Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் என் ஈழமும் 8: கதிரவா முட்டு முட்டு

Featured Replies

Naanum%20En%20eelamum%208.jpg

பங்குனி மாதம் என்றாலே எனக்கு கொஞ்சம் பயம் தான். பயம் மட்டுமல்ல படபடப்பு, வெறுப்பு, சோகம், தனிமை என அனைத்தும் ஒன்றாக வந்து கொல்லும். "பள்ளிக்கூடத்துக்கு போகாமல் ஊர் சுத்தி கொண்டு திரியுங்கோ" என அப்பாச்சி பேசும் போது; எனக்கும் புரியவில்லை. என்னை அழைத்து சென்ற அப்பாவுக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்த மாதம் தரவிருந்த பரிசு.

பொதுவாக ஆண்டின் இறுதி மாதங்களில் ஊருக்கு செல்வது தான் வழக்கம். அப்பொழுது தானே எனக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்கும். அந்த வருடம் ஆண்டின் இறுதியில் அப்பாவிற்கு வேலையில் விடுமுறை கிடைக்காததால் பங்குனி மாதத்தில் சென்றோம்.

ஊரில் கொஞ்சம் போரின் கோரம் அதிகமாக இருந்ததால் அண்ணன்களும் தங்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் பங்கர் அருகே நாட்களை கழித்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். இதில எனக்கு சந்தோசம் தான். காரணம் பங்கருக்கு மேலயே என்னை உட்கார வைத்துவிடுவார்கள். சாப்பாடு, தூக்கம், விளையாட்டு எதுவாகினும் அங்கு தான். அத்தோடு வீட்டில் அனைவரும் பங்கருக்கு அருகாமையில் தான் இருப்பாங்க. இதை விட ஒரு நல்ல பிக்னிக் கிடைக்குமா? எனக்கு அந்த வயதில் இப்படி தான் தோன்றும். ஆனால் என்னை அழைத்து சென்ற அப்பா தான் பாவம். பெரியவர்கள் அனைவரிடமும் பயங்கரமா பேச்சு வாங்குவார்.

அந்த வருடம் போன போது என் மகிழ்ச்சி இரண்டு மடங்காக இருந்தது. காரணம் ஒரு சிறு குழந்தை. வேறு ஊரில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்த சுபாக்கா குடும்பம் தான் என்னை மிகவும் சந்தோசப்படுத்தியது.

ஈழத்தில் போர் ஆரம்பித்ததில் இருந்து ஒருவர் வீட்டிற்கு இடம்பெயர்ந்து போவதற்கு அடுத்தவர் உறவாகவோ, நண்பராகவோ இருக்க வேண்டிய அவாசியம் தான் இல்லையே. அனைவருக்கும் தான் வாழ்வு நிரந்தரம் இல்லை என்பதால் ஒருவரை ஒருவர் அரவணைக்க ஈழமக்கள் தவறவில்லை. சுபாக்கா குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் உறவு இருக்கவில்லை, நட்பும் இருக்கவில்லை. ஆனால் அது ஓரிரவு சுபாக்கா குடும்பம் என் பெரியம்மா வீட்டு கதவை தட்டும் வரை தான்.

நான் போனதுமே அவசரமாக கட்டப்பட்டிருந்த ஏணைக்குள் தெரிந்த இரண்டு கால்கள் தான் என்னை கவர்ந்தன. அந்த வீட்டில் எப்பொழுதுமே நான் தான் குழந்தை. அதனால் நிஜமாவே ஒரு குழந்தையின் கால்கள் ஏணையில் தெரிய, என்னை தூக்கிய பெரியப்பாவிடம் இருந்து இறங்கி ஓடிய நினைவு இப்பவும் இருக்கு.

ஏணைக்குள் ஒரு அழகான பபா. குண்டு பபா, பெரிய கண், நீளமா தலைமுடி. எங்க வீட்டில் என்னுடைய நேர்சரி அறைக்குள் இருக்கும் படத்தில் சிரிக்கும் குழந்தை போலவே. என்னை பார்த்து சிரித்த கதிரவன் அன்று முதல் எனக்கு முக்கியமான நபராகி போனான்.

