Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறமில்லா மனிதர்கள்

Featured Replies



பனி படர்ந்த ஊதல் காற்று ஒரு காது வழியே ஊசியாய்த் துளைத்து மற்றைய காது வழியே வெளியேறி அவனை ஒரு வழிப் பண்ணிக்கொண்டிருந்தது. பனித்துகள்கள் மெல்லிய மலர் இதழ்களாய் காற்றோடு இழைந்து பூமியெங்கும் வெண்மையான நிலவிரிப்பை படர விட்டிருந்தது. கிராமப்புறமாதலால் பனிக்காலத்தில் கூட பசுமை மாறாத பச்சை மரங்களும் இலை உதிர்ந்திருந்த சாலையோரத்து மரங்களும் பனி படர்ந்து வெள்ளை வெளேரென நத்தார்ப் பண்டிகை மடலில் காட்சியளிப்பது போன்ற தோற்றத்தை அவனுக்கு நினைவூட்டியது. இன்று போலத்தான் அன்றொரு நாள் கொட்டிய பனியும் நடந்த சம்பவமும் அவனுக்கு ஒரே சம்பவம் மீண்டும் அதே போல நடப்பது போன்றதொரு மாயையைத் தோற்றுவிக்கிறது. நினைவுகள் அசை போட்டன.

கெலி அவனோடு வேலை பார்க்கும் வயோதிபத்தை நெருங்கும் பெண் தோழியொருவர். அவளின் வழமையான நக்கல் நளினங்கள் தனித்தன்மை வாய்ந்ததால் அவளுடனான சம்பாசனைகள் அவனுக்கு பிடிக்கும். பனி கொட்டியதைப்பற்றி சலிப்பும் நக்கலுமாகக் கலந்து அவள் கூறியது அவனுக்கு ஞாபகம் வந்ததில் அவனையறியாமல் சிரிப்பும் வந்தது. அப்பெண்ணுக்கு குளிர்காலம் என்றாலே ஆகாது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சலிப்புக் கலந்த புதுக்கதையோடு தான் வேலைக்கு வருவாள். அன்றும் அப்படித்தான் ஒரு மாலை வேளையில் வேலை முடிவதற்கு இன்னும் சில மணிகளே இருந்த போது, வானிலை அறிக்கையையும் பொய்யாக்கியபடி, பனிக்கட்டிகள் சின்னஞ்சிறு கூழாங்கற்களாகக் கொட்டத்தொடங்கியது. அவனுக்கு சாளரத்தினூடே பனிபொழிவதைப் பார்க்கும் வசதி இருந்ததில், பார்க்கும் போதே மனமெல்லாம் சிலீரென்ற குளிர் இதமாகப் பரவத்தொடங்கியது.


“ என்ன ஒரு அழகு!” என்றவனை பின்னே வந்து நின்றகெலி பெயருக்கேற்றாப் போல் ஒரு விதமான , அதீத ஆர்வம் கலந்த பதட்டத்தோடு அவனையும் தள்ளிக்கொண்டு சாளரத்தின் வழியே வெளியில் பார்த்தவள் புறுபுறுக்கத்தொடங்கினாள்.

“ இதையெல்லாம் நத்தார் பண்டிகை வாழ்த்து மடல்களில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த பனி மழைஅன்றாட வாழ்க்கையை நாசப்படுத்தி விடும்!”
தாம் நினைப்பதை அப்படியப்படியே முகத்துக்கு நேரே சொல்லிவிடும் பழக்கம் இக்கலாச்சாரத்தினது பாதிப்பு போலும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.

வறுத்தெடுக்கும் யாழ்ப்பாணத்து வெயிலில் காய்ந்து போய், கமம் செய்த காலத்தில் மழைக்காக ஏங்கிய வானம் பார்த்த பூமி அவன் மனதில் ஊசலாடியது. வெயிலில் காய்ந்ததால் தான் எனக்கு குளிர்காலம் பொற்காலமாய் இருக்கிறதோ என எண்ணிக்கொண்டான். இப்பனி இன்னும் அதிகமாகக் கொட்டக் கொட்ட கெலிக்கு பதட்டமும் அதிகமானது.


