை காலம் ஒரு மன மகிழ்வுக்காலமாகவே முன்னரெல்லாம் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும். வயற் சொந்தக்காரர்கள் ஆளுக்கு எத்தனை மூட்டை நெல் விளச்சல் என்று போட்டியும் போட்டுக் கொள்வார்கள்.

சிறியவர்கள் ஒன்று சேர்ந்து புதுநெல்லெடுத்து ஏ 9 சாலையில் சாவகச்சேரி நகருக்கு வடக்கே உள்ள 190 ம் மைல்கல் உள்ள இடத்தில் இருக்கும் அரிசியாலையில் குற்றுவித்து அல்லது அக்காமாரைப் பிடிச்சு உரலில் குற்றுவித்து புதுதாய் காய்க்கும் தென்னை மா பலா என்று மரங்களுக்கு பொங்கல் செய்து விழா எடுப்போம். கூடவே தென்னை மட்டையில் மட்டை செய்து கிரிக்கெட் விளையாடுவோம். இப்படி இன்பமாய் கழிந்த பொழுதுகள் பல.

சாவகச்சேரி நகர மக்கள் பல்வேறு நிர்வாகத் தொழில் திறமைகளையும் கொண்டவர்கள். பலர் அரச பணியாளர்களாக ஆசிரியர்களாக வியாபாரம் மற்றும் சுயதொழில் செய்வோராக என்று பல மட்டங்களில் தங்கள் நிர்வாகத் திறமைகளையும் காட்டி வந்துள்ளனர். பலர் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

மேற்குலக நகரங்களில் பூங்காக்கள் அமைத்து வைத்து பொழுது போக்குவர். சாவகச்சேரியை எடுத்துக் கொண்டால் அதுவே ஒரு பூங்கா போன்றது. அத்துணை அம்சங்களும் தன்னகத்தே கொண்ட ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடம் அது.

மக்கள் நிறைந்த அன்பானவர்கள். பழக இனிமையானவர்கள். என்ன கொஞ்சம் அதிகம் "சவுண்டு" விடுவார்கள். பக்கத்தில் நிற்கும் மகளை கூப்பிடவும் "பிள்ளோய்" என்று 100 மீற்றர்கள் கேட்கக் கத்துவார்கள்.

கொஞ்சம் கஞ்சத்தனம் இருக்கிறது. வேலிச் சண்டை பொதுவானது. பூவரசம் குழைக்கு, வேலி தாண்டிய பலாக் கொப்புக்கு, மாங்கொப்புக்கு என்று சண்டை பிடிப்பார்கள். குடும்பச் சண்டைகளுக்கும் குறைச்சல் இல்லை. இருந்தாலும் ஆண் பெண் வேறுபாடு அதிகம் இல்லை. எல்லோரும் சகஜமாகப் பழகுவார்கள். பெரியவர்களை மதிப்பார்கள். அயலூர்காரர்களை வரவேற்பார்கள் உபசரிப்பார்கள் மதிப்பார்கள்.

கிட்டத்தட்ட பிறந்ததில் இருந்து 10 வருடங்கள் அந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறோம். பின்னரும் அடிக்கடி போய் வந்திருக்கின்றோம். அந்த வகையில் அந்த மண்ணின் வாசனை நம்மோடு ஒட்டித்தான் உள்ளது. மண்வாசனையாச்சே போகுமா என்ன.

எம் தாய் எம்மை மட்டும் சுமந்தாள். நிலம் எல்லோரையும் சுமக்கிறாள். அந்த வகையில் எம்மைச் சுமந்த எம் மண்ணைப் பற்றியும் எங்களை அரவணைத்த மக்களைப் பற்றியதுமான இச்சிறுகுறிப்பை தாயகப்பறவைகளுக்கு பரிசளிக்கின்றோம்.

