Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணை நோக்கி விரியும் சிறகுகள்-(பாகம்-7)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகம்-1

திகாலை 4.30 ற்கு அலாரம் அடிக்கிறது, பெரும் பிரயாசைப்பட்டுக் கண்களைத்திறக்க முயல்கிறான் தினேஸ். பிரிய மறுக்கும் காதலர்கள் போல் இமைகள் இன்னமும் அவனுடன் சண்டையிடுகின்றன. பிரித்தே ஆகவேண்டும் என்ற அவசியத்தை அலாரத்தின் அலறல் நினைவுபடுத்துகிறது. இனி அவனது நாள்ச்சக்கரம் சுற்றத்தொடங்கும்.மணித்தியாலங்கள் அவன் வியர்வையில் கரையத்தொடங்கும்.

சிறைப்பட்டிருக்கும் பற்பசையில் சிறு துளிக்கு விடுதலை கொடுத்து குளியலறைக்கு விரைகையில் மனம் அவனை முந்திக்கொண்டு வேலையிடத்திற்க்கு விரைகிறது. புலம்பெயர்ந்ததால் கண்டங்கள் மட்டுமா மாறிவிட்டன..? எங்கள் வாழ்க்கை முறையுமல்லவா மாறிவிட்டது. தொலைத்த எங்கள் தனித்துவங்களின் நினைவுகளை மட்டும் பத்திரமாக ஞாபகக்குழிகளில் சேமித்து வைத்திருக்கிறான். அவ்வப்போது மீட்டிப்பார்ப்பதற்காக.

மணி அதிகாலை 5.30, காலைக்கடன்களை முடித்து தேநீரையும் குடித்துவிட்டு அவன் கால்கள் பஸ் நிறுத்தம் நோக்கி விரைகிறது. சிலநேரங்களில் பயணங்கள் பல்வேறு சிந்தனைகளையும் மன எழுச்சிகளையும் ஏற்படுத்துவதுண்டு. ஆனால் வேலைக்குப் போகும்போது மட்டும் பயணம் எந்தவித எண்ணங்களையும் ஏற்படுத்துவதில்லை.மாறாக எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

இனி பஸ்ஸிற்கு காத்து நிற்கவேண்டும். குளிரில் பஸ்ஸிற்கு காத்து நிற்பவன் நிலையும் ஒண்ணுக்கு அவசரமாகப் போக இடம் தேடுபவன் நிலையும் ஒன்றுதான். வாழ்க்கை வெறுத்துவிடும். சிலவேளைகளில் இதற்காகவே ஊருக்குத் திரும்பிப் போய்விடவேண்டும் என்று அவன் நினைத்ததும் உண்டு. பஸ் வரும்வரை ஓட்டுனரையும் அரசாங்கத்தையும் மனதிற்குள் மாறிமாறித் திட்டிவிட்டு பஸ் வந்ததும் நல்ல பிள்ளைபோல் ஏறி உட்கார்ந்து கொள்கிறான்.

இனி ஒன்றரை மணித்தியாலப் பயணம் அவன் வேலை செய்யுமிடத்திற்கு. ஆடிஆடிப் போகும் பஸ்ஸிற்கு தாளம் போடுவது போல் அடிக்கடி சிக்னல் விழுந்து உயிர் எடுக்கும். 8 மணிக்கு கடை திறக்காவிட்டால் மூஞ்சை முழுக்க முடிக்குப்பதிலாக கோபத்தை வைத்திருக்கிற தமிழ் முதலாளி உயிரை எடுத்திடுவான். மலைப்பாம்பு போல தரிப்பிடங்களில் எல்லாம் நிற்கும் சனங்களையும் விழுங்கிக்கொண்டு பஸ் ஆடி அசைஞ்சு போகும்போது அவனுக்கு கால் நிலை கொள்ளாது ரென்சனில்.

யன்னலோரம் உட்கார்ந்து கொண்டு நினைவுகளை தூசுதட்டுகிறான். வெளிநாட்டுக்கு என்று வெளிக்கிட்ட இந்த ஜந்து வருடங்களில் எல்லாமே வெறுத்து விட்டது அவனுக்கு. நாடுநாடாக அலைந்ததும்,திருடர்கள் போல ஒளிந்து ஒளிந்து வேலை செய்வதும், முதலாளி மார்களால் விசா இல்லை என்ற காரணத்தினால் அடிமை போல நடத்தப்படுவதும் என்று இந்த ஜந்து வருட காலத்தில் ஒரு அடி மட்ட வாழ்க்கையையே அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

வெளிநாட்டுக்கு என்று புறப்பட்ட நாளில் இருந்து நினைவுகள் என்னவோ வீட்டை நோக்கித்தான் பறந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் சிலவற்றின் அருமை அவை அருகில் இல்லாதவிடத்துத்தான் புரிகிறது.எதையும் பட்டுணர்ந்த பின்னர்தான் பொதுவில் மனித மனம் பாடங்களைக் கற்றுக்கொள்கிறது.

இப்படித்தான் பலவருடங்களுக்கு முன் பாடசாலையில் படித்த காலத்தில் தந்தை ஒரு வில்லனைப்போல அவனுக்குத் தெரிந்தார்.நினைவுகளைப் பின்னோக்கி விரட்டுகிறான்.மன இயந்திரம் குதூகலத்துடன் அவனைக் குழந்தைப் பருவத்துக்குத் தூக்கிச்செல்கிறது.குழந்தைப் பருவத்தை நினைக்கும்போது கிளர்ச்சியடையாத எந்த மனிதர்களாவது இந்தப் பூமிப்பந்தில் உண்டோ..?குழந்தைப் பருவங்களை மீட்டிப்பார்க்கும் போது ஒரு இனிய யாழிசையை கண்மூடி மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பது போலக் காலங்கள் கரைந்து போவது தெரியாமல் மனப்பறவையின் சிறகடிப்பு நீண்டு கொண்டிருக்கும்.எல்லாத்துன்பங்களையும் மறக்கடித்து மனதின் பாரங்களை இறக்கி வைக்கும் ஏதோ ஒரு வல்லமை அந்த நினைவுகளிற்கு இருக்கிறது.இனி எப்பொழுதுமே வாழ்க்கையில் கிடைக்கப்போகாத அந்தப்பருவத்தை நினைத்து நினைத்து ஏங்குகிறது மனித மனம்.

அந்தக்காலங்களில் அவன் நாட்களை உயிர்ப்பாக்கிய தந்தையின் நினைவுகள் வந்து விழுகின்றன.அவன் கைப்பிடித்து நடை பழக்கிய அவன் தந்தையின் கரங்களில் இருக்கும் அந்தக் கடினம் எப்பொழுதும் அவன் விரும்பித்தழுவிக்கொள்வது.அவனை வளர்த்து ஆளாக்குவதற்கு அவர் சுமந்த பாரச்சிலுவைகளின் தழும்புகள்தான் அந்தக்கைகளில் நிரந்தரமாகக் குடியேறி இருந்தன.

சமூகத்தை,சூழலை,அவனைச் சுற்றி இருந்த உலகத்தை பார்த்து வியப்பதற்குள் காலங்கள் உருண்டோடி விட்டன.காலத்திற்கு யாரால்தான் கடிவாளம் இடமுடியும்..?தந்தையின் கைகளில் தவழ்ந்து திரிந்தவன் இப்பொழுது எட்ட நின்று தந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.பள்ளிக்கூடம் போய் வரும் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் பிந்தினாலும் கேள்விக்கணைகளுக்குப் பதில் சொல்லவேண்டியிருப்பது எரிச்சலை உண்டு பண்ணியது. இது மட்டு மன்றி ஒரு தூரப் பயணம் போவதற்குகூட தந்தையின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டியிருந்தது.

எல்லாவற்றையும் விட தந்தை மேசன் வேலை செய்கிறார் என்பது அவனுக்கு ஒரு கெளரவக்குறைவாக இருந்தது.வெத்திலை போடுவதும் சாறத்துடன் சைக்கிளில் வேலைக்குப் போவதும் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.தந்தையைப்பற்றி பாடசாலையில் ஒருபோதும் அவன் பேச விரும்பியதில்லை.அதே போல் அவர் அவனுடைய தேவைகளுக்காக பாடசாலை வரும்போது மற்ற மாணவர்கள் கண்ணில் படாமல் இருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டான்.

ஏன் தன் தந்தை ஒரு ரவுசர் போடும் உத்தியோகத்தில் இல்லை என்று எப்போதும் அவர்மேல் ஒரு வெறுப்புடனேயேஇருந்தான்.இப்படிச் சிறிதுசிறிதாக தந்தையின் மேல் ஏற்பட்ட வெறுப்பு வேலிகளால் அவன் தன்னைத் தந்தையிடமிருந்து தானாகவே அந்நியப்படுத்திக்கொண்டான்.

என்னவிதமான கடிவாளங்களைப் போட்டிருந்தாலும் கல்வியில் அவன் முன்னுக்கு வரவேண்டும் என்பதில் அவனை விட அவருக்கு மிக அதிக அக்கறை இருந்தது. கா.பொ.தா சாதாரண தரம் முடிந்து உயர்தரம் போனபோது அவனது தந்தை உனக்குப்பிடித்த பாடத்தை படி என்று அவனிடமே தெரிவை விட்டிருந்தார்.பின்னர் பல்கலைக்கழகம் தெரிவானபோது அவனை விட அவரே மிக மகிழ்ச்சி கொண்ட ஒரு ஜீவனாக இருந்தார்.

பல்கலைக்கழகம் அவன் தெரிவாகிய போது "உன் வாழ்க்கை இப்போது உன் கையில் இதுவரை ஒரு தந்தையாக உன் கைகளைப்பிடித்து இதுதான் பாதை என்றுகாட்டி விட்டுள்ளேன் இனிப்பயணிக்கவேண்டியது நீதான்.உனக்காக நான் இதற்கு மேல் பயணிக்கமுடியாது" என்று கூறியபோது அந்த உயர்ந்த உள்ளத்தின் ஊமை மனதுக்குள் இருந்த பாசத்தின் வேர்களை அவன் கண்டான்.

அந்த அற்புதமான மனிதன் இன்று பராமரிக்க ஒரு பிள்ளை இருந்தும் தனியாக வைத்தியசாலையில் அவதிப்படுவதை நினைக்க நெஞ்சு வெடித்து விடும்போல் இருக்கிறது அவனுக்கு.இருந்தாலும் பெருங்கீரன் தந்தையுடன் நிற்கிறான் என்பது அவனுக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது.

