Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேதாளத்திற்கு சொன்ன கதை - யோ.கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேதாளத்திற்கு சொன்ன கதை - யோ.கர்ணன்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளம், மீண்டும் அந்த விசாரணைக் குறிப்பைப் புரட்டியபடியிருந்தது. அந்த அறிக்கையிலிருக்கும் ஏதாவது ஒரு சொல் அல்லது வசனம் தனக்குரிய துப்பைத் தருமென்றோ அல்லது அவனது பொய்யை அம்பலப்படுத்துமென்றோ அது நினைத்திருக்க வேண்டும். விக்கிரமாதித்தன் என்ற அவனது பெயரை ஆங்கிலம், சிங்களம், தமிழ் என தனக்குத் தெரிந்த மொழிகளில் எழுத்துக்கூட்டி வாசித்து உறுதி செய்துகொண்டது. விக்கிரமாதித்தன் என்ற பெயரில் எந்தக் குழப்பமும் இல்லை. போதாததற்கு அவனது வாயாலும் பெயரை உச்சரிக்க வைத்தது. பிறகு பிறந்த ஆண்டு, மாதம், திகதி, விலாசம் எதிலும் பிசகில்லை.

தனது வலது கையில் தூக்கி வந்த அந்த பெரிய விசாரணை அறிக்கைக்குள்ளிருந்து அந்தச் சின்னப்பொடியன் சுழியோடி வெளியேறிவிடுவதை வேதாளம் விரும்பியிருக்க மாட்டாது, தனது நீண்டகால அனுபவத்தையும் சாமர்த்தியத்தையும் காட்ட வேண்டுமென அது நினைத்திருக்கக்கூடும். மர்மமும் விசமமும் கலந்த புன்னகையுடன் அவனது சுய விபரங்கள் சரியென ஒத்துக்கொண்டது. பின்பு, அதன்கீழ் நீண்டிருந்த அவனது வாக்குமூலத்தை இன்னொருமுறை வாசிக்க ஆரம்பித்தது. வாசித்து முடிந்ததும், கதிரையில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டு அவனது கதையைக் கூறச் சொன்னது. அந்தக் கதையில் இருந்து அவனிடம் இரண்டு கேள்விகள் கேட்குமெனவும் அதற்கு பிழையான பதில் சொன்னால் வெலிக்கடைச் சிறைக்கோ, நான்காம் மாடிக்கோ கொண்டு செல்லப்படுவானெனவும், பதில் எதுவும் சொல்லாமலிருந்தால் அவனது தலை சுக்குநூறாக உடைந்துபோகுமெனவும் கூறியது. பலத்த யோசனையின் பின் அவன் சம்மதித்தான். இப்படியாக விக்கிரமாதித்தன் தனது கதையை வேதாளத்திற்கு சொல்ல ஆரம்பித்த வரலாறு அமைந்திருந்தது.

வம்சச் சுருக்கம்:-

மதுரை வீரன் மகன் இராசு

இராசு மகன் நாகப்பன்

நாகப்பன் மகன் சுயம்புலிங்கம்

சுயம்புலிங்கம் மகன் தோமையப்பன்

தோமையப்பன் மகன் மார்க் அந்தோனி

மார்க் அந்தோனி மகன் கந்தையா

கந்தையா மகன் பரஞ்சோதி

பரஞ்சோதி மகன் விக்கிரமாதித்தன்

வாழ்க்கைச்சுருக்கம்:-

ஆண் பரஞ்சோதிக்கும் பெண் மரகதமணிக்கும் பிறந்த மூன்றாவது குழந்தை. குடும்பத்தையும் படிப்பையும் பாதியில் விட்டுவிட்டு ஓடிப் போனவன். குறிப்பிடும்படி வேறெதுவுமில்லை.

விசாரணைச்சுருக்கம்:-

1996-12-31 இல் இயக்கத்தில் இணைந்துள்ளான். கெனடி பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சி பெற்றுள்ளான். நிர்வாகப் பிரிவுகளில் மாத்திரம் பணிபுரிந்தாக கூறுகிறான் . பின் 2000-01-01 இல் விலகி, வன்னியில் பெட்டிக்கடை வைத்திருந்ததாகவும் கூறுகிறான். இதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவே. அப்படி வைத்திருந்தாலும் அது சர்வதேச தீவிரவாதிகளிற்கான வெடிகுண்டுப் பெட்டிக் கடையாகவே இருக்க வாய்ப்புண்டு.

குற்றச்சுருக்கம்:-

இயக்கத்தில் இணைந்து, விலகியதாக கூறப்பட்டவை பொய்யானவை. தவிரவும் போரின் இறுதிநாட்களில் ஆயுதங்களையும் பணத்தையும் நகைகளையும் இரகசியமாக புதைத்து வைத்துள்ளான். இது குறித்து விசாரணையின் போது எதுவும் குறிப்பிடவில்லை.

மாத்தளனில ஆமியிட்ட சரணடைஞ்ச அன்று தொடங்கி இன்று நடப்பது நாற்பத்தோராவது விசாரணை. அன்பாக கதைக்கிறவன், அடிச்சு கதைக்கிறவன், வெருட்டி கதைக்கிறவன், ஏனோதானோவென்று கதைக்கிறவன் என இதுவரை ஏராளம் விசாரணைக்காரர்களை கண்டுவிட்டேன். ஆனாலும், விசாரணை என்றதும் இப்பவும் உடம்பு நடுங்கத் தொடங்குது. முதலாவது விசாரணையில இருந்து போன கிழமை நடந்த விசாரணை மட்டும் எல்லாம் நினைவிலயிருக்குது. MI, CID, TID, NIB விமானப்படை புலனாய்வு, கடற்படை புலனாய்வு என எட்டோ பத்தோ விசாரணைச் செக்சன் இருக்குது. மாறி மாறி வந்து விசாரிப்பினம். ஆட்கள் மாறினாலும் எல்லாரும் கேக்கிற ஒரே கேள்வி, எப்ப இயக்கத்துக்கு சேர்ந்தது, எத்தனை மாதம் ரெயினிங் எடுத்தது, என்னென்ன துவக்குகள் யூஸ் பண்ணினது, பிரபாகரனை எத்தனைத் தரம் கண்டது என்றது மாதிரியான கேள்வியளைத்தான். கொஞ்சம் நல்ல மூட்ல வந்து ரொமான்ஸ் கேள்வியள் கேட்கிற ஆட்கள் சிலரும் இருக்கத்தான் செய்யினம்.

இதில கனபேருக்குத் தெரியாத ரிக்ஸ் ஒன்று இருக்குது. நானும் முந்தி இயக்கத்தின்ர புலனாய்வு செக்சனில இருந்ததால எனக்குத் தெரியும். விசாரிக்கிறவனிட்ட உண்மையைச் சொல்லுறனோ பொய் சொல்லுறனோ என்றது முக்கியமல்ல. சொல்லுறதை எப்பவுமே ஒரே மாதிரி சொல்லுறதுதான் முக்கியம். இப்ப பாருங்கோ, இந்தியன் ஆமி இஞ்ச வந்த நேரம் இயக்கத்துக்குப் போன ஒராளை விசாரிக்கினம் என்று வையுங்கோ. அந்தாள் கற்பூரச்சட்டியில அடிச்சு சத்தியம் செய்யாதக் குறையாக சொல்லுது, ஐயோ நான் 2008-12-31இல தான் சேர்ந்தனான் என்று. இந்த திகதி இருக்குதல்லோ. அதுதான் முக்கியம். விசாரிக்கிற எல்லாரிட்டயும் மாறாமல் சொல்ல வேணும். மோட்டுச் சிங்களவன் மசிரைப் பிடிச்சான்.

இயக்கத்தில இருந்த காலத்தை முன்னாலயும் பின்னாலயும் வெட்டி நானும் இப்பிடியானதொரு பம்மாத்து விபரம் வைச்சிருக்கிறன். கேட்டால்ச் சிரிப்பியள். அதால வேண்டாம்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா என்ற பாரதியாரின் பாப்பாப் பாட்டை சின்ன வகுப்பில இராகம் இழுத்து பாடி பாடமாக்கினாங்கள். பாட்டு பாடமானதுக்கு முக்கியக் காரணம் நல்லதம்பி வாத்தியாரின்ர அடி. பாரதியாருக்காக இல்லாட்டிலும் வாத்தியாரின்ர அடிக்காகவே முந்தினக் காலத்தில பொய் சொல்லாமல் இருந்திருக்கிறன். ஆனால் இப்ப வாழ்க்கைப் பிரச்சனை. பாரதியாரையும் நல்லதம்பி வாத்தி யாரையும் ஒதுக்கிவைக்க வேண்டியதாகப் போயிற்று. இதிலயும் இன் னொரு பிரச்சனை. எனக்கு அவ்வளவாக பொய் சொல்லவராது. நான் பொய் சொன்னால் கண்டுபிடிச்சிடுவியள். இதனால், பொய் சொல்லு றதுக்காக பல மணித்தியாலங்கள் ஒத்திகைப் பார்ப்பன். எங்கட காம்பில ஆரும் விசாரணைக்கு வரப்போயினமென்றால், முதல் நாள் பின்னேரமே விசயத்தைச் சொல்லுவினம். இப்பிடி இப்பிடி இன்ன இன்ன விசயங்கள் நடக்கும். அதனால் ஒருத்தரும் சத்தம் போடாமல் இருக்க வேணுமென்று. அறிவித்தல் கிடைச்சதில இருந்து நான் மனசுக்குள்ள ஒத்திகை பார்க்கத் தொடங்கிவிடுவான். அன்றிரவு நித்திரையும் வராது. நல்லவிசயங்களுக்காக பொய் சொல்லலாம்.

ஏழெட்டு மணித்தியால ஒத்திகையோட விசாரணைக்கு போவன். இதொரு அப்பாவி, ஏதோ தெரியாத்தனமாக அங்க மாட்டுப்பட்டு இருந்திட்டுது என்று அவையள் நினைக்கத்தக்க அக்சனுகள் போட்டுக்கொண்டு, விசாரிக்கிறவனின்ர முகத்தை பார்த்துக் கொண்டிருப்பன். தங்கட முகத்தைப் பார்த்துக் கதைக்கிறவன் எப்பவும் உண்மைதான் சொல்லுவானென்றது விசாரணைக்காரனின்ர நினைப்பு. இப்பிடி போக்குக்காட்டிக் கொண்டிருந்த என்னை மாட்ட வைச்சது ஒரு பொம்பிளைப்பிள்ளை. முப்பத்தொன்பது பேருக்கு அல்வா குடுத்தவனை சிம்பிளாகப் பிடிச்சாள். பொம்பிளையால அழிஞ்ச ஆம்பிளையளில ஓராளாக நானும் மாறினன்.

போன கிழமையும் ஒரு விசாரணை செக்சன் வந்திருந்தது. அதில ஆம்பிளை பொம்பிளை என்று கலந்து கட்டி வந்து நிக்கினம். எப்ப வுமே விசாரணைக்கு வாற பொம்பிளைகள் ஒரு மார்க்கமான உடுப் போடுதான் வருவினம். இந்தப் பிள்ளையும் அதிலதான் வந்தது. இவள் ஆள் பார்க்கிறதுக்கு இந்தியாவில நடிக்கிற பிள்ளை தமன்னா மாதிரி ஒரு கலர். ஊரில இந்தக் கலரை அவிச்ச இறால் கலர் என்டுவினம். தலைமயிரும் நல்ல சுருள்முடி. முழங்காலுக்கு மேல ஒரு கட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு வந்து ஒரு கதிரையில இருந்தா. என்னைக் கூப்பிட்டு தனக்கு முன்னால் மூன்றடி தள்ளி நிலத்தில இருத்தினா. எங்கட தமிழ்ப்பண்பாடென்ன பாரம்பரியமென்ன? இவ என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறா. ஆளைப்பார்த்த உடனே வந்த நல்ல அபிப்பிராயம் இல்லாமல் போயிற்றுது. சரி அவ என்ன பரிசு கெட்ட வேலை செய்தாலும் நான் நிதானமாக இருக்க வேணுமென மனசுக்குள்ள நினைச்சுக்கொண்டு அவவின்ர முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன். பார்வையை மேல கீழ இறக்கவேயில்லை. நேரம் போகப்போக விசாரணை சூடு பிடிக்குது. அவவுக்கும் கோபம் கூடிக்கொண்டு போகுது. காலை ஓங்குறா, கையை ஓங்குறா, சில கெட்ட வசனங்கள் பாவிக்கிறா. ஒரு கட்டத்தில, தமிழ்ச்செல்வன் எப்ப செத்தவரென்று கேட்டா. எனக்கு உண்மையாகவே திகதி தெரியாது. அவருக்கு கிபிர் அடிக்கேக்க, கொஞ்சத்தூரம் தள்ளியிருக்கிற பாண்டியன் சுவையூற்றில தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருந்த னான் என்றது மட்டும்தான் நினைவு. உங்கட பெரியவர் செத்த திகதி தெரியாதோ. பொய் சொல்லுறாய் என்று துள்ளி விழுந்தா. பிறகு, பக்கத்தில இருக்கிற மற்ற விசாரணைக்காரர் தன்னை கவனிக்கிறார்களோ என சுற்றிவரப்பார்த்துவிட்டு தன்ர காலை விரிச்சு “இதுக்குள்ள பார்த்துக் கொண்டிரடா...” என்றா. எனக்கென்றால் தலைவிறைச்சுது. ஒன்றுமே செய்ய இயலாத கட்டத்தில எங்கட தமிழ்ப் பண்பாட்டை காற்றில பறக்க விட்டிட்டு பார்த்தன். உண்மையிலயே நான் நிலை குலைஞ்சுப் போனன். அந்த ரைமில அவ நிறையக் கேள்வியள் கேட்டா. நான் ஏதோ தடுமாறிக் கதைச்சிருக்க வேணும். அவ ஒரு பொயின்றைப் பிடிச்சிட்டா. நான் சொன்ன பொய் ஒன்று பிடிபட்டது. இந்த இடத்திலதான் தீர்க்கதரிசனம் மிக்க ராஜதந்திர நடவடிக்கை ஒன்று எடுத்தன். நான் பொய்சொல்லவில்லை என வாதிட முயன்றால், சொன்னது முழுக்க பொய்யென அவையள் நினைக்கத் தொடங்குவினம். அது பெரிய பிரச்சனையில கொண்டு போய்விடும். அவ பிடிச்ச விசயம் மட்டும்தான் பொய் என்று ஒப்புக்கொண்டால் மற்றவைகளிலிருந்து தப்பிவிடலாம்தானே. அந்த ஒரு விசயத்தை ஒப்புக்கொண்டேன். தமன்னாவுக்கு பெரிய சந்தோசம். பக்கத்தில நின்ற வேப்பமரத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க விட்டா.

