Jump to content

பிளாக்பாந்தர் (Black Panther)


Recommended Posts

பதியப்பட்டது

நாய்க்குட்டி தனது படுக்கையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது. அந்த நிமிடத்தில் அது பார்ப்பதை மட்டும் செய்து கொண்டிருந்தது. நாளைக்கான திட்டமிடல்களோ நேற்றைய நினைவுகளோ நாய்க்குட்டியிடம் இருப்பதில்லை.

மகிந்தன் நாய்க்குட்டியினை நிலைகுத்திப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள், நாயின் கண்கள் என்ற வித்தியாசங்கள் அவனுள் மறைந்து, இடையில் இணையவலை இருப்பது மறந்து இந்தக் கதையினை இப்போது படித்துக்கொண்டிருக்கும் வாசகரைப் போல, மகிந்தனிற்கு நாய்க்குட்டி தெரிந்தது. நாய்க்குட்டிக்கும் தனக்கும் இடையே இருந்த தூரமோ நேரமோ அவனிற்குள் மறைந்து போனது.

மிகமிகப் பழைய காலத்தில், படைப்பெதுவும் நடப்பதற்கு முன்னால், ஆதிக்கு முந்திய ஒரு ஆதிக் கணம் இருந்தது. அது வெறுமையாய் இருந்தது. ஒன்றில் இருந்து இன்னுமொன்று வந்தது என்று எவரும் சொன்னால், எடுத்த எடுப்பில் எதில் இருந்து அந்த முன்னையது வந்தது என்ற கேள்வி பிறந்து விடும். ஆகையால், புரிகிறதோ இல்லையோ, ஒன்றுமில்லாமலிருந்தது பின் எல்லாம் வந்தது என்று நினைப்பது ஏனோ மகிந்தனுள் ஒரு அமைதியினை உருவாக்கியது. 

--------

'பிளாக்பாந்தர்' திரைப்படத்தை முன்னைய நாளில் தான் மகிந்தன் பார்த்திருந்தான். அவனது வாழ்வில் அவன் ஆயிரக்கணக்கான திரைப்படங்களை இருபத்தியைந்து மொழிகளில் இதுவரைக்கும் பார்த்திருந்தபோதும், இப்போதைக்கு 'பிளாக்பாந்தர்' தான் தான் பார்த்தவற்றில் சிறந்தபடம் என்று அவனால் தயக்கமின்றிக் கூற முடிகிறது. பிளாக்பாந்தர் படம் பார்த்த பொழுதிலேயே இப்போதும் அவன் உட்கார்ந்திருக்கிறான்.

காலை எழுந்ததும் இரைச்சல் கூடப் பிறந்துவிடுவதால் நடக்கும் போது கூட பல பில்லியன் மனிதர்கள் தூங்கிக் கொண்டே இருக்கிறார்கள். மகிந்தனின் கவனத்தில் ஏனென்று தெரியாது இந்த எண்ணம் எழுந்து மறைகிறது. தொடர்ந்து, எங்கிருந்தோ ஒரு பழைய செய்தி அவனிற்குள் வருகிறது. விசுவரூபம் படம் பிரச்சினையின் போது ஒரு ஊடகவிலயலாளர் கமலகாசனிடம் எப்படி இந்த உழைச்சலைச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'நிறையத் தூங்குகிறேன்' என அவர் பதிலளித்திருந்தார். இந்தப் பழைய செய்தி மகிந்தனுள் எழுந்து மறைகிறது. தொடர்ந்து சில சிந்தனைகள் மகிந்தனின் பிரக்ஞையில் ஏன் எப்படி என்று தெரியாது பிறக்கின்றன....தாமாகத் தூங்கமுடியாதோர், ஏதோ ஒரு போதைக்குள் மறைய முனைந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் பல பில்லியன் மனிதர்கள் தினந்தோறும் தூக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு, எந்த ஒரு வரிசைக்கிரமமும் இன்றி, தான்தோன்றியாய்த் தன்னுள் எழுகின்ற சிந்தனைகளை எதிர்வினையின்றி மகிந்தன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

....பிளாக்பாந்தர் திரைப்படம் கறுப்பின மக்களை நோக்கி பேசுவதுபோல் உலகின் அனைத்து மனிதர்களிடமும் பேசுகிறது. சட்டத்துள் பூட்டப்பட்டதாய் நம்பி தூக்கத்தைத் தேடும் என்சனமே பரந்த வெளியில் நீ பறந்துகொண்டிருப்பதைக் கண்டுகொள் என்கிறது. நீந்திக்கொண்டே நீச்சல் தெரியாதெனும் மாந்தர்காள் நீங்கள் நீந்தும் அழகினைக் கண்ணுறுங்கள் என்கிறது. நேற்றைய கைவிலங்குள் இன்றைய செய்திகள் மட்டுமே என்கிறது. இந்தக் கணத்தின் சிறகில் அமர்ந்துகொள்ளுங்கள் என்கிறது. இந்தக் கணத்தின் சிறகு அலாவுதீன் பாய் போன்று உங்களிற்கு உங்களின் சுதந்திரம் உணர்த்தும் என்கிறது. உங்களின் அடிமுடி தொடமுடியாத நீட்சி உங்களை ஆதிக்கு முந்தைய, ஏதுமற்ற ஆதிக்கணத்தில், ஏதுமேயின்றி இருத்தி வைக்கும் என்கிறது. மேலும், அப்படியமர்கையில் எல்லாமும் உள்ளமை தெளிவாய்த் துலங்கும் என்கிறது.

-------------

முப்பதியொருவயதே நிரம்பிய இயக்குனருள் பிளாக்பாந்தர் பிறந்து விரிந்தமை நேர பரிமாணத்திற்கு அப்பாற்பட்டது என்பதாய் மகிந்தன் நினைதுக்கொள்கிறான். நாய்க்குட்டியினைப் பார்த்துக் கொண்டிருந்த மகிந்தனிற்கு, நாய்க்குட்டியின் கண் வழியாக தனக்குள்ளுள்ளும் பிளாக்பாந்தர் இருந்தமை தெரிகிறது.

வக்காண்டாவிற்கும் வன்னிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. வைபிறேனியத்தை விஞ்சிய வைராக்கியம் வன்னியிலும் இருந்தது. 1972ம் ஆண்டிலோ 2018ம் ஆண்டிலோ வன்னியும் வக்காண்டாவும் பிறக்கவில்லை. ஆதிக்கு முந்திய ஆதிக்கணத்தில் இருந்தே அவை இருக்கின்றன. நேர பரிமாணத்தில் பார்வைகள் குளப்பம் தரும். சலனமற்ற ஏகம் தெளிவாய் உறைந்து கிடக்கிறது  என்ற எண்ணம் மகிந்தனுள் எங்கிருந்தோ வந்து உட்கார்ந்து கொள்கிறது. 

 

-----------

மகிந்தன் நாய்க்குட்டியின் சுதந்திரத்தைத் தானும் உணர்ந்து கொள்கிறான். அருகில் நடக்கும் புனரமைப்பு வேலைத் தளத்தில் யாரோ ஒரு பெரிய இரும்புக் குளாயினை இன்னுமொரு குளாய் மீது போட்டபோது, இல்லாதிருந்து இருக்கத்துவங்கிய ஒலி, கோவிலின் காண்டாமணி போன்று மகிந்தனுள்ளும் நாய்க்குட்டியுள்ளும் விரிகிறது. இல்லாதிருந்து பிறந்த ஒலியின் சலனமற்ற உறைந்த வெறுமைத் தோற்றுவாய் மகிந்தனின் கவனத்தில் வருகிறது. தானும் நாய்க்குட்டியும் கூட அவ்வொலி போன்று இல்லாமைக்குள் அருவமாய் இருந்து உருவம் பெற்றதாய் அவன் நினைத்துக் கொள்கிறான். 