நாங்க போன நாளில் இருந்து குண்டுவீச்சுகள் அதிகமாகி போகவே என்னையும், கதிரவனையும் நிரந்தரமாக பங்கர் மேலே போடப்பட்ட கட்டில் குடிவைத்து விட்டினம். சாப்பிட்டு, தூங்கி, விளையாடி எது என்றாலும் கதிரவனோடு தான். என் நெற்றியை அவன் நெற்றிக்கு நேரே கொண்டு சென்று "கதிரவா முட்டு முட்டு" என்றால் உடனே தன் நெற்றியால் என் நெற்றியை தொடுவான். எனக்கு மிகவும் பிடித்து போன கதிரவனை ஒஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லலாமா என சுபாக்காவிடம் பல தடவை கேட்ட நினைவு கூட இப்பவும் இருக்கு.

அன்றும் அப்படித்தான், விமான குண்டு வீச்சுகள் அதிகமாக வீட்டில் இருக்கும் பங்கர் நல்ல பாதுகாப்பு இல்லை என்பதால், அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்வதென பெரியப்பா சொல்லிட்டார். உடனேயே என் அண்ணன் ஒருவருடன் மிதிவண்டியில் என்னை கோவிலுக்கு அனுப்பினார்கள். நானும் அண்ணாவும் போகும் நேரம் பார்த்து ஹெலி வந்திட்டுது. வந்தா சும்மா போவானா? எங்கள பார்த்து சுடுற போலவே சுட ஆரம்பிச்சிட்டான். அண்ணா ஒரு மரத்தை கண்டதும், என்னையும் தூக்கி கொண்டு மிதிவண்டியை விட்டு பாய்ந்திட்டார். மிதிவண்டி பாட்டுக்கு போய்ட்டு இருக்கு, ஆனால் நாங்க மரத்துக்கு கீழ நிலத்தோட படுத்திருக்கோம். கீழ பாய்ததில் கை காலெல்லாம் ரத்தம். ஹெலி கொஞ்சம் தூரம் போனதும் அண்ணா என்னை தூக்கிட்டே கோவில் பங்கருக்குள்ள ஓடிட்டார். நாங்க போன போதே பங்கருக்குள்ள நிறைய ஆட்கள். என்னை பங்கரில் அடிப்பகுதியில் இருந்த மேடையில் இருத்தினார்கள். எனக்கும் இந்த வியர்வை, வெப்பம் எல்லாம் பிடிக்காததால், வெறுப்புடன் மேடையில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்த அண்ணனை பார்த்து முறைச்சிட்டு இருந்தேன். அப்போ கதிரவனும், சுபாக்காவும் பங்கருக்குள்ள வந்திட்டினம். எனக்கு அவ்வளவு எரிச்சலிலும் கதிரவனை கண்டதும் சந்தோசம் தான்.

கைக்குழந்தைகாரி என சுபாக்காவுக்கும் இருப்பதற்கு ஒரு இடம் குடுத்தார்கள். அதற்கு மேலே எதையுமே யோசிக்கவோ, பண்ணவோ நினைக்க கூட முடியாம ஒரே குண்டுமழை. நாங்கள் இருந்த கோவில் மேற்கு சுவரே இல்லாமல் போய்விட்டது. தொடர்ந்து இரண்டுமணி நேரத்தின் பின்னர் கொஞ்சம் குண்டுவீச்சு ஓய்ந்தது. உடனே நாங்க பங்கரை விட்டு வெளியே வந்து கோவில் மடத்தில் இருக்கலாம் என அண்ணன் சொல்லும் போது, சுபாக்கா அழுது கொண்டு ஓடு வந்தா. கதிரவன் விழப்போறான் என நான் அப்போ நினைத்தது கூட இன்னும் நினைவில். ஓடிவந்த சுபாக்கா, கதிரவனின் அப்பாக்கு விமான குண்டுவீச்சில் காயம் என சொல்லி என் கையில் கதிரவனை தந்திட்டு ஓடிட்டா.

அண்ணாவின் அருகில் நான், என் மடியில் கதிரவன். "கதிரவா முட்டு முட்டு" என விளையாடும் போது இரு தடவை நெற்றியை ஒற்றியவன் அதற்கு மேல் அசையவே இல்லை. அந்த வயதில் எனக்கு புரியலை. நான் மறுபடியும் "கதிரவா அக்காக்கு முட்டு முட்டு" என கேட்க கண் திறந்து நெற்றியை ஒற்றிவிட்டு கண்களை மூடியவன் தான். பக்கத்தில் இருந்த அண்ணா கத்தி கொண்டு கதிரவனை தூக்கி கொண்டு ஓட தொடங்கிட்டார். எனக்கு பயத்தில் அழுகையை தவிர எதுவும் வரவில்லை. அண்ணா ஓட, அண்ணன் கூட சில ஆண்கள் ஓட, அண்ணன் பின்னால் நான் ஓட, "பிள்ளையை பிடி"என என் பின்னால் சிலர் ஓட, அந்த நேரம் பார்த்து விமானம் வந்து குண்டு போட, என்னை மறுபடி பங்கருக்குள் தூக்கி கொண்டு போனது தான் நினைவு.