ஆக்கம் - குருவிகள்

_________________

வாழ்க்கை அநுதாபங்களிலோ கவர்ச்சியிலோ அமைந்துவிடக் கூடாது மனங்களின் புரிதலில் அமைய வேண்டும்.

நட்புடன்

இரசிகை

http://thayakaparavaikal.com/forum/viewtopic.php?t=369

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு நன்றாக இருந்தது நுணவிலான்.வாசித்தவுடன் மீண்டும் ஒரு முறை அங்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது.வடமாகாணத்திலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் சிறி என்ன இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா.மக்களின் இடம் பெயர்வுக்கு பின் தென்மராட்சியில் தான் அதிக மக்கள் வாழ்கிறார்கள்.

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்.

நான் பிறந்த ஊர் சாவகச்சேரி. ஆனால் சிறு வயதிலேயே இடம்பெயர்ந்து விட்டதால் எதுவும் நினைவில் இல்லை. இக் கட்டுரை கற்பனையில் சாவகச்சேரியைக் காண வைக்கிறது.

அண்மையில் ஏ9 வீதியூடாகப் பயணித்தபோது போரினால் சிதைந்த கட்டடங்களையும் மரங்களையும் பார்த்தபோது வேதனையாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்.

நான் பிறந்த ஊர் சாவகச்சேரி. ஆனால் சிறு வயதிலேயே இடம்பெயர்ந்து விட்டதால் எதுவும் நினைவில் இல்லை. இக் கட்டுரை கற்பனையில் சாவகச்சேரியைக் காண வைக்கிறது.

அண்மையில் ஏ9 வீதியூடாகப் பயணித்தபோது போரினால் சிதைந்த கட்டடங்களையும் மரங்களையும் பார்த்தபோது வேதனையாக இருந்தது.

யாழ்ப்பாணத்தை புலிகள் பிடிக்கபோகிறார்கள் என சந்திரிக்கா அரசு அவசர அவசரமாக பாகிஸ்தானிடம் வாங்கிய மல்ரி பரலுக்கு இரையான கோர காட்சியை தான் இணையவன் நீங்கள் பார்த்தது.

யாழ் நகரில் கல்வி கற்றதால், சொற்ப காலம் யாழ் நகரில் தங்கியிருந்து, வார இறுதிகளில் மட்டுமே ஊர் சென்ற அனுபவமும் உள்ளது. பத்து பதினைந்து மைல்கள் மட்டுமே யாழ்நகரிற்கும் எமக்குமிடையேயான தூர வித்தியாசமாக இருந்தபோதும் கூட, வாரத்தில் ஐந்து நாட்கள் ஊரையும், மக்களையும், மரங்களையும், அனைத்தையும் பிரிந்திருப்பது நெஞ்சை நெருக்கிப் பிழிந்த ஒன்றாக இருந்தது. வெள்ளி மாலையில் பேருந்து தென்மராட்சிக்குள் புகுந்ததும் ஏதோ சுவாசம் கூட இலகுவானது போன்றும், மிக உயர்ந்த அல்ரிரியூட்டிலிருந்து இறங்கி வந்தது போன்றும் தோன்றும். .... ..

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி மாலையில் பேருந்து தென்மராட்சிக்குள் புகுந்ததும் ஏதோ சுவாசம் கூட இலகுவானது போன்றும், மிக உயர்ந்த அல்ரிரியூட்டிலிருந்து இறங்கி வந்தது போன்றும் தோன்றும். .... ..

சொல்லுவிங்கள் சொல்லுவிங்கள். ஏனெண்டால் யாழ்நகரில கல்லைத்தானே சுவாசித்தனிங்கள். :lol: சும்மா லொள்ளுக்குதான். :lol::lol:

Edited by Sabesh

சுபாஸ் நீங்கள் நினைப்பது போல இல்லை தென்மராட்சி பசுமையான ஒரு இடம் தென்னை பலாப்பல மரங்கள்

நெருக்கடி இல்லாத வசிப்பிடங்கள் தாமரை குளங்கள் அதிகம்

எங்கள் ஊர்(கரவெட்டி) 5 6மாசம் தான் பசுமையாக இருக்கு குறிப்பாக ஆனி ஆவனியில் இருந்து தை வரை ஆனால் தென்மராட்சி 365 நாட்களுமே பாசுமை தான்.......

