Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடன் வாங்கிக் களியாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்கிக் களியாட்டம்

 கள்ளன் பொலீஸ் விளையாட்டில் கள்ளனாக இருப்பதைவிட பொலீஸாக இருப்பதைத்தான் அதிகமான சிறார்கள் விரும்புவார்கள். பொலிஸ் என்றால் எங்களிடம் ஒரு மதிப்பு, பயம் எல்லாம் இருந்தது. ஆனால் பின்னாளில் விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின்னர் பொலிஸாக இருப்பது பொலிசுக்கே பயமாகப் போயிற்று.

 வடமராட்சியில் அதுவும் குறிப்பாக வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளில் கடமையாற்ற அன்று சிங்களப் பொலிஸார் பெரிதும் விரும்பினார்கள். அதிலும் வல்வெட்டித்துறை என்றால் பொலிசுக்கு சொர்க்கபுரி. குசேலனாக வரும் பொலிஸ்காரனை குபேரனாக மாற்றிவிடும் மந்திர பூமி அது. எதுவுமே இல்லாமல் பொலிஸ் சேவைக்கு வந்தவர்கள் கூட அங்கிருந்து மாற்றலாகிப் போகும் பொழுது இனி வாழ்க்கையிலே எதுவுமே தேவை இல்லை என்ற நிலையிலேயே திரும்பிச் செல்வார்கள்.

 அன்று வல்வெட்டித்துறைக்கும், தமிழ்நாட்டுக்கும் சட்டபூர்வமற்ற வியாபாரம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வியாபாரத்திற்குத்தான்கள்ளக் கடத்தல்என்று ஒரு குறியீட்டுப் பெயர். எம்ஜிஆர் படம் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே தினத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து தமிழகம் சென்று அதைப்பார்த்து விட்டு, படம் முடிய முட்டைத் தோசை சாப்பிட்டு, பயணத்தின் இடைநடுவே உள்ளே தள்ள எள்ளுப்பிண்ணாக்கும் வாங்கி வரக்கூடிய அளவிற்கு கடல் போக்குவரத்து வல்வெட்டித்துறையில் அப்பொழுது வெகுசிறப்பாக இருந்தது.

 அந்த ஊரில் நடப்பதை எல்லாம் கண்டு கொள்ள வேண்டிய கடமை உணர்வோ, அவசியமோ அங்கிருந்த பொலிஸாருக்கு துளியளவும் இருந்ததில்லை. அதற்காகத்தான் அவர்களுக்கான கொடுப்பனவுகள்  தாரளமாக நடந்து கொண்டிருந்தன. ஆனாலும் ஒரு தமிழ் இன்ஸ்பெக்டர் அங்கே பொறுப்பில் இருந்த பொழுதுஅந்தத் தொழில்செய்பவர்களுக்கு பாரிய பின்னடைவு இருந்தது. அந்த இன்ஸ்பெக்டர் பெயர் குமார். ‘இன்ஸ்பெக்டர் குமார்என்ற பெயரைச் சொன்னாலே போதும் அந்த இடம் அமைதியாகிவிடும். கண்டிப்பும்,கடமையும் நேர்மையும் இணைந்த ஆறடி உயர மனிதர் அவர். வல்வெட்டித்துறைக்கு அடுத்த நகரான வல்வெட்டி என்ற நகரத்தைச் சேர்ந்த அவர் ஓய்வு பெற்ற பின்னர் அரசியல் காரணங்களுக்காக குட்டிமணியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

 வல்வெட்டித்துறையில் இருந்து ஒரு பத்து கிலோமீற்றர் நகர்ந்தால் பருத்தித்துறை. விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு நகரம். இலங்கையின் ஒரு முனை இங்கேதான் இருக்கிறது. அதிசயமாக அந்த முனையில் ஒரே ஒரு பனை இருந்தது. அதனால் பனைமுனை என்று பெயராயிற்று. புகையிரத சேவையைத் தவிர ஒரு நகரத்துக்கு தேவையான அனைத்தும் பருத்தித்துறையில் இருந்தன.