பிறகு அவவுன்ர மேலதிகாரியோட வந்தா. மேலதிகாரி என்னை விசாரிச்சான். இந்த ஸ்பொட்டிலதான் எனக்கும் கோபனுக்குமான தொடர்பு வெளிச்சத்துக்கு வருது. கோபனைத் தெரியுமா என சாதாரணமாகத்தான் கேட்டான். கோபன் என்னுடைய நெருங்கிய கூட்டாளி. ஆனந்தபுரச் சண்டையில செத்துப் போனான். செத்தவனை தெரியு மென்பதால் என்ன பிரச்சனை வரப்போகுது? எப்பிடி தெரியும், எவ்வளவு காலமாகத் தெரியும் என்றெல்லாம் துருவித்துருவி விசாரிச்சான். நான் சொன்னன். கோபன் ஏதும் ஆயுதம் புதைச்சு வைச்சவனோ என்று கேட்டான். நான் வலு அப்பாவியாக மறுத்தன். மேலதிகாரி சிரிச்சான். அந்தச் சிரிப்பை எப்பிடி வகைப்படுத்துறதென்றே தெரியவில்லை. தமன்னாதான் சொன்னா, கோபன் சாகயில்லை என்றும் ஆனந்தபுர சண்டையில தாங்கள் உயிரோட பிடிச்சு இப்ப தங்கட சிறையில இருக்கிறானென்றும். எனக்கு திரும்பவும் தலைவிறைச்சுது. என்னைப் பற்றி தெரிஞ்ச ஒருத்தனோட கதைச்சு என்ர பொய்களை அம்பலப்படுத்தப் போகிறார்கள். அந்த ஸ்பொட்டிலயே அந்தோனியாரை நோக்கி கடும்தவம் இருக்கத் தொடங்கினன்.

செத்துவிட்டான் என நினைத்திருந்த ஒருவனின் வடிவத்தில் எனக்கு புதுப்பிரச்சனை வந்தது. கோபன் என்னென்ன சொன்னான் என்பது எனக்குத் தெரியாது. இந்த விடயங்கள் குறித்து மேலதிக விசாரணை செய்ய இவனை மேலதிகாரி அனுப்பியுள்ளான். இவனிடம் மறைக்காமல் உள்ளதை சொல்வதென தீர்மானித்தேன்.

கோபனை எனக்கு பதினைஞ்சு வருசமாகத் தெரியும். இரண்டு பேரும் ஒரே றெயினிங் காம்பிலதான் றெயினிங் எடுத்தனாங்கள். நான், கோபன், சஞ்சய், சேரன், குணா, இராகவேந்திரன், மருது இந்த ஏழு பேரும் ஒரே செக்சன். ஒன்றாகவே திரிஞ்சம். ஒன்றாகவே படுத்தெழும்பினம். றெயினிங் முடிய நேராக போனது முல்லைத்தீவு அடிபாட்டுக்கு. ஏழுபேரும் வரிசையில படுத்திருந்து சுட்டம். அதில சேரன் செத்துப் போனான்.

பிற்காலங்களில் எல்லோரும் ஆளுக்கொரு திசையாக பிரிந்து விட்டாலும், நானும் கோபனும் நல்ல இறுக்கம். இரண்டு பேரும் வேற வேற பிரிவென்றாலும் அடிக்கடி சந்திப்பம். இரண்டு பேரின்ர குடும்பங் களும் நல்லமாதிரி.

கோபன் லவ்பண்ணிய பெட்டையையும் நான்தான் கேட்டுச் சொன்னனான். பிரதியுபகாரமாக எனக்கொரு பெட்டையை தேடித் திரிஞ்சான். எனக்குத்தான் அந்தக் குடுப்பினை இல்லையே.

கிளிநொச்சி இடம்பெயரத் தொடங்கினதுக்குப் பிறகு கொஞ்சநாள் ஆளைக் காணக்கிடைக்கவில்லை. நாட்டுப் பிரச்சனை இறுகியிருந்த தால நானும் தேடிப்பார்க்கயில்லை. ஒருநாள் முள்ளிவாய்க்கால் கடற்கரையில இரண்டு பேரும் சந்திச்சம். நிலமை இறுகினதுக்குப் பிறகு, எல்லாப் பிரிவுகளிலயும் நிர்வாக வேலை செய்து கொண்டிருந் தவையையும் சண்டைக்காக எடுத்து அந்த இடத்தில ஒன்று சேர்த் தவை. அதிலதான் ஆளைக் காணுறன். அப்பதான் இயக்கம் ஆனந்தபுரத்தில ஒரு box அடிக்க வெளிக்கிடுது. இந்த box இல அவனுக்கும் ஒரு பகுதிப் பொறுப்பு குடுத்திருந்தினம். இந்த box ஐ சிங்களவன் அசைக்க ஏலாதென்றான். கேட்க எனக்கும் சந்தோசமாக இருந்தது.

அந்த நேரம் இயக்கம் இன்னொரு வேலையையும் மும்முரமாக செய் தது. ஆயுதங்கள், காசு, எண்ணெய் என பலவகையான ஐயிற்றங்களை நிலத்துக்குள்ள புதைக்கத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு பிரிவுக்காரரும் ஊர் முழுக்க புதைக்கத் தொடங்கிச்சினம். எங்கட பிரிவும் புதைச்சது தான். எனக்கொரு வேலையும் வரயில்லை. நான் என்ர இயக்கப்படங்களை மட்டும் வலைஞர்மடம் சேர்ச்சுக்குப் பின்னாலயிருக்கிற அந்தோனியார் சுருவத்துக்குப் பக்கத்தில புதைச்சன்.

இரண்டு நாள் கழிச்சு, ஒரு மத்தியானம் கோபன் வந்து நிக்கிறான் தன்னோட முள்ளியவாய்க்கால் மட்டும் வரச்சொல்லி. ஏதோ அவசர வேலையென்றான். சரியென்று போனன். வழியிலதான் சொன்னான். கொஞ்ச ஆயுதங்களும் காசும் புதைக்க வேணுமென்று. தனது பொறுப்பில் ஏழு AKயும் கொஞ்ச ரவுண்சும், 20 குண்டும், தொன்னூற்றியெட்டு இலட்சக்காசும், ஏழு சங்கிலியும் இருக்கு தென்றான்.

முள்ளிவாய்க்காலில கடற்புலியளின்ர படகுகள் நின்ற ஆலமரத்துக்கு பக்கத்திலதான் புதைக்க வேணும். துவக்குகள் பாரம்தானே. விருந்தாளியான நான் காசைத்தூக்க அவன் துவக்குகளைத் தூக்கினான். அந்தநேரம் ஆமிக்காரன் செல்லடிக்க தொடங்கினான். கோபன் ஆலமரத்தோட படுத்திட்டான். அதில கடற்புலியளின்ர படகு நிற்கிறதால செல் அங்கயும் வருமென்று நினைச்சு ஓடினன். கொஞ்சத் தூரம் போக ஒரு பனங்கூடல் வந்திது. அதுக்குள்ள விழுந்து படுத்திட்டன். செல்லடி கொஞ்சம் குறைய, பனங்கூடலுக்குள்ள நின்ற வேப்பமரத்தை அடையாளமாக வைச்சு, அதில காசைப் புதைச்சன்.

திரும்பி ஆலமரத்தடிக்கு போக கோபன் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறான். விசயத்தைச் சொன்னன். அவனுக்கு கோபம் வந்திட்டுது. முதல் துவக்கை புதைப்பம். பிறகு, காசு புதைச்ச இடத்தை காட்டுகிறேன் என அவனை சமாதானப்படுத்தி துவக்கை புதைக்க திரும்பவும் செல்லடி தொடங்கியது. எங்களைச் சுத்தியும் விழுது. அவசர அவசரமாக புதைத்துவிட்டு, அந்த இடத்திலிருந்து ஓடிவந்து விட்டோம். அடுத்தநாள் வந்து காசு புதைத்த இடத்தை பார்ப்பதென முடிவு செய்திருந்தோம்.

அன்றிரவு வோக்கியில் என்னைக் கூப்பிட்டான். காசு பத்திரமெனவும், இயக்கநிதி தொலைந்தால் தனக்குப்பிரச்சனையெனவும், அவசரமாக ஆனந்தபுரம் போவதாகவும்.திரும்பி வந்து காசை எடுப்போமெனவும் சொன்னான். பிறகு, அடுத்த கிழமை புலிகளின் குரல் வீரச்சாவுப்பட்டியலில் லெப்.கேணல் கோபன் என அறிவித்தார்கள். எனக்கு சரியான கவலை. அவனின்ர வீட்டுக்குப்போனன். சின்னத் தரப்பாளுக்குள்ள பெரிய குடும்பம் இருக்குது. தங்கச்சிதான் பாவம். நிலத்தில புரண்டு புரண்டு அழுகிறாள்.எனக்கும் அழுகை வந்திட்டுது.

இது நடந்து இரண்டாம் நாள் மாத்தளனுக்குள்ள ஆமி உள்ளட்டிட் டான். நானும் அதுக்குள்ள அகப்பட்டுவிட்டன். ஒன்றும் செய்ய ஏலாது. தகட்டையும் குப்பியையும் கழற்றி மணலுக்குள்ள புதைச்சுப்போட்டு, போற சனத்தோட சனமாக ஆமியிட்ட வந்தன். நீரேரி கடந்து வர, இரணைப்பாலை வெட்டையில எல்லாச் சனத்தையும் இருத்தினான். கொஞ்சக்கொஞ்ச ஆட்களாக உள்ள கூப்பிட்டு செக்பண்ணி, விசாரிச்சு வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தனர். தனியாகப் போக பயமாக இருக்குது. தனியாகப் போனால் கட்டாயம் இயக்க மென்று பிடிப்பான். அப்பதான் கவனிச்சன். இப்பிடி தனியாக வாற ஆட்கள் அந்த வெட்டையில நின்று சோடி கட்டுகினம். யார், என்ன, எப்பிடி என்ற ஒரு விபரமும் இல்லாமல் அகப்படுற ஆட்களோட சோடி கட்டிக்கொண்டு வருகினம். நான் ஒரு நிமிசம் யோசிச்சன். சாதிமதம், நல்லவளா கெட்டவளா,கலியாணம் செய்தவளா புருசனை விட்டவளா என்ற ஒரு விபரமும் தெரியாமல் ஒருத்தியோட சோடிகட்டி, நாளைக்கு இந்த ரிலேசன் நீடிச்சு லவ்கிவ்வாகி கலியாணம் மட்டும் போனால் வீட்டில என்ன சொல்லுவினம். கலியாணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்றெல்லாம் யோசிச்சுப்போட்டு, தனியாகவே வந்தன். கொஞ்சத்தூரம் வந்ததுக்குப்பிறகுதான் கவனிச்சன், என்னை மாதிரியே ஒரு உத்தமப்புத்திரியும் வாறாள். ஆர் பெட்டை யென்று பார்த்தால் அது எங்கட கோபனின்ற தங்கச்சி. அவளும் என்னை அடையாளம் பிடிச்ச ஓடிவந்தாள். நேற்றுத்தான் தான் இயக்கத்துக்குப் போனதென்றும் இன்று சண்டை முடிந்து விட்டதென்றும் கவலைப்பட்டாள். இயக்கத்துக்குப் போனதால வீட்டுக்காரரை தவறவிட்டிருந்தாள். இரண்டு பேரும் ஆமிப்பொயின்ற் கடக்க மட்டும் புருசன் பெண்சாதி மாதிரியே போவதென்றும், வவுனியா போய் குடும்பங்களை தேடிக்கண்டு பிடிப்பதெனவும் முடிவுசெய்தோம். அவளும் பார்க்கிறதுக்கு வெள்ளையாக, முகவெட்டான பெட்டையாக இருந்தாள். ஆமிப்பொயின்ற் கடக்கமட்டுமில்லை அதுக்குப் பிறகு கூட ஒரு ரிலேசனை வைச்சிருக்கலாம் என்றொரு ஐடியாவும் எனக்குள்ள ஓடாமலில்லை. அவள் நன்றாக பயந்து போயிருந்தாள். அவளின்ர கையை இறுக்கிப் பிடிச்சன். இன்னும் இறுக்கமாக அவள் என்ர கையைப் பிடிச்சாள்.