தினேஸ் உயர்தரத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தபோது சிந்துவை சந்தித்தான்.சாதரண தரம் வரை உள்ள பாடசாலையில் இருந்து உயர்தரம் கற்பதற்க்காக தினேஸின் பாடசாலையில் அப்பொழுதுதான் அவள் இணைந்திருந்தாள்.

சிந்து மாநிறம்.அழகான தோற்றமுடையவள்.அவள் கண்களில் என்னேரமும் ஒரு அமைதி குடி கொண்டிருக்கும்.பேசவேண்டிய ஏதோ ஒன்றை மென்றுகொண்டிருப்பது போலவே அவளது கண்கள் பார்ப்பவர்க்கு தோன்றும்.அந்தக்கண்கள்தான் தினேஸிற்கும் அவள் மேலான அளவற்ற ஈர்ப்புக்கு காரணமாயின.பார்த்த முதல் நாளே அவளுடன் பேசிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தான்.

அதற்கான சந்தர்ப்பங்களையும் அமைத்து பேசிப்பேசி எப்படியோ காதலாக்கி விட்டான்.காதல் ஒரு விதை போன்றது.மனவயலில் தூவப்படும் வரைதான் காத்திருக்கும்.விழுந்துவிட்டால் விளாசிக்கொண்டெழுந்து வேர்விட்டுப் பெருமரமாய் மனக்கூடு முழுவதும் தன் கிளைகளை எறிந்துவிடும்.இந்தக்காதலின் கணங்களில் இருந்து தப்பிச் சென்ற மனிதர்கள் அரிது.கணப்பொழுதேனும் அவர்கள் மனதில் காதல் தீ ஏதோ ஒரு வயதில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒரு பெண் அல்லது ஆணிண் மேலான ஈர்ப்பாகி அந்த நொடியை அநுபவிக்காத மனிதர்களே அரிதென்று சொல்லலாம். மனித இனத்தின் தொடர்ச்சியையும் உயிர்ச்சங்கிலியின் நீட்ச்சியையும் உயிப்புடன் வைத்திருப்பதில் இந்தக்காதலுக்கும் பெரும்பங்குண்டு.ஒவ்வொரு மனிதனது வாழ்வின் கணங்களையும் மீட்டிக்கொண்டு போனால் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு புள்ளியில் காதல் முகிழ் விட்டிருந்திருப்பதைக் காணலாம்.

இந்தக் காதலில்தான் அவனும் அவளும் சிக்குண்டு கட்டுண்டு போய்க்கிடந்தார்கள்.இவர்கள் இருவரின் காதலும் இருவர் வீட்டுக்கும் தெரியாதிருந்த நேரத்தில் யாரும் செய்யத்துணியாத விடயம் ஒன்றைத் தினேஸ் செய்யத்துணிந்தான். சிந்துவுக்கு ஒரு ஸ்கூட்டிப்பெப் வேண்டிக்கொடுப்பது.பணத்திற்கு எங்கே போவது..?அதுவும் ஸ்கூட்டிப்பெப் யாழ்ப்பாணத்திற்கு வந்த ஆரம்ப காலம்.ஸ்கூட்டிப்பெப் ஒன்றின் விலை ஒரு இலட்ச்சத்து இருபத்தையாயிரம் அளவில் இருந்தது அப்பொழுது.

இப்பொழுது பணத்திற்க்கு என்ன செய்வது..?அதற்கும் வழி இருந்தது தினேஸிடம்.தினேஸின் ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவர் திருமணம் முடித்து ஒருவர் சுவிஸிலும் ஒருவர் லண்டனிலும் உள்ளனர்.அவர்களிடம் தினேஸ் வீட்டில் யாரும் பணம் கேட்பதில்லை.தினேஸின் தந்தையின் மேசன் வேலையிலும் வாழைத்தோட்டத்தில் இருந்தும் வரும் வருமானத்திலுமே அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.சொந்தப்பிள்ளைகள் என்றால் பணம் அனுப்பும்படி கேட்கலாம்.உறவினர்களிடம் எப்படிக்கேட்பது..?அதற்கு தினேஸின் தந்தையின் தன்மானம் ஒருபோதும் இடந்தரவில்லை.நான் கைகால் ஏலுமா இருக்கும் வரை உங்களுக்கு சாப்பாடு போடுவன் யாரிடமும் உதவி கேட்கக்கூடாது என்று வீட்டில் எல்லோரிடமும் கறாராக சொல்லிவைத்திருந்தார்.

இப்பொழுது காதல்ப்பித்து தலைக்கேறி இருந்த தினேஸ் ஒரு வேலை செய்தான்.யாருக்கும் தெரியாமல் இரண்டு உறவினர்களிடமும் தனித்தனியாகக் கோல் எடுத்து தனக்கு சீமா படிக்க அவசரமாக 75 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் வீட்டில் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் மறக்காமல் சொல்லி வைத்தான்.இவனின் வார்த்தைகளை நம்பி இருவரும் மொத்தமாக ஒரு இலட்ச்சத்து இருபத்தையாயிரம் அனுப்பி வைத்திருந்தனர்.இனி மோட்டர் பைக் வாங்க வேண்டியதுதான்.

அதிலும் ஒரு சிக்கல் இருந்தது.சிந்து வீட்டில் மோட்டார் பைக் எப்படி வந்தது என்று சொல்வது..?அதற்கும் ஒரு கதை தயார் செய்தார்கள் இருவரும்.சிந்துவுக்கும் ஒரு அண்ணண் லண்டனில் இருந்தார்.மாமா ஒருவரும் இருந்தார்.இருவரும் அவ்வப்போது அவளுக்கு பணம் அனுப்புவதுண்டு.அதிலிருந்து சேமித்த பணத்திலே ஸ்கூட்டர் எடுத்ததாக ஒரு கதையை தயார் படுத்தியிருந்தாள்.

காதல்,தேவை கருதியோ,சந்தர்ப்ப வசத்தாலோ பல பொய்களின் மேல் கட்டி எழுப்பப் படுகிறது.அந்தப்பொய்கள் உடையும்போதும் வீழாமல் நிற்கின்ற காதல்கள் மட்டுமே ஜெயிக்கின்றன.முதன் முதலில் புது மோட்டர் பைக்கில் சிந்துவையும் ஏத்திக்கொண்டு திண்ணை வேலி றோட்டால் உலகத்தையே மறந்து போனது அவன் வாழ் நாளில் மறக்க முடியாது.

காற்றில் பறந்து அவன் முகத்தை மூடிய அவள் கூந்தலில் இருந்த சோப்பின் வாசம் இப்பொழுதும் அவன் நாசித்துவாரங்களில் இருக்கிறது.ஞாபகக்குழிகளில் சேமித்து வைத்திருக்கும் அவன் வாழ்வின் மறக்கவே முடியாத கணங்களில் இதுவும் ஒன்று.பூமிப்பந்துக்கு வசந்த காலம் வருவது போல்,மரஞ் செடி கொடிகளுக்கு இலையுதிர்காலம் முடிந்து வசந்தகாலம் வருவதுபோல் மனிதர்களுக்கும் வாழ்வில் அவ்வப்போது வசந்தகாலம் வந்து செல்கிறது.அவை பின்னர் ஞாபகப்படிவங்களாக நினைவுக்குழிகளில் தேங்கிவிடுகின்றன.அவ்வப்போது அவற்றை மீட்டிப்பார்த்து இன்புறுகிறது மனிதமனம்.

மனித மனம்தான் எவ்வளவு விந்தையானது.எல்லாவிதமான உணர்ச்சிகளையும் கணப்பொழுதில் மீட்டிக்கொண்டு வந்துவிடுகிறது.உலகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த ஒரு பொருளும் மனித மனத்திற்கு ஈடாக முடியாது.எண்ணிலடங்கா விந்தைகளை தன்னகத்தே கொண்டது மனிதமனம்.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.பற்றற்ற முனிவனைப்போல அது சலனமற்றுக் கடந்து கொண்டிருக்கிறது.உலகத்தில் நிகழும் எந்த நிகழ்ச்சிகளாலும் அது சலனப் படுவதில்லை.ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வேண்டிய கணங்களை காலம் விரைவாகச் சுமந்து வந்து கொண்டிருந்தது.யுத்தம் நிலங்களைத்துண்டாடி உயிர்களை மட்டுமா பலி எடுக்கிறது..?பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்களுக்கும் அல்லவா காரணமாகிறது.பலகாதலர்களைப் பிரித்துப்போட்டுச் சிரித்துப்பார்க்கிறது யுத்தம்.

    ண்ணில் எண்ணெயை விட்டுக்கொண்டு திரியும் இராணுவத்தின் குகைக்குள்ளே நுழைந்து குண்டுகளை இடுப்பிலே கட்டிக்கொண்டு மரணத்தை தோழிலே சுமந்துகொண்டு திரிபவர்கள் உங்களுக்குச் சிலவேளை சாகசக்காரர்களாகத் தெரியலாம்.ஆனால் ராணுவப்பகுதியில் நிற்கும் புலிகளுக்கு அதுதான் வாழ்க்கை.

தூங்கும் போதுகூட இடுப்பில் உள்ள குண்டுகளை அணைத்தபடிதான் அவர்கள் தூங்குவது.அப்பொழுதும் கூட அவர்கள் மனம் மட்டும்தான் தூங்கப்போகிறது புலன்கள்விழித்தபடிதான் காவல் இருக்கும்.என்றோ ஒரு நாள் சந்திக்கப்போகும் சாவைத் தரிசிக்கப் பயந்துதான் மனிதர்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.ஏன் பொதுவில் மனிதமனம் அதை நினைத்துப்பார்க்கக்கூட விரும்புவதில்லை.அவற்றை நினைவுபடுத்துபவையிடம் இருந்து ஓடி ஒளிந்து மரணம் என்ற ஒரு முடிவிருக்கிறது என்பதை மறந்து வாழவே பெரும் பிரயத்தனம் செய்கிறது.

பெருங்கீரன் யுத்தம் தொடங்கினால் மறைந்திருந்து செயற்படுவதற்காய் புலிகளின் தலைமையால் சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுகிறான் வழமையான அரசியற்துறையினர் போலன்றி அவனின் கடமையின் தேவை கருதி தேசிய அடையாள அட்டையுடன் பஸ் ஏறி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம்வந்து சேர்கிறான்.