 பருத்தித்துறையில் இருந்த பொலிஸ் நிலையத்துக்கு முன்புறமாகவே நீதிமன்ற வளாகம் இருந்தது. காணி வழக்குகள், அல்லது கொடுக்கல் வாங்கல்களினால் வரும் பிணக்குகளைத்தான் பெரும்பாலும் அந்த நீதிமன்றத்தில் காணக்கூடியதாக இருந்தது. எப்போதாவது, நகரத்துக் காலிகளுக்குள் வந்த அடிதடி வழக்குகள் அந்த  நீதிமன்றத்திற்கு வரும். அதற்கான கோப்புகளைத் தூக்கிக்கொண்டு வந்து தங்கள் நேரம் வரும் வரை தூங்கி வழிந்து நீதிபதிக்குக் காட்டிவிட்டு தூசி பறக்காமல்  மூடி எடுத்துச் செல்வதே அன்றிருந்த பொலிஸாரின் முக்கிய வேலையாக இருந்தது. அதைத் தவிர பெரிதாகச் செய்து கொள்ள அவர்களுக்கென்று அங்கே வேலைகள் இருக்கவில்லை. குடி, கும்மாளம், விளையாட்டு என்று அவர்கள் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருந்தது.

 எழுபதுகளின் பிற்பகுதியில் சிறு வேளாண்மையை ஊக்குவிக்குமுகமாக சிறு கடன் உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்ததுவிவசாயிகளின் நன்மைக்கென கொண்டுவரப்பட்ட அந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கடனை பெற்றுக்கொள்ள அதில்  ஒரு ஓட்டை இருந்தது. அந்தக் கடனை பெற்றுக் கொள்வதாயின் அதற்கு காணி ஒன்று அவசியம் இருக்க வேண்டும். கடன் பெறுபவருக்கு அந்தக் காணி சொந்தமாக இருக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. குத்தகைக்குக் கூட அந்தக் காணியை எடுத்திருக்கலாம். அல்லதுஇன்னாரான நான் எனது காணியில் சிறு பயிர் செய்வதற்கு இன்னார்க்கு சிறிது காலத்துக்கு இலவசமாக தருகிறேன்என்று எழுதி ஒப்பம் இட்டுக் கொடுத்தாலும் போதுமானதாக  இருந்ததுஎல்லாவற்றுக்கும் மேலாக காணி விவசாயத்துக்கு உகந்தது என்ற விதானையாரின் சான்றிதழ்தான் முகியமாகக் கவனிக்கப் பட்டது. (விதானையார்தான் பின்னாளில் கிராம சேவையாளர் என்று அழைக்கப்படுகிறார்) அரசாங்கத்தின் இந்தக் கடன் திட்டத்தால், பனைமுனைக்கு அருகில் இருந்த 105 அடி உயர கலங்கரைவிளக்கத்துக்கு மேலாக விதானைமார்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.

 பனைக்கூட்டமா?, பற்றைகள் நிறைந்திருக்கின்றனவா?, தென்னைகளின் சோலையா?, பள்ளமான காணியா?, நீர்ப்பாசன வசதி கிடையாதா? எதுவாக இருந்தாலும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் வேண்டியவர்களுக்கு எல்லாம் விதானைமார்கள் சான்றிதழ்கள் தந்தார்கள். இந்தத் திட்டத்தால் விதானைமார்கள் சம்பாதித்தார்களா?, சந்தோசம் அடைந்தார்களா? என்பது இங்கே தேவையில்லாத விசயம் என்பதால் அதை விட்டு விடுகிறேன்

பருத்தித்துறை நகரம் ஒளிர ஆரம்பித்தது. பயிர் வளர்க்கக் கொடுத்த பணத்தில் பலர் கைகளில் தங்கமுலாம் பூசிய சிற்றிசன், சீக்கோ கடிகாரங்கள் முளைத்திருந்தன. நடந்து செல்லக்கூடிய தூரத்தில் இருந்த சென்றல் தியேட்டருக்கு வாடகைக் காரில் வந்து சினிமா பார்த்து விட்டுப் போனார்கள். புஹாரி ரெக்ஸ்ரைல், ரவி ரெக்ஸ்ரைல் இரண்டும் தங்கள் வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்காக புது வேலையாட்களை அமர்த்திக் கொண்டார்கள். கலாவதி நகை மாளிகையினர் தங்கள் தங்க இருப்பு முடிந்து யாழ்ப்பாணத்தில் தங்கம் கொள்வனவு செய்ய ஆள் அனுப்பினார்கள்.   எல்லாவற்றுக்கும்  மேலாக துரைசிங்கம் சாராயக்கடைக்கு முன்னால் எப்போதும் ஒரு ஆண்கள் கூட்டம்  நின்றது.

