Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலை பாகம் 1 Review: அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை பாகம் 1 Review: அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு

968824.jpg  
 

பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம வள சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை நடத்தும் போராட்டமும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும்தான் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தின் ஒன்லைன். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மூலக்கதையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம். இதில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அருமபுரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் கனிம வள சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடுகிறது அரசு. அரசு உத்தேசிக்கும் இந்தத் திட்டத்திற்கு அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறது. தமிழர் மக்கள் படையை கைது செய்ய முயற்சிக்கும் அரசு போலீஸாரைக் கொண்டும், மலை கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி மக்கள் படை இயக்கத்தை கூண்டோடு அழிக்க முயற்சிக்கிறது. இதில் இரண்டு தரப்பிலும், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. இந்தப் போராட்டத்தில் வென்றனரா? மக்கள் படையை காவல் துறை கைது செய்கிறதா? இல்லையா? - இதுதான் படத்தின் திரைக்கதை.

18 பக்கங்களைக் கொண்ட ‘துணைவன்’ சிறுகதையில், கதையின் மையப் புள்ளியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் தனது கற்பனைக் கலந்த கதையைக் கொண்டு வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே நாவலை படமாக எடுத்து வெற்றி கண்டவர், இந்த முறை இந்தச் சிறுகதையின் மூலம், உலகம் முழுவதும் மூன்றாம் உலக நாடுகள், வளரும் நாடுகளில் நிகழும் கனிம வள கொள்ளைக்கு எதிராக பெருங்கதையாடலை நடத்தியிருக்கிறார். பன்னாட்டு நிறுவனங்களின் பசிக்கும், தாகத்துக்கும் காவு கொடுக்கப்படும் பாமர மக்களின் சதைக்கும், ரத்தத்துக்கும் மருந்து தடவியிருக்கிறது ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம்.

பொதுவாகவே உலகம் முழுக்கவே வளர்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் மனித வேட்டையின் வாசம் இப்படத்தின் காட்சிகள் தோறும் வீச்சமெடுக்கிறது. மலைகளில் மலரும் காட்டுமல்லியில் கலந்திருக்கும் ரத்தக் கவிச்சியின் வாடையை படம் பார்த்துவிட்டு திரும்பும் ஒவ்வொருவரின் சுவாசித்திலும் வெற்றிமாறனின் காட்சி அமைப்புகள் கலக்கச் செய்திருக்கிறது. அதிகார அத்துமீறலுக்கு எதிரான வசனங்கள், காட்டுத்தீ போல படத்தில் அவ்வப்போது பற்றி எரிய செய்திருக்கிறது. ஒரு வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வர எத்தனிக்கும் அரசுக்கு இடையூறாக எழும் போராட்டங்களை அதிகார பலம் கொண்டு ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசுகள் எவ்வாறு கையாளும் என்பதை எந்தவித சமரசமுமின்றி இந்தப் படம் உரக்கப் பேசியிருக்கிறது.

வெற்றிமாறன் திரைப்படங்களின் கதாப்பாத்திரத் தேர்வு எப்போதுமே திரையில் மாயங்களை நிகழ்த்துபவை. அந்த வகையில் இந்தத் திரைப்படத்திலும் அந்த மாயஜாலம் நிகழ்ந்திருக்கிறது. குமரேசன் கதாப்பாத்திரத்தில் வரும் சூரி, அந்தக் கதாப்பாத்திரத்தில் பொருந்திப் போயிருக்கிறார். குறிப்பாக, படத்தின் முதல் பாதி முழுக்கவே, மலை கிராம காவல் பணிக்குச் செல்லும் காவலர்கள், அதிகாரிகளையும் வாழ்வியல் சிக்கல் நிறைந்த அந்த சூழலையும் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை விளக்கும் காட்சிகளில் எல்லாம் சூரி சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால், படத்தில் வரும் சில ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் செய்யும் அசாத்தியங்கள் ஏற்கும்படியாக இல்லை. அதை இயக்குநரே தவிர்த்திருக்கலாம்.

வெற்றிமாறன் படங்களில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எப்போதும் ஜீவ ஸ்ருதியாக இருப்பார். இந்த முறை அந்தப் பணியை அவரது தங்கைக்கு கொடுத்திருக்கிறார். பவானிஸ்ரீ மலை கிராமத்துப் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். வெற்றிமாறனின் பட நாயகிகளுக்கே உரிய வீரத்தை பிரதிபலிக்கும் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், பாசம், காதல், சோகம், துணிவை வெளிப்படுத்தும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, காவல் துறை அதிகாரிகளாக வரும் சேத்தன், கவுதம் மேனன், இயக்குநர் தமிழ் என அனைவரிடத்திலும் போலீஸாரின் மேனரிஸங்கள் மெஸ்மரைசிங் செய்கிறது.

பெருமாள் பாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி வெகு எளிதாக தனது பாத்திரத்தை கடத்தியிருக்கிறார். படத்தில் அவர் வரும் இடங்கள் சிறப்பானதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் முடிந்து அடுத்த பாகத்திற்கான லீட் வரும் இடங்களில் அவர் குறித்த காட்சிகள் முன்னோட்டமாக திரையில் காட்டப்படும்போது ரசிகர்கள் சிலிர்த்தெழுகிறார்கள். வெற்றிமாறன் வசனத்தில் கவுதம் மேனன் அரசு அதிகாரியாக கேட்கும் கேள்விகளும், அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி பதிலளித்து பேசும் வசனங்களில் அரசியல் நையாண்டி தூக்கலாகவே இருக்கிறது.

சுற்றிலும் மலைகள், மரங்கள், செடிகள், அரிக்கேன் விளக்குகள், காட்டாறு, பாறைகள் உருளும் மலைப் பாதைகள், லுங்கியும், துண்டும் அணிந்த யதார்த்த மனிதர்கள், குறுகலான தெருக்கள், ஓட்டு வீடுகள், டீக்கடைகள், உருவங்களற்ற நம்பிக்கையின் அடிப்படையிலான தெய்வங்கள், திருவிழாக்கள், போலீஸ் பட்டாலியன், பாரேட், செக்போஸ்ட், பத்திரிகையாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் ஜீப் என படம் முழுக்க கதைக்களம் முழுவதையும் வேல்ராஜின் ஒளிப்பதிவு ஒன்றுவிடாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது. எல்லா ஃப்ரேம்களிலும் பின்னால் தென்படும் மலைகள் போலவே, படத்தின் ஒளிப்பதிவும் காட்சி அமைப்பும் படம் பார்ப்பவர்களின் மனதில் கனத்த மவுனத்தை சுமக்கச் செய்திருக்கிறது.

அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்பும் அரசுக்கும், அதற்கு எதிராக போராடும் ஒரு குழுவுக்கும் இடையிலான போராட்டத்தில் இளையராஜாவின் இசை தனி ராஜாங்கம் நடத்தியிருக்கிறது. மலைக் கிராம காட்சிகளுக்கு அவரது இசை அந்த கிராமத்தில் இல்லாத ஒரு மரத்தையும், ஒரு செடியையும் அவ்வப்போது பூக்கச் செய்கிறது. படத்தில் வரும் இரண்டு பாடல்களும் ஏற்கெனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ''வழிநெடுக காட்டுமல்லி...'' - வரும் இடம் ரசிக்கும்படியாக உள்ளது. ''ஒன்னோட நடந்தா...'' - பாடல் வரும் இடம் சற்று நீண்டுவிட்டதோ என்பதுபோன்ற தோற்றத்தை தருகிறது. மற்றபடி அவரது பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஒரு சில காட்சிகள் அவர் சைலண்ட் விடும் இடங்கள், திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் பதற்றத்துடன் வெளிவிடும் மூச்சுக்காற்றின் ஓசையைக் கேட்க செய்திருக்கிறார் இளையராஜா.

