Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும்

பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார்.

நண்பர் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதர் அவருடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன்.

அந்தப் பெண்ணுக்கு ஒரு பத்து வயது தங்கையும் இருக்கிறாள். அவள் அடக்கமும் கீழ்படியும் குணமும் கொண்டவள். அதனால் தந்தையுடன் அவள் எளிதாக ஒத்துப் போகிறாள். இது மூத்தவளிடம் பொறாமை யையும் எரிச்சலையும் தூண்டுகிறது.

14 வயது என்பது ஒரு சிக்கலான பருவம். இதை நண்பர் உணரவில்லை. அவருடைய ஆத்திரமும், இயலாமையும் அந்த வீட்டின் நிம்மதியைப் பெரிதும் குலைக்கின்றது.

உங்களுடைய பிள்ளைகள் கைக்குழந்தை நிலையிலிருந்து தத்தித் தவழும் பருவத்தை எட்டிய அந்த கால கட்டத்தை நினைத்துப் பாருங்கள். மெல்ல பரிணமித்த அவள் குணாதிசியங்களுக்கேற்ப (ஆளுமை) நீங்கள் தாம் அப்பொழுது உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

அவளுடைய அழுகைகளுக்கும், ஆட்டங்களுக்கும் காரணம் புரியாமல் அப்பொழுது நீங்கள் கொஞ்சம் எரிச்சல் கூட அடைந்திருக்கலாம்.

டீன் ஏஜ் பருவம் என்பது கூட அத்தகைய ஒருபருவ மாறுதல்தான். இந்தக் காலகட்டத்தில் உங்கள் மகள் வேகமாக வளர்கிறாள். இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது.

இந்த வயதில் அவள் பாதி பெரியவள் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால்தான், ஒரு குழந்தையாக நடத்தப்படும்போது அவளைப் புண்படுத்துகிறது.

உங்களை அறியாமல் நீங்கள் அவளுடைய தன்னம்பிக்கையை காயப் படுத்தக் கூடும். “என்னுடைய வாழ்க்கையை என்னாலேயே திறம்பட நடத்த முடியும் என்கிற போது இவர்கள் ஏன் தேவையின்றி இடையே புகுந்து அறிவுரைகள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்?” என்று அவள் நினைப்பாள்.

உங்கள் ஆணைகளும், கட்டளை களும் தன்னை ஒரு குழந்தைபோல் உணர வைப்பதால் அவற்றை வெறுக்கிறாள்.

இந்த வயதில் தன்னுடைய அந்தரங்க மானவைகளை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவளா கவும் இருப்பாள்.

“எங்கே போனாய்?”, “என்ன செய்தாய்“ போன்ற கேள்விகளை அவள் விரும்புவ தில்லை வளர்ந்துவிட்ட ஒரு நபர் மீது நீங்கள் வைக்கக்கூடிய நம்பிக்கையை ஏன் தன்மீது வைப்பதில்லை என்று சலித்துக்கொள்வாள்.

ஏனென்றால், அப்பொழுது அவளைப் பொறுத்தவரை நன்கு வளர்ச்சியடைந்து விட்ட ஒரு பெண் இந்த வயதில் தன்னை சுயசோதனைக் குள்ளாக்குவதிலும் அதிக நேரம் செலவழிப்பாள்.

டீன் ஏஜ்ஜிற்கே உரிய குழப்பங் களையும், மனப்போராட்டங்களையும் புரிந்து கொள்வதற்கும் களைவதற்கும் அவள் முயற்சி செய்யும் காலம் இது. தன் உடலிலும், மனதிலும் நிகழும் மாற்றங்கள் அவளை குழப்பமடையச் செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் காட்டுகின்ற எந்த அதீதமான அக்கறையும் தேவையற்றதாகவே அவளுக்குப் படும். அவள் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பதாகவே அவளுக்குத் தோன்றும்.

ஆனால் மகளுக்கும் உங்களுக்கும் இடையில் எழுந்த தடுப்புச் சுவர் எதனால் உருவானது என்கிற குழப்பத்தில் நீங்கள் இருப்பீர்கள். தன் அந்தரங்க உணர்வுகள், எண்ணங்கள் சிக்கல்கள் ஆகியவற்றை பற்றி உங்களுடன் கலந்துரையாடுவதை உங்கள் மகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொள்ளுவாள். இந்தப் போக்கு உங்கள் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்.. அதுமட்டுமல்ல அவள் தொடர்பான சிக்கல்களை களைய முடியாமல் திண்டாடுவீர்கள். நாம் ஒரு சிறந்த அப்பாவாக இல்லையோ? எனும் ஐயங்கள் உங்களை அலைக்கழிக்கும். இந்த சிக்கல்கள் பிள்ளைக்கும், பெற்றோர்க்கும் இடையிலான இடைவெளியை அகலப்படுத்தும்.

அச்சங்களும், ஐயப்பாடுகளும் நிறைந்த டீன்-ஏஜ் பருவம்:-

பொதுவாகவே டீன்-ஏஜ் பருவத்தைச் சேர்ந்தவர்கள், தன்னம்பிக்கையை குறைவாகக் கொண்டிருப்பார்கள். தம்மில் தோற்றத்தில் நிறைய குறைகளைக் காண்பார்கள். இத்தகைய அச்சங்களும், ஐயப்பாடுகளும் கொண்டவர் களிடம் பழகுவது சிக்கலான காரியம் .சாதாரணமாக நாம் சொல்லுகிற சொற்களை திரித்து அர்த்தப்படுத்திக் கொள்கிற போக்கு இந்த கால கட்டத்தில் மிகுந்திருக்கும்.

ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமும் இந்தக் குளறுபடி இந்தாலும், பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இப்படிப்பட்ட கருத்து முரண்பாடு ஏற்படுமானால், அது இருசாரார்க்கும் மிகுந்த மனவேதனையை உண்டாக்கும்.