“ இன்றைக்கு வீட்டுக்கு போனமாதிரித்தான், காரும் எடுக்கேலாமல்ப் போகப்போகிறது !” தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். இவனையும் தன்னோடு கூட்டுச்சேர்த்துக் கொண்டு வேளைக்கே வீடு போய்ச்சேர்வதே அவள் நோக்கமாயிருந்தது. அவளது வீடும் அவனது வீடும் எதிர் எதிர்த்திசையில் இருந்தாலும் ஒரு மரியாதை அல்லது மனிதாபிமானம் கலந்த உணர்வில் அவனையும்  தன்னுடன் வருமாறு வற்புறுத்தினாள். இவளோடு போனால் அநியாயத்துக்கு வழியெங்கும் புறுபுறுத்துக் கொண்டே தான் வருவாள் என நினைத்துக்கொண்டவன் தான் இன்னும் பத்து நிமிட அவசர மின் அஞ்சல் வேலைகளை முடித்துக் கொண்டு புறப்படுவதாய் சாக்குப்போக்கு சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

அப்படி அவளுடன் போகாமல் விட்டது எவ்வளவு தவறென்று புரிவதற்கு அவனுக்கு அதிக நேரமாகவில்லை. உறைபனியை விட கடுங்குளிருடன் கலந்து வீசிய பனிக்காற்று ஒரு செவி வழியே புகுந்து மறுகாது வழியே வெளியேறியது. எதிர்பாரா விதமாய் மாறிய காலநிலையை சமாளிக்கக்கூடிய உடைகளும் இன்றி, மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவையுடன் எத்தனை மணிக்கு வீடு போய்ச்சேர்வதென்ற கவலை அவனை பலமாக ஆட்டத்தொடங்கியது.

பஸ் நிலையம் யாருமன்றி அனாதரவாய் பனிமூட்டத்தில் மூழ்கிக்கிடந்தது. வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகளனைத்தும் ஸ்தம்பித்துப் போயிருந்ததை, வெறிச்சோடிப்போயிருந்த வீதி பறை சாற்றிக்கொண்டிருந்தது. நடந்து போவதானால் ஆறேழு மைல்களாவது நடக்க வேண்டியிருக்கும். ஒரு நாள்ப் பொழுது வேலையில் கழிந்ததில் இயற்கையாக ஏற்பட்ட அசதியும் காலநிலை தந்த குளிரின் தாக்கமும் சேர்ந்து நடப்பதென்பது நடவாத காரியமாய்த் தோன்றியது அவனுக்கு.

அப்போது தான் திடீரெனத் தோன்றிய அவ்வாலிபன் அவன் கவனத்தை ஈர்த்தான். அவனுக்குக் கண்பார்வை இல்லாததை அவன் வைத்திருந்த வெண் பிரம்பு பறை சாற்றினாலும், வாலிபத்துக்குரிய கம்பீரம் குறையாத உடல்வாகும், பொன்னிற முடியும், ஆங்கிலேயர்களுக்கே உரிய சிவந்த தோலும் அவனை ஒரு அழகனாகவே காட்டியது.

இவன் பஸ் தரிப்பில் நிற்பதை உணர்வால் அறிந்து, “ மன்னிக்க வேண்டும், வழமையான ஆறு மணி 127 பஸ் போய் விட்டதா? “ கேட்டு விட்டு பதிலுக்காக இவன் பக்கம் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டான்.  இவனும் அந்த பஸ் சீரற்ற காலனிலை காரணமாய் தாங்கள் நின்ற பஸ் தரிப்பைத் தாண்டிப்போயிருக்கச் சந்தர்ப்பம் இல்லை என்பதைக் கூற அவன் முகத்தில் புன்முறுவல்.