 இந்தக்கடன் திட்டத்தால்  காலையில் ஒன்பது மணிக்கு திறக்கும் பருத்தித்துறை இலங்கை வங்கிக்கு முன்னால் ஆறு மணிக்கே ஒரு நீளமான வரிசை காத்து நிற்கத் தொடங்கியது. பலமணி நேரம் காத்து நின்றாலும் வங்கி திறக்கும் போது ஒரு கூட்டம் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உள்ளே நுளைந்து விடும். எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால் அழகு தமிழில் அரச்சனைகள், ஆலாபனைகள் அமர்க்களமாக இருக்கும். பருத்தித்துறையில் மீன் சந்தை மரக்கறிச் சந்தை என்று இரண்டு சந்தைகள் இருந்தன. இப்பொழுது இலங்கை வங்கி மூன்றாவது சந்தையாக மாறிப் போயிருந்தது.

இலங்கை வங்கி மதியம் ஒரு மணியுடன் வெளியாளர்களுக்கான சேவையை நிறுத்தி விடுவதால், இவ்வாறான நிலையில் வழமையான வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் சிரமப்பட்டார்கள். வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் வங்கி முகாமையாளர் பொலிஸின் உதவியை நாட வேண்டியதாயிற்று. கூட்டத்தை ஒழுங்கு செய்ய இரண்டு பொலிஸ்காரர்கள் கடமைக்கு வந்தார்கள். வந்தவர்களில் ஒருவன் கருணாரட்ண. கருணாரட்ண களுத்துறையைச் சேர்ந்தவன். தனது இளம் மனைவி, ஒரு வயது மகளுடன் ஆத்தியடி என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். யாருடனேயும் அதிகம் நெருக்கம் காட்டாமல் தான், தனது குடும்பம், வேலை என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே அவனது வாழ்க்கை இருந்தது.

 ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட விண்ணப்பங்களைத்தான் பெற்றுக் கொள்வார்கள் என்பதால் வங்கியில் அன்றும் முண்டியடிப்பு பலமாக இருந்தது. பெண்கள், முதியவர்கள் என்று பாராமல் கடனுக்கான தனது விண்ணப்பத்தை முதலில் கொண்டுபோய்க் கொடுப்பதற்காக எல்லோரையும் தள்ளிக் கொண்டு ஒரு இளைஞன் முன்னேறிக் கொண்டிருந்தான். `தவிட்டுமூட்டை´ என்று அவனது நண்பர்கள் அவனை அழைப்பதால், அவனது பெயர் என்னவென்று அனேகருக்குத் தெரியாது. மரக்கறிச் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். சந்தை வியாபாரம் மட்டுமல்ல சாராயமும், சண்டித்தனமும் அவனுக்கு விருப்பமானவை. அவனைத் தெரிந்தவர்கள் எச்சரிக்கையாக விலகிக் கொண்டனர். ஆனால் ஒரு சிலர் ஏற்படுத்திய சலசலப்பு கருணாரட்ணவை அந்தப் பக்கம் பார்க்க வைத்தது.

 தனக்கு முன்னால் வந்து நின்ற கருணாரட்ணாவை தள்ளிவிட்டு முன்னே போக தவிட்டுமூட்டையால் முடியவில்லை. கருணாரட்ண  தவிட்டுமூட்டையின் கையைப் பிடித்து இழுத்து வந்து வரிசையின் கடைசியில் விட்டு விட்டுப் போனான். அங்கே நின்றவர்கள் முகத்தில் சிரிப்பு. தவிட்டுமூட்டையின் முகத்தில் மட்டும் நெருப்பு. தவிட்டுமூட்டையின் உருட்டல், வெருட்டல் எல்லாம் கருணாரட்ண என்ற பொலீஸிடம்  தோற்றுப் போயின.