அவன் தங்குவதற்கு புலிகளின் தலைமையால் தெரிவு செய்யப்பட்ட அவர்களின் நம்பிக்கையானவர்களின் வீடுகளில் தினேஸ் வீடும் ஒன்று.அவன் முதலில் வந்து சேர்ந்ததும் அங்குதான்.தினேஸிற்கும் பெருங்கீரனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு.எல்லாவற்றையும் உதறி விட்டு போராடப்போன ஒருவனும் போராட்டத்தை நேசித்தாலும் உதறிப்போட முடியாமல் உணர்வுப்பந்தங்களில் சிக்குண்டு கிடக்கும் ஒருவனும் சந்திக்கிறார்கள்.

எங்களுக்காக எல்லாவற்றையும் இழந்தவர்கள் இவர்கள் என்ற உயர்ந்த மனதார்ந்த நேசத்தாலும் உயிர் அச்சுறுத்தல்களுக்குள்ளும் தாங்கிப்பிடித்திருக்கும் நம்பிக்கையானவர்கள் என்ற பாசத்தாலும் உருவான பிணைப்பு பெருங்கீரனுக்கும் தினேஸ் வீட்டிற்கும்.

உலகில் சமாதானம் யுத்தத்தை வெற்றி கொண்டது மிக அரிதாகத்தான் நடந்திருக்கிறது.எப்பொழுதும் யுத்தமே சமாதானத்தை வென்றுவிடுகிறது.யாழ்நகரெங்கும் சமாதானம் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பதைஅறிவிக்கும் வகையில் குண்டுகள் வெடிக்கின்றன.தமிழர்களின் வாழ்க்கை இன்னொரு இருண்ட காலத்திற்குள் நுழைகிறது.பெருங்கீரனுக்கும் செயற்பட வேண்டிய நேரம் வருகிறது.

பாகம் இரண்டிற்கு இங்கே அழுத்தவும்.

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் நன்றாகப் போகிறது

  • கருத்துக்கள உறவுகள்

சுபாஸ்,

பொட்டென்று தொடருமெண்டு விட்டிட்டீங்கள்... :lol: .அடுத்த தொடரைத் தாருங்கள் விரைவில்......

கிறுக்கலென்று நீங்கள் சொன்னாலும் கதைக்கான யாவற்றையும் உள்ளடக்கிய கதை இது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி,சாந்தி அக்கா! எனக்கும் விரைவாக எழுத வேண்டும் என்றுதான் ஆசை ஆனால் ரைப் பண்ணுவதை நினைத்தால் நித்திரை வந்துவிடுகிறது. :D

Edited by சுபேஸ்

நன்றி ரதி,சாந்தி அக்கா! எனக்கும் விரைவாக எழுத வேண்டும் என்றுதான் ஆசை ஆனால் ரைப் பண்ணுவதை நினைத்தால் நித்திரை வந்துவிடுகிறது. :D

சிறந்த எழுத்து நடை. வசனங்களை கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதினால் இன்னும் நல்லா இருக்கும்.

தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்!!! தொடர்ந்து கிறுக்குங்கோ சுபேஸ் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் புத்தன்,பகலவன்....

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்துநடை. நீண்ட கதையின் ஆரம்பம்மாதிரி உள்ளது. அவசரப்பட்டு செழுமையைக் குறைக்கவேண்டாம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் அண்ணா...

நான் தடக்கி விழுந்து எழுதுவதை எல்லாம் மன்னித்து எனக்கு ஊக்கம் தந்து அன்புடன் அழைத்துச்செல்லும் யாழ்கள உறவுகளுக்கும் என் எழுத்து தாகத்தை தீர்க்க இடம் தந்த யாழுக்கும் என்றென்றும் தலைவணங்குகிறேன்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம்-2

யாழ்ப்பாணத்தில் இப்பொழுது இளம்பொடியள் திரிவது அவ்வளவு

உசிதமானதல்ல என்ற நிலை. இளம் பொடியங்களை வைத்திருக்கும்

ஒவ்வொரு பெற்றோரும் அடி மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு

தவிக்கிறார்கள். படு கொலைகள் இல்லாத நாட்களே இல்லை என்னும்

அளவிற்கு மாதங்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

முன்னரெல்லாம் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வந்த கொலைச்செய்திகள் இப்பொழுது இரண்டாவது மூன்றாவது பக்கத்தில் சிறு பெட்டிக்குள் இடம் பிடிக்கிறது. வாழ்க்கை நரகத்தின் மடியில் நகர்ந்து கொண்டிருக்கிறது யாழ்ப்பாணத்தில்.

மனிதர்களை மனிதர்கள் சந்திக்கும்போது செயற்கையாகச் சிரிக்கிறார்கள். அந்தச்சிரிப்பில் உயிர் இல்லை. மரண பயம் மனதின் அடியிலிருந்து எல்லோருடைய புன்னகையையும் பிடுங்கி

விட்டிருக்கிறது. எல்லோரும் தங்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றி வைத்திருப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். நாட்கள் பெரும்போராட்டத்துடனேயே நகர்கிறது அவர்களுக்கு.

இயல்பிலேயே மண்பற்றுக் கொண்ட குடும்பம் தினேஸினுடையது. வீட்டில் ஒரு புலியை வைத்துப் பராமரிக்கும் அளவுக்கு போராட்டத்தில் ஈடுபாடுடைய குடும்பம். பல்கலைக்கழகத்தில் நடந்த எல்லா நிகழ்வுகளிலும் முன்னின்று உழைத்தவர்களில் தினேஸும் ஒருவன்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியில் தினேஸின் உற்ற நண்பன் குமரன்.

குமரன் யாழ்நகரில் உள்ள உடுப்புக்கடை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ஏ9 வீதியின் கதவடைத்த சிலமாதங்களில்

ஒரு நாள். யாழ்ப்பாணத்தின் அச்ச நிலைக்கு மேலும் அச்சமூட்டுவதுபோல் பகலை விரட்டிவிட்டு இருள் முன்னேறுகிறது. வழமையாக 6 மணிக்கு கடை பூட்டுவது. அன்று மாலை 5 மணியளவில் திருமணவீட்டிற்கு மணமகள் வீட்டுப்பகுதி உடுப்பு எடுக்க வந்திருந்தனர்.

இருந்த உடுப்புக்கள் எல்லாவற்றையும் கிண்டிக்கிளறி அவர்கள் புறப்படும்போது நேரம் மாலை 6 மணி ஆகிவிட்டது. நல்ல வியாபாரம் அவர்களால். அவர்கள் கலைத்து விட்டுப்போன உடுப்புக்களை

திரும்பவும் அந்தந்த இடங்களில் அடுக்கி வைத்து கடைக்கணக்கு

முடித்து கடை பூட்ட 7 மணி ஆகிவிட்டது குமரனுக்கு.

பசி வேறு உயிரை எடுக்கிறது. விரைவாக வீட்டைபோய்க் குளித்து விட்டு ராசாத்தியின் (குமரனின் அம்மா) சாப்பாட்டை ஒரு பிடிபிடித்து விட்டு அண்மையில் வாங்கிய சி.டி யில் இருந்த இளையராஜாவின் பாட்டுக்கள்

அனைத்தையும் கேட்டு முடித்துவிடவேண்டும் என்றுநினைத்துக்கொண்டே வேகமாக சைக்கிளை மிதிக்கிறான்.

கோம்பையன்மணல் மயானத்தடியை அண்மிக்கும்பொழுது அவனை

முந்திக்கொண்டு இருள் வந்து நிற்கிறது வீதிகளில். வேகமாக

எதிர்ப்பக்கம் இருந்து ஒரு சி.டி100 மோட்டார்பைக் அவனைநோக்கி

வருகிறது. இரண்டு மனிதர்கள் தலைக்கவசத்துடன் அதில் இருப்பது

தெளிவாகத்தெரிகிறது. குமரனுக்கு இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மோட்டார்பைக் நபர்களின்

மர்மக்கொலைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் ஒவ்வொரு

நாளும் பார்த்துப்பார்த்து இப்பொழுது மோட்டார்பைக்கில் யார் போனாலும்

மரண தூதுவர்கள் போவது போலவே தெரிகிறது அவனுக்கு.

அவனை விலத்திச்சென்றுவிட்டது அந்த மோட்டார்பைக். இப்பொழுதுதான் நின்ற அவன் இதயம் துடிக்கத்தொடங்குகின்றது. அவனைத் தாண்டிச்சென்ற அந்த மோட்டார்பைக் அப்படியே யூ ரேன் எடுத்து திரும்புவதை அதன் சத்தங்களில் இருந்து கணித்துக்கொள்கிறான்.

கண்கள் இருள்கிறது அவனுக்கு. அப்பொழுதுதன் விழித்துக்கொண்ட ஆந்தை ஒன்று அவன் இரத்தத்தை உறைய வைப்பது போல் அலறிக்கொண்டு தலைக்கு மேலால் பறந்து மறைகிறது. அந்த மயான வீதியில் அந்த நேரத்தில் அவனையும் அந்த மோட்டார்பைக் மனிதர்களையும் தவிர வேறு மனிதர்களின் நடமாட்டமே இல்லை.

இருள் நிறைந்த அடர்காடொன்றில் அவன் மட்டும் தனித்து விடப்பட்டது போலவும் அவனைச்சுற்றிக் கொடிய காட்டு மிருகம்கள் இரண்டு வட்டமிடுவது போலவும் உணர்கிறது மனம்.

தன் குடும்பத்தை நினைத்துபார்க்கிறான். அவன் போய் விட்டால் அவன்

குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என்ற ஏக்கம் நிறைகிறது

மூளையெங்கும். இப்படிப்பட்ட நேரங்களில் தன்னைவிட தன்

சொந்தங்களைப்பற்றியே அதிகம் கவலைப்படுகிறது மனித மனம்.

"டுமீல்" "டுமீல்" எனும் இரண்டு சத்தம்கள் அந்த அடர் இருளின் அமைதியைக் கிளித்துக்கொண்டு அந்த மயானப்பகுதியில் எழுந்து அடங்குகிறது. இப்பொழுது பழையபடி அந்த அமைதி எதுவுமே நடைபெறாததுபோல் அந்தப்பகுதியில் தொடர்கிறது. ஒரு மோட்டார் பைக் விலகிச்செல்லும் ஓசை மட்டும் தூரத்தில் மங்கியபடி கேட்கிறது.

ழக்கம்போல காலை தினேஸின் தந்தை ஓடர் பேப்பர் எடுத்து

வந்திருந்தார். வாசலில் இருந்தபடி தினேஸ் செய்தித்தாளின்

பக்கம்களைப் புரட்டியபோது கோம்பையன் மணல் மயானப்பகுதியில்

இளைஞ்ஞன் ஒருவன் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொலை சடலம்

இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்ற செய்தி

அவன் பார்வையில் படுகிறது. வழமைபோலவே இன்றும் ஒரு அப்பாவி

மனிதர்கள் சிலரின் தேவைக்காக நரபலி இடப்பட்டிருக்கிறான் என்று

நினைத்தபடியே அடுத்த பக்கம்களை மேய்கிறான்.

