Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் கரைத்துவிட்ட வசந்தங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இது சிறுகதைதான் ஆனால் நீளமான சிறுகதை)

வேலை முடித்து வீட்டுக்குள் கால் வைத்த போது * காதுக்குள் நுளைந்த பாடல் அது….வானுயர்ந்த சோலையிலே நானிருந்து பாடுகிறேன்*. இதயக்கோவில் படத்தில் மோகன் அம்பிகாவின் நடிப்பில் வெளியான படம். இதுவரை படத்தைப் பார்க்கவில்லை. எனது 13வது 14வது வயதில்1987 – 1988 வரையான காலத்தில் கேட்ட பாடலென்றுதான் ஞாபகம்.

அந்தப்பாடல்களை அந்தப்படங்களை எனக்கு வரிதப்பாமல் சொல்ல ஒருத்தியிருந்தாள். படிப்பு அது தவிர்ந்தால் எதுவும் அனுமதியில்லாத எனது வீட்டுச் சூழலிலிருந்து அவளது வீடு வித்தியாசமானது.

அவளது அயல்வீட்டில் வாரஇறுதி நாட்களில் விடிவிடிய சினிமாதான். அந்தக்கால அமலா , நதியா ,மோகன் , சுரேஸ் , கார்த்திக் என எல்லாருடைய படங்களும் ஓடும். அவளது அம்மா அப்பா எல்லாரும் கூடியிருந்து அயல்வீட்டில் படம் பார்ப்பார்கள். சிலவேளைகளில் சினிமாக் கொட்டகைகளுக்கும் அவள் போனதாகச் சொல்வாள். அவளுக்குத் தெரியாத பாடல்களே இல்லையெனும் அளவு அவள் எல்லாப்பாடல்களையும் ஞாபகம் வைத்துப் பாடிக்காட்டுவாள்.

அவளும் நானும் அதிகம் பேசத் தொடங்கியது உறவாடத் தொடங்கியது 6ம்வகுப்பு சித்தியடைந்து1986 வசாவிளான் மத்திய மகாவித்தியாலத்திற்குப் போன நேரம்தான். நான் குப்பிளான் விக்னேஸ்வராவிலிருந்து போக குரும்பசிட்டி பரமானந்தாவிலிருந்து அவளும் வசாவிளானுக்கு வந்தாள். எனது வகுப்பிற்கே அவளும் வந்தாள். புதிய முகங்கள் நடுவில் எனது ஊர்க்காரி அவளுடன் தான் போயிருந்தேன். உயரவமானவர்களை பின்வரிசையில் இருத்தினார்கள். அத்தோடு நானும் அவளும் இன்னும் 3பேரும் எங்கள் வகுப்பில் அதிக உயரமாகையால் கடைசி மேசையில் எங்கள் படிப்பு ஆரம்பமானது.

அவள் குரும்பசிட்டியால் வசாவிளானுக்கு வந்துவிடுவாள். நான் பலாலி வீதியால் போய்விடுவேன். கிடைக்கின்ற இடைவெளிகளில் அவளிடமிருந்து படக்கதையும் பாட்டும்தான் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவள் சொல்லும் படங்களை நானும் பார்க்க விரும்புவேன். வீட்டில் சினிமாவென்று சொன்னாலே சொல்லத் தேவையில்லை. அம்மா அடிக்கடி படிப்பு படிப்பென்றுதான் ஓதிக்கொண்டிருப்பார்.

அப்பா வசந்தமாளிகை படத்தில் சிவாஜி கணேசனின் , வாணிசிறியின் நடிப்பையும் வசனங்களையும் பாடமாக்கி கள்ளடித்துவிட்டு ஊரெல்லாம் கேட்கப் பாட்டுப்பாடுவார். தனது இழந்துபோன காதலியின் வேலியில் போய் நின்று வெறியில் வசந்தமாளிகையை புதுபுதுப்பித்து உரைப்பார். வேலியைப் பிரித்துக் கொண்டு வந்து வெட்டு விழும்போல வேலிக்கால் குரல்கள் வரும். பின்னர் அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் அம்மாவும் நாங்களும் அப்பாவின் வாயைமூடுவிக்க ஆயிரம் வழிகளைத் தேடுவோம். ஆனாலும் அப்பா ஆளையறியாத வெறியிலும் கண் விழிக்கும் நேரமெல்லாம் காதலியின் பெயரை உச்சரிக்க மறப்பதேயில்லை.

அப்பாவின் சினிமாப்பயித்தியம் எங்களில் ஒட்டிவிடாமல் நாங்கள் படிக்க வேணும் என்பதும் தமிழர்களால் பெரும்பாலும் உச்சரிக்கப்படும் டொக்கர் தொழிலையுமே அம்மா கனவு காணுவா. காதில கொழுவி அம்மாவை நாங்கள் வருத்தம் சோதிக்க வேணுமெண்டது அம்மாவின் கனவு. அயல் பிள்ளைகள் அல்லது பாடசாலை நண்பர்கள் எவருடனும் பழக்கம் வைத்துக் கொள்ள அல்லது போய்வர எதுவித அனுமதியுமில்லை. காலமை பொழுது விடிய முதல் எழும்பிப்படிப்பு , விடிஞ்சா வீட்டு வேலைகளுக்கு உதவிவிட்டு 7.30இற்கு பள்ளிக்கூடம் போய் மதியம் 2மணிக்கு வந்து ரியூசன் படிப்பு மாலை இருளில் வீடு வந்து வளமையான சுழற்சி. அந்த வயதுக்கான விளையாட்டு அயல் பிள்ளைகளுடன் ஓடியாடி உலாத்தல் எதுவுமில்லை.

அம்மாவில் கடும் கோபம்தான் வரும். அதுவொரு சிறைச்சாலை போலவேயிருந்தது. எங்கள் வீட்டுக்கு ஒரு வளவு தாண்டியிருந்த வயிரவர் கோவில் ஆல்விழுதில் ஊஞ்சல் ஆடியும் வாசகசாலையின் முன்னுக்கு கிளித்தட்டு விளையாடுவதற்கும் அனுமதியில்லை. ஊர்ப்பிள்ளைகள் அங்கே விளைாயடுவதை வடக்குப் பக்க வாசல் கதவாலும் யன்னல் கம்பிகளாலும் நானும் தங்கைகளும் வரிசையில் நின்று பார்ப்போம். சிலவேளைகளில் அம்மா வரும் நேரத்தை முன்கூட்டி அறிந்தால் அம்மா வர முதல் ஆலடியில் போய் விளையாடுவோம். அம்மாவின் அரவம் கேட்டால் ஓடிப்போய் புத்தகங்களை எடுத்துப் படிப்பது போல் நடிப்போம். ஆனாலும் அம்மாவின் அந்தச் சிறைச்சாலைக் காவலுக்குள்ளும் அம்மா அறியாமல் தோழிகளுடன் சுற்றியது கீரிமலைக்குப் போனது பலாலிக்கடற்கரை பார்த்தது பலாலி விமான ஓடுதளம் பார்த்ததென நிறைய சொல்லாத சேதிகள். அதெல்லாம் போகட்டும். எனக்குள் இன்று மீண்டும் ஞாபகமாய் வந்த அவளைப்பற்றி அவள் கதைபற்றிச் சொல்லப்போறன்.

