மாவட்டங்களை இணைத்து மாகாணங்களை உருவாக்குவதோ, மாவட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்களை வழங்குவதோ தேவையற்றது - ரஜீவ் காந்தி
மிகுந்த விவாத் திறமை கொண்டவரான லலித் அதுலத் முதலி, ஜெயவர்த்தனவின் வாழ்த்துக்களுடன் ரஜீவைச் சந்தித்து, சர்வதேச அளவில் மிகப் பெரும் தலைவராக ரஜீவ் வருவார் என்று ஜெயார் வாழ்த்தியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியவாறே ரஜீவ் பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றிருந்தார். மேலும், நேருகுடும்பத்தின் நெருங்கிய நண்பன் என்கிற ரீதியில் ரஜீவிற்கு ஜெயவர்த்தன வழங்கிய ஆலோசனைகளைச் செவிமடுத்ததற்காகவும் அவருக்கு லலித் நன்றி கூறினார்.அடுத்ததாக, இதுவரை காலமும் இந்தியா இலங்கை தொடர்பாகக் கைக்கொண்ட நடைமுறை காரணமாக சிங்கள மக்களிடையே இந்தியா ஆக்கிரமிப்பில் இறங்கப்போகிறது என்கிற எண்ணம் வேரூன்றி பெரு விருட்சமாக வளர்ந்து விட்டிருப்பதாகவும் கூறினார்.
ஜெயாரும், லலித்தும் விரித்த வலையில் ரஜீவ் வீழ்ந்து போனார். இலங்கை மீது இந்தியா எக்காலத்திலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடாது என்று லலித்திடம் உத்தரவாதம் அளித்தார் ரஜீவ். இதன் மூலம் ஜெயவர்த்தனவைக் கட்டுக்குள் வைத்திருக்க அதுவரை தான் கொண்டிருந்த சாட்டையினை இந்தியா இழந்தது.
அதன் பிறகு தனது இரண்டாவது கோரிக்கைகள் குறித்துப் பேச்சை ஆரம்பித்தார் லலித். பேச்சுவார்த்தைகளை புதிதாக ஆரம்பிப்பதும், பார்த்தசாரதியை பேச்சுக்களில் இருந்து முற்றாக அகற்றுவதும் தான் அவை. லலித் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்தை ரஜீவே அவருக்கு வழங்கினார். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் திடீரென்று கலைத்துப்போட்டது தொடர்பான இந்தியாவின் ஏமாற்றம் குறித்து ரஜீவ் பேசியபோது, சிங்கள மக்களின் பங்களிப்பும், ஆதரவுமின்றி சர்வகட்சி மாநாட்டினைத் தொடர்ந்து நடத்துவது இயலாத காரியம் என்று லலித் கூறினார். எதிர்க்கட்சித் தலைவியான சிறிமாவின் நடவடிக்கைகள் சர்வகட்சி மாநாட்டினை ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாக லலித் கூறினார். மேலும் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வினை பார்த்தசாரதி ஜெயார் மீது திணிப்பதாக லலித் குற்றஞ்சாட்டினார். சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றுபற்றி கலந்தாலோசிக்க புதிதாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பார்த்தசாரதி மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வருவதாக சிங்கள மக்கள் நம்புவதாகவும், ஆகவே புதிய பேச்சுவார்த்தைகளில் சிங்கள மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமானால் பார்த்தசாரதி பேச்சுக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் லலித் வாதிட்டார்.
