உடுமலை சங்கர் கொலை வழக்கை அரசு தாமதப்படுத்துகிறதா? கௌசல்யா குற்றச்சாட்டும் திமுக பதிலும்
பட மூலாதாரம்,Facebook
கட்டுரை தகவல்
சேவியர் செல்வக்குமார்
பிபிசி தமிழ்
13 டிசம்பர் 2025, 10:01 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்
உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, தங்களுக்கு ஆதரவாக இருந்த ஸ்டாலின் முதல்வரான பிறகு இந்த வழக்கை நடத்துவதில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் கெளசல்யா.
சட்டமன்றத் தேர்தல் வருவதால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குகளைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்கை நடத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறுகிறார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர். சங்கரின் குடும்பத்தினரும் இதே குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளை தி.மு.க தரப்பு மறுத்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புத் துறை தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கை தாமதப்படுத்தும் எந்த உள்நோக்கமும் தமிழக அரசுக்கு இல்லை என்றார்.
வழக்கின் பின்னணி
பழனியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கெளசல்யா, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். உடன் படித்த பட்டியல் பிரிவைச் சேர்ந்த சங்கரை காதலித்த கெளசல்யா தனது வீட்டில் எழுந்த எதிர்ப்பை மீறி சங்கரை கரம் பிடித்தார்.
திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்த நிலையில், 2016 மார்ச் 16-ஆம் தேதி உடுமலையில் கடை வீதிக்குச் சென்றிருந்த போது, பேருந்து நிலையம் அருகில் இருவரையும் ஒரு கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்த சங்கர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். கெளசல்யா, சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.
பட மூலாதாரம்,KOUSALWAY/ FACEBOOK
உடுமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகள், வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தன. கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தந்தை சின்னச்சாமி, தாய்மாமா பாண்டித்துரை ஆகியோர் உட்பட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவானது. வழக்கில் முதல் குற்றவாளியாக சின்னச்சாமியை காவல்துறை சேர்த்திருந்தது.
திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர். கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றொரு மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும்
தண்டனை பெற்றவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தமிழ்நாடு அரசு தரப்பிலும் 3 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான தீர்ப்பு, 2020 ஜூன் 22 ல் வழங்கப்பட்டது. அதில் முதல் குற்றவாளி சின்னச்சாமி மீதான குற்றங்கள் சரிவரி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்திருந்த மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலையும் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்டீபன் தன்ராஜ் மற்றும் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனைகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேரை கீழமை நீதிமன்றம் விடுவித்தது செல்லும் என்றும் உறுதி செய்தது.
அதிமுக ஆட்சியின் போதே இந்த வழக்கின் 2 தீர்ப்புகளும் வெளிவந்தன. அதன்பின் 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதுவும் அதிமுக ஆட்சியிலேயே நடந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தது.
பட மூலாதாரம்,HANDOUT
தமிழக அரசு மீது கெளசல்யா குற்றச்சாட்டு
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த வழக்கில் இதுவரை எந்தவொரு உத்தரவும் வழங்கப்படவில்லை. இந்த வழக்கை தமிழக அரசு திட்டமிட்டே தாமதப்படுத்துவதாக கெளசல்யா குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கின் ஆவணங்களை மொழி பெயர்ப்பதற்கு மேலும் 6 மாதங்கள் வேண்டுமென்று தமிழக அரசு கோரியதன் பேரில், வழக்கு விசாரணையை 2026 நவம்பர் வரை உச்சநீதிமன்றம் தள்ளிப் போட்டிருப்பதாக பிபிசி தமிழிடம் கெளசல்யா தெரிவித்தார். வழக்கை விரைவுபடுத்த வேண்டிய தமிழக அரசே, பெரும் தடைக்கல்லாக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
''ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது திமுக ஆட்சிக்கு வந்ததும் சங்கரின் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தருவோம் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டாகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.'' என்று கெளசல்யா குற்றம்சாட்டினார்.
குறிப்பிட்ட சமுதாய வாக்குகளுக்காக வழக்கு தாமதப்படுத்தப்படுகிறதா?
உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தபின்பு, தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட போதே கெளசல்யா சார்பிலும் தனியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. சங்கர் குடும்பத்தின் சார்பில் அவருடைய தம்பி விக்னேஷ் பெயரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதவியுடன் தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு நடப்பதால் அரசுதான் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக நடத்த வேண்டுமென்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி கதிர்.