அவள் தான் அழகாயில்லையென்று தனக்குள்ளேயே ஒரு தத்துவத்தை வைத்திருந்தாள். தான் உருவத்தால் பெருத்தவள் என்ற தாழ்வுச்சிக்கலை அவளது சினிமாக் கதைகளுக்கு நடுவில் சொல்லிக் கொள்ள மறக்கமாட்டாள். அவளது வரிசையான நேர்த்தியான பற்களும் அவளது நீண்ட தலைமுடியை இரட்டைப்பின்னலாய் கறுத்த றிபனால் கட்டி வரும் அழகை மடிப்புக்கலையாத அவளது வெள்ளைச்சட்டையில் அவள் ஒரு தேவதையென்று சொன்னாள் நம்பவேமாட்டாள்.

முதலாவது றிப்போட் வந்தது. எல்லாப்பாடங்களுக்கும் அவளும் சிறந்த புள்ளிகள் பெற்றாள். சினிமாவும் பார்த்து சினிமாப்பாடல்களையெல்லாம் பாட்டுப்புத்தகம் வாங்கி படித்து எப்படி சிறந்த பெறுபேறுகளையும் பெற்றாள் என்பது எனக்கு விளங்கவேயில்லை.

சிலருக்கு இயல்பாயே எல்லாவற்றையும் கிரகிக்கவும் செய்யவும் கூடிய வரத்தை இயற்கையின் கொடையாய் இறைவனாக நம்பும் சக்தி கொடுத்துவிட்டிருக்கிற வரத்தை அவளும் பெற்றிருந்தாள்.

படங்களில் வந்த நகைச்சுவைக் காட்சிகளையெல்லாம் சொல்லுவாள். அவள் வகுப்பில் இருந்தால் அது எனக்கு புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும். அவள் பார்த்த சினிமாப்படங்களையெல்லாம் எனது கொப்பிகளில் குறித்து வைப்பேன். படிச்சு முடிய அம்மா சொன்னமாதிரி எல்லாப்படங்களையும் பாக்க வேணுமென்ற ஆசையில். அந்தக் கொப்பிகளுக்குள் ஆயிரமாயிரம் கதைகளை கதைகளுக்கான தலைப்புகளையெல்லாம் எழுதி வைத்ததெல்லாம் அம்மா அறியவேயில்லை.

எங்கள் ஊரில் இயங்கியது இரண்டு தனியார் கல்வி நிலையங்கள். அதில் ஒன்றில் அவள் படித்தாள். மற்றையதில் நான் படித்தேன். இரண்டு நிலையங்களிலும் படிப்போருக்கு ஆளாளுக்கு அவர் பெரிசு இவர் சிறிசென்று சண்டையும் வரும். ஆனால் எங்களுக்குள் எவரைப்பற்றியும் பிரச்சனையில்லை. மாலைநேர வகுப்புகளுக்குச் செல்லும் சாட்டில் அவளோடு நானும் சேர்ந்து போவேன். கிடைத்த தருணங்களை அவளோடு செலவளிப்பதில் அத்தனை பிரியம்.

அடுத்த றிப்போட்டுக்கு முதல் பலாலியிலிருந்த ஆமி வசாவிளான் பள்ளிக்கூடத்தை ஆக்கிரமிக்கப் போவதான அசுகைகள் வெளியாகியது. கேணல்.கிட்டுவின் அறிவிப்பில் வசாவிளான் மத்தியமகாவித்தியாலயத்தின் கூரைகளும் கதவுகளும் கழற்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு மாலைநேரம் அந்தச் செய்தி எங்கள் ஊர்வரையும் வந்தது. பாடசாலைப் பொருட்கள் புன்னாலைக்கட்டுவன் வழியாய் இடம்மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் அழகான பள்ளிக்கூடத்தின் நாங்கள் ஆசையுடன் ஏறியிறங்கும் மேல்மாடிக்கட்டடம் குரோட்டன்கள் அழகான தாமரைக்குளம் எல்லாம் தனித்து எங்கள் கனவுகள் புதைந்த பள்ளிக்கூடம் அகதியாகிப்போனது. நாங்களும் அகதியாகினோம். எங்கள் சமாதிகோவிலடி வீடுகளெல்லாம் உயர்பாதுகாப்பு வலயமாகி நாங்களெல்லாம் இடம்பெயர்ந்தோம்.

அடுத்து வந்த மாதங்கள் எறிகணை வீச்சு எங்களுடன் படித்த புன்னாலைக்கட்டுவன் பதுமநிதியும் அவளது அப்பா இளையதம்பியும் அவளது அக்காவும் இறந்து போன துயரம் அத்தோடு மட்டுமில்லாது எங்கள் ஊரிலும் பல உறவுகள் ஆமியின் செல்லிற்கும் கெலியின் சூட்டிற்கும் இறந்து போனார்கள்.

1987 “ஒபரேசன் லிபரேசன்“ நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலோடு முடிந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது. அகதியான நாங்கள் திரும்பவும் எங்கள் வீடுகளுக்குப் போனோம். பற்றைகள் மண்டிய வளவுகளைத் துப்பரவாக்கி புதிய மரங்களை நட்டோம். புதிய புதிய அழகிய பூக்கன்றுகளை நட்டோம். நம்பிக்கைகள் எங்கள் மனங்களில் சிகரமாக உயர்ந்தது. சண்டையில்லை சமாதானம் வந்துவிடுமென்று நம்பினோம். இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் படிக்கப்போனார்கள். பலர் வெளிநாடுகளுக்கு வெளிக்கிட்டார்கள்.

அகதியான எங்கள் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் மீண்டும் புதிதாய் பிறந்தது. அவளும் பாடசாலைக்கு வந்தாள். திரும்பவும் வகுப்புப் பிரிப்பில் அவளும் நானும் ஒரே வகுப்பில் தான். அவளுக்கும் எனக்கும் 14வயதாகியிருந்தது. அவள் ரியூசன் போய்வரும் வழியில் சில சயிக்கிள்கள் அவளைச் சுற்றுவதாகச் சொன்னாள். அவள் பாடிய பாடல்களையெல்லாம் மிகுந்த இரசனையுடன் படித்தாள். பாடநேரங்களில் புத்தகத்துக்கு நடுவில் பாட்டுப்புத்தகத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

அவளைச் சுற்றியோர் கோட்டையை உயர்த்தி அந்த உலகில் அவள் சஞ்சரிக்கத் தொடங்கினாள். நல்ல கெட்டித்தனமாகப் படித்தவள் படிப்பிலிருந்து கவனத்தைச் சிதைக்கத் தொடங்கினாள். பலர் தனக்கு கடிதங்கள் எழுதுவதாகச் சொன்னவள். ஒருநாள் எங்கள் ஊரவன் ஒருவனின் பெயரைச் சொல்லி அவன் தன்னைக் காதலிப்பதாய் சொன்னாள். தானும் அவனைக் காதலிப்பதாய் சொல்லிச் சிரித்தாள். அவளது காதல் கதைகள் கேட்கப்பயமாயிருந்தது. அம்மா அறிந்தால் அவளுடன் பழகுவதையும் நிறுத்திவிடுவா. நான் பார்க்க முடியாத சினிமாக்கதைகளைச் சொல்ல அவள் இல்லாமல் போய்விடுவாள் என்ற சுயநலம் என்னை ஆட்கொண்டது.