1995 இடம்பெயர்வின் போது தென்மராட்சியில் மந்துவிலில் ஒரு ஆறுமாதம் இருந்தேன். மறக்க முடியாத அனுபவம். நல்ல பசுமை, நல்ல ஊற்று தண்ணீர். ஆனால் பாம்பு பயம். :lol:

நான் 87 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து வரனியில் இருந்தோம் நாவல்பழம் இளனி என்று களவாக தொழில் நல்லா போச்சுது ஆனா குரங்கு ததன் கூட்டம் கூட்டமாக வரும் என்னை கண்டா சில நேரம் நிண்டு பார்த்து விட்டு ஏதோ தங்களுக்குள்ளே பேசி போட்டு போவார்கள் அது தான் இன்று வரை புரியல மற்றும் படி தென்மராட்சி வாழ்க்கை என்பது பிடித்துப்போய்விட்டது :lol::lol:

சபேஸ்,

யாழ்நகரைச் சிறுமைப் படுத்துவதற்காக அவ்வாறு எழுதவில்லை, கருத்துத்தெளிவின்மை ஏற்படுத்திய

எனது அவசர பின்னூட்டத்திற்கு மனம் வருந்துகின்றேன். நான் கூறிய சுவாசம் இலகுபடுதல் என்பதற்கு,

சூழல் மட்டுமன்றி ஊரைப்பிரிந்திருந்த ஹோம்சிக்னஸ் முதலிய பல உளம் சார் காரணங்களும் உள்ளன.

மேலும் வடிவேலு கூறியது போன்று பரந்த காணிக்குள் நிறைந்த மரங்கள் மத்தியில் அமைந்திருந்த வீடுகள், வயல்கள், குளங்கள், தென்னங் காணிகள், மாடுகன்று, பால், ஆடு கோளி இதர பறவைகள், ஈஞ்சு துவரை அன்னமுன்னா போன்ற காட்டுப் பழங்கள், எண்ணற்ற கொய்யா வகைகள், ஈச்சங் குருத்து, வேலியில் படரும் முசுட்டை, தூதுவழைப் பழத்திற்கும் கறிவேப்பிலைப் பழத்திற்கும் நடக்கும் கவர்ச்சி யுத்தம், வேம்பம் பூ வடகம் வேம்பின் பிசின், பூத்துக் கிறங்கவைக்கும் சீமைக் கிளுவை, முள்முருக்கம் பூவின் தனித்துவமான அழகு, பூவரசின் பூ மற்றும் பம்பர மொட்டுக்கள், குண்டுமணி, குருவிச்சை, தொட்டாச்சிணுங்கி, தாமரை அல்லி துரோசீரா இதர பல குளத்து விந்தைகள், எருவுறுட்டும் வண்டு, தம்பளிப் பூச்சி, கார்த்திகைப் பூ, காளான் வகைகள், துரவுகள் தவளைகள் பேத்தைகள் மீன் குஞ்சுகள், கோணப் புளியங்காய், சித்துப் புளியங்காய், மரமுந்திரிகை, இருவகை நெல்லி, எண்ணற்ற வித்தியாசமான நாவல் பழ வகைகள், கத்தாப்பூக் காயிலும் இருவகை அதன் பருப்பு தனிச் சுவை, பழத்திற்கு வெளியே விதையிருக்கும் மரமுந்திரிகை அதிலும் இருவகை, விலும்பிக் காய், கின்னியாக் காய் தோட்டாவாகும் மூங்கில்

துவக்கும் கிளுவை இலைச் சக்கையும், கருப்பணி, இளனி, கடும்புப் பால், கோயில் மணி, திருவிழா என்று இவ்வாறு ஒரு கட்டற்றுப் பரந்த பசுமை மிக்க சூழலும் ஒரு காரணம் தான். நகர்ப்புறங்களில் இத்தகைய சூழல் அமைவது கடினம்.