பிபிசி தமிழிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், ''வழக்கமாக குற்றவாளிகள்தான் வழக்கை தள்ளிப்போட கால அவகாசம் கேட்பார்கள். ஆனால் ஆவணங்களை மொழி பெயர்க்க 6 மாத அவகாசம் கேட்டது மிகவும் அநீதியானது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குவங்கியைக் குறிவைத்தே, இந்த வழக்கை தள்ளிப் போடுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது'' என்று குற்றம்சாட்டினார்.
படக்குறிப்பு,எவிடென்ஸ் கதிர்
தமிழக அரசு மீது சங்கர் தம்பி குற்றச்சாட்டு
திமுக கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவே கெளசல்யா மற்றும் சங்கர் குடும்பத்தினர் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய சங்கரின் தம்பி விக்னேஷ், ''எங்களைப் பொறுத்தவரை, விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்போதுமே எங்களுக்கு ஆதரவாகவுள்ளனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து இந்த வழக்கை விரைவாக நடத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.'' என்றார்.
கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமியிடம் பிபிசி தமிழ் பேச முயன்ற போது, அவர் தரப்பில் யாரும் பேசுவதற்கு முன்வரவில்லை.
பட மூலாதாரம்,NATHAN G
கெளசல்யா குற்றச்சாட்டுக்கு திமுக பதில்
திமுக தரப்பில் பிபிசி தமிழிடம் பேசிய அதன் செய்தித் தொடர்புத் துறை தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கம் எதுவும் திமுக அரசுக்கு இல்லை என்றார்.
இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. குற்றவாளிகளுக்கு எதிராகத்தான் தமிழக அரசு தரப்பில் அழுத்தமாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் வழக்கை விசாரணைக்கு எடுப்பதும், தள்ளி வைப்பதும் நீதிபதிகளின் முடிவு. அதில் அரசால் எதுவும் செய்யமுடியாது. வழக்கின் தன்மையைப் பொறுத்தே, அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.'' என்றார்.
தமிழக அரசு, இந்த வழக்கை தாமதப்படுத்துவதற்காகவே மொழி பெயர்ப்புக்கு காலஅவகாசம் கேட்டதாக கெளசல்யா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டதற்கு, ''சட்டப்பூர்வ நடைமுறைகள் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இதுபோன்ற வழக்குகள் பெரும்பாலும் உச்சநீதிமன்றத்தில் மிகவும் தாமதமாகவே எடுக்கப்படுகின்றன. இதில் வேண்டுமென்றே எந்த தாமதத்தையும் தமிழக அரசு செய்யவில்லை. குற்றவாளிகள் பலரும் சிறையில் இருப்பதாலேயே வழக்கை விசாரணைக்கு எடுக்க தாமதமாகியிருக்கலாம். ஆனால் நீதிமன்ற விவகாரங்களில் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.'' என்றார்.
சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குகளை பெறுவதற்காகவே இந்த வழக்கை தமிழக அரசு தாமதப்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை' என்று டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்தார்.
இதுகுறித்து கருத்து கேட்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனை தொடர்பு கொண்டபோது, அவர் உடல்நலக்குறைவுடன் இருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.
பட மூலாதாரம்,TKS Elangovan / X
படக்குறிப்பு,டிகேஎஸ் இளங்கோவன்
கீழமை நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கூறுவது என்ன?
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், வழக்கை தாமதப்படுத்துவதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றார்.
''இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் ஓராண்டிற்குள் முக்கிய குற்றவாளிகள் 6 பேருக்கும் மரண தண்டனை பெற்றுத்தந்தோம். ஆனால் உயர் நீதிமன்றத்தில் சிலர் விடுதலையாகிவிட்டனர். உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, அங்கே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இத்தகைய வழக்குகள் வரிசைப்படிதான் எடுக்கப்படும். வழக்கு ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டாலும், அரசு நினைத்தால் வழக்கை முன் கூட்டியே எடுத்துக்கொள்ளுமாறு விண்ணப்பிக்கலாம் அல்லது குற்றவாளிகள் தரப்பில் இதே கோரிக்கையை வைக்கலாம்.'' என்றார் வழக்கறிஞர் சங்கரநாராயணன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cvg11dgzdryo
By
ஏராளன் ·