யாழ்ப்பாணத்தில் மக்கள் கொலைகளை வெறும் செய்திகளாகவே இப்பொழுது பார்த்துவிட்டுப்போகிறார்கள். அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் அவர்கள் வீதிகளில் வாயைத்திறப்பதைக்கூட அவதானத்துடனேயே செய்கிறார்கள். எதைப்பற்றியும் சிந்திக்கும் நிலையில் அவர்கள் இருக்கவில்லை.

நாட்களும்,வாரங்களும்,மாதங்களும் எந்தவித அர்த்தமும் இல்லாமலே வந்துவிட்டுப் போகிறது அவர்களுக்கு. மனிதர்களை வேட்டையாட துப்பாக்கிகள் அலைந்து கொண்டு திரிகையில் காடுகளில் திரியும் மான்களைப்போல தங்கள் உயிர்களைக்

காப்பாற்றிக்கொள்வதில் குறியாய் இருக்கிறார்கள் அவர்கள்.

தினேஸ் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது நேரம் காலை 10

மணியாகிவிட்டிருக்கிறது. பல்கலைக்கழக வாசலை அண்மித்தபோது

அவன் மொபைல் போனிற்கு குமரனிடம் இருந்து எஸ்.எம்.எஸ் ஒன்று

வருகிறது.

இன்னும் ஒரு மணித்தியாலத்தில் கோப்பாய்

துயிலுமில்லத்திற்கு அருகில் உடனடியாக வரும்படியும் தான் அங்கு

வந்து சந்திப்பதாகவும் முக்கியமான விடயம் ஒன்றைக்குறித்துப்

பேசவேண்டும் தொலைபேசியில் பேசமுடியாது என்றும் இருந்தது அந்த

எஸ்.எம்.எஸ்.

என்னவிடயமாக இருக்கும் என்று நினைத்தபடி குமரனின்

போனிற்கு அழைப்பை ஏற்படுத்தியபோது அது வேலை செய்யவில்லை.

குழம்ப்பிப்போனவனாக தினேஸ் பல்கலைக்கழகம் போகாது

சைக்கிளைத் திருப்பி கோப்பாய் துயிலுமில்லம் நோக்கி மிதிக்கிறான்.

பாகம் மூன்றிற்கு இங்கே அழுத்தவும்.

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பெருன்கீரன் சொந்த விருப்பில் இயக்கத்தில் சேர்ந்தவனோ? கட்டாய ஆட்சேர்ப்பில் சேர்க்கபட்டவனோ? இது எனக்கு தெரியாட்டி தலை வெடித்திடும் போலகிடக்குது...விரைவாக சொல்லுங்கோ..தொடருங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருன்கீரன் சொந்த விருப்பில் இயக்கத்தில் சேர்ந்தவனோ? கட்டாய ஆட்சேர்ப்பில் சேர்க்கபட்டவனோ? இது எனக்கு தெரியாட்டி தலை வெடித்திடும் போலகிடக்குது...விரைவாக சொல்லுங்கோ..தொடருங்கோ

பொறுங்கோ புத்தன், கொஞ்சம் கொஞ்சமா மூவ் பண்ணுவம், அதுக்கிடையில அவசரப்பட்டா... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம்-3

ப்படி வேகமாக மிதித்தாலும் மிதி வண்டி என்னவோ ஊர்ந்து கொண்டு போவது போலத்தான் இருக்கிறது தினேஸிற்கு.துயிலுமில்லத்திற்கு இன்னும் ஒரு அரைக்கட்டை தூரம் இருக்கையில் பெருங்கீரனிடமிருந்து கோல் வருகிறது.கோம்பையன் மணல் மயானத்தடியில் நேற்று இரவு குமரன் படுகொலை செய்யப்பட்டதாகவும் இனி நீ வீட்டுக்குப்போக வேண்டாம் உடனடியாகச் சிம்மைத்தூக்கி எறிந்து விட்டு தலை மறைவாகும்படியும் தெரிவிக்கிறான்.

இப்பொழுது தினேஸின் மூளையில் பொறி தட்டுகிறது. தான் ஆபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான் என்பதை அவன் மனம் உணர்கிறது.உடனடியாக அருகிலிருந்த தோட்டக்காணிகளினூடாக பாம்புபோல் வளைந்து வளைந்து செல்லும் வீதியூடே மிதிவண்டியை திருப்புகிறான். துரத்தி வரும் வேட்டை நாயிடம் இருந்து தப்பி ஓடும் புள்ளிமானைப்போல நெஞ்சுபடபடக்க முடிந்தவரை மெயின் ரோட்டைத்தவிர்த்து மட்டுவில் நோக்கி சைக்கிளை மிதிக்கிறான்.

குமரன் ஒன்றுமறியா அப்பாவி. அவன் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைக்க நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது தினேஸிற்கு. குமரனின் முதலாளி விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் தனதும் தன் கடையினதும் சார்பாகக் குமரனை அனுப்பி வைத்துவிட்டு தான் பதுங்கிக்கொள்வார். இப்படித்தான் போராட்டத்தை கொஞ்சப்பொடியளிடம் விட்டுவிட்டு மிச்சப்பேர் எட்ட நின்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.குருவி கட்டும் கூட்டில் ஓட்டைகளைப் பற்றி மட்டும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் இன்னும் கொஞ்சப்பேர்.

குமரன் யாழ்ப்பாணத்தில் புலிகளின் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் தான் வேலை செய்யும் கடை சார்பாக வர்த்தக சங்கத்தினூடாக செல்ல வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் அவன் வேலையை இழக்க வேண்டி வரலாம்.அவன் எல்லாவற்றிலும் கொடியைப் பிடித்துக்கொண்டு முன்னுக்கு நிற்க வேண்டியிருந்தது. இப்படித்தான் அவன் இனந்தெரியாதவர்களின் துரோகியான கதை இருந்தது. இப்பொழுதும் அவன் முதலாளி பத்திரமாகத்தான் இருக்கிறார்.குமரனின் குடும்பம் இனித்தெருவில் நிற்கப்போகிறது. இப்படித்தான் பல குடும்பங்கள் தெருவில் நிற்கின்றன.

மிகுந்த ஏழ்மையில் உழன்ற தன் குடும்பத்தில் வறுமையை இல்லாதொழித்து சமூகத்தில் பசியும் வறுமையும் அற்ற ஒரு நிலைக்கு உயர்த்த ஓடிக்கொண்டிருந்தவனின் வாழ்க்கையைப் பலவந்தமாகப் பறித்தெடுத்திருக்கிறார்கள்.அவன் வாழ்வதற்கான உரிமையை மறுப்பதற்கான அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தது..? அவனை அப்படிப்பட்ட ஆபத்துக்குள் சிலர் தெரிந்து கொண்டே தள்ளியதும் சரியானதுதானா..?

வலியன எஞ்ச எளியன அழிந்த கதைகள் வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறது. வாழ்க்கையின் சக்கரங்கள் வலி நிறைந்த அதி பயங்கரமான நாட்களை அவன் குடும்பத்திற்கு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது. மீளமுடியாத துயர வெளியில் ஒரு நொடியில் அவன் குடும்பம் தூக்கி வீசப்பட்டிருக்கிறது.அவன் வாழ்க்கை வறுமையிலும் எவ்வளவு இனிமையாக இருந்தது.அன்பு நிறைந்த மனிதர்கள் அவன் உலகத்தில் இருந்தார்கள். அவர்களின் புன்னகையை,எதிர்காலத்திற்கான நம்பிக்கையை,அவர்களின் கனவை என எல்லாவற்றையும் காலம் இப்பொழுது பறித்துக் கொண்டு வெறுமையைப் பரிசளித்துவிட்டுப் போயிருக்கிறது.

கேள்விகள் இன்றியே யாரோ அவன் வாழ்க்கைக்கு தீர்ப்பெழுதி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.மரணத்தை வழங்குவதற்கான அதிகாரத்தை மனிதர்களுக்கு கொடுத்த கடவுள் ஒழிந்து போவதாக என்று இயலாமையில் மனதிற்குள் திட்டியவாறு ஆத்திரத்துடன் இன்னும் வேகமாக சைக்கிளை மிதிக்கிறான். கோப்பாய் தாண்டி தரவைக்கை விழுந்திட்டா அங்காலை கைதடி.கைதடிக்க போட்டா பிறகு வேகமாக மட்டுவிலுக்குள் இறங்கலாம். மனதில் கணக்குப் போட்டபடி சைக்கிளை மிதிக்கிறான் தினேஸ்.

" மொக்குச்சாந்தத்தின் மோன் மரியதாஸ் ஊரில பெரிய சண்டியனாத்திரிஞ்சவன். அதோட மாற்று இயக்கம் ஒண்டுடனும் அப்பிடி இப்பிடிக் கொஞ்சம் பழக்கம். சமாதானம் வந்து இயக்கம் ஊருக்க வந்தவுடன் வாலைச்சுருட்டி வச்சுக்கொண்டு திரிஞ்சவனால் கனகாலத்துக்கு அப்பிடி இருக்க முடியவில்லை. கள்ளுத்தவறணையால நிறை வெறியில குறுக்குமறுக்குமா சைக்கிளை ஓடிக்கொண்டு வந்தவனை இருட்டுக்குள் ஆள் தெரியாமல் வில்லங்கம் ராசன் தூசனத்தால ஏசிப்போட்டான். சும்மா விடுவானோ மரியதாஸ். பழைய சண்டியனெல்லோ.

கட்டிப்பிரண்டு மல்லாக்கை விழுத்தீட்டான் வில்லங்கம் ராசனை. வில்லங்கம் ராசனும் லேசுப்பட்ட ஆளில்லை. கொதியன். எத்திக்கொண்டு எழும்பின வில்லங்கம் ராசன் மண்னைத்தட்டிக்கொண்டு மரியதாஸின் செவிட்டைப் பொத்தி விட்டான் ஒரு அறை. மரியதாஸுக்கு பொறிகலங்கீட்டுது. வெறியில நிலை தடுமாறி நின்டவன் வில்லங்கம் ராசன்ரை அறையில துப்பரவாய் ஏலாமல் போயிட்டான். அப்பிடியே வில்லங்கம் ராசன் மேல விழுந்து போனான்.