ஆனால் அதற்காக யாழ்நகர் சார் இனிய நினைவுகள் எனக்கு இல்லை என்று கூறவில்லை. அந்நினைவுகள்

பற்றி ஒரு புத்தகமே எழுதலாம், ஆனால் அவை பள்ளி சார்ந்தும் நண்பர்கள் சார்ந்தும் உணவுக்கடைகள்

சார்ந்தும் என வேறு கோணத்தில் இருக்கும்.

Edited by Innumoruvan

தொடர்ந்து சாவகச்சேரியின் முக்கிய அம்சங்கள் குறித்து நோக்குவோம்,

1. அது சாவகச்சேரி இந்து மகளிர் மகா வித்தியாலயம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றைத் தவிர பல சிறிய கல்விக் கூடங்களும் உள்ளன.

2. சாவகச்சேரி பொது மருத்துவமனை இருக்குமிடத்தை போய் சேரலாம். நடுத்தர அளவிலான மருத்துவமனை அது. 24 மணி நேரமும் சேவை வழங்கி வருவதோடு நகரில் உள்ள மக்களின் சுகாதார வைத்திய வசதிகளை மேம்படுத்திய நிலையில் வைத்திருக்கவும் பணியாற்றி வருகிறது. போர்ச் சூழலால் பல இடர்களைக் கண்டும் தளராத உறுதியோடு அதன் பணியாளர்களும் வைத்தியர்களும் தாதியரும் சேவையாற்றி வருகின்றனர்.

3. நகரின் மத்தியில் சற்று ஒதுக்குப்புறமாக சிறப்பான பெரிய நூலகம் உண்டு. அறிவு தோன்ற முதலே அங்கு சென்று நூல்களைக் கிழித்து விளையாடியதில் எமக்கும் பங்குண்டு.சிறிது வளர்ந்த பின்னர் சிறுவர் நூல்கள் பலவற்றை கடன் வாங்கிப் படித்துள்ளோம். சிறுவர்கள் பெரியவர்கள் என்று அந்த ஊர் மக்களின் அறிவுப்பசிக்கு தீனியிட்ட நூலகங்களில் சாவகச்சேரி நூலகம் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளது. சமீபத்திய போரின் பின் இப்போ அதற்கு என்ன கதி நேர்ந்துள்ளதோ தெரியவில்லை. இதைத் தவிர ஊரெங்கும் வாசிகசாலைகள் இருக்கின்றன. நாளந்த செய்தித் தாள்களை அங்கு படிக்கலாம்.

4. சாவகச்சேரி கத்தரிக்காய்க்கு தனி மதிப்புண்டு.சாவகச்சேரி கத்தரிக்காய் வலிகாமம் பகுதியில் விளையும் கத்தரிக்காய் போன்று ஊதா கலந்தன்றி வெள்ளையாக குண்டாக சிறிதாக இருக்கும்.

ஆக்கம் - குருவிகள்

1. சாவகச்சேரியில் உள்ள மகளிர் பாடசாலை இந்து மகளிர் மகா வித்தியாலயம் எனும் பெயரை கொண்டதல்ல. முன்னர் சாவகச்சேரி மகளிர் மகா வித்தியாலயம் என இருந்து பின்னர் சாவகச்சேரி மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2. சாவகச்சேரி மருத்துவமனை பல்குழல் எறிகணை வீச்சில் தரை மட்டமாகி தற்போது ஒரே ஒரு கட்டடம் மட்டுமே எஞ்சியுள்ளது. மருத்துவர்களும் 2-3 பேர் மட்டுமே. போரால் அதிகம் பாதிக்கப்படாது இருந்து இறுதியில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட இடம் தென்மராட்சி. :lol:

3. இப்போது நூலகம் அந்த இடத்தில் இல்லை. நூலகம் இருந்த கட்டட தொகுதி ஆக்கிரமிப்பு பொலிஸ் நிலையமாக இயங்கியது. பின்னர் போரின் போதான பல்குழல் எறிகணை வீச்சில் சேதமாகி விட்டது. சாவகச்சேரி நூலகம் நாடோடியாக அலைந்து திரிந்து இப்போ எங்கே உள்ளது என்று தெரியாது. அனேக புத்தகங்கள் அழிந்து விட்டன. :lol:

4. தென்மராட்சியில் பல ஊர்கள் கத்தரிகாய்க்கு பெயர் போனாலும் பொதுவாக மட்டுவில் கத்தரிக்காய் தான் பிரபலம். வெள்ளை நிறத்தில் பெரிய முட்டி போல் இருக்கும் கத்தரிகாய்கள். அங்கு இருந்த கத்தரி வகை வேறு இடங்களில் இல்லை. அவ்வூர் விவசாயிகள் அந்த கத்தரி இன விதைகளை வேறு ஊரவருக்கு கொடுப்பதும் இல்லை. ஆனால் 1999-2002 வரையான போரின் இடப்பெயர்வில் மட்டுவில் மக்களும் இடம்பெயர்ந்து பல இடங்களில் வாழந்ததால் கத்தரி பயிர்செய்கை 2 வருடமாக நடைபெறவில்லை. இதனால் அந்த வகை கத்தரிகளே தற்போது யாழ் குடா நாட்டில் இல்லை எனும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போ மட்டுவிலில் ஏனைய ஊர்களில் செய்கை பண்ண படுவது போல் திருநெல்வேலி ஊதா எனும் வகை தான் பயிர் செய்யப்படுகிறது. :lol:

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சியில நிறைய தென்னைகள் நிற்கும். வெளியூரில் இருந்து கண்டி வீதியால் ஊருக்குப் போகேக்க.. வேகமா ஓடுற பஸ்ஸில இருந்து வெளிய பார்க்க தென்னைகள் வேகமாக ஓடுறது போல தெரியும். அது எப்படி என்று வியந்து அதை மனசுக்க ஆராய்ச்சி செய்து கொண்டு போன மிகச் சிறு வயது ஞாபங்கள் இப்பவும் உண்டு.

அப்புறம் சார்பு வேகம் பற்றி பெளதீகத்தில் படிச்சதுக்கு அப்புறம் தான் எனக்கு அதில கொஞ்சம் தெளிவு வந்திச்சு..! :wub:

எனக்கும் தென்மராட்சியில் இயற்கை அழகு பிடிக்கும்..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்மராட்சி என்றதும் எனக்கு நினைவில் வருவது மீசாலை. 1995ம் ஆண்டு இடப்பெயர்வின் போது தான் இங்கே முதன் முதலில் போனேன்.

அந்த வயல்களும் தென்னந் தோப்புகளும் பொதுக்கிணறு கூட்டங்களும் இன்னும் ஞாபகம் இருக்கு. குரங்குகள் கும்மாளம் இங்கே அதிகம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

பசுமையான இடமாக இருந்தாலும் அங்கு பல இடங்களில் உள்ள உவர் நீர் தான் பிரச்சனை. அதற்கு மாற்று வழி ஏதும் தமிழீழம் கிடைக்கும்போது செய்தாக வேண்டும். அதை விட தமிழீழத்தின் கரையோரங்களும், நிலப்பகுதிகளும் அதிக நில உயர்வில்லாத நிலைக்கு ஏதாவது செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் கடல் நீர்மட்ட உயர்வு நம் இடங்கள் பலவற்றைக் காணாமல் செய்து விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.