 மறுநாள், பத்திரகாளி ஒழுங்கையும் விநாயகர் முதலியார் வீதியும் சந்திக்கும் இடத்தில் இருந்து துறைமுகம் வரை, வீதியில் 20 அங்குல அளவில் ஒரு நீண்ட சிவப்பு கோடு இருந்தது. பலர் வந்து பார்த்து விட்டுப் போனார்கள்.

 மதியம் ஒரு மணியளவில் துறைமுகத்தில் இருந்து மெதடிஸ் பெண்கள் பாடசாலைவரை பல பொலிஸ் ஜீப்புகள் நின்றன. கரையில் இருந்து கடலில் 300 மீற்றர் உள்ளே இருந்த முருகைக்கற்களின் மேலே கூட்டமாக பறந்தபடி காகங்கள் கத்திக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு அசாதாரண நிலை அங்கே உருவாகி இருந்தது.

 காற்று அதிகமாக இருந்ததால், அலைகள் வேகமாக வந்து துறைமுகத்தையே அசைத்து விடுவது போல அதன் சுவரை மோதிவிட்டு போய்க் கொண்டிருந்தன. மோசமான அலைகளால் கடலில் படகுகளை இறக்குவதற்கு யாருக்கும் துணிவு வரவில்லை. பொலீஸாரின் வேண்டுகோளை ஏற்று சுழியோடி ஒருவர் தன் படகில் முருகைக்கல் வரை போக ஒத்துக் கொண்டார். போய் வந்தவர் சொன்னார், “ முருகைக்கல்லுக்குள் சிக்கி ஒரு பிணம் இருக்கிறதுஎன்று.

 “நேற்று வேலைக்குப் போன என் புருசன் இன்னும் வீட்டுக்கு வரயில்லைஎன்று கருணாரட்ணவின் மனைவியின் முறைப்பாடு, முருகைக்கல்லுக்குள் இருக்கும் பிணம் இரண்டையும் பொலிஸ் இணைத்துப் பார்த்தது. இப்பொழுது காங்கேசன்துறையில் இருந்தும் மேலதிக பொலீஸார் வந்து சேர்ந்து கொண்டார்கள். ஏகப்பட்ட பொலீஸ்காரர்கள் இருந்தும் முருகைக்கல்வரை போக முடியாத அளவில் கடலில் எழுந்த அலைகள் அவர்களைத் தடுத்தன.

 “முருகைக்கல்லுக்குள் இருப்பது என் புருசனா இருக்கக் கூடாதுஎன்று கருணாரட்ணவின் மனைவி கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அது கருணாரட்ணவின் உடல்தான் என்பது மூவருக்கு மட்டும் தெரிந்திருந்தது. அவர்கள்தான் முதல்நாள் இரவு வேலை முடிந்து வந்த கருணாரட்ணவை அடித்து வீழ்த்தி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு  வீதியில் இழுத்து வந்து துறைமுகத்துக்குக் கீழே கடலில் போட்டுவிட்டுப் போனவர்கள்.

 அந்த மூவரில் ஒருவன் தவிட்டுமூட்டை. மற்றைய இருவரும் அவனது நண்பர்கள். பொலிஸ் துப்புகள் துலக்கி இவர்கள்தான் கொலையாளிகள் என்று கண்டறியும் முன்னரே அவர்கள் மூவரும் நகரத்தை விட்டு ஓடி விட்டார்கள். யேர்மனிக்கோ? பிரான்சுக்கோ அவர்கள் போய் விட்டதாக பின்னர் நகரத்தில் பேசிக் கொண்டார்கள்.

 இது நடந்து இப்பொழுது நாற்பது வருடங்களாயிற்று. “முதன் முதலில் பருத்தித்துறையில் சிங்களப் பொலிஸை கொன்றவர்கள் நாங்கள்தான்”  என்று தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டில்  அன்று ஓடிப் போனவர்கள் இன்று சொல்லிக் கொண்டிருக்கலாம். கருணாரட்ணவின் மனைவி கூடதன் பேரப்பிள்ளைகளுக்கு வேறு ஒரு கதையை சொல்லிக்கொண்டும் இருக்கலாம்.

