சரி, தூற்றுபவர்களும்,பிழைகாண்பவர்களும் ஒருபக்கம் எழுதட்டும். அது அவர்களின் வேலை.
நான் எனது திரி தொடங்கிய நோக்கத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கலாம்.
உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் காரணங்கள் என்று ரஸ்ஸியப் பயங்கரவாத அரசினால் முன்வைக்கப்படும் கற்பனைக் காரணங்கள் பற்றி தெளிவுபடுத்துவது இத்திரியின் நோக்கத்திற்கு அவசியமானது என்பதால், அதுகுறித்தும் சில விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டே தொடர்ந்தும் பயணிக்கலாம். மேற்குலக ஊடகங்கள் பொய்யுரைப்பதாகவும், இப்போரின் மறுபக்கம் என்றொன்று இருக்கிறது, அது ரஸ்ஸியாவின் நடவடிக்கையினை நியாயப்படுத்தும் என்று நம்பிக்கொண்டு இக்களத்தில் எழுதிவரும் சிலருக்காகவும் நான் இதனை இங்கே தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று உணர்வதாலும் இதைச் செய்யவேண்டியிருக்கிறது.
உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்திலிருந்து ரஸ்ஸியாவுக்குச் சார்பான செய்திச் சேவைகள் மற்றும் இணையத்தளங்களினூடாக பரப்பப்பட்டுவரும் பொய்யான பரப்புரைகளையும், காரணங்களையும் களைவது மிக அவசியம்.
2014 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு முரணான வகையில் கிரிமியாவை ஆக்கிரமித்துக்கொண்டது முதல் இன்று உக்ரேனில் முழுமையான ஆக்கிரமிப்புப் போரை கட்டவிழ்த்துவிட்டதுவரையான இக்காலப் பகுதியில் ரஸ்ஸிய அரசு தனது உள்ளூர் மக்களை நோக்கியும், தனது அயல் நாடுகள் நோக்கியும் உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் தொடர்ச்சியான, மிகவும் பாரதூரமான பொய்ப் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்தப் பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் உலக மக்களின் அபிப்பிராயம் தன் பக்கம் திரும்பலாம் என்று அது எதிர்பார்க்கிறது.
ரஸ்ஸியாவில் வேண்டுமென்றே முடுக்கிவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களை ஒவ்வொன்றாக நாம் களையலாம்.
விஷமப் பிரச்சாரம் 1 : உக்ரேனில் நிலவும் நிலைமையே இந்த ஆக்கிரமிப்பிற்குக் காரணமாகும். உக்ரேனின் கிழக்கில் வசிக்கும் ரஸ்ஸிய மொழி பேசும் சிறுபான்மையினருக்கெதிரான உக்ரேனின் நடவடிக்கைகளே இந்த ஆக்கிரமிப்பைத் தூண்டிவிட்டன. ரஸ்ஸியாவும் உக்ரேனும் ஒரே நாட்டு, ஒரே தேசம், ஆகவேதான் உக்ரேனின் கிழக்கில் மக்களைக் காக்க ரஸ்ஸியா தலையிட வேண்டியதாகியது.
இந்தப் பொய்யுரையினை மெய்யாக்க ரஸ்ஸிய அரசு ஊடகங்கள் கடுமையாக முயன்று வருகின்றன. தன் மொழிபேசும் மக்கள் மீது உக்ரேன் இனவழிப்பை நடத்துவதாக அவை தொடர்ச்சியாக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுடன் உக்ரேனை ஒரு வில்லனாக, ரஸ்ஸியாவின் பிரதான எதிரியாக உள்நாட்டிலும், தனது ஆதரவாளர்களிடையேயும் விம்பப்படுத்தி வருகின்றன. 2 ஆம் உலகப் போரில் நாஜிக்களுடனான போரில் ரஸ்ஸியாவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பை மீண்டும் கிளறியெடுத்து, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, உக்ரேனை புதிய நாஜிகள் என்று ஒப்பிடுவதன் மூலம் தனது பொய்ப்பிரச்சாரத்தை ரஸ்ஸியர்களிடையே முன்கொண்டு செல்கிறது ரஸ்ஸிய அரசு.