வக்காண்டாவினது சுதந்திரம் மகிந்தனிற்குப் பூரணமாகச் சாத்தியப்படுகிறது. அச்சுதந்திரம் வன்னிக்கும் உரித்தானது.


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது கதையல்ல, உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஜென் தத்துவம்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

700 பேர் கொள்ளக்கூடிய திரையரங்கில் ஏறக்குறைய எல்லோருமே கறுப்பர்களால் நிரம்பி வழிந்தபடி நானும்  Black Panther படத்தைப் பார்த்தேன். படம் முடிந்தபின்னர் பலர் கைதட்டி தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். இதுபோலவே முன்னரும் Django Unchained படம் முடிந்தபோதும் கைதட்டிக் கொண்டாடியதையும் நான் பார்த்திருந்தேன்.

கற்பனையான மாஜாலால வக்கண்டாவின் சுதந்திரம் ஒருபோதும் ஆபிரிக்காவில் உள்ள கறுப்பர்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற யதார்த்தத்தைப் புரிந்தாலும் மாயமான உலகில் இருமணிநேரம் திளைக்க வைத்த படம். வன்னியில் வைராக்கியமாக இருந்தவர்களால் நாங்களும் இருபது முப்பது வருடங்கள் காற்றுப்புகமுடியாத இடங்களிலும் போக நினைத்தால் போவோம் என்று அதீத நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அதுவும்  இப்போது ஒரு கற்பனையான காலகட்டமாகவே தெரிகின்றது.

Posted
18 hours ago, suvy said:

இது கதையல்ல, உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஜென் தத்துவம்....!  tw_blush:

அனைவரின் கருத்திற்கும் பச்சைக்கும் நன்றி.

சுவி, உங்களிற்கும் இந்த முனையில் ஆர்வமிருப்;பது மகிழ்ச்சி. 

மூன்றாம் வகுப்பு சமயப் புத்தகத்தில் படித்தவை, சோதனைக்காக மட்டும் அன்று படிப்பிக்கப்பட்டு படிக்கப்பட்டிருப்பினும், இப்போது அவை புரிகின்றன. சிவபுராணத்தின் புல்லாகிப் பூடாகி என்ற பந்தியினை முத்திக்கு முன்னான ஒவ்வொரு பிறப்புநிலை அல்லது உயிர்நிலைகள் என்று எழுதினோம், சரி என்று புள்ளி தந்தார்கள். தற்போது தான் அந்தப் பந்தி உண்மையில் புரிகிறது. அது போன்றே ஏகன் அனேகன் என்பதாகட்டும், வேகங்தடுத்தாண்ட என்பதாகட்டும், தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதாகட்டும், ஆதியும் அந்தமுமிலா என்பதாகட்டும், அடி முடியில்லை என்பதாகட்டும், அருவமும் உருவமுமென்பதாகட்டும். இன்னும் எத்தனையோ. அனைத்தையும் மூன்றாம் வகுப்பிற்குள்ளேயே கற்றுவிட்டபோதும் தெளிவு இப்போ தான் கிடைக்pறது. இந்தமுனை களத்தில் பெருவாரியோரிற்குப் பிடிக்காத முனை என்பதனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

மேற்படி திரைப்படத்தைப் பார்த்தபோது அதன் கனதியினை மேற்படி தான் பார்க்கத் தோன்றியது.

14 hours ago, கிருபன் said:

700 பேர் கொள்ளக்கூடிய திரையரங்கில் ஏறக்குறைய எல்லோருமே கறுப்பர்களால் நிரம்பி வழிந்தபடி நானும்  Black Panther படத்தைப் பார்த்தேன். படம் முடிந்தபின்னர் பலர் கைதட்டி தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். இதுபோலவே முன்னரும் Django Unchained படம் முடிந்தபோதும் கைதட்டிக் கொண்டாடியதையும் நான் பார்த்திருந்தேன்.

கற்பனையான மாஜாலால வக்கண்டாவின் சுதந்திரம் ஒருபோதும் ஆபிரிக்காவில் உள்ள கறுப்பர்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற யதார்த்தத்தைப் புரிந்தாலும் மாயமான உலகில் இருமணிநேரம் திளைக்க வைத்த படம். வன்னியில் வைராக்கியமாக இருந்தவர்களால் நாங்களும் இருபது முப்பது வருடங்கள் காற்றுப்புகமுடியாத இடங்களிலும் போக நினைத்தால் போவோம் என்று அதீத நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அதுவும்  இப்போது ஒரு கற்பனையான காலகட்டமாகவே தெரிகின்றது.

 

நன்றி கிருபன் உங்கள் கருத்திற்கு.


மற்றைய கறுப்பின மக்கள் சார் படங்கள் எல்லாம் அவர்களின் துன்பங்களையும் கடந்தகால இருளையும் சோகத்தில் பேசின. இந்தப் படம் அவர்களிற்கு நம்பிக்கைக் கீற்றைக் கொடுத்திருக்கிறது. இது போன்ற படங்கள் பெருந்தாக்கத்தை, தேவையான மாற்றத்தை உருவாக்குவதில் பலத்த பங்காற்றும்.

தமிழர்கள் நாங்கள், ஒரு பெருஞ்சிறப்பான பாரம்பரியத்தில் பிறந்தோம். கதைகளும் இலக்கியமும் எங்கள் பாரம்பரியத்தை பன்மடங்கு புகழ்ந்து பேசின. எம் கண்முன் நாம் எம்மவர்களின் பெருமைகளையும் உயர்வையும் கண்டோம். எம்மை ஒடுக்க வந்த இனக்குரூரம் கூட எம்மீதான மற்றையோரின் பொறாமை என்றே நாம் புரிந்து கொண்டோம். எதிரிக்குக் கூட எமது துரோகிகள் தான் வழிகார்ட்டினர் என்று இறுமாந்தோம். பாட்டன் முப்பாட்டன் பெருமையில் திணறிப்போனோம். ஆகையால் இலக்கியம் சித்தரித்தது போல், இறந்து போன எங்கள் றாச்சியங்கள் போன்று ஒன்றை எம்மால் குறைந்த பட்சம் 30 ஆண்டுகளேனும் கட்ட முடிந்தது. அதற்கும் மேலால் தனிநபர் மட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் பேசப்படும் பிறான்ட்டுகளாக வளர்ந்து நிற்கிறோம். காரணம் எங்களைப் பற்றி எங்களிற்கு இருக்கும் பெருமை.