 

கவி அருணாசலம் 

18.02.2018

 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

 அன்று வல்வெட்டித்துறைக்கும், தமிழ்நாட்டுக்கும் சட்டபூர்வமற்ற வியாபாரம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வியாபாரத்திற்குத்தான்கள்ளக் கடத்தல்என்று ஒரு குறியீட்டுப் பெயர். எம்ஜிஆர் படம் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே தினத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து தமிழகம் சென்று அதைப்பார்த்து விட்டு, படம் முடிய முட்டைத் தோசை சாப்பிட்டு, பயணத்தின் இடைநடுவே உள்ளே தள்ள எள்ளுப்பிண்ணாக்கும் வாங்கி வரக்கூடிய அளவிற்கு கடல் போக்குவரத்து வல்வெட்டித்துறையில் அப்பொழுது வெகுசிறப்பாக இருந்தது.

அருணாசலம் மிகவும் ரசித்து வாசிக்க கூடியவாறு எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் எழுதியவற்றில் பல கேள்விப்பட்டுள்ளேன்.கடத்தலுக்கு சோமசெற் கார் விசேடமாக தயாரித்து வைத்திருப்பார்களாம்.

அது சரி பருத்திதுறை கதை எழுத வெளிக்கிட்டவர் முன்னுக்கு ஏன் வல்வெட்டிதுறை கதை எழுதி கள்ளகடத்தல் விளக்கம் கொடுத்தவர்?

விளங்கலையே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, TNT said:

அது சரி பருத்திதுறை கதை எழுத வெளிக்கிட்டவர் முன்னுக்கு ஏன் வல்வெட்டிதுறை கதை எழுதி கள்ளகடத்தல் விளக்கம் கொடுத்தவர்?

விளங்கலையே ?

அது பிள்ளையார் சுழி எண்டு நான் நினைக்கிறன்....:grin:

அது சரி கடன்வாங்கி களியாட்டம் எங்கையோ இடிக்குது அருணாச்சலம் ஐயா...:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்,

கள்ளக்கடத்தலில் அநேகமாக பட்டுச் சேலைகள்தான் அன்று வந்தன. அந்தத் தொழில் எவ்வளவு திறமையாக  நடைபெற்றது எனபதற்கு இலங்கை பாராளுமன்றத்தில் அன்று ஒரு சிங்கள மந்திரி சொன்ன தகவல்

ஒரு சிங்களவர் வல்வெட்டித்துறையில் ‘சோமசெற்’ காரொன்றை விலைக்கு வாங்கி  அதில் கொழும்பு நோக்கி பயணித்தார். ஆனையிறவுசெக் பொயின்ற்’ தாண்டி பரந்தனை நெருங்கும் போது, அவர்களின் பின்னால் வந்த கார் சிங்களவரை இடைமறித்து, “மன்னிச்சுக் கொள்ளோணும். “இது எங்கடை ராசியான கார். பெடியன் தெரியாமல்  உங்களுக்க வித்துப் போட்டான்”என்று சொல்லி, தந்தை பணத்தை திரும்பக் கொடுத்து காரை மீண்டும்  வங்கிக் கொண்டு அதே காரில் அந்த சிங்களவரை கொழும்பு மட்டும் கூட்டிக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனார்கள்.

 

மந்திரி சொன்ன தகவல் இத்தோடு முடியவில்லை. மிகுதி உங்களுக்குப் புரியும்.

 

TNT,

“பொலிஸ் என்றால் எங்களிடம் ஒரு மதிப்பு, பயம் எல்லாம் இருந்தது. ஆனால் பின்னாளில் விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின்னர் பொலிஸாக இருப்பது பொலிசுக்கே பயமாகப் போயிற்று...” என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.்அதனால்தான் பொலிஸ்துறையைச் சேர்ந்த இருவரின் மரணங்கள் தொடர்பாக பத்தியில்  குறிப்பிட்டேன். அதில் வல்வெட்டித்துறை பக்கமாக போனபோது ‘கள்ளக்கடத்தல்’ ஐ விட்டு விட்டு என்னால் வரமுடியாமல் போயிற்று.

 

குமாரசாமி,

எங்கே இடிக்கிறது??