மறுபடி நான் கண் விழித்த போது அப்பாச்சி வீட்டில், என்னை சுற்றி ஒரு கூட்டம். எனக்கு கதிரவன தான் பார்க்கணும் போல இருந்தது. வீட்டில் அனைவரிடமும் கேட்டேன், அவங்க ஊருக்கு போய்ட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. எனக்கு தான் பிடிவாதம் அதிகம் ஆயிற்றே, கதிரவனை பார்த்தே ஆகணும்ன, இவங்க முடியாது என சொல்ல இப்படியே இரண்டு நாட்கள் கடந்திட்டுது.

மூன்றாவது நாள் அதிகாலையில் யாரோ அழுது, கதறும் சத்தம் கேட்டு நித்திரையால எழும்பினேன். முற்றத்தில சுபாக்கா தான் மண்ணில விழுந்து அழுது கொண்டிருந்தா. பெரியம்மாவும், அப்பாச்சியும், சித்தியும் என்னமோ சொல்லிட்டு இருக்காங்க. நித்திரை தூக்கத்தில வந்த என்னை கண்டதும் சுபாக்கா "அய்யோஓஓஓ என்னை பெத்த அம்மா, என்ட பிள்ளை எப்படி போனான்" என என்னை கட்டி கொண்டு கத்த, இதை பார்த்து பயதில நான் அழ, "பிள்ளைக்கு தெரியாது சுபா" என பெரியம்மா அதட்டி சுபாக்காவிடம் இருந்து என்னை பறித்து இழுத்துகொண்டு போனது நினைவில இருக்கு. அதைவிட அப்போ சுபாக்கா சொன்ன வார்த்தைகள் இன்னும் என் நெஞ்செல்லாம்:

"அய்யோ அய்யோ சொல்லு ராசாத்தி, என்ட தங்கம் என்ன சொன்னான்? அய்யோ என்னை விடுங்களேன்...பிள்ளைட மடில தானே என்னை பெத்தவன் கண்ணை மூடி இருக்கான்..."

"கண்ணை மூடி இருக்கான்" என சொன்ன போது தான் என் வயதிற்கு கதிரவன் இறந்து போய்விட்டிருந்தது புரிய ஆரம்பித்தது. பெரியம்மாவை தள்ளிவிட்டு சுபாக்காட்ட ஓடி போய் "முட்டு முட்டு" என அவவோட நெற்றியில் என் நெற்றியை ஒற்றி போட்டு அவவை கட்டிகொண்டு அழ ஆரம்பிச்சிட்டன். அன்றே என்னை ஊரில் இருந்து அழைத்து வந்துவிட்டார்கள். பங்கருக்குள் விஷ பூச்சி கடித்து கதிரவன் இறந்து போனதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் கையில் தானே கடைசியா துடிச்சுது அந்த இதயம்.அதே போல குண்டுவீச்சில் இறந்து போன கதிரவனின் அப்பாவையும், அநாதையாகி போன சுபாக்கவையும் மறக்க முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமா அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் கதிரவன் நினைவை குறைத்திருந்தாலும் எங்கு ஒரு குழந்தையை பார்த்தாலும் என் கண்ணில் அவன் தான் தெரிவான். அதிலும் இந்த பங்குனி மாதம் வந்தால் சொல்லவே தேவையில்லை. வலியிலும் எனக்கு முட்டு முட்டு குடுத்தானே. கண்ணை வலியில் மூடி இருப்பானோ? அப்படி இருந்தவனை எழுப்பி முட்டு முட்டு கேட்டேனே. அப்போ கூட குடுத்தானே. அப்ப கூட அவன் சிரித்ததா தானே எனக்கு நினைவிருக்கு.என் கண்ணை பார்த்தானே, அப்போ என்னட்ட ஏதும் சொல்ல நினைச்சிருப்பானோ? வலிக்கவேயில்லையா அவனுக்கு? அய்யோ இப்போவும் எனக்கு வலிக்கிறதே..."கதிரவா முட்டு முட்டு"