ஆனால் கறுப்பினத்தவர்க்கு அது கைப்படவில்லை. அவர்களிற்கு ஒரு அடிமைப் பாரம்பரியம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. அவர்களின பிறப்பைக் கூட, நாய்களைத் தெரிவுசெய்து பிறப்பிப்பதுபோல், உடல் உழைப்பிற்காக நெடுநாள் பிறப்பித்தார்கள். இன்றைக்கு 50ற்கு மேற்பட்ட விழுக்காடு கறுப்பினத்தவர் தந்தையால் கைவிடப்பட்ட இல்லங்களில் வளர்கிறார்கள். சந்தை அவர்களை வன்முறையாளராக, சிறை செல்லிகளாக, 2 லீற்றர் கொக்கோகோலாவை வாங்கும் மக்கு நுகர்வோராக, இன்னமும் பரிசோதனைப் பொருளாகவே வைத்திருக்கிறது. அவர்களிற்குள் வெற்றிபெறும் பலர், இயன்றவரை கறுப்பு அடையாளத்தில் இருந்து நகர்ந்து வெள்ளையர் போல் நடக்க முயல்கிறார்களே அன்றி கறுப்பினத்திற்கான உதாரணம் கட்ட அனேகர் தயாரில்லை. திரைப்படங்களும் கூட அடிமை காலத்துக் கஸ்ரங்கiளோ, அல்லது தற்போது அவற்களின் வாழ்விடத்தின் வன்முறை நிறைந்த தொலைந்துபோதல் பற்றி மட்டும் தான் பேசி வந்தன. அவர்களிற்குக் காட்டப்பட்ட கதாநாயகர்கள் சிறைக்குப் போனார்கள் அல்லது இறந்து போனார்கள். ஊடகம் அபரிமித பலம் மிக்கது. இந்தவகையில் தான் இந்தப் படம் பார்க்கப்படவேண்டும்.

எங்களிற்கு பிறப்புரிமை போன்று, உணராதபோதும், நமது பாரம்பரியத்தின் பெருமை நாம் போராடியதிலும் எமது அனைத்து உயர்விலும் பெரும் பங்காற்றுகிறது. நாம் அகதியாக வந்தாலும் அகதியாக ஒரு போதும் உணர்ந்ததில்லை. காரணம் எங்கள் பாரம்பரியத்தின் ஆணிவேர். கறுப்பின மக்களிற்கு சல்லி வேர்கள் கூடப் பலமாகவில்லை. ஆதலால் தான் இந்தப் படம் கொண்டாடப்படவேண்டியது. அந்தக் கடைசிக் காட்சி, கடைசி ஒரு நிமிடம், இந்தப் படத்தின் ஆன்மா.

அத்தனை பெரிய ஒரு செயலை செய்ய முனையும் படத்திற்கு அத்தனை பெரிய சகத்தி உண்டு. அதனால் கறுப்பின மக்கள் மட்டுமன்றி அனைவரும் பயன் பெறலாம். ஆதலால் தான் இப்படிப் பதிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

நாம் அகதியாக வந்தாலும் அகதியாக ஒரு போதும் உணர்ந்ததில்லை. காரணம் எங்கள் பாரம்பரியத்தின் ஆணிவேர்

அகதியாக ஒருபோதும் உணர்ந்ததில்லை என்பதற்கு பாரம்பரியத்தின் ஆணிவேர் காரணம் என்று இதற்கு முன்னர் தோன்றியதில்லை.  “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்று பாறை பிளந்து பயிர் விளைத்த சமூகத்தில் இருந்து வந்ததால் விடாமுயற்சிதான் காரணம் என்று நினைத்திருந்தேன்.

Posted

வழமைபேல பல விதத்தில் சிந்தனையை தூண்டும் உங்கள் பதிவிற்கு நன்றிகள்

இன்று காலை வேலைக்கு போகும் போது படித்தேன் பின்னர் வரும்போதும் ஒருமுறை படித்தேன். பின்னர் பிளாக் பந்தர் படத்தை பார்க்கமுடியவில்லை.  அதன் சாராம்சத்தை முடிந்தவரை முடிந்தவரை பார்த்தேன். பின்னர் இதை எழுதுகின்றேன்.

நீங்கள் சிந்திக்கும் வன்னியின் சுதந்திரம் வரையிலான போக்கு ஆதி அந்தத்தோடு தொடர்புபடும் சாதகமான நம்பிக்கையின் வெளிப்பாடு.. இதுவும் ஒரு தொடக்கம் தான். 

everything is nothing nothing is everything

everything = nothing 

இது பலவேறு தளங்களின் பல்வேறுவிதமாக அணுகப்படும் ஒரு தத்துவார்த்த வசனம்.  இந்த சமன்பாட்டிற்கு முன்னரும் பின்னரும் பல விசயங்களை போடலாம். கடந்தகாலத்தில் பல சாம்ராஜிங்கள் 0 வில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு எல்லாமும் ஆனாது. பின்னர் 0 வானது அல்லது உருமாறியது. சோழ சாம்ராஜியம் கூட தற்போதைய வன்னியை விட மோசமான தளததில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது என முன்னர் படித்துள்ளேன். தற்போது அதன் நிலை வேறாக உள்ளது. 

இந்த பூமிக்கும் சூரியனுக்கும் கூட ஒருநாள் முடிவு உண்டு என்பது தான் உண்மை. அதன் அழிவின் போது நாம் இருக்காவிடினும் அறிவியலுக்கு எட்டிய உண்மை அதுதான். இன்று எம் தேசத்தின் சுதந்திரத்தை மறுக்கும் பலம்மிக்க சக்திகள் everything என்ற இடத்திலும் பலவீனப்பட்ட நாம் nothing என்ற இடத்திலும் உள்ளோம். நாளை இந்த நிலை இடம் மாறும் என்பது பிரபஞ்ச அமைப்பு எனலாம். ஆனால் இதனை பொதுவான அமைப்புக்குள் கொண்டுவருவதோ அல்லது இந்த அமைப்பு சடுதியாக தலைகீழாக மாறும் என்பதற்கில்லை. உதாரணமாக எமது தாய்நாட்டின் சுதந்திரத்துக்கு தடையாக இருப்பதில் மேற்குலக நாடுகளின் சிங்களத்துக்கு ஆதரவான நிலை எனலாம். ஆனால் நாம் மேற்குலகில் குடியேறியிருக்கின்றோம். இது ஒருவகையில் nothing என்பதில் இருந்து everything என்ற இடத்துக்கு இடம் மாறியது போலாகின்றது.  இந்த சமன்பாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இப்படி ஒரு சமன்பாட்டில் முன்னர் இஸ்ரேல் இருந்தது. அது 0  வில் இருந்து உருவான தேசம் போல் உணர முடியும்.

இதன் பின் நீங்கள் கூறும் அகதியாய் உணர முடியாதநிலைக்கு எமது பாரம்பரிய ஆணிவேர் என்ற அடிப்படையில் இருந்து பல நம்பிக்கைகள் இந்த சமன்பாட்டின் மாற்றத்திற்கு உதவ நியாயம் இருக்கின்றது. 

ஒரு சாதகமான சிந்தனையை தொடங்குவதில் நாம் அக்கறையுடன் நம்பிக்கையுடன் இருந்தால் இந்த சமன்பாடு எம்மை கைவிட வாய்ப்பில்லை ஏனெனில் அது இயற்கையின் விதி எனலாம்.

அந்தவகையில் உங்கள் சாதகமான சிந்தனைகள் தொடரட்டும். 

 

 

 

Posted

பிளாக் பந்தர் படத்தை நான் பார்க்கவில்லை. அதனால் உங்கள் கதையை 100 வீதம் முழுமையாக புரியமுடியவில்லை. 

இருந்தாலும் உங்கள் கதை மூலம் இனி பார்க்க்வேண்டிய படத்தில் முதலிடத்தில் வைத்துள்ளேன்.

ஆனாலும் வன்னி ஒரு குறியீடாக தமிழ் மக்கள் விடிவடைந்து ஒரு மகிழ்வான சுதந்திரமான வாழ்க்கை வாழ்வேண்டும் என்ற உங்கள் ஆழ்மனது சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்.

எனது ஆளுகைக்கு உட்பட்ட சிறைகளில் இருந்த போராளிகள் வாசிப்பதற்கு தமிழாக்கம் செய்யப்பட்ட ஜென் புத்தமத கதைகள் அடங்கிய புத்தகங்களை வழங்குவதை நீண்டகால வழக்கமாக கொண்டிருந்தேன்.