  • கருத்துக்கள உறவுகள்

புது வாசனையுடன் சாறங்களும் வேட்டிகளும் பஜார் முழுக்க கிடைத்த காலம் அது.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்கிக் களியாட்டம் செய்ய முடியாத தவிட்டுமூட்டை எப்படி ஜேர்மனிக்கோ, பிரான்ஸுக்கோ வந்து சேர்ந்தாங்கள்?

நீங்கள் என்ன சொல்ல வர்கிறீர்கள் என்று புரியவைல்லை சோம செட் காரை விடவும் பழையது இன்குள்ள வெள்ளைகள் வீணி வடிக்க பார்க்கும் கார்கள் இன்றும் அங்கு ஓடுகின்றது அதுவாவது தெரிந்து கொள்ளுங்கள் தயவுசெய்து வெளியில் நின்று எழுத வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/18/2018 at 6:18 PM, TNT said:

அது சரி பருத்திதுறை கதை எழுத வெளிக்கிட்டவர் முன்னுக்கு ஏன் வல்வெட்டிதுறை கதை எழுதி கள்ளகடத்தல் விளக்கம் கொடுத்தவர்?

விளங்கலையே ?

2005 இலிருந்து 13 ஆண்டுகளாக எங்கே ஐயா இருந்தீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

கடன் வாங்கிக் களியாட்டம் செய்ய முடியாத தவிட்டுமூட்டை எப்படி ஜேர்மனிக்கோ, பிரான்ஸுக்கோ வந்து சேர்ந்தாங்கள்?

அது தெரியவில்லை. யாராவது பார்த்தவர்கள், பேசியவர்கள் சொன்னால்தான் அறிய முடியும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/02/2018 at 10:24 AM, Kavi arunasalam said:

ஈழப்பிரியன்,

கள்ளக்கடத்தலில் அநேகமாக பட்டுச் சேலைகள்தான் அன்று வந்தன. அந்தத் தொழில் எவ்வளவு திறமையாக  நடைபெற்றது எனபதற்கு இலங்கை பாராளுமன்றத்தில் அன்று ஒரு சிங்கள மந்திரி சொன்ன தகவல்

ஒரு சிங்களவர் வல்வெட்டித்துறையில் ‘சோமசெற்’ காரொன்றை விலைக்கு வாங்கி  அதில் கொழும்பு நோக்கி பயணித்தார். ஆனையிறவுசெக் பொயின்ற்’ தாண்டி பரந்தனை நெருங்கும் போது, அவர்களின் பின்னால் வந்த கார் சிங்களவரை இடைமறித்து, “மன்னிச்சுக் கொள்ளோணும். “இது எங்கடை ராசியான கார். பெடியன் தெரியாமல்  உங்களுக்க வித்துப் போட்டான்”என்று சொல்லி, தந்தை பணத்தை திரும்பக் கொடுத்து காரை மீண்டும்  வங்கிக் கொண்டு அதே காரில் அந்த சிங்களவரை கொழும்பு மட்டும் கூட்டிக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனார்கள்.

 

மந்திரி சொன்ன தகவல் இத்தோடு முடியவில்லை. மிகுதி உங்களுக்குப் புரியும்.

அந்தக்காருக்குள் பட்டு சாறிகள்,வேட்டிகள் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சிங்களவர் காரை ஓட்டி வரும் போது, ஆனையிறவு செக் பொயின்றில் அதிகளவு கெடுபிடி கிடையாது. போதாதற்கு காரில் அவைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது அந்த சிங்களவருக்கும் தெரியாது. செக் பொயின்ற் தாண்டியதும் காரை திரும்ப பெற்றுக்கொண்டு  சிங்களவரையும் மரியாதையுடன் கொழும்பில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள். ஆக மொத்தம் பொருட்கள் கொழும்புக்கு கடத்தப்பட்டு விட்டன.

சொமசெற் காரை இங்கே நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் 70களின் இறுதியிலேயே  Toyota van. (வெள்ளை வான்) வந்து விட்டது.