அவளது அந்தக் காதலன் 5ம் வகுப்பு வரையும் தான் படித்திருந்தாகக் கேள்விப்பட்டேன். அவனது குடும்பத்தில் படிப்பு வாசனை சற்றுமில்லை. அவனது அண்ணன்கள் அக்காக்கள் மிகவும் இளவயதிலேயே திருமணம் செய்து கொண்டிருந்தனர். அவனது அக்காக்களுக்கும் அண்ணன்களுக்குள் 4,5,6,7 என குழந்தைகள் பிறந்திருந்தனர். காலையில் தோட்டங்களுக்குக் கூலிவேலைக்குப் போவார்கள். மாலையில் மம்மலுக்குள் வருவார்கள். புழுதியில் குளித்துக் குழந்தைகள் இருக்க சமைப்பார்கள் சாப்பிடுவார்கள் வீட்டின் ஆண்கள் சில நேரம் அதிகம் குடித்துவிட்டு சண்டை பிடிப்பார்கள். பெண்கள் ஆண்களின் அடிதாங்காமல் ஓலமெடுத்து அழுவார்கள் ஒப்பாரி வைப்பார்கள். இரவுகளில் 10வீடு தாண்டியும் அவர்களது சண்டைச் சத்தம் கேட்கும். அத்தகையதொரு குடும்பத்தில் வாழும் ஒருவன் 16வயதில் கூலிவேலைக்குச் சென்றுவரும் அவனை இவள் காதலித்தாள். அவனது வீட்டு ஆண்கள் போல் உன்னை அடிக்கமாட்டானா என்று கேட்டதற்குச் சொன்னாள். அவன் றெம்ப நல்லவன். என்னைக் கண்கலங்காமல் பாப்பனெண்டு சொன்னவன்.

இப்போது அவளது பள்ளிக்கூடப் பாதையில் ரியூசன் பாதையில் எல்லாம் அவன் வரத் தொடங்கினான். அவள் அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். அவனது தமிழ்க்கொலைக் காதற்கடிதங்களைத் திருத்தி வாசித்துக் கொண்டிருப்பாள். தனது அழகான கையெழுத்தால் அவனுக்காக பாடநேரங்களில் கடிதம் எழுதினாள். அவள் மிகவும் மகிழ்ச்சியாய் நடமாடினாள். அதிகமான காதல் பாடல்களையெல்லாம் அழகாகப் பாடக்கற்றுக் கொண்டாள்.

உங்கடை அம்மா பேசமாட்டாவோ ?

கேட்ட எனக்குச் சொன்னாள்.

எங்கடையம்மாவும் காதலிச்சுத்தான் கலியாணங்கட்டினவா….

என்னுடைய அம்மாவும் அப்பாவை காதலிச்சுத்தானே கலியாணம் கட்டினவை…?

ஆனால் அவையளுக்குள் அந்தளவு அன்பு இருந்ததாய் தெரியேல்ல…?

அம்மாவின் அழுத முகம் , தனது வாழ்வை அப்பாவுக்காக தியாகம் செய்ததாய் சொல்லிக் கொள்ளும் தோல்வியும்தான் அம்மாவின் கதைகள் பற்றிய எனது அறிதல். இவள் எப்படி….? எனக்குள் பெரும் குழப்பத்தை உருவாக்கியது அவளது காதல்.

000 000 000

மீண்டும் போன எங்கள் பாடசாலையில் கட்டடங்கள் வெறுமையாகி கூரைகள் இல்லாது மொட்டையாகியிருந்தது மண்டபங்கள். தற்காலிக ஓலையால் வேயப்பட்ட கூரைகளின் கீழ் எங்கள் கல்வியும் கற்பித்தலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1988ம் ஆண்டு தைமாதம் எனது வெள்ளைச் சட்டையில் சிவப்புகறைகள் படிந்ததை அவள்தான் முதலில் காட்டினாள். அதைக்கேட்டு அழுத என்னைச் சமாதானப்படுத்தி சிவபாதம் ரீச்சரிடம் சொல்லி ஏ.எல் அக்காக்கள் இருவரோடு என்னை வீட்டுக்கு அனுப்ப வைத்ததும் அவள்தான்.

எனது ரியூசன் தோழிகளுக்கெல்லாம் அவள் தகவல் சொன்னாள். எனக்குள் இன்று வரையும் காயமாய் கடிதமாய் கதைகளாய் கவிதைகளாய் இனிய ஞாபகமாய் இருக்கிற என் அந்தநாள் தோழி ஏழாலை நதியாவுக்குக்கும் புதினம் சொல்லியதும் அவள்தான்.

ஊரைக்கூட்டி பந்தல் போட்டு மணவறை வைத்து கம்பளம் விரித்து ஆராத்தியெடுத்து அழகான சேலையுடுத்தி போட்டோ எடுத்து எனக்கு அம்மாவினதும் அப்பாவினதும் ஏற்பாட்டில் நடந்த கொண்டாட்டத்திற்கும் அவள் எனது பிரத்தியேக அழைப்பின் பேரால் வந்திருந்தாள். கனகாம்பரமாலை கட்டி சிவத்தப்பாவாடை சட்டையும் வெள்ளைத் தாவணியும் போட்டு எனக்குப் பக்கத்தில் வந்து நின்றாள். என்றும் போல அவளது நகைச்சுவையும் சிரிப்பும் எனக்குள் புத்துயிர்ப்பைத் தந்தது.

கொண்டாட்டம் முடிந்து பள்ளிக்கூடம் செல்லத் துவங்கினேன். அவள் எங்கள் ஊரில் நடைபெற்றுக் கொண்டிருந்த காதல் கதைகளையெல்லாம் சொன்னாள். கோவில் திருவிழாவில் காணாமற்போன சோடிகள் பற்றியெல்லாம் சொன்னவள் ஒரு நாள் அவளும் அவனோடு ஓடிப்போனாளென்ற செய்தி எனக்கும் வந்தது.

அவள் ஓடிப்போவதற்கு முதல் ஒருநாள் எனக்கு ஒரு பரிசு தந்தாள். ரகுமானின் படம் போட்ட பாட்டுப் புத்தகம் அது. என்னை வைச்சிருக்கச் சொன்னாள். அத்தகைய புத்தகம் என்னிடம் இருப்பதை அம்மா அறிந்தால் சர்வாதிகாரி கிட்லராக மாறிவிடுவதுடன் அம்மாவின் கையில் எட்டும் எல்லாவற்றாலும் சாத்துவாங்க வேண்டுமென்று சொன்னேன். அவள் என்னை நக்கலடித்துச் சிரித்தாள். பயந்தாங்கொள்ளியென்று பரிகசித்தாள்.

சர்வாதிகாரி கிட்லரின் அடிக்குப்பயந்து அழகான ரகுமானின் படம்போட்ட பாட்டுப்புத்தகத்தை வாங்கவில்லை. அந்தப்புத்தகத்தில் முன்பக்கத்தில் இருப்பது ரகுமானென்றும் ரகுமானின் படப்பாடல்கள் அவையெனவும் சொன்னாள். படம் பார்க்காமல் முதல் பிடித்த நடிகராக ரகுமானுக்கு நான் ரசிகையாகிவிட்டேன்.

அடுத்த வருடத்துச் சிவராத்திரியில் எங்கள் வயிரவர் கோவிலில் ஓடிய சினிமாப்படத்தில் ரகுமான் , பிரபு நடிப்பில் வெளியான ஒருவர் வாழும் ஆலயம் படம் போட்டார்கள். வதனிமாமி ஊடாகக் கேள்விப்பட்டேன். எப்பிடியும் ரகுமானின் அந்தப்படத்தைப் பார்க்க வேணுமென்ற ஆசை. அம்மாவுக்குத் தெரியாமல் அம்மம்மாவிடம் இரகசிய அனுமதி வாங்கி வதனிமாமி இதயம்மாமியாக்களுடன் படம்பார்க்கப் போனேன்.

ஊர்ப்பிள்ளைகள் பெரியவர்கள் படம்பார்க்கக் காத்திருந்தார்கள். எனது முதலாவது சினிமாக்கனவு நிறைவேறிய நாள். நான் எதிர்பார்த்த ரகுமானின் படம் வராமல் பழசுகளின் விருப்பத்தில் கறுப்பு வெள்ளைப்படம் பராசக்தி தான் முதலில் ஓடியது.