அக் கதைகளின் ஆழம் மிக அழகானது.

 

 

Posted

அனைவரது வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்.

18 hours ago, கிருபன் said:

அகதியாக ஒருபோதும் உணர்ந்ததில்லை என்பதற்கு பாரம்பரியத்தின் ஆணிவேர் காரணம் என்று இதற்கு முன்னர் தோன்றியதில்லை.  “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்று பாறை பிளந்து பயிர் விளைத்த சமூகத்தில் இருந்து வந்ததால் விடாமுயற்சிதான் காரணம் என்று நினைத்திருந்தேன்.

நிச்சயமாக விடாமுயற்சியின் பங்கு உள்ளது. ஆனால் அந்த விடாமுயற்சிக்கு அவசியமான அத்திவாரம் கதையாடல்களில் தான் இருக்கிறது. பெருங்கதையாடல்களை உடைத்தெறிதல் என்று கிழம்பும் இலக்கிய ஜாம்பவான்கள் கூட, தங்களையறியாது தாங்கள் உடைத்ததைக் காட்டிலும் பெரிய கதைகளை கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யூத மக்கள் தாம் இறைவனால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் என்ற கதையில் நின்று தான் இப்படி இருக்கிறார்கள். அதுபோல், எமது பாரம்பரியத்தில் நிறைய விமர்சனத்திற்குட்படுத்தப்படவேண்டிய விடயங்கள் எல்லா இனங்களையும் போல் இருக்கின்றபோதும், எங்கள் கதையாடல்கள் ஊட்டம்மிக்க பாரம்பரியத்தைப் பிரசவித்து அதில் நாம் பறக்க உதவுகிறது. ஆனால், மனித இனம் ஆரம்பித்த ஆபிரிக்கா உள்ளேயும் வெளியேயும் கதையிழந்து இரவல் சித்தரிப்புக்களில் எத்தியெறியப்படுகிறது. காரணம், அவர்களிடம் கதைகள் இல்லை என்பதல்ல. அவர்களின் அனைத்துக் கதைகளையும், செவ்விந்தியர் உள்ளடங்கலான இதர புராதன சமூகங்களைப் போல, கடந்த பல நூற்றாண்டுகள் திட்;டமிட்டுக் காலாவதியாக்கிவிட்டன. தாம் கதையாடல்களிற்கு உரித்தானவர்கள் அல்ல என அந்த மக்களையே நம்பச்செய்து விட்டார்கள். கதையிழந்த சமூகம் பரிணமிப்பது மிகச்சிரமம். அந்தவகையில் இப்படம் ஒரு துவக்கம். பாட்டி சொன்ன கதைகள் பொழுதுபோக்குமட்டுமல்ல. அவை ஊட்டச்சத்து.

 

11 hours ago, சண்டமாருதன் said:

everything is nothing nothing is everything

everything = nothing 

4 hours ago, பகலவன் said:

எனது ஆளுகைக்கு உட்பட்ட சிறைகளில் இருந்த போராளிகள் வாசிப்பதற்கு தமிழாக்கம் செய்யப்பட்ட ஜென் புத்தமத கதைகள் அடங்கிய புத்தகங்களை வழங்குவதை நீண்டகால வழக்கமாக கொண்டிருந்தேன்.

அக் கதைகளின் ஆழம் மிக அழகானது.

 

இந்த முனையில் யாழ்களத்தில் ஆர்வமிருப்பதை நான் அறியாதிருந்தேன். மகிழ்வாய் இருக்கிறது.

மூளையும் அதன் இயங்குநிலையான மனமும் சர்வமுமாய் சந்தையுலகில் உள்ளது. நாம் மூளைத்தொழிலாளிகள். ஆகையால் அனைவற்றையும் அறிவால் சிந்தித்து அறிந்து கொள்வதை சாத்தியம் என்று நம்புவதற்கு மேலால் உயர்வென்றும் நம்புகிறோம். அறிவிற்கு உதவியாய் விடயங்களின் குறுக்குவெட்டு முகங்களை மட்டும் சட்டங்களிற்குள் அடக்கி அவை மட்டுமே விடயம் என்று அறிவால் ஆராய்ந்து கைதட்டுகிறோம். 

முந்தாநேற்றைக்கு இறந்துபோன Stephen Hawking ஐன்ஸ்ரைனில் ஆரம்பித்துப் பின் பென்றோஸ் கண்டறிந்த, 'நட்சத்திரங்கள் தமக்குள் சிதைந்து Black holeல்கள் உருவாகின்றன. பிளாக்ஹோல் ஒருமை' என்பதை வைத்து சர்வத்தையும் அடக்கிய ஒரு ஒருமையில் (singularity) இருந்து பிக்பாங் பிறந்தது என்று இணைத்தது மட்டுமன்றி பிளாக்ஹோல் கதிர்வீச்சுடையதால் பிளாக்கோலும் அழியும் என்று கூறிவிட்டு நிற்க அறிவியல் சரி பார்க்கலாம் என்கிறது. நிறுவ முடியவில்லை என்று நோபல் பரிசை மட்டும் அவரிற்குக் கொடுக்காது விட்டது. ஆனால், அந்த சர்வத்தையும் அடக்கியதாய் நம்பப்படும் அந்த ஆரம்ப ஒருமை ஒருவேளை இல்லாமையில் இருந்து வந்திருக்கலாமோ? இல்லாமைக்குள் அத்தகைய இன்னும் எத்தனையோ அளவற்ற ஒருமைகளிற்கான சங்கதிகள் இருக்கலாமோ? இல்லாமைக்குள் இருந்து தோற்றங்களும் மறைவுகளும் நடக்கின்றனவோ?என்பன போன்ற கேள்விகளை Empirical முறை அரசாளும் அறிவியலிற்குள் பேசமுடியாது. 

ஆனால் பெட்டிக்குள் இருந்து கவனத்தை சற்று வெளியே திருப்பியவர்கள் ஏராளம் உள்ளார்கள். அனுபவத்தை விளக்குவது ஏறத்தாள முடியாதது. சொற்களிற்கு மூளையில் விம்பங்கள் தாமாக வந்து குந்திக்கொள்ளும். ஆகையால் அவை சட்டங்களிற்குள் குறுக்குவெட்டாக மட்டும் இருந்துகொள்ளும். அனுவத்திற்கு முற்றும் திறந்த விழிப்பு அவசியம். சொற்களிற்கு அது முடியாதது.

எவ்வாறு நாம் புழங்கும் மனிதர்களை ஒரு சொல்லிற்குள் சுருக்கி விம்பமாக்கி வைத்திருக்க நினைக்கிறோமோ அதுபோன்றே சுதந்திரம் என்ற சொல்லும் ஆகிப்போய்விட்டது. சுதந்திர வேட்கை எதற்காக உலகளாவிய தேடலாக இருக்கிறது? கோடானுகோடீசுவரனும் ஏழையும் ஆரோக்கியவானும் நோயாளியும் அடிமையும் ஆண்டானும் ஏன் அனைவரிற்கும் சுதந்திரவேட்கை இருக்கிறது? ஏனெனில் எங்கோ ஆழத்தில் நாங்கள் எமது தன்மையில் வாழவில்லை என்ற அறிதல் இருக்கிறது. Rumi இதனை homesick என்று கவியமைத்தார். நாங்கள் அடிப்படையினை அறிந்திருந்து மறந்துபோனோம், ஆனால் அடியாழத்தில் நாங்கள் மறந்துவிட்டோம் என்பது தெரிகிறது, அதனால் அதை மீள அறியும் சுதந்திரவேட்கை பிறக்கிறது எனலாம். இப்படி ஆரம்பித்ததும் உடனே மூளை இது எனது துறை, விவாதிப்போம் வாருங்கள் என்று ஆரம்பித்து விடும். ஆனால் எந்த விவாதத்தாலும் இம்முனையில் முன்னேற்றம் எட்டமுடியாது. முற்றுமுழுதான கவனத்தோடமைந்த பார்த்துக்கொண்டிருந்தல் மட்டும் போதுமானது.