“ என் பெயர் அலன், உங்கள் பெயர்??” எனக் கேள்வி தொக்கியது.

சந்திரசேகரன் என்ற பெயரை இவனுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என ஒரு நிமிடம் தடுமாறி, சந்திரனும் போய் சேகரனும் போய் தான் ‘ஸான்’ ஆனதைப் பகிர்ந்து கொண்டான். லண்டன் மாநகரம் வந்து ஒரு சில வருடங்களே ஆகியிருந்ததில், இவன் மொழி வாடையில் தெரிந்த வித்தியாசமும் அவன் பெயரில் இருந்த அந்நியத்தன்மையும் அவ்வாலிபனுக்கு இவன் இவ்வூரோ ஆங்கிலமோ தாயகமோ தாய் மொழியோ அல்ல என்பதை நன்றாகவே புரிய வைத்திருக்க வேண்டும். பேசிய ஒரு சில நிமிடங்களிலேயே போக வேண்டிய பஸ் அவர்கள் நின்ற தரிப்பிடத்துக்கு வர அவன் அவ்வாலிபனுக்கும் அவ்விபரத்தை சொல்லி, அவனை முதலில் ஏறச்சொல்லி தான் பின்னே ஏறியவன், அலன் பயணச்சீட்டை எடுத்த பின் தனது பயணச்சீட்டை எடுப்பதற்காக கையை தன் சட்டைப்பைக்குள் விட்டவன், அதிர்ந்து போனான். பணப்பையைக் காணவில்லை. தலை விறைக்க நின்றவனுக்கு அப்போது தான் தன்னுடைய பணப்பையை அலுவலகத்தில் மேசையில் எடுத்து வைத்த நினைவு வர, இப்போது என்ன செய்வது என்ற யோசனை பலமாகத் தாக்கியது. இறங்கி நடப்பதானால் குளிரில் விறைத்தபடி பல மைல்கள் நடக்க வேண்டியிருக்கும். சாரதியும் பொறுமை இழந்தவராய் அவன் முகத்தைப் பார்க்க அவன் வெட்கத்திலும் அவமானத்திலும் கூனிக்குறுகிப் போனான். பொட்டும் பிறையுமாக பஸ்ஸிலிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் அவள் கணவனைப் போல பக்கத்திலிருந்தவரை இறுகப் பற்றிக்கொண்டாள். ஏதோ ஒரு கொலைக் குற்றவாளியைப் பார்த்த பயம் அவள் முகத்தில் ஒரு வினாடி தோன்றி மறைய, இவனுக்கு அவமானத்தில் உடல் இன்னும் கூனிக்குறுகியது.

அவர்கள் இருவரும் தம் பார்வையை வெளியே பார்ப்பதைப் போல பாவனை செய்த அதே நொடியில் அவனுக்கு முன்னே பஸ்சில் ஏறிய அலன், அச்சம்பவத்தை உணர்ந்து, சாரதியை நோக்கித் திரும்பி, “அவருக்கு தேவையானதை தயவு செய்து இதிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றவாறே தன் பணப்பையை சாரதியின் பக்கம் நீட்டினான்.

அவன் இருந்த சூழ்நிலையில் அவனால் அந்த உதவியை மறுக்கமுடியாமல் தத்தளிக்க, அலன் மறுபடியும் இவன் காதில் மிக மென்மையாக,

” உனக்கு என் உதவி சங்கடமாகப்பட்டால், நீயும் உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு இதே போல செய்து, என் பங்கைச் செலுத்தி விடு!” என்றவாறே அழகான புன்னகையுடன் நகர்ந்தான்.