Edited by தூயா

உங்கள் படைப்புக்களை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் இன்றுதான் கிடைத்தது. மிகவும் அருமையாக உள்ளது. உங்களை ஈழத்திற்கு அழைத்துச் சென்று உணர்வூட்டிய உங்கள் தந்தை பாராட்டுக்குரியவர். பிள்ளைகள் வளர்ப்பு பெற்றோரின் கையில்தான் உள்ளது என்பதை உங்கள் தந்தை நிரூபித்திருக்கிறார். எத்தனையோ பிரிவுகள், வலிகளைச் சந்தித்தபோதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எமது போராளிகள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. போராளிகளுடனான உங்கள் சமீபத்திய சந்திப்புகள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உள்ளவர்களை அப்படியே குண்டுக் கட்டாக தூக்கி ஊருக்கு கொண்டு செல்வதில் தூயாவுக்கு நிகர் யாருமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவிற்க்கு நிகர் தூயாவெதான்,தொடரட்டும் உங்கள் பதிவுகள்

தூயிஸ் கதையை வாசித்து முடிய என்னை அறியாமலே நான் அழுதிட்டனப்பா..(சோ சாட் ஸ்டோரி :lol: )..பட் நிஜமா நடந்தும் பக்கத்தில நீங்க இருந்து அதை அநுபவித்ததையும் எண்ணும் போது நினைக்கவே வேதனையாக இருக்கிறது.. :wub: (ஈழத்தில் இப்படி எத்தனை துயரங்கள் நினைக்கவே மனம் கணக்கிறது :lol: )..மொத்தத்தில் உங்கள் சுபா அக்கா ரொம்பவே பாவம் என்று தான் சொல்ல வேண்டும்..(சுபா அக்காவை போல் எத்தனை பேர்)... :wub:

கதிரவா முட்டு முட்டு என்று எங்கள் இதயங்களை எல்லாம் கதிரவனை முட்டி சென்று விட்டீங்க தூயிஸ் :( ..ஆனால் கதிரவனோ கதிர்களை பாய்ச்ச தவறிவிட்டான்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உங்கள் படைப்புக்களை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் இன்றுதான் கிடைத்தது. மிகவும் அருமையாக உள்ளது. உங்களை ஈழத்திற்கு அழைத்துச் சென்று உணர்வூட்டிய உங்கள் தந்தை பாராட்டுக்குரியவர். பிள்ளைகள் வளர்ப்பு பெற்றோரின் கையில்தான் உள்ளது என்பதை உங்கள் தந்தை நிரூபித்திருக்கிறார். எத்தனையோ பிரிவுகள், வலிகளைச் சந்தித்தபோதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எமது போராளிகள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. போராளிகளுடனான உங்கள் சமீபத்திய சந்திப்புகள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்.

தமிழச்சி,

உங்களோட கருத்து என்னை மிகவும் ஊக்கப்படுத்துமாறு உள்ளது..நன்றி

புலத்தில் உள்ளவர்களை அப்படியே குண்டுக் கட்டாக தூக்கி ஊருக்கு கொண்டு செல்வதில் தூயாவுக்கு நிகர் யாருமில்லை.

வழமை போல் ஈழப்பிரியேனின் கருத்து...எழுதி முடித்து பதிக்கும் போது எனக்கு சில பேர் நினைவுக்கு வருவார்கள். அதில் நீங்களும் ஒருவர்..:)

தூயாவிற்க்கு நிகர் தூயாவெதான்,தொடரட்டும் உங்கள் பதிவுகள்

:) நன்றி புத்ஸ்

தூயிஸ் கதையை வாசித்து முடிய என்னை அறியாமலே நான் அழுதிட்டனப்பா..(சோ சாட் ஸ்டோரி :( )..பட் நிஜமா நடந்தும் பக்கத்தில நீங்க இருந்து அதை அநுபவித்ததையும் எண்ணும் போது நினைக்கவே வேதனையாக இருக்கிறது.. :) (ஈழத்தில் இப்படி எத்தனை துயரங்கள் நினைக்கவே மனம் கணக்கிறது :( )..மொத்தத்தில் உங்கள் சுபா அக்கா ரொம்பவே பாவம் என்று தான் சொல்ல வேண்டும்..(சுபா அக்காவை போல் எத்தனை பேர்)... :D

கதிரவா முட்டு முட்டு என்று எங்கள் இதயங்களை எல்லாம் கதிரவனை முட்டி சென்று விட்டீங்க தூயிஸ் :D ..ஆனால் கதிரவனோ கதிர்களை பாய்ச்ச தவறிவிட்டான்.. :(

அப்ப நான் வரட்டா!!