பிறிதொரு திரியில் பழயன எல்லாம் புரியவில்லை என்று புதைத்துவிட்டு இந்தக் கணத்தில் பூரணசுதந்திரத்தோடு வாழத்தொடங்குங்கள் என்று எழுதியிருந்தேன். அது பலரால் பழையனவற்றை மறந்துவிடல் என்று எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், புரியவில்லை என்று புதைத்துவிடுவது விதைப்பது போன்றது. உரியநேரத்தில் புரிதல் முளைக்கும். பூரண விழிப்புணர்வோடு சரணடைதலே சுதநதிரத்தின் அடிப்படை. சரணடைந்து சுதந்திரம் பெறல் என்பது மூளையால் பார்த்தால் முரண்நகை. விழித்துக் கவனித்தால் அடிப்படை.

பிளாக்பாந்தர் படத்தை ஒரு மாயாஜாலப் படமாகப் பார்க்காது அடுக்குகளிற்குள் இறங்கிப் பார்க்கையில் அதன் ஆன்மா அழகாக இருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்திற்கும் உரையாடலிற்கும் அனைவரிற்கும் நன்றிகள்.


 

Posted

மகன் அடிக்கடி பார்க்க கூட்டிக் கொண்டு போகச் சொல்லி நச்சரித்துக் கொண்டு இருந்தாலும் Black Panther பார்க்கும் எண்ணம் பெரியளவில் முதலில் இருக்கவில்லை. ஆனால் இன்னுமொருவனின் குறிப்பை பார்த்து விட்டு கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் நேற்று இரவு குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு போயிருந்தேன்.

இன்னுமொருவனின் அனுபவபகிர்வை வாசிக்கா விட்டிருந்தால் என் புரிதல் வேறாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். ஆங்கில படங்களில் வரும் சூப்பர் ஹீரோ படங்கள் எதையும் சலிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக இதுவரைக்கும் பார்த்து இருக்கவில்லை. எனவே கருப்பின மக்களிற்கிடையே தோன்றிய ஒரு சுப்பர் ஹீரோவின் fantasy காட்சிகளை மட்டும் BP யில் ரசித்து இருந்திருப்பேன். அல்லது முற்றிலும் வேறான ஒரு புரிதல் வந்து இருக்கும். 

 இன்னுமொருவனின் / இன்னொருத்தரின் பார்வையினூடாக அணுக முற்பட்டதால் எனக்கான புரிதலின் அடிப்படையில் இப் படத்தை அதன களத்தை அதில் இருக்கும் அரசியலை அணுகுவதில் தடுமாற்றம் ஏற்பட்டது. வக்காண்டாவுக்கும் வன்னிக்கும் இடையில் என்ன ஒற்றுமைகள் என்பதை மனம் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது.  கதைகள் இழந்த கருப்பின மக்களின் சாகச வாழ்வும் அந்த சாகசங்களை  நிஜ வாழ்வில் மேற்கொண்ட போராளிகளாலும் பின்னப்பட்ட எங்கள் வாழ்விற்குமிடையில் இருக்கும் ஒற்றுமைகள் / வேற்றுமைகள் எவை என்பதை ஆராய்வதிலேயே என் மனம் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்தது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Quote

நாம் அகதியாக வந்தாலும் அகதியாக ஒரு போதும் உணர்ந்ததில்லை

இதற்கு எம் பாரம்பரியத்தினதும் சாகசங்களை கொண்ட இராச்சியங்களதும் வழியாக வந்த உணர்வு என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கிருபன் கூறியதை போன்று பாறை பிளந்து பயிர் விளைத்த சமூகத்தில் இருந்து வந்ததால் விடாமுயற்சிதான் காரணம் என்றுதான் உணர முடிகின்றது. அந்த விடாமுயற்சியின் காரணமாகத்தான் அகதியாக வந்த நிலத்திலும் வேரூன்றி குறிப்பிட்டு சொல்லக் கூடிய  சமூகமாக நாம் நிற்கின்றோம் என நம்புகின்றேன்

ஈழத்தமிழர்களுக்கு என்று உரித்தான சாகசங்கள் நிரம்பிய கதைகள் / இலக்கியங்கள் என்று கடந்த 30+ வருடங்களில் நிகழ்ந்த உண்மையான கதைகள் தான் இருக்கின்றன. அதற்கு முதல் வந்தவை அனைத்தும் தமிழகத்தில் இருந்து வந்தவை. அந்த இலக்கியங்கள் தமிழக மக்களின் வாழ்வில் ஹீரோ இசத்தை தோற்றிவித்து சினிமா கதாநாயகர்கள் பின்னால் குழுமும் சமூகமாக மட்டுமே மாற்றியிருக்கு. ஆனால் ஈழத் தமிழர்களின் உணர்வு நிலை இதிலிருந்து வேறானது. அதற்கு கிருபன் சொன்ன 'விடா' முயற்சியின் பயனாக விளைந்தது என நம்புகின்றேன்.

நன்றி

 

Posted

நன்றி நிழலி உங்கள் கருத்திற்கு. உங்கள் படம்பார்க்கும் அனுபவத்தை கெடுத்துவி;ட்டேன் போலுள்ளது, வருத்தங்கள்.

நீங்கள் முன்வைத்த கேள்விகள் சார்ந்து இந்தப் பின்னூட்டம்.

ஏறத்தாள பன்னிரண்டு வருடங்களின் முன்னர், நான் வேலைபார்த்த நிறுவனத்தின் வேறு ஒரு பிரிவில் ஒரு கறுப்பினத்தவர் தொழில் புரிந்தார். ஒரு நாள் மிகச்சாதாரணமான ஒரு பொழுதில், மிகச்சாதாரணமாக, தனது வாழ்வில் றோல்மொடல்கள் இருந்ததில்லை. இது தனக்கு மட்டுமல்ல தமது பொதுவான கதை என்று போகிறபோக்கில் சொல்லிச் சென்றிருந்தார். அன்றிலிருந்து சற்று உற்றுக் கவனித்து வருகிறேன் என நினைக்கிறேன்.

எமது வாழ்வு எம்மை இறுக்கமாக வைத்திருக்கிறது. குழந்தைகளுடன் டிஸ்னிவேர்ல்ட் சென்ற அனுபவம் பலரிற்கு இருக்கும். டிஸ்னி பாத்திரங்களாகட்டும் மொத்த அனுபவமே ஆகட்டும், அங்கு வோல்ற் டிஸ்னியின் குழந்தைகளிற்கு மட்டும் கைப்படும் விரிந்தபார்வை, எதுவும் சாத்தியம் என்ற, கடிவாளம் அவிழ்ந்த பார்வை எங்கும் நிறைந்திருக்கும். வருபவர்களும் ஒரு தற்காலிக மாற்றத்திற்குள்ளாகி மகிழ்ந்திருப்பார்கள்.

