தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது.
இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை.
அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள்.
நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள்.
இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.
டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை.
"கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன்.
ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்? இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?