17 hours ago, suvy said:

புது வாசனையுடன் சாறங்களும் வேட்டிகளும் பஜார் முழுக்க கிடைத்த காலம் அது.....!  tw_blush:

சங்கு மார்க் சாரம் கட்டிய ‘பெடியங்களை”க் கண்டால் ஜேஆரு க்குப் பிடிக்ககாது?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் கதை சொல்கிறீர்கள் ரவி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

 ரவி அருணாச்சலம் ஐயா நமக்கு முற்பட்ட நமது பிரதேசம் தொடர்பான சங்கதிகளை கதையாக்கி பதிவிட்டிருக்கிறீர்கள். எனக்கும் நம்ம கு.சா கேட்டதுபோலதான் தோன்றுகிறது. கடன் வாங்கி களியாட்டம் என்ற தலைப்பு ஒட்டாமல் நிற்பதுபோல் இருக்கிறது. படைப்பாளியாக உங்களுக்கு இக்கதை தொடர்பாக தோன்றிய விடயம் எனக்கு எட்டவில்லையோ என்னவோ.... ஒரு முறை எனது சிறு பிராயத்திற்கு சென்று திரும்ப வைத்திருக்கிறது உங்களுடைய எழுத்தாற்றல். அனுபவித்து வாசித்தேன். சிறு வயதில் அடிக்கடி 751 பஸ்ஸில் எனது பேரனுடன் பருத்தித்துறைக்கு செல்வேன். ஒரு முறை ,மீளவுமு; சந்தை, வங்கி, சிங்களப் பொலிஸார், கோரியடி, பருத்தித்துறை ஜெற்ரி...  நன்றி ஐயா மீள் நினைவுகளைத் தோற்றுவித்தமைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வல்வை சகாறா said:

சிறு வயதில் அடிக்கடி 751 பஸ்ஸில் எனது பேரனுடன் பருத்தித்துறைக்கு செல்வேன்

சின்ன வயதிலேயே உங்களுக்கு பேரன் இருந்திருக்கிறாரா?

எனது  பெயர் கவி அருணாசலம்

On 21/02/2018 at 5:56 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாகத்தான் கதை சொல்கிறீர்கள் ரவி அண்ணா

அங்கிள்என்று சொல்லாதவரையில் மகிழ்ச்சி.

சுமேரியர், எனது பெயர் கவி

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டி என்பது வல்வெட்டித்துறை நகரசபையின்(?) கீழ் வரும் ஒரு கிராமம். அதை உங்களால் எப்படி நகரம் என்று கூற முடிகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

சின்ன வயதிலேயே உங்களுக்கு பேரன் இருந்திருக்கிறாரா?

எனது  பெயர் கவி அருணாசலம்

 

மன்னிக்கவும் கவி என்பதை கவி என்று பதிவிட்டுவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாச்சலம் மிகவும் நேர்த்தியாக அனுபவங்களை கதையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.!!
இங்கே கருத்து எழுதிய பலர் சந்தேகக் கேள்விகளையும், மறை பொருள் விமர்சனங்களையும், கதை தலைப்பு பற்றிய விமர்சனம் வைக்கிறீர்கள்.
இதன் அடிப்படை எனக்கு புரியவில்லை.
இந்த கதை/கட்டுரை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களையோ அல்லது இளைஞர் குலாமையோ அவதூறு கூறுவதாக எனக்குப் படவில்லை. 70 களில் இருந்த நிலை, அங்கே நடந்த ஒரு கொலை, அதன் பின்னணி இப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது.

சரி இந்த கதை தலைப்பு எப்படி பொருந்தும்? 
கடன் வாங்கி களியாட்டம் :  கீழே இந்த வரிகள் மிக நன்றாகவே பொருந்து கின்றனவே!!!
வேளாண்மையை ஊக்குவிக்குமுகமாக சிறு கடன் உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கடனை பெற்றுக்கொள்ள அதில்  ஒரு ஓட்டை இருந்தது.
பயிர் வளர்க்கக் கொடுத்த பணத்தில் பலர் கைகளில் தங்கமுலாம் பூசிய சிற்றிசன், சீக்கோ கடிகாரங்கள் முளைத்திருந்தன. நடந்து செல்லக்கூடிய தூரத்தில் இருந்த சென்றல் தியேட்டருக்கு வாடகைக் காரில் வந்து சினிமா பார்த்து விட்டுப் போனார்கள். புஹாரி ரெக்ஸ்ரைல், ரவி ரெக்ஸ்ரைல் இரண்டும் தங்கள் வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்காக புது வேலையாட்களை அமர்த்திக் கொண்டார்கள். கலாவதி நகை மாளிகையினர் தங்கள் தங்க இருப்பு முடிந்து யாழ்ப்பாணத்தில் தங்கம் கொள்வனவு செய்ய ஆள் அனுப்பினார்கள்.   எல்லாவற்றுக்கும்  மேலாக துரைசிங்கம் சாராயக்கடைக்கு முன்னால் எப்போதும் ஒரு ஆண்கள் கூட்டம்  நின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