சாகசக் கதைகள் கையறு மனநிலையில் பிறப்பன. குழந்தைகள் அவற்றை பாத்திரங்களோடு ஒட்டி கேள்வியின்றி ரசிப்பார்கள். பாத்திரங்களின் நகர்ச்சியில் தாமும் பயணிப்பார்கள். எமது அனுபவம் அதிகரித்துச் செல்கையில் வாழ்வில் இறுக்கம் பிறக்கையில் அக்கதைகளிற்குள் பயணிப்பது சிலசமயம் கடினமாகிறது. ஆனால், சாகசக் கதைகள் கதவுகள் போன்று பார்க்கப்படக்கூடியன.

வைபிறேனியமாகினும், கிறிப்ற்றன் ஆகட்டும் இன்னும் என்ன இல்லாத மூலகமாயினும் கதைகளில் எம்மை இன்னுமொரு தளத்திற்கு அழைத்துச் செல்வதற்கான உத்திகளாகவே பயன்படுத்தப்படுகின்றன. எமது மனம் முரண் என்று நினைக்கும் தளத்தில் இருந்து எம்மை சாத்தியங்களை நோக்கி அழைத்துப் போவதற்கு, எமது மனம் ஆராய முடியாத இல்லாத ஒன்றின் துணை தேவைப்படுகிறது. அந்த உத்திதான் வைபிறேனியம் மற்றும் அது போன்ற அனைத்தும். ஆனால், நாம் அந்தச் சாத்தியங்களோடு இறகாய்ப் பயணிக்க ஆரம்பிக்கையில் 'ஆஹா தருணங்கள்' கைப்படுகின்றன.

பல்கலைக் கழகத்திற்குத் தமிழர்கள் பலகாலம் போய்வந்தார்கள். ஆனால் மூக்கில் விரலை வைக்கும் வகையில் எதனையும் அவர்கள் செய்த வரலாறு இல்லை. எங்கேனும் அற்புதமாய் யாரேனும் ஒருவர் மகாராணிக்குக் கணக்குப் படிப்பித்தார் என்றோ, எலியேசர் துரைராஜா போன்றோ சற்று மேலே செல்வார்கள். காலாதிகாலத்திற்கு அதை மட்டும் சொல்லிக்கொண்டு மாணவர்கள் அலுவலக வேலையே குறியாக படிப்பார்கள். படிப்பு அதிமுக்கிய பெறுமதியாகக் காலாதிகாலத்திற்கு இருந்த எமது நிலையே இ;வ்வாறிருந்தது.

மேற்படி சமன்பாட்டில் ஒரு வைபிறேனியம் 1972ம் ஆண்டு இணைக்கப்பட்டது. பின்னர், எவ்வாறு தமிழர் வீச்சு வழர்ந்தது என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. தடைகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட மாத்திரத்தில் கதவுகளைக் கண்டடைந்தார்கள். பொலிசைப் பார்த்துப் பயந்த சமூகத்தில் முள்ளுக்கம்பி வேலி வெட்டி ஆமியின் கழஞ்சியத்தில் உண்டுறங்கி றெக்கி எடுத்து வந்தார்கள், கடலை ஆண்டார்கள், துண்டுகளைக் கொண்டந்து பொருத்திப் பறந்து அடித்தார்கள், அறுவைச் சிகிச்சைகளை இப்படியும் செய்யலாம் என்றார்கள். இந்தப் பட்டியல் முடிக்கமுடியாது பரந்தது. வைபிறேனியம் சாதித்த அனைத்தையும் ஒத்து சாகசங்கள் சாத்தியமாயின. போராளிகளிற்கு மட்டுமல்ல, எப்போதும் இருந்தும் தெரியாதிருந்த பாதைகளை எல்லாம் கனகச்சிதமாய்க் கண்டறிந்து ஒரு மில்லியன் புலம்பெயர் தமிழ்பரம்பலை மக்கள் செய்தார்கள். இவை அனைத்தினதும் அடிப்படை 72ல் பிறந்த ஒரே ஒரு வைராக்கியம். அது ஏற்படுத்திய முடியும் என்று நம்பியமை. 


நாங்கள் வளர்கையில் புத்தகங்களில் சாகசங்களை வாசிப்பது நமக்கு நகைப்பாய் இருந்தது. கண்முன்னே நிஜம் கரைபுரண்டு ஒடுகையில் தங்கமலை ரகசியம் எனக்கெதற்கு. ஆனால் மில்லரிற்கு 'எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்' பாடல் பிடித்திருந்தது. தலைவரிற்கு சோழ வரலாறும் கல்லுக்குள் ஈரம் போன்ற நாவல்களும் பிடித்திருந்தமை பதிவாகியுள்ளது. நாங்கள் பிறப்பதற்கு முன்னான சமூகம் எங்களழவிற்கு இறுக்கமாக இருக்கவில்லை. கதைகள் ஊறிப்போயிருந்தன. நேத்தாஜி பகத்சிங், லெனின், ஸ்டாலின் என எமக்கு முன்னே பிறந்தவர்க்கு எம்மவர்கள் பேர் வைத்தார்கள். அவர்களை விடுவோம், எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டுக்காரராக எம்மவரால் பிரித்தொதுக்கப்படவில்லை. திராவிட அரசியல் யாழில் இருந்தது. வந்தியத்தேவனும் குந்தவையும் பேர்களாக மட்டும் இடப்படவில்லை, எம்மவர்க்கும் கிழர்ச்சியளித்தார்கள். நானும் நீங்களும் சாத்தியங்கள் மத்தியில் வளர்ந்தோம், சாத்தியமாக்கியவர்கள் அதற்கு முன்னைய கதைகளை ரசித்திருந்தார்கள். சோழனை இந்தியத்தமிழன் என்று முன்னையவர்கள் கருதவில்லை. ஏன் எல்லாளனும் பண்டாரவன்னியனும் சங்கிலியனும் அதே கிழர்ச்சி கொடுத்தார்கள். இயக்கர் நாகரிற்கு முன்னால் தொட்டு, சங்கம் தொட்டு திருக்குறள் தொட்டு பாடப்புத்தகங்கள் வழியாயும் பிறிதாயும் எங்கள் சமூகம் பெருமை மிகு பாரம்பரியத்தில் திழைத்துக் கிடந்தது. சாதி முதலான பிரிவினைகள் முதற்கொண்டு இன்னும்பிற அருவருப்புகளும் அனைத்துச் சமூகங்களையும் போல எம்முள்ளும் கிடந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்று சேர்ந்து கனவு காண பொதுப் பெருமை ஏராளம் இருந்தது. 

72;ன் பின்னால் ஏராளம் புதுப் பெருமைகளும் சேர்;ந்துகொண்டன. இன்னமும் பலகாலம் இவையும் சேர்ந்து பங்காற்றும். செம்மொழியோடு பிறந்த நமக்கு Patwa மொழி பேசும், தன்மொழி இழந்து ஆங்கிலத்தை இன்னமும் அடிமைக்காலம் போன்று பேசுகின்ற, மக்களைப் புரிதல் இலகுவல்ல. ஆனால் எனது மொழியினைப் படிப்படியாகப் பறித்துக் கொண்டிருக்கையில் 30 ஆண்டுகள் ஈழத்தில் வக்காண்டாவைப் பார்க்க முடிந்தது. அதுபோல், வன்னி போன்ற கனவை வக்காண்டா இவர்களிற்குள்ளும் உருவாக்கும்.