நெகிழ்ந்து போன அந்தக்கணங்கள் நேற்று நடந்தது போல் இருந்தாலும் ஒவ்வொரு பனிக்காலத்திலும், பஸ் தரிப்பிற்கு வரும்போதெல்லாம் இந்நினைவு அவன் கேட்காமலே வந்து போகும். கண் தெரியாத அலனும், நிறங்களும் இனங்களும் பார்த்தறியாத அவன் மனத்தில் தோன்றும் மனித நேயமும் இவனை இன்றைக்கும் நெகிழ வைத்துக்கொண்டே தான் இருக்கின்றன.

அவன் வசிக்கும் வீட்டிற்கு பஸ் தரிப்பிலிருந்து பத்து நிமிடங்களாவது நடக்க வேண்டியிருக்கும். உறைபனியில் வழுக்கி விழாமல் மெதுமெதுவாக அடியெடுத்து வைத்தவனுக்கு பசி வயிற்றைப் பிறாண்டத் தொடங்கியது. வீட்டில் எப்படியாவது நல்லதொரு உணவு காத்திருக்கும் என்ற உணர்வும் இதுக்கெல்லாம் ஏதோ தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற நன்றியும் அவன் மனதில் தோன்றி மறைந்தது. சிரித்த முகம் மாறாமல் உணவு பரிமாறும் அவன் சகோதரி தற்செயலாகவே அவனுக்குப் பரிச்சயமானவள். தன் உடன் பிறந்த சகோதரியாகவே அவளை மதிப்பவனுக்கு அவன் இரத்தம் கூட அவள் உடம்பில் ஓடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டான்.

ஒரு மாலை வேளையில் வேலை விட்டுத்திரும்பிய போது இருண்ட வீதி விபத்தொன்றில் அடிபட்டு இருந்தவளை யாரெனத்தெரியாமலே அவசர மருத்துவ சேவைக்கு அறிவித்து, அவர்களுடனே பயனம் செய்து அவளுக்கு உடனடியாகத் தேவைப்பட்ட குருதி வகை அதிஷ்டவசமாக அவனுடையதாகவும் இருக்க மறுப்பேதுமன்றி அவளுக்குதவிய தருணத்தில் இருந்து இற்றை வரை அவர்கள் சகோதரங்களாகிப் போயினர்.

இதோ வீடு கிட்டியாயிற்று, இரண்டே அடிதான் மிகுதியாய் இருக்கவும், வீட்டின் வெளிக்கதவைத் திறந்தபடி தன்னோடு அதே வீட்டில் வசிக்கும் நண்பன் ஒருவன் வீட்டிற்கு வெளியே வரவும் சரியாகவிருந்தது. சத்தமின்றி உள்ளே வந்தவனுக்கு தன் பெயர் எதேச்சையாகக் காதில் விழவும் என்னவாக இருக்கும் என இயல்பாக வந்த ஆர்வத்தில் காதைக் கூராக்கினான். மற்றவர்களின் கதைகளை ஒட்டுக்கேட்கும் பழக்கம் அவனிடமில்லையாயினும், தன்னைப்பற்றிக் கதைக்க அவன் சகோதரிக்கு எதுவும் இருக்கப்போவதில்லை, அவள் அப்படிக் கதைக்கக் கூடியவளுமல்ல என்ற இயல்பான எண்ணம் அவனுக்கு இருந்தது.

யாரோ வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்க வேண்டும். அக்கா தான் அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கும் இவன் வீடு வந்து சேர்ந்து விட்டது தெரிந்திருக்கவில்லை என்பது அவர்கள் கதையில் தன் பெயர் அடிபடுவதிலிருந்து தெரிந்தது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்ப வழியின்றி தவித்தவனுக்கு, தான் வீட்டுக்கு வந்ததை அறிவிப்பதற்காக அறைக்கு வெளியே போய் அவர்களுக்கு அறிவிப்பதா அல்லது அவர்கள் கதைப்பதைப் பொருட்படுத்தாமல் இருப்பதா என்பதில் சிக்கல் ஏற்பட்டது. மிகவும் சிரமத்தின் மத்தியில் சங்கடத்துடன் தன் அறைக்கு வெளியே வந்தவனுக்கு கால்கள் இயங்க மறுத்ததுக்கு அவர்களின் சம்பாசனையில் தன் பெயர் மட்டுமல்ல தன் குலம் கோத்திரம் எல்லாமும் அடிபடுவது அவனை ஸ்தம்பிக்க வைத்தது.