தன் கட்டளைகளை பிள்ளைகள் மீறும்போது தன் அதிகாரத்தையே அவர்கள் தட்டிக் கேட்பதாக அப்பாவுக்குத் தோன்றும் ஏன் தந்தை என்கிற தன் நிலையையே அவர்கள் உதாசினப்படுத்துவதாக நினைப் பீர்கள். ஒரு அப்பாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

சின்ன வயதில் எந்தப் பெண் குழந்தையும் தன் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். அவரை ஆராதிக்கும் இந்த பாசத்திற்கும், ஆராதனைக்கும் பழக்கப்பட்டுபோன ஒரு தந்தையால் தன் டீன்-ஏஜ் மகளின் கலக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது தானே.

தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் - மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது.

டீன் -ஏஜ் பருவத்தில் எந்த ஒரு பெண் பிள்ளையும் தன் தாயிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இயல்பு. தந்தையுடன் பகிர்ந்துக்கொள்ள இயலாத அச்சங்களையும், ஐயப்பாடுகளையும் தாயுடன் பகிர்ந்துக் கொள்கிறாள்.

தாயுடன் ஒட்டுதலாக இருக்கின்ற மகள் தன்னுடன் அப்படி இல்லையே என்று தந்தை ஏங்குகிறார். விலக்கி வைக்கப்பட்டது போல் உணருகிறார். இன்னொரு கருத்து கூட இதை மேலும் சிக்கலாக்குகின்றது.

கண்ணோட்டத்தில், பார்வையில், தம் மகள் எப்பொழுதும் குழந்தையாகவே தென்படுகிறாள். அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணரத் தவறி விடுகிறார். டீன்-ஏஜ் மகளின் ஒவ்வொரு புதிய பழக்கமும் - மகளைப் பற்றி தன் மனதில் தான் பதித்து வைத்திருக்கும் படிமத்திற்கு முரணாக இருப்பதால் அவரை வெறுப்பேற்றுகிறது.

இந்த சூழ்நிலையில் தாய் என்கிற முறையிலும் மனைவி என்கிற முறையிலும் பெண்களுக்கு பெரிய கவலை ஏற்படும், சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு, அப்பாவும் மகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வ தையும் தவிர்க்கத் தொடங்குவர். வீடே ஒரு போட்டிக் களமாகக் காட்சியளிக்கும்.

“என் விருப்பப் படித்தான் நடப்பேன்” என அடம் பிடிக்கும் 14வயது மகளுக்கும். குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் இடையில் நடக்கின்றன போட்டி, வீட்டை அல்லோல கல்லோலப் படுத்திவிடும். இவர்கள் இருவருக் கும் நடுவில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஒரு பெண்ணால் தாயால் ஏற்படுத்த முடியுமா?

அப்பா-தன் மகளிடம் அவ்வளவு கோபம் கொள்வதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். குறிப்பாக எதைப் பற்றி அவர் நச்சரிக்கிறார்? அது புதிதாக உருவான ஒன்றா? அல்லது அப்பா மகளிடம் நெடுங்காலமாகவே குறை காணும் அம்சமா?

குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டுங்கள் (ஃபேமிலி மீட்டிங்) குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத் துங்கள். ஒவ்வொருத்தரும் எந்த குறுக்கீடு மின்றி ஐந்து நிமிடம் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.

தங்கள் மனதில் குமைகின்ற மனக்குறைகள் பற்றியும் அவற்றுக்கான மூல காரணங்கள் பற்றியும் விளக்கச் சொல்லத் தூண்டுங்கள்.

“ நம் உணர்வுகளை நம் குடும்பத்தினர் அனைவரும் செவிமெடுத்து கேட்கிறார்கள்” என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத குடும்ப உறுப்பினர்களும், இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத போதும் வீட்டில் நிலவும் உளைச்சலும் நிம்மதியின் மையும் அவர்களையும்தானே பாதிக்கும்?

குடும்பத்தினர் அனைவரும் கடைப் பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அப்பொழுது வகுத்துக் கொள்ளுங்கள். இத்தகைய விதிமுறைகள் ஒவ்வொரு குடும்பத் திலும் இருப்பது அவசியம். குறிப்பாக பின் வருவன பற்றிய விதிமுறைகளை வகுத்துக் கொள்வது நல்லது.

வீட்டு வேலைகள், எதிர்பார்ப்புகள், வீட்டில் இருக்க வேண்டிய நேரம், வீட்டுப் பாடம் செய்ய வேண்டிய நேரம், தொலைக்காட்சியை யார் எவ்வளவு நேரம் பயன்படுத்துவது என்கிற அட்டவனை, விடுமுறை நாட்களைப் பற்றிய விதிமுறை களை வகுத்துக் கொள்ள வேண்டும். பொதுவான வரையறைகள் போன்ற இதர பலவற்றைப் பற்றியும் சில முக்கியமான வீட்டு விதிகள்:

1) வீட்டுப் பாடங்களை செய்து முடிக்கின்ற வரை தொலைக்காட்சி கிடையாது.

2) நச்சரித்தல் கிடையாது - உரையாடல்கள்தான்.

3) இன்னொருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் யாரும் குறுக்கிடக் கூடாது.

4) பத்து மணிக்கு மேல் தொலை பேசியைப் பயன்படுத்தக் கூடாது.

5) சமைப்பதிலும் உணவு பரிமாறு வதிலும் எல்லோருக்கும் உதவ வேண்டும்.

6) அவரவர் பொருட்களை அவரவர் தான் பராமரித்துக் கொள்ள வேண்டும்.

ஒருவருடைய குணாதிசயத்தை இன்னொருவரா; மாற்றியமைக்க முடியாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு பொறுப்பு மிக்கவர்களாக வளர்ந்தால் அது குடும்ப கட்டமைப்பிலே ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

அப்பாக்கள் தங்களின் அதிகாரத்தை அவ்வப்போது தளர்த்திக் கொள்ளல், குடும்பத்தில் சமாதானத்தை நிலைநாட்ட வழி வகுக்கும், உங்கள் பிடிவாதங்கள் அனைத் தையும் மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள். உங்களுக்கு இன்றியமையா ததாக தோன்றும் சில உண்மையில் முக்கிய மற்றதாக இருக்கக்கூடும் எடுத்துக்காட்டாக உங்கள் பெண் விரும்புகிற வரையில் தொலை பேசியில் பேச அனுமதியுங்கள். இந்த விட்டுக் கொடுக்கும் அணுகுமுறை உங்கள் டீன்.ஏஜ் மகளை சிந்திக்க வைக்கும். வழக்கமாக சண்டை பிடிக்கும் அப்பா இவ்வளவு நேரம் பேசியும் அமைதியாக இருக்கிறாரே? என்று வியப்புறுவாள்.

