காற்றாடி - அத்தியாயம் மூன்று
-----------------------------------------------
இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வேலை என்று சொல்லப்படும் வீடுகளுக்குள் செய்யும் மின்சார அமைப்பு வேலையையும், பின்னேரம் மற்றும் இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் தியேட்டரில் ஒரு வேலையையும் செய்ய ஆரம்பித்திருந்தான். வயரிங் வேலை செய்வதற்கு அவன் வீட்டில் உடன்பட்டார்கள். ஆனால் தியேட்டரில் வேலை செய்வதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தனர். அவன் வயரிங் வேலைக்கு போவதற்கு காரணமே, அதன் காரணமாக தியேட்டரில் அவன் வேலைக்குப் போவதற்கு வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்ற ஒரே ஒன்றுக்காக மட்டுமே. மற்றபடி வயரிங் வேலையில் அவனுக்கு எந்த நாட்டமும் இல்லை. அதுவும் அந்தக் காங்கிரீட் சுவர்களுக்குள்ளால் வயர்களை கொண்டு செல்வதற்காக, அந்த சுவற்றை வெட்டுவது போன்ற ஒரு வேலையில் எவருக்குத் தான் நாட்டம் வரும். ஆனால், அவனை வேலையில் துணையாக கூட்டிப் போகும் அயலவர் சில வயதுகள் கூடியவர் என்றாலும், நல்ல ஒரு நண்பர் போன்றே பழகினார். வேலை முடிந்தவுடன் அன்றன்றே அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். அதில் ஒரு பகுதியை அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான். பல நாட்களிலும் வேலையும் இருக்கும்.
சினிமாவும் தியேட்டரும் அவனுக்கு ஒரு கனவு போல. அவன் பிறந்ததே சினிமாவிற்கு என்று அவனுக்குள் ஒரு உறுதியான எண்ணம் இருந்தது. பொதுவாக சமூகத்தில் எல்லோருக்கும் இருக்கும் அளவில்லாத நாயக நாயகிகள் மீதான கவர்ச்சி அவனிடம் மிகக்குறைவாகவே இருந்தது. சினிமா என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, அதில் வரும் விடயங்களும், அங்கே வரும் கதாபாத்திரங்களும், அவற்றை திரையில் கொண்டு வரும் நடிகர்களும் உண்மை என்றே பலரும் எண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் முடியாத, ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் சில நாயகத்தனங்களை திரையில் கண்டு, அதுவேதான் தாங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் போல. இந்த சமூகத்தில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் தீராத கவர்ச்சிக்கு இந்த மனப்பன்மையும் ஒரு அடிப்படைக் காரணம்.
அவனுக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகின்றது, பின்னர் அது எவ்வாறு திரையில் ஓடுகின்றது என்பதிலேயே ஆர்வம் இருந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் இருக்கும் படங்களை ஒரே அளவுகளில் வெட்டி, அவற்றை நீட்டாக ஒட்டி, ஒரு சுருளாகச் சுற்றி , நடுவே ஒரு ஈர்க்கை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து, இப்படித்தான் சினிமா உருவாகின்றது என்று அவனாகவே பரீட்சித்துப் பார்த்திருக்கின்றான். பின்னர் சிந்தனையில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு படம் அளவு இடைவெளியில் இரண்டு ஈர்க்குகளை வைத்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவனின் படச்சுருளை சுற்றிப் பார்த்தான். இது தான் சரியான தொழில்நுட்பம் என்று, அதையே இன்னும் முன்னேற்றி, பலருக்கும் அம்புலிமாமா படங்கள் காட்டியும் இருக்கின்றான்.
தியேட்டரில் வேலைக்கு போனவுடன், தினமும், தியேட்டரின் உள்பக்கத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையாக கூட்ட வேண்டும் என்றில்லை. முன்பக்கம், முகாமையாளர் அறை மற்றும் தியேட்டரின் உள்ளே இருக்கும் நடைபாதைகளை கூட்டவேண்டும். அத்துடன் படம் பார்த்து விட்டுப் போனவர்கள் போட்டுவிட்டுப் போகும் கஞ்சல், குப்பை, கழிவுகளையும் அள்ளி எடுத்து, வெளியில் தியேட்டரின் பின்னால் இருக்கும் குப்பையில் கொண்டு போய் கொட்டவேண்டும். அதை விட்டுவிட்டுப் போனோம், இதை விட்டுவிட்டுப் போனோம் என்று பின்னர் ஓடி வருபவர்களும் உண்டு. அவன் நேராக பின்னால் இருக்கும் அந்த சின்ன குப்பை மலையைக் காட்டுவான். அநேகமானவர்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடி எடுக்காமலேயே போய்விடுவார்கள். சிலர் அவனையும் சேர்ந்து தேடச் சொல்லியிருக்கின்றனர்.சிலருக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பொல்லாத கோபம் வந்து, சீறி விழுந்தும் இருக்கின்றனர். தங்களின் கதாநாயகர்களின் பின்னால், அவர்கள் உலவும் இடத்தின் பின்னால், இப்படி ஒரு குப்பை மலை இருப்பதை அவர்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை.
படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்தவுடன், கலரிப் பகுதியில் உள்ள கதவில் அவன் போய் நிற்கவேண்டும். அங்கே வருபவர்களின் அனுமதிச்சீட்டுகளை கிழித்து, அவர்களை உள்ளே விடவேண்டும். கலரிப் பகுதியில் நீண்ட வாங்குகள் மட்டுமே போடப்படிருந்தது. தனிதனியான இருக்கைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்ற இரு பக்கங்களும் கிடையாது. அதனால் தான் அது மிகக்குறைந்த விலையில் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. திரைக்கு அருகில் இந்தப் பகுதி இருக்கும். கழுத்தை நிமிர்த்தியே படம் பார்க்கவேண்டும். இந்தப் பகுதியின் பின்னால் இரண்டாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, ரிசர்வ் என்று மூன்று பகுதிகள் அந்த தியேட்டரில் இருந்தன. மேலே பால்கனி என்று இன்னொரு பிரிவும் இருந்தது. அதற்கான அனுமதி எல்லாவற்றையும் விட மிக அதிகம். பால்கனிக்கு அருகிலேயே, ஒரு தனி அறையில், படம் ஓடும் இயந்திரங்கள் இருந்தன. ஒரு நாள் கலரியிலிருந்து அந்த அறைக்கு முன்னேறுவதே அவனின் இலட்சியமாக இருந்தது.
(தொடரும்...................)