2வதாக ரகுமானின் படம் துவங்கியது. அந்தச் சிறிய தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளிருந்து கலர்கலராய் நடிகர்கள் வந்தார்கள். அவள் எனக்குக் கதைசொன்ன சினிமாக்களில் நான் கண்ட சினிமாவுலகம் மிகவும் பெரியதாய் என் முன்னால் விரிந்தது. ஒற்றைச் சிறுபெட்டிக்குள்ளிருந்து இத்தனை அதிசயங்களா ?

அந்த வயிரவர் கோவில் முன் வெளியில் இருளில் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒளியை மட்டும் பரவவிட்டிருந்தார்கள். முன்வரிசையில் வதனிமாமிக்குப் பக்கத்தில் இருந்தேன். என்னிலும் 3வயது மூத்த வதனிமாமி தியேட்டரெல்லாம் போய் படம்பாத்திருக்கிறாள். வதனி மாமிக்கும் பாட்டு படமெண்டால் பயித்தியம்தான். ரயில் பயணம் தியேட்டரில் பாத்திட்டு வந்து ஒருநாள் எங்களுக்கெல்லாம் கதைசொல்லி பாட்டெல்லாம் பாடிக்காட்டியிருக்கிறாள். பிரபுவின் ரசிகர்கள் பிரபுவுக்குக் கைதட்டி ஆரவாரிக்க சிவகுமாரின் ரசிகர்கள் சிவகுமாருக்குக் கைதட்ட ரகுமானின் ரசிகை நானும் ரகுமானுக்குக் கைதட்டினேன்.

வானத்தில் பூத்திருந்த நட்சத்திரங்கள் யாவும் இறங்கி எங்கள் வைரவர் கோவில் வெளியில் கொட்டிக் கிடப்பது போலிருந்தது. அந்த இரவின் அமைதியையும் அழகிய நட்சத்திரங்களை அள்ளி வைத்திருக்கும் மேகத்தின் நடுவில் நடக்கின்றதான மிதப்பு. முதல் பார்க்கும் சினிமாவின் நாயக நாயகிகள் அந்த வெளியில் இறங்கி வந்திருப்பது போலிருந்தது.

எடியே எழும்படி…..! எழும்பு…! வதனிமாமியின் குரல் கேட்டு எழும்பிய போது பொழுது விடிந்துவிட்டிருந்தது. என்னைப்போல பல சிறுவர்கள் அங்கே அந்த மண்ணுக்குள் நல்ல நித்திரை. வதனிமாமி இதயம் மாமி இன்னும் சிலரும் நித்திரையான எல்லாருக்கும் கரியால் மீசை வைத்து விட்டிருந்தார்கள். *ஒருவர் வாழும் ஆலயம்* பார்க்கும் ஆசையில் போய் கடைசியில் மண்ணுக்கை நித்திரை கொண்டதுதான் மிச்சம். ரகுமானின் படம் பார்க்கும் கனவு நிறையாமல் போனது சோகம் தான். ஆனாலும் வதனிமாமியிடம் மீதிக் கதையைக் கேட்கலாமென்றது ஆறுதல்தான்.

வீட்டுக்கு ஒளித்து வந்தேன். ஆனால் கிட்லர் அம்மாவுக்கு இரகசியம் தெரிஞ்சு கிழுவங்கட்டையோடு அம்மா நிண்டா. சர்வாதிகாரி கிட்லர் அம்மாவிடம் அடிவாங்காமல் தப்ப அன்னை தெரேசாவின் வடிவான அம்மம்மாவிடம் அடைக்கலமானேன்.

கிட்லர் அம்மா அம்மம்மாவைப் பேசிக்கொண்டு போனா. குமர்ப்பிள்ளையை இரவில படம்பாக்க விட்டிருக்கிறா. படம்பாத்தா படிப்பெங்கை ஏறப்போகுது….ஓமடியாத்தை போ நீ படிச்சுக் கிழிச்சனிதானே….அம்மம்மா புறுபுறுத்துக் கொண்டிருந்தா.

அது இந்திய இராணுவ காலம். காலையும் மாலையும் அவர்களது ஒலிபரப்பிலும் இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனலிலும் புதுப்புதுப்பாடல்கள் வரும். எங்காவது வானொலிச் சத்தம் கேட்டால் அந்தத் திசைநோக்கியே எனது செவிப்புலன் வேரூன்றிவிடும். அன்றோடு அம்மாவின் நேரடிக்கண்காணிப்பில் கொண்டு செல்லப்பட்டேன்.

அவளை வீதியில் காணுவேன். அவள் சேலையுடுத்துக் கொண்டு போவாள். அவளுடன் ககைக்க முடியாது தடைச்சட்டம் அம்மாவிடமிருந்து பிறந்திருந்தது. அவள் குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறாள் எனச் சொன்னார்கள். அவளை அம்மாவாகப்போகிற பெரிய வயிற்றுடன் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒருநாள் நிறைவேறியது. அவள் கிளினிக் போய்விட்டு ஒரு நாள் பகல் 11மணிபோல் எங்கள் வீட்டடியால் நடந்து போனாள். என்னைப் பாத்திட்டுத் தெரியாதமாதிரிப் போனாள்.

இந்திய இராணுவம் முளத்துக்கு முளம் சென்றிபோட்டு இருந்த வீதிகள் தாண்டி அவள் ஒருநாள் குழந்தைப்பேற்றுக்காக யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அவளது முதல் பிரசவம். அவளது குழந்தை உலகைக்கண்திறந்து பார்த்த மறுநாள் அந்தப் பெரியாஸ்பத்திரியில் ஒரு மனிதப்படுகொலை நிகழ்ந்தேறியது. பல உயிர்கள் அங்கு பலியெடுக்கப்பட்டது. தங்கியிருந்த நோயாளிகள் ஆளாளுக்குத் தப்பியோடினர்.

அவள் தனது குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீட்டை வந்திட்டாளாம்….பஞ்சாய் செய்தி ஊரெல்லாம் பரவியது. பின்னர் அவளது அம்மாவும் வேறு பெரியவர்களும் குறுக்குப் பாதைகளால் போய் யாழ் பெரியாஸ்பத்திரியில் அவளது குழந்தையைக் கொண்டு வந்துவிட்டதாய் 5வது நாள் செய்தி அடிபட்டது.

000 000 000

காலம் யாரினதும் இடைஞ்சலுமின்றித் தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம் அதன் பின்னான எங்கள் ஊர்பிரிவு…..இடம்பெயர்தல் என எங்கள் பயணங்களில் 1992 மார்ச்மாதம் 5குடும்பம் இணைந்திருந்த அவள் இருந்த வீட்டுக்கு முன்னால் நாங்களும் போயிருந்தோம். அவள் 3பிள்ளைகளுக்கு அம்மாவாகியிருந்தாள்….. அவளது பழைய முகம் அவளிடமில்லை. வயதிற்கு மீறிய முதுமையும் குடும்பபாரமும் அவள் மீது விழுந்து கிடந்தது. அவளது வாழ்வு மாறிப்போனது.

000 000 000

கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடந்த 2002…சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட நேரம். வவுனியாவிலிருந்து வன்னிக்குப் போவதற்கான பாஸ் அனுமதிக்காக பிறவுண் கொம்பனியில் காத்திருந்த நேரம் அவளது சித்தியை அங்கே கண்டேன். அவளது சித்திக்கு என்னை ஞாபகமில்லை மறந்துவிட்டிருந்தா.