காலப்போக்கில் உங்கள் மீதும் உங்கள் தேவைகளின் மீதும் அவளுக்கு மரியாதை கூடும். என்னதான் டீன்-ஏஜ் பருவத்தை எட்டிவிட்டாலும், உங்கள் அன்புக்காகவும், உறவுக்காகவும் ஏங்கும் குழந்தையாகவே மனதளவில் அவள் இருக்கிறாள். குடும்ப உறவு பிணக்குகள் கொண்டதாக இல்லாமல் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இருப் பதையே அவளும் விரும்புகிறாள். பிடியை கொஞ்சம் தளர்த்த வேண்டும் என்றவுடன் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அறவே கவனம் செலுத்தாமல் இருப்பது என்று நினைத்துவிடக்கூடாது. அதிகமாக தலையி டாமல் அவள் நடவடிக்கைகளை மேற்பார் வையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உலகத்தை எதிர்கொள்வதற்கான வயது, பக்குவமும் ஒரு டீன்-ஏஜ் பெண்ணிடம் இருக்காது. உங்கள் அறிவுரையும் வழிகாட்டு தலும் அவளுக்குத் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.

டீன்-ஏஜ் பருவம் என்பது பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. பார்க்காததைப் பார்க்கவும். கேட்காததைக் கேட்கவும் ஆவல் மேலிடுகிறது. சில சமயங்களில் இந்த ஆவல் உணர்ச்சியே உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையை சிக்கலில் மாட்டியும் விடுகின்றது. அதனால் அவள் வாழ்க்கையில் நீங்கள் பங்கு பெறுவது முக்கியம்.

மகளின் நண்பர்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்கள் மகளின் நட்புவட்டம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். டீன்-ஏஜ் பருவத்தில் நிகழும் இன்னொரு முக்கியமான வளர்ச்சி. மொட்டுவிடும் பாலியல் உணர்வு . இந்த பாலியல் உணர்ச்சியை முழுவதும் புரிந்துக் கொள்ள முடியாமல் உங்கள் மகள் தடுமாறும் காலம் இது. இந்த தடுமாற்றத்தின் விளைவாக உங்களைக் கூட அவள் தவிர்க்க விழைவாள். சிடுசிடுப்பாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளத் துவங்குவாள்.

இந்த நேரத்தில்தான் நீங்கள் மிக அனுசரனையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பது கடினம்தான். எனினும் இந்த அனுசரணையின் பயனைத் தெரிய வரும் போது பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்களை எதிர்த்துப் பேசிக் கொண்டும். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டும் அவள் வலம் வருகின்ற நேரங்களை விட, தன் பொறுப்பை மறவாமல் அவள் சில வேலைகளைச் செய்யக்கூடும். அவை மிகச் சிறிய செயல்களாகவும் இருக்க லாம. எனினும் நீங்கள் அவற்றை மறக்காமல் பாராட்ட வேண்டும். அதிக அலட்டல் இல்லாமல் சாமர்த்தியமாக பாராட்டுங்கள்.

தொலைபேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டால் முடிவில்லாமல் பேசுகின்ற ஒரு பதினான்கு வயது இளம் பெண்ணை எனக்கு தெரியும். அவள் தேர்வுகள் நெருங்கி வந்துவிட்டால் பாடப்புத்தகங்களில் மூழ்கிவிடுவாள். தோழி களுடன் கதையடிப்பதில் நாட்டம் மிகுந்த வளாக இருப்பினும். தன் கடமைகளில் அவன் ஒருபோதும் குறை வைப்பதில்லை இதனால் அவள் தந்தைக்கும் மகிழ்ச்சி தொட்டதற் கெல்லாம் மகளை அவர் கடிந்துக்கொள்வ தில்லை. தொலைபேசியில் விடாமல் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் எப்பொழுதாவது நேரம் போவதை சுட்டிக் காட்டுவார். அவ்வளவுதான்.

டீன்-ஏஜ் பருவத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த உங்கள் மகள் சங்தேக மொழி யைக் கைக்கொள்வாள். தன் எண்ணங்களை நாசுக்கான குறிப்புகள் மூலம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவாள்; இந்த மாதிரி தருணங் களில் எந்த ஒரு அப்பாவுக்கும் அறிவுரைகளை வாரி வழங்கிடத்தான் மனம் துடிக்கும். அவசரப்பட்டு விடாதீர்கள் இலேசாக மனம் திறந்து காட்டியிருக்கின்ற உங்கள் மகள் அதை மறுபடியும் பட்டென மூடாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் புத்திசாலித்தனமா நடந்து கொள்ள வேண்டும். உங்கள் மகள் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேள்வி கேட்பாளேயானால் நீங்களும் அவ்விதமா கவே பதிலளிக்க வேண்டும்.

கூச்சப்பட்டுக் கொண்டு சுற்றி வளைத்தால் உங்கள் பதில்கள் அதற்குத் தக்கவாறு அமைய வேண்டும். இந்த நேரத்தில் போய் சொற்பொழிவு செய்து கொண்டு இருப்பீர்களேயானால் அவள் மறுபடியும் உங்களிடம் ஆலோசனை கேட்டு வராம லேயே போகக்கூடும். எந்த நேரத்தில் எந்த விதமாக பேச வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டு பேசினால், உங்கள் டீன்-ஏஜ் பெண்ணுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு கெட்டிப்படும்; ஆழப்படும்.

-நன்றி : ஹெர்குலிஸ் - ஆக 2000

நன்றி - கீற்று இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவபூர்வமான ஆக்கம்.