வில்லங்கம் ராசன் கீழ மரியதாஸ் மேல. மரியதாஸின்ர வாய்க்கு வசதியா அம்பிட்டது வில்லங்கம் ராசன்ர காது. ஒரே கடி. முதலைக் கடி. வில்லங்கம் ராசன்ர காதுச்சோனை மரியதாஸின்ர வாய்க்குள்ள. பயந்துபோன வில்லங்கம் ராசன் சைக்கிளையும் விட்டிட்டு காதைப்பொத்திக்கொண்டு வலியில கத்திக்கொண்டு ஓடித்தப்பீட்டான். வில்லங்கம் ராசன்ரை காதுச்சோனையைத் துப்பிப்போட்டு வாயாலை ரத்தம் வடிய வடிய விதானை வீட்டு ஒழுங்கையாலை விழுந்து வீட்டைபோய் பூனைமாதிரிப் படுத்திட்டான் மரியதாஸ்.

விடிய பத்து மணியளவில் அரசியல்துறைப் பொடியள் ரெண்டு பேர் கோன் அடிக்கேக்கதான் கண்ணைத்துடைச்சுக்கொண்டு எழும்புறான். அண்னை மோட்டர்ச்சைக்கில்லை ஏறுங்கோ ஒபிஸுக்கு ஒருக்காப் போகோணும். பொடியங்கள் சொன்னதும் பேச்சுமூச்சில்லாம மரியதாஸ் ஏறி இருந்திட்டான். நடுவில மரியதாஸ் முன்னுக்கும் பின்னுக்கும் இயக்கப்பொடியள். றோட்டில இருக்கிற பள்ளம் பிட்டியளில விழுந்தெழும்பி மோட்டச்சைக்கிள் போகுது. மரியதாஸுக்கு சுதியெண்டால் சுதி. இயக்கப் பொடியளின்ர மோட்டச்சைக்கிளில ஊரெல்லாம் பாக்க சவாரி செய்யுறதை நினைச்சா பெருமை தாங்கமுடியுதில்லை. விலாசமா றோட்டில தெரியிற ஊர்ச்சனத்தைப் பாத்து தலையாட்டிக்கொண்டு வாறான் மரியதாஸ்.

அரசியல்துறை ஒபிஸிற்க வந்திறங்கத்தான் விசயம் ஓடி வெளிக்குது மரியதாஸுக்கு. வில்லங்கம் ராசன் காதைக்கவர்பண்ணி பெரிய பண்டேச்சோட கதிரையில இருக்கிறான். விசாரணை ஆரம்பமாகுது. வில்லங்கம் ராசன்ரை காதுக்கட்டையும் அவன் பொடியளுக்கு முன்னாலை அழுது குழறிக்குடுத்த அக்சனையும் பாத்திட்டு வட்டுவகால்தான் எண்டு முடிவாய்த்தீர்மானிச்சிட்டான் மரியதாஸ். அவனுக்கு அழுகை அழுகையாய் வருகுது. கள்ளும் பீடியும் இல்லாத ஒரு நாளை அவனால் நினைச்சுக்கூடப்பார்க்க முடியவில்லை.

இரண்டு பேரையும் விளங்கின பொறுப்பாளர் வில்லங்கம் ராசனை அனுப்பிப்போட்டு மரியதாஸை ஒரு ரூமுக்குள்ள போட்டு பூட்டிப்போட்டு போட்டார். இரண்டு மணித்தியாலத்தில திரும்பி வந்த அந்தப்பொறுப்பாளர் என்ன மூட்டில நிண்டாரோ தெரியாது. வெளியால கூட்டிவந்து அந்த அலுவலகத்தின் பின்னால நிண்ட ஒரு மாமரத்தின்ர மறைவிலை வைச்சு பச்சை மட்டையால செம அடி. அண்டைக்குப் பின்னேரம் அந்தப்பொறுப்பாளர் வன்னிக்கு மூண்டு நாள் அலுவலாப் போயிட்டார். இரவுபோல இவனைப் பூட்டி வச்ச ரூமுக்கு சாப்பாடு கொண்டு வந்த இயக்கப்பொடியளோட கதைச்சுப் பழக்கம் புடிச்சிட்டான் மரியதாஸ்.

அடுத்த நாள் அந்த ஒபிஸில நிண்ட எல்லாப்பொடியளோடையும் நல்ல பிற் ஆயிட்டான். மரியதாஸ் நல்லா சமைப்பான். இறைச்சிக்கறி சமைச்சானா இருந்தா சொல்லி வேலை இல்லை. ஒபிஸிற்கு அப்பொழுது வேறு இடத்தில இருந்துதான் சாப்பாடு வாறது. மரியதாஸ் பொடியங்களோட கதைச்சு அண்டைக்கு இறைச்சி வேண்டி ஒபிஸில மரியதாஸ் தலைமையில சமையல். அந்தமாதிரிச் சாப்பாடு. அதோட இயக்கப்பொடியளோட பழக்கமானவன் தான். இப்ப குண்டு வாங்கி வந்து எறியிற அளவுக்கு நம்பிக்கை ஆகிட்டான்.

மரியதாஸ் மண் ஏத்தப்போறவன். இயக்கத்திலை இவனுக்குள்ள செல்வாக்காலை அரியாலையிலை குறிப்பிட்டளவு மண் ஏத்த இவன் போற ரைக்றருக்கு அனுமதி வேண்டிக்குடுத்திடுவான். இதால மண் ஏத்திற வட்டத்தில இவனுக்கு நல்ல செல்வாக்கு. இது தான் அவன் இயக்கத்தோட ஒட்டாத்திரியிறதுக்கு முக்கிய காரணம். அதோட இவனுக்கு ஒரு குண்டுக்கு இவ்வளவு எண்டு இயக்கம் காசு குடுப்பதாகவும் ஊருக்குள் அரசல் புரசலாக ஒரு கதை உலாவியது."

இப்படித்தான் மரியதாஸ் இயக்கத்துடன் ஒட்டானவான்.....

பெருங்கீரன் தான் மரியதாஸை தினேசுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தான். நம்பிக்கையான ஆள் எண்டு பெருங்கீரன் சொன்னபடியால் தினேஸும் மரியதாஸுடன் நல்ல பழக்கம். இடைக்கிடை மட்டுவிலில் உள்ள மரியதாஸின் தோட்டக்காணிக்கை மரியதாஸுடன் சேர்ந்து கூழ் காய்ச்சி கள்ளும் வாங்கி வந்து அடிச்சிருக்கிறான். அதனால்தான் மரியதாஸ் வீட்டில் இரண்டு நாட்கள் இருப்போம் என்று மட்டுவிலுக்கு வந்து கொண்டிருக்கிறான். மரியதாஸ் வீட்டை நெருங்கும்போது வீட்டு வாசலில் ஆமியின் பவள் கவச வாகனம் ஒன்று நிற்பது தெரிகிறது.

பாகம் நான்கிற்கு இங்கே அழுத்தவும்.

Edited by சுபேஸ்

நல்ல ஆக்கம். இப்படி எத்தனையோ வாழ்க்கைகள். உயிர்கள்.

உண்மை கதை என்று நினைக்கிறேன். பதிவு செய்யுங்கள் சுபேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகம்-3

பெருங்கீரன் தான் மரியதாஸை தினேசுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தான். நம்பிக்கையான ஆள் எண்டு பெருங்கீரன் சொன்னபடியால் தினேஸும் மரியதாஸுடன் நல்ல பழக்கம். இடைக்கிடை மட்டுவிலில் உள்ள மரியதாஸின் தோட்டக்காணிக்கை மரியதாஸுடன் சேர்ந்து கூழ் காய்ச்சி கள்ளும் வாங்கி வந்து அடிச்சிருக்கிறான். அதனால்தான் மரியதாஸ் வீட்டில் இரண்டு நாட்கள் இருப்போம் என்று மட்டுவிலுக்கு வந்து கொண்டிருக்கிறான். மரியதாஸ் வீட்டை நெருங்கும்போது வீட்டு வாசலில் ஆமியின் பவள் கவச வாகனம் ஒன்று நிற்பது தெரிகிறது.

தொடரும்...

திரும்பவும் பொட்டென்று நிப்பாட்டிட்டீங்கள் சுபேஸ் :lol:

கதையின் நகர்வு ஒரு நாவலுக்கான உத்திகளுடன் கொண்டு செல்கிறீர்கள்.

அடுத்த தொடர் எப்ப...????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம். இப்படி எத்தனையோ வாழ்க்கைகள். உயிர்கள்.

உண்மை கதை என்று நினைக்கிறேன். பதிவு செய்யுங்கள் சுபேஸ்.

நன்றிகள் Eas...

திரும்பவும் பொட்டென்று நிப்பாட்டிட்டீங்கள் சுபேஸ் :lol:

கதையின் நகர்வு ஒரு நாவலுக்கான உத்திகளுடன் கொண்டு செல்கிறீர்கள்.

அடுத்த தொடர் எப்ப...????

:D

நன்றி சாந்தி அக்கா... ஆம் அக்கா.. தொடர் தயார், ரைப் பண்ண வேண்டியதுதான் பாக்கி...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி துரோகி இது இரண்டிற்குள்ளும் அகப்படாமல் தியாரோகி யாக கதையை நகர்த்தவும். அதுதான் என்னாலை சொல்லக்கூடியது. :lol:

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாகி துரோகி இது இரண்டிற்குள்ளும் அகப்படாமல் தியாரோகி யாக கதையை நகர்த்தவும். அதுதான் என்னாலை சொல்லக்கூடியது. :lol:

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம்-4

சீறிவரும் நாகத்திடமிருந்து தப்பியோடும் இரையைப்போல உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கிறான் தினேஸ். காலை பத்து மணிக்கு தொடங்கிய ஓட்டம் மதியம் பன்னிரண்டு ஆகிறது. இன்னமும் தொடர்கிறது. மரியதாஸின் வீட்டு வாசலிலும் பச்சை இயந்திரங்கள் நிற்கிறது. ஏதோ தவறு நடந்து விட்டிருக்கிறது. இனி மரியதாஸ் வீடும் பாதுகாப்பானதல்ல. வீட்டிற்கும் செல்ல முடியாது. இபோழுது அவனுக்குத் தெரிந்த பாதுகாப்பான ஒரே இடம் வள்ளியம்மைப்பாட்டி வீடுதான்.