இந்த கதை/கட்டுரை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களையோ அல்லது இளைஞர் குலாமையோ அவதூறு கூறுவதாக எனக்குப் படவில்லை. 70 களில் இருந்த நிலை, அங்கே நடந்த ஒரு கொலை, அதன் பின்னணி இப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது.

 

நன்றி சசி வர்மன். 

உங்கள் எழுத்தில் எனது குரல் பதிவாகி இருக்கிறது. ??

14 hours ago, வல்வை சகாறா said:

கவி என்பதை கவி என்று பதிவிட்டுவிட்டேன்.

வல்வை சகாறா, கவி என்பதை கவி என்றுதானே எழுதவேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

வல்வெட்டி என்பது வல்வெட்டித்துறை நகரசபையின்(?) கீழ் வரும் ஒரு கிராமம். அதை உங்களால் எப்படி நகரம் என்று கூற முடிகிறது? 

மீரா, வல்வெட்டி என்பது ஒரு கிராமம்தான். ஒத்துக்கொள்கிறேன். வேறு ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

மீரா, வல்வெட்டி என்பது ஒரு கிராமம்தான். ஒத்துக்கொள்கிறேன். வேறு ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள்.

 

உங்களிடம் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை நான் எழுதவில்லை,

வல்வெட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் வல்வெட்டித்துறை யிலிருந்து பிரித்து (சாதித்தடிப்பில்) வேறுபடுத்துவதற்காகவே தாம் வல்வெட்டி என்று குறிப்பிடுவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்று , உங்களிடமிருந்து பழைய சம்பவங்களை , உங்களின் எழுத்தின் மூலம் வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 02/03/2018 at 5:45 AM, Kavi arunasalam said:

அங்கிள்என்று சொல்லாதவரையில் மகிழ்ச்சி.

சுமேரியர், எனது பெயர் கவி

எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரும் உங்களைப் போலவே நிறையக் கதைகள் சொல்வார். அவரின் அப்பா பெயரும் அருணாச்சலம் தான் .எழுத்தும் அவர் போலவே இருந்ததா.... என்னை அறியாமலேயே அவரின் பெயர் வந்துவிட்டது. மன்னிக்கவும் கவி அருணாசலம் அவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3.3.2018 at 8:58 AM, MEERA said:

உங்களிடம் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை நான் எழுதவில்லை,

வல்வெட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் வல்வெட்டித்துறை யிலிருந்து பிரித்து (சாதித்தடிப்பில்) வேறுபடுத்துவதற்காகவே தாம் வல்வெட்டி என்று குறிப்பிடுவார்கள்.

 

கரவெட்டி துன்னாலையிலை இருக்கிறவையும் உந்த விசயத்திலை வலு கவனம் கண்டியளோ.......தங்கடை வீடு கரவெட்டியெண்டு சொன்னாலும் பக்கெண்டு றோட்டின்ரை பெயரையும் சேர்த்துத்தான் சொல்லுவினம்...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கரவெட்டி துன்னாலையிலை இருக்கிறவையும் உந்த விசயத்திலை வலு கவனம் கண்டியளோ.......தங்கடை வீடு கரவெட்டியெண்டு சொன்னாலும் பக்கெண்டு றோட்டின்ரை பெயரையும் சேர்த்துத்தான் சொல்லுவினம்...tw_blush:

ஓம் கு.சா, கரவெட்டியில் சில வருடங்கள் இருந்த எனக்கே ஒருத்தன் எவடம் என்று கேட்க "கிழவி தோட்டம்" என்றான்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.