நன்றி நொச்சி அண்ணா

பெண்பிள்ளையோ ஆண்பிள்ளையோ அவர்களின் வயதிற்கேற்ப பெற்றோரும் மாறவேண்டும். பிள்ளைகளுடன் நட்புடன் பழகினால் பிரச்சனைகளை இலகுவா சமாளித்து விடலாம்.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

இன்னைப்புக்கு நன்றி! நொச்சி! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். அவர்கள் எது கேட்டாலும் உடனடியாக எடுத்தெறிந்து இல்லை என்று கூறுவதில்லை.எல்லாத்திற்கும் உடனே ஓம் என்று தான் கூறுவேன். பின்னர் அதில் இருக்கும் பிரச்சனைகளை அவர்களிடம் கூறி விவாதிப்பேன். முடிவில் எது சரி எது பிழை என்று அவர்களாகவே தீர்மானிப்பார்கள்.அவர்கள் தாங்கள் செய்வது தான் சரி என்று தீர்மானித்தாலும் நான் கூறிய அறிவுரைகள் எப்படியும் அவர்கள் மனதில் நிலைத்து நிற்கும். அவர்களும் அவதானமாக இருப்பார்கள்.

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். அவர்கள் எது கேட்டாலும் உடனடியாக எடுத்தெறிந்து இல்லை என்று கூறுவதில்லை.எல்லாத்திற்கும் உடனே ஓம் என்று தான் கூறுவேன். பின்னர் அதில் இருக்கும் பிரச்சனைகளை அவர்களிடம் கூறி விவாதிப்பேன். முடிவில் எது சரி எது பிழை என்று அவர்களாகவே தீர்மானிப்பார்கள்.அவர்கள் தாங்கள் செய்வது தான் சரி என்று தீர்மானித்தாலும் நான் கூறிய அறிவுரைகள் எப்படியும் அவர்கள் மனதில் நிலைத்து நிற்கும். அவர்களும் அவதானமாக இருப்பார்கள்.

வாத்தியார்

*********

கறுப்பி, வாத்தியார் சுவி ஆகியோருக்கு எனது நன்றிகள். இந்தக் கட்டுரையைப் படித்தபோதுதான் நான் பல விடயங்களைப் புரிந்து கொண்டேன். எனவே அதனை யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

எமது சிறு-இளம் பராயத்துச் சூழல் வாழ்வு முறை, என்பன மிகவும் குறுகியதாகவே இருந்தது. ஆனால் இங்கு நாலாம் ஆண்டிலேயே பெண் - ஆண் பருவநிலை மாற்றங்கள் , அடுத்தகட்ட உடற்கூற்றியல் வளர்ச்சி என்பவற்றைச் சொல்லிக் கொடுத்து அவர்களை, அதாவது பிள்ளைகளை அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு இணைத்துக் கொண்டு செல்கின்றார்கள். உடற்கூற்றியல் வளர்ச்சி சொல்லிக் கொடுத்த நாளன்று, எனது பிள்ளை நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை கொண்டு வந்திருந்தார். ஊரிலென்றால் அதனை நாம் 10ம் ஆண்டின் பின்தான் பார்க்க முடியும். படவிளக்கங்களோடு விரிவாக விளக்கியிருந்தார்கள்.

நாம் தெளிவாக இல்லாது விடின் எமது பிள்ளைகளின் வாழ்வு இருளாகிவிடும். பகிர்வோம். பயன்பெறுவோம்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி ......மிகவும் பயனுள்ள் தகவல் படித்து பகிந்தமைக்கு நன்றி.........முரண்டு பிடிக்கும் அப்பாக்களை எப்படி மாற்றுவது அம்மா மார் வளைந்து போவர்கள். ...நீ மக்களுடைய பக்கம் என்று அம்மாக்கும் விழும் என்ன செய்யலாம் ? நல்ல ஒரு தலைப்பு .அப்பா என்ற தலைமையை அவர் கை விட விரும்புவதில்லை .அப்பா மகன்களுடன் எப்படி உறவை வளர்க்கலாம்?

எல்லோரும் கருத்து பகிர்ந்தால் நன்று.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல பயனுள்ள ஆக்கம். இதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நெச்சி. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் படியுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=10178&pid=217952&st=20&#entry217952

  • கருத்துக்கள உறவுகள்

பதின் பருவத்தின் top பத்து பிரச்சனைகள்!

குழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப்போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத்தை தொட்டு விட்டாலே போதும், புது புது பிரச்சனைகள் பல தலை தூக்கிவிடுகின்றன. இப்படி பலதரப்பட்ட பதின் பருவ பிரச்சனைகள் இருந்தாலும், மிக அதிகமாய் ஆலோசனை மையத்திற்கு வருபவை எவை தெரியுமா?

1. படிப்புல் வீக்”அஞ்ஜாம் கிளாஸ் வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னனே தெரியல, வர வர படிப்புல ரொம்வ வீக்காயிட்டே போய், மார்க்கெல்லாம் சொல்லிக்கிறா மாதிரியே இல்லை” என்ற புகாருடன் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், “எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது” என்கிறார்கள், அல்லது, “புக்கை திறந்தாலே, பகல் கனவா வருது” என்கிறார்கள். பரிசோதித்து பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறுமனே மக் அடித்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரியவரும். இந்த “டப்பா அடிக்கும்” பாணி எல்லாம் சின்ன கிளாஸ் சிம்பிள் பாடங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய கிளாஸ் போக போக, பாடங்களின் ஆழம் அதிகம், புரிந்துக்கொள்ள வேண்டிய மேட்டரின் அகலமும் அதிகம் என்பதால் இந்த மனப்பாட யுத்தி அதற்கு மேல் பிரயோஜனமே படாது.