வள்ளியம்மைப்பாட்டியின் வீடு வடக்கு மிருசுவிலில் இருந்தது. வள்ளியம்மைப்பாட்டி கல்லிலும் முள்ளிலுமாய்க் காலத்தோடு காலமாகக் கிடந்து வாழ்க்கை வெளியில் தேய்ந்து கொண்டிருக்கும் பெண். வெய்யிலோடு வெய்யிலாகக் கிடந்து வயலிலும் பொட்டல் வெளிகளிலும் வாழ்க்கை வண்டியை சுமந்து செல்பவள். வார் அறுந்த செருப்பைப்போல் வடகுக்காட்டின் கண்டல் நிலங்களில் கிடந்து காய்பவள். வாழ்க்கையை அதன் போக்கிலேயே கடந்து கொண்டிருப்பவள்.

தினேஸின் அம்மாவின் அம்மாவும் வள்ளியம்மைப்பாட்டியும் ஒன்றாக வளர்ந்தவர்கள். தினேஸின் அம்மம்மா இறந்தபின் வள்ளியம்மைப்பாட்டிதான் தினேஸின் அம்மாவிற்கு எல்லாவற்றிலும் துணையாக இருந்தவள். அம்மாவுடன் இன்னொரு அம்மாவாக தினேஸிற்கு சிறுவயதிலேயே நெருக்கமானவள்தான் வள்ளியம்மைப்பாட்டி. யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்தபோது தினேஸ் வீடு உரிமையோடு வந்த இடம் வள்ளியம்மைப்பாட்டியின் வீடுதான்.

வறுமையை வாசலிலேயே அடையாளமாய்க் காட்டிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தின் சராசரி ஓலைக்குடிசைகளில் ஒன்றுதான் வள்ளியம்மைப்பாட்டியின் வீடும். கூடவே ஒட்டிக்கொண்டு வரும் வறுமையைச் சுமந்து கொண்டுதான் அவள் வாழ்க்கை வண்டி ஓடுகிறது. வள்ளியம்மைப்பாட்டி வடகுக்காட்டின் கண்டல்ப்பத்தைகளின் இடையே ஊடுபோக்காக வளர்ந்திருக்கும் வடலிப்பனைகளில் அவளைப்போலவே யாரும் தேடுவாரற்றுக் காய்ந்துபோய்க்கிடக்கும் மட்டைகளை வெட்டிவந்து விற்றுத்தான் தனக்கும்,அந்த வீட்டு முற்றத்தின் ஒரு ஓரத்தில் எந்நேரமும் சுருண்டு படுத்திருக்கும் வயிறும் முகமும் ஒடுங்கிய ஒரு நாய்க்கும்,அவளைப்போலவே எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் அந்தச்சிறு சதுர வளவுக்குள் எந்நேரமும் எதையாவது கிண்டிக்கொண்டிருக்கும் சில கோழிகளுக்கும் சேர்த்து ஒவ்வொரு நாளையும் அனுப்பிக்கொண்டிருந்தாள்.

எப்படியாவது நூறு இருநூறு மட்டைகளையாவது ஒரு வாரத்திற்குள் சேர்த்துவிடுவாள் வள்ளியம்மைப்பாட்டி. தலையில் ஒரு துணியை திருகணைபோல் சுருட்டி வைத்துக்கொண்டு காட்டுக் கொடிகளால் சுற்றிக்கட்டப்பட்ட பனைமட்டைக் கட்டையும் காவிக்கொண்டு வயல் வெளிகளைத்தாண்டி மாலைக்கருக்கலில் ஒவ்வொருநாளும் ஒரு புள்ளிபோல் தூரத்தே சொல்லொணாதா துயரங்களோடு பயணிக்கும் ஒரு ஏழைக்கிழவியாய் தன் நிழலுடன் தனியே வறுமையை எதிர்த்து நடந்து கொண்டிருப்பாள் வள்ளியம்மைப்பாட்டி. கொண்டுவந்த பனம் மட்டைகளை அழகாகக் கங்குசீவி மூரிவெட்டி நாலுகல்லை சதுரப்பெட்டிபோல் அடுக்கி அதன்மேல் குறுக்காகவும் நெடுக்காகவும் எட்டுத்தடிவைத்துச் செய்த பரணில் அழகாக அடுக்கி வைத்திருப்பாள். ஒரு மட்டை ஒரு ரூபாய் அளவில் போகும்.

தினேஸ் ஒவ்வொரு முறை வள்ளியம்மைப்பாட்டி வீட்டுக்கு வரும்போதும் வேலுக்கிழவரைப்புடிச்சுக் கோழி அடிச்சுக் குழம்பு வைப்பாள் இல்லாவிட்டால் சிப்பிப்பணியாரமோ,பனங்காய்ப்பணியாரமோ,பருத்தித்துறை வடையோ என்று ஏதாவது ஒன்று செய்து ஒரு பெரிய டப்பாவில் போட்டு அம்மாவிற்கும் சேர்த்து தந்து விடுவாள். அரிசிப்பானைக்குள் போட்டு மூடிவச்சிருக்கும்நெஸ்ற்ரமோல்ட் ரின்னில் இருந்து கசங்கிய பத்து ரூபாய்த்தாள் ஒன்றோ இல்லைக் கொஞ்சம் சில்லறைகளையோ தந்துவிட அவள் ஒருபோதும் மறந்ததில்லை. அவற்றை அவன் வேண்டாம் என்று எவ்வளவு மறுத்தாலும் வள்ளியம்மைப்பாட்டி விடமாட்டார். அந்த ஏழைக்கிழவியின் அன்பில் அவன் கடைசியில் தோற்றுப்போவான். ஜந்தோ பத்தோ இருக்கும் அந்தக்காசுகளைவிட அதன் வளியே ஒழுகும் அந்த ஏழைக்கிழவியின் அன்பு பத்திரப்படுத்தப்பட வேண்டியதாக இருந்தது அவனுக்கு.

சராசரி மனிதர்களுக்கே உரிய ஆசைகளிலும் துன்பங்களிலும் கிடந்து உழலும் பொழுதுகளில் எல்லாம் அவன் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு ஓடிவர விரும்பிய இடம் வள்ளியம்மைப்பாட்டியின் வீடுதான். அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் நின்மதியும் அன்பும் நிறைந்து கிடந்தது. பரந்த அன்பைத் தலைமுறை தலைமுறைக்குக் காவிக்கொண்டிருக்கும் ஒரு பற்றற்ற முனிவனின் குடிலைப்போல மெளனமாக அன்பின் விழுதுகளை இப்பேரண்டத்தில் பரப்பிக் கொண்டிருந்தது வள்ளியம்மைப்பாட்டியின் வீடு. வள்ளியம்மைப்பாட்டியைப்போல ஆயிரம் ஆயிரம் வள்ளியம்மைகள் ஈழத்தின் காட்டிலும் மேட்டிலுமாய் மண்ணோடும் பாறைகளோடும் காடுகளோடும் வயல்களோடும் ஒன்றாகி ஏழ்மை எரிக்கும் வாழ்க்கை நிலத்திலும் அன்பையும் உபசரிப்பையும் கசியவிட்டு பூமிப்பந்தை ஈரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ரியதாஸிற்கு என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி தினேஸின் மண்டையைக் குடைந்து கொண்டே இருக்கிறது. வள்ளியம்மைப் பாட்டியின் வீட்டை நெருங்கும்போது பயம் வியர்வை வளியே கரைந்து அவன் வெள்ளைச்சட்டையை ஆங்காங்கே திட்டுத்திட்டாக ஈரப்படுத்தியிருந்தது. காலையில் இருந்து சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்ததில் கால்கள் கடுமையாக வலி எடுத்துக்கொண்டிருக்கிறது. பசிவேறு உயிரை எடுக்கிறது. கதவைத்திறந்து உள் நுழைந்தபோது வள்ளியம்மைப்பாட்டி அடைக்குவைத்த கோழிமுட்டைகளை ஒரு நெளிந்த பாத்திரத்தில் நிறைந்திருந்த நீருக்குள் ஒவ்வொன்றாக வைத்து குஞ்சு வைத்திருக்கிறதா என்று சோதித்துக்கொண்டிருந்தாள்.

தினேஸைக் கண்டதும் வாடா ராசா என்று வாய் நிறைய அழைத்தவள் ஒரு செம்பில் தண்ணிதந்து மத்தியான வெய்யிலுக்கை வெளிக்கிட்டுருக்கிறாய் நல்லாய்க் களைத்திருப்பாய் கையை அலம்பிட்டு வாராசா சாப்பிட என்று ஒரு ஏழைப்பேரரசின் ராணிபோலக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள். கைகளைக் கழுவிவிட்டு சாணியால் மெழுகிய திண்ணையில் அமர்ந்தபோது தனது சுருக்கமும் அன்பும் எளிமையும் நிறைந்த கைகளால் பரிமாறத்தொடங்கியிருந்தார் வள்ளியம்மைப்பாட்டி. சாப்பிடும்போதே ஆமிப்பிரச்சினையால் சில நாட்கள் அங்கு தங்கியிருக்கப்போவதை வள்ளியம்மைப்பாட்டிக்குத் தெரிவித்திருந்தான்.

அதிகம் வெளியில் தலைகாட்டக்கூடாதென்று முடிவு செய்திருந்தான் தினேஸ். ஊரவர்களுக்குத் தெரியும் தினேஸ் வீடு வள்ளியம்மைப்பாட்டிக்கு நெருங்கியவர்கள் என்று. என்றாலும் அந்தப்பிரச்சனையான நேரத்தில் தான் தனியே நீண்டநாட்கள் அங்கு தங்கியிருப்பது யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி விடக்கூடாதென்பதில் அவதானமாக இருந்தான் தினேஸ். கைத்தொலைபேசியின் சிம் அட்டையை கோப்பாயிலேயே தூக்கி எறிந்துவிட்டு வந்திருந்தான் தினேஸ். தான் பத்திரமாக வள்ளியம்மைப்பாட்டி வீட்டில் இருக்கும் தகவலை வீட்டுக்கு அனுப்புவதற்கும் மரியதாஸின் நிலையை அறியவும் வேலுக்கிழவரே சரியான ஆள் என்று தீர்மானித்திருந்தான் தினேஸ்.

வேலுக்கிழவர் எங்கேயாவது ஒரு வீட்டில் குழந்தைகளுக்கு அல்லது சில வளர்ந்தவர்களுக்கு நடுவில் துன்பங்களில் உழலும் இந்த உலகத்தில் ஒட்டாது தானும் ஒரு குழந்தையாகப் பழைய எம்.ஜீ.ஆர் படப்பாடல்களில் ஏதாவது ஒன்றைப்பாடி அவர்களை மகிழ்வித்துக்கொண்டிருப்பார். வேலுக்கிழவர் தனி ஆள். பாச இழைகளால் மீளமுடியாத குடும்ப வலையைப்பின்னி உலகபந்தத்தில் விழவைக்கும் திருமணத்தில் சிக்காமல் தனி ஆளாகவே வாழ்ந்து கொண்டிருந்தார் வேலுக்கிழவர். காற்றைப்போல எதிலும் சிக்காமல் காடுகளிலும் மேடுகளிலும் தனியாளாகவே திரிந்து கொண்டிருந்தார் வேலுக்கிழவர்.