அதுவும் அவன் சகோதரியாய், வலம் வந்தவள், “ என்னவோ மாலா நீ நினைக்குமாப் போல இல்லை. என்னதான் நல்ல பெடியன் எண்டாலும் கலியாணம் எண்டு வரேக்க நாங்கள் கவனமாய்த் தான் இருக்க வேணும். நாளைக்கு எனக்கு இன்னொரு தங்கச்சியும் எல்லோ இருக்கிறாள். நான் மூத்தவளுக்கு ஸானைக் கட்டிக் கொடுத்தால் பிறகு நாங்கள் ஊருக்குள்ள இன்னொரு மாப்பிள்ளை எடுக்கேலுமே?”

அவன் சகோதரியாக வரிந்தெடுத்துக் கொண்டவள், தன் உதிரம் தந்து உயிர் காத்த இன்னொரு உயிர், அவள் தானா இப்படி பேசுவது என அதிர்ந்து போனவனுக்கு இன்னும் தொடர்ந்த அசிங்கங்கள் மனிதர்கள் எவ்வாறெல்லாம் தம்மைப் பிரித்துக் கொள்கிறார்கள், இன வாரியாக, மத வாரியாக, கலாச்சார வாரியாக, ஊர் வாரியாக என்பது ஒரு சாட்டை அடியுடன் பலவந்தமாக மண்டைக்குள் புகுத்தப்பட்டது. அக்குளிரிலும் வியர்த்துக் கொட்ட, மெதுவாக சத்தமின்றி வெளிக்கதவைத் திறந்து, பனிக்காற்றை ஆழ உள்ளெடுத்து வெளியேற்றியவனுக்கு பழையபடி பஸ் தரிப்பும் பார்வை இழந்த அலனும், அவனுடைய மனித நேயமும் மீண்டும் ஒருமுறை வந்து போனது.

அவனது அறையும், அவன் விட்டுப் போன பொருட்களையும் பார்த்து அவன் ‘அக்கா’ அவனைக் காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைத்துக் கொண்டு,
“ நாகரீகமற்றதுகள், நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்க வைச்சது என்ர பிழை தான்!” எனக்கூறிக்கொண்டாள்.

 





 
 
 
no_photo.png
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Edited by தோழி

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை தோழி. அந்நியர்களை விட கூட இருப்பவர்கள் தான் காயப்படுத்துவார்கள் என எங்கோ வாசித்தது   நினைவுக்கு வருகிறது. 
சுய ஆக்கங்களை யாழில்  எழுதுவது அருகி வரும் நிலையில் நீங்கள் மீண்டும் தொடக்கி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

 

தங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி தோழரே! யாழ் இணையத்தினூடாக உங்களையும், ஏனைய தோழர் தோழிகளையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

மீண்டும் சந்திப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

     கெலி என்னும் போது தான் புறூஸ்லீயுடன் நடித்த ஜிம்கெலி ஞாபகமாக இருக்கிறது.
   என்னது கதையென்று பார்த்தால் புத்தகம் மாதிரியல்லவா இருக்கிறது.