முழு பாடத்தையும் அப்படியே முறுக்கி பிழிந்து வெறும் முக்கியமான சாரை மட்டும் கரந்தெடுத்து, கரைத்து குடிக்கும் யுத்திகள் பல உள்ளன. நியாயமாய் பாடம் நடத்தும் ஆசிரியர்களே இந்த யுத்திகளையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லித்தந்தால் தான் கற்றவை நிற்கும் அதற்கு தக. ஆனால் என்ன செய்வது, இந்த யுத்திகளை எல்லாம் சொல்லித்தர ஆசிரைய பெருமக்களுக்கு நேரம் இல்லா காரணத்தினால், இதையெல்லாம் தனியாக சொல்லித்தர வேண்டியுள்ளது. இப்படி புரிந்து, படித்து, கிரகித்துக்கொள்ளும் யுத்திகளை தெரிந்துக்கொண்டாலே, அநேக மாணவர்கள் படிப்பில் முன்னேறி விடுகிறார்கள். அப்படியும் கொஞ்சம் முன்னே பின்னே என்று இருக்கும் மாணவர்களுக்கு மூளையை கூராக்கும் சில ஊக்க மாத்திரைகளை கொடுத்து முன்னேற்ற பார்க்கலாம்.

2. ஓவர் டென்ஷன்:அணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாய் எல்லா பதின்பருவக்கார்ர்களை பற்றியும் வரும் அடுத்த புகார், இந்த முன்கோபம். அது வரை சொல் பேச்சை கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதை தொட்ட உடனே, “எல்லாம் எனக்கு தெரியும், நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்”. என்று பெற்றோரையே எதிர்த்து பேசிவிடுகிறார்கள். சரி பிள்ளை தான் ஏதோ மனநிலையில் ஏடா கூடமாக பேசுகிறதே, நாமாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போவோமே என்கிற விவஸ்த்தையில்லாமல் பெற்றோர், “உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு, பெத்து வளர்த்து, இவ்வளவி பெரியா ஆளாக்கினேன், என்னையே நீ....” என்று முழம் முழமாய் லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட, பொருத்து பொருத்து பார்த்து விட்டு, “உங்களை யாரு பெக்க சொன்னா?” என்று பொறித்து தள்ளிவிடுகிறார்கள் பிள்ளைகள். உடனே தாய் மார்கள் எல்லாம் மனமுடந்து போய், இந்த பிள்ளைக்காக நான் என்னவெல்லாம் செய்திருப்பேன், என் அருமை புரியாமன் என்னையே இப்படியெல்லாம் ...” என்று இன்னும் நொந்துப்போகிறார்கள்.

இந்த வயதில் இந்த இளைஞர்களின் ரத்த்தில் எக்கசெக்க ஹார்மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதிற்கெல்லாம் டென்ஷன், எரிச்சல், மூடி அவுட் என்று இள ரத்தம் எப்போதுமே ஒரு சல சலப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். எதையும் சகித்துக்கொள்ளும் தன்மை, பொருத்துபோகும் பக்குவம், அடங்கி போகும் லாவகம் எதுவுமே இந்த வயதில் ஏற்படுவதில்லை. இதை புரிந்துக்கொண்டு, பெரிசுகள் நாம் மிக பக்குவமாய், ஹாசியமாய், தோழமையாய் முக்கியமாய், பொறுமையாய் இவர்களை கையாண்டால் தான் ஹார்மோன்களின் ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார்கள். இதை விட்டு விட்டு, “முளைச்சி மூணு இலை விடலை, அதுக்குள்ள இவ்வளவு திமிரா, உனக்கே இவ்வளவுனா, எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று போட்டிபோட்டுக்கொண்டு, அவர்களை விட அதிக முதிர்ச்சியின்மையை பெரிசுகள் வெளிபடுத்தினால், பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் சிறியவர்கள் சினம் கொள்ளும் போது இந்த மாதிரி கோபதாபங்களை எப்படி நேர்த்தியாய் சமாளிப்பது என்பதை கற்றுத்தர இதையே ஒரு சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டு, பெரியவர்கள் சாந்தமாய் விஷயத்தை கையாண்டாலே போதும். மனிதர்கள் இயல்பிலேயே மற்றவர்களை பார்த்து காப்பியடித்து தான் பலதும் பற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்பதால், முன் மாதிரி சரியாக் இருந்தால், இளைஞர்களும் தங்களை திறித்திக்கொள்வார்கள்,

3. ஓவர் கூச்சம்:”விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை, கடைக்கு போனால், எல்லாரும் பார்க்குறாங்க, நான் இந்த பையை தூக்கீட்டு வந்தா சிரிப்பாங்கனுறது, மத்தவங்க முன்னாடி என்னை பத்தி ஏன் சொன்னேனு எல்லாரும் போன பிறகு திட்டுறது...” இப்படியாக, பதின் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வை பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது, இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசி போக செய்கிறது. போக போக இந்த கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரித்து, “ஆமா, நான் இப்படி தான், எனக்கு என்னை பிடிச்சிருக்கு, வேறு யாருடைய அபிப்ராயமும் எனக்கு முக்கியமில்லை” என்று சுயமதிப்புக்கொள்ளவும் இவர்கள் முடிகிறது. என்ன இந்த அளவு சுவாபிமானம் வர குறைந்தது நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன- அதுவரை இந்த வெட்கத்தை பெரிது படுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகிறார்கள் இளையவர்கள்.