எமது பாரம்பரியம் தந்த இந்தப் பின்னணியும் இதன் அனுகூலமும் நாம் எண்ணிப்பார்க்காதது. ஏனெனில் நாம் அவற்றை உரிமைகளாக அறியாது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் (we take all this for granted) அதனால் நாங்கள் நினைத்தாலும் எங்களால் அகதியாக முடியாது. அகதி என்றுணர்வதற்கு உள்ளுர முற்றுமுழுதான வங்குறோத்து நிலை அவசியம். அப்படி ஒரு நிலையினை நாங்கள் குந்தியிருந்து தவம் செய்தாலும் அடையமுடியாதபடி எங்களிற்குள் எங்களைப் பற்றிய விம்பத்தை எமது பாரம்பரியம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இது வெறும் சாகசக் கதைகள் மட்டுமல்ல. எமது வாழ்வே பிரமிப்பூட்டும் வண்ணம் தான் எமக்குள் பதிந்திருக்கிறது. அதனால், அது பறிக்கப்பட்ட ஒரு வெற்றிட மனிதனின் மனத்தைப் புரிவது நமக்கு இலகுவல்ல.

கனடாவில் தமிழ் சந்திப்புக்களில் ஏகப்பட்ட பெருமைபேசுதல்களை அவதானிக்க முடியும். கணிசமான தொகையினர் பழமைவாதக்கட்சியின் கருத்துநிலையினை இப்போது விரும்புகின்றனர். மிகவும் சகஜமாகப் பலர் கூறும் ஒன்று, 'ஆங்கிலம் தெரியாது அகதியா வந்து நான் எப்பிடியிருக்கிறன், காப்பிலியள் இஞ்சபிறந்து போட்டுப் பாருங்கோ எப்பிடிச் சீரழியிதுகள் எண்டு. அடியில்லாக் குறை' என்று. மேற்படி கருத்துக் கூறுவோர் கவனிக்கத் தவறுவது, தமிழனாய்ப்பிறந்ததில் மட்டும் அவர்களிற்கு இனாமாகக் கிடைத்த எண்ணற்ற அனுகூலங்களை. தன்னால் மட்டும் சாதித்ததாகக் கூறுபவர்கள் தமக்கு கிடைத்த அனுகூலங்கள் பற்றிக் கிஞ்சித்தும் கருதுவத்தில்லை. இந்நிலையில் அவ்வனுகூலங்கள் இல்லாத நிலையினைக் கற்பனை பண்ணுவது இலகுவல்ல. 

விடாமுயற்சிக்குக் கூட ஒரு நம்பிக்கை அவசியம். நம்பிக்கை பிறப்பதற்கு வெற்றியடைந்தவர்களைக் காண்பது அவசியம். வெற்றியடைந்தவர்கள் பஞ்சமான நிலையில், விடாமுயற்சிகூட சாகசமாகத் தான் பார்க்கப்படும். சாகசம் என்ற சொல்லிலேயே அது வழமைக்கு மாறானது என்ற பொருள் பொதிந்து கிடக்கிறது. சாத்தியம் குறைந்தது என்ற பொருள் தொக்கு நிற்கிறது. சுற்றும் முற்றும் அப்பா அற்ற வீடுகள், பதின்மத் தாய்க்கள், வீட்டுக்கு வீடு சிறையனுபவம், வறுமை, காவல் துறை பிறநாட்டு படையெடுப்பாளர் போன்று மனதில் பதிந்துள்ளமை, வன்முறைக் குளுக்கள், போதைகள் பலவகை, கொலைகள் சர்வதாரணம் என்ற ஒரு நிலையில் நின்று பார்ப்பின் உயர்வு நோக்கிய விடாமுயற்சி என்பது ஸ்பைடர்மான் பறப்பது போன்ற சாகசமாகமட்டும் தான் தெரியும். சரி இங்கு தான் இப்படி இருக்கிறது என்று விட்டு அவர்கள் ஆபிரிக்காவைத் தாயகம் என்று நோக்கினும் பலனில்லை: அங்கும் வறுமை, போர், எயிட்ஸ், அந்நிய பிச்சை, கையேந்தல் என்றே காட்சிகள் விரிகின்றன.

றோல்மொடல்கள், பாரம்பரியம் இன்னும் ஏகப்பட்ட அனுகூலங்களைக் கூடவே கொண்டு பிறந்த நாங்கள், முயற்சிப்பின் அவர்களைப் புரிய முடியும். அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் இந்தக் கனவு ஆரம்பித்து வைக்கப்படுகிறது. எயிட்ஸ், வறுமை, அறிவின்மை, கையேந்தல் என்று விரிகின்ற ஆபிரிக்காவில்,  வக்கண்டாவைக் காட்டி, அதில் ஒரு கறுப்பு எதிரியினை—இந்த எதிரி சித்தரிப்பது அமெரிக்காவில் வெள்ளையினம் உருவாக்கிய கறுப்பினத்தின் மனநிலையினை—அவன் வாயால் 'என்னைக் கடலிற்குள் புதைத்து விடு, ஏனெனில் அடிமைப்பட்டுக் கிடப்பதை விட இறப்பது உயர்வென்று கருதிப் பாய்ந்த ஆயிரமாயிரம் என்னவர்கள் அங்கு உறங்குகிறார்கள்' என்ற வசனத்தைப் பேசச் செய்த இந்தப் படம் கறுப்பின மக்களிற்கு ஆற்றும் பங்கு அளப்பரியது.

மேற்படி விடயங்கள் மேலோட்டமாக, மனத்தின் ஆழுமையில் மட்டும் பார்க்கையில் எழுவன. இதை இன்னமும் ஆழ்ந்து நோக்கின் இன்னமும் எத்துணை விரிதல் கிடைக்கும் என்ற அவாவில் தான் இத்தலைப்பினைத் தொடங்கியிருந்தேன்


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Innumoruvan said:

கனடாவில் தமிழ் சந்திப்புக்களில் ஏகப்பட்ட பெருமைபேசுதல்களை அவதானிக்க முடியும். கணிசமான தொகையினர் பழமைவாதக்கட்சியின் கருத்துநிலையினை இப்போது விரும்புகின்றனர். மிகவும் சகஜமாகப் பலர் கூறும் ஒன்று, 'ஆங்கிலம் தெரியாது அகதியா வந்து நான் எப்பிடியிருக்கிறன், காப்பிலியள் இஞ்சபிறந்து போட்டுப் பாருங்கோ எப்பிடிச் சீரழியிதுகள் எண்டு. அடியில்லாக் குறை' என்று. மேற்படி கருத்துக் கூறுவோர் கவனிக்கத் தவறுவது, தமிழனாய்ப்பிறந்ததில் மட்டும் அவர்களிற்கு இனாமாகக் கிடைத்த எண்ணற்ற அனுகூலங்களை. தன்னால் மட்டும் சாதித்ததாகக் கூறுபவர்கள் தமக்கு கிடைத்த அனுகூலங்கள் பற்றிக் கிஞ்சித்தும் கருதுவத்தில்லை. இந்நிலையில் அவ்வனுகூலங்கள் இல்லாத நிலையினைக் கற்பனை பண்ணுவது இலகுவல்ல.

நன்றி....இன்னுமொருவன்!

இவ்வாறு தன்னைத் தானே...புகழ்ந்து கொள்பவர்களின்...பின்னணியை ஆராய்ந்து பார்த்தால்.....ஏதாவது ஒரு சுத்து மாத்து....நிச்சயம் இருக்கும்!