அந்த ரென்சனான நேரத்திலயும் ஒரு மெல்லிய கிளுகிளுப்பு எனக்குள்ள பரவிச்சுது. பக்கத்தில வந்த பொம்பிளை ஒராளோட கதைச்சு அவவிட்டயிருந்து குங்குமம் வாங்கி வைச்சாள். அவளின், நெற்றியில பாதியிடத்தில குங்குமமிருந்தது.

சோதனை செய்யிற இடத்தில இரண்டு பொயின்ற் இருக்குது. ஒன்று ஆம்பிளையளுக்கு, மற்றது பொம்பிளையளுக்கு. சுற்றிவர மூடிக் கட்டியிருக்குது. உள்ளுக்கு நடக்கிறது வெளியில தெரியாது. இரண்டு பேரும் பிரிந்து சோதனைக்குப் போனம். மண்மூட்டை அடுக்கி அதுக்குப் பின்னால ஆமிக்காரன் நிக்கிறான். சேட்டை கழற்ற சொன்னான். கழற்றினன். உடுப்புப் பையை அவிழ்த்து கொட்டச் சொன்னான். அள்ளி அடுக்கச் சொன்னான். பிறகு, ஜீன்சை கழற்றச் சொன்னான். கழற்றினன். ஜட்டியையும் கழற்றச் சொன்னான். நான் ஒரு நிமிசம் யோசிச்சன். ஏதோ சிங்களத்தில கத்தினான். சரி, முன்னப்பின்ன தெரியாத சிங்களவன்தானே. போனால் போகுதென கண்ணைமூடிக்கொண்டு கழற்றினன்.

வெளியில வர, சோதனை முடிச்சு நிக்கிறாள். அவளின்ர முகம் கறுத்துப் போயிருந்தது. என்ர காதுக்குள்ள “என்ன மனுசங்கள் இவங்கள்... உங்களுக்கு எப்பிடி செக்கிங்” என்றாள். எதுவும் நடவாதது மாதிரி பிரச்சனையில்லை என்றேன்

“ச்சா... எங்களுக்கு முழு உடுப்பையும் கழட்டச் சொன்னவங்கள்” என்றாள்.

இளம் ஆட்களை விசாரணையிடத்தில மறிச்சு விசாரிக்கினம். ஒருத்தன் என்னைக் கேட்டான் - “இயக்கமோ” என்று. நான் மறுத்தன். “தங்கச்சியைப் பாக்க இப்பதான் சோடிசேர்ந்த மாதிரியிருக்கு” என்று சொல்லி அவளைப் பார்த்து ஒரு நளினச்சிரிப்பு சிரித்தான். புருசன்காரன் ஸ்தானத்தில பக்கத்தில நானொருத்தன் நிற்க இவன் என்ன கதை கதைக்கிறான். வேற இடத்தில இது நடந்திருக்க வேணும். மச்சானின்ர மூஞ்சை பெயர்ந்திருக்கும். நான் ஒரு பவ்வியத்தை வரவழைச்சுக் கொண்டு சொன்னன் -

“ஐயோ சேர்... கலியாணம் செய்து ஒரு வருசம்”

“வவா இல்லையா” என்றான். இதென்ன கண்றாவி. ஒரு மார்க்கமான கேள்வியள் கேட்கிறானே என யோசித்துக் கொண்டு சொன்னன் -

“பிரச்சனைதானே சேர்... அதால ரை பண்ணயில்லை. இனி வவாதான்”

அவனுக்கு வலுபுழுக்கம். எங்களை உள்ளுக்கு அனுப்பினான். அவள்தான் என்னோட ஏறி விழுந்தாள். வவா கதை கதைச்சதுக்கு. ஆபத்துக்குப் பாவமில்லை என்ற தமிழ்ப் பழமொழியை அவளுக்குப் புரிய வைச்சன்.

ஆமிப் பொயின்ற் கடந்தாச்சுது. இனி அவள் ஆரோ நான் ஆரோ. ஆனாலும் ஒரு பொம்பிளைப் பிள்ளையை இப்பிடி நடுவழியில தனியாக விடஏலுமோ. எங்கட தமிழ்க் கலாச்சாரமென்ன. அதுவும் கூட்டாளியின்ர தங்கச்சி. அவன் வேற உயிரோட இல்லை. பலதையும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தன். இந்தப் பயணத்தின் கடைசிக் கட்டம் மட்டும் அவளை பிரிவதில்லை என. வவுனியாவுக்கு பஸ்சேற இரணைப்பாலைச் சந்தியில ஒன்றரை நாள் காத்திருந்தம். அதில சாப்பாடு தண்ணி ஒன்றுமில்லை. அதில நின்ற ஒரு இலட்சம் சனத்துக்கும் நத்தார்ப் பாப்பா இனிப்பு குடுக்கிற மாதிரி இடைக்கிடை ஆமிக்காரர் கொஞ்ச பிஸ்கற் பைக்கற்றுக்கள் எறிவினம். ஸ்பைடர் மான், சூப்பர்மான் மாதிரியான ஆக்களாலதான் அந்தக் கூட்டத்துக் குள்ள அதை எடுக்க இயலும். நான் ஒரு பிஸ்கற்றை கூட கண்ணால காணயில்லை. அவள் பசியில கிடந்து அணுங்குகிறாள்.

இதுக்குள் கொஞ்சச் சனம் பக்கத்துத் தென்னங்காணிகளிற்குள் புகுந்து தேங்காய் பிடுங்கி வந்து விற்றார்கள். தேங்காய்க்கு மட்டுமில்லை. தென்னைமரத்துக்கும் சேர்த்து விலை சொன்னார்கள். ஐநூறு ரூபா குடுத்து மூன்று தேங்காய் வாங்கினேன். இரண்டு அவளுக்கு. ஒன்று எனக்கு.

பிறகு பஸ்சேறினம். பக்கத்துப் பக்கத்து இருக்கை. பலவிசயங்களையும் கதைச்சுக் கொண்டு போனம். இயக்கம் ஏன் தோல்வியடைஞ்சது. என்னென்ன மூவ்மென்றுகளை செய்திருக்க வேணும், ஆர்ஆரை கொமாண்ட் பண்ண விட்டிருக்க வேணும் என்றது மாதிரியான இராணுவ விசயங்கள் முதல், பான்கீமூன் ஏன் எங்களுக்கு உதவ முடியாமல் போனது என்று சர்வதேச அரசியல் வரை அலசி ஆராய்ந்தோம். அவளும் சும்மா ஆள் இல்லை. ஒருநாள் இயக்கத்தில் இருந்திருந்தாலும் பலவிசயங்களை தெரிந்து வைத்திருக்கிறாள். அப்பதான் அவள் ஒரு விசயம் சொன்னாள். அதாவது தன்ர தமயன்காரன் கொஞ்சநாள் முதல்வீட்டுக்கு போயிருக்கிறன். காசையும் ஆயுதத்தையும் புதைக்க ஒரு இடம் தேடியிருக்கிறான். மகன் காசு வைத்திருப்பதையறிந்த தாய் குடும்பக் கஸ்ரத்தை காரணம் காட்டி கொஞ்சப் பணம் கேட்டிருக்கிறாள். இயக்கநிதியில கைவைக்கமாட்டன் என அவன் அங்கிருந்து புறப்பட்டு விட்டானாம். பிறகு நடந்ததெதுவும் தெரியாதெனவும் சொன்னாள். நான் ஒன்றும் சொல்லவில்லை.

பிறகு, ஓமந்தைச் செக் பொயின்றுக்குவர, இயக்கத்தில ஒருநாள் இருந்தாலும் வாங்கோ, ஒரு பிரச்சனையுமில்லை. பதிஞ்சிட்டு விடுவம். நீங்கள் எல்லாம் சின்ன ஆட்கள்தானே .பெரியதலை கருணா அம்மான் வரவே மன்னிச்சு விட்டனாங்கள்தானே. நீங்கள் வராமலிருந்து நாங்கள் பிடிச்சால் இருபது வருசம் ஜெயில் என ஸ்பீக்கர்கட்டி அறிவிச்சினம். அறிவிக்கிறவனும் பலகுரல் மன்னர்போல , குரல் மாற்றியபடியேயிருந்தான். பதிந்துவிட்டு வருவம் என, பதியப் போனேன். அங்க போகத்தான் தெரியும், அவையள் இறால்ப்போட்டு சுறாபிடிச்சிருக்கிறமென்றது.

எல்லாரையும் ஏத்திக்கொண்டு வந்து இந்த முகாமில இறக்கி விட்டி யள் சேர்... இவ்வளவு தான் என்ர ஸ்ரோரி. கோபன் செத்துவிட்டான் எனத்தான் நினைத்திருந்தேன். அவன் சாகவில்லை. அந்த மட்டில் சந்தோசம். அவனும் இல்லைத்தானே ஏன் சோலியை என்றுதான் புதைச்ச விசயங்களை சொல்லவில்லை. ஏதும் பிழையென்றால் மன்னித்துவிடுங்கள்.

விசாரிக்கிறவன் சிரிச்சான். கோபன் துவக்கு விடயத்தை மட்டுமே சொன்னதாகவும், காசு விடயத்தை இப்போதுதான் அறிகிறேன் என் றார். மேலதிகாரிகளினால் இந்த கேசை விசாரிக்க தான் நியமிக்கப் பட்டிருப்பதாகவும் தான் குடுக்கும் அறிக்கையைத்தான் மேலிடம் நம்புமெனவும் சொன்னான். அவன் இதை ஏன் சொல்லுகிறான் என்பது புரியவில்லை. வெருட்டுறதுக்கு சொல்லுகிறானோ, பயப்பிடாதே என ஆறுதல்படுத்த சொல்லுகிறானோ என்பதும் விளங்கவில்லை.

எனது விசாரணைக் கோப்பைப் புரட்டிப்புரட்டிப் பார்த்தான். பின்பு சிரித்தான். பயப்படாமல் என்னையும் சிரிக்கச் சொன்னான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். எனக்கும் ஒன்றை நீட்டினான். நான் மறுத்து விட்டேன். பிறகு கேட்டான்

“கலியாணம் கட்டினாச்சுதோ?...”

“இல்லை...”

“லவ் ஏதும்...”

“இல்லை...”

“அப்ப கோபனின்ர தங்கச்சி...”

“அது தங்கச்சி மாதிரி...”

“ஒன்றும் நடக்கயில்லையோ?...”

“இல்லை...”

“பயப்பிடாதையும்... அங்க பிரச்சனை நேரம் நிறைய மாட்டியிருக்குங்களே. ஒரே என்யோய் தானே?”

“இல்லை சேர்... அங்க அப்பிடியில்லை?”

“சும்மா சொல்லும் ஐ சே...”

“................”

“சரி அப்ப இயக்கத்தில”

“இல்லை சேர்... அங்க வலு கட்டுப்பாடு...”

எனக்கு ஒன்றும் விளங்கயில்லை. காசு விசயத்தை கதைக்காமல் இருந்திருக்கலாம் என்ற யோசனை ஒரு பக்கம், இவன் என்ன மாறி மாறி மார்க்கமான கேள்வியள் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்ற யோசனை ஒரு பக்கம். இப்பிடித்தான் அந்தப் பிள்ளை தமன்னாவும் மாட்ட வைச்சது. நான் வலு எச்சரிக்கையாக இருக்க வேணும். ஆனால் இவனின்ர நடவடிக்கையைப் பார்க்க, மாட்ட வைக்கிற ஆள் மாதிரித் தெரியேலை, என்னோட நெருங்கி வர முயற்சி செய்யிற மாதிரியிருக்கது. என்ன நடக்கப்போகுதென்று ஒன்றுமே விளங்கயில்லை. அந்தோனியாரோ...

விக்கிரமாதித்தனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் கோபத்தை வேதாளமும் புரிந்துகொள்ளட்டுமே என, முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான். வேதாளம் சிரித்தது. இந்த சீரழிஞ்ச கேள்விகளை விட்டுவிட்டு, ஒப்பந்தப்படி கேட்கவுள்ள அந்த இரண்டு கேள்விகளையும் கேட்குமாறு சொன்னான். வேதாளம் தீவிரமாக யோசித்துவிட்டுச் சொன்னது - ஒப்பந்தப்படி இரண்டு கேள்விகள் கேட்கவில்லை எனவும் ஒரேயொரு கேள்வியை மாத்திரமே கேட்கவுள்ளதாகவும், இதுவரை கேட்டதெல்லாம் முன்னாயத்தை கேள்விகளென்றும். வேதாளம் விசாரணைக்குறிப்பை மூடி வைத்தது. விக்கிரமாதித்தன் ஒரு நிரபராதி என எழுதியது. அவன்மீது சுமத்தப்பட்ட இராஜதுரோகக் குற்றம் இதனால் மறைந்து போனது. வேதாளம் தன் மூக்குக் கண்ணாடியை கழற்றி மேசையில் வைத்துவிட்டு பெருமூச்சு விட்டது. பின்னர், மெதுவாக கேள்வியைக் கேட்டது.