4. பியர் பிரஷர்.பதின் பருவத்தினருக்கு தங்கள் சமவயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. இந்த சமவயதுக்காரர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷயங்களை அனுகுகிறார்கள் என்பதை எல்லாம் மிக மும்முரமாக நோட்டம் விட்டு, அதை போலவே தானும் இருந்தால் தான் தன்னை “செட்டில் சேர்த்துக்கொள்வார்கள்” என்று அரும்பாடுபட்டு, மந்தையோடு மந்தையாய் கலந்துவிட முயல்கிறார்கள். “உன் ஃபிரெண்டு சொன்னா தான் கேட்பியா? நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்று பெரிசுகள் என்ன தான் தலை பாடாய் அடித்துக்கொண்டாலும் இளையவர்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியாது. காரணம் பெற்றவர்களை விட இந்த மாதிரி சமவயதுக்கார peersசிடமிருந்து அதிக விஷயங்களை கற்றுக்கொள்ளூம் படியாகத் தான் மனித மூளையின் டிசைனே அமைந்திருக்கிறது. இந்த இயற்கை ஏற்பாட்டை மீறி அவர்களால் செயல் படமுடியாது. “அப்படினா, கண்டவங்களோட சேர்ந்து கெட்டு குட்டிசுவரா போயிட்டா?” என்று பெற்றவர்கள் பதைபதைக்கத் தான் செய்வார்கள். இதற்கு ஒரே வழி, உங்கள் குழந்தையின் பியர்களை பரிச்சையபடுத்திக்கொள்ளுங்கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாக க்ண்காணித்தால் தானே, அவர்கள் போக்கு எப்படி என்பதை நீங்கள் சதா கண்காணிக்க முடியும்.

5. வயதிற்கு வருதல்:

பெண்களூக்காவது பரவாயில்லை, புட்டு சுற்றுகிறேன் பேர்வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்கு வருதல் அனுபவத்தை பற்றி பேசி பகிர்ந்துக்கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்கு வரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது. பாவம், ஆண் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை. இவன் வயதிற்கு வந்தால், அம்போ என்று அப்படியே விடபடுகிறான். என்ன ஏது என்று சொல்லித்தர நாதியே இருப்பதில்லை. விளைவு, விந்து வெளியேறும் வயதுக்கு வருதல் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கலவரம் கொள்கிறான். இருக்கவே இருக்கிறார்கள் போலி டாக்டர்கள், இந்த சாதரண உடலியக்கத்தை பெரிய வியாதி மாதிரி பில்ட் அப் கொடுத்து இவர்கள் அச்சுறுத்த, “அய் நான் வயதுக்கு வந்துட்டேனே,” என்று எண்ணி பெருமை கொள்ள வேண்டிய வாலிவன், “அய்யோ, எனக்கு வியாதி வந்துவிட்டது” என்று தவறாக எண்ணி கவலை கொள்கிறான்.

”விந்து வெளியேறி விட்டது, அதனால் சாக்க்கிடக்கிறேன்” என்ற வகை புகாருடன் ஆலோசனை பெற வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நல்ல வேலையாக இப்போதெல்லாம் குறைந்துக்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டு ஆண் சிங்கங்கள் எல்லாம் அறிவியலை புரிந்துக்கொண்ட அறிவாளிகள் ஆகிவிட்டார்கள் போல. அப்படியே, தப்பித்தவறி, ஒன்றிரண்டு ஆண்கள் இந்த பிரச்சனையோடு வந்தாலும், அவர்களது பயத்தை கிளப்பும் மூட நம்பிக்கைகளை தெளிவு படுத்தி, அநாவசிய பதட்டத்தை தணிக்கும் மருந்துகளை கொடுதாலே போதும், ”இதெல்லாம் ஒரு மேட்டருனு யாராவது கவலைபடுவாங்களா!” என்று மாறிவிடுகிறார்கள் ஆண்கள் எல்லாம்.

6. சுய இன்பம்: என்ன தான் வேற்று கிரகத்தில் கொண்டு போய் வைத்து எவர் சவகாசமும் இல்லாமல் குழந்தையை மஹா பவித்திரமாக வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முயன்றாலும் பருவ வயது வந்ததுமே பாலுணர்வும் தலை தூக்கிவிடும். நூறு ஆண்டுகளுக்கு முன் என்றால் இந்த பருவம் வந்த உடனே திருமணம் என்று ஒன்றை நடத்தி, ஒரு கலவியல் துணையை பெற்றோரே ஏற்பாடு பண்ணித் தந்திருப்பார்கள், தாபம் தோன்றும் போதெல்லாம் தாம்பத்தியம் கொள்ள ஏதுவாக இருந்துருக்கும். ஆனால் இந்த நூற்றாண்டிலோ, வயதிற்கு வந்து பல வருடங்கள் கழித்து தான் திருமணம் என்று நிலைப்பாடுகள் மாறிவிட்டன. இதை பற்றி எல்லாம் சட்டையே செய்யாமல் இயற்க்கை இன்னமும் அதே பதிமூன்று – பதினேழு வயதிற்குள் எல்லோரையும் வயதிற்கு வர வைக்க, கூடவே தலையெடுக்கும் உடல் ரீதியான தேவைகளை எப்படி சமாளிப்பது என்று யாருமே சொல்லி தருவதில்லை. தாபம் ஏற்படும் போதெல்லாம் தன்னை தானே சாந்தப்படுத்திக்கொள்ளும் டெக்னிக்கை அநேகமாக எல்லா ஆண்களும் சுயமாகவே தெரிந்துக்கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய குற்றம் என்று சிலருக்கு தோன்றுவதால், கவலை பட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் இதில் பெரிய ஆட்சரியம் என்ன தெரியுமா? அமெரிக்கா, ஐரோபா, ஆஸ்திரேலியா, ஸ்காண்டினேவியா மாதிரியான பகுத்தறிவு அதிகம் உள்ள நாடுகளில் எந்த ஆணும் சுயஇன்பத்தை பெரிய தவராகவே நினைப்பதில்லை. பாலில்லாத குறையை போக்க, குழந்தை கையை சுவைப்பது போல, துணையில்லா சமயத்தில் தாபத்தை தணிக்க இது ஒரு சிம்பிள் டெக்னிக், இதில் பெரிதாக ஃபீல் பண்ண என்ன இருக்கிறது என்பது இவர்களது மனப்பான்மை. ஆனால், இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் தான், அதுவும் படிக்காத ஆண்களிடம் தான் சுய இன்பத்தை பற்றின அநாவசிய பயங்களும் குற்ற உண்ர்வும் இருக்கிறது. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இதே இந்தியாவில் தான் அந்த காலத்தில் ’ஜீவ காருண்யம்’ என்ற பெயரில், பொது இடங்களில் நடுகல்லை நிறுத்திவைக்கும் வழக்கம் ஒரு தர்ம காரியமாய் கருதப்பட்டு, பலரால் பின்பற்ற பட்டது. நடு கல்லை நடுவதில் என்ன பெரிய ஜீவ காருண்யம் என்று யோசிக்க தோன்றூகிறதா? போகிற வருகிற மிருகங்களுக்கு மதம் பிடித்தால், இந்த கல்லில் உராய்து சாந்தபடுத்த உதவுவது, புண்ணியங்களில் சிறந்த புண்ணியமாய் கருதப்பட்ட்து. ஆக, மிருகங்கள் சுய இன்பம் புரிய கூட சாதனங்களை ஏற்பாடு செய்து கொடுத்த கலாச்சாரத்தில், மனிதன் சுய இன்பம் கொள்வதை பற்றி இத்தனை மூட நம்பிக்கைகள் தோன்றியது வேடிக்கை தான்! ஆக, மனிதர்கள் உட்பட, எல்லா ஜீவராசிகளிலும் தகுந்த துணை இல்லாத போது சுய இன்பம் கொள்வது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையே. என்ன, நடுகல்லே கதி என்று இதே வேலையாய் இருக்காமல், விளையாட்டு, படிப்பு, பாட்டு, கூத்து, கேளி, கும்மாளம் என்று வேறு பல வழிகளிலும் சுகம் காணும் தன்மையை வளர்த்துக்கொண்டால், இன்பம் கொள்ளை கொள்ளையாகுமே!