உறவினர் ஒருவரிடம் அவளைப்பற்றி விசாரித்த போது இப்படிச் சொன்னார்கள்.….,

அவளது காதல் கணவன் தற்கொலை செய்துவிட்டானாம். இவள் உயிரோடு இருக்க அவனை நம்பி பள்ளிக்கூடம் போக வேண்டிய வயதில் அவனை மட்டும் நம்பித் தனது எதிர்காலத்தை இருளாக்கிப் போனவளை விட்டு ஊரில் ஒருத்தியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாம். அவன் குடித்துவிட்டு அவளை நெடுலும் அடிப்பானாம்.

அவனது கள்ளத் தொடர்பு அவளுக்குத் தெரிய வந்து அவளுடன் முரண்பட்டானாம். கள்ளக்காதலி நல்ல வடிவான பெட்டையாம். அவளும் அவனோடு வாழ வேணுமெண்டு அடம்பிடித்தாளாம். கடைசியில் கள்ளம் ஊரெங்கும் தெரியவர அவன் தற்கொலை செய்து கொண்டானாம். அவள் தனது குழந்தைகளுடன் தனித்துப் போனாள். இளவயதுக்காதல் திருமணம் அவளை இளவயதிலேயே விதவையாக்கி குழந்தைகளோடு கூலி வேலைக்குச் சென்று தனது குழந்தைகளைப் பராமரித்தாளாம்.

2004இல் அவளது பெண்குழந்தை நோயுற்றிருப்பதாகச் சொன்னார்கள். கண்டுபிடிக்கப்படாத நோயால் வலிதாங்கியது அவளது குழந்தை. ஓடியாடிய குழந்தை படுக்கையில் போனது. அதன் பின்னர்தான் அவளது பெண் குழந்தையின் எலும்பில் புற்றுநோயென்று அறியப்பட்டது. அவளது குழந்தையும் நோயின் கடைசி எல்லையைத் தொட்டு இறந்துபோனது. 30வயதிற்குள் அவள் வாழ்வு எல்லாச்சுமைகளையும் தாங்கி துயரப்பட ஏதுமில்லாமல் நொந்து போனாள்.

2010இல் முகப்புத்தகத்தில் உறவு ஊரவர் என நண்பர்களாக்கிய ஒரு உறவின் அல்பத்தில் அவளைப் பார்த்தேன். திரும்பி அவளைப்பற்றித் தேடியதில் கிடைத்த விடை. அந்தப் படத்தில் நல்ல அழகான ஒரு இளைஞனைக் காட்டிச் சொன்னார்கள். அதுதான் அவளது மகன். தகப்பன் மாதிரி நல்ல வெள்ளைப்பொடியனெல்லே…? அடையாளம் காட்டிய நட்பு எனக்குச் சொல்லியது. அந்த மகன் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியிருக்கிறானாம். பண உதவி தாராளமாகக் கிடைக்கிறதாம். வெளிநாட்டில் உள்ள உறவுகளால் அவள் நல்ல வசதியோடு வாழ்கிறாளாம்.

உவ லேசுப்பட்ட ஆளில்லைத் தெரியுமோ…? ரெண்டு மூண்டு வருசத்துக்கு முன்னை காசைக்கண்டவுடனும் பெட்டைக்கு கால்கை புரியேல்ல…..ஆரோ ஒரு வான்காரனோடை தொடர்பிருந்ததாம்…..பிறகு ஆக்கள் பேசி அவனை விட்டிட்டுதாம்…..ஊரவர் ஒருவரின் வாயிலிருந்து இந்தச் செய்தி வந்தது.

திருமண வயதை எட்டாத வயதில் அவள் காதலித்தாள். காதலுக்கான அர்த்தம் பரியாத அவளது காதலுக்கு ஆதரவு கொடுத்த அவளது அம்மா அப்பாவின் அக்கறையீனம்….திருமணம் என்றால் வாழ்க்கையென்றால் புரிந்து கொள்ள முடியாத வயதில் அவள் குழந்தையைப் பெற்ற போது....காதல் கணவன் கள்ளத் தொடர்பு தற்கொலை வரை பேசாமலிருந்தவர்கள்……

இப்போது எல்லாம் அறிந்த வயதில் அவள் ஒருவன் மீது காதல் கொண்டிருந்தாள் என்பதனை ஏற்கமுடியாது அவளை விமர்சித்து கலாசாரம் பண்பாடு பேசுகின்ற எல்லார் மீதும் கோபம் வருகிறது. அவள் துன்பத்தோடு வாழ்ந்த போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்…..?

08.06.2011

Edited by shanthy

எல்லா இடத்திலும் நடக்கின்ற கதைகள் தான் . ஒரு விடையம் சாந்திக்குச் சொல்ல ஆசைப்படுகின்றேன் , சில இடங்களில் கற்பனை வறட்சி ஏற்பட்டு பேப்பர் படிக்கின்ற உணர்வு வருகின்றது . எழுத்துக்ளைப் பெரிதாக்கி கம , புள்ளி , செமிகொலன்களில் , கவனம் எடுங்கோ . நன்றாக இருக்கின்றது :) . :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலையே உயரம் எண்டதாலைதான் கடைசி வாங்கிலை விட்டவையோ :lol:

கண்ணை மூடிக் கொண்டு காதலிக்கக் கூடாது பாருங்கோ, ஏலுமானவரை காதல் பண்ணாமல் இருக்கப்பாருங்கோ பிள்ளையள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "அப்பா வசந்தமாளிகை படத்தில் சிவாஜி கணேசனின் , வாணிசிறியின் நடிப்பையும் வசனங்களையும் பாடமாக்கி கள்ளடித்துவிட்டு ஊரெல்லாம் கேட்கப் பாட்டுப்பாடுவார். தனது இழந்துபோன காதலியின் வேலியில் போய் நின்று வெறியில் வசந்தமாளிகையை புதுபுதுப்பித்து உரைப்பார். வேலியைப் பிரித்துக் கொண்டு வந்து வெட்டு விழும்போல வேலிக்கால் குரல்கள் வரும். பின்னர் அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் அம்மாவும் நாங்களும் அப்பாவின் வாயைமூடுவிக்க ஆயிரம் வழிகளைத் தேடுவோம். ஆனாலும் அப்பா ஆளையறியாத வெறியிலும் கண் விழிக்கும் நேரமெல்லாம் காதலியின் பெயரை உச்சரிக்க மறப்பதேயில்லை"

கடவுள் மனிதருக்கு என்று சிந்திக்கும் திறனை கொடுத்திருக்கிறார், அதை வடிவா பயன் படுத்தனும், நிஐக் காதைகள் சூடாத்தான் இருக்கும்

இதுதான் என்ட ஐயா கள் அடிச்சு போட்டு பாடுவார்,

http://www.youtube.com/watch?v=z245kGj9IYo

ஒரு பச்சை உங்கட அம்மாவிற்கு உங்களை படம் பார்க்க விடாததிற்கு, அல்ல உங்களை பற்றி யாரவது எழுத வேண்டியிருந்திருக்கும்

கண்ணை மூடிக் கொண்டு காதலிக்கக் கூடாது பாருங்கோ, ஏலுமானவரை காதல் பண்ணாமல் இருக்கப்பாருங்கோ பிள்ளையள் :icon_idea:

என்ன அலைமகள் சின்னப்பிள்ளை மாதிரி, காதலிச்சா பிறகுதான் பெண்கள் கண்ணை மூடுவாங்க :lol: , கல்யாணத்திற்கு பிறகு கண்ணை மூடினாதானே, நாங்க வாய் மூடவேண்டியதுதான்

Edited by உடையார்

அவளை விமர்சித்து கலாசாரம் பண்பாடு பேசுகின்ற எல்லார் மீதும் கோபம் வருகிறது. அவள் துன்பத்தோடு வாழ்ந்த போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்…..?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை மூலம் தெரிந்து கொண்டது;

1)சாந்தி அக்காவுக்கு எத்தனை வயது என்று :D

2)பிள்ளைகளை சாந்தி அக்காவின் அம்மா மிகுந்த கட்டுபாடுடன் படிக்க வற்புறுத்தினாலும் ஏன் சாந்தி அக்காவினால் படிக்க முடியவில்லை :unsure:

3)மற்ற அக்கா சுதந்திரம் கொடுக்கப் பட்டு வளந்தும் அவ தன் அறியாத வயதில் சுதந்திரத்தை தவறுதலாக பாவித்து விட்டார் :(

4)ஏன் எங்கட சமுதாயம் அறியாத வயதில் யாராவது தப்பு செய்தால் அவர்களை திருத்த முயற்சி செய்வதில்லை.