எல்லா மனிதர்களின் வாழ்வியல் தேவைகளுக்கான ஓட்டம், சுற்றி நடக்கும் பெரும்பாலான பிரச்சினைகள் குறித்தும், சமூக பிரச்சினைகள் குறித்தும் கவலைகொள்ளச் செய்வதில்லை. அதுவும் அரசுக்கு எதிரான பிரச்சினைகள் என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டைப் பூட்டிவிட்டு அடுத்து நடப்பதையும், நடக்கப்போவதையும் டிவியில் வரும் பிரேக்கிங் செய்தியைப் பார்த்து சோஷியல் மீடியாவில் அப்டேட்டாக ஷேர் செய்யும் வழக்கத்துக்கு மாறிவிட்ட எல்லோருக்காகவும் சேர்த்துதான் மலைகள், காடுகள், கடல்பரப்புகள், ஆற்றுச் சமவெளிகளென உலகின் ஏதாவது ஒரு மூலையில் அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வரும் அமைப்புகளின் விடுதைலையைப் பற்றி உருக்கமாக பேசி உறைய வைக்கிறது ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம்.

விடுதலை பாகம் 1 Review: அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு | Director Vetrimaran's Viduthalai Part 1 Movie Review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மட்டுமே பார்த்து இருந்தேன். ஏற்கனவே வெளிவந்த வெற்றிமாறன் படங்கள் அனைத்தும்  பிடிக்கும். இசைஞானியின் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் 3 பாடல்களும் தான் என்னை இந்த திரைப்படத்திற்கு நேற்றே செல்ல உந்திய முதல் காரணி.
நேற்று இரவு 10:30; 2 ஆவது படக்காட்சிக்கு சென்றேன். 
படங்கள் முழுதும் ஆங்காங்கே தேமிழ்தேசியம் பல குறியீடுகளோடு பேசப்படுகிறத்து. அரச படைகளின் அட்டூழியங்கள், அடக்குமுறைகள் கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. 1980 களில் பார்த்த தண்ணீர் தண்ணீர், மலையூர் மம்பட்டியான் போன்ற படங்களை பார்த்த உணர்வை ஏற்பட்டுத்தியது.
சூரி அந்த கதாபாத்திரமாக மாறி இயல்பாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி வரும் ஒரு சில காட்சிகளில் கவனத்தை முழுதும் அள்ளிக்கொண்டு போகிறார். 
இருண்ட காடு, பாறைகள், ஓடைகள், ஒற்றையடி பாதைகள், வனாந்திர பகுதிகள் எங்கும் இசைஞானியின் இசை காட்டு மல்லியாய் பூத்து வாசம் வீசியது. 
இந்த படம் பற்றி நிறைய பேசலாம்.. சென்சார் கெடுபிடிகள் இல்லாமல் இந்த படம் வெளிவந்ததே பெரிய விடயம். வெற்றிமாறன்  வெற்றி நிச்சயம். ♥️

  • கருத்துக்கள உறவுகள்

"இது வெறும் படமல்ல, தமிழ் ரசிகர்களின் கனத்த உணர்வு" - விடுதலை படத்தை பாராட்டும் சீமான், திருமாவளவன்

விடுதலை, சினிமா

பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சூரியின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒரு நடிகராக சூரி வேறொரு பரிமாணத்திற்குச் சென்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் நேர்மறையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

 

சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், பத்திரிக்கையாளர்களும்கூட சூரியின் நடிப்பு குறித்து மிகவும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

”இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார்,” என சீமான் கூறியுள்ளார்.

படத்தின் கதை என்ன?

அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்தச் சுரங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற அமைப்பு ஆயுதம் தாங்கிப் போராடுகிறது.

அந்த அமைப்பை வழிநடத்தும் விஜய் சேதுபதியைக் கைது செய்யச் செல்லும் காவல்துறை குழுவில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் குமரேசன் கதாப்பாத்திரத்தில் வரும் சூரி.

உயரதிகாரியின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சூரிக்கு, அவரது உயரதிகாரியால் மெமோ கொடுக்கப்படுகிறது. தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் பணியில் இருக்கப் போராடும் சூரிக்கு என்ன ஆனது? விஜய் சேதுபதி பிடிபட்டாரா? சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பு? இதுதான் படத்தின் மீதிக் கதை.

அரசியல் தலைவர்கள் பாராட்டு

விடுதலை, சினிமா

பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE

விடுதலை திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ உலக சினிமா அளவிற்கு படம் எடுப்பதற்கு, நம்மிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்திருக்கிறது. இதுவொரு திரைக்கதை மட்டுமல்ல, நெடுங்காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சுமக்கும் ஒரு கனத்த உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார். இதற்கு முன்னால் நீங்கள் பார்த்த சூரியை இந்த திரைப்படத்தில் காண முடியாது” என்று சூரியின் நடிப்பு குறித்தும் பாராட்டினார்.

அதேபோல் இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், "அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், "வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார்.

மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

திரை நட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள்

விடுதலை, சினிமா

பட மூலாதாரம்,ALPHONSE PUTHREN/TWITTER

"இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூரியிடம் வெளிப்பட்டிருக்கும் நடிப்பு ஒரு சாதாரண மாற்றம் அல்ல, அது ஒரு பரிணாம வளர்ச்சி” என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் ட்விட்டர் பதிவில், “இதை சாதாரண மாற்றம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சூரியின் பரிணாம வளர்ச்சி. அவர் மீது நம்பிக்கை வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கும், அவருக்கு இப்படியான ஒரு பாதையை வகுத்துக் கொடுத்ததற்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியை குறிப்பிட்டு, “அண்ணா நீங்கள் இல்லாமல் தமிழ் சினிமா ஒரு அடி முன்னால் செல்லாது என்ற நிலையை உருவாக்கியதற்கு உங்களுக்கு ஒரு சல்யூட்” என்றும் கூறியுள்ளார்.

குணச்சித்திர நடிகரான கயல் தேவராஜ், “விடுதலை திரைப்படத்தினுடைய கதையின் நாயகனாக சூரியின் முகவரி சொல்லும்,” என்று கூறியுள்ளார்.

“நீ படிப்படியாய் முன்னுக்கு வந்தவன். நகைச்சுவையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய். இன்று விடுதலை திரைப்படத்தில் உனது எதிர்கால லட்சியங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். விடுதலை முதல் பாகத்தினுடைய கதையின் நாயகனாக உன் முகவரி சொல்லும். வெற்றி, வெற்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

"அதேபோல் விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும்,” என்று நடிகர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

படம் வெளியாவதற்குச் சில வாரங்கள் முன்னதாக விடுதலை திரைப்படத்தின் புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த இயக்குநர் சுதா கொங்காரா, “விடுதலை திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்று என் நண்பர் சொன்னதால், அதைக் காண வந்திருக்கிறேன்” என்று பதிவிட்டு இப்படம் வெளியாவது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

சினிமா விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்

விடுதலை, சினிமா

பட மூலாதாரம்,BARADWAJ RANGAN/TWITTER

விடுதலை திரைப்படம் குறித்து விமர்சித்திருக்கும் ஊடகவியலாளர் பரத்வாஜ்ரங்கன், “விசாரணை திரைப்படம் அளவிற்கு இந்தப் படம் வலிமையாக இல்லை," என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில், “விசாரணை திரைப்படத்தில் காணப்பட்ட அந்த வலிமையான சக்தி, விடுதலையில் இல்லை. ஆனால் இது நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகரான பிரசாத் ரங்கசாமி, “விடுதலை, தமிழ் சினிமாவின் மணி மகுடத்தில் ஏறியிருக்கும் மற்றொரு வைரம். நடிகர் சூரிக்கு எனது அன்பும் மரியாதையும். இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இதயத்தில் இருப்பதை, சினிமாவின் மூலம் பேசுகிறார்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சினிமா ஊடகவியலாளரான கவிதா, “நடிகர் சூரிக்கு சல்யூட். விடுதலை திரைப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