7. முதல் காதல்:

மூளை சுரக்கும் ஹார்மோன்கள் ஏற்கனவே எதிர் பாலின கவர்ச்சியை தூண்டிவிட, கூடவே உடகங்களும், அதன் ஊக்கத்தால் நண்பர்களும் ”சூப்பரா இருக்கும் செய்து பார்”, என்று காதலை பெரிதும் சிபாரிசு செய்ய, கேட்க வேண்டுமா! காதல் என்கிற போதை இளமனதுகளை ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் “எட்டாவது தான் படிக்கிறா, அதுக்குள்ள காதல் என்ன வேண்டி கிடக்குது. வயசுக்கு மீறுன வேலையெல்லாம் செய்யுறாளே” என்று பதறும் தாய்மார்கள் பலர்.

உண்மை என்ன தெரியுமா? பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவதென்பது வயதிற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இது தான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய முறை வேறு காதல் வருமோ என்கிறீர்களா? ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படும் படியாக தான் இயற்கை மனிதர்களை வடிவமைத்துள்ளது. அதனால் மகள் காதல் கொண்டு விட்டாளே என்று ஓவராய் பதராதீர்கள். அந்த வயதில் முதல் காதல் கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன்கள் நார்மலாய் ஊருகின்றன, அவள் ஒரு நார்மல் பெண் என்பதற்கான அறிகுறி.

ஆனால் இது அவளுக்கு முதல் அனுபவம் என்பதால் சினிமாவில் வருவது போல காதல் மஹா அழகான, புனிதமான உணர்வு என்றெல்லாம் அவள் தவறான கற்பனையில் மிதக்கக்கூடும். உடனே அத்தை, மாமி என்று யாராவது ஒரு பெண் உறவினரை பிடியுங்கள். அல்லது ஒரு கவின்சிலரை அனுகுங்கள். முதல் காதல் சொதப்பல்களை பற்றி விளையாட்டாக பேசி புரியவைத்தாலே, ’ஓகோ, இது இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒரு மிக சாதாரண் உணர்ச்சி தான்’, என்பதை புது இளைஞி புரிந்துக்கொள்வாள். இந்த புரிதலே அவள் முதல் காதலின் புனிதத்துவத்தை குறைத்து விடும் என்பதால், கொஞ்ச நாள் கழித்து இந்த உணர்வு அவளுக்கே போரடிக்க ஆரம்பித்துவிடும். சினிமாவில் சொல்வது போல காதல் அவ்வளவு ஒன்றும் ஸ்வாரசியமான உணர்வு இல்லை என்று புரிந்த்துமே, அதன் போதையிலிருந்து அவள் வெளி வந்துவிடுவாள்.

8. மூட் அவுட்

பதின் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதால், திடீர் கோவம், திடீர் அழுகை, திடீர், “என்னை கண்டாலே யாருக்கு பிடிக்கல!” மாதிரியான உணர்ச்சிவெடிப்புக்கள் ஏற்படுகின்றன. மூளையின் நரம்புகள் இந்த வயதில் அதிகமாக வளருவதால் அடிக்கடி சிக்காகி விடுவதாலும், புதிதாய் ரத்ததில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருனிலைபடாததாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள் “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!” என்று புலம்பி அழுவதும், ஆண்கள் “என்னை கவனிக்கிறதே இல்லை” என்றி எரிந்துவிழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, ரசாயண ஸ்ருதிபேதத்தினால். அதனால் சிறுசுகளோடு சரி சம்மாய் கத்தி சண்டையை பெரிதாக்காமல், அந்த நேரத்திற்கு அமைதி காத்து, பிறகு விளக்கம் தந்து புரியவைக்க முயன்றால் தான் குடும்ப நிம்மதியை காப்பாற்ற முடியும்.

9. ஆக்ரோஷம்.

குறிப்பாக நிறைய இளைய ஆண்களை அவர்களது பெற்றோர்கள் இந்த காரணத்திற்காக தான் சிகிச்சைக்கை அழைத்து வருகிறார்கள். “முன்னெல்லாம் அவன் உண்டு அவன் வேலை உண்டுனு குட் பாயா இருந்த பையன் தான். பெரியவங்கன்னா அவ்வளவு மரியாதையா இருந்த பிள்ளை, இப்ப எல்லாம், நீ சொன்னா, நான் கேட்கணூமானு எதிர்த்து பேசுறான். அடிக்க கைய ஓங்குனா, பதிலுக்கு அடிக்க வர்றான். நேத்து ஏதோ திட்டினேனு ரிமோட்டை தூக்கிஎரிஞ்சதுல அது ஒடஞ்சே போச்சு. எங்கிருந்து தான் அவனுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதோ?”