“அந்தப் புதையல் இருக்குமிடத்தை எனக்கு இரகசியமாக அடையாளம் காட்ட உன்னால் முடியுமா? புதையலை இருவரும் பாதி பாதியாக பகிந்து கொள்ளலாம். சம்மதமா?

விக்கிரமாதித்தன் கண்களையும் வாயையும் இறுக மூடிக்கொண்டு காத்திருக்க ஆரம்பித்தான். தலை சுக்குநூறாக வெடித்து இறந்து போகும் கணத்துக்காக.

http://www.pudhuvisai.com/2011/05/blog-post_8405.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ஆனால் சிலதுகள் ஏற்க முடியாமல் உள்ளது...ஒரு பெண் விசாரனை அதிகாரி கீழே திறந்து காட்டியதும் ஒரு போராளி தடுமாறுவது என்பதும்,நண்பனின் கல்யாணமான தங்கையின் கையைப் பிடித்தவுடன் கிக் ஏறுவது என்பதும் நம்ப முடியவில்லை...ஒரு வேளை கதாசிரியர் போராளிகளும் சாதரண மனிதர்கள் என்ட கோணத்தில் சிந்தித்திருக்கலாம் ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ஆனால் சிலதுகள் ஏற்க முடியாமல் உள்ளது...ஒரு பெண் விசாரனை அதிகாரி கீழே திறந்து காட்டியதும் ஒரு போராளி தடுமாறுவது என்பதும்,நண்பனின் கல்யாணமான தங்கையின் கையைப் பிடித்தவுடன் கிக் ஏறுவது என்பதும் நம்ப முடியவில்லை...ஒரு வேளை கதாசிரியர் போராளிகளும் சாதரண மனிதர்கள் என்ட கோணத்தில் சிந்தித்திருக்கலாம் ^_^

எழுதினவர் கடைசி மட்டும் முள்ளிவாய்க்காலில் இருந்தவராம். :unsure: என்றாலும் சிலது இடைச்செருகல்கள் மாதிரித்தான் இருக்கு.

நல்ல கதை ஆனால் சிலதுகள் ஏற்க முடியாமல் உள்ளது...ஒரு பெண் விசாரனை அதிகாரி கீழே திறந்து காட்டியதும் ஒரு போராளி தடுமாறுவது என்பதும்,நண்பனின் கல்யாணமான தங்கையின் கையைப் பிடித்தவுடன் கிக் ஏறுவது என்பதும் நம்ப முடியவில்லை...ஒரு வேளை கதாசிரியர் போராளிகளும் சாதரண மனிதர்கள் என்ட கோணத்தில் சிந்தித்திருக்கலாம் ^_^

பெண் மேல் அதிகாரி திறந்து காட்டினார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைவருமோ தெரியவில்லை ....

இறுதி கேள்வியை பார்க்க பாலவின் படத்தின் முடிவு போல் இருக்கு,.

எடுத்துக் கொடுத்ததும் இவரை போட்டு தள்ள மாட்டார் என்று என்ன நிச்சையம்?

அது சரி காசைக் காட்டி கொடுப்பாரா இல்லை தலைவரும் பொட்டு அம்மாணும் சுசை அண்னையும் வந்து எடுக்கும் வரை காட்டிக் கொடுக்காமல் இருப்பாரா?

அது சரி காசைக் காட்டி கொடுப்பாரா இல்லை தலைவரும் பொட்டு அம்மாணும் சுசை அண்னையும் வந்து எடுக்கும் வரை காட்டிக் கொடுக்காமல் இருப்பாரா?

:(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யோ.கர்ணனின் சிறுகதைத்தொகுதி பற்றி கருணாகரன் எழுதிய பதிவு இது.

யோ. கர்ணனின் “தேவதைகளின் தீட்டுத்துணி” வன்முறைகளுக்கெதிரான எழுத்தும் இயக்கமும் - கருணாகரன்

ஒரு நூலுக்கான முன்னுரையை எழுதியவரே அந்த நூலுக்கான மதிப்புரையையும் அல்லது விமர்சனத்தையும் எழுத வேண்டிய அவசியத்திலிருப்பதென்பது ஒரு கொடுமையான சூழலே. யோ. கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற சிறுகதை நூல் வெளியாகி ஏறக்குறைய பத்து மாதங்களாகின்றன. ஆனால், இந்தப் பத்து மாதங்களில் இந்தப் புத்தகத்துக்கு வந்த விமர்சனங்கள் மிகமிகக் குறைவே. ‘புதுவிசை’யில் தேவா என்பவர் ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறார். ‘ஆனந்த விகடன்’ கடந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக இந்தக் கதைத் தொகுதியைத் தேர்வு செய்திருக்கிறது. அவ்வளவுதான். மற்றும்படி இந்த நூல் பொதுத்தளத்தில் வைத்து விவாதிக்கப்படவில்லை. அவ்வாறு விவாதிப்பதற்குத் தமிழ்ச் சூழல் விரும்பவும் இல்லை. அதற்குத் தயாராகவும் இல்லை. (ஏறக்குறைய த. அகிலனின் ‘மரணத்தின் வாசனை’யும் இப்படித்தான் மௌமாக்கப்பட்டுள்ளது).

ஆனால், இன்றைய தமிழ்ச் சூழலில் யோ. கர்ணனின் இந்தப் புத்தகம் முக்கியமான ஒன்று. எழுத்திலும் அது கூறுகின்ற சேதிகளிலும் அது செய்கின்ற காலப் பதிவிலும் அது கொண்டிருக்கிற அனுபவத்தளத்திலும் அதன் மெய்யிலும் இந்தப் புத்தகம் தன்னுடைய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

குறிப்பாக ‘முள்ளிவாய்க்கால்’ என இன்று பெரும்பாலான தமிழர்களால், அரசியலுக்காக எடுத்தாளப்படுகின்ற நிலப்பகுதியையும் ‘முள்ளிவாய்க்கால்’ என்று அடையாளப்படுத்தப்படக் காரணமான காலப்பகுதியையும் அங்கே நடந்த அரசியல் நிகழ்ச்சிகளையும் அவற்றின் விளைவுகளையும் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ பேசுகிறது. யோ. கர்ணன் அந்த நிலப்பகுதியில், அந்தக் காலப்பகுதியில், அங்கே நடந்த அந்த அரசியல் நிகழ்ச்சிகளின் போது, அவற்றின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர். என்றவகையில் தன்னுடைய அனுபவங்களைத் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’யில் பதிவு செய்துள்ளார்.

இன்னும் சற்று அழுத்தமாகச் சொன்னால், ஈழப்போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மெய் விவரிப்பு ஆவணமாக ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ அமைந்துள்ளது. போருக்குப் பின்னர் வெளியாகிய ஈழத்தின் இறுதிப் போர் பற்றிய முதற்புத்தகமாகவும் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’யே உள்ளது.

ஆனால், இந்த முக்கியமான புத்தகத்தைத் தமிழ்ச் சூழல் மிகச் சாதுரியமாகக் காணாதிருக்கிறது. அல்லது கண்டும் காணாததைப் போல இருக்கிறது. இது தமிழ்ச் சூழலின் பொது இயல்பு மட்டுமல்ல, அதனுடைய ‘கள்ளக்குணம்’ என்றே சொல்ல வேணும்.

ஏனெனில், இது போன்ற ‘கள்ளக் குண’த்தைத் தமிழ்ச் சூழல் தன்னுடைய சிறப்பியல்பாக அரசியலிலும் இலக்கியத்திலும் வாழ்விலும் கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணங்கள் ஏராளமுண்டு.

ஒரு உதாரணம் - ஈழத்து இலக்கியத்திலும் புலம் பெயர் இலக்கியத்திலும் இன்று மறுக்க முடியாதவை ஷோபாசக்தியின் எழுத்துகள். இன்றைய தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான ஆளுமை ஷோபாசக்தி. என்றபோதும் அதிகமான ஈழத்தமிழர்களால் - குறிப்பாக இலங்கையிலுள்ள தமிழர்களால் ஷோபாசக்தியின் எழுத்துகள் படிக்கப்படவில்லை. இதற்குப் பிரதானமான காரணம், இலங்கையின் பொதுவான – பிரபலமான ஊடகங்கள் ஷோபாசக்தியின் எழுத்துகளைப் பிரசுரிக்கவில்லை. அல்லது பிரசுரிக்கத் தவறுகின்றன@ முக்கியமாக அவற்றைப் பிரசுரிக்க அவை விரும்பவில்லை. ஆகவே பொதுவாக அவை அவற்றை மறைக்க முற்படுகின்றன. இது தனியே ஷோபாசக்திக்கு மட்டும் நேர்ந்த அநீதியல்ல. அல்லது இந்தப் போக்கினால் ஷோபாசக்தி மட்டும் பாதிக்கப்பட்டவரல்ல. ஏனைய படைப்பாளிகளான சக்கரவர்த்தி, திருமாவளவன், கற்சுறா, த. அகிலன், சுகன், நட்சத்திரன் செவ்விந்தியன், பிரதீபா, தான்யா உள்ளிட்ட பலருக்கும் ‘எக்ஸில்’, ‘உயிர்நிழல்’, ‘சரிநிகர்’, ‘தினமுரசு’ போன்ற இதழ்களுக்கும் பத்திரிகைகளுக்கும் நேர்ந்த கதி இதுவாகும். ஒரு காலம் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களுக்கும் இந்தக் கதிதான் நேர்ந்தது.

ஆகவே இந்தக் ‘கள்ளக் குண’த்தினால் பல ஆளுமைகளும் அவர்களுடைய முக்கியமான வெளிப்பாடுகளும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

நாம் இப்போது ஷோபாசத்திக்கு நேர்ந்ததை இங்கே அவசியம் கருதிப் பார்ப்போம். ஷோபாசக்தியின் எழுத்துகளை இலங்கையின் பொதுவான அரங்குகளிலும் விமர்சன முன்வைப்புகளிலும் பெரும்பாலானவர்கள் பேசுவதில்லை. ஈழத்தின் எந்த முக்கியமான விமர்சகரும் ஷோபாசக்தியையும் அவருடைய எழுத்துகளையும் மையமாக வைத்தோ முழுமைப்படுத்தியோ விமர்சனங்களை மேற்கொள்ளவுமில்லை. இதையிட்டெல்லாம் இவர்கள் வெட்கப்படவோ வருந்தவோ இல்லை. (ஏன், திருமாவளவன், வாசுதேவன், சக்கரவர்த்தி போன்றோருடைய எழுத்துகளுக்கும் குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் எழுதப்படவில்லை. கடந்த ஆண்டு வெளியாகிய ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண்களின் கவிதைகள் அடங்கிய தொகுதி முக்கியமான ஒரு நூல். ஆனால், அதையும் நமது தமிழ்ச் சமூகம் இன்னும் அறியவேயில்லை).

மட்டுமல்ல, இலங்கையிலிருந்து வந்த அல்லது வந்து கொண்டிருக்கின்ற எந்தப் பத்திரிகையோ இலக்கிய இதழ்களோ ஷோபாசக்தியை அறிமுகப்படுத்தவும் இல்லை. அவருடைய எழுத்துகளைப் பற்றி முறையாக விவாதிக்கவும் இல்லை.

அப்படிப் பேசி, அவருடைய எழுத்துகளை அறிமுகமாக்கியிருந்தால் இன்று பெரும்பாலான வாசகர்கள் ஷோபாசக்தியை அறிந்திருப்பர். அவர் முன்வைத்த அரசியலைப்பற்றியும் அதன் உண்மைத் தன்மையைப் பற்றியும் தெரிந்திருப்பர். ‘மாற்று’ வகை இலக்கியம் குறித்த விரிவான பரிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து ஒரு விவாதச் சூழல் - சிந்தனைச் சூழல் உருவாகியிருக்கும். ஜனநாயகச் சூழல் என்பதும் அறிவியல் நேர்மை என்பதும் அப்படித்தான் இருக்கும். ஆனால், இதெல்லாம் நடக்கவில்லை. இந்த நிலைமையில்தான் ‘நூறாவது இதழ்’ என்ற பெருமிதங்களும் ‘இருபத்தைந்தாவது மலர்’, ‘நாற்பதாவது ஆண்டு மலர்’ என்ற பூரிப்புகளும் நமது அரங்கில் நடந்தேறுகின்றன.