சூரியின் நடிப்பை வியக்கும் ரசிகர்கள்

விடுதலை, சினிமா

பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE

சூரியின் நடிப்பை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சூரியின் சினிமா பயணத்தில் விடுதலை திரைப்படம் ஒரு பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

“நடிகர் சூரிக்கு அவரின் மொத்த வாழ்நாளுக்கான வாய்ப்பாக விடுதலை திரைப்படம் அமைந்துள்ளது. விஜய் சேதுபதிக்காக முக்கியமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது வெற்றிமாறனின் மிகச் சிறந்த படம் அல்ல. ஆனால் இதுவொரு நல்ல திரைப்படம்,” என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், ”சூரியின் வெள்ளந்தித்தனமான இயல்பான நடிப்பு, அவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியாய் அருமையான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்,” என்று மற்றொரு ட்விட்டர் பயனர் ஒருவரும் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c7290955njlo

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை பாகம் 1 – விமர்சனம்!

KaviApr 01, 2023 11:33AM
ஷேர் செய்ய : 
rwsNFTvD-Viduthalai-Part-1-Review-in-Tam

கமர்ஷியல் திரைப்படங்கள் தரும் நட்சத்திர நாயகர்கள் எவ்வாறு ஆராதிக்கப்படுகிறார்களோ, அதற்கிணையான பாராட்டுகளை இயக்குனர்களும் அள்ளுவது காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது. 

இன்றைய காலகட்டத்தில் அப்படியொரு வரவேற்புக்குரிய இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்கிறார் வெற்றிமாறன். அவர் இயக்கியுள்ள ‘விடுதலை பாகம் 1’ பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அந்த எதிர்பார்ப்பிற்குத் தக்கவாறு ‘விடுதலை பாகம் 1’ அமைந்திருக்கிறதா? படம் பார்த்து வெளியே வரும்போது, இக்கேள்விக்கு மாறுபட்ட பதிலொன்றைத் தர முடிகிறது. 

பிளாஷ்பேக் சம்பவங்கள்!

Viduthalai Part 1 Review in Tamil

அருமபுரி மாவட்டத்திற்கு மாற்றலாகிச் செல்கிறார் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி). அங்கு அமையவிருக்கும் சுரங்க முதலீட்டுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் மக்கள் படையைச் சேர்ந்த தலைவர்கள்; அவர்களைப் பிடிப்பதற்காக, ஒரு தனிப்படை முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பொறுப்பாளராக போலீஸ் அதிகாரி ராகவேந்தர் (சேத்தன்) உள்ளார். தான் சொல்வதை மட்டுமே முகாமில் இருக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கும் மனிதர் அவர். 

அவரது ஜீப் ஓட்டுநராக நியமிக்கப்படுகிறார் குமரேசன்.ஆனால், வந்த முதல் நாளே அதிகாரியின் உத்தரவை மீறி உடல்நலமில்லாத ஒரு மூதாட்டியை ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறார் குமரேசன். அது ராகவேந்தரை ஆத்திரப்படுத்துகிறது. அதனால், வாரம் முழுக்க இரவு பகலாகப் பல்வேறு வேலைகளைச் செய்யும் கொடுமைக்கு ஆளாகிறார். அது, அந்த மூதாட்டியின் பேத்தியான தமிழரசிக்குத் (பவானிஸ்ரீ) தெரிய வருகிறது.

நாள்பட தமிழரசிக்கும் குமரேசனுக்கும் இடையே ஒரு நட்பு மலர்கிறது; மெல்ல காதலாக மாறுகிறது. அருமபுரி மலைப்பகுதிகளில் சுரங்கம் அமைக்கும் பணி தொடர்பாக, ஒரு வெளிநாட்டு நிறுவனம் தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது. 

அந்தச் சூழலில், மக்கள் படையினரால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறது காவல் துறை. அப்போது, அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரது உறவினர்கள் முகாமின் அருகிலுள்ள கிராமத்தில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. 

தமிழரசியின் உறவினரும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். இந்தச் சூழலில், மக்கள் படையின் தலைவர் பெருமாள் எனும் வாத்தியாரை (விஜய் சேதுபதி) தான் பார்த்ததாக ரைட்டர் சந்திரனிடம் சொல்கிறார் குமரேசன். 

அவர் மட்டுமல்ல, யாரும் அதனைக் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல்போய், அதனால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் பதைபதைக்கும்போது, தமிழரசியின் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் முகாமுக்கு அழைத்து வரப்படுகின்றனர். 

Viduthalai Part 1 Review in Tamil

ஆண்களும் பெண்களும் தொடர் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் நிர்வாணப் படுத்தப்படுகின்றனர். அந்த அவமானம் தமிழரசிக்கு நிகழ்ந்துவிடக் கூடாது எனும் நினைப்பில், பெருமாள் இருக்குமிடத்தைத் தன் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க ஓடுகிறார் குமரேசன். 

அவர் சொல் அம்பலம் ஏறியதா இல்லையா? பெருமாள் பிடிபட்டாரா என்பதோடு படம் நிறைவடைகிறது. இந்த படத்தின் ஒவ்வொரு பிரேமையும் புட்டு புட்டு வைத்தாலும், படத்தைப் பார்க்க அமர்ந்தால் தன்னை மறந்து போய்விடுவோம். அந்த அளவுக்கு, திரையில் உழைப்பைக் கொட்டியிருக்கிறது வெற்றி மாறன் குழு. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்வது போல திரைக்கதை வடிவமைக்கப்படிருப்பதால், பிளாஷ்பேக் சம்பவங்களாகவே மொத்த படமும் நகர்கிறது. 

அரியலூர் ரயில் பாலம் தகர்ப்பு, வாச்சாத்தி கொடுமை உட்படத் தமிழ்நாட்டு சமூக அரசியல் பரப்பில் கிளர்ச்சியை உண்டாக்கிய பல விஷயங்கள் திரைக்கதையில் செருகப்பட்டிருக்கின்றன. 

பரோட்டா முதல் போலீஸ் வரை!

எத்தனையோ படங்களில் துணைநடிகராகத் தலைகாட்டியிருந்தாலும், ‘வெண்ணிலா கபடிக் குழு’வில் வரும் பரோட்டா சூரியாகத்தான் ரசிகர்கள் பலருக்கும் அவர் அறிமுகம். அப்படிப்பட்டவர் முழுக்கவே சீரியசான பாத்திரமொன்றில் நடிக்கும்போது, நிச்சயம் சிரிப்பு வந்துவிடக் கூடாது. அதற்கேற்றவாறு குமரேசன் பாத்திரத்தைத் தந்திருக்கிறார் வெற்றி மாறன். 

இத்தனைக்கும் காதல் காட்சிகளில் ‘சுப்பிரமணியபுரம்’ ஜெய் போல தன் பற்கள் தெரியச் சிரிக்கிறார் சூரி; ஆனால், நமக்கு கொஞ்சம் கூட கிண்டலடிக்கத் தோன்றுவதில்லை. காரணம், கனமான கதைக்களம். நிச்சயமாக, ஒரு நாயகனாக அறிமுகமாகச் சிறப்பான படத்தைத் தேர்வு செய்திருக்கிறார் சூரி. 