  • தொடங்கியவர்

😃வித்தியாசமான விமர்சனம் தந்திருக்கிறீர்கள், சிறப்பு! நன்றி தோழரே...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியற்ற வர்  " அக்கா என்ப்படுபவர் தானே "  

 

அவன் சகோதரியாக வரிந்தெடுத்துக் கொண்டவள், தன் உதிரம் தந்து உயிர் காத்த இன்னொரு உயிர், அவள் தானா இப்படி பேசுவது என அதிர்ந்து போனவனுக்கு இன்னும் தொடர்ந்த அசிங்கங்கள் மனிதர்கள் எவ்வாறெல்லாம் தம்மைப் பிரித்துக் கொள்கிறார்கள்

நீங்கள் ஏன் வீடடை விட்டு போக வேண்டும்

. “ நாகரீகமற்றதுகள், நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்க வைச்சது என்ர பிழை தான்!” எனக்கூறிக்கொண்டாள்."  இன்னும் தொடருமா ?

ஆரம்பம் நன்றாக இருக்கிறது முடிவைக் கொஞ்சம்  இன்னும் தெளிவாக  அமைக்கலாம் .  பாராட்டுக்கள் மேலும் உங்கள் பகிர்வுகளைத் தாருங்கள் .

 

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி, இறுதிப்பகுதியை வாசகர்கள் தமக்கேற்றார்ப் போல் யோசிக்கவும் மாற்றுவதற்கும் இடம் கொடுத்து பழகி விட்டது. உங்கள் காத்திரமான கருத்துக்கு அன்பும் நன்றியும். 

தொடர்ந்து யாழ் இணையத்தில் எழுத முயற்சிக்கிறேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகிறீர்கள் தோழி.தொடர்ந்து யாழில் பயணியுங்கள்.

  • தொடங்கியவர்

அன்பும் நன்றியும்! தமிழால் இணைவோம்!  

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு உங்கள் கதை, அழகாக எழுதியுள்ளீர்கள், எங்குபோனாலும் மாற மாட்டார்கள் 

தொடர்ந்து எழுதுங்கள் 

  • தொடங்கியவர்

அன்பும் நன்றியும்! 

தமிழர் வாழ்வியலில் பலரும் மறைக்க விரும்பும் உண்மையை கூறிய சிறுகதை. நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கருவைக்கொண்டு கதையை எழுதியிருக்கின்ரீர்கள்......தொடர்ந்து எழுதுங்கள்.....!   😁

  • தொடங்கியவர்

 விமர்சனத்தை பகிர்ந்தமைக்கு நன்றியும் அன்பும்! 

3 hours ago, tulpen said:

தமிழர் வாழ்வியலில் பலரும் மறைக்க விரும்பும் உண்மையை கூறிய சிறுகதை. நன்றி. 

அன்பும் நன்றியும்! 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது சிறுகதை மிகவும் பிடித்திருக்கிறது.

சந்திரசேகரன், அன்று கெலியுடன் காரில் போகாமல்விட்டது ஒரு வழியில் நன்மைக்கே. எங்களது வாழ்க்கையில் சில நேரங்களில் சில மனிதர்கள் வருவது, ஒன்று அவர்களால் எங்கள் வாழ்க்கை மாறும் அல்லது எங்களால் அவர்கள் வாழ்க்கை மாறும் என படித்த நினைவு. 

நீங்கள் நிறமில்லா மனிதர்கள் என எழுதியது போல, நான் எனது வீட்டில் வெவ்வேறு மனித முகங்களின் paintings and woodcraftம்   சேர்த்து வைத்திருக்கிறேன், ஏனெனில் ஒவ்வொரு சித்திரத்தின் முகமும் ஒவ்வொருவிதம் அதேபோலதான் நிஜ மனிதர்களும் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தும்.

நிறமில்லா மனிதர்களும், வீட்டைவிட்டு வெளியே போகும்போது, உண்மை உருவைமறைத்து முகமூடி அணிந்த மனிதர்களுமே இப்பொழுது அதிகம். 

கதை சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் தோழி

  • தொடங்கியவர்

நன்றி! 🙏

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
2 hours ago, Kavallur Kanmani said:

மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். பாராட்டுக்கள்

விமர்சனத்துக்கு நன்றியும் அன்பும்! உங்கள் பாராட்டுக்களே என்னை எழுதத் தூண்டுகிறது தோழி! 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 20:15, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களது சிறுகதை மிகவும் பிடித்திருக்கிறது.