இத்தனைக்கும் ஷோபாசக்தி எழுதத்தொடங்கி இப்போது இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரையில் அவருடைய எட்டுப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்கள் மீள் பதிப்புச் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. என்றபோதும் அவர் இன்னும் ஈழத்தமிழ்ச் சூழலில் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆனால், ஷோபாசக்தி இரகசிய அரங்கில் அதிகமானவர்களால் வாசிக்கப்படுகிறார். இந்த வாசிப்பு திருட்டுத்தனமானது. அதாவது இரகசியமாக வாசிக்கப்படும் வாசிப்பு. இதன் அர்த்தம் அவர், கள்ளத்தனமாக உள்ளுக்குள்ளே ரசிக்கப்படுகிறார் என்பதே. (‘இது கள்ளப் பெண்டாட்டி உறவுக்கு ஒப்பானது’ என இதை ஒரு நண்பர் கூறுகிறார். கள்ளப்பெண்டாட்டியின் சுகத்தை ருஸிக்கின்றவர்கள் அவளுடைய உறவைப் பகிரங்கமாகப் பொது இடங்களில் காட்டிக் கொள்வதில்லை. இந்தப் போக்கை தமிழ் அரசியலிலும் காணலாம். முன்னர் தொடக்கம் இன்றுவரை லாபங்களுக்காக அதிகாரத் தரப்பை இரகசியமாக அணுகுகின்ற பலர் பின்னர் அந்த உறவைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்வதில்லை).

எனக்குத் தெரிந்த அளவில் ஷோபாசக்தியின் எழுத்துகளை தீவிர வெறியோடும் விருப்பத்தோடும் பலர் தேடுகிறார்கள். தங்களுடைய புத்தக அடுக்குகளில் ஷோபாசக்தியின் புத்தகங்களுக்கு நிரந்தரமான – விசேட இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஷோபாசக்தியின் புதிய புத்தகம் வெளிவந்து விட்டது என்று அறிந்தால் அந்தப் புத்தகத்தை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்று இவர்கள் பறந்தடிக்கிறார்கள். (சக்கரவர்த்தியின் எழுத்துகளுக்கும் இப்படியொரு ‘கிராக்கி’ இருக்கிறது).

விடுதலைப் புலிகளை ஷோபாசக்தி அதிகமதிகம் விமர்சித்திருந்தாலும் அவர்களில் அநேகர் - குறிப்பாக முக்கியமான தலைவர்கள் - ஷோபசக்தியின் எழுத்துகளை முதலில் படிக்கிறவர்களாகவும் அவற்றைத் தேடிக் கொண்டிருப்பவர்களாகவுமே இருந்தார்கள். சில சமயம் புத்தகத்தை அவர்கள் அது அச்சிடப்படும் இடத்திலிருந்து வெளி வந்தவுடனேயே – சந்தைக்குப் போவதற்கு முன்னரே - எப்படியோ எடுத்து விடுகிறார்கள். ஒரு நண்பர் சொன்னார், ‘சிலவேளை அந்தப் புத்தகம் ஷோபாசக்திக்குக் கிடைக்க முன், இங்கே (ஈழத்தில்) புலிகளுக்குக் கிடைத்து விடுகிறது’ என்று. (இந்த மாதிரி ஒரு ஈர்ப்போடும் எதிர்பார்ப்போடும் முன்னர் தினமுரசுவும் சரிநிகரும் இருந்தன என்பதையும் இங்கே நிச்சயம் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பத்திரிகைகளை அப்போது வன்னியில் புலிகளே அதிகமாக வாசித்தார்கள். இவை அன்று பொதுமக்களுக்குக் கிடைக்காத வகையில் தடை விதிக்கப்பட்டிருந்தன).

இதற்குக் காரணம், உண்மையை அறியும் ஆவல். அதிலும் தங்களால் பேச முடியாத உண்மையை இன்னொருவர் பேசும்போது அதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல். உண்மையில் இது கொடுமையானது@ குரூரமானது. எந்தக் காரணத்தினாலும் ஒருவர் உண்மையைப் பேச முடியாத நிலை இருப்பதென்பது கொடுமையானதே. இது அனுதாபத்திற்கும் கருணைக்கும் உரியது. அதேவேளை அந்த உண்மையை இன்னொருவர் பேசும்போது, அத்துடன் உண்மையைப் பேசமுடியாத நிலையைப் பற்றிய விமர்சனங்களைத் துணிச்சலோடு வைக்கும்போது அதை ரசிக்கின்ற மனம், அந்த உண்மையைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவும் அந்த உண்மையை உரைப்பவரை அங்கீகரிக்கவும் தயாராக இருப்பதில்லை. இதுதான் குரூரமானது. அநீதியானது. கோபத்தை ஏற்படுத்துவது.

ஆனால், எப்படியோ இந்த இடத்தில் ஒரு போர் வீரனைப் போலவும் ஒரு தீரமிக்க சாகஸக்காரனைப் போலவும் ஷோபாசக்தி இவர்களால் உணரப்படுகிறார். என்பதால், எல்லாவகையான புறக்கணிப்புகளுக்கும் அப்பால், எல்லாவகையான அச்சுறுத்தல் மற்றும் அபாய நெருக்கடிகளுக்கும் அப்பால் துணிச்சலோடு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியாக ஷோபாசக்தி இருக்கிறார் என்ற வியப்பு காந்த விசையாக இவர்களை ஈர்த்துக் கொள்கிறது. எல்லோரும் இப்படிப் புரிந்து கொள்ளாவிடினும் துணிச்சலோடு உண்மைகளுக்கு நெருக்கமாகவும் மாற்றபிப்பிராயமாகவும் ஷோபா எழுதிக் கொண்டிருப்பதை இவர்களால் புறக்கணிக்க முடியவில்லை.

எனினும், இந்தச் சந்தர்ப்பத்திற் கூட இவர்கள் அந்தப் படைப்பாளியை, அவருடைய துணிச்சலை, அறத்தின் மீதும் வரலாற்றின் மீதும் நம்பிக்கை வைத்து இயங்கி வரும் எழுத்தியக்கத்தைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாகயிருக்கிறார்கள்.

இந்த மனத்தடைதான் அதிகமான ஈழத்தமிழர்களின் பிரச்சினையே. இந்தப் பிரச்சினையிலிருந்தே அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள்@ எல்லாவற்றையும் அணுகுகிறார்கள். அரசியலை, இலக்கியத்தை, வரலாற்றை, தங்களின் நண்பர்களை, எதிரிகளை எனச் சகலரையும். ஏன், தங்களையே அவர்கள் இப்படித்தான் பார்க்கிறார்கள்.

இதெல்லாம் ஒருவகையான உளவியற் பிரச்சினை. பொதுவாகவே பல்வேறு உளவியல் நெருக்கடிகளால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றித் தாங்களே போட்டிருக்கும் தடைகளும் மாயச் சுவர்களும் அவர்களைப் பலவிதமாகக் கூறு போட்டிருக்கின்றன. பல வகையான அகமுரண்களால் அவர்கள் பின்னப்பட்டிருக்கிறார்கள். என்பதாலேயே இந்த மாதிரியான குழறுபடிகளும் தவறுகளும் நேர்கின்றன. இந்த அகமுரண்களின் பின்னலில் சிக்கியிருப்பதால் இவர்களால் ஒரு வெளிப் பிரதேசத்துக்கு இலகுவில் பயணிக்க முடியாதுள்ளது.

அதிகமான தமிழர்கள் எப்போதும் ‘கள்ளக் குணத்தைக் கொண்டவர்கள்’ என்று முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். மனமறிந்த உண்மையை, ‘பளிச்’செனத் தெரிகின்ற உண்மையை, தம்முடைய அறிவுக்கும் மனச்சாட்சிக்கும் தெரிந்த நியாயத்தையே அவர்கள் அங்கீகரிப்பற்குத் தயங்குவதில் ஒரு போதுமே வெட்கப்படுவதில்லை. அதாவது சூரியனைக் கைகளால் மறைப்பதையிட்டு இவர்கள் வெட்கமடைவதில்லை.

‘சூரியனைக் கைகளால் மறைக்க முடியாது’ என்று தெரிந்தும் கைகளை விரித்துச் சூரியனை மறைக்க முற்படுவோரைக் குறித்து என்ன சொல்ல முடியும்? அவ்வாறு செயற்படும் போக்கை ஆதரிப்பதையிட்டும் என்ன கூறமுடியும்? இது ஒரு வகையான மனவியாதியன்றி வேறென்ன? இங்கே கொடுமை என்னவென்றால், அப்படிக் கைகளால் சூரியனை மறைக்க முற்படுவோரையே தமிழ்ச் சூழலில் பெரும்பான்மையானோர் கொண்டாடுகின்றனர். அவர்களே அரசியல் தலைவர்களாகவும் சிறந்த ஆய்வாளர்களாகவும் பிரதான ஊடகவியலாளர்களாகவும் அரசியல் விமர்சகர்களாகவும் இலக்கிய விற்பன்னர்களாகவும் தமிழின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களாகவும் தீர்க்கதரிசிகளாகவும் காட்டப்படுகிறார்கள். அல்லது அவர்கள் தம்மை அப்படிக் காட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கே தமிழ்ச் சமூகத்தில் மிகப் பெரிய அங்கீகாரமும் கிடைக்கிறது.

எனவே இத்தகையதொரு பின்னணியில்தான் யோ. கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’யையும் தமிழ்ச் சூழல் இலகுவாகப் புறக்கணித்திருக்கிறது@ கவனிக்காததைப் போல விடப்பட்டிருக்கிறது எனலாம். அல்லது அது ரகசியமாக உள்ளுக்குள்ளே வைத்து ரசிக்கிறது. எல்லாவற்றுக்கும் அப்பால், தான் அறிய விரும்புவதைத் தேடிக் கொண்டிருக்கிறது@ உண்மைகளைக் கண்டறியும் விருப்பத்துக்குத் தீனியாக அதை வைத்துக்கொள்கிறது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளமுடியும். என்னதான் உண்மைகள் கசப்பானதாக இருந்தாலும் அதை அறிய வேணும் என்ற உள் விருப்பத்தைத் தணிக்கவே முடியாது. இதனால்தான் உண்மைகளை மறைப்போர் அதிகமாகத் தாம் மறைக்க விரும்புகின்ற உண்மைகளை அதிகமாக விரும்புகின்றனர். இவர்களே உண்மையின் அதீத விருப்பாளர்களாகவும் இருக்கின்றனர்.

ஆனால், உண்மையில், இவ்வாறு ‘வெளிப்படுத்தப்படும் உண்மைகளிலிருந்தே நாம் நமது படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்ற எளிய விளக்கத்தைக் கூட இவர்களுடைய மனம் ஏற்றுக் கொள்வதில்லை. பொய்களாலும் புனைவுகளாலும் எல்லையற்று அலைக்கழிக்கப்படுவதையிட்ட வருத்தமும் இவர்களிடம் இல்லை. இந்த இடத்தில் ஒரு கேள்வியை இவர்கள் கேட்க முடியும். ‘ஷோபாசக்தியோ, யோ. கர்ணனோ அல்லது இவர்களைப் போன்றோரோ நிச்சயமாக உண்மைகளைச் சொல்கிறார்களா?’ என்று. இந்த எழுத்துகள் எல்லாம் உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பதை அறிவதற்கு முதலில் இவற்றைப் பொது வெளியில் வைப்பதற்கும் அந்த வெளியில் வைத்து விவாதிப்பதற்கும் எல்லோரும் தயாராக வேணும். அப்படிப் பொதுவெளியில் வைத்து விவாதிக்கும்போது, நிச்சயமாக இவற்றின் உண்மை நிலை என்னவென்று தெரியும். ஆனால், அதற்குத்தான் யாரும் தயாராக இல்லையே! காரணம், தாங்கள் நம்புகின்ற ‘ஏதோ சிலவற்றுக்காக’ அதற்கு அப்பாலான எந்த விசயத்தையும் அங்கீகரிப்பதற்கு இவர்கள் தயாராகவில்லை. அத்துடன், இவர்கள் தாங்கள் அடையாளப்படுத்த விரும்புகின்ற தரப்புக்குப் பாதிப்பு வந்து விடக்கூடாது எனவும் எதிர்பார்க்கின்றனர்.

இது ஒரு பக்கம். மறு பக்கத்தில், இந்த எழுத்தாளர்களின் இயங்கு தளம் இலக்கியம் என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை. ஆகவே, அந்தத் தளத்தில் நின்று கொண்டு, இந்த எழுத்தாளர்கள் தங்கள் சூழலின் நிகழ்ச்சிகளை – அந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் விளைவுகளை, அந்த விளைவுகளின் நன்மை தீமைகளை எழுதுகிறார்கள். ஒரு சாட்சியாகத் தங்களின் பதிவுகளை இவர்கள் செய்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேணும். ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்தச் சாட்சியத்தையே தமிழ்ச் சூழல் விரும்பவில்லை. தமிழ்ச்சூழலுக்கு எப்பொழுதும் சாட்சிகள் - சாட்சியங்கள் விருப்பத்துக்குரிய ஒன்றாக இருப்பதில்லை என்று ஒரு நண்பர் அடிக்கடி சொல்வதை இங்கே குறிப்பிடலாம். சாட்சியங்களில்லாத வரலாற்றையே தமிழர்கள் விரும்புகிறார்கள். பதிலாக சார்பான வாதங்களையே தமிழ்ச் சூழல் விரும்புகிறது. சாட்சிகளில்லாத வரலாறு என்பது அதிகமதிகம் மாந்திரீகத்தன்மை நிரம்பியதாகவே இருக்கும். இன்னொரு வகையில் அது குரூங்கள் நிறைந்ததாக இருக்கும். அதில், அதிகாரம் குவிந்திருக்கும்.