தனிப்படை முகாமில் கடைசி நபராகக் கருதப்படும் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரைக் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்க முயல்வதெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

விஜய் சேதுபதிக்குக் காட்சிகள் குறைவென்றாலும், ‘விக்ரம்’ பாணியில் அனைவருமே அவரது பாத்திரம் பற்றியே படம் முழுக்கப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதனாலேயே, ஐம்பதுகளை தாண்டிய ஒரு பாத்திரத்தில் அவர் தோன்றும்போதும் நம்மையும் அறியாமல் ஒரு சூப்பர் ஹீரோ’ போல கொண்டாடத் தோன்றுகிறது.

Viduthalai Part 1 Review in Tamil

இவர்கள் இருவரையும் தவிர்த்து தமிழரசியாக வரும் பவானிஸ்ரீ, அவரது பாட்டியாக வரும் அகவம்மா, தனிப்படை முகாம் அதிகாரியாக வரும் சேத்தன், தலைமைச்செயலாளர் சுப்பிரமணியமாக வரும் ராஜீவ் மேனன், புதிய அதிகாரியாக இடம்பிடிக்கும் கவுதம் மேனன், அமைச்சராக வரும் இளவரசு, மூணார் ரவி என்று பலரும் நம் மனதில் இடம்பிடிக்கின்றனர். 

இவர்கள் தவிர்த்துப் பலர் இப்படத்தில் முகம் காட்டியிருந்தாலும் ரைட்டர் சந்திரன் ஆக வருபவர் நம் கவனம் கவர்கிறார். இரண்டாம் பாகத்திலும் அவருக்கு முக்கியத்துவம் என்று எதிர்பார்க்கலாம்.

விடுதலை’யின் முக்கிய பலம், மலைப்பாங்கான பிரதேசத்தை முதன்மைப்படுத்தும் கதைக்களம். அதனைக் கொஞ்சம் கூட அழகுறக் காட்டிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். 

அதனாலேயே, அழகழகான இடங்கள் கூடக் காட்சிகளின் கனத்தினால் நம் எண்ணவோட்டத்தில் இருந்து விலகி நிற்கின்றன. அதேபோல, கண்கள் பதறும் அளவுக்கு குறைந்த நொடிகள் ஓடும் ஒரு ஷாட்டை கூடக் காண்பித்துவிடக் கூடாது என்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர். 

கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சியிலும் அதனைப் பின்பற்றியிருப்பது அருமை. போலவே பீட்டர் ஹெய்ன், ஸ்டன் சிவா குழுவினரின் உழைப்பும் அபாரம்.‘காட்டு மல்லி’, ‘உன்னோட நடந்தா’ பாடல்கள் ஏற்கனவே பலரது பிளேலிஸ்டை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. அவை திரையில் இடம்பெறும்போது, எவரும் இருக்கையை விட்டு எழவில்லை. 

Viduthalai Part 1 Review in Tamil

டைட்டில் இசையில் ‘ஜெர்க்’ ஆக வைத்தாலும், படம் முழுக்கப் பாவி நிற்கும் பின்னணி இசை நம் கவனத்திற்குப் புலப்படாதவாறு காட்சிகளோடு கரைந்திருப்பது இன்னொரு அதிசயம்.ஊட்டி, கொடைக்கானல் என்று மேற்குத்தொடர்ச்சி மலையின் சில பகுதிகளையே பார்த்த கண்களுக்கு, அடர்ந்த காடு இப்படித்தான் இருக்கும் என்று காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றி மாறன். 

பரீட்சார்த்தமாக அவர் படம்பிடித்தவை மட்டும் மிகச்சில இடங்களில் ஒட்டாமல் தனித்து தெரிகிறது. அவற்றைப் புறந்தள்ளினால் நமக்குக் கிடைப்பது ரத்தினம் போன்ற காட்சியாக்கம். அவற்றில் லாஜிக் மீறல்களைத் தேடினாலும் சுலபத்தில் கிடைப்பதாக இல்லை. 

வெற்றிமாறனின் தனித்துவம்!

அருமபுரி என்ற பெயரைச் சொல்லும்போதே, இது எந்த பிரதேசத்தில் நிகழ்ந்த கதை என்பதை ஊகித்துவிட முடிகிறது. அது மட்டுமல்லாமல் அரசின் அதிகார மட்டத்தைச் சேர்ந்தவர்கள் சூப்பர்பாஸ், வாத்தியார் என்று உச்சரிப்பதெல்லாம் குறிப்பிட்ட தலைவரைச் சுட்டிக்காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏன், பெருமாள் வாத்தியார் எனும் பாத்திரம் கூட நக்சல்பாரி கொள்கையை முன்னிறுத்திய ஒரு தலைவரின் சாயலில் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. 

ஆனால், அது போன்ற பல தகவல்களை திரையில் அழுத்தம் திருத்தமாகவோ, ஒருசார்பான பிரசாரத் தொனியிலோ வெற்றிமாறன் படமாக்கவில்லை. வெற்றிமாறனின் முந்தைய படங்கள் காவல்துறையின் அத்துமீறல்களைச் சொன்னது போலவே, இதில் தனிப்படையினரின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன. 

Viduthalai Part 1 Review in Tamil

அதேநேரத்தில், மக்களுக்குச் சேவையாற்றும் எண்ணத்தோடு இருப்பவர்களும் கணிசம் என்று காட்டுகிறது திரைக்கதை. வெறுமனே நாயகனை மட்டுமே நல்லவன் என்ற வார்ப்பில் அடக்கவில்லை. பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் காட்ட பாதுகாப்பான கோணங்களைத் தேர்ந்தெடுக்காமல், முழுக்க நிர்வாணமாகப் படம்பிடித்து படத்தொகுப்பில் அப்பிம்பங்களை ‘மங்கலாக்கிய’ எபெக்டிலேயே திரையில் ஓட விடுகிறார். 

ஒரு கோரத்தை அழகாகக் காட்சிப்படுத்திவிடக்கூடாது என்ற அக்கறை அதன் பின்னிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் சார்பு இருக்கும். ஒரு திரைப்படத்தின் இயக்குனருக்கும் அது பொருந்தும். ஆனால், மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் ஒருவருக்கே சமநிலை வாய்க்கும். ஏதேனும் ஒருபக்கம் நில் எனும் எதிர்பார்ப்புக்கு மாறானது இது; கூட்டம் சேர்க்க வழிவகை செய்யாதது. 

ஆனால், அதனை முன்வைக்கும் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திற்கு மக்கள் திரளாகக் குவியக் காரணம், அவரது தனித்துவமான படைப்பாக்கமே. அதுவே, நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு வெளியானபோதும் ’அடுத்த பாகம் எப்போது’ என்ற கேள்வியை அவரிடம் முன்வைக்கவும் தூண்டுகிறது. அந்த வகையில், இது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறி வேறொரு உச்சத்தைத் தொட்ட படமாகவும் இருப்பது சிறப்பு.
 

 

https://minnambalam.com/cinema/viduthalai-part-1-review-in-tamil-minnambalam-cinema-news/

  • கருத்துக்கள உறவுகள்

பழங்குடிகளின் நிஜமான பிரச்சினையை பேசியதா விடுதலை!

-சாவித்திரி கண்ணன்

 

968824.jpg

சமகாலத்தின் மையப் பிரச்சினையான பெரு நிறுவனங்களின் கனிம வளக் கொள்ளை, தீவிரவாதம், பழங்குடிகளுக்கு எதிரான போலீஸ் அடக்குமுறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சினிமா தான் விடுதலை. வெற்றி மாறன் இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்?

கதைக் களத்திற்கான தேர்வு, கதாபாத்திரங்களின் தேர்வு, காட்சிகளின் வழியே விரியும் சினிமா மொழி.. ஆகியவற்றில் வெற்றி மாறன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், கலையின் நோக்கம் தான் முக்கியமானது!