தங்களுக்கு உரிமையில்லாத....வகையில்...அரச கொடுப்பனவு பெறுதல்....எவனாவது ஒரு அப்பாவியை..கண்ணைப் பொத்தி அடித்து அவனது பணத்தை உரிமையாக்குதல்....அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக...சேர்க்கப் பட்ட பணத்தைக் கையகப் படுத்தல்....வரி கட்டாமல் வருமானங்களை மறைத்தல்...ஆள் கடத்தல் என்று ஏதாவது இருக்கும்!

வெகு சிலர்...தங்கள் முயற்சியால்...முன்னேறியவர்கள் இருக்கிறார்கள் ! அவர்கள்....நிறை குடம் தளம்பாது என்பது போல...அமைதியாக வாழ்ந்து விட்டுப் போவார்கள்!

எங்களைப் போல வெறும் குடங்களும் உண்டு தான்! நாங்களும் தளம்புவது குறைவு! ஏனெனில் தளம்புவதற்கு உள்ளே பெரிதாக ஒன்றுமில்லை!

அது சரி....எப்படி உங்களால் மட்டும்....இப்படியெல்லாம் சிந்திக்க முடிகின்றது?:11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னுமொருவனின் ஆழமான சிந்தனை கொண்ட இப் பதிவையும் அதற்கு பின்னூட்டமிட்டவர்களின் கருத்தாடல்களையும் முழுதாக வாசித்து முடித்தேன். எப்படி இன்னுமொருவனால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்ற வியப்பினால் நானும் இப்பதிவை எழுதுகின்றேன். எம் சமூகம் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவைகள்போல . விடாமுயற்சிதான் வெற்றிப்படி என்று திடமான எண்ணம். நன்றிகள் இன்னமொருவன். எங்களையும் சிந்திக்க வைப்பதற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது பாரம்பரியம் தந்த இந்தப் பின்னணியும் இதன் அனுகூலமும் நாம் எண்ணிப்பார்க்காதது. ஏனெனில் நாம் அவற்றை உரிமைகளாக அறியாது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் (we take all this for granted) அதனால் நாங்கள் நினைத்தாலும் எங்களால் அகதியாக முடியாது. அகதி என்றுணர்வதற்கு உள்ளுர முற்றுமுழுதான வங்குறோத்து நிலை அவசியம். அப்படி ஒரு நிலையினை நாங்கள் குந்தியிருந்து தவம் செய்தாலும் அடையமுடியாதபடி எங்களிற்குள் எங்களைப் பற்றிய விம்பத்தை எமது பாரம்பரியம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இது வெறும் சாகசக் கதைகள் மட்டுமல்ல. எமது வாழ்வே பிரமிப்பூட்டும் வண்ணம் தான் எமக்குள் பதிந்திருக்கிறது. அதனால், அது பறிக்கப்பட்ட ஒரு வெற்றிட மனிதனின் மனத்தைப் புரிவது நமக்கு இலகுவல்ல.

 

இதுதான் ஈழத்து அகதியானவர்களின் உண்மை நிலை .....இதை சொற்களால் புரியவைப்பது கடினம்.அருமையான அவதானிப்புகள் உங்களுடையது....!  tw_blush: 

Posted

அனைவரது கனிவான கருத்துக்களிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. 

1) வாழ்விற்கான 12 விதிகள் என்ற ஜோடன் பீற்றசனின் நூல் 2 இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகளை விற்று தற்போது வெற்றிநடை போடுகிறது. இந்த நூல் எதையும் புதிதாய்க் கூறவில்லை, தொன்று தொட்டு இன்று வரை உள்ள அனைத்துக் கதைகளினதும் கதாநாயகர்கள் 12 படிநிலைகளைக் கடப்பர் என்று Joseph Cambell கூறியதை ஜோடன் இன்றைய இளைஞர்களிற்கு வாழ்வில் கடைப்பிடிக்கக் கூறுகிறார். கதாநாயகர்கள் போல் சிந்தியுங்கள் என்கிறார்.  அவ்வாறு சிந்திக்கையில் உங்கள் வாழ்வின் வீச்சு மகத்தாய் அமையும் என்கிறார். 

எமது பாரம்பரியம் கதாநாயகர்களின் விளைநிலம். கதாநாயகர்கள் எங்களிற்குள் நிரம்பி வளிகிறார்கள்--கதாநாயகர் எனும் போது அது அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைத்து வெற்றியாளர்களையும், முயல்பவர்களையும் உள்ளடக்கியது. எவரும் புத்தகம் எழுதாமலேயே இதன் பயன்பாட்டை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.

2) மனதின் ஆழுமைக்குள் மட்டும் நின்று அலசிஆராய்வதன் வீச்சு மட்டுப்படுத்தப்பட்டது. இறுக்கம் தளர்த்தி, திறந்த மனதுடன், முற்றுமுழுதான கவனத்துடன் நாம் வாழும் கணத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில், சுதந்திரம் கைப்படும். படைப்பின் தருணங்கள் மூளையில் மட்டும் இருப்பதில்லை.  படைப்பு கதையோ, சங்கீதமோ, கணிதமோ, theoritical Physicsஓ என்பது ஊற்றிற்குப் பாகுபாடில்லை. சங்கீதம் தெரிந்த ரகுமானிடம் ஏற்கனவே இருக்கின்ற இசை ஊற்றெடுக்கும் போது அதை அவர் எழுதி வைப்பார். என்னிடம் வந்தால் எனக்கு சங்கீதம் தெரியாது, அதை எழுதத் தெரியாது--ரசிக்க மட்டும் முடியும். படைப்பு நம் அனைவரிற்கும் பொதுவான அடிநாதத்தின் வெளிப்பாடு--அதனால் தான் றகுமான் போன்ற ஜாம்பவான்கள் படைப்பை வைத்துத் தலைக்கனம் அடைவதில்லை.

3) விடாமுயற்சியின் பங்கை நான் கிஞ்சித்தும் மறுக்கவில்லை. விடாமுயற்சி இன்றியமையாதது. ஆனால் விடாமுயற்சி வெளிப்பாடு மட்டுமே. அதன் அடிப்படை ஆழமானது. ஒரு இனக்குழுமமாக, எத்தனையோ இன்னல்களை நாங்கள் சந்தித்திருந்தபோதும், எங்கள் புராதன பாரம் பரியத்தின் கூறுகளோடு இற்றைவரை வாழ்கிறோம். அதன் தளத்தில் நின்று, அதன் கூறுகளின் தார்ப்பரியத்தைத் தெரிந்தோ தெரியாதோ அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களவர் எங்கள் நிலத்தில் தொடர்ந்து வாழ்ந்த தொன்மை அந்தப் பாரம்பரியத்துள் ஊட்டச்சத்தாய் நிறைந்து கிடக்கிறது.

Posted
21 hours ago, Innumoruvan said:

நன்றி நிழலி உங்கள் கருத்திற்கு. உங்கள் படம்பார்க்கும் அனுபவத்தை கெடுத்துவி;ட்டேன் போலுள்ளது, வருத்தங்கள்.

 

 

இல்லை இன்னுமொருவன், இதில் வருத்தப்பட எதுவுமில்லை. நீங்கள் Black Panther பற்றி எழுதியிருக்கா விட்டால், படம் பார்த்தே இருக்க மாட்டேன். இப்படியான படங்களுக்கு மனைவியை பிள்ளைகளுடன் அனுப்பி விட்டு வீட்டில் இருந்து இருப்பேன். எல்லாவற்றையும் விட இதை கருத்துக்களத்தில் வைத்து கருத்தாடும் இந்த அனுபவம் கிடைத்தே இருக்காது.

இன்னும் தொடர்ந்து உரையாட வேண்டும், நேரம் கிடைக்கும் போது மிச்சம் எழுதுகின்றேன்.

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.