ரஜீவினால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி - ஐப்பசி 31, 1985
லலித் கேட்டுக்கொண்டபடியே பேச்சுவார்த்தைகளைப் புதிதாக ஆரம்பிக்க ஒத்துக்கொண்ட ரஜீவ், அவை நடுநிலையானவையாகவும், இலக்கை அடையும் நோக்கிலும் நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தார். மேலும், தனது புதிய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியே பேச்சுவார்த்தைகளுக்கு பொறுப்பாக இருப்பார் என்றும் கூறினார். ஜெயாருடன் தொடர்பாடுவது குறித்து பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்களையும், எச்சரிக்கைகளையும் ரஜீவ் முற்றாக நிராகரித்ததுடன், அவரை அரசியல் விவகார குழுவிற்கு இடமாற்றம் செய்தார். ஜெயவர்த்தனவை சிறிதும் நம்பாத பார்த்தசாரதி, கிளட்டு நரியின் கபடத்தனம் குறித்து ரஜீவ் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால், ஜெயவர்த்தனவை மிகச் சிறந்த இராஜதந்திரியென்றும், உண்மையான பெளத்தன் என்றும் எடைபோட்ட ரஜீவ், பார்த்தசாரதியின் எச்சரிக்கையினை எள்ளளவும் கண்டுகொள்ளவில்லை.
லலித்திடம் பேசிய ரஜீவ், ராணுவத்தினரின் பிரசன்னத்தை தமிழர் பகுதிகளில் குறைத்து, அவர்களால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளை நிறுத்தி, தமிழர்களுக்கு ஓரளவிற்கான தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவது இலங்கைக்கு நண்மை பயக்கும் என்று கூறினார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வுகுறித்து ரஜீவும் லலித்தும் நீண்டநேரம் பேசினார்கள் என்று கூறப்படுகிறது. ரஜீவுடன் பேசும்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கோரும் மாகாணசபைகளை வழங்கும் நிலையில் தமது அரசாங்கம் இல்லையென்று லலித் கூறினார். மாவட்ட சபைகளே அரசாங்கத்தல் வழங்கப்படக் கூடிய அதிகபட்ச அதிகார அலகு என்று கூறிய லலித், தேவையேற்படின் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்களை மீள்பரிசீலினை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார். லலித்தின் கூற்றுடன் ஒத்துப்போன ரஜீவ், மாவட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து மாகாணங்களாக உருவாக்கவேண்டிய தேவை இல்லை என்று கூறியதுடன், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொறுப்பினை அவற்றிற்குக் கொடுக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறினார்.
"லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இந்திரா காந்தி கொண்டிருந்த அறிவைக் காட்டிலும், ரஜீவ் காந்தி பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தார்.மேலும், மாவட்ட சபைகள் ஒன்றிணைக்கப்பட்டு மாகாணங்களாகச் சேர்க்கப்படுதல் அவசியமில்லையென்கிற நிலைப்பாட்டையும் ரஜீவ் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம், இலங்கை அரசாங்கத்தின் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டுடன் ரஜீவ் ஒத்துப் போவதும், பார்த்தசாரதியின் நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகிச் செல்வதும் தெரிந்தது. மேலும், லலித்தும் ரஜீவும் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தார்கள். மேலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் போன்றே மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் கொடுக்கப்படத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டினை ரஜீவும் கொண்டிருந்தமை லலித்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. மேலும், பஞ்சாப் விவகாரத்தில் இந்தியா இதே தவறை இழைத்திருந்தது என்றும், ஆகவே இனிமேல் இவ்வாறான தவறுகள் ஏற்படாது என்று ரஜீவ் உறுதியளித்தார்" என்று ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி.சில்வாவும், ஹவார்ட் ரிக்கின்ஸும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் கொலைகள் குறித்து இலங்கை அரசாங்கத்தை தான் எச்சரித்ததாக ரஜீவ் காந்தி லொஸ் ஏஞ்ல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நீங்கள் பயங்கரவாதிகளைக் கொல்லலாம், அது பரவாயில்லை, ஆனால், பயங்கரவாதிகள் அல்லாத பொதுமக்களைக் கொல்லும்போது இந்தியாவில் ஏற்படும் உணர்வுகள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படும் வேளை எம்மால் உதவுவது கடிணமாக இருக்கும் என்று லலித்திடம் நான் கூறினேன்" என்று ரஜீவ் மேலும் தெரிவித்தார்.