படத்தின் ஆரம்பமே தமிழர் படை வைத்த வெடி குண்டால் ரயில் கவிழ்ந்ததாகக் காட்டப்படுகிறது. அதுவும் இந்தக் காட்சி தேவையின்றி மிக நீளமாக குற்றுயிரும் குலை உயிருமாக அப்பாவி மக்கள் தீவிரவாதிகள் வைத்த வெடி குண்டால் கொல்லப்பட்டதாக அழுத்தமாக நிறுவுகிறது.

இதைத் தொடர்ந்த பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர்கள் சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக எழுதுவதாக அதிகாரிகளால் குற்றம் சாட்டப்படுகின்றனர். மிரட்டப்படுகின்றனர்.

உண்மையிலேயே அந்த தமிழர் படை என்பது எப்படி உருவானது. அந்த கனிம வளத்திற்கு எதிரான மக்களின் முதல் கட்ட சாத்வீக போராட்டம் எப்படி இருந்தது? பின்னர் அவர்கள் அரசை எதிர்க்கும் நிலைக்கு எப்படித் தள்ளப்பட்டனர்? என்ற விபரம் எதுவுமில்லை. மிக முக்கியமாக வரப் போகும் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் அரசின் அராஜக நடவடிக்கைகள் தான் மலைவாழ் மக்கள் மத்தியில் புரட்சியாளர்கள் உருவாவதற்கு வழி ஏற்படுத்துகிறது என்ற அடிப்படை புரிதலை இந்தப் படம் உருவாக்கத் தவறிவிட்டது.

பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரக் கூடிய பெரும் தொழிற்சாலை மலை பிரதேசத்தில் நிறுவப்படும் போது அங்குள்ள இயற்கை வளமும், பழங்குடிகளின் வாழ்வாதாரமும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதைப் பற்றி படம் மக்களின் மொழியில் பேசவே இல்லை.

16622021543076.jpg

பழங்குடிகளுக்கும் இயற்கைக்குமான பிணைப்பு, வரவுள்ள அந்த நிறுவனத்தால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள்..போன்ற எதையுமே இயக்குனர் காட்சிபடுத்தவில்லை. தமிழ் தீவிரவாதிகளுக்கும், காவல்துறைக்குமான சாகஸச் சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்தியதிலும், காவல்துறையின் கொடூரங்களையும் மிக நீண்ட நேரம் காட்சிப் படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை கதையின் நோக்கத்தில் காட்டத் தவறிவிட்டார் வெற்றிமாறன். அதுவும் காவல்துறையின் கொடூர அத்துமீறல்களை காட்டும் போது, இளகிய மனம் படைத்த யாருக்கும் அதை பார்க்கும் சக்தி இருக்காது என்பது திண்ணம். என்னைப் பொறுத்த வரை இந்தக் காட்சிகள் அளவுக்கு மீறி காட்டப்படும் போது, திரையரங்கில் இருந்து நமக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று கூட நினைக்கத் தோன்றியது.

தமிழகத்தில் தமிழரசன் போன்றோரால் நடத்தப்பட்ட தமிழ்த் தேசிய இயக்கம் கூட எந்த காலகட்டத்திலும் இத்தனை துப்பாக்கிகளையும், வெடி மருந்துகளையும் கொண்டு செயல்படவில்லை.

632934-viduthalai.jpg

‘போலீசாரின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக வாத்தியார் விஜய் சேதுபதி மக்களுக்கு பாதுகாப்பு தந்தார் என்பதால் மக்கள் ஆதரவை பெற்றார்’ என ஒற்றைக் காரணம் போதுமானதல்ல!

சூரியின் கதாபாத்திர வார்ப்பு உயிர்ப்பானது. மனித நேயமும், நேர்மையும் ஒருங்கே பெற்ற ஒரு இளைஞனின் பாத்திரத்தில் சூரி நடிக்கவில்லை, வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சாடிஸ்ட் மேலதிகாரியாக சேத்தன் பாத்திரமும் நிஜத்தில் பார்ப்பது போன்றே உள்ளது! அவருக்கும் மேலதிகாரியாக வரும் கெளவுதம் மேனன், தலைமை செயலாளர் ராஜிவ் மேனன் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தி போகின்றனர்.

விஜய் சேதுபதிக்கு போதுமான வாய்ப்பு தரப்படவில்லை. கிடைத்த வரையில் மிகச் சிறப்பாக தன் பங்களிப்பை தந்துள்ளார். கதாநாயகியாக வரும் பவானிஸ்ரீயும் இயல்பாக நடித்துள்ளார்.

bhavani-sre-pocket-news.jpg

ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த சினிமா எடுக்கப்பட்டு உள்ளது. ஜெயமோகனுக்கு தமிழ் மற்றும் இடதுசாரி போராளி குழுக்களை குறித்த பார்வை உண்மைக்கு நேர் எதிரானது, நேர்மையற்றது என்பது அனைவரும் அறிந்ததே! அந்த சிறுகதையை நான் படித்ததில்லை.

ஆனால், மலை கிராமங்களில் இயற்கைவளச் சுரண்டல் குறித்து சினிமா எடுக்க விரும்பி இருந்தால் வெற்றிமாறன் தேர்வு செய்திருக்க வேண்டியது ‘ஆற்றங்கரை ஓரம்’ என்ற நாவல் தான்! நர்மதை நதியில் மிகப் பெரிய அணை கட்டுவதற்காக அப்புறப்படுத்தப்படும் பழங்குடிகளின் வலிகளையும், அதற்காக பழங்குடிகளை இணைத்து மேதா பட்கர் நடத்திய போராட்டங்களையும் ரத்தமும், சதையுமாக எழுதி இருந்தார் வெ.இறையன்பு. இதற்காக ஒரு மாதகாலம் இறையன்பு அவர்களோடு தங்கி எழுதியதாக அறிந்தேன்.

இந்தியா முழுமையிலும் தற்போது பழங்குடி மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினையை பேச முன்வந்துள்ளது இந்தச் சினிமா! யாரும் எடுக்கத் துணியாத கதைக் கருவை எடுத்தற்காக வெற்றி மாறனை பாராட்டலாம். ஆனால், சொல்ல வந்த கருத்தில் தெளிவோ, ஆழமோ இல்லை என்பது தான் கவலையளிக்கிறது. இரண்டாம் பாகத்தில் சொல்லப்படுமா.. பார்க்கலாம்!

சாவித்திரி கண்ணன்

 

 

https://aramonline.in/12945/vituthalai-verrimaran-soori/

நான் நேற்று விடுதலை பார்த்தேன்.

வெற்றிமாறனின் இன்னுமொரு கனதியான, ஒவ்வொரு காட்சியும் அதன் உச்ச செலுமையுடன் எடுக்கப்பட்ட, தரமான ஒரு தமிழ் படம்.

அதிகாரத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக போராடும் சமூகத்தின் குரலாகவும் அதை ஒடுக்க முனையும் அதிகாரத்தின் கோர முகமுமாக படம் அமைந்திருப்பதால் பல காட்சிகளை எம் போராட்ட வாழ்வுடன் connect பண்ண முடிகிறது. 

சூரியால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என ஆச்சரியப்பட வைக்கின்றார்.. அதுவும் காதலியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனும் தவிப்பில் அவர் அங்கும் இங்கும் ஓடும் போது முழு audience சையும் அவர் பின்னால் ஓட வைக்கின்றார்.

விஜய் சேதுபதியின் காட்சிகள் குறைவு. ஆனால் வந்து போகும் அனைத்துக் காட்சிகளிலும் தன் உச்ச நடிப்பை தருகின்றார்.

இளையராஜாவின் இசை! படத்தின் ஆன்மாவை எமக்குள் நிரப்பும் இசை. இத்தனை வயதிலும் அவரால் எப்படி இப்படி இசையமைக்க முடிகிறது..! பின்னனி இசையை ஒரு album ஆகவே வெளிவிடலாம்.