வேலுக்கிழவர் அந்த ஊரில் எல்லோராலும் விரும்பப்படும் மனிதர். மிள்காய்த்தோட்டத்திற்கு காவல் இருப்பது,கடைக்குப்போவது,தண்ணி அள்ளிக்கொடுப்பது,ஆடு மாடுமேய்ப்பது,கோழி அடித்துக்கொடுப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளைச் செய்து கொடுப்பதால் அந்த ஊரவர்கள் எல்லோரதும் பிரியத்துக்குரியவர் வேலுக்கிழவர். அவற்றுக்காக அவர் ஒரு போதும் பணம் வாங்கியதில்லை. அவர்கள் விரும்பி ஏதாவது உணவைக்கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு அடுத்த வீட்டுக்குச் சென்றுவிடுவார் வேலுக்கிழவர். வள்ளியம்மைப்பாட்டி மூலம் வேலுக்கிழவரை வரவழைத்து விடயத்தைச் சொல்லி செலவுக்கு ஜம்பது ரூபாய் காசும் கொடுத்து அனுப்பி வைத்திருந்தான் தினேஸ். மாலையில் இரண்டு செய்திகளுடன் வந்து சேர்ந்தார் வேலுக்கிழவர்.

பாகம் ஜந்திற்கு இங்கே அழுத்தவும்.

Edited by சுபேஸ்

வெளிநாடுகளுக்கு வந்து கண்டறியாத நாகரிகம் கற்று, பூச்சு வாழ்க்கைக்கு பழகி, பழகி, மிகமுக்கியமானவற்றை இழந்து வருகிறோம். வள்ளியம்மைப்பாட்டியும், வேலுக்கிழவரும் தரும் சுயநலமில்லா அன்பு எங்கே கிடைக்கும்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா போதண்ணா....அடுத்த பாகத்த வாசிக்க நாங்க றெடி போட நீங்க றெடியா?

  • கருத்துக்கள உறவுகள்

பாகம்-4

சீ.

வேலுக்கிழவர் அந்த ஊரில் எல்லோராலும் விரும்பப்படும் மனிதர். மிள்காய்த்தோட்டத்திற்கு காவல் இருப்பது,கடைக்குப்போவது,தண்ணி அள்ளிக்கொடுப்பது,ஆடு மாடுமேய்ப்பது,கோழி அடித்துக்கொடுப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளைச் செய்து கொடுப்பதால் அந்த ஊரவர்கள் எல்லோரதும் பிரியத்துக்குரியவர் வேலுக்கிழவர். அவற்றுக்காக அவர் ஒரு போதும் பணம் வாங்கியதில்லை. அவர்கள் விரும்பி ஏதாவது உணவைக்கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு அடுத்த வீட்டுக்குச் சென்றுவிடுவார் வேலுக்கிழவர். வள்ளியம்மைப்பாட்டி மூலம் வேலுக்கிழவரை வரவழைத்து விடயத்தைச் சொல்லி செலவுக்கு ஜம்பது ரூபாய் காசும் கொடுத்து அனுப்பி வைத்திருந்தான் தினேஸ். மாலையில் இரண்டு செய்திகளுடன் வந்து சேர்ந்தார் வேலுக்கிழவர்.

தொடரும்...

எங்கட ஒரிலும் ஒருவர் இருத்தவர், அவர் பெயர் மாரிமுத்தர், அவர் ஊர் முழுக்க வீடுகளில் மரம் நாடுவதுதான் அவரின் வேலை, கள்ளுக்கு காசு கொடுத்தல் சரி,

அவர் நன்றாக பாடுவர், அவரின் சுன்னத்து பாட்டு இல்லாமல் ஒரு செத்த வீட்டையும் பார்கள

  • கருத்துக்கள உறவுகள்

வேலுக்கிழவரும் , வள்ளியம்மைப் பாட்டியும், இன்னும் வாழ்கின்றார்கள்! எந்த வறுமையிலும் தங்கள் பொக்கு வாய்களால், கவலைகளின் சுவடுகள் தெரியாமல் சிரிக்க இவர்களைப் போன்றவர்களால் மட்டுமே முடியும்! புலத்து வாழ்வில், காலத்தின் கரைவில்,இந்தக் குணாதிசியங்களை எங்களை அறியாமலே இழந்து கொண்டு வருகின்றோம்!

கொஞ்ச நேரமாவது,எம்மை ஊரில் வாழ வைத்ததற்கு நன்றிகள் சுபேஸ்! தொடருங்கள்!!!

பொருளாதார இலாப நட்டங்களை மட்டும் பார்க்கப் பழகிவிட்ட நாங்கள், உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் இலாப நட்டங்களைக் கணக்கெடுப்பதில்லை!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம்-5

தினேஸ் இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா போகவேண்டும் அதற்குரிய ஒழுங்குகள் அவன் தந்தையால் செய்யப்படுகின்றன,மரியதாஸ் வீட்டிற்கு ராணுவம் வந்தபோது அவன் அங்கு இல்லை, தப்பி ஓடித் தலைமறைவாகிவிட்டிருந்தான், அவன் வீட்டைச் சோதனையிட்ட ராணுவத்தினர் சில கைக்குண்டுகளை கைப்பற்றிச் சென்றனர் என்பதாகவும் இருந்தன வேலுக்கிழவர் காவி வந்த இரண்டு செய்திகளும்.

வாழ்க்கை நொடிக்கொரு முறை மாறிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களின் எதிர்பார்ப்புக்களை,ஆசைகளை,ஏக்கம்களை சிலநேரங்களில் எதிர்த்து மோதியும்,சில நேரங்களில் கவிழ்த்துப் போட்டும்,சில நேரங்களில் தட்டிக் கொடுத்தும் விளங்க முடியாத விந்தையாக நொடிக்கு நொடிதன் விதிச் சவுக்கை வீசிக்கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. காலம் அவனைத் தாய் மண்ணில் இருந்து பிடுங்கித் தனிமராய்ப் பனிதேசத்தில் எறிந்துவிடத் தயாராகிக் கொண்டிருந்தது. வேரை விட்டுப்பிரியும் சோகத்தினால்ப்போலும் மெளனமாய்ப்போய் விட்டிருந்தன வள்ளியம்மைப்பாட்டி வீட்டில் இருந்த இரண்டு நாட்களும்.

இந்த இரண்டு நாட்களும் மரணத்தைப்பற்றித்தான் அதிகமாக அவன் மனம் அலசிக்கொண்டிருந்தது. கொலைகளைப்பற்றியதாகவே கனவுகளும் வந்து தொலைக்கிறது. வெல்லமுடியாத மரணத்திடமிருந்து மனிதர்கள் தங்கள் இருப்பை நிலையாக்குவதற்காக வாழ்க்கை முழுவதும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நிலையற்ற இந்த வாழ்க்கைக்காகத்தானே இவ்வளவு ஓட்டங்களையும் பாடுகளையும் மனித இனம் காலம்காலமாகச் சுமக்கிறது.

மதியம் தினேஸின் தந்தை அவனின் சில உடைகளையும் தேவையான ஆவணங்களையும் ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு வள்ளியம்மைப்பாட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார். அன்றுமாலை வடமராட்ச்சி திக்கம்போய் அங்கிருந்து இரவு மீன்பிடிப்படகில் மன்னார்போவதற்குரிய ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு வந்திருந்தார். வாழ்க்கைப்பாடம் அவனுக்கு வலிமிகுந்த அகதிப்பக்கம்களை திறக்கத் தயாராகிக்கொண்டிருந்தது.

தினேஸை சைக்கிளில் முன்னுக்கு உட்காரவைத்து தான்மிதிவண்டியை செலுத்திக்கொண்டிருந்தார் தினேஸின் தந்தை. வட்டமிடும் வல்லூறுகளிடம் இருந்து தன்குஞ்சுகளைக் காப்பாற்றத் தவித்துக்கொண்டிருக்கும் தாய்க்கோழியைப்போல தன் மகனைக் காப்பாற்றிவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தது அந்த வயதான ஜீவன். தந்தையையும் மகனையும் சுமந்து கொண்டு அந்த ஒற்றை மிதிவண்டி சுட்டிபுரம் தாண்டி முள்ளிவெளியூடாக திக்கத்தை நோக்கி வேகமெடுக்கிறது.

சிறுவனாக இருந்த காலங்களில் தந்தையுடன் சைக்கிளில் பயணிக்கும்பொழுதுகளில் அவனது அர்த்தங்கள் எதுவுமில்லாத தொடர்பற்ற சின்னச் சின்ன கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்தவாறு பயணிக்கும் தந்தையையும் எளிமையும் இனிமையும் நிறைந்த அந்த சைக்கிள் பயணங்களையும் வளரும்போது காலம் ஏற்படுத்திய இடைவெளியில் இழந்துவிட்டிருந்தான். இன்று மீண்டும் தோளுக்குமேல் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் அவனை தன் தோள்களில் தூக்கித்திரிந்த சிறுவனாகவே பார்க்கும், கள்ளம் கபடமற்ற நேசிப்பை வழங்கும்,எளிமையையும் அன்பையும் கடின உழைப்பையும் எப்பொழுதும் அவனுக்காகச் சுமந்து கொண்டிருக்கும் உன்னதமான அந்த ஆத்மாவுடன் பலவருடங்களுக்குப் பிறகு சைக்கிளில் ஒன்றாகப் பயணிக்கிறான்.

பிள்ளைகள் மேலான தந்தைகளின் பாசங்கள் எப்பொழுதுமே வெளித்தெரிவதில்லை. எல்லையற்ற அன்பை,நேசிப்பை தங்கள் பிள்ளைகள் மேல் கொண்டிருப்பவர்கள் அவர்கள். எதையும் எதிர்பாராது தங்கள் குழந்தைகளுக்காக ஓடாகத் தேய்ந்துகொண்டிருக்கும் உன்னதப்பிறவிகள் அவர்கள். கால ஓட்டத்தில் இயல்பிலேயே தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் இடைவெளிகளால் அவர்களின் அன்பும் பிள்ளைகளால் சரிவரப் புரிந்து கொள்ளப்படாமலே போய் விடுகின்றன.பின்னர் அவர்கள் இல்லாத காலத்தில்தான் அவர்களின் பெறுமதிகள் பிள்ளைகளால் உணரப்படுகின்றன.