சந்திரசேகரன், அன்று கெலியுடன் காரில் போகாமல்விட்டது ஒரு வழியில் நன்மைக்கே. எங்களது வாழ்க்கையில் சில நேரங்களில் சில மனிதர்கள் வருவது, ஒன்று அவர்களால் எங்கள் வாழ்க்கை மாறும் அல்லது எங்களால் அவர்கள் வாழ்க்கை மாறும் என படித்த நினைவு. 

நீங்கள் நிறமில்லா மனிதர்கள் என எழுதியது போல, நான் எனது வீட்டில் வெவ்வேறு மனித முகங்களின் paintings and woodcraftம்   சேர்த்து வைத்திருக்கிறேன், ஏனெனில் ஒவ்வொரு சித்திரத்தின் முகமும் ஒவ்வொருவிதம் அதேபோலதான் நிஜ மனிதர்களும் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தும்.

நிறமில்லா மனிதர்களும், வீட்டைவிட்டு வெளியே போகும்போது, உண்மை உருவைமறைத்து முகமூடி அணிந்த மனிதர்களுமே இப்பொழுது அதிகம். 

நீங்கள் நல்ல கலை ரசனைநுள்ளவர் போல், அதுதான் சித்திரத்தை பற்றி நல்ல அறித்துவைத்துள்ளீர்கள். உங்கள் வீட்டில் யாராவது சித்திரம் படிக்கின்றார்களா? 

என் வாழ்கையில்  பல நல்ல உள்ளங்களை சந்தித்தால் என் வாழ்கை உயர்ந்து கொண்டே போனது. இதுவரை சறுக்கவில்லை, கடவுள் அருள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இக்கதையைப் படித்தேன். நம்மவர்கள் உதவி தேவைப்படும்போது எல்லாக் கெளரவங்களையும் மறந்துவிடுவார்கள். கொஞ்சம் “மிதந்தவுடன்” எல்லாக் குணங்களும் வந்துசேர்ந்துவிடும். 

 

On 7/7/2020 at 22:27, தோழி said:

வழமையான ஆறு மணி 127 பஸ்

127 பச்சைக் கலரில் ஓடிய பஸ்ஸில் 90களில் நானும் பயணித்திருக்கின்றேன். 😀 ஒரு கடும் பனிப்பொழிவுக் காலத்தில் பஸ்ஸுக்காக கால் விறைக்கக் காத்தும் இருந்திருக்கின்றேன்😕

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2020 at 20:38, உடையார் said:

நீங்கள் நல்ல கலை ரசனைநுள்ளவர் போல், அதுதான் சித்திரத்தை பற்றி நல்ல அறித்துவைத்துள்ளீர்கள்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சித்திரம் வரைதலை ஒரு பாடமாக எடுத்தேன். மறைந்த சிற்ப கலாநிதி, ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களின் மாணவி சிவகெளரி அவர்கள்தான் எங்களது கல்லூரி ஆசிரியை. அவரின் ஊக்கம் எனக்கு ஒரு உந்துதலாக இருந்தது. அவர் மூலம் கொஞ்ச நாட்கள் மறைந்த சிவப்பிரகாசம் ஆசிரியரிடமும் ஓவியம் வரைதலை பயிலமுடிந்தது. 

சிறுவயதிலும் மனித முகங்களை வரைவது ஒரு பழக்கம்.. இப்பொழுது வரைவது இல்லை ஆனால் ஓவியங்கள், வர்ணங்கள் இயற்கையை ரசிப்பது தொடர்கிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சித்திரம் வரைதலை ஒரு பாடமாக எடுத்தேன். மறைந்த சிற்ப கலாநிதி, ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களின் மாணவி சிவகெளரி அவர்கள்தான் எங்களது கல்லூரி ஆசிரியை. அவரின் ஊக்கம் எனக்கு ஒரு உந்துதலாக இருந்தது. அவர் மூலம் கொஞ்ச நாட்கள் மறைந்த சிவப்பிரகாசம் ஆசிரியரிடமும் ஓவியம் வரைதலை பயிலமுடிந்தது. 