வெற்றிமாறனின் உழைப்பும் ஒவ்வொரு காட்சிக்கு அவர் கொடுக்கும் நேர்த்தியும், detailing மும் அருமை!

மகளையும் கூட்டிக் கொண்டு போய் பார்த்தோம். அதிகாரத்தின் brutality பற்றியும் அதை எம் மக்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதையும் அவளுக்குள் கடத்த முடிந்தது. 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா சார் வாய்ப்பை மறுத்துட்டேன் – விடுதலை படத்தில் நடிக்கும் Gv பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ

By Mankandan Sakthivel


BhavaniShree

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தற்போது இயக்கியுள்ள படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி நடிகர் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். மேலும், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாகிறது.

அதோடு இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலர் வெளியானது அடுத்து ரசிகர்கள் மத்தியில் ட்ரைலர் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அதில் வெற்றிமாறன் நல்ல இயக்குனர் என்றும் 1500 படங்களுக்கு இசையமைத்த பின்னர் இதனை தான் கூறுவதாகவும் இளையராஜா தெரிவித்தார்.

பவானி ஸ்ரீ பேட்டி :

இந்த நிலையில் விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள நடிகை பவானி ஸ்ரீ சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அவர் கூறுகையில் ஒரு காவலராக பணியாற்றிவரும் கான்ஸ்டபிளுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுடன் பணியாற்றுவது எல்லா நடிகர்களுக்கு ஒரு கனவாக இருக்கும், ஆனால் எனக்கு நான் நடித்த இரண்டாவது படத்திலேயே வாய்ப்பு கிடைத்து விட்டது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.

மறக்க முடியாத அனுபவம் :

இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த இயக்குனர், தனித்தன்மையான கதைகளை உருவாக்குவதில் சிறந்தவர். அதற்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர். மரங்கள் அவர் காடுகளில் படப்பிடிப்பு நடக்கும் போது அங்குள்ள சிறிய பூச்சிகளுக்கு கூட எந்த தீங்கும் நடக்க கூடாது என்று மிகவும் கவனமான பணியாற்றினார். அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நடிகர் சூரி அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார் கண்டிப்பாக அவருக்கு பாராட்டுக்கள் குவியும். அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்து என்றார்.

image-563.png

ரசிகர்கள் அதிகரிப்பு :

மேலும் பேசுகையில் ரசிகர்கள் அதிகரித்து விட்டனரா? என்ற கேள்விக்கும் பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது “எனக்கு அதிகமாக ரசிகர்கள் வந்து விட்டனரா என்று அதிகமாக உண்மை தன்மை தெரியாது. ஆனால் நான் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். எனவே இந்த பாராட்டுக்கள் கிடைத்தற்கு எனக்கு மகிழ்ச்சி தான். தன்னுடைய திறமையினால் அழகான பாடல்களை இயற்றியிருக்கும் இசைஞானி இளயராஜா அவர்களுக்கு எல்லா பாராட்டுகளும் சேரும்.

image-564.png

இளையராஜா படலை மறுக்க காரணம் :

என்னுடைய குடும்பத்திலேயே நான் மட்டும் தான் மிகவும் மாறுபட்ட ஒருவர். என்னை இசை கற்றுக்கொள்ள சொல்லு பல முறை என்னுடைய கற்றுக்கொள்ள வற்புறுத்தினார்கள் ஆனால் நான் சரியாக கற்றுக்கொள்ளவில்லை. இசைஞானி இளையராஜா கூட ஒரு பாடலை பாடச்சொல்லி என்னிடம் கேட்டபோது நான் மறுத்து விட்டேன் என்று கூறினார் நடிகை பவானி ஸ்ரீ. மேலும் விடுதலை படத்தை பாதி தான் பார்த்ததாகவும் ஆனால் முழு படம் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருப்பதாக கூறினார்கள். கண்டிப்பாக ரசிகர்கள் “விடுதலை” படத்தை கொண்டாடுவார்கள் என்று கூறினார்.

https://tamil.behindtalkies.com/viduthalai-actress-bhavani-interview/

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை திரையரங்கில் இன்று பார்க்க நேரிட்டது.

முதல் காட்சியான ரயில் குண்டு வெடிப்பும், அதில் பாதிக்கப்பட்டவர்களாக காண்பித்ததில் , இயற்கையாக இல்லாமல் படத்திற்காக போடப்பட்ட செட் என்பது அப்பட்டமான பல இடங்களில் தெரிகிறது. தண்டவாளத்தின் தொடர்ச்சியே இல்லாமல் தனியாக நதியில் தெரிவதால் போடபட்ட செட் பல்லிளிக்கிறது.

மற்றபடி அடர்ந்த வனத்தில் இயற்கையாக படமாக்கி தொய்வில்லாமல் படத்தை கொண்டு சென்றிருப்பதில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.  

க்ளைமாக்ஸில் உக்கிர துப்பாக்கி சண்டைக் காட்சிகளில் தெருவில் நிற்கும் பொது மக்கள், சர்வ சாதாரணமாக சினிமா சூட்டிங்கை வேடிக்கை பார்ப்பது போல நிற்பது சிரிப்பை வரவழைக்கிறது. சிறுசிறு குறைக்களை கவனத்தில் கொள்ளாமல் பார்த்தால்  அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

இப்படத்தை திரையரங்கில் இன்று பார்க்க நேரிட்டது.

முதல் காட்சியான ரயில் குண்டு வெடிப்பும், அதில் பாதிக்கப்பட்டவர்களாக காண்பித்ததில் , இயற்கையாக இல்லாமல் படத்திற்காக போடப்பட்ட செட் என்பது அப்பட்டமான பல இடங்களில் தெரிகிறது. தண்டவாளத்தின் தொடர்ச்சியே இல்லாமல் தனியாக நதியில் தெரிவதால் போடபட்ட செட் பல்லிளிக்கிறது.

மற்றபடி அடர்ந்த வனத்தில் இயற்கையாக படமாக்கி தொய்வில்லாமல் படத்தை கொண்டு சென்றிருப்பதில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.  

க்ளைமாக்ஸில் உக்கிர துப்பாக்கி சண்டைக் காட்சிகளில் தெருவில் நிற்கும் பொது மக்கள், சர்வ சாதாரணமாக சினிமா சூட்டிங்கை வேடிக்கை பார்ப்பது போல நிற்பது சிரிப்பை வரவழைக்கிறது. சிறுசிறு குறைக்களை கவனத்தில் கொள்ளாமல் பார்த்தால்  அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.

உண்மை சம்பவங்களை தழுவி ...
தமது கதைக்காக கற்பனைனைகளை அதில் புகுத்தி அடுத்த தலைமுறைக்கு 
ஒரு பொய்யான செய்தியை கொண்டு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது 

பல விடுதலை அமைப்பினர் நிராபாயுதபாணிகளாக வாழ்ந்தபோதே 
கைது செய்து கொடூரமான சித்திரவதைகள்  செய்து சாகடிக்க பட்டார்கள் 

மரண பயத்தில்தான் வீரப்பனோடு சிலர் சென்று சேர்ந்தார்கள் 

அப்போ புலிகளை பலர் தொடர்பு கொண்டார்கள் நல்ல வேளையாக புலிகள் 
யாரையும் சேர்க்கவுமில்லை உதவி செய்யவுமில்லை ... அப்படி நடந்திருந்தால் 
நன்றாக சீவி பவுடர் பூசி புலிகளை பயங்கரவாதிகள் ஆக்க இன்னும் இலகுவாக இருந்திருக்கும் புலிவாந்தி எடுப்போருக்கும் நல்ல வாந்தியாக அமைந்திருக்கும் 