தந்தையை,தாயை,உறவுகளைத் தனியே விட்டு ஊரைப் பிரிந்து போகப் போகிறான் என்பதை நினைக்க கண்ணீர்முட்டுகிறது தினேஸிற்கு. திக்கத்திற்கு வந்து சேர்ந்தபோது வானம் சிவந்து மாலையாகி விட்டிருந்தது. தென் திசை நோக்கிப் பறந்துகொண்டிருந்த நாரைக்கூட்டங்களிடமிருந்து சூரியன் விடைபெற்றுக்கொன்டிருந்தான். தினேஸின் பயணத்திற்கு அனுசரணையாக இருப்பதுபோல இருளும் இறங்கிவந்து கொண்டிருந்தது.

பெருங்கீரனுக்கு இடம்மாறித் திரிவதை விட ஒரு இடத்தில் தொடர்ந்து தங்குவதுதான் மிக ஆபத்தான ஒரு தெரிவாக இருந்தது. பாதுகாப்பிற்காக எப்பொழுதும் அவன் தங்குமிடங்களை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது. அநேகமாக எப்பொழுதும் பாடசாலைகள் முடிவடையும் நேரமும் ஆரம்பிக்கும் நேரமுமே அவன் இடங்களை மாற்றிக்கொள்ள தேர்ந்தெடுத்த நேரமாக இருந்தது.

தினேஸிற்கு உயிர் அச்சுறுத்தல் எழுந்த சமகாலப்பகுதியிலேயே சில தேவைகள் கருதி திரட்டிய தகவல்களுடன் பெருங்கீரன் வன்னி நோக்கிப் பயணிக்க வேண்டி வந்தது. உயர்தர வகுப்பு மாணவனைப்போல வெள்ளை ஜீன்ஸ் சேட்டுடன் பாடசாலைவிட்டு சாரை சாரையாக வீதிகளில் நிறைந்துகொண்டிருந்த மாணவர்களுடன் மாணவனாக வன்னிக்குப் புறப்படுவதற்காக அரியாலைநோக்கி நகர்ந்துகொண்டிருந்தான் பெருங்கீரன்.

கண்டி றோட்டைக்கடந்து முதலாவது குருக்குத்தெருவுக்குள் நுழைந்துவிட்டால் அங்கிருந்து கொழும்புத்துறை றோட்போய் அரியாலை றோட்டுக்குள் இறங்கிவிடலாம். அரியாலை றோட்டில் இருந்து இன்னும் உள்நோக்கி கடற்கரைப்பக்கமாய்ப்போய் அங்கிருந்து வெறும் கைகளை மட்டுமே துடுப்பாக்கி அந்தக் குறுங்கடலைக் கடந்து கெளதாரிமுனைக்குப் போகவேண்டும். ஓயாத கடலலைகளுடன் மட்டுமன்றி அந்தப் பயணம் முழுமையும் விடாமல் துரத்திவரும் மரணத்துடனும் போட்டிபோட்டுத்தான் அந்தக்கடல்ப் பயணத்தை முடிக்கவேண்டும்.

வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நுழைவது ஒப்பீட்டளவில் ஓரளவு இலகுவானதாக இருந்தது. படகில் அரைவாசித்தூரம் பயணித்து பின்னர் அங்கிருந்து குறைந்தளவு தூரமே நீந்திவரவேண்டும். கரையில் காவலரனில் இருக்கும் இராணுவத்தினரின் கண்ணில் படாமல் இருந்துவிட்டால் போதும். ஆனால் திரும்பிச்செல்லும்போது இந்தவசதி இருக்காது. ஒரு தனிமனிதன் நீந்தி வரும்போது எல்லைகளற்ற அந்தக்கடலில் எதைவைத்து அடையாளம் சொல்வது படகில் உள்ளவர்களுக்கு. முழுத்தூரத்தையும் தனியாக நீந்திக் கடக்கவேண்டும். மிகக்கடினமான பணி.

கண்டி வீதியைக்கடந்து அரியாலை உப்புக்குளம் பிள்ளையார் கோவிலடிக்கு வந்தபோது என்றுமே அவனுள் இருக்கும் எச்சரிக்கையுணர்வு யாரோ அவனைப் பின் தொடர்வதாகச் சொல்கிறது.அவனை அறியாமல் கைகள் இடுப்புக்குப்போகிறது. திரும்பிப் பார்த்தபொழுது நிற்கும்படி சைகை செய்தவாறு வேர்க்க விறுவிறுக்க கண்களில் கலவரத்துடன் மரியதாஸ் அவனை நோக்கி வேகமாக ஓடிவந்துகொண்டிருந்தான். அருகில் வந்து ஓட்டத்தை நிறுத்தியவன் மேழும் கீழும் பலமுறை மூச்செடுத்துவிட்டு பேசத்தொடங்கினான்.

உயிரச்சுறுத்தல் காரணமாக அவன் அரியாலையில் இருந்த ஒரு நண்பன் வீட்டில் ஒளிந்திருந்திருக்கிறான். வீதியால் பெருங்கீரன் போவதை வீட்டுக்குள் இருந்து யன்னலூடகப் பார்த்துவிட்டுத்தான் ஓடிவந்திருக்கிறான் மரியதாஸ். இங்கிருந்தால் தான் உயிருடன் இருக்கமுடியாது எப்படியாவது தன்னை வன்னிக்கு அனுப்பிவிடும்படி பெருங்கீரனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் மரியதாஸ்.

மரியதாஸிற்கு நன்றாக நீச்சல் தெரியும். ஆனால் பெருங்கீரன் போவதோ ஆபத்தான ஒரு பயணம். இதில் எந்தவித பயிற்ச்சியும் எடுக்காத ஒருவனையும் கூட்டிக்கொன்டு போவது பெருங்கீரனின் பயணத்திற்குத்தான் ஆபத்தாக முடியும். என்றாலும் மரியதாஸைஅந்நிலையில் விட்டுப்போகவும் அவனால் முடியவில்லை. என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று மரியதாஸையும் அழைத்துக்கொண்டு இருளும் வரைக்கும் கடற்கரைப் பக்கமாய் இருந்த பற்றை ஒன்றுக்குள் நிலை எடுத்துப் பதுங்கிக்கொண்டான் பெருங்கீரன்.

மரியதாஸின் கையிலும் ஒரு கைக்குண்டை கொடுத்திருந்தான். பயத்தில் மரியதாஸின் கை குண்டுடன் சேர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பற்றைக்குள்ளிருந்த புற்றுக்குள்ளிருந்து கூட்டம் கூட்டமாக வெளிப்பட்ட கறுப்பு எறும்புகள் இருவரது உடலையும் மொய்த்துக்கொண்டிருந்தன. காதினுள்ளும் மூக்கினுள்ளும் நுழைந்த எறும்புகளை மாறிமாறித்தட்டி விட்டுக்கொண்டிருந்தான் மரியதாஸ்.

கடற்கரை நீளத்திற்கு ஆங்காங்கு ராணுவத்தினர் பொயின்றடித்து ஆயுத்தத்துடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். இரவு ஆக ஆக தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தமும் சிப்பாய்கள் சிங்களத்தில் கதைக்கும் சத்தத்தையும் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. கடலைப்புரட்டிப் போடப்போவதைப்போல காற்றுப் பேரிரைச்சலுடன் வீசிக்கொண்டிருந்தது. பூமிப்பந்தில் கரிப்பிடித்ததைப்போல காரிருள் எங்கும் கவிழ்ந்து அருகில் இருப்பவர்களையே அடையாளம் காணமுடியாதபடி ஆகிவிட்டிருந்தது.

அடிக்கடி ஆமிக்காரர் டோச் அடித்து அங்குமிங்கும் அவதானித்துக்கொண்டிருந்தனர். மரியதாஸிற்கு பயமும் கடல்காற்றின் குளிரும் சேர்ந்து இப்பொழுது உடம்பு முழுவதும் நடுக்கமெடுக்கத் தொடங்கியிருந்தது. நள்ளிரவானதும் மெல்லமெல்ல நிலத்தோடு நிலமாக ஊர்ந்து சென்று இரண்டு உருவங்களும் கடலில் இறங்கத்தொடங்கிவிட்டிருந்தன. கடலுக்குள் எந்தவித சத்தமும் எழுப்பாமல் ஊர்ந்தபடியே உள்ளிறங்கி குறிப்பட்டளவு தூரம்வரை மேல்வராமல் கடல் மண்ணைத்தொட்டவாறு உள் நீச்சலில் போகவேண்டும். கரையில் இருக்கும் ராணுவத்தினரை எந்தவிதத்திலும் அலேட்டாக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு. மரியதாஸ் உள் நீச்சல் புற நீச்சல் இரண்டிலும் விண்ணண். மிக அதிக நேரம் தண்ணீருக்குள் தம்புடிச்சு நிப்பான்.

பெருங்கீரனைப்பற்றி சொல்லத்தேவையில்லை. அவன் இதற்கென்றே பயிற்ச்சி எடுத்தவன். இரண்டுபேரும் அடிக்கடி மூச்சுவாங்க தண்ணிருக்குமேல் வந்து கொஞ்சம் தலைகாட்டுவதும் பின் தாண்டு நீந்துவதுமாக கரையில் இருந்து இருட்டில் கண்பார்வைக்கு எட்டாத தூரம் வரைவந்துவிட்டிருந்தார்கள். இனி கெளதாரிமுனை நோக்கி இடைவிடாது நீந்தவேண்டும்.

தங்குவதற்கும் இளைப்பாறுவதற்கும் எதுவுமில்லாத கடலில் கைகளையும் கால்களையும் மட்டுமே நம்பி இருவரும் பயணிக்கிறார்கள். அரைவாசித்தூரம் கடந்தபோது வெளிச்சத்தைப் பாய்ச்சியவாறு மிகத்தூரத்தில் இரைச்சலோடு நேவிப்படகொன்று இவர்கள் பக்கமாய் வந்துகொண்டிருந்தது. கடலில் நீந்தும்போது நீருடன் கழன்றுபோய்விடும் என்று கழுத்துடன் ஒட்டக்கட்டியிருந்த குப்பியை ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டான் பெருங்கீரன்.

பாகம் ஆறிற்கு இங்கே அழுத்தவும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=88373&view=findpost&p=683264

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது இப்படி கட் பண்ணீட்டிங்களே, என்ன சீரியல் தயாரிப்பாளரா? நன்றாக எழுதுகிறிர்கள் தொடர்ச்சியை விரைவில் இனைக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.