ம்ம்ம் உண்மை தான்...நினைச்சாலே நெஞ்செல்லாம் வலிக்குது

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பதிப்பு!

தாயகத்தில் இன்னலுறும் எங்களது உடன்பிறப்புக்களின் நிஷ வாழ்க்கையை சினிமாவைப்போல் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள்.

சகோதரி தூயாவுக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயாவின் எட்டாவது பதிவை சற்று தாமதமாக தற்போதுதான் படித்தேன்.

நெஞ்சைப் பிழிய வைக்கும் எத்தனையாயிரம் கதைகள் நம் மண்ணல் புதைந்து போயிருக்கின்றன. அது போன்ற உண்மை நிகழ்வுகளை தூயா பதிவு செய்யும் போது, அந்தக் கதைகளோடு அவரது கதை சொல்லும் விதமும் நடையும் விழி நீரை வரவழைப்பதைத் தடுக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தூயா உங்கள் பதிவை வாசித்த போது தாயகத்திற்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது . நல்ல வசன நடை .

  • தொடங்கியவர்

சிறந்த பதிப்பு!

தாயகத்தில் இன்னலுறும் எங்களது உடன்பிறப்புக்களின் நிஷ வாழ்க்கையை சினிமாவைப்போல் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள்.

சகோதரி தூயாவுக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

:D ஊக்கப்படுத்தும் உங்கள் கருத்திற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்..:D

தூயாவின் எட்டாவது பதிவை சற்று தாமதமாக தற்போதுதான் படித்தேன்.

நெஞ்சைப் பிழிய வைக்கும் எத்தனையாயிரம் கதைகள் நம் மண்ணல் புதைந்து போயிருக்கின்றன. அது போன்ற உண்மை நிகழ்வுகளை தூயா பதிவு செய்யும் போது, அந்தக் கதைகளோடு அவரது கதை சொல்லும் விதமும் நடையும் விழி நீரை வரவழைப்பதைத் தடுக்க முடியவில்லை.

ஏழாவது பதிவின் பின்னர் இந்த பதிவை நானே கொஞ்சம் தாமதமாக தான் எழுதினேன்... மிக்க நன்றி இளங்கோ..தொடர்ந்து என் தொடரை படித்து கருத்து சொல்கின்றீர்கள்..:)

தூயா உங்கள் பதிவை வாசித்த போது தாயகத்திற்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது . நல்ல வசன நடை .

நன்றி சிறி..:)

சிறந்த பதிப்பு தூயா பபா

வாசிக்கும் எங்களுக்கே இந்தளவு சோகமா இருக்கு எண்டா நேர பாத்த உங்களுக்கு???

பாவம் அந்த சுபா அக்கா :D

துாயா கனத்த கதை ஒன்றை பகிர்ந்து கொண்டிர்கள். நன்றி.

நான் உங்கள் சமையல் பகுதியில் ஒரு தடவை பார்த்து சமைத்துபார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் நீங்கள் சமையல் அம்மா மட்டும் இல்லை என்று புரிந்துகொண்டேன்.

அதுசரி ஒரு சந்தேகம் தொட்டிலில் ஏட்டுச்சுவடி மாதிரி ஒன்று இருக்கிறது. அது ஏன் அங்கே கட்டப்பட்டிருக்கிறது?

மீண்டும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்றை எழுத மறந்துவிட்டேன்.

அமெரிக்காவில் மகள் பிறந்திருந்த நேரம் இதே மாதிரி ஏணை கட்டி விட்டிருந்தேன்.பிள்ளை பார்க்க வந்தவர்கள் பிள்ளையை விட்டுவிட்டு ஏணையைத் தான் முதல் போய்ப் பார்ப்பார்கள்.

