தமிழ் மக்கள் மீதான அரச அடக்குமுறைகளினால் தமிழ் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள்
தமிழ் மக்கள் மீது அரச இராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிக கொடூரமான படுகொலைகளோ அல்லது தமிழ் மக்கள் தமது தாயகப்பகுதிகளில் இருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டமையோ தமிழ்ப் போராளிகளைச் சோர்வடையச் செய்யவில்லை. அவர்கள் இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் எதிரான கண்ணிவெடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கினார்கள். மார்கழி 18 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 8 பொலிசாரும் வாகனச் சாரதியும் கொல்லப்பட்டனர். மறுநாளான மார்கழி 19 ஆம் திகதி பதவியா குடியேற்றத்திற்கு அண்டிய பகுதியில் இரு இராணுவ வாகனங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இரு அதிகாரிகளும் இரு படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்க யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் புதிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவம் நடத்திய சுற்றிவளைப்பில் 1000 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மட்டக்களப்பில் 400 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் திருகோணமலையில் தமிழர்களை மிகவும் மோசமாக அரசு நடத்தியிருந்தது.
ஒலிபெருக்கிகள் ஊடாக அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட இராணுவம் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைந்திருந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாற்றுக் கேணி, காயடிக்குளம், கோட்டைக் கேணி, நாயாறு மற்றும் அளம்பில் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் தமிழர்களை 24 மணித்தியாலத்திற்குள் அங்கிருந்து வெளியேறிச் செல்லவேண்டும் என்று கட்டளையிட்டது. இக்கிராமங்களில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் முல்லைத்தீவு நோக்கி இடம்பெயர்ந்து சென்றதுடன் அங்கு அமைக்கப்பட்ட அகதி முகாம்களிலும், கோயில்களிலும் தஞ்சமடைந்தனர்.
தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இதனைத் தவிர வேறு தெரிவுகள் அரசாங்கத்திடம் இல்லையென்று கூறியதுடன், பயங்கரவாதிகளுக்கெதிராக ரொக்கெட்டுக்கள், விமானக் குண்டுகள் மற்றும் நடுத்தர ஆட்டிலெறி எறிகணைகள் ஆகியவற்றையும் பாவிப்பது அவசியம் என்று கூறினார்.
தனது அறிக்கைகள், பேச்சுக்கள் ஆகியவற்றி லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வந்தார். அதுதான் போர்க்களத்தில் இராணுவம் திறமையாகச் செயற்பட்டு வருகிறது எனும் விடயம். புதுவருட தினத்தில் அவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியில், "நாம் வென்று கொண்டு வருகிறோம், பயங்கரவாதிகளை அடிபணியவைப்பதில் வெற்றிபெற்று வருகிறோம்" என்று கூறினார். அக்காலப்பகுதியில் இராணுவத்தின் ஆட்பல எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. 12,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கெதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இவர்கள் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் திறமையாகப் பயிற்றப்பட்டவர்கள் என்றும் நவீன ரக ஆயுதங்களை அவர்கள் போரில் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட விசேட பொலீஸ் கொமாண்டோ படைப்பிரிவான விசேட அதிரடிப்படையினரின் முதலாவது அணிக்கான பயிற்சிகளை ரவி ஜெயவர்த்தன ஒழுங்கு செய்திருந்தார். மேலும் 1985 ஆம் ஆண்டு தை முதலாம் வாரத்தில் அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட ஜெயார், மணலாற்றில் அமைக்கப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றத்தினைப் பாதுகாக்க 50 முதல் 100 வரையான சிங்கள ஊர்காவற்படையினரைத் தான் ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.
அரசாங்கம் தனது படையினரின் எண்ணிக்கையினையும், பலத்தையும் அதிகரித்து வந்த அதேவேளை போராளிகளும் தம்மைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டு வந்தனர்.இராணுவ ஆய்வாளரான தாரகி சிவராமின் கூற்றுப்படி அக்காலத்தில் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் கையே ஓங்கியிருந்தது என்று கூறமுடியும். 1983 ஆம் ஆண்டு தமிழர் மேல் நடத்தப்பட்ட இனக்கொலை, அதனைத் தொடர்ந்து வந்த ஏனைய படுகொலைகள், தமிழர்களை அவர்களது தாயகத்தில் விரட்டியடித்தமை போன்ற நடவடிக்கைகளால் போராளி அமைப்புக்களில் இணையும் தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.
"ஒரு பூனையும், ஒரு மணியும் சில உத்திகளும்" என்கிற தலைப்பில் 1997 ஆம் ஆண்டு சித்திரை 20 ஆம் திகதி தாரகி அவர்கள் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி 1983 ஆம் ஆண்டு தமிழினக் கொலைக்கு முன்னர் வரை அடிப்படை ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டிருந்த தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை வெறும் 800 பேர்தான் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் 1984 முதல் 1985 வரையான காலப்பகுதியில் தமிழ்ப் போராளி அமைப்புக்களில் போர்க்களத்திற்கு அனுப்பப்படக்கூடிய இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை 44,800 ஆகக் காணப்பட்டதாக தாரக்கி குறிப்பிடுகிறார். அவரது கணிப்புப்படி ஒவ்வொரு அமைப்பிலும் இருந்த போராளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு குறிப்பிடபட்டிருந்தது. அக்காலப்பகுதியில் பெரிய அமைப்பாக விளங்கிய புளொட்டின் தமிழ்நாட்டு பயிற்சி முகாம்களில் பயிற்சிகளின் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கை 6,000, அதேவேளை வடக்குக் கிழக்கின் பல பயிற்சிமுகாம்களிலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கை 12,000. டெலோ அமைப்பின் 4,000 போராளிகள் தென்னிந்திய பயிற்சிமுகாம்களில் பயிற்றப்பட்டு வந்தவேளை வடக்குக் கிழக்கில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தோரின் எண்ணிக்கை 2,000. சுமார் 7,000 போராளிகளைக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அணியில் 1500 பெண்போராளிகளும் காணப்பட்டனர். புலிகள் அமைப்பில் 3,000 இற்கும் குறைவான போராளிகள் காணப்பட்ட அதேவேளை ஈரோஸ் அமைப்பில் 1800 போராளிகள் சேர்ந்திருந்தனர். மீதமானவர்கள் சிறிய ஆயுதக் குழுக்களில் அங்கத்தவர்களாக இருந்தனர்.
1983 ஆம் ஆண்டு இனக்கொலை பல தமிழ் இளைஞர்களை சினங்கொண்டு ஆயுத அமைப்புக்களில் இணைய உந்தித் தள்ளியிருந்தது. இவ்வாறு ஆரம்பத்தில் இணைந்துகொண்டவர்கள் வடக்கையும், தெற்கையும் சேர்ந்தவர்கள். தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான வெளியேற்றங்கள் ஆகியவை கிழக்கு மாகாணத்திலிருந்தும் இளைஞர்களை ஆயுத அமைப்புக்களில் இணைந்துகொள்ள உந்தியிருந்தது.
தமிழ்ப் பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட அரசு முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினைப் பலப்படுத்தவே உதவின என்பதனை அரசு அன்று உணர்ந்துகொள்ளவில்லை. ஆகவே 1985 முதல் 1986 வரை தனது பாணியில் படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான வெளியேற்றங்கள் என்று பல்வேறு கொடூரங்களைத் தமிழ் மக்கள் மீது அது கட்டவிழ்த்து வந்தது.