வேறெங்கும் இல்லை. அதே ஹார்மோன்கள் தான். ஆண் குழந்தை வயதிற்கு வருவதே டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனின் சுரத்தலால் தான். இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து விட்டால், ஆக்ரோஷம் ததும்ப அரம்பித்துவிடும், உடல் பலம் அதிகரித்து விடும், எதிலுமே வேகம், வீரம், அவசரம் என்கிற போக்கு ஏற்படும். பழக பழக டெஸ்டோஸ்டீரானின் இந்த தன்மையை எப்படி சாமார்தியமாய் கையாள்வது என்பதை இவர்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்வார்கள் தான் என்றாலும் வயதிற்கு வரும் போதே இந்த உணர்ச்சி மேலாண்மை எதுவும் சாதியமாவதில்லை தானே. அதனால் தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை ஓவராய் மிரட்டி அவன் “நானும் ஆம்பிளை தான்” என்கிற ஆக்கிரோஷத்தை கிளறாமல் முடிந்த மட்டும் அன்பாய் பேசி, தண்டத்தை எடுக்காமல் வெறும் சாம, தான, பேத முறைகளிலேயே இளம் ஆண்களை கையாள்வது தான் புத்திசாலி தனம்.

10. தீயவை தீய பயத்தலால்.....குழந்தை பருவம் போய் வாலிய வயதை அடைய போகும் எக்களிப்பில், எதை எதையோ பரிட்சை செய்து பார்க்க தோன்றும் இள மனம். புகை, மது, மாது, பிற போதை வஸ்துக்கள் என்று களவும் கற்றுமறக்க முயலும் வயது இது தான். இந்த போதை வஸ்துக்கள் கூட ஒரு வகையில் மனிதர்களை தரம் பிரித்து யார் பிழக்க தோதானவர்கள் என்று சோதித்து பார்க்கும் ஒரு test for survival தான். இத்தனை வகை போதை பொருட்கள் இருந்தும் யார் இதில் எதுவும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து பதின் பருவத்தை தாண்டி வருகிறார்களோ, அவர்களே வாழ்வை ஜெயிக்க லாயக்கான புத்திசாலிகள் ஆகிறார்கள். ஏன் தெரியுமா? பெட்டிக்கடையில் சின்ன சின்ன பாக்கெட்டில் தொங்கும் வாசனைமிக்க பான் ரக பொருளானாலும், ஃபாரின் சரக்கு, ஒஸ்தி சரக்கு, லோக்கல் சரக்கு என இந்த வகை மது பானமானாலும், அவ்வளவு ஏன், சட்டம் போட்டு தடுக்கப்படும் மிக மோசமான போதை பொருட்களானாலும், அவை எல்லாமே அடிப்படையில் வேலை செய்கின்ற விதம் ஒன்று தான். மூளையின் இன்ப மையத்தை தூண்டி, மதி மயக்குகின்றன. அத்தோடு, ஆண்மை/பெண்மை திசுக்களை அழித்து விடுகின்றன. ஆக, போதை வயப்பட்ட மனிதர்கள் இனபெருக்க வாய்ப்பை இழப்பது தான் இயற்கையின் ஏற்பாடு. இந்த விவரங்கள் எல்லாம் சிறுசுகளுக்கு தெரியாதென்பதால் விளையாட்டு தனமாய் போதை பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முறை மட்டுமே உபயோகித்தாலும், உடனே தொற்றிக்கொள்ளூம் தன்மை இருப்பதனால் தானே அதை போதை பொருள் என்றே சொல்கிறோம். ஆக சர்வைவலுக்கு ஃபிட் ஆன புத்திசாலிகள் அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று இந்த பழக்கதுக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஜகா வாங்கிவிடுவார்கள்.

எவ்வழி பெரிசுகள்...

என்ன இருந்தாலும் பதின் பருவம் என்பது காற்றாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்த பதபடுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அனைகட்டி அமோக விளைச்சலுக்கு ஆட்படுத்துவது என்று சொல்லித்தர யாரவது தேவை. அப்பா அம்மா, அண்ணன் அக்கா, ஆசிரியர், மதகுரு ஆகிய பெரிசுகள் எல்லாம் மொக்கை போடுங்கள், பெரிதாய் லெக்சர் அடிப்பார்கள். இப்படி இல்லாமல் தம்முள் ஒருவராய் இருந்து கேலிபேச்சு, சிரிப்பு, கலகலப்புடனே ”சரக்கு வேண்டாம் மச்சி, இனிக்கு கிரவுண்டு பக்கம் போய் கலாய்சிட்டு வரலாம்” என்று வாழ்வியல் வித்தைகளை சுலபமாக சொல்லித்தரும் ஒரு சீனியரின் ஜாலி டிப்ஸ் இருந்தால் இளைஞர்கள் எப்போதுமே சரியான தடத்தில் இருக்க உதவும்.

இளைஞர்களுக்கு விளையாட்டாய் விவரங்களை சொல்லித்தர எப்போதுமே ஒரு மூத்த ஸ்நேகிதர் தயாராக இருப்பது அவசியம். சும்மா இளைஞர்களை குறை சொல்லிக்கொண்டில்லாமல் நம்மை போன்ற பெரிசுகள் எல்லாம் இப்படிப்பட்ட ஜாலியான சீனியர்களாய் மாறினாலே போதும், பதின் பருவ பிரச்சனைகளை தாண்டி பிரமாதமாய் வெளிவந்துவிடுவார்கள் நம் இளைஞர்கள்.

குமுதம் இதழிலிருந்து வெட்டி ஒட்டியது.........

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை நொச்சி...டீன் ஏஜ் பெண்களிட‌ம் அப்பா அன்பாகவும் அம்மா கண்டிப்பாகவும் நட‌க்க வேண்டும் ஆனால் டீன் ஏஜ் ஆண்களிட‌ம் அப்பா கண்டிப்பாகவும் அம்மா அன்பாகவும் நட‌க்க வேண்டும் என்பது என் கருத்தாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.