இந்த இடத்தில் நான் மேலும் ஒரு விசயத்தைக் குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.

ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’, ‘விஷ்ணுபுரம்’, ‘மாடன்மோட்சம்’, ‘பத்மவியூகம்’ போன்றவை ஈழத்தின் சமகால அரசியல் சமூக நிகழ்ச்சிகளை அப்படியே பிரதிபலிப்பதாகவே நான் உணர்கிறேன். இலக்கியத்தின் சிறப்பியல்பே இதுதானே. அது காலம், இடம் என்பவற்றுக்கு அப்பால், எங்கும் எப்போழுதும் பொருந்தக் கூடிய ஆன்மாவைக் கொண்டிருக்கிறது என்பது.

ஜெயமோகன் நேரடியாக, ஈழ அரசியலை, அதற்குரிய சம்பவங்களோடும் இடத்தோடும் காலத்தோடும் இவற்றில் பதிவாக்கவில்லை. மட்டுமல்ல, ஈழ அரசியலை மையப்படுத்தி அவர் இந்தக் கதைகளை எழுதவுமில்லை. ஆனால், ஈழ நிகழ்ச்சிகள் அவருக்கு இந்தக் கதைகளை எழுதக்கூடிய உந்துதலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர், அதற்கான தடங்களை வேறு சூழலில் கட்டமைக்கிறார். ஆகவே அவருடைய கதைகள் வேறு காலங்களிலும் வேறு சூழலிலும் கட்டமைக்கப்படுகின்றன.

ஷோபாசக்தியோ யோ. கர்ணனோ, த. அகிலனோ, சக்கரவர்த்தியோ, நட்சத்திரன் செவ்விந்தியனோ அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நேரடியாகவே ஈழத்தின் சமகால நிகழ்ச்சிகளிலும் அதன் அரசியலிலும் தளமிடுகிறார்கள். சமகால மனிதர்களை மையப்படுத்துகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் இந்தச் சமகால நிகழ்ச்சிகளில் பலரும் பங்காளர்களாகவும் ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் என்ற வகையிலும் இருப்பதால் இவர்களுடைய எழுத்தின்மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டிய ஒரு நிலை இந்தச் சமகால மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் உண்மையில் நடக்கிறது.

இங்கே பிரச்சினை என்னவென்றால், உண்மைகளை அறிவதற்கு அப்பால், இலக்கியத்தை வாசிப்பதற்கு அப்பால், ‘கட்சி அரசியல்’ மனோபாவத்துடன் மட்டும் எழுத்துகள் அணுகப்படுகின்றன. கட்சி மனோபாவத்தில் ‘சார்பு – எதிர்ப்பு’ என்ற இரண்டு நிலைப்பாடுகளே இருக்க முடியும். இதற்கு இன்னொரு வலுவான காரணமாக நாம் சொல்லக் கூடியது, கடந்த பல ஆண்டுகால ஈழத்தமிழரின் அரசியல் மற்றும் வரலாற்று நோக்கு என்பது, ‘கறுப்பு – வெள்ளை’ என்ற அடிப்படையில், தட்டையாகப் பார்க்கப்படுவதேயாகும். இதற்கப்பால் ஒரு பொதுப் பார்வையை – பன்முகப்பார்வையை – ஜனநாயக அடிப்படையிலான அணுகுமுறையைத் தமிழ்ச்சூழல் அதிகம் கொள்ளவில்லை. இதனால் கலை, இலக்கியத்தின் அடிப்படைகளே கோணலாக்கப்படுகின்றன. (வாழ்வே கோணலாக்கப்படும் போது கலை, இலக்கியத்தைப் பற்றி என்ன சொல்வது?)

ஆகவே, இதெல்லாம் ஒரு வகையான வன்முறை நடவடிக்கைகளே. இந்த வன்முறையானது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்குவதால் மட்டும் நிகழ்வதில்லை. திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாலும் இருட்டடிப்புச் செய்யப்படுவதாலும் கூட நிகழ்கின்றன. உலகத்தில் அதி உச்சமான வன்முறை என்பது உண்மையை மறைப்பதாகவே இருக்கிறது. உண்மையை மறைப்பதிலிருந்தே அனைத்துத் தவறுகளும் அனைத்துக் கொடுமைகளும் நிகழத் தொடங்குகின்றன.

பலரும் புலிகளையும் அவர்களுடைய காலத்தையுமே வன்முறைக்கான அடையாளங்களாகக் காணுகின்றனர். இது தவறானதாகும். வன்முறையில் புலிகளுக்கும் ஒரு முக்கிய பங்கிருந்தாலும் பொதுவாகவே தமிழர்களிடத்தில் காணப்படும் ‘எதையும் ஆராயமல் எதிர்த்தல், புறக்கணித்தல், வசை பாடுதல், உண்மையை மறைத்தல்’ போன்ற அம்சங்கள் புலிகளையும் கடந்தவை. அவை தமிழ்ச் சமூகத்தில் மிக ஆழமாகவும் பரந்த அளவிலும் வேரோடிப் படர்ந்திருப்பவை. ஆதிக்கம் பெற்ற ‘மேற்சமூகம்’ தனக்கு உவப்பில்லாத விசயங்களை இந்த மாதிரிப் புறக்கணித்து இருட்டடிப்புச் செய்து, இந்த வன்முறையை நிகழ்த்தி வருகிறது. இந்த மேற்சமூகத்திற்கும் அதனுடைய உளவியலுக்கும் ஏனைய தரப்பினரும் தங்களையறியாமலே அடிமைப்பட்டு வருகின்றனர்.

யோ. கர்ணனின் இந்தக் கதைகளும் இப்போது ‘கறுப்பு - வெள்ளை’ அரசியலாளர்களின் பிடிக்குள் சிக்கியிருக்கின்றன. அதனால், இந்த அரசியலில் அவை முன்னிறுத்தி விவாதிக்கப்படவில்லை. ஏனென்றால், இந்தக் கதைகள் விவாதிக்கப்பட்டால், அல்லது விமர்சன அரங்கிற்கு எடுக்கப்பட்டால், இந்தக் கதைகளின் மையவாளர்களாகவும் பிரதான தரப்பினராகவும் இருக்கும் சனங்கள் சாட்சியமாகிடுவர். சனங்கள் சாட்சிகளாகும்போது உண்மைகள் நிரூபணமாகும். வலுப்பெறும். இதை இன்று ஆதிக்கம் செலுத்துகின்ற ‘மேல்நிலையாளர்கள்’ விரும்பவில்லை.

என்றபடியால்தான், கர்ணனின் கதைகள் ரகசியமாக்கப்பட்டிருக்கின்றன. பேசாது விடப்படுகின்றன. உண்மைகள் புதைகுழிக்குள் தள்ளப்படுகின்றன. ஆகவே மீண்டும் சொல்கிறேன், இந்த உலகத்தில் உண்மைக்கு எதிரான காரியங்களே மிகப் பெரிய வன்முறையாகும்.

கர்ணன் புலிகளின் இறுதி நாட்களையும் அதன் பின்னரான காலத்தையும் தன்னுடைய கதைகளில் மையப்படுத்தியிருக்கிறார். இந்தக் காலத்தின் நிகழ்ச்சிகளில் அவர் ஒரு பங்கேற்பாளன், அனுபவிப்பாளன், சாட்சி என்ற வகையில் தன்னுடைய அனுபவங்களை மையப்படுத்தி எழுதிச் செல்லும்போது அவரால் உண்மைகளையும் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மெய்யையும் மறைக்க முடியவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. அவருக்கு வரலாற்றின் மீது நம்பிக்கையிருக்கிறது. சனங்களின் மீது மதிப்பிருக்கிறது. வரலாற்றின் மீது நம்பிக்கையிருக்கும் எவரும் வரலாற்றைத் திரிக்கவோ வரலாற்றுக்குப் பொய்யுரைக்கவோ விரும்பார். அவ்வாறே, சனங்களை மதிப்பவர்கள் ஒரு போதும் சனங்களுக்குப் பொய் சொல்ல முனைய மாட்டார்கள். சனங்களுக்குத் தெரிந்த உண்மைகளை, சனங்களே பட்டு அனுபவித்த வாழ்க்கையின் மெய்யைத் திரித்துச் சொல்லுவதற்கான துணிவையும் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாது. அப்படிச் சொல்ல முயலும்போது அது ஏதோ ஒரு வகையில் அதிகாரத்தையும் வன்முறையையும் கொண்டேயிருக்கிறது. உள்நோக்கங்களுடன், செயற்படுகிறது. சனங்களுக்கும் வரலாற்றுக்கம் எதிரானதாகிறது.

கர்ணன் வன்முறைக்கும் அதிகாரத்துக்கும் எதிரானவர் என்பதால், அவர் இதற்கு எதிராகவே இயங்குகிறார். அவர் சனங்களில் ஒருவர். வரலாற்றின் நிதானி.

00

‘தேவதைகளின் தீட்டுத்துணி’ சிறுகதை நூல் வெளிவந்த காலப்பகுதியை அண்மித்ததாகவே ஈழத்திலிருந்து உமா வரதராஜனின் ‘மூன்றம் சிலுவை’ நாவல் வெளிவந்துள்ளது. ஆனால், ‘மூன்றாம் சிலுவை’க்கு இதுவரையில் அதிகமான விமர்சனங்கள் வந்துள்ளன. நானும்கூட அந்த நூலுக்கான விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். ‘மூன்றாம் சிலுவை’க்கு விமர்சனத்தை எழுத முனைவோர் அல்லது அதற்கு விமர்சனங்களை முன்வைக்க விரும்புவோர் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’க்குத் தங்களுடைய விமர்சனங்களை எழுதத் தயாராயில்லை. த. அகிலனின் ‘மரணத்தின் வாசனை’யைப்பற்றிக் கூட இவர்கள் கதைக்க விரும்பவில்லை.

இதற்குக் காரணம், ‘மூன்றாம் சிலுவை’ மிகப் பிரச்சினைக்குரிய – அபாயகரமானதாகக் கருதப்படும் இலங்கையின் அரசியலைப் பேசவில்லை. அது பேசுகின்ற அரசியல் ஆண் - பெண் என்ற உறவில், பால்நிலையில் மையம் கொள்கிற அரசியல். ஆகவே அந்த அரசியலையும் அந்த உறவையும் பேசும் நாவலை விமர்சிப்பதில் இவர்களுக்குப் பெரிய தயக்கங்களில்லை. எனவேதான் ‘மூன்றாம் சிலுவை’க்கு தமிழ்நதி தொடக்கம் அ. முத்துலிங்கம் வரை பத்துக்கு மேற்பட்டோர் தங்கள் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.

ஆனால், ‘தேவதைகளின் தீட்டுத் துணி’ அப்படியல்ல. அது நேரடியாகவே அரசியலைப் பேசுகிறது. அதிலும் போரின் அரசியலையும் - போரின் போது மீறப்பட்ட அனைத்து மனித விழுமியங்களையும் பேசுகிறது. அறத்துக்கு எதிரான நிகழ்ச்சிகளைப் பேசுகிறது. சனங்களின் பாதிப்புகளைப் பேசுகிறது. பொதுவாக, ‘போருக்கென நடந்த நிகழ்ச்சி’களை மறைக்க முற்படுவோரின் விருப்பங்களுக்கு மாறாக கர்ணன் தன் கதைகளை எழுதியிருக்கிறார். இது கர்ணன்; திட்டமிட்டுச் செய்த காரியம் இல்லை. அவர் எழுதத் தொடங்கும்போதே இயல்பாக வந்து அந்த நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் குவிகின்றன. ஏனெனில் அவருடைய நினைவுப்பரப்பெங்கும் அந்த நிகழ்ச்சிகளின் - அந்தச் சனங்கள் பட்ட அவலங்களின்; பதிவுகளே உள்ளன. அவருடைய மூளையில் இந்தப் பதிவுகளே அதிகமாக உண்டு.

ஆகவே, அந்த யுத்த நாட்களில், போர் நடைபெற்ற சூழலில் சனங்களோடு நின்ற ஒருவர் அந்த நிகழ்ச்சிகளுக்கு மாறாக எழுதவோ இயங்கவோ முடியாது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேணும். ‘உண்மைக்கு மாறாக எழுது’ என்று எப்படி ஒருவரை நிர்ப்பந்திக்க முடியும்? ‘சனங்களுக்கு மாறாக, அவர்கள் பட்ட வேதனைகளுக்கும் துயரங்களுக்கும் மாறாக எழுது’ என்று எவர் கூற இயலும்? அல்லது ‘எதையும் பேசாது மௌமான இரு’ என எப்படிக் கட்டளையிடமுடியும்? சனங்களையும் உண்மைகளையும் விடப் பெரியது எது? வன்னியில் போர் நடந்தபோது அந்தச் சூழலில் அங்கே வாழ்ந்த கர்ணனைப் போன்ற பிற படைப்பாளிகளும் ஏறக்குறைய கர்ணனைப்போலவே தங்கள் எழுத்தையும் வெளிப்பாடுகளையும் கொண்டிருக்கின்றனர்.