90இல் நூற்றுக்கணக்கான ஜேவிபி (சிங்கள) உறுப்பினர்களும் புலிகளின் கட்டுபாட்டுக்குள் ஓடி வந்தார்கள் 
புலிகள் யாரையும் சேர்க்கவுமில்லை அவர்களுக்கு உதவாவுமில்லை (பிடித்து போலீஸ் இராணுவத்திடம் கொடுக்கவுமில்லை) 

(அப்போது நான் எண்ணியது ( என் அறிவுக்கு உட்பட்டு) புலிகளுக்கு அறிவில்லை என்று. எல்லோரையும் சேர்த்து  ஆயுத உதவிகள் செய்து போரை விரிவு படுத்தி இருக்கலாம் என்று. நாள் கடந்து பார்க்கும்போதுதான்  அவர்கள் எவ்வளவு பக்குவமாக இருந்து இருக்கிறார்கள் என்பது புரிகிறது) 

ஆனால் அத்தனை கேவலங்களையும் சிங்கள இந்திய அரசுகள் செய்தன 
புலிகளுக்கு எதிரி என்றால் எந்த ரவுடி ... கொலைகாரன் .... பாலியல் பன்றியாக இருந்தாலும் 
ஆயுதமும் வழங்கி அரசபடைகளின் பாதுகாப்பும் வழங்கின 

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ராசவன்னியன் said:

முதல் காட்சியான ரயில் குண்டு வெடிப்பும், அதில் பாதிக்கப்பட்டவர்களாக காண்பித்ததில் , இயற்கையாக இல்லாமல் படத்திற்காக போடப்பட்ட செட் என்பது அப்பட்டமான பல இடங்களில் தெரிகிறது. தண்டவாளத்தின் தொடர்ச்சியே இல்லாமல் தனியாக நதியில் தெரிவதால் போடபட்ட செட் பல்லிளிக்கிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரமாக வரும் பெருமாள் வாத்தியார் யார்?

விடுதலை படம், விஜய் சேதுபதி, வெற்றிமாறன், தமிழரசன், புலவர் கலியபெருமாள்

பட மூலாதாரம்,FACEBOOK/ம. ராமமூர்த்தி

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
  • பதவி,பிபிசி தமிழ்
  • 5 ஏப்ரல் 2023, 04:36 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் வெளியானதில் இருந்து அதில் விஜய் சேதுபதி நடித்திருந்த 'பெருமாள் வாத்தியார்' என்ற கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் யார் என்ற கேள்வியை முன்வைத்து பலரும் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர்.

அத்தகைய விவாதங்களில் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் புலவர் கலியபெருமாள். யார் இந்த கலியபெருமாள்? அவருக்கும் தமிழ்தேசிய போராட்டத்திற்கும் என்ன தொடர்பு?

அரசியல் களத்தில் நுழைந்த கலியபெருமாள்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திர சோழபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். தமிழில் பட்டம் பெற்ற இவர், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி என்ற ஊரில் உள்ள பள்ளியில் தமிழாசிரியராக 1960 காலக்கட்டங்களில் பணியாற்றி வந்தார்.

தமிழில் புலமை பெற்றதன் காரணமாக இவர் பணியாற்றிய பள்ளியில் இருந்தவர்கள் 'புலவர்' என்ற பட்டத்தை வழங்கியதால், புலவர் கலியபெருமாள் என்று இவர் அழைக்கப்பட்டார்.

 

புலவர் கலியபெருமாள் வாழ்ந்த பகுதியில் நிலவி வந்த சாதிக் கொடுமைகளை கண்டு, தொடக்கத்தில் பெரியாரின் அரசியலில் ஆர்வம் கொண்டு, திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்பு இடதுசாரி தத்துவத்தில் ஏற்பட்ட நாட்டம் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கடலூர், அரியலூர் பகுதியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார் புலவர் கலியபெருமாள்.

சிபிஎம் கட்சியுடன் கருத்து ரீதியாக பிளவுபட்டு அதிலிருந்து வெளியேறி, இந்தியாவில் சாரு மஜூம்தாரால் புதிதாக தொடங்கப்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற கட்சியில் புலவர் கலியபெருமாள் 1969ஆம் ஆண்டு இணைந்தார்.

அந்தக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் அமைப்பை எழுப்பிய 10 பேரில் புலவர் கலியபெருமாளும் ஒருவராக இருந்தார், என பிபிசியிடம் பேசிய முன்னாள் நக்சல்பாரி அமைப்பைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான பாரதிநாதன் தெரிவித்தார்.

'வசந்தத்தின் இடிமுழக்கம்' என்ற சாரு மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று தமிழ்நாட்டிலிருந்து புலவர் கலியபெருமாள், கோவை ஈஸ்வரம், எல்.அப்பு, தியாகு என பலர் இந்த கட்சியில் இணைந்து அரசியல் களம் கண்டனர்.

மக்கள் திரள் போராட்டங்கள்

விடுதலை படம், விஜய் சேதுபதி, வெற்றிமாறன், தமிழரசன், புலவர் கலியபெருமாள்

பட மூலாதாரம்,FACEBOOK/க.இராமச்சந்திரன்

 
படக்குறிப்பு,

புலவர் கலியபெருமாளின் கல்லறை

புலவர் கலியபெருமாள் திராவிடர் கழகத்தில் இருந்த போது, சிபிஎம் கட்சியின் உறுப்பினராக இருந்த போதும், நக்சல்பாரி அமைப்பில் சேர்ந்த பிறகும் பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்.

வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் இந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, கூலி உயர்வுப் போராட்டங்களை புலவர் கலியபெருமாள் முன்னெடுத்துள்ளார் என்று பாரதிநாதன் கூறுகிறார்.

நக்சல்பாரி அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட பிறகு, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், கடலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள், விவசாயக் கூலிகளுடன் பல அமைப்புகளை எழுப்பி, வீரியமான போராட்டங்களை புலவர் கலியபெருமாள் நடத்தினார்.

"பெண்ணாடம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் பணியாளர்களுக்காக புலவர் நடத்திய போராட்டத்தில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆலைக்கு எதிராக தொழிலாளர்களை வழிநடத்தும் புலவரைக் கொலை செய்ய வேண்டும் என ஆலை நிர்வாகம் திட்டமிட்டு பல முயற்சிகளை செய்தது. ஆனால் அதை நிறைவேறவில்லை. அதையடுத்து 1970 காலகட்டத்திலேயே 20 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு போய் புலவர் கலியபெருமாளின் வீட்டில் கொடுத்தது ஆலை நிர்வாகம். புலவரின் மனைவி அந்த பணத்தை தூக்கி வீசியெறிந்தார். இப்படியான மக்கள் போராட்டங்களை புலவர் கலியபெருமாள் முன்னெடுத்தார்," என்று வீரப்பனின் கூட்டாளியான முகில் தெரிவித்தார்.

நக்சல்பாரி கட்சியின் உறுப்பினராக இருந்ததால், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள முந்திரிக் காடுகளில் தலைமறைவாகவே புலவர் கலியபெருமாள் இருந்தார்.

"இரவு நேரங்களில் சாதாரண நபரை போல சைக்கிளில் வந்து, ஆதரவாளர்களிடம் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என துண்டுச்சீட்டை எங்காவது ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்று விடுவார். இப்படித்தான் இவரின் தகவல்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் உள்ள மற்ற நபர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது" என்று பாரதிநாதன் கூறினார்.

உழவர் கூலிப்பிரச்சனை, நிலப்பிரபுத்துவ ரவுடிகள் கட்ட பஞ்சாயத்துகள், சாதி ஒழிப்பு பிரச்சாரம், தனிக் குவளை எதிர்த்து டீக்கடைகள் முன்பு நடத்திய போராட்டம், முந்திரிக் காடு பிரச்னை என பல போராட்டங்களை அதிகார அமைப்புக்கு எதிராக புலவர் கலியபெருமாள் முன்னெடுத்து வந்தார்.