ரஸ்ஸிய அரச ஊடகங்களில் வெளிவந்த பொய்ப்பரப்புரைகளில் ஒன்றினை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ரஸ்ஸிய சிறுவன் ஒருவனை உக்ரேனிய ராணுவத்தினர் சிலுவையில் அறைந்து கொன்றதாக ஒரு செய்தியாளர் கூறிவிட, அப்பொய்ச் செய்தியை அனைத்து ரஸ்ஸிய ஆதரவுத்தளங்களும் காவித் திரிந்தன. ஆனால், இப்படியான நிக்ழவு உண்மையிலேயே நடக்கவில்லை என்பதுடன், இந்நிக்ழவு நடந்ததற்கான காரணமாக ரஸ்ஸியா முன்வைத்த காரணமும் மிகவும் நகைப்பிற்கிடமானது. 2014 இல் இடம்பெற்றதாக ரஸ்ஸியா புனையும் இந்த புழுகில், சிறுவன் திருடினான் என்பதற்காகவே உக்ரேனியர்கள் அவனை சிலுவையில் அறைந்தார்களாம். ஆனால், இதுபோன்ற பல புரட்டுக்களை ரஸ்ஸிய செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து வருகின்றன.
ஆனால், உண்மையில் கிழக்கு உக்ரேனில் ரஸ்ஸிய மொழி பேசும் மக்களுக்கெதிரான எந்தவித அச்சுருத்தல்களையும் உக்ரேன் அரசு விடுக்கவில்லை என்று நிலைமையிருக்க, ரஸ்ஸியாவோ அங்கே இனவழிப்பு நடைபெறுவதாக கூக்குரலிட்டு வருகிறது.
கிழக்கு உக்ரேனில் ரஸ்ஸிய மொழிபேசுவோருக்கு எதிராக மனிதவுரிமை மீறள்கள் நடைபெறவில்லையென்பதை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலும், ஐரோப்பிய கவுன்சிலும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
மேலும் ரஸ்ஸியாவும் உக்ரேனும் ஒரே தேசம் எனும் பல் நூற்றாண்டுப் பழமைவாதக் கோஷமானது, சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பில் உக்ரேன் உட்பட்டிருந்த வேளையில் உக்ரேனை ஆக்கிரமித்தவர்கள் உக்ரேன் மீது திணித்த ஒரு கொள்கை. அதே கொள்கையினை மீள உயிர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கையாகவே சுமார் 800 வருடங்களின் பின், தனியான அடையாளங்களைக் கொண்ட, தனித்துவ இனமான, தனிக் கலாசாரத்தைக் கொண்ட உக்ரேனை தன்னுடன் கட்டாயமாக இணைக்க அதே கோஷத்தைப் புட்டின் கையிலெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.
2014 இல் இருந்து இந்தப் பொய்பரப்புரையினை கடுமையாக முடுக்கி விட்டிருக்கும் புட்டின், உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பிறகு நியாயம் கற்பிக்க இந்த புனைவினை பாவித்து வருகிறார். சுமார் 800 வருடங்களுக்கு முன்னால் எல்லைகளற்ற ரஸ்ஸிய தேசத்தை 21 ஆம் நூற்றாண்டில் கொண்டுவருவேன் என்று புட்டிங் நினைப்பது சுத்த அயோக்கியத்தனமேயன்றி வேறில்லை.
உக்ரேன் சுதந்திரமான ஒரு தனிநாடு. தனது வளர்ச்சி எப்பாதையில் செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உக்ரேன் மட்டும்தான். யார் யாருடன் தான் சிநேகம் வைக்கவேண்டும், தனது பாதுகாப்புத்துறையும், வெளிவிவகாரத்துறையும் எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கூட உக்ரேன் தான். அத்துடன், சர்வதேச அமைப்புக்களில் தான் இடம்பெறவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதும் உக்ரேன் தான்.
ஆனால், அகண்ட ரஸ்ஸிய தேசத்தை சரித்திர காலத்திலிருந்து கிளறியெடுத்து, அதற்கு உயிர்கொடுக்க முனையும் புட்டினும் அவரது பயங்கரவாத அரசும் உக்ரேனின் தனித்தன்மையினைத் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு வருவதுடன், உக்ரேன் என்பது ஒரு சுதந்திரமான நாடு என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தே வருகின்றனர்.