எனவே, கர்ணனின் கதைகள் எந்தத் தளத்தில் இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் பெறுபேறுகளை நாம் மதிப்பிடலாம்.

00

போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பற்றிய கதைகள் வரலாற்றில் ஏராளமுண்டு. இதிகாசக்கதைகளில் பலவும் போருடன், மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகளுடன், மோதல்களுடன் உள்ளதை நாம் அறிவோம். ஆனால், இதிகாசக் கதைகளில் சனங்களின் பாடுகள் மையாகப் பேசப்படுவதில்லை. அங்கே போரிடும் தரப்புகளும் அவற்றின் தலைமைகளும் மையப்படுத்தப்பட்டுப் பேசப்படுகின்றன. அதாவது அங்கே அதிகாரத் தரப்புகளே மையமாகப் பேசப்படுகின்றன. அதிகாரத் தரப்புகளுக்கிடையிலான முரண்களும் மோதல்களுமே இங்கே ஆதாரம்.

ஆனால், தற்காலப் போரில் சனங்களே மையப்படுத்தப்படுகிறார்கள். இங்கும் அதிகாரத்தரப்புகளே போரில் ஈடுபட்டாலும் போரின் பாதிப்புகளைச் சுமக்கும் சனங்களே பெரும்பாலான சமகால இலக்கியங்களில் மையமாக்கப்படுகின்றனர். ‘இது சனங்களின் காலம்’ என்றபடியால் சனங்களின் பிரச்சினைகளும் துயரங்களும் மையப்படுத்தப்படுகின்றன.

எனவே இது ‘சனங்களின் காலம்’ என்றபடியால், சனங்களின் பிரச்சினைகளையும் துயரங்களையும் தன்னுடைய கதைகளில் மையமிடுகிறார் யோ. கர்ணன். அத்துடன் சனங்கள் தங்கள் அறிவிற்கும் விருப்பத்துக்கும் மாறாக நடத்தப்பட்டுப் பேரிழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்த நிலைமையை நேரிற் கண்டவர் என்ற வகையில் சனங்களுக்கு நேர்மையாகவும் அவர்களுக்குச் சார்பாகவும் இயங்குவது கர்ணனைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதது.

ஆனால், இந்தக் கதைகளை வாசிக்கும் பெரும்பாலான தமிழ் வாசகர்கள், சனங்களின் துயரங்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் விட அதிகாரத்தரப்புகளைப் பற்றியே அதிகமும் சிந்திக்கிறார்கள். அதிலும் தாம் விரும்புகின்ற அதிகாரத்தரப்புகளைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறார்கள். ஆகவேதான் கர்ணனுடைய கதைகளையிட்ட அக்கறைகள் இவர்களுக்கு வரவில்லை. கர்ணனுடைய கதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தால், நிச்சயமாக அதிகாரத்தரப்புகளான விடுதலைப் புலிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் நிச்சயமாகப் பேசியே தீரவேணும். அப்படிப் பேசும்போது, நிச்சயமாக இந்த இரண்டு தரப்பினாலும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும். அப்படிப் பேச இவர்களுடைய நாக்குக் கூசுகிறது. மனம் தயங்குகிறது. ஏனெனில் தமிழ்ச்சூழலில் பெரும்பாலானவர்கள், நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல ‘கட்சி மனோபாவ’த்துடன் இருப்பதால், தமது தரப்பைப் பற்றிய விமர்சனங்களை ஏற்கவேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் கர்ணன் கண்டு கொள்ளப்படாதிருக்கிறார். கர்ணனின் கதைகள் ‘கண்டும் காணாமல்’ விடப்படுகின்றன.

ஆகவே -

சனங்களின் காலத்தில் சனங்களின் கதைகளைப் புறந்தள்ளி விட்டு சனங்களுக்கு விரோதமாகச் சிந்திக்கும் மக்களையும் மனோபாவத்தையும் அதிகமாகக் கொண்ட ஒரு சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் மாறிவிட்டோம். இந்த இடத்தில், இன்று ஈழத் தமிழ்ச் சமூகம் அறிவிலும் அறத்திலும் கருணையிலும் வீழ்ச்சியடைந்த சமூகமாக மாறியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. அது அதிகமதிகம் வன்முறையிலும் அதிகாரத்திலும் ஈர்ப்பக் கொண்டுள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. எனவே இந்த நிலையில் கர்ணனின் கதைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதைப் பற்றி நாம் கவலைப்பட முடியாது.

ஆனால், கர்ணனின் கதைகள் இலங்கைச் சூழலில் நிலவும் பல கற்பிதங்களைத் தகர்க்கின்றன. அரசியற் பெறுபேறுகளை எட்டுவதற்காக முன்னேயிருந்த தடைகளை நீக்குவதற்காக ‘வெடிகுண்டும் தகர்ப்பு’மாக இருந்த ஒரு சமூகத்தில், அதீதமாக உருவாகியுள்ள புனைவுகள் மட்டும் தகர்ப்படாதிருக்கின்றன. அந்தப் புனைவுகளைக் கர்ணன் ஒரு சாட்சியாக நின்று உண்மைகளின் மூலம் தகர்க்கின்றார். கர்ணனின் ஆயுதம் உண்மை. நடந்த உண்மைகள்.

‘உண்மையை மறுத்தல்’ என்ற வன்முறையை ‘சாட்சி’ என்ற பாத்திரத்தை வகிப்பதன் மூலமாக இந்தத்தகர்ப்பை அவர் சாத்தியப்படுத்த முயற்சிக்கிறார். கர்ணனின் பாத்திரம் இங்கே சாட்சி என்ற நிலையிலேயே அமைகிறது. உண்மையில் சாட்சிகளே இன்றைய உலகத்தில் பலவான்கள். சத்தியம் அவர்களிடமே மிஞ்சிக்கிடக்கிறது.

கர்ணன் ஒரு கதைசொல்லி என்ற வகையில் தன்னுடைய சாட்சிப் பாத்திரத்தை அதனுடன் இணைத்துக் கொள்கிறார். விளைவாக நமக்கு, சாட்சியமான கதைகள் கிடைக்கின்றன. ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ அத்தகைதொரு கதைகளின் தொகுப்பு. இந்தச் சாட்சியம் தனியே ஒரு கர்ணனின் சாட்சியம் அல்ல. பல ஆயிரம் மக்களின் சாட்சியம். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியம். வரலாற்றை யாரும் திரிவு படுத்த முடியாத உண்மை நிகழ்ச்சிகளின் சாட்சியம்.

இந்தத் தொகுதியில் வடக்கு ஈழத்தின் இன்றைய சமகால இளந்தலைமுறையின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ‘இயக்கக்கட்டுப்பாட்டுப் பிரதேசம்’ என்று சொல்லப்படும் வன்னிப் பிரதேசத்தில், இயக்கமும் மக்களும் பயன்படுத்தும் சொற்களில் - மொழியில் - இந்தக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, இயக்கத்தின் நடவடிக்கைகளும் மக்களின் வாழ்க்கையும் போரும் போரின் விளைவுகளும் உள்ளமைகின்றன. இதுதான் இந்தக் கதைகளின் சாரம். இது ஒரு புதிய பண்பாட்டு நிகழ்ச்சி. நவீனத் தமிழ் வாழ்விலும் எழுத்து முயற்சிகளிலும் இந்தப் பதிவுகள் இந்தப் புதிய பண்பாட்டு நிகழ்ச்சியாகின்றன.

கர்ணனின் இந்தக் கதைகளை வாசிக்கும் ஒருவர் அடைகின்ற நிம்மதியின்மையும் பதற்றமும் சாதாரணமானதல்ல. போர்க்களத்திலும் போர்க்காலத்திலும் நிலவுகின்ற பதற்றத்தைப் போலில்லா விட்டாலும் இந்தப் பதற்றமும் நிம்மதியிழப்பும் பெரிதே.

சகமனிதர்களைப் பற்றிய அக்கறையுள்ள எவரும் வரலாற்றை விளங்கிக்கொள்ளவே ஆசைப்படுவர். ஒரு சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கரிசனையுடையவர்கள் வரலாற்றை அதன் திரைகளை விலக்கியே அறிய முற்படுவர். இவர்களுக்கு வரலாற்றில் அமைகின்ற பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் அவை கொள்கின்ற அர்த்தமும் முக்கியமானவை. இவர்களுக்குப் புனைவுகள் எதிர்மறையானவை.

00

‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற குறியீடு புனிதங்களின் வீழ்ச்சியையே குறிக்கிறது. ஒவ்வொரு தரப்பும் பிறர் மீது குற்றத்தைச் சுமத்தி விட்டு தமது புனிதங்களையே முதன்மைப்படுத்த முயற்சிக்கின்றன. ஆகவே இந்தக் கதைகள் இதுவரையில் கட்டப்பட்டிருந்த புனிதங்களைக் கட்டுடைத்துப் பேசுகின்றன என்பதை முதலிலேயே – நூலின் தலைப்பிலிருந்தே - புரிந்து கொள்ளமுடியும்.

போர் முற்றிச்செல்லும்போது சனங்களின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள் எப்படியிருந்தன என்பதை – அந்தத் துயர நாட்களிலும் என்னமாதிரியான எள்ளலோடும் நகைச் சுவை உணர்வோடும் சனங்கள் வாழ்ந்தனர் என்பதைக் கர்ணன் மிகச் சரியாகப் பதிந்திருக்கிறார்.

இத்தகைய உணர்வுகள் பல இடங்களில் - பல சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் கர்ணனன். மரண நடனத்தின்போது - அந்தக் கொடிய சந்தர்ப்பத்திலும் உண்மையை எப்படி உணர்கிறது மனம்? அங்கே நிகழ்கின்ற நிகழ்ச்சிகளில் அர்த்தத்தையும் அர்த்தமின்மையையும் அது எப்படி மதிப்பிடுகிறது? என்பதை நாம் ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். இதுதான் மனதின் விசித்திரம். மரணக்குழிகளில் வீழ்ந்து மயிரிழையில் தப்பும் போதும் - உத்தரவாதங்களே வீழ்ச்சியடைகின்ற போதும் அது எப்பொழுதும் எதிலும் எப்படியோ உள்ளார்ந்தமாக விலகிநிற்கும் இயல்பைக் கொண்டிருக்கிறது. என்றபடியால்தான் அது சமநிலை குழம்பாமல் இருக்கிறது. இந்த உலகத்தின் பைத்தியக்காரத்தனங்களையெல்லாம் இந்த வேடிக்கைத்தனத்தாலான புரிதலின் மூலமே சமனிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது நமது மனம் என்ற அடிப்படையைக் கர்ணனன் தெளிவாக்குகிறார்.

பொதுவாகவே தனிப்பட்ட உரையாடல்களின்போதே கர்ணன் மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார். எதையும் ஒரு எள்ளலோடு நோக்கும் இயல்பு அவரிடம் உண்டு. மனித நடத்தைகளே அவருக்கு இத்தகைய கேலிப்படுத்தலைக் கொடுத்திருக்கக் கூடும். இந்த இயல்பையே இவருடைய கதைகளும் கொண்டிருக்கின்றன. ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்று அவர் இந்தப்புத்தகத்துக்குத் தலைப்பிட்டதிலேயே அவருள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் கோபத்தையும் அவரிடமிருக்கும் எள்ளலையும் நாம் உணரமுடியும்.

போர் பற்றிய ஏராளம் கதைகள் ரஷ்ய, சீன, வியட்நாமிய, ஈராக்கிய, ஈரானிய, ஆபிரிக்கச் சூழலில் அண்மைய கடந்த காலங்களில் உண்டு. ஆனால், சமகாலத் தமிழ்ச் சூழலில் அது ஈழத்தில் கர்ணனிடத்தில் மட்டுமே இப்போதிருக்கிறது.

என்றபோதும் 'சனங்களின் பாடுகளும் அங்கே நிலவிய நிலைமைகளும் தேவதைகளின் தீட்டுத்துணியில் அழுத்தமாகப் பதியப்பெறவில்லை. கர்ணனின் மொழியில் உள்ள மிக எளிய, சாதாரணத்தன்மை இந்தப் போர்க்கதைகளைச் சிலவேளை மேலோட்டமாக்குகின்றன என்ற அபிப்பிரயம் இந்தக் கதைகள் நிலவிய களத்தில் அக்காலப்பகுதியில் இருந்த சிலரிடம் உண்டு. அந்தச் சூழலில் இருந்த எள்ளலும் துயரமும் அவலத்தின் பாடுகளும் உரியவாறு மேலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இதுதான் பிரச்சினையே. ஒரு சாரார் 'வாயைத் திறக்காதே' என்கின்றனர். இன்னொரு சாரார் 'நீ சொல்வது போதாது' என்கின்றனர்.

00

http://yokarnan.blogspot.com/2011/06/blog-post_28.html

முழுக்க முழுக்க உண்மை.

தனது இருப்பும் பிழைப்புமே தமிழனுக்கு முதன்மையானது அதன் பின்னர் தான் எதுவென்றாலும் அதற்காக எந்தவேசமெடுக்கவும் தமிழன் தயார்.எமது போரட்டம் தோற்று வன்னியில்மக்களின் இன்றைய அவலத்திற்கும் இதுவே காரணம்.தமிழனின் விடிவை விட தனது பங்கு என்ன என்பதில் குறியாக இருக்கும் வியாபாரிகள் கூட்டம்.