5)ஏன் எங்கட சமுதாயம் ஒரு தடவை தப்பு செய்தால் ஏன் தொடர்ந்தும் தப்பு செய்வார்கள் என்று நினைக்கிறது

இப்படியெல்லாம் நம்ம நாட்டில நடந்ததேன்று நம்பமுடியாமல் இருக்கு?

உங்கள் வீட்டு கட்டுப்பாடுகளும் புரியாமல் இருக்கு? அப்படி என்று ஒன்று எனது குடும்பத்தில் இருக்கவில்லை.குடும்பமாக படத்திற்கு,கிரிமலைக்கு போவதும்,வாங்கும் குமுதம்,ஆனந்தவிகடன் முதல் யார் வாசிப்பதென அடிபட்டும் வளர்ந்தோம்.

இப்படியெல்லாம் நம்ம நாட்டில நடந்ததேன்று நம்பமுடியாமல் இருக்கு?

உங்கள் வீட்டு கட்டுப்பாடுகளும் புரியாமல் இருக்கு? அப்படி என்று ஒன்று எனது குடும்பத்தில் இருக்கவில்லை.குடும்பமாக படத்திற்கு,கிரிமலைக்கு போவதும்

குடுத்து வைச்சனீங்கள் :)

ஆனந்தவிகடன் முதல் யார் வாசிப்பதென அடிபட்டும் வளர்ந்தோம் :lol:

Quote: "அப்பா வசந்தமாளிகை படத்தில் சிவாஜி கணேசனின் , வாணிசிறியின் நடிப்பையும் வசனங்களையும் பாடமாக்கி கள்ளடித்துவிட்டு ஊரெல்லாம் கேட்கப் பாட்டுப்பாடுவார். தனது இழந்துபோன காதலியின் வேலியில் போய் நின்று வெறியில் வசந்தமாளிகையை புதுபுதுப்பித்து உரைப்பார். வேலியைப் பிரித்துக் கொண்டு வந்து வெட்டு விழும்போல வேலிக்கால் குரல்கள் வரும். பின்னர் அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் அம்மாவும் நாங்களும் அப்பாவின் வாயைமூடுவிக்க ஆயிரம் வழிகளைத் தேடுவோம். ஆனாலும் அப்பா ஆளையறியாத வெறியிலும் கண் விழிக்கும் நேரமெல்லாம் காதலியின் பெயரை உச்சரிக்க மறப்பதேயில்லை"

இதுதான் என்ட ஐயா கள் அடிச்சு போட்டு பாடுவார் :lol: :lol:

என்ன அலைமகள் சின்னப்பிள்ளை மாதிரி, காதலிச்சா பிறகுதான் பெண்கள் கண்ணை மூடுவாங்க :wub:

கல்யாணத்திற்கு பிறகு கண்ணை மூடினாதானே, நாங்க வாய் மூடவேண்டியதுதான் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் என்ட ஐயா கள் அடிச்சு போட்டு பாடுவார் :lol: :lol:

என்ன அலைமகள் சின்னப்பிள்ளை மாதிரி, காதலிச்சா பிறகுதான் பெண்கள் கண்ணை மூடுவாங்க :wub:

கல்யாணத்திற்கு பிறகு கண்ணை மூடினாதானே, நாங்க வாய் மூடவேண்டியதுதான் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

அலைமகள் வீட்டில மகள் எல்லா வேலையும் செய்கிறா போல,

அந்த மாதிரி சிரிக்கிறிங்க, வேண்டம் நீங்க சிரிக்கிறதை பார்க்க பயமா இருக்கு

அலைமகள் வீட்டில மகள் எல்லா வேலையும் செய்கிறா போல,

மகளுக்கு 11 இப்ப தான் வயதப்பா, மகள் உதவி செய்தால் முழு நேரமும் நான் யாழில் தான் :lol:

அந்த மாதிரி சிரிக்கிறிங்க, வேண்டம் நீங்க சிரிக்கிறதை பார்க்க பயமா இருக்கு

வாழ்க்கையில் சந்தோசம் மிக முக்கியமப்பா :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

உண்மையிலையே உயரம் எண்டதாலைதான் கடைசி வாங்கிலை விட்டவையோ :lol:

சாத்திரிக்கு எங்கை நிண்டாலும் உடனும் சொந்த அனுபவம் வந்திடுமே. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை உங்கட அம்மாவிற்கு உங்களை படம் பார்க்க விடாததிற்கு, அல்ல உங்களை பற்றி யாரவது எழுத வேண்டியிருந்திருக்கும்

உடையார் அம்மாவை நன்றியுடன் இவ்விடயத்தில் நினைவுகொள்வேன். ஆனால் விடயங்களை வெளிப்படையாய் சொல்லிப் பிள்ளைகளை வளர்த்தால் தேவையற்ற சிக்கல்களில் பிள்ளைகள் மாட்டி வீணாகமாட்டார்கள்.

எங்கள் சமூக அமைப்பு எல்லாவற்றையும் மூடி சின்னச்சின்ன வியங்களையும் பெரிய பூதமாக்கிவிடுவதாலேயே எத்தனையோ பிள்ளைகளின் வாழ்வு காதல் என்ற பெயரால் சிதைந்து போயிருக்கிறது.

எனது பிள்ளைகளுக்கு எனது அம்மாவி எனக்குப் போட்ட மூடுமந்திரக்கட்டுப்பாடுகளை இடாமல் வெளிப்படையாக விடயங்களைப் பேசுவேன். எனது அனுபவங்கள் எனது நண்பர்களின் அனுபவங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லுவேன்.

சகல விடயங்களையும் உடல்மாற்றங்கள் உடலியல் வெளிப்பாடுகள் யாவையும் அவர்களுடன் பேசுகிறேன். இது நிச்சயம் எங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்தும்.

காதலிக்கும் வயது காதலில் தேவை தாக்கம் யாவற்றையும் ஒவ்வொரு பிள்ளைக்கும் வெளிப்படையாகத் தெரிவித்தல் நல்லது. இந்தக்கதையின் நாயகிபோல பதின்மவயதில் அவளைக் காதல் பலியெடுக்காதிருந்திருக்கும் அபாயத்தை நன்கு தெளிவுபடுத்தல் வெண்டும்.

