17 Oct, 2025 | 03:22 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பிரதமர் ஹரிணி, சமூகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்தி செய்த டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு (Hindu College) விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடத்திற்கு "ஹரினி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆய்வுக் கூடம்" (Harini Amarasuriya Social & Ethnographic Research Lab) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்போது பிரதமர் ஹரிணி, தான் கல்வி கற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) வகுப்பறைகளை பார்வையிட்டு, மாணவியாக இருந்த காலத்தைப் பற்றி நினைவு கூர்ந்து மகிழ்ந்தார். அத்துடன், மாணவியாக இருந்த தனது காலத்தை நினைவுகூர்ந்து தனது எண்ணங்களை அங்கு கூடியிருந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்து கல்லூரியில் தான் பெற்ற கல்வியானது, கல்விப் பயணம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்விச் சீர்திருத்தம் மீதான தனது வாழ்நாள் அர்ப்பணிப்பை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். அவ் வரவேற்பு விழாவில் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர், "கல்வி என்பது வெறுமனே தமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கானது மட்டுமல்ல, மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு நம்மைத் தயார்படுத்துவதுமாகும்" எனக் குறிப்பிட்டார். அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவம்மிக்க சமூகங்களை உருவாக்குவதில் கருணை, ஜனநாயகம் மற்றும் செயல் திறன் மிக்க குடிமகனாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்து கல்லூரி விஜயத்தை அடுத்து பிரதமர், 2015 ஆம் ஆண்டில் திட்டமிடல் ஆணைக்குழுவிற்குப் பதிலாக நிறுவப்பட்ட, இந்திய அரசின் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NITI Aayog) விஜயம் செய்தார். இந்த விஜயத்தில், கல்வி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாகம் ஆகியவற்றில் இந்தியாவின் கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை தற்போது தனது புதிய கல்விச் சீர்திருத்தத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதால், NITI Aayog அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான மேற்பார்வைப் பயணம் மூலமும் Atal Innovation Mission (AIM) மற்றும் கல்வித் துறையில் ஆய்வு, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் கற்கை முறைகளை வலுவூட்டுவதற்கான அதன் அணுகுமுறை உட்பட இந்தியாவின் மாற்றம் பற்றிய அனுபவங்கள் மீதும் பிரதமர் கவனம் செலுத்தினார். இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் ! | Virakesari.lk