நாம் எதுவும் சாதித்தால் தான் அதிசயம்.

யோ.கர்ணனின் சிறுகதைத்தொகுதி பற்றி கருணாகரன் எழுதிய பதிவு இது.

http://yokarnan.blogspot.com/2011/06/blog-post_28.html

அன்புள்ள கருணா அண்ணா,

நீங்கள் யாழில் நான் இடும் இந்த பதிவை பார்ப்பீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது. இங்கு இந்த பதிவை பார்த்தவர்கள் உங்களிடம் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை நான் இங்கு இடுகிறேன்.

கருணா அண்ணா ..இப்படி உங்களை அழைத்தவர்கள் நிறைய பேராக இருந்தாலும் நீங்கள் தம்பி என்று அன்போடு அழைபவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் இந்த கருத்தை முன்வைக்கிறேன்.

கருணா அண்ணா..நானும் நீங்களும் பல காலங்களில் ..உங்கள் வீட்டு முற்றத்திலும் சரி, உங்கள் வேலையிடத்துக்கு வெளியிலும் சரி நின்றபடி பேசி, பின்னர் உட்கார்ந்து விடிய விடிய பேசிய ஞாபங்கள் என் நெஞ்சை விட்டு இன்னும் மறையவில்லை.

நான் இன்று ஏதோ எழுதுவதற்கும் முன்னோடி நீங்கள் தான் என்று துணிந்து கூறும் அளவுக்கு உங்கள் கூட நிறைய விவாதித்து இருக்கிறேன்.

நான் உயிரோடு தான் இருக்கிறேன் என்கிற விடயத்தையும் இந்த கருத்தாடல் மூலம் உங்கள் முன்வைக்கிறேன் கருணா அண்ணா..

மாத்தளன் பாலத்தடியில் கடைசியாக உங்களை திரு வாத்தியுடன் காணும்போதும் பல்வேறு விடயங்களுக்காக நாங்கள் விவாதங்களை பரிமாறி கொண்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் அன்றைய காலங்களில் நீங்கள் பேசிய பரிமாறிய விடயங்களுக்கும், இப்போது நீங்கள் எழுதும் விமர்சனங்களுக்கும் வேறுபாடு இருப்பதாக நான் உணருகிறேன்.

இன்றைய சூழலில் நான் வெளிப்படையாக உங்களை போல சொந்த பெயரில் எழுதமுடியாமைக்கு வருந்தினாலும், நீங்கள் நிச்சயமாக என்னை அடையாளம் கண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்,

அபிராம்.

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம்,

நீங்கள் எழுத முன்னோடியாக இருந்த கருணாகரன் அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பின் முகப்புத்தகத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மற்றும் திருவாத்தியார் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் தமிழகம் போக 10லட்சம் தருவேன் என விலைபேசி பின்னர் குறைந்த தொகையோடு தமிழகம் போனார். அவர் வெளியில் போகக்காரணமாய் பொறுப்பு நின்ற பு.....போராளி.....இன்று நாடு திரும்ப முடியாது பிச்சையெடுக்கும் நிலமையில் தமிழகத்தில் அவலப்படுகிறார். திருவாத்தியார் இப்போது தமிழக அரசியல் மூலம் தமிழீழம் பெற்றுத் தரப்போராடுவதாகக் கேள்வி.

Edited by shanthy

அபிராம்,

நீங்கள் எழுத முன்னோடியாக இருந்த கருணாகரன் அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பின் முகப்புத்தகத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மற்றும் திருவாத்தியார் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் தமிழகம் போக 10லட்சம் தருவேன் என விலைபேசி பின்னர் குறைந்த தொகையோடு தமிழகம் போனார். அவர் வெளியில் போகக்காரணமாய் பொறுப்பு நின்ற பு.....போராளி.....இன்று நாடு திரும்ப முடியாது பிச்சையெடுக்கும் நிலமையில் தமிழகத்தில் அவலப்படுகிறார். திருவாத்தியார் இப்போது தமிழக அரசியல் மூலம் தமிழீழம் பெற்றுத் தரப்போராடுவதாகக் கேள்வி.

சாந்தி,

முதலில் உங்கள் தகவல்களுக்கு நன்றி. நான் இங்கு அவருடன் தொடர்பு கொள்ள முகவரியை கேட்கவில்லை, அவரின் கருத்துகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பகிரங்க பதிலை தான் கேட்டேன்.

முகபுத்தகத்தின் சுவர்களுக்கு பின்னல் எழுதவதை விட, இங்கு இணைக்கபட்ட அவரின் பகிரங்க விமர்சனம் தொடர்பாக , எனது மனதில் எழுந்த கேள்விக்கான பதிலை அவரிடம் மட்டும் பகிரங்கமாக எழுதும்படி கேட்டு தான், அந்த மடலை எழுதியுள்ளேன்.

அது நிற்க, எனது மடலில், கருணா அண்ணாவுக்கு என்னை அடையாளபடுத்தும் குறியீடாக மட்டுமே திரு வாத்தி பயன்படுத்த பட்டார். அவர் இப்போது என்ன செய்கிறார் என்றோ, அவரை அனுப்பிய பு... போராளி என்ன செய்கிறார் என்பதோ எனது விவாதத்துக்கு தேவையற்றது.

நன்றி வணக்கம்,

அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

திரு வாத்தியே இப்போ திருகுதாள வாத்தியாய் இருக்கிறார்.தமிழ்நாட்டில் நான் நின்ற சமயம் புத்தகம் ஒன்று வெளியிடப்போகிறேன் பண உதவி தேவை சந்திக்க முடியுமா என போனடித்திருந்தார். நான் சந்திக்கவில்லை.எனக்கு அதற்கானநேரமும் இருந்திருக்கவில்லை. :)

அதே நேரம் கருணாகரனும் கனடாவிற்கு கப்பல் கிடைத்திருந்தால். யோ. கர்ணனிற்கு முன்னுரை எழுதிக்கொண்டிருக்காமல் . யோகனாக அசேலம் அடித்து விட்டு தேசியம் பேசியிருப்பார். புலனாய்வில்தான் எத்தனை ஓட்டைகள். :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

முதலில் உங்கள் தகவல்களுக்கு நன்றி. நான் இங்கு அவருடன் தொடர்பு கொள்ள முகவரியை கேட்கவில்லை, அவரின் கருத்துகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பகிரங்க பதிலை தான் கேட்டேன்.

முகபுத்தகத்தின் சுவர்களுக்கு பின்னல் எழுதவதை விட, இங்கு இணைக்கபட்ட அவரின் பகிரங்க விமர்சனம் தொடர்பாக , எனது மனதில் எழுந்த கேள்விக்கான பதிலை அவரிடம் மட்டும் பகிரங்கமாக எழுதும்படி கேட்டு தான், அந்த மடலை எழுதியுள்ளேன்.

அது நிற்க, எனது மடலில், கருணா அண்ணாவுக்கு என்னை அடையாளபடுத்தும் குறியீடாக மட்டுமே திரு வாத்தி பயன்படுத்த பட்டார். அவர் இப்போது என்ன செய்கிறார் என்றோ, அவரை அனுப்பிய பு... போராளி என்ன செய்கிறார் என்பதோ எனது விவாதத்துக்கு தேவையற்றது.

நன்றி வணக்கம்,

அபிராம்

அபிராம்,

மேலுள்ள விடயத்தை வாசிக்கவில்லைப்போலுள்ளது நீங்கள். கர்ணனின் நூல்பற்றி கருணாகரன் எழுதியது அது. நீங்கள் தொடர்பு முகவரி கேட்கவில்லை. ஆனால் பகிரங்கமான பதிலை யாழில் வந்து கருணாகரன் எழுத வேண்டுமென்ற அல்லது நீங்கள் விரும்பும்ப எழுத வேண்டுமென்ற விதியை எழுதிய உங்களுக்காக சில வரிகள்:-

முகப்புத்தகத்தில் முகத்தைக்காட்டி எழுதுகிறார்கள். முகத்தை மறைத்து அபிராம் என்று ஒளிந்து எழுதுவது போல் இல்லாமல் முகப்புத்தகத்தில் கருணாகரனும் கர்ணனும் தங்கள் முகங்களைக் காட்டி எழுதுகிறார்கள். ஆக முகப்புத்தகச் சுவரில் எழுதுவது ஒன்றும் ஒளித்தல் அல்ல. கருத்துக்களத்துக்கு நிகரான அதையும் விட மேலான கருத்தாடல் முகம்காட்டி முகப்புத்தகத்தில் நிகழ்கிறது.

அங்கே வாசித்ததை இங்கு கர்ணனின் கதையின் கீழ் இணைத்திருக்கிறேன். இதை கருணாகரன் தானாக இணைக்கவில்லை. இந்த இணைப்பை அல்லது யாழ் இணையத்தை அவர் பார்க்கிறாரோ தெரியாது. ஆகவேதான் முகப்புத்தகத்தில் போய் தொடர்பு கொள்ளுங்கள் என்று எழுதினேன்.

ஒளிந்து காரணங்கள் சொல்லி எழுதுவதை மதில்புத்தகம் என்பதே பொருத்தம். அதாவது முகம்காட்டாமல் இன்னொரு முகத்தோடு எழுதுவதை மதிலின் பின்னிருந்த எழுத்தாகக் கொள்ளலாம்.

(யாழில் எப்பெயரையும் சூட்டி எழுதும் உரிமையுள்ளது. அபிராம் என்ற பெயரையோ அல்லது வேறு எத்தனை பெயரையும் நீங்கள் பயன்படுத்தலாம் அதில் எந்த முரணும் இல்லை)

உங்கள் குறியீட்டுத் திருவாத்தியார் (திருநாவுக்கரசு) நீங்கள் நின்ற களத்தில் உங்களை வழிநடத்தியவரைச் சந்திக்க எடுத்த முயற்சிகள் அதன் தோல்வி அதையெல்லாம் எழுதுங்கள். அதுவும் நாம் அறிய வேண்டிய உண்மை.

இங்கு கருணாகரன் எழுதிய விடயத்தில் உள்ள உங்கள் முரண்களை அல்லது அவர்பற்றி உங்களது பக்க நியாயங்களை எழுதுவதே சிறந்த கருத்தாடல் என்பது எனது கருத்து. அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

எல்லோருக்கும் கப்பல் ஏற வசதியிருந்திருந்தால் கருணாகரனும் உங்களைப் போல எழுதியிருப்பாரோ என்னவோ..... :unsure:

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இப்போது என்ன செய்கிறார் என்றோ, அவரை அனுப்பிய பு... போராளி என்ன செய்கிறார் என்பதோ எனது விவாதத்துக்கு தேவையற்றது.

நன்றி வணக்கம்,

அபிராம்

அந்தப் பு....போராளிக்கு கப்பல் ஏற ஒருவரும் காசுகுடுக்கேல்ல....அதாலை அன்றாடச் சோற்றுக்கே திண்டாடுகிறான். இதையும் நீங்கள் கட்டாயம் அறிய வேணும் அபிராம். நீங்களும் கருணாகரனும் திருவாத்தியாரும் நின்று முரண்பட்ட பாலத்தையும் தாண்டி வந்தவன் ,பாலம் நீங்கள் தாண்ட முதல் தெற்கில் பலவெற்றிகளுக்கு வேராய் இருந்தவன்.

யோ.கர்ணன் ஒரு நல்ல படைப்பாளி. நிற்க, இது புனைகதையா அல்லது உண்மைக் கதையா? புனைகதை எனின் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையற்றவையாய் விடும். அதுபோக, நீங்கள் ஏன் பு.போராளிகளை மனிசர்களாக வரிப்பதிலை? அவர்கள் எதோ எங்கிருந்தோ இறங்கி வந்த "பரமாத்மாக்கள்" போல் நடாத்துகின்றீர்கள்

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

"நேற்று என்பது வரலாறு இன்று என்பது கொடை நாளை என்பது புதிர் என்று சொல்வர்ர்கள்"

நன்றி ஆபிரகாம் உங்கள் பதிவின் மூலம் தமிழரின் வாழ்வில் இன்று என்பது தான் உண்மையில் புதிராக இருப்பதை தெளிவு படுத்தியுள்ளீர்கள்

நாளை இதனை விட புதிராக இருக்கும் என நம்புகிறேன்.

  • 3 weeks later...

முகப்புப் புத்தகம் என்பது நாம் வேண்டியவர்கள் நம்மைப் பற்றிச் சொல்ல நம்ம கருத்து நிலைகளை குரூப்பாச் சேர்ந்து நின்று அடாவடி பண்ணி பிடிக்காத்தா ஒவ்வாத பதில் சொல்ல முடியாத கேள்விகளை எவருக்கும் தெரியா வண்ணம் அழித்து விட வசதியான இடம்.யாழ்க் கருத்துக் களம் போல் திறந்த ஒரு விவாத அரங்காக இல்லை.

உதாரணத்திற்க்கு அகிலன் கோ கர்ணன் எழுதும் கருத்துக்களுக்கு நான் முகப்புப் பக்கத்தில் எழுதும் எந்தப் பதிலும் இதுவரை பிரசுரம் ஆவதில்லை ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.