நிலப்பிரபுகளுக்கு சொந்தமான நிலங்களில் புலவர் கலியபெருமாள் தலைமையிலான நிலமற்ற விவசாயிகள் இரவு நேரங்களில் களத்தில் இறங்கி அறுவடையைக் கைப்பற்றி ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்த, கட்டாய அறுவடை இயக்கம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.

போராட்ட களத்தில்...

விடுதலை படம், விஜய் சேதுபதி, வெற்றிமாறன், தமிழரசன், புலவர் கலியபெருமாள்

பட மூலாதாரம்,FACEBOOK/க.இராமச்சந்திரன்

 
படக்குறிப்பு,

தமிழரசன்(இடது), புலவர் கலியபெருமாள்

இடதுசாரி அரசியலை தீவிரமாக முன்னெடுத்து வந்த புலவர் கலியபெருமாள், பல இளைஞர்களை அரசியல் களத்திற்கு அழைத்து வந்தார்.

கலியபெருமாளுடன் கோவை பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த தமிழரசன், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த கணேசன், தொழிலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த சர்ச்சில், உழவர், இளைஞர் அமைப்பைச் சேர்ந்த காணிப்பன் ஆகியோர் உடன் நின்று அரசியலில் இயங்கினர்.

குறிப்பாக 1987ஆம் ஆண்டு தமிழரசன் கொல்லப்படும் வரை இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாக இருந்தது.

சீனப் புரட்சியை பின்பற்றி, இந்தியாவில் சாரு மஜூம்தார் தொடங்கிய நக்சல்பாரி கட்சி என்று அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), 'அழித்தொழிப்பு செய்ய வேண்டும்' என்ற முழக்கத்தை முன்வைத்தது.

இந்த முழக்கத்தை முன்வைத்து, மக்களுக்கு எதிரான செயல்பட்டதாக கூறி பல நிலப்பிரபுகள், தமிழரசன் மற்றும் பலரால் வெட்டிக் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் அரசுக்கு கட்சியை காட்டிக் கொடுக்கும் நபர்களும் அழித்தொழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெடிகுண்டு விபத்து

அழித்தொழிப்பு நடவடிக்கைகள் நடந்து வந்த காலகட்டத்தில், புலவர் கலியபெருமாளுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வைத்து தற்காப்புக்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன.

1970ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புலவரின் தோட்டத்தில் வெடிகுண்டு செய்து வந்த போது, அவை வெடித்து 3 பேர் இறந்தனர். அந்த வெடிவிபத்தில் சர்ச்சில், கணேசன், காணியப்பன் ஆகிய மூவரும் இறந்தனர்.

புலவர் கலியபெருமாள், படுகாயம் அடைந்ததோடு தலைமறைவாகி விட்டார். இந்த வெடிவிபத்து வெளியே தெரியாமல் இருக்க, இறந்த மூவரையும் தனது தோட்டத்திலேயே அடக்கம் செய்தார் புலவர் கலியபெருமாள்.

சில மாதங்களுக்கு பிறகு பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவர் இந்த விஷயத்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் அடிப்படையில் புலவர் கலியபெருமாளையும், அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூக்கு தண்டனையும், சிறை வாழ்க்கையும்

1971ஆம் ஆண்டு வெடிகுண்டு விபத்தில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்ட புலவர் கலியபெருமாளும், அவரது குடும்பத்தினருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்தது.

புலவர் கலியபெருமாளுக்கும், அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் நீதிமன்ற விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்களுடன் கைது செய்யப்பட்ட புலவரின் இரண்டாவது மகன் சோழ நம்பியார், கலியபெருமாளின் சகோதரர்கள் மாசிலாமணி, ராஜமாணிக்கம், ஆறுமுகம், கலியபெருமாளின் மைத்துனி அனந்தநாயகி ஆகியோருக்கு 1972ஆம் ஆண்டு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், வள்ளுவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

புலவர் கலியபெருமாளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

"புலவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பல மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், ஜனநாயக அமைப்புகள் சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பியதன் பேரில் அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து 1973ஆம் குடியரசுத் தலைவர் உத்தரவை பிறப்பித்தார்," என்று பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

1971ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற புலவர் கலியபெருமாளும், அவரின் குடும்பத்தினரும் பல்வேறு சித்திரவதைகளுக்கு சிறையில் உள்ளாக்கப்பட்டனர் என்று பிபிசியிடம் விவரித்தார் எழுத்தாளர் பாரதிநாதன்.

சிறையில் 13 ஆண்டுகள் இருந்த கலியபெருமாள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டார். சிறையில் இருந்த காலகட்டத்தில் அவரது மகன்களை பார்க்க விடாமல், இருவரையும் தனித்தனி சிறைகளில் சில வருடங்கள் அடைத்திருந்தனர், என்று அவர் கூறினார்.

சிறையில் புலவர் கலியபெருமாள் இருந்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு அதே சிறைக்கு அழைத்து வரப்பட்டார் தமிழரசன். ஒரே சிறையில் தங்கியிருந்த காலகட்டத்தில், தமிழரசன், புலவர் கலியபெருமாள், முனிராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறையில் இருந்து தப்ப முயற்சி செய்தனர்.

"சிறை மதில் சுவரின் மின்சார வேலியை தனது கைலியை பயன்படுத்தி தாண்டிக் குதிக்கும் போது புலவர் கலியபெருமாளுக்கு காயம் ஏற்படுகிறது. அவரை காப்பாற்ற திரும்பி வந்த தமிழரசனை, புலவரோடு சேர்ந்து காவல் துறை பிடித்து விட்டது. சிறையில் இருந்து தப்ப முயன்றதற்காக இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலினால் தமிழரசன் நினைவிழந்து 2 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்," என்று நினைவுகூர்ந்தார் வழக்கறிஞர் புகழேந்தி.

விடுதலை படம், விஜய் சேதுபதி, வெற்றிமாறன், தமிழரசன், புலவர் கலியபெருமாள்

பட மூலாதாரம்,FACEBOOK/இரா. வேல்முருகன்

 
படக்குறிப்பு,

பெண்ணாடம் அருகேயுள்ள புலவர் கலியபெருமாளின் வீடு

சிறையில் இருந்து விடுதலை

1971ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட புலவர் கலியபெருமாள், குடும்பத்துடன் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதை அறிந்த டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கன்சியாம் பர்தேசி, உச்ச நீதிமன்றத்தில் புலவர் கலியபெருமாளையும், அவரது குடும்பத்தினரையும் விடுதலை செய்ய உத்தரவிடுமாறு வழக்குத் தொடர்ந்தார்.

கன்சியாம் பர்தேசியின் முயற்சியால், 1983ஆம் ஆண்டு புலவரின் குடும்பத்தை நீண்டகால பரோலில் செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறையில் இருந்து வெளியே வந்த புலவர் கலியபெருமாள், தமிழரசனுடன் இணைந்து தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்தேசிய அரசியல் களத்தில் தடம் பதித்தார்.

பிரபாகரனைச் சந்தித்த கலியபெருமாள்

சென்னை பாண்டி பஜாரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் ஏற்பட்டு பிரபாகரன் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது சென்னை சிறையில் இருந்த புலவர் கலியபெருமாள், பிரபாகரனோடு சில முறை சந்தித்து பேசியதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து புலவர் கலியபெருமாள், தனது சுயசரிதை நூலான 'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின் பிரபாகரன் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்.“

முதுமையின் காரணமாக 2007ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி புலவர் கலியபெருமாள் இறந்தார். அவரது உடல், சொந்த ஊரான சௌந்திர சோழபுரத்தில், அடக்கம் செய்யப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c2j7rr1r94mo

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

Image

வீர வணக்கங்கள் மாறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.