இந்தக் கதை மூலம் தெரிந்து கொண்டது;

1)சாந்தி அக்காவுக்கு எத்தனை வயது என்று :D

ஓ ரதி எனக்கு இப்ப 37வயது :D (16.06.1974பிறந்தேன் இந்தப்பூமியில்) இவ்வளவுநாளும் தெரியாதோ? இந்த 1974இல் பிறந்த நிழலி ,சபேஸ் இன்னும் கனபேர் இருக்கினம் களத்தில் அவயைளிட்டை இந்த உண்மையைக் சொல்லீடாதையுங்கோ. :lol:

ஓ ரதி எனக்கு இப்ப 37வயது :D (16.06.1974பிறந்தேன் இந்தப்பூமியில்) இவ்வளவுநாளும் தெரியாதோ? இந்த 1974இல் பிறந்த நிழலி ,சபேஸ் இன்னும் கனபேர் இருக்கினம் களத்தில் அவயைளிட்டை இந்த உண்மையைக் சொல்லீடாதையுங்கோ. :lol:

ஓ சாந்தி நீங்கள் 7 ஆம் நம்பர். 7 க்கு 7.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2)பிள்ளைகளை சாந்தி அக்காவின் அம்மா மிகுந்த கட்டுபாடுடன் படிக்க வற்புறுத்தினாலும் ஏன் சாந்தி அக்காவினால் படிக்க முடியவில்லை :unsure:

3)மற்ற அக்கா சுதந்திரம் கொடுக்கப் பட்டு வளந்தும் அவ தன் அறியாத வயதில் சுதந்திரத்தை தவறுதலாக பாவித்து விட்டார் :(

4)ஏன் எங்கட சமுதாயம் அறியாத வயதில் யாராவது தப்பு செய்தால் அவர்களை திருத்த முயற்சி செய்வதில்லை.

5)ஏன் எங்கட சமுதாயம் ஒரு தடவை தப்பு செய்தால் ஏன் தொடர்ந்தும் தப்பு செய்வார்கள் என்று நினைக்கிறது

ரதி கேள்வியிலக்கம் 2) ரதி ஏன் படிக்காமல் போனேனெண்டது பெரியகதை. :lol: (ஆனால் காதலெல்லாம் இல்லை)

கேள்வியிலக்கம் 3) அதிக சுதந்திரம் கொடுத்த பெற்றோர்கள் அவளைச்சரியான வகையில் கையாளவில்லை. மற்றும் என்ன பெண்பிள்ளை திருமணம் செய்ய வேண்டியவள்தானேயென்ற மனப்பாங்கு. அவளும் தனக்கான எதிர்காலத்தை அப்போது எண்ணிச் செயற்பட முடியாத வயது. கட்டுப்பாடு மிக்க குடும்பச்சூழல் சிலவேளை அவளைப் பாதுகாத்திருக்கலாம்.

கேள்வியிலக்கம் 4,5)அறியாத வயதில் செய்யப்படுகிற தவறுகளை சரியாக எமது சமூகம் திருத்துவதில்லை. மாறாக அவர்களை அப்படியே ஒதுக்கிவிடுகிறது. அவர்கள் வாழ்வு முழுவதும் அதன் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென ஒதுக்கிவிடுகிறது. இது அநேகமாக எங்கள் பிள்ளைகள் பதின்மவயதில் தங்கள் வாழ்வைத் தொலைக்க காரணமாகிவிடுகிறது.

பின்னர் தங்கள் தவறுகளைப் புரிந்து மீள்கிற நேரம் அவர்களது பிள்ளைகள் குடும்பம் என சுமைகள் விழுந்துவிடுகிறது. தங்கள் பிள்ளைகளை அதிகட்டுப்பாட்டோடு வளர்க்க முற்பட்டு அவர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வை சரியாக வழிகாட்டாமல் தோற்றுவிடுகிறார்கள்.

இந்த நிலமை இப்போதும் புலம்பெயர் வாழ்விலும் எங்கள் பெற்றோர்கள் எதிர்நோக்குகிறார்கள். திறந்த மனதுடனான கருத்தாடல் பிள்ளைகளுடன் அவர்கள் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து செயற்பட்டால் இதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் எங்கள் சமூக அமைப்பு இந்த விடயத்தில் பெரும்பாலும் பின்னுக்கே நிற்கிறார்கள்.

உதாரணத்துக்கு :- பிள்ளைகள் பூப்படையும் வயது , ஆண்பிள்ளைகள் பருவமடையும் வயதில் பிள்ளைகளின் மனமும் மாறுபடும். அதிககோபம் , அடம்பிடித்தல் , நான் சரியென்ற நிலமை, இதனை எத்தனை பெற்றோர் புரிந்து கொள்கிறோம். (இந்த மாற்றங்களை எனது பிள்ளைகளிடமிருந்து அவதானித்துள்ளேன். இதனை சாதாரண நமது அம்மா அப்பா பெட்டைக்கு வாய் கூட அடக்கமில்லை பொடிக்கு திமிர்கூட என்று அமத்திவிடுவார்கள்)

இந்த விடயம் ஒரு நீண்ட விவாதத்துக்கு உரிய விடயம். மற்றவர்களின் கருத்துகளையும் பார்ப்போம் ரதி.

இந்தத்தலைப்பில் *எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும்* என்று ஒரு நினைவுப்பதிவு எழுதிப்பதிந்திருந்தேன் யாழில். அதன் இணைப்பு இது -

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50374&st=0

நேரம் கிடைக்கும் போது வாசியுங்கோ. ஒருத்தியின் வாழ்வு எப்படி மாறியிருக்கிறதென. நீங்களும் கருத்திட்டுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் நம்ம நாட்டில நடந்ததேன்று நம்பமுடியாமல் இருக்கு?

உங்கள் வீட்டு கட்டுப்பாடுகளும் புரியாமல் இருக்கு? அப்படி என்று ஒன்று எனது குடும்பத்தில் இருக்கவில்லை.குடும்பமாக படத்திற்கு,கிரிமலைக்கு போவதும்,வாங்கும் குமுதம்,ஆனந்தவிகடன் முதல் யார் வாசிப்பதென அடிபட்டும் வளர்ந்தோம்.

நாங்கள் வாழ்ந்தது கிராமப்புறம். எங்கள் கிராமத்தில் எத்தனையோ வரலாறுகள் இதையும் விட மோசமான கட்டுப்பாடுகள் வரையறைகளுடன் இருந்தது. எனது குடும்பம் பூட்டன் பூட்டியாரின் காலத்திலிருந்து எங்கள் காலம் வரை கனக்க நடந்திருந்தன.

நீங்கள் குமுதம் விகடன் எல்லாம் வாசிக்கிருக்கிறியள். நான் வாசித்த காலங்கள் இது:- எங்களுக்கு ஒரு பலசரக்குக்கடை இருந்தது. கடைக்கு வாரத்தில் ஒருமுறை ஆக்கள் வாசிச்ச வீரகேசரி முதல் சஞ்சிகைகள் வரை கிலோவில் நிறுத்து விற்பார்கள். அதனை அம்மா வாங்குவா. நான் அந்த நாள் கடையில் நிற்பேன். அம்மாவுக்குத் தெரியாமல் பிடித்த இலக்கியப்பகுதிகளை வாசிப்பேன். மிகவும் பிடித்தவற்றை வெட்டியெடுத்து நண்பர்களுக்கு கொடுப்பேன்.