அதற்கு முதலும் சரி பின்பும் சரி ஏணை கட்டி உறங்கிய அமெரிக்க பிள்ளையை இன்னமும் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தூயா உங்கள் பதிவுக்கு நன்றி. தாயக மக்கள் படும் இன்னல்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள்.உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மீண்டும் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகளுடன் வாழ்த்துக்களும் தூயா மம் :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

தூயா எங்கள் எல்லோருக்குள்ளும் எவ்வளவோ சோகங்களும் இழப்புகளும் இருக்கின்றன. இறுகிப்போன பல கதைகள் இப்போதுதான் நெட்டவிழ்கின்றன. இன்னும் உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு விடயமும் வெளிவரட்டும். எழுத்தின் ஓட்டமும் உயிர்ப்புள்ளதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தூயா எங்கள் மண்ணின் அவலத்தை மனக்கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள். உங்கள் ஆக்கத்தை இன்றுதான் முதன்முதலில் படித்தேன் பாராட்டுக்கள். தொடர்ந்தும் உங்கள்

உணர்வுகளின் வெளிப்பாட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

சிறந்த பதிப்பு தூயா பபா

வாசிக்கும் எங்களுக்கே இந்தளவு சோகமா இருக்கு எண்டா நேர பாத்த உங்களுக்கு???

பாவம் அந்த சுபா அக்கா :wub:

நித்தி,,,,மறக்க முடியாத ரணங்கள் இவை..

அதுசரி ஒரு சந்தேகம் தொட்டிலில் ஏட்டுச்சுவடி மாதிரி ஒன்று இருக்கிறது. அது ஏன் அங்கே கட்டப்பட்டிருக்கிறது?

மீண்டும் நன்றிகள்.

அது நான் எடுத்த படம்..இந்தியா சென்ற நேரம் ஓர் அருங்காட்சியகத்தில் கைதொலைபேசியால் எடுத்தேன்.

இன்னுமொன்றை எழுத மறந்துவிட்டேன்.

அமெரிக்காவில் மகள் பிறந்திருந்த நேரம் இதே மாதிரி ஏணை கட்டி விட்டிருந்தேன்.பிள்ளை பார்க்க வந்தவர்கள் பிள்ளையை விட்டுவிட்டு ஏணையைத் தான் முதல் போய்ப் பார்ப்பார்கள்.

அதற்கு முதலும் சரி பின்பும் சரி ஏணை கட்டி உறங்கிய அமெரிக்க பிள்ளையை இன்னமும் காணவில்லை.

உங்க மகள் அமெரிக்காவில்

நாங்க இங்கு...:lol:

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் நுநாவிலான், குமாரசாமி, வல்வைசாகறா, காவலூர்கண்மணி

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உண்மைக்கதையினை வாசிக்கவே கவலையாக இருக்கிறது.

ஈழத்தில் பதுங்குகுழியில் விசப்பாம்புகள் கடித்து இறந்தவர்களைப் பற்றி பத்திரிகையில் படித்திருக்கிறேன். பதுங்கு குழி மீது குண்டு போட்டு குண்டினால் பதுங்கு குழி முடப்பட்டு இருந்ததினையும் அறிந்திருக்கிறேன். எத்தனை எத்தனை சோகக் கதைகள் எம்மவர்களுக்கு.

முன்னைய யாழ்களத்தில் வந்த பதுங்குகுழி அனுபவங்களைக் காண

http://www.yarl.com/forum/index.php?showtopic=7937

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் கொஞ்சமா அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் கதிரவன் நினைவை குறைத்திருந்தாலும் எங்கு ஒரு குழந்தையை பார்த்தாலும் என் கண்ணில் அவன் தான் தெரிவான். அதிலும் இந்த பங்குனி மாதம் வந்தால் சொல்லவே தேவையில்லை. வலியிலும் எனக்கு முட்டு முட்டு குடுத்தானே. கண்ணை வலியில் மூடி இருப்பானோ? அப்படி இருந்தவனை எழுப்பி முட்டு முட்டு கேட்டேனே. அப்போ கூட குடுத்தானே. அப்ப கூட அவன் சிரித்ததா தானே எனக்கு நினைவிருக்கு.என் கண்ணை பார்த்தானே, அப்போ என்னட்ட ஏதும் சொல்ல நினைச்சிருப்பானோ? வலிக்கவேயில்லையா அவனுக்கு? அய்யோ இப்போவும் எனக்கு வலிக்கிறதே..."கதிரவா முட்டு முட்டு"<<<<

தூயா,

கற்பனைகளை விட நிஜங்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதற்கு தங்கள் எழுத்துக்களே சாட்சி. அந்த நிகழ்வைக் கண்முன்னே கொண்டுவந்தீர்கள் கூடவே கண்ணீரையும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா எமது பழைய பங்கர் வாழ்க்கையை உங்களது கதை ஞாபகப்படுத்தியது. அவை நினைப்பதற்கு சுகமாக இல்லாவிட்டாலும் மறக்க முடியாத நினைவுகள். மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.