ஒரே ஒரு மன்னிப்பு
------------------------------
அவர் எனக்கு ஒரு ஒன்று விட்ட தாத்தா முறை. மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் பின்னோக்கி போய்ப் பார்த்தால், ஒரு குடும்பத்தில் இருந்து நாங்கள் இன்று பல கிளைகளாக, பல குடும்பங்களாக வந்தது தெளிவாகவே தெரிந்தது. அவரின் பதிவுப் பெயர் எனக்கும், ஊரில் பலருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை கூப்பிடும் பெயர் கொஞ்சம் விநோதமானது. ஒரு காலத்தில் நீண்ட தலைமுடி வைத்து, அதை சிலுப்பிக் கொண்டு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்திருக்கின்றார் போல. அதனால் அப்படியே அந்தப் பட்டப் பெயர் அவருடன் ஒட்டிவிட்டது. ஊரில் அநேகமாக எல்லோருக்கும் பட்டப் பெயர்கள் இருந்தன, பெரும்பாலும் அந்தப் பெயர்களே பாவனைகளிலும் இருந்தன.
ஒன்று விட்ட தாத்தாவின் விநோதமான பெயரைப் போலவே அவரின் வீடும் கொஞ்சம் விநோதமானது. இரண்டு ஒழுங்கைகள் முடிகின்ற, அல்லது அவை தொடங்குகின்ற இடத்தில் அவரின் வீடு இருந்தது. இரண்டு பக்கங்களிலும் கதவுகள் இருந்தன. ஊரவர்கள் அவரின் வீட்டு வளவினூடு மிகச் சாதாரணமாகப் போய் வருவார்கள். ஒன்று விட்ட தாத்தாவின் மனைவியான அந்த அப்பாச்சி மிகவும் அன்பானவர். அந்த அன்பே ஊரவர்களை அந்த வீட்டை பாதையின் ஒரு பகுதியாக பயமின்றி நினைக்க வைத்துக் கொண்டிருந்தது. அவர் வீட்டில் ஒரு பெரிய கொய்யா மரம் நின்றது. எல்லோரும் காய்களும், பழங்களும் பிடுங்குவார்கள். அப்பாச்சி பார்த்தால் சிரித்துக் கொண்டு போய்விடுவார். ஒன்று விட்ட தாத்தா வெளியே வந்தால் எவரென்றாலும் ஓடிவிடுவார்கள்.
ஒரு சமயம் ஒன்று விட்ட தாத்தா சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்க வேண்டி வந்தது. அவர்களின் குடும்பத்தில், தாத்தாவின் இளைய மகனுக்கு, தமிழ்நாட்டில் திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. அந்த மகன் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலையால், திருமணச் சடங்கை தமிழ்நாட்டில் வைப்பதாக முடிவெடுத்திருந்தார்கள். அந்த நேரத்தில் ஒன்று விட்ட தாத்தாவால் பயணம் போக முடியாது என்று அவரை எங்கள் வீட்டில் விட்டுப் போயிருந்தனர் அப்பாச்சியும், அவரின் குடும்பமும்.
ஒன்று விட்ட தாத்தா வந்த நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டார். வீட்டில் இருப்பவர்களுக்கு அவருடன் காலம் தள்ளும் ஒவ்வொரு பொழுதும் போதும் போதும் என்றாகியது. என் தந்தை வீட்டிலே நிற்கும் நேரம் வெகு குறைவு. அவருக்கு இப்படி ஒரு விடயம் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றது என்பதே தெரியாது. தெரிந்திருந்தாலும், அவர் பிரச்சனையை தீர்த்து வைத்திருப்பார் என்றும் இல்லை. முக்கியமாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று ஒன்றும் இல்லை. என்ன ஆனாலும் ஒன்று விட்ட தாத்தாவின் குடும்பம் திரும்பி வரும் வரை அவர் எங்கள் வீட்டில் இருந்து தான் ஆகவேண்டும்.
இரண்டு வாரங்கள் ஓடியது. அம்மாதான் மிகவும் கஷ்டப்பட்டு போனார். விருப்புகளையும், வெறுப்புகளையும் அடக்கி அடக்கி வெளிக் காட்டாமல் வாழும் அன்றிருந்த எல்லா குடும்ப தலைவிகளையும் போன்றவர் தான் அவரும். ஒன்று விட்ட தாத்தாவின் வீட்டார்கள் இந்தியாவிலிருந்து திரும்பி வந்து, அப்பாச்சியும் அவரின் மூத்த மகனும் ஒன்று விட்ட தாத்தாவை கூட்டிப் போவதற்கு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.
வாசல் வரை போன ஒன்று விட்ட தாத்தா, நாங்களும் ஒரு இடைவெளி விட்டு பின்னால் போய்க் கொண்டிருந்தோம், திடீரென்று நின்று அம்மாவை கையெடுத்துக் கும்பிட்டார். 'நான் ஏதும் பிழைகள் செய்திருந்தால் என்னை மன்னித்து விடு, பிள்ளை............' என்று கலங்கி நின்றார். அம்மா அழுதேவிட்டார். ' என்ன இப்படி சொல்லிறியள், நீங்க எனக்கு அப்பா மாதிரி......... எப்ப வேணுமென்றாலும் வாங்கோ.........' என்று வழிந்த கண்ணீரை துடைத்தார் அம்மா.
ஒன்று விட்ட தாத்தாவின் எந்த ஒரு சொல் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது என்ற கேள்வி பல நாட்களாக என்னுள்ளே வந்து வந்து போனது.