சிறுவயதிலும் மனித முகங்களை வரைவது ஒரு பழக்கம்.. இப்பொழுது வரைவது இல்லை ஆனால் ஓவியங்கள், வர்ணங்கள் இயற்கையை ரசிப்பது தொடர்கிறது. 

 

ஓ... அப்படியா அதுதான் உங்களுக்கு நல்ல கலை ரசனை, இயற்கையையும் ரசிகின்றீர்கள் 

எனக்கு சித்திரம் சதவீதம் கூட வராது, சங்கீதம்தான் விரும்பிஎடுத்தேன் என்ர கஷ்ட காலம் ஒரு நாள் கொப்பி கொண்டு போகவில்லை, ரீச்சர் கொப்பி கொண்டு வராத ஆட்களை கையை உயர்ந்த சொன்னா, அடிப்பா என்றுவிட்டு உயர்த்த வில்லை.

சரி பாட்டு பாட தொடங்கியவுடன் ஒரு கொப்பியை விரித்து வைத்துவிட்டு பக்கத்தில் இருந்தவனின் கொப்பியை கடைக்கண்ணால் பார்த்து பாட, மனிசிக்கு நல்ல கோபம்😡;  மனிசி தடி முறியும் வரை அடியோ அடி அந்த மாதிரி🤣😂.

ரோஷத்தில சித்திரத்துக்கு போனா 40 புள்ளிக்கு மேல் போகமுடியவில்லை😪, சங்கீதத்தில் 80க்கு மேல் எடுத்து வகுப்பில் முதலாவதாக வந்தனான், அந்த அடியால் என் வாழ்கை மாறிவிட்டது.

சித்திர வாத்தியார் நல்லவர், அதனால் தப்பித்துவிட்டேன்.

கடவுளா பார்த்து என் ஆசையை மனைவி மக்கள் மூலம் நிறைவேற்றிவிட்டார். மனைவி இராமநாதன் கலைக்கல்லுரியில் சங்கீத துணை பேராசிரியராக இருந்தவர், இப்ப வீட்டில் ஒரே சங்கீத மழைதான்🙏

  • தொடங்கியவர்
12 hours ago, கிருபன் said:

இன்றுதான் இக்கதையைப் படித்தேன். நம்மவர்கள் உதவி தேவைப்படும்போது எல்லாக் கெளரவங்களையும் மறந்துவிடுவார்கள். கொஞ்சம் “மிதந்தவுடன்” எல்லாக் குணங்களும் வந்துசேர்ந்துவிடும். 

 

127 பச்சைக் கலரில் ஓடிய பஸ்ஸில் 90களில் நானும் பயணித்திருக்கின்றேன். 😀 ஒரு கடும் பனிப்பொழிவுக் காலத்தில் பஸ்ஸுக்காக கால் விறைக்கக் காத்தும் இருந்திருக்கின்றேன்😕

நன்றி கிருபன்! காத்திரமான விமர்சனம். 

பஸ்ஸுக்காகக் காத்திருக்கையில் என்னைக் காணாதது உங்கள் அதிஸ்டம் ! 😆

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

இன்றுதான் இக்கதையைப் படித்தேன். நம்மவர்கள் உதவி தேவைப்படும்போது எல்லாக் கெளரவங்களையும் மறந்துவிடுவார்கள். கொஞ்சம் “மிதந்தவுடன்” எல்லாக் குணங்களும் வந்துசேர்ந்துவிடும். 

இது 100% உண்மை, எம்வர்களில் இருக்கும் குணம், எப்பதான் மாறுமோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.