அம்மா சீனி சுற்ற இதர சாமான் சுற்றும் போது பத்திரிகைகள் சஞ்சிகைகளில் காணாமல் வெட்டுப்பட்ட பங்கங்களைப் பாத்து கொண்டு வந்து வித்திட்டுப் போனவையைத் தான் பேசுவா. அதுவொரு பொற்காலம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ரதி கேள்வியிலக்கம் 2) ரதி ஏன் படிக்காமல் போனேனெண்டது பெரியகதை. :lol: (ஆனால் காதலெல்லாம் இல்லை)

கேள்வியிலக்கம் 3) அதிக சுதந்திரம் கொடுத்த பெற்றோர்கள் அவளைச்சரியான வகையில் கையாளவில்லை. மற்றும் என்ன பெண்பிள்ளை திருமணம் செய்ய வேண்டியவள்தானேயென்ற மனப்பாங்கு. அவளும் தனக்கான எதிர்காலத்தை அப்போது எண்ணிச் செயற்பட முடியாத வயது. கட்டுப்பாடு மிக்க குடும்பச்சூழல் சிலவேளை அவளைப் பாதுகாத்திருக்கலாம்.

கேள்வியிலக்கம் 4,5)அறியாத வயதில் செய்யப்படுகிற தவறுகளை சரியாக எமது சமூகம் திருத்துவதில்லை. மாறாக அவர்களை அப்படியே ஒதுக்கிவிடுகிறது. அவர்கள் வாழ்வு முழுவதும் அதன் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென ஒதுக்கிவிடுகிறது. இது அநேகமாக எங்கள் பிள்ளைகள் பதின்மவயதில் தங்கள் வாழ்வைத் தொலைக்க காரணமாகிவிடுகிறது.

பின்னர் தங்கள் தவறுகளைப் புரிந்து மீள்கிற நேரம் அவர்களது பிள்ளைகள் குடும்பம் என சுமைகள் விழுந்துவிடுகிறது. தங்கள் பிள்ளைகளை அதிகட்டுப்பாட்டோடு வளர்க்க முற்பட்டு அவர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வை சரியாக வழிகாட்டாமல் தோற்றுவிடுகிறார்கள்.

இந்த நிலமை இப்போதும் புலம்பெயர் வாழ்விலும் எங்கள் பெற்றோர்கள் எதிர்நோக்குகிறார்கள். திறந்த மனதுடனான கருத்தாடல் பிள்ளைகளுடன் அவர்கள் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து செயற்பட்டால் இதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் எங்கள் சமூக அமைப்பு இந்த விடயத்தில் பெரும்பாலும் பின்னுக்கே நிற்கிறார்கள்.

உதாரணத்துக்கு :- பிள்ளைகள் பூப்படையும் வயது , ஆண்பிள்ளைகள் பருவமடையும் வயதில் பிள்ளைகளின் மனமும் மாறுபடும். அதிககோபம் , அடம்பிடித்தல் , நான் சரியென்ற நிலமை, இதனை எத்தனை பெற்றோர் புரிந்து கொள்கிறோம். (இந்த மாற்றங்களை எனது பிள்ளைகளிடமிருந்து அவதானித்துள்ளேன். இதனை சாதாரண நமது அம்மா அப்பா பெட்டைக்கு வாய் கூட அடக்கமில்லை பொடிக்கு திமிர்கூட என்று அமத்திவிடுவார்கள்)

இந்த விடயம் ஒரு நீண்ட விவாதத்துக்கு உரிய விடயம். மற்றவர்களின் கருத்துகளையும் பார்ப்போம் ரதி.

இந்தத்தலைப்பில் *எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும்* என்று ஒரு நினைவுப்பதிவு எழுதிப்பதிந்திருந்தேன் யாழில். அதன் இணைப்பு இது -

http://www.yarl.com/...opic=50374&st=0

நேரம் கிடைக்கும் போது வாசியுங்கோ. ஒருத்தியின் வாழ்வு எப்படி மாறியிருக்கிறதென. நீங்களும் கருத்திட்டுள்ளீர்கள்.

உங்கள் 3,4,5 கேள்விக்கான பதில் யதார்த்தத்தை பறைசாற்றுகிறது...பச்சை என்னோடது

அக்கா! தங்களின் கதை பல பெண்களின் வாழ்க்கை நடைமுறையை வெளிக்காட்டி நிற்கின்றது. தற்பொழுதும் எம் மண்ணில் இதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன!

ஆனால்...

இப்படியான சம்பவங்கள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணங்கள் என்னவென்று உற்று நோக்கினால், எம் சமுதாயத்திலுள்ள பல விஷயங்கள் விமர்சிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது என்பது தெளிவாகும்!

உதாரணமாக பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அந்நியோன்யம் இருப்பதில்லை! பள்ளி ஆசிரியரிடம் உள்ள புரிந்துணர்வு கூட பெற்றெடுத்தவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை!

ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது... அதனை உண்மையாகப் பகிர்ந்துகொள்ளும் மனநிலை நம் சமுதாயத்தில் அரிது! பெயருக்கு மட்டும் காட்டிக் கொள்வார்கள்!

இப்படி ஆயிரம் விஷயங்கள் சொல்லலாம்!

திருமண வயதை எட்டாத வயதில் அவள் காதலித்தாள். காதலுக்கான அர்த்தம் பரியாத அவளது காதலுக்கு ஆதரவு கொடுத்த அவளது அம்மா அப்பாவின் அக்கறையீனம்….திருமணம் என்றால் வாழ்க்கையென்றால் புரிந்து கொள்ள முடியாத வயதில் அவள் குழந்தையைப் பெற்ற போது....காதல் கணவன் கள்ளத் தொடர்பு தற்கொலை வரை பேசாமலிருந்தவர்கள்……

இப்போது எல்லாம் அறிந்த வயதில் அவள் ஒருவன் மீது காதல் கொண்டிருந்தாள் என்பதனை ஏற்கமுடியாது அவளை விமர்சித்து கலாசாரம் பண்பாடு பேசுகின்ற எல்லார் மீதும் கோபம் வருகிறது. அவள் துன்பத்தோடு வாழ்ந்த போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்…..?

அக்கா உங்கள் கதையின் கடைசி வரிகள் சில..... மிக மிகச் சரியானவை! அதுக்கு ஒரு பச்சை குத்தியே ஆகோணும்! :)

ஒருவரின் துயரத்தில் பங்கெடுக்காதவர்கள்... அவர்களை பற்றி எந்தவிதமான கருத்துக்களைச் சொல்லவும் தகுதியற்றவர்கள்!

இன்னும்... எமது சமுதாயம் மாறாமற்தான் இருக்கின்றது!

மாறுமா என்பது.........??????????????????????????

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

சாய் சாய்...............இந்த பொண்ணுங்களே இப்பிடிதான்பா..ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டுதுன்னு தெரின்சும் அவனோட வாழுவன் எண்டு அடம் பிடிக்கிறது....கறுமம் கறுமம்.....

சாந்தி அக்கோய் அணுபவ பகிர்வு நல்லா இருக்கு.............4 வது பச்சை என்னோடது.............

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை அப்பா கேணியடி புளியமரத்தை பாத்து யாருக்காக என்று பாடத் தொடங்கினதுமே எங்களுக்கு விளங்கிடும் . நாங்கள் வந்து அவரின்ரை பொக்கற்றுக்குள்ளை உள்ளது எல்லாத்தையும் களவெடுத்துக் கொண்டு போயிடுவம். மிச்சம் மீதி இருந்தால் அதையும் லோ லோ விட்டுவைக்கமாட்டான். :lol: :lol:

உங்கடை அப்பா கேணியடி புளியமரத்தை பாத்து யாருக்காக என்று பாடத் தொடங்கினதுமே எங்களுக்கு விளங்கிடும் . நாங்கள் வந்து அவரின்ரை பொக்கற்றுக்குள்ளை உள்ளது எல்லாத்தையும் களவெடுத்துக் கொண்டு போயிடுவம். மிச்சம் மீதி இருந்தால் அதையும் லோ லோ விட்டுவைக்கமாட்